சிறகு இணையப் பத்திரிகையில் 20-08-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது.
கல்விக் கொள்கைகள் கடைசியாக 1986-ம் வருடம் உருவாக்கப்பட்டு,
1992-ம் ஆண்டு அதில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதன் பின் கிட்டத்தட்ட
30 வருடங்கள் கடந்து விட்டன. புதிய கல்விக் கொள்கைக்கான அறிக்கைகளை மதிப்பிடுவதற்கு,
இந்தக் கால வெளியில் நிகழ்ந்திருக்கும் தேசிய, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்களை
கணக்கில் கொண்டாக வேண்டும்.
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இன்று தேசத்தின் கால,
தூர இடைவெளிகளை பெருமளவு குறைத்திருக்கிறது. கிளர்ச்சியூட்டும் எதிர்மறை தகவல்கள்தான்
மிக வேகமாக சமூகத்தில் பரவுவுகின்றன. இது சமூக எண்ணங்களை எதிர்மறையாகவே வைத்திருக்கிறது.
பொருளாதார மாற்றங்கள், மக்கள் சமூக ஒத்திசைவுடன், சேர்ந்து வாழ்வதற்கான தேவையை குறைத்திருக்கிறது
- அதாவது, பொருளாதார சுதந்திரத்தையும் எனவே பொருளாதார தன்னிறைவையும் வழங்குகிறது. இதன்
மறுவிசையாக சமூகத்தின் அற உணர்வு குறைகிறது. பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள், சமூகத்தின்
இயங்கு தளத்தை தொடர்ச்சியாக மாற்றியமைக்கிறது. சமூகம் அதன் மாறிய இயங்குதளத்தில் உராய்வின்றி
செல்ல வேண்டுமானால், சமூகத்தின் எண்ணங்களைக் கட்டமைக்கும் கல்வி, அந்த இயங்குதளத்திற்கு
ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டாக வேண்டும். மனனம் செய்யும் திறனையே பிரதானமாக்கப்பட்டிருக்கும்
இன்றைய கல்வி முறையில், சிந்தனைத் திறன் மழுங்குகிறது. இதன் தொடர்ச்சியாக, கிளர்ச்சியூட்டும்
தகவல்கள் முக்கியத்துவம் பெறுவதும், மனிதனின் புற உலகத்துடனான நுண்ணிய உறவுகள் உணரப்படாமல்
செல்வதும் நிகழ்கிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கை, சமூகத்தின் இன்றைய
இயங்கு தளத்திற்கு ஏற்றவாறு கல்வியை மாற்றியமைப்பதற்கான ஒரு முயற்சி என்றே கருதுகிறேன்.
சமூகத்தின் எதிர்மறை இயக்கங்களை இல்லாமல் செய்யும் சமூக எண்ணங்களை உற்பத்தி செய்வதாக
அந்தக் கல்வி அமைய வேண்டும். அதே நேரத்தில், பொருளாதாரம் உராய்வின்றி செல்வதற்கான வாய்ப்புகளை
ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். பொருளாதாரத்திற்குத் தேவையான தொழில் திறமைகளை கல்வி
அளித்தாக வேண்டும்.அதே நேரத்தில், மாணவர்களின் கற்பனை மற்றும் சிந்தனைத் திறன்களையும்
பண்படுத்த வேண்டும். அதாவது சமூகத்திற்கு அளிக்கப்படும் கல்வி ஒரே நேரத்தில் அக மற்றும்
புற நோக்கு உடையதாக இருக்கு வேண்டும். அக நோக்கு சமூக உறவுகளை மேம்படுத்தும். புற நோக்கு,
பொருளாதாரத்தை மேம்படுத்தும். அவை இரண்டும் ஒத்திசைவுடன் இருந்தால் வாழ்க்கை முழுமையாக
அமையலாம்.
புதிய கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கையும்,
அதன் அடிப்படையிலான மனித வள மேம்பாட்டுத் துறையின் கொள்கைக்கான வரைவு அறிக்கையிலும்
கூறப்பட்டுள்ள, பள்ளிக் கல்வி குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.
மகாத்மா காந்தியின் இந்தக் கூற்று, வரைவு அறிக்கையில்
மேற்கோள் காட்டப்பட்டுள்ளது; ''முக்கியமான இக்கட்டு என்னவென்றால், மக்களுக்கு கல்வி
என்றால் உண்மையில் என்ன என்பது குறித்து எந்தக் கருத்துக்களும் இல்லை. நிலத்தின் மதிப்பையும்
பங்கு பரிவர்த்தனையில் பங்கின் மதிப்பையும் மதிப்பிடுவதைப் போன்று நாம் கல்வியின் மதிப்பை
மதிப்பிடுகிறோம். பொருளீட்டுவதற்கு மட்டும் தேவையான கல்வியை அளிப்பதற்கே விரும்புகிறோம்.
கற்றவர்களின் பண்புகளின் மாற்றம் குறித்து எந்த சிந்தனைகளையும் நாம் வெளிப்படுத்துவதில்லை.''
இன்றளவும் பொதுவெளியில் கல்வி குறித்தான மதிப்பீடு இவ்வாறாகவே இருக்கிறது. மாற்றப்பட
வேண்டிய மதிப்பீடு!
2014-ம் ஆண்டு, நாடு முழுவதுமான, குறிப்பாக பின்தங்கிய
மாவட்டங்களில் உள்ள சுமார் ஆறு இலட்சம் மாணவர்களிடையே நடத்தப்பட்ட திறனாய்வு கொடுத்த
முடிவுகள் இன்றைய கல்வியின் உண்மையான தரத்தை மதிப்பிடுகிறது. இந்தத் திறனாய்வின்படி
ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சுமார் பாதி அளவிலான மாணவர்களுக்கு, இரண்டாம் வகுப்புப்
பாடங்களை வாசிக்க முடியவில்லை. அதே அளவு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பிற்குத்
தேவையான அடிப்படை கணிதத் திறமையும் இல்லை.
மத்திய அரசின் பள்ளிக் கல்வி நிறுவனங்களான கேந்த்ரிய
வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா போன்றவற்றின்
தரம் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக இருப்பது, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இந்தப் பள்ளிகள், சாத்தியமுள்ள இடங்களில் மேலும் விரிவாக்கப்படும் என்றும், இவற்றின்
வெற்றிக்கான காரணங்களை ஆராய்ந்து அவை மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்றும் வரைவுக்
கொள்கை கூறுகிறது.
அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படைக் கடமைகள் மற்றும்
உரிமைகள் குறித்து போதிக்கப்படும். அறிவியல் பாடங்களில் செயல்முறை கல்வி ஆறாம் வகுப்பிலிருந்து
படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். முக்கியமாக தேர்வு முறைகள் தற்போதைய மனனம் செய்யும்
திறனை சோதிப்பதை விட்டுவிட்டு, விசாலமான அறிதல்கள், புரிதல்கள், வாசித்து அறிந்து கொள்ளும்
திறன், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் ஆகியவற்றை சோதிப்பதன் அடிப்படையில் மாற்றியமைக்கப்படும்.
இவை பள்ளிக் கல்வி குறித்த சீர்திருத்தங்களில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் பரிந்துரைகள்தான்
கிராமத்து மாணவர்களுக்கு பொருந்தாததாக, இந்தக் கொள்கைகளை எதிர்ப்பவர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஆக, கிராமப்புற மாணவர்கள் என்று அழைக்கப்படும் மாணவர்கள், தொடர்ந்து கல்வியின் பயனை
அடைய முடியாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் விருப்பம் போல் தோன்றுகிறது. ஒருவேளை
இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு தேவையான திறனுள்ள ஆசிரியர்கள் இல்லாமல் எவ்வாறு
இதை நிறைவேற்றப்போகிறார்கள் போன்ற கேள்விகளை முன்வைத்திருந்தால் அவர்கள் கரிசனத்தை
புரிந்துக் கொண்டிருக்க முடியும்.
தேர்வு முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இன்னொரு
முக்கியமான சீர்திருத்தம் பத்தாம் வகுப்புத் தேர்வை அறிவியல் கணிதம் ஆங்கிலம் ஆகிய
பாடங்களுக்கு, வெவ்வாறு திறனில் அமைக்கப்பட்ட இரண்டு பிரிவுகளாக நடத்துவது. மாணவர்கள்,
அவர்கள் மேற்படிப்பு எந்தப் பிரிவில் படிக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்து இவற்றில்
ஏதேனும் ஒன்றை தெரிந்தெடுக்காலம். அதாவது மேற்படிப்பில் அறிவியல் கணிதம் ஆங்கிலம் ஆகியவை
தேவைப்படும் பிரிவுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், முதல் தரத்திலான தேர்வையும்
மற்றப் பிரிவுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் அடுத்த தரத்திலான தேர்வையும் எழுதினால்
போதுமானது. இது மாணவர்கள் அனைவரையும், அவர்களின் தனிப்பட்ட திறனையும் விருப்பங்களையும்
கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு பிற்காலத்தில் தேவையில்லாத பாடங்களிலும் கடினமான
தேர்வு முறைகளின் வழியாக வர வைக்கும் தேவையற்ற முறை விலக்கப்படுகிறது.,
தேர்வுகளை மதிப்பிடும் முறை குறித்தும் இந்தக் கொள்கை
விரிவாகப் பேசுகிறது. பல கல்வி அமைப்புக்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும்
தனித் தனி தேர்வுகளை நடத்துகின்றன. தேர்வுகளின் தரமும் வெவ்வேறாக உள்ளன. இவை தவிர சில
கல்வி அமைப்புகள் கடினமான தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கின்றன. மொத்த இந்திய
அளவில் மாணவர்களை மதிப்பிடும் தேவை வரும்போது இந்த முறைகளில் ஏற்றத்தாழ்வுகள் வருகின்றன.
எனவே தற்போதைய மதிப்பிடும் முறையில் மாறுதலைக் கொண்டுவர இவ்வரைவுக் கொள்கை பரிந்துரைக்கிறது.
இதற்காக இந்தியா முழுவதற்கும் பொதுவான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான
தேர்வுகள் அல்லது, மதிப்பிடும் முறையை Scaling அல்லது Percentile முறையில் மாற்றுவது
ஆகியவை வரைவுக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது
சென்ற வருடம் மனிதவள மேம்பாட்டுத் துறை. தேசிய திறன்
மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் கொள்கை - 2015 என்னும் கொள்கை விளக்க ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது.
அதன் படி, 25% பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் சேர்க்கப்படும்.
முறை சார்ந்த கல்வியைப் பெற முடியாமல், ஆனால் தொழில்களில் திறன் பெற்றவர்களுக்கு, அவர்கள்
திறனை மதிப்பிட்டு சான்றிதழ் வழங்கும் முறை கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் பல்வேறு காரணங்களால் முறைசார்ந்த கல்வியை பெற முடியாமல், ஆனால் தொழில் திறன்
பெற்றவர்களால் முறைசார்ந்த தொழில்களிலோ அல்லது சுய தொழிலோ செய்வதற்கான வங்கிக் கடன்களைப்
பெறுவது போன்றவற்றிற்கோ, இந்தச் சான்றிதழ் பெரிதும் உதவலாம். தொழில் வாய்ப்புக்களை
திறமையுள்ள அனைவருக்கும் அளிப்பதற்கான முக்கியமான முயற்சி என்று இதைக் கூறலாம். எதிர்மறையாக
கூறினால், மாணவர்களை பள்ளிக்கு வராமல் தொழிலுக்குச் செல்ல இது ஊக்குவிக்கும் என்றும்
கூறலாம். இந்தக் கொள்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்த்தப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான்
இத்தகையக் கேள்விகளுக்கு பதில் பெற முடியலாம்.
கல்வியை அளிப்பதிலும் நிர்வாகம் செய்வதிலும் தகவல்
தொடர்பு தொழில்நுட்பத்தை எவ்வாறு உபயோகப்படுத்த முடியும் என்பதையும் இந்த வரைவுக் கொள்கை
விரிவாகப் பேசுகிறது. தகுதியான ஆசிரியர்களின் பற்றாக்குறை, இருக்கும் ஆசிரியர்களின்
தகுதியின்மை, பொறுப்பின்மை, பணிக்கு வராமை, போன்ற பிரச்சினைகள் கடுமையான அரசியல் கருத்தொருமையுடனும்
உறுதியுடனும் எதிர்கொள்ளப்படும் என்றும் கூறுகிறது. ஆசிரியர்களின் பொறுப்பின்மை பணிக்கு
வராமை போன்ற அத்துமீறல்கள் செல்பேசி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றின்
மூலம் எதிர்கொள்ளப்படும் என்றும் முன்வைக்கிறது. எல்லா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும்
தரச்சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான தொடர்ந்த பயிற்சிகளையும்,
சீரான இடைவெளிகளில் ஆசிரியர் திறன் மதிப்பிடும் தேர்வுகளையும் இக்கொள்கை கட்டாயமாக்குகிறது.
இந்தக் கொள்கை பயிற்சி மொழியாக தாய்மொழியை பரிந்துரைக்கிறது.
இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தையும் மூன்றாவது மொழியாக மாநிலங்களின் விருப்பத் தேர்வுக்கும்
பரிந்துரைக்கிறது.
பள்ளிகளை தரவரிசைப் படுத்துவதற்கான சட்டகத்தையும்
(Framework) இந்த வரைவுக் கொள்கை குறிப்பிடுகிறது. இந்தப் பரிந்துரையை செயல்படுத்த
முடிந்தால், அது இந்தியக் கல்வியின் தரத்தில் ஒரு முக்கியமான பாய்ச்சலாக இருக்கும்.
No comments:
Post a Comment