Wednesday, August 24, 2016

உலகமயமாதல்

15-08-2016 அன்று சொல்வனம் இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.

தற்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் இரு தொடர்களும், மிகப்பரவலாக உலகம் முழுவதும் பேசப்பட்ட பொருளாதாரத்தின் இரு துருவங்களையும் இணைக்கும் கோட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வும், ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் பொருளாதாரம் குறித்த என் எண்ணங்களைத் தூண்டியது. எந்தத் துறையாக இருந்தாலும் சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் எண்ணங்களின் திசையில் தங்கள் கொள்கைகளை வகுக்கும் நிபுணர்கள், சந்தேகமில்லாமல் அந்தத் துறையில் வெற்றியடைவார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் சாதாரணர்களில் பெரும்பான்மையானவர்கள், தங்கள் வாழ்வின் சூழல்களைக் குறித்து எந்த ஒரு கருத்தும் இல்லாமல், அவ்வப்போது வெளிப்படும் உணர்சிவசப்பட வைக்கும் பிறர் கருத்துக்களை சுயசிந்தனை இல்லாமல் தொடர்பவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையில் சமூகத்தின் சாதாரண மனிதனின் எவ்விதமான சுயபபார்வையும் முக்கியமானதே.

முதலாவதாக நான் வாசித்துக் கொண்டிருக்கும் தொடர் ''பனைமரச் சாலை'' என்னும் தலைப்பில் காட்சன் சாமுவேல் என்பவர் தனது வலைத்தளத்தில் எழுதிவரும் தொடர். இதில் அவர் மும்பையிலிருந்து நாகர்கோவில் நோக்கிய தனது இருசக்கர வாகன பயணத்தில் தேர்ந்தெடுத்த பனைமரம் சார்ந்த தொழில்கள் நடைபெறும் பாதைகளில் அவதானித்தவற்றையும் அவற்றுடன் தொடர்புடைய அவருடைய எண்ணங்களையும் பிற அனுபவங்களையும் தொகுத்து எழுதி வருகிறார்.

இரண்டாவதாக இந்தியாவில் உலகமயமாக்கம் தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக ''தி இந்து' தமிழ் நாளிதளில் வெளியிடப்படும் நடுப்பக்கக் கட்டுரைகள். பல்வேறு கட்டுரையாளர்களால் - அவர்கள் அனைவரும் பொருளாதார அறிஞர்கள் என்று என்னால் கூற முடியவில்லை; இந்தியாவில் உலகமயமாக்த்தின் சாதக பாதகங்களை அவர்கள் பார்வையில் அலசும் கட்டுரைகள். உலகமயமாக்கம் இந்தியாவில் நன்மைகளை நிகழ்த்தியிருக்கிறது என்னும் பார்வையும், இல்லை அது இந்தியாவிற்கு ஒட்டுமொத்தமாக தீமைகளையே வழங்கியிருக்கிறது என்பதான பார்வையும் வெவ்வேறு கட்டுரையாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அடுத்ததாக ''பிரெக்ஸிட்'' என எங்கும் ஒலித்த குரல்களின் பின்னால் இருந்த, பிரிட்டனின் பொதுஜனம் பிரதிபலித்த, கிட்டத்தட்ட சமபலமுள்ள, உலகமயமாக்குதலுக்கு ஆதரவான மற்றும் எதிரான பிம்பங்கள். பொதுமக்களின் விருப்பங்களே உலகமயமாக்கலையும் தேசியமயமாக்கலையும் இணைக்கும் கோடு என்று கருதுகிறேன். இந்தியா போன்ற பரந்த நாடுகளுக்கு, தேசியமயமாக்கலை, பொருளாதார பரவலாக்குதல் (Economic Localization) என்று பொருள் கொள்ளலாம்.

பொருளாதார அடிப்படையில் உலகமயமாக்கம் (Globalization) மற்றும் சர்வதேசமயமாக்கம் (Internationalization) என்னும் இரு வார்த்தைகளும் இருவேறு அர்த்தங்களை உடையவை. ஆனால் அவற்றுக்கிடையேயான வித்தியாசங்களும் மிகத்தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் அவற்றை இவ்வாறு கூறலாம்; உலகமயமாக்கம் என்பது நாடுகளுக்கிடையேயான பொருளாதார எல்லைக் கோடுகளை ஒருங்கிணைத்து, வணிகம் முதலீடு ஆகியவை முற்றிலும் சுதந்திரமாக உலகின் எந்தப் பகுதியிலும் செய்வதற்கான வாய்ப்புகளை அளிப்பது. அத்துடன் கட்டுப்பாடுகளற்ற அல்லது மிக எளிதான தொழிலாளர்களின் குடிபெயர்தலுக்கும் வாய்ப்பளிப்பது. சர்வதேசமயமாக்கல் என்பது நாடுகளுக்கிடையேயான வணிகத்தையும் உறவுகளையும் சர்வதேச ஒப்பந்தங்கள் மூலமும் கூட்டமைப்புகள் மூலமும் ஏற்படுத்திக் கொள்வது. இன்னும் குறிப்பாக கூறினால், உலகமயம் முற்றிலும் பொருளாதாரம் சார்ந்தது. சர்வதேசமயம் பொருளாதார நோக்கங்களுக்கான அரசியலையும் உள்ளடக்கியது. இன்று நாம் உலகமயமாக்கம் என்னும்போது, பொருளாதாரத்துடன் அந்த நோக்கத்திற்கான அரசியலையும் சேர்த்தே கூறுகிறோம். எனவே அவற்றுக்கான எல்லைக்கோடு சந்தர்ப்பத்திற்கேற்ப மாறும் மெல்லிய கோடாகவே தோன்றுகிறது.

உலகமயமாக்கலின் ஒரு அலகு ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் வணிகம் முதலீடு மற்றும் தொழிலாளர்களின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதித்திருக்கிறது. அந்த அலகில் ''பிரெக்ஸிட்'' மூலம் ஏற்பட்டிருக்கும் விரிசல், உலகமயமாக்கல் என்னும் கொள்கையை, அதன் இன்றைய வடிவில், கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பொருளாதார உலகமயமாக்கம் என்னும் கருத்து முழுமையான உலகமயமாக்கம் என்னும் பெருங்கனவுக்கு தொடக்கமாக கருதலாம் என நினைக்கிறேன். இன்றைய உலகமயமாக்கலுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தாலும், முழுமையான உலகமயமாக்கல் என்னும் கருத்து, காரி டேவிஸ் (https://en.wikipedia.org/wiki/Garry_Davis) அவர்களால் இரண்டாம் உலகப்போருக்கு பிற்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்டது. எல்லைகளற்ற ஒரே பூமி, ஒரே சமூகம். ''உலகம் யாவையும்'' என்னும் ஜெயமோகனின் சிறுகதை, காரி டேவிஸ் என்னும் ஆளுமையை புனைவு வெளியில் தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மனிதர்கள் அறிவின் முழுமையையடையும்போது இது சாத்தியமாகலாம். இன்று மனிதர்கள் முழுமைக்கு வெகு தொலைவில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டிய கருத்தாக்கமும் கூட.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், இந்தியா இன்னும் உலகமயமாக்கலின் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. மிகச் சில துறைகளில் மட்டும்தான் முழுமையான எல்லைகள் கடந்த முதலீடு சாத்தியப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது 100% அந்நிய முதலீடு. தொழிலாளர்களின் சுதந்திரமான எல்லை கடந்த குடியேற்றம் இன்னும் எங்கும் சாத்தியம் ஆகவில்லை. ஐரோப்பா என்னும் சிறு அலகினுள் மட்டும் அது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 1945 - ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச நிதியம் (IMF) சர்வதேசமயமாக்கல் வழியாக உலகமயாக்கல் திசை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் சில அடிகளில் ஒன்று. இந்தியா உலகமயமாக்கக் கொள்கைகளை தழுவுவதற்கு நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே பிற சில நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட உலகமயமாக்கலும் பெரிய முன்னேற்றங்கள் அடைந்துள்ளதாகத் தோன்றவில்லை. அதாவது ஐரோப்பிய யூனியனுக்கு உட்பட்ட நாடுகளைத் தவிர மற்ற எங்கும் சுதந்திரமான அல்லது கிட்டத்தட்ட சுதந்திரமான தொழிலாளர் குடியேற்றம் அனுமதிக்கப்பட்டதில்லை. காரணம் மிக எளிமையானதுதான். உலக அரசாங்கம் என்னும் கருத்தாக்கம் இன்னும் தோன்றவில்லை. அதாவது நாடுகள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தங்களை தனி அலகுகளாகக் கொண்டிருக்கும்போது பொருளாதார ரீதியாக மட்டும் ஒரே அலகாகக் கொள்ள முடியாது. அரசியல் மற்றும் சமுகத் தனித்தன்மையை பேணும்போது பொருளாதாரத் தனித்தன்மையை இல்லாமல் செய்வது, உலகப் பொருளாதாரத்தை அரசியல் வலிமையுள்ளவர்கள் தங்கள் லாபத்திற்காக சூழ்ச்சியுடன் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கும். இது அரசியல் வல்லமை இல்லாத நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இன்றைய ஓரளவு தாராளமயமாக்கப்பட்ட உலகில் இதுதான் நடந்துவருவதாகத் தோன்றுகிறது. மேலும் தங்களின் சுயமதிப்பில் பணமதிப்புடன், பிற அவசியமான மதிப்பீடுகளையும் சேர்க்கும் நிலை வரும்வரை, அல்லது பணமதிப்புக்காக பிற மதிப்பீடுகளை இழப்பதற்கு விருப்பத்துடன் இருப்பது மாறும்வரைக்கும், இந்த நிலை மாறும் என்று தோன்றவில்லை. ஏனெனில் மனிதனின் பணமதிப்பு அவன் வாழும் சூழலுக்கேற்ப, சூழலில் உள்ள இயற்கைவளங்களின் இருப்பிற்கேற்ப மாறும் இயல்புடையது. மனிதனின் மதிப்பு மாறாமல் இருக்க வேண்டுமானால் பணமதிப்புடன் வேறுசில மதிப்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் கூட, ஒரு தேசமாகவே இதுதான் நடந்ததாகத் தோன்றுகிறது. உதாரணமாக இயற்கை வளங்கள் நிறைந்த வடகிழக்கு இந்தியாவின் வளங்களை ஒட்டு மொத்த இந்தியாவிற்காக எடுத்து விட்டு, அங்கிருக்கும் சமூகங்களுக்கு எதுவும் அளிக்காமல் விட்டுவிட்டதுதான் நெடுங்காலம் வடகிழக்கு இந்தியாவில் நிகழ்ந்து வரும் அமைதியின்மைக்குக் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் பிறப் பகுதிகளை ஒப்பிடும்போது வடகிழக்கு இந்தியா பொருளாதாரத்திலும் அடிப்படை வசதிகளிலும் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும், அதற்கு முன் இருந்த பிரிட்டீஷ் அரசாங்கமும் அங்கிருந்தவற்றை தங்களுக்காக எடுத்துக் கொண்டன. வடகிழக்கின் அமைதியின்மைக்கு பொருளாதாரம் தவிர பல அரசியல், சமூக காரணங்களின் விளைவாக ஏற்பட்ட ஊடுருவல்களும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த ஊடுருவல்களுக்கு எளிய இலக்காக வடகிழக்கு இருப்பதற்கு அதன் பின்தங்கிய நிலையே காரணம் என்று நினைக்கிறேன். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே இந்த ஊடுருவல்கள் அங்கு நிகழந்து நிலைபெற்று விட்டன. ஆனால் சுதந்திர இந்தியாவும், அப்பகுதியை முன்னேற்ற நெடுங்காலம் எதுவும் செய்யவில்லை - காரணங்கள் ஆய்வுக்குரியவை.

உலகமயமாக்கலில் என்னதான் நிகழ்கிறது? மகத்தான கருத்தாக்கமாக இருந்தாலும் ஏன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது? இது கருத்தளவில் முழுமையான இயக்கமாக இருந்தாலும் நடைமுறையில் ஒருவழிப் பாதையாக இருப்பதால் இருக்கலாம் - முதலீடு செய்பவர்கள் ஒரு பகுதியின் வளங்களை எடுத்து விட்டு, அந்தப்பகுதிக்கு எவற்றையும் திரும்ப அளிக்காமல் இருப்பதன் மூலம். அல்லது வெறும் பொருளாதார நோக்கத்தை மட்டும் கொண்டிருப்பதாலும் இருக்கலாம். மனித வாழ்க்கைக்கு பொருளாதாரத்தின் தேவை ஒரு சிறு அலகு மட்டும்தான். பொருளாதாரம் கடந்து பண்பாடு, உறவு, கலை, சுவை, உணர்வு என பல அலகுகள் வாழ்க்கையில் தேவையாக உள்ளன. ஆனால் அந்த சிறு அலகை மட்டும் பிரதானப்படுத்தி உலகமயம் மற்றவற்றை புறந்தள்ளுவதால் இருக்கலாம். பொருளாதாரத்தின் அடிப்படையான நுகர்வை, பெரும் உற்பத்திகளின் சார்புடையவையாக மட்டும் வைத்திருந்து, அந்தத் திசையில் மட்டும் முன்னெடுப்பதன் மூலம் பண்பாட்டுடன் தொடர்புடைய, பண்பாடு சார்ந்த சமூகத்தின் உற்பத்திகளை, கலைகளை, உணர்வுகளை முக்கியத்துவம் இல்லாமல் செய்வதால் இருக்கலாம். பொருளாதாரத்திற்கான உற்பத்தி பெருமளவு இயந்திரமயமாகி விட்டது. சேவை இயந்திரமயமாகி வருகிறது. சேவையின் பெரும்பகுதியும் இயந்திரமயமாகிவிட்டால், மனிதனின் தேவை நுகர்வுக்கு மட்டும்தான் - இயந்திரங்களின் உற்பத்திக்காகவும் இயக்கத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தப்பட்ச மனிதர்களைத் தவிர! அந்த நிலையில் இயந்திரங்களுடன் மனிதர்கள் பொருளாதார உற்பத்தியில் போட்டியிட வேண்டுமானால், மனிதர்களின் பணமதிப்பு, இயந்திரத்தின் பணமதிப்பை விட குறைந்தாக வேண்டும்.

இந்த நிலையில்தான் காட்சன் சாமுவேல் அவர்களின் பயணமும் அவர் எழுதிவரும் பனைமரச் சாலை தொடரும் முக்கியத்துவம் பெறுகின்றன. இயற்கை சார்ந்த ஒரு தொழிலையும், அந்தத் தொழிலின் உற்பத்தியின் பயன்பாடுகளையும் ஆவணப்படுத்துவதுடன் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளின் சமூக மரியாதையையும் எனவே சுய மரியாதையையும் மீட்டெடுக்கும் முயற்சி - சுயமரியாதையை இழந்த சமூகம் மொத்த மனித சமூகத்திற்கும் பாரமாகவே மாறி விடும். தனிமனிதர்களின் தனித்துவத்துடன் கூடிய பொருளாதார பரவலாக்கத்திற்கான ஒரு மாதிரி முயற்சி. அத்தகையவர்களுக்கான ஒரு ஊக்குவிப்பு.
இன்று நாம் பெற்றிருக்கும் வசதி வாய்ப்புகளில், தொழில்நுட்பங்களில் பெரும்பான்மையானவை பொருளாதார உலகமயமாக்கலின் பயன்களே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் பலவிதமான எதிர்மறை விளைவுகளை பண்பாட்டிலும், தொழில்களிலும் வாழ்க்கை முறைகளிலும், மனித இருப்பிலும் அவை உருவாக்கியுள்ளன என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனில் நாம் பெற்ற வசதிகளுக்காக அதைத் தொடர்ந்து ஆதரிப்பதா அல்லது எதிர்மறை விளைவுகளுக்காக எதிர்ப்பதா?


இரண்டுமே தேவையற்றதாக இருக்கலாம். ஏனெனில் உலகமயமாக்கம் என்பது மகத்தான கருத்தாக்கம். அதன் முழுமை நிலையில் தேச, சமூக, பொருளாதார, பண்பாட்டு எல்லைகளைக் கடந்து ஒரே சமூகமாக உலக மனிதர்கள் அனைவரையும் உணர வைக்கும் ஒன்று. அதை முழுமையாக செயல்படுத்த பொருளாதார நிபுணர்கள் மட்டும் போதுமானவர்களாக இருக்க முடியாது. அதுவே இன்றைய உலகமயமாக்கலின் சிறு அலகில் நிகழ்ந்த பின்னோக்கிய நகர்வுக்கு காரணமாக இருக்கலாம். இங்கு பொருளாதாரத்தை விட பண்பாட்டை முன்னிறுத்தி, பொருளாதாரத்தை பண்பாட்டின் சிறுதுளியாக எடுத்துச் செல்ல முடிந்தால், அது காரி டேவிஸ் அவர்கள் கனவு கண்ட உலகமயமாக்கலை நோக்கி தொடங்கும் பயணமாக இருக்கலாம். இங்கு கூறுவது ஆதிக்கம் பெற்ற ஒரு பண்பாட்டை சிறு பண்பாடுகள் மேல் திணிப்பது அல்ல. மாறாக அனைத்துப் பண்பாடுகளும் அவற்றின் பொக்கிஷங்களை மற்றப் பண்பாடுகளின் தேவைகளுக்கேற்ப அளிக்கும் விரிவு! அந்த விரிவின் மூலம் எல்லாப் பண்பாடுகளும் சம அந்தஸ்தைப் பெறுவது. இறுதியில் பிரிவுகள் இல்லாத ஆனால் எண்ணற்ற சுயங்கள் உடைய முற்றிலும் திறந்த பண்பாட்டு வெளி! கனவுதான்! 

blog.change@gmail.com

Monday, August 22, 2016

புதிய தேசிய கல்விக் கொள்கை - பள்ளிக் கல்வி

சிறகு இணையப் பத்திரிகையில் 20-08-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது.

கல்விக் கொள்கைகள் கடைசியாக 1986-ம் வருடம் உருவாக்கப்பட்டு, 1992-ம் ஆண்டு அதில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதன் பின் கிட்டத்தட்ட 30 வருடங்கள் கடந்து விட்டன. புதிய கல்விக் கொள்கைக்கான அறிக்கைகளை மதிப்பிடுவதற்கு, இந்தக் கால வெளியில் நிகழ்ந்திருக்கும் தேசிய, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்களை கணக்கில் கொண்டாக வேண்டும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இன்று தேசத்தின் கால, தூர இடைவெளிகளை பெருமளவு குறைத்திருக்கிறது. கிளர்ச்சியூட்டும் எதிர்மறை தகவல்கள்தான் மிக வேகமாக சமூகத்தில் பரவுவுகின்றன. இது சமூக எண்ணங்களை எதிர்மறையாகவே வைத்திருக்கிறது. பொருளாதார மாற்றங்கள், மக்கள் சமூக ஒத்திசைவுடன், சேர்ந்து வாழ்வதற்கான தேவையை குறைத்திருக்கிறது - அதாவது, பொருளாதார சுதந்திரத்தையும் எனவே பொருளாதார தன்னிறைவையும் வழங்குகிறது. இதன் மறுவிசையாக சமூகத்தின் அற உணர்வு குறைகிறது. பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள், சமூகத்தின் இயங்கு தளத்தை தொடர்ச்சியாக மாற்றியமைக்கிறது. சமூகம் அதன் மாறிய இயங்குதளத்தில் உராய்வின்றி செல்ல வேண்டுமானால், சமூகத்தின் எண்ணங்களைக் கட்டமைக்கும் கல்வி, அந்த இயங்குதளத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டாக வேண்டும். மனனம் செய்யும் திறனையே பிரதானமாக்கப்பட்டிருக்கும் இன்றைய கல்வி முறையில், சிந்தனைத் திறன் மழுங்குகிறது. இதன் தொடர்ச்சியாக, கிளர்ச்சியூட்டும் தகவல்கள் முக்கியத்துவம் பெறுவதும், மனிதனின் புற உலகத்துடனான நுண்ணிய உறவுகள் உணரப்படாமல் செல்வதும் நிகழ்கிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கை, சமூகத்தின் இன்றைய இயங்கு தளத்திற்கு ஏற்றவாறு கல்வியை மாற்றியமைப்பதற்கான ஒரு முயற்சி என்றே கருதுகிறேன். சமூகத்தின் எதிர்மறை இயக்கங்களை இல்லாமல் செய்யும் சமூக எண்ணங்களை உற்பத்தி செய்வதாக அந்தக் கல்வி அமைய வேண்டும். அதே நேரத்தில், பொருளாதாரம் உராய்வின்றி செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். பொருளாதாரத்திற்குத் தேவையான தொழில் திறமைகளை கல்வி அளித்தாக வேண்டும்.அதே நேரத்தில், மாணவர்களின் கற்பனை மற்றும் சிந்தனைத் திறன்களையும் பண்படுத்த வேண்டும். அதாவது சமூகத்திற்கு அளிக்கப்படும் கல்வி ஒரே நேரத்தில் அக மற்றும் புற நோக்கு உடையதாக இருக்கு வேண்டும். அக நோக்கு சமூக உறவுகளை மேம்படுத்தும். புற நோக்கு, பொருளாதாரத்தை மேம்படுத்தும். அவை இரண்டும் ஒத்திசைவுடன் இருந்தால் வாழ்க்கை முழுமையாக அமையலாம்.

புதிய கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கையும், அதன் அடிப்படையிலான மனித வள மேம்பாட்டுத் துறையின் கொள்கைக்கான வரைவு அறிக்கையிலும் கூறப்பட்டுள்ள, பள்ளிக் கல்வி குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.

மகாத்மா காந்தியின் இந்தக் கூற்று, வரைவு அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது; ''முக்கியமான இக்கட்டு என்னவென்றால், மக்களுக்கு கல்வி என்றால் உண்மையில் என்ன என்பது குறித்து எந்தக் கருத்துக்களும் இல்லை. நிலத்தின் மதிப்பையும் பங்கு பரிவர்த்தனையில் பங்கின் மதிப்பையும் மதிப்பிடுவதைப் போன்று நாம் கல்வியின் மதிப்பை மதிப்பிடுகிறோம். பொருளீட்டுவதற்கு மட்டும் தேவையான கல்வியை அளிப்பதற்கே விரும்புகிறோம். கற்றவர்களின் பண்புகளின் மாற்றம் குறித்து எந்த சிந்தனைகளையும் நாம் வெளிப்படுத்துவதில்லை.'' இன்றளவும் பொதுவெளியில் கல்வி குறித்தான மதிப்பீடு இவ்வாறாகவே இருக்கிறது. மாற்றப்பட வேண்டிய மதிப்பீடு!

2014-ம் ஆண்டு, நாடு முழுவதுமான, குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள சுமார் ஆறு இலட்சம் மாணவர்களிடையே நடத்தப்பட்ட திறனாய்வு கொடுத்த முடிவுகள் இன்றைய கல்வியின் உண்மையான தரத்தை மதிப்பிடுகிறது. இந்தத் திறனாய்வின்படி ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சுமார் பாதி அளவிலான மாணவர்களுக்கு, இரண்டாம் வகுப்புப் பாடங்களை வாசிக்க முடியவில்லை. அதே அளவு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பிற்குத் தேவையான அடிப்படை கணிதத் திறமையும் இல்லை.

மத்திய அரசின் பள்ளிக் கல்வி நிறுவனங்களான கேந்த்ரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா போன்றவற்றின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக இருப்பது, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பள்ளிகள், சாத்தியமுள்ள இடங்களில் மேலும் விரிவாக்கப்படும் என்றும், இவற்றின் வெற்றிக்கான காரணங்களை ஆராய்ந்து அவை மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்றும் வரைவுக் கொள்கை கூறுகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படைக் கடமைகள் மற்றும் உரிமைகள் குறித்து போதிக்கப்படும். அறிவியல் பாடங்களில் செயல்முறை கல்வி ஆறாம் வகுப்பிலிருந்து படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். முக்கியமாக தேர்வு முறைகள் தற்போதைய மனனம் செய்யும் திறனை சோதிப்பதை விட்டுவிட்டு, விசாலமான அறிதல்கள், புரிதல்கள், வாசித்து அறிந்து கொள்ளும் திறன், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் ஆகியவற்றை சோதிப்பதன் அடிப்படையில் மாற்றியமைக்கப்படும். இவை பள்ளிக் கல்வி குறித்த சீர்திருத்தங்களில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் பரிந்துரைகள்தான் கிராமத்து மாணவர்களுக்கு பொருந்தாததாக, இந்தக் கொள்கைகளை எதிர்ப்பவர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆக, கிராமப்புற மாணவர்கள் என்று அழைக்கப்படும் மாணவர்கள், தொடர்ந்து கல்வியின் பயனை அடைய முடியாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் விருப்பம் போல் தோன்றுகிறது. ஒருவேளை இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு தேவையான திறனுள்ள ஆசிரியர்கள் இல்லாமல் எவ்வாறு இதை நிறைவேற்றப்போகிறார்கள் போன்ற கேள்விகளை முன்வைத்திருந்தால் அவர்கள் கரிசனத்தை புரிந்துக் கொண்டிருக்க முடியும்.
தேர்வு முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இன்னொரு முக்கியமான சீர்திருத்தம் பத்தாம் வகுப்புத் தேர்வை அறிவியல் கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு, வெவ்வாறு திறனில் அமைக்கப்பட்ட இரண்டு பிரிவுகளாக நடத்துவது. மாணவர்கள், அவர்கள் மேற்படிப்பு எந்தப் பிரிவில் படிக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்து இவற்றில் ஏதேனும் ஒன்றை தெரிந்தெடுக்காலம். அதாவது மேற்படிப்பில் அறிவியல் கணிதம் ஆங்கிலம் ஆகியவை தேவைப்படும் பிரிவுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள், முதல் தரத்திலான தேர்வையும் மற்றப் பிரிவுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் அடுத்த தரத்திலான தேர்வையும் எழுதினால் போதுமானது. இது மாணவர்கள் அனைவரையும், அவர்களின் தனிப்பட்ட திறனையும் விருப்பங்களையும் கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு பிற்காலத்தில் தேவையில்லாத பாடங்களிலும் கடினமான தேர்வு முறைகளின் வழியாக வர வைக்கும் தேவையற்ற முறை விலக்கப்படுகிறது.,

தேர்வுகளை மதிப்பிடும் முறை குறித்தும் இந்தக் கொள்கை விரிவாகப் பேசுகிறது. பல கல்வி அமைப்புக்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனித் தனி தேர்வுகளை நடத்துகின்றன. தேர்வுகளின் தரமும் வெவ்வேறாக உள்ளன. இவை தவிர சில கல்வி அமைப்புகள் கடினமான தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கின்றன. மொத்த இந்திய அளவில் மாணவர்களை மதிப்பிடும் தேவை வரும்போது இந்த முறைகளில் ஏற்றத்தாழ்வுகள் வருகின்றன. எனவே தற்போதைய மதிப்பிடும் முறையில் மாறுதலைக் கொண்டுவர இவ்வரைவுக் கொள்கை பரிந்துரைக்கிறது. இதற்காக இந்தியா முழுவதற்கும் பொதுவான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் அல்லது, மதிப்பிடும் முறையை Scaling அல்லது Percentile முறையில் மாற்றுவது ஆகியவை வரைவுக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது
சென்ற வருடம் மனிதவள மேம்பாட்டுத் துறை. தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் கொள்கை - 2015 என்னும் கொள்கை விளக்க ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது. அதன் படி, 25% பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில்  திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் சேர்க்கப்படும். முறை சார்ந்த கல்வியைப் பெற முடியாமல், ஆனால் தொழில்களில் திறன் பெற்றவர்களுக்கு, அவர்கள் திறனை மதிப்பிட்டு சான்றிதழ் வழங்கும் முறை கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பல்வேறு காரணங்களால் முறைசார்ந்த கல்வியை பெற முடியாமல், ஆனால் தொழில் திறன் பெற்றவர்களால் முறைசார்ந்த தொழில்களிலோ அல்லது சுய தொழிலோ செய்வதற்கான வங்கிக் கடன்களைப் பெறுவது போன்றவற்றிற்கோ, இந்தச் சான்றிதழ் பெரிதும் உதவலாம். தொழில் வாய்ப்புக்களை திறமையுள்ள அனைவருக்கும் அளிப்பதற்கான முக்கியமான முயற்சி என்று இதைக் கூறலாம். எதிர்மறையாக கூறினால், மாணவர்களை பள்ளிக்கு வராமல் தொழிலுக்குச் செல்ல இது ஊக்குவிக்கும் என்றும் கூறலாம். இந்தக் கொள்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்த்தப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் இத்தகையக் கேள்விகளுக்கு பதில் பெற முடியலாம்.

கல்வியை அளிப்பதிலும் நிர்வாகம் செய்வதிலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை எவ்வாறு உபயோகப்படுத்த முடியும் என்பதையும் இந்த வரைவுக் கொள்கை விரிவாகப் பேசுகிறது. தகுதியான ஆசிரியர்களின் பற்றாக்குறை, இருக்கும் ஆசிரியர்களின் தகுதியின்மை, பொறுப்பின்மை, பணிக்கு வராமை, போன்ற பிரச்சினைகள் கடுமையான அரசியல் கருத்தொருமையுடனும் உறுதியுடனும் எதிர்கொள்ளப்படும் என்றும் கூறுகிறது. ஆசிரியர்களின் பொறுப்பின்மை பணிக்கு வராமை போன்ற அத்துமீறல்கள் செல்பேசி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் எதிர்கொள்ளப்படும் என்றும் முன்வைக்கிறது. எல்லா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் தரச்சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான தொடர்ந்த பயிற்சிகளையும், சீரான இடைவெளிகளில் ஆசிரியர் திறன் மதிப்பிடும் தேர்வுகளையும் இக்கொள்கை கட்டாயமாக்குகிறது.

இந்தக் கொள்கை பயிற்சி மொழியாக தாய்மொழியை பரிந்துரைக்கிறது. இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தையும் மூன்றாவது மொழியாக மாநிலங்களின் விருப்பத் தேர்வுக்கும் பரிந்துரைக்கிறது.
பள்ளிகளை தரவரிசைப் படுத்துவதற்கான சட்டகத்தையும் (Framework) இந்த வரைவுக் கொள்கை குறிப்பிடுகிறது. இந்தப் பரிந்துரையை செயல்படுத்த முடிந்தால், அது இந்தியக் கல்வியின் தரத்தில் ஒரு முக்கியமான பாய்ச்சலாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டவைகள் என் பார்வையில், பள்ளிக் கல்வியல் கொண்டுவரப்படும் முக்கியமான சீர்திருத்தங்கள். இவை வெறுங்கொள்கைகளாக மட்டும் இருந்தால் அல்லது கொள்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவற்றை செயல்படுத்தும் உறுதி அரசாங்கத்திடம் இல்லாமல் இருந்தால், இவற்றால் எந்தப் பயனும் இல்லை. இதை நடைமுறைப்படுத்துவதில் வெற்றி பெற வேண்டுமானால், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் கல்வி இயக்கத்துடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அதில் அரசாங்கம் எவ்வளவு வெற்றி பெறுகிறதோ அதைப் பொறுத்துத்தான் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அடையும் வெற்றியும் இருக்கும். 

Sunday, August 14, 2016

ஏன் இந்த எதிர்ப்பு? - 1

சிறகு இணையப் பத்திரிகையில் 13-08-2016 அன்று பதிப்பிக்கப்பட்டது

மத்திய மனிதவள மேம்பாட்டுத துறை அமைச்சகம், இந்தியாவின் கல்வித்துதறையை மறு சீரமைப்பு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்து, அதன அறிக்கையின் அடிப்படையில் வரைவு அறிக்கையை தயார்செய்து பொதுமக்களின் பார்வைக்கும் மேலான கருத்துக்களுக்குமாக முன் வைத்திருக்கிறது. தமிழகத்தில் எப்போதும் போலவே மத்திய அரசு எது செய்தாலும், அது எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், மாநிலங்களுக்கு எதிராகவே என்னும் ரீதியில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எதிர்ப்பின் முன்னணியில் இருப்பது அரசியல் கட்சிகள். பின்னர் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள். மிக விரைவில் ஆசிரியர்களும் இதில் சேர்ந்து விடுவதை எதிர்பார்க்கலாம்.

புதிய தேசிய கல்விக் கொள்கைகளுக்கான குழுவின் அறிக்கை கல்வியியல் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப் பல்கலைக்கழகத்தின் (NUEPA) இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம்தான் தேசிய கல்விக் கொள்கைகளுக்கான குழுவின் செயலக அலுவலகமாக பணியாற்றியிருக்கிறது. கல்வித்துறை அமைச்சகத்தின் வரைவு அறிக்கை அதன் இணையத்தளத்தில் பார்வைக்கு உள்ளது. ஆகஸ்ட்-16 ஆலோசனைகள் அளிப்பதற்கான கடைசி தினம்.

ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, எதிர்ப்புக்கான காரணங்களாக அறிக்கையின் சில பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட உதிரி வரிகள் காரணங்களாக முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அவையாவன,

  • ·         இந்தக் குழு கல்வியியல் நிபுணர்களைக்கொண்டு அமைக்கப்படாமல், ஆட்சிப்பணி நிபுணர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது
  • ·         சமஸ்கிருதத்தை பரவலாக்கும் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது
  • ·         குலக்கல்வி முறையை கொண்டுவர அரசாங்கம் முயல்கிறது
  • ·         மாநிலங்களுக்கான உரிமையை பறிப்பதாக இருக்கிறது
  • ·         சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது
  • ·         எட்டாம் வகுப்புவரைக்கும் மாணவர்களை வகுப்புகளில் தோல்வியடைய செய்யாமல் கடந்து செல்ல வைக்கும் கொள்கையில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறது.

இவை தவிர சில அடிப்படைகள் இல்லாத குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது. உதாரணமாக, இருபாலரும் சேர்ந்துப் பயிலும் வகுப்பறைகள் கூடாது  என பரிந்துரைப்பதாக ஒரு குற்றச்சாட்டு. இந்த அறிக்கைகளில், இரண்டு முறை முழுவதும் படித்தப் பிறகும், தனியாக இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையைத் தேடியபோதும் இத்தகைய ஒரு பரிந்துரை என் கவனத்தில் வரவில்லை.

தேசிய கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கையையும் அமைச்சகத்தின் வரைவு அறிக்கையையும் மேலோட்டமாக படித்தால் கூட, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்பது தெரியவரும். இந்தியாவின் தற்போதைய கல்வித் தரத்தைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதன் மீது நம்பத்தன்மையை உருவாக்க வேண்டுமானால், மிகக் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதையும் அறிவோம். அரசால் அமைக்கப்பட்ட குழு, அத்தகைய கடுமையான, தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்திருக்கிறது. அமைச்சகமும் அவற்றில் பலவற்றை ஏற்றுக் கொண்டு, தன் வரைவறிக்கையை உருவாக்கியிருக்கிறது. கடுமையான நடவடிக்கைகள் என்றால் எதிர்ப்புகள் தவிர்க்க முடியாதவை. அவைதான் இங்கு வெளிப்படுகின்றன. எதிர்ப்புகளுக்குக் காரணங்களாக, அந்த நடவடிக்கைகளுக்காகக் கூறப்பட்டுள்ள பின்புலங்களை கவனத்தில் கொள்ளாமல், சில உதிரி வாக்கியங்களை மட்டும் முன்னிலைப் படுத்தப்படுகிறது. அரசியல் கட்சிகள் இவ்வாறு இயல்பாக எழும் எதிர்ப்புக்களை தங்கள் சுயலாபங்களுக்காக பயன்படுத்துகின்றன. அதுதான் இப்போது நிகழத் தொடங்கியிருக்கிறது.
இதில் ஆசிரியர்களின் திறமைகளை உயர்த்தவும் கண்காணிக்கவும் பல நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனவே பெரும்பாலான ஆசிரியர் சமூகமும் இதை எதிர்க்கத் தொடங்கலாம். எதிர்ப்பதற்கான நேரடியான காரணங்களை வெளிப்படையாக அவர்களால் கூற முடியாது. எனவே பிறர் இடும் கூக்குரல்களை போலி செய்வார்கள். சமூகத்தின் மற்றப் பிரிவுகளைப் போலவே, ஆசிரியர் சமூகத்திலும் பெரும்பாலானவர்கள் தங்களுக்கொன்று தனிப்பட்ட கொள்கைகள் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.  சுயலாபத்திற்காக, தங்கள் திறமையின்மை மற்றும் ஆர்வமின்மை போன்றவற்றின் மூலம் கல்வியை அழிக்கும் அச்சமூகத்தின் ஒரு குறுங்குழு, இந்தப் பெரும்பான்மையினரை மூளைச் சலவை செய்து தங்களை ஆதரிக்கச் செய்து விடுவார்கள். பின் என்ன? அரசியல் கட்சிகளுக்குக் கொண்டாட்டம்தான். கல்வியின் தரம் எக்கேடு கெட்டால் அவர்களுக்கென்ன?

யார் கொள்கைகள் வகுத்தாலும், சில மனச்சாய்வுகள் தவிர்க்க முடியாதவை. இத்தகைய மனச்சாய்வுகளை தொடர் விவாதம் மூலம் சரி செய்துவிட முடியலாம். அதற்குத் தேவை ஆரோக்கியமான விவாதம். ஆனால் இங்கு தமிழகத்தில் தொடங்கியிருப்பது அத்தகைய விவாதம் அல்ல. ஒட்டுமொத்த எதிர்திசையிலான மனச்சாய்வு. தரமற்ற கல்வியைப் பெறும் சமூகத்தில்தான் தங்களால் நிலைத்திருக்க முடியும் என்னும் குறுங்குழுக்களின் அடிமன விருப்பங்கள்.
புதிய கல்விக் கொள்கைகளுக்கான அறிக்கை, கீழ் மட்டத்திலிருந்து, அதாவது பொதுமக்களிடமிருந்தும் கல்வியாளர்களிடமிருந்தும் கருத்துக்கள் அறியப்பட்டு அவை மேல் நோக்கிச் சென்று, பலமுறை மறுஆய்வுகள் மற்றும் தொகுப்புகள் செய்யப்பட்டு குழுவிடம் சென்று சேர்ந்த தகவல்களிலிருந்தும், அந்த தகவல்களிலிருந்து பெறப்பட்ட கருத்தாக்கங்களை, மீண்டும் கல்வியாளர்களுடனும், கல்வியின் பிற பங்குதாரர்களுடனும் விவாதித்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு கல்வி நிபுணர்களால் கொள்கைகள் உருவாக்கப்படவில்லை. மாறாக கல்வியின் தற்போதையை எதார்த்த நிலையையும், மாற்றியமைப்பதற்கான ஆலோசனைகளையும் சமூகத்தின் பரந்த வெளியிலிருந்துப் பெற்று அவை தொகுக்கப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய பணிக்கு பொருத்தமானவர்கள் கல்வியாளர்களை விட ஆட்சிப்பணி அனுபவம் உடையவர்களே.

நாம் ஏற்றுக்கொள்ள விரும்பினாலும் இல்லாவிட்டாலும், இந்தியாவில் இன்று இருக்கும் எல்லா மொழிகளிலும், தற்போது ஆங்கிலத்தின் தாக்கம் எவ்வாறு இருக்கிறதோ, அதைப்போல சமஸ்கிருதத்தின் தாக்கமும் நெடுங்காலமாக இருந்திருக்கிறது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய வெகுஜன தமிழ் எழுத்துக்களில் கூட, சமஸ்கிருத கலைச்சொற்கள் மிகுந்து இருந்திருக்கிறது. தற்போது, தமிழுக்கான கலைச் சொற்கள் பெருமளவு உருவாக்கப்பட்டிருந்தாலும், பல சமஸ்கிருத வார்த்தைகள் அவ்வாறே அல்லது சற்றே உருமாற்றி உபயோகப்படுத்தி வருகிறோம். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் அவ்வாறே. இந்தியா முழுமைக்குமான தத்துவமரபு சமஸ்கிருத மொழியிலேயே இருந்திருக்கின்றன. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் சில ஐரோப்பியர்கள் தங்கள் சுய முயற்சியால் சமஸ்கிருதத்தைக் கற்று, அங்கிருந்தவற்றை தங்கள் மொழிகளில் மொழிபெயர்த்து உரைகள் எழுதியிருக்காவிடில் இந்தியாவின் கலைச்செல்வங்கள் மற்றும் தத்துவங்களை பெருமளவு இழந்து, நம் பண்பாட்டையும் இழந்து நின்றிருப்போம். இன்று சமஸ்கிருதத்தின் செல்வங்கள் பெருமளவு பிற மொழிகளில் இருந்தாலும், சமஸ்கிருதத்தை அழிய விடுவது, நாம் பெற்றிருக்கும் கலை மற்றும் அறிவுச் செல்வங்களின் மூலத்தை இழப்பதற்குச் சமமாகும். தத்துவங்கள் மாறும் காலத்திற்கேற்ப மறுஆக்கம் செய்யப்படவேண்டுமென்றால், அவற்றின் மூலங்கள் காலவெளியில் தொடர்ந்து இருந்தாக வேண்டும். மூலங்கள் அழிந்தால் அவற்றை மறுஆக்கம் செய்வதற்கான சாத்தியங்களும் அழிந்து விடும். எனவே பண்பாடும் தேங்கி விடும். இந்தப் பின்னணியில், சமஸ்கிருதம் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும், பரந்த மனப்பான்மையுடன் பயிற்றுவிக்க முன்வைக்கப்படும் என்று வரைவுக் கொள்கை கூறுகிறது. அனைவரும் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்று கூறுவது சாத்தியம் இல்லை. மூன்று மொழிக் கொள்கையில், விருப்பப்பாடமாக ஒருவர் கற்க விரும்பினால் அதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்வது, சரியானதல்ல. இது சமஸ்கிருதத்தை பரவலாக்கச் செய்யும் முயற்சிதான். இந்தியாவின் செழிப்பான பண்பாட்டை அறிவதற்கு, தமிழ் போன்ற மொழிகளுடன், அன்றைய இந்தியாவின் இணைப்பு மொழியான சமஸ்கிருதம் பரவலாக்கப்பட்டாக வேண்டும். கட்டாயமாக அல்ல. விருப்பமானவர்களுக்கு கற்பதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைக்க வைப்பதன் மூலம். இந்த வரைவுக் கொள்கை அதையே கூறுகிறது.

கல்வியின் ஆரம்ப நிலைகளிலேயே தொழில்கல்விக்கு முந்தைய, அறிமுகச் செயல்பாடுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். குழந்தைகளின் திறமைகளை உருவாக்குவதற்கும், தொழில்மேல் மரியாதையை இது உருவாக்கவம் இது பயன்படும் என்று வரைவு அறிக்கை கூறுகிறது. இதைத்தான் குலக்கல்வியை அரசாங்கம் கொண்டு வருகிறது என்று கூவுகிறார்கள். இவர்கள் என்ன விரும்புகிறார்கள். படித்து முடித்த மாணவர்கள் தொழில் செய்ய திறனற்றவர்களாக வரவேண்டும் என்று விரும்புகிறார்களா? வரைவு அறிக்கைக்கு முந்தைய குழுவின் அறிக்கையில், இது சற்று விரிவாகவே கூறப்படுகிறது. கற்றல் திறனில் குறைபாடு உள்ளவர்கள், மற்றவர்களுடன் கற்றல் திறனில் இணையாக வருவதற்கு தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும். அத்தகைய உதவிகளும் பயனளிக்காத பட்சத்தில், எட்டாம் வகுப்பிலிருந்து தொழில்கல்வி நோக்கி அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கல்வி வாரியங்களும், தரச்சான்று (Accreditation) பெற்றிருக்க வேண்டும். இதன்மூலம், ஒவ்வொரு மாநில மற்றும் மத்திய கல்விவாரியங்களின் ஒப்புமைத் தரம் அனைவருக்கும் தெரியவரலாம். ஒரு குறிப்பிட்ட கல்வி வாரியம் அதன் தரத்தில் பின்தங்கியிருந்தால், அவை முன்னேற்றுவதற்கான கட்டாயம் சம்பந்தப்பட்ட அரசுக்கு ஏற்படும். இது வரைவு அறிக்கையில் உள்ள ஒரு பரிந்துரை. அதைப்போலவே பள்ளி அளவில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் இந்தியா முழுமைக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், மற்ற பாடங்களின் ஒரு பகுதி பொதுவானதாகவும், மற்றப் பகுதி மாநிலங்களின் தேவைகளுக்கேற்பவும் அமைக்கப்படலாம் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது. இதுவே கல்வியில் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது என்ற கூக்குரலுக்குக் காரணமாக இருக்கலாம். அறிக்கையின் வேறு எந்தப் பகுதிகளையும் இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புறுத்த முடியவில்லை. இந்தப் பரிந்துரைகள் தேவையானதா இல்லையா என்பதை கல்வி குறித்த புரிதல்கள் உள்ளவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது என்னும் கருத்தும் மேலே குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளிலிருந்தே உருவி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வேறு எவற்றையும் தொடர்புறுத்த முடியவில்லை. கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் தரச்சான்றிதழ் பெறுவது போன்றவைக் குறித்த சில பரிந்துரைகள் உள்ளன. இவை சில சிறுபான்மை கல்வி நிறுவனங்களை அவற்றின் தற்போதைய செயல்படும் முறையிலிருந்து மாற்றியமைக்க வைக்கலாம். இதுவும் இந்த எதிர்ப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

தற்போது எட்டாம் வகுப்புவரை மாணவர்களின் கற்றல் அளவு எப்படியிருந்தாலும் மறு அமர்வு (Fail) இல்லாமல் முன்னேற்றிவிடப்படுகிறார்கள். அது இனிமேல் ஐந்தாம் வகுப்புவரை என்று மாற்ற பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது கூட, குறைந்தப்பட்ச கற்றல் தகுதியை அடையாமல் இருக்கும் மாணவர்களுக்கு, தனிப்பட்ட கவனத்தின் மூலம் கற்றலை மேம்படுத்தச் செய்து, அதன்பின்னும் அவர்களால் குறைந்தப்பட்ச தகுதியை அடைய முடியாமல் இருந்தால்தான் மறுஅமர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இத்துடன் ஆசிரியர்கள் திறமையை மதிப்பிடும் கொள்கையையும், மேலே கூறியிருக்கும் பள்ளிகளில் தொழிற்கல்வி குறித்த கொள்கையையும் சேர்த்துக் கொள்ளும்போது, இதன் பயன் விளங்கலாம். ஆக, இது தீமையான ஒன்று இல்லை. மாறாக, மிக அடிப்படையான ஒன்று.

இந்தக் கொள்கைகளை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது. ஆனால், இது வருங்கால சமூகத்தை கட்டமைப்பதற்கான அடிப்படைக் கொள்கை என்பதை புரிந்துக் கொண்டு. அதன் அடிப்படையில் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை ஒருமுறையாவது படித்து விட்டு அதன்பின் தங்கள் நிலைப்பாடுகளை எடுத்தால், அது எவ்விதமாக இருந்தாலும், வருங்கால சமூகத்திற்கு நம் பங்களிப்பை சரியான முறையில் அளித்திருப்போம். மனித மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் வரைவு அறிக்கை வெறும் 40 பக்கங்கள்தான். கல்விக் கொள்கைக்கான குழுவின் அறிக்கை 240 பக்கங்கள். குறைந்தப் பட்சம் இந்த 40 பக்க ஆவணத்தையாவது படிக்காமல் இதைக் குறித்து கருத்து கூறுவதோ அல்லது சமூக வலைத்தளங்களில் குருட்டுத்தனமாக பகிர்ந்து கொள்வதோ உண்மையில் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஜனநாயக உரிமையை பொறுப்புணர்வில்லாமல் நம் சந்ததியினருக்கு எதிராகச் செயல்படுத்துவதாகும்.

blog.change@gmail.com