சிறகு இணைய இதழில் 09-05-2015 அன்று பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.
என் பள்ளிப்பருவ
நாட்களில், கிராமங்களில் அனைவருக்கும்
நேரம் அறிந்து கொள்வது
அவ்வளவு எளிதானதாக இருந்திருக்கவில்லை.
அனைவர் கைகளிலும் வாட்ச்
இருக்கவில்லை. அவ்வப்போது அந்த
வழியாக செல்லும் அரசாங்க
பஸ்,
வாட்ச் இல்லாத பொது
மக்களுக்கு நேரத்துக்கான ஒரு
அறிவிப்பு.
மார்த்தாண்டம் சந்தையில்,
ஒரு உயர்ந்த உலோகக்
கோபுரத்தின் மேல் அமைத்திருந்த
'சைரன்' என்று அழைக்கப்பட்ட கருவியே
அன்று பெரும்பாலானவர்களுக்கு விடிகாலை
எழும் நேரம், பள்ளிக்குச்செல்லும் நேரம், தொழிலுக்குச் செல்லும்
நேரம், தொழிலில் உணவு நேரம்,
தொழில் முடியும் நேரங்களை
அறிவித்து, இரவில் உறங்கவும் வைத்தது.
விடிகாலை 5 மணி, காலை
9 மணி,
மதியம் 12 மணி, பின்
மதியம் 3 மணி மற்றும் இரவு
9 மணிகளில் ஒலித்து அனைவருக்குமான
காலத்தின் பொது வெளிப்பாடாக
இருந்தது. மார்த்தாண்டம் சந்தையிலிருந்து சற்றேறக்குறைய
3 கி.மீ. தொலைவில்
உள்ள எங்கள் வீட்டிலும்
மிகத்தெளிவாகவும் சத்தமாகவும் கேட்கும்.
இன்று அந்த
சத்தத்துக்கான தேவையும் இடமும்.
இல்லை. அது இறந்தாக வேண்டிய
சத்தம், இறந்தும் விட்டது. எப்போது
இறந்தது என சரியாக ஞாபகம்
இல்லை. குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது
ஆகியிருக்கும். ஆனால், இன்று
பல இறந்தாக வேண்டிய சத்தங்கள்
இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. பலவற்றின்
பிறப்பு, அவற்றின் தேவை முடிந்த
பின்பே நிகழ்ந்திருக்கிறது!
இப்போது ஒலித்த இந்த எலக்ட்ரானிக் மணிதான் இதை எழுதத்
தூண்டியது. இரவு சுமார் பத்து மணி. வீட்டுக்கு சற்று தொலைவிலுள்ள கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினருக்குச் சொந்தமான சர்ச்-லிருந்து எலக்ட்ரானிக் மணி 10 முறை அடித்து ஓய்ந்தது. கூட பைபிளில் இருந்து தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஒரு பதிவு செய்யப்பட்ட வசனமும் ஒப்புவிக்கப்பட்டது. இன்னும் 10 நிமிடங்களுக்குள் வேறு இரு பிரிவினரின் சர்ச்-களிலிருந்தும் 10 மணி அடித்து, பைபிள் வசனமும் கூறப்பட்டு ஓயும். ஆக, ஒரு மணி நேரத்துக்கு மூன்று வசனங்கள் வீதம் ஒரு நாள் முழுவதுமாக 72 வசனங்கள், விழித்திருக்கும்போதும் உறங்கும்போதுமாக, நான் வீட்டில் இருந்தால் என் செவியை வந்தடையும். என்னால் ஒன்றும் செய்ய முடியாது! என்னை விட்டு விடலாம். வேறு யாராவதாவது, அவற்றில் ஒரு வசனத்தின் உட்பொருளையாவது அறிய அல்லது அன்றாட வாழ்க்கையிலோ ஆன்மீக வாழ்க்கையிலோ பயன்படுத்த விரும்புகிறார்களா? இல்லையெனில் யார் கேட்டு அறிவதற்காக அந்த வசனம் ஒலிக்கிறது?
உண்மையில் யாரும் அறிவதற்காக அது ஒலிக்கப்படுவதில்லை. யாரும் அறியவோ, பயன்படுத்தவோ விரும்பவும் இல்லை. கிறிஸ்தவர்கள் அனைவரும், மனனமாக அவற்றை அறிந்திருப்பர். அது, ஒரு சிலர் தங்கள் பெருமையை பறைசாற்ற ஒலிக்கப்படுகிறது - பிறர் அந்த வசனங்களின் உட்பொருளை அறியவேண்டும் என்னும், பறைசாற்றப்பட்ட நோக்கத்துடன்! அந்தந்த சர்ச்சுகளின் அதிகாரத்தில் இருப்பவர்களின் மகிழ்ச்சிக்காக, பெருமைக்காக ஒலிக்கப்படுகிறது. அந்த சர்ச்சுடன் தங்களை அடையாளப்படுத்தியிருப்பவர்களின் அகங்கார நிறைவுக்காக ஒலிக்கிறது. இன்று பெரும்பாலான இடங்களில் வாழும் மனிதர்களுக்கு நேரத்தை கூவி அறிவிக்க வேண்டிய தேவை இல்லை. எனவே ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒருமுறை ஒலிக்கும், நடு இரவுகளிலும், இரவின் அமைதியை துணையாகக் கொண்டு இன்னும் ஓங்காரத்துடனும் ஒலிக்கும் இந்த சத்தங்கள் இறந்து போக வேண்டிய சத்தங்கள்.
2010-ம் வருஷம் பிப்ரவரி மாதம், கேரளமாநிலம் கெவி (Gavi) என்னும் இடத்தில் அடர்காட்டுக்குள், கேரளா சுற்றுலாத்துறையால் அமைக்கப்பட்டிருந்த சூழியல் சுற்றுலாதலத்துக்கு (Eco Tourism) சென்றிருந்தோம். இந்த இடம் சபரிமலைக்கு அருகில் உள்ள, மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இங்கிருந்து சபரிமலையின் மகரவிளக்கு எரியும் பொன்னம்பலமேடு
பகுதி தெரியும். ஒரு நாள் நடுப்பகலிலிருந்து அடுத்த நாள் நடுப்பகல்வரை அங்கு தங்கியிருந்து இயற்கையை அறியும் முயற்சி! ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வழிகாட்டி. நான் என் குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். எங்கள் நான்குபேருக்குமாக மட்டும் ஒரு வழிகாட்டி. மாலையில் அடர்காடுகளூடாக சுமார் இரண்டு மணி நேர நடை பயணம். அதன் பின் காட்டின் இரவு ஒலிகளுக்கிடையில் உறக்கம். மறுநாள் காலை விடியும் நேரத்தில் காட்டு யானைகளைத்தேடி வாகனத்தில் ஒரு பயணம். விரும்பினால் காட்டினுள் மீண்டும் ஒரு நடை பயணம். அற்புதமாக இருந்தது. இதுவும் ஒரு ஊடுருவல்தான்!
அந்த வழிகாட்டியிடமிருந்து சில விஷயங்களை தெரிந்து கொண்டோம். சபரிமலை சீசன் நாட்களில் இந்த சுற்றுலாதலம் மூடப்பட்டிருக்குமாம். அதற்குக் காரணம், சபரிமலையில் வெடி வழிபாடு எனக்கூறப்படும் ஒன்று. வெடி வேட்டுகளின் அதீத சத்தத்தினால் காட்டு யானைகள், கலக்கமடைந்து, கட்டுப்பாடு இழந்து வன் செயல்களில் ஈடுபடுமாம். அந்தக் காலங்களில், யானைகள் எதிர்பாராமால், நுழைந்து கலகத்தில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதால், இங்கு தங்கியிருப்பது மிகவும் ஆபத்தானதாக இருக்கும். சாதாரணமாக, இந்த கால கட்டத்தில் இங்கு இருக்கும் பெரும்பாலான யானைகளும் மற்றும் பல விலங்கினங்களும், இந்த சுற்றுப்புறத்தை விட்டு காட்டில் வெகு தூரம் சென்றுவிடுமாம். பின்னர் மனிதர்களின் அட்டூழியம் அடங்கியபின்னர் திரும்பி வருமாம். கடவுளை வணங்குவது என்னும் பெயரில் மனிதர்களின் தரம்தாழ்ந்த சிந்தனையற்ற கடவுளை துரத்தும் செயல். கடவுளை துரத்திவிட்டு அங்கே கடவுளை வணங்கச் செல்கிறார்கள். முரண்நகைதான்!
சபரி மலைக்கு, மிகக்குறைந்தபட்ச மனிதர்கள், முற்றிலும் ஆன்மீக காரணங்களுக்காக, முற்றிலும் அக பயணத்தின் பொருட்டு சென்ற ஆதி நாட்களில், பாதுகாப்புடன் சென்று திரும்ப இந்த வெடிகள் உபயோகப்பட்டிருக்கலாம். என்றோ ஒரு நாள், சில மனிதர்களின் மிக ஆழமான அக பயணத்திற்காக, இவை தேவைப்பட்டிருகலாம். ஆனால் இன்றோ, அறிவிழந்த வெற்று வேட்டுகள், அந்த தேவையை ஒரு சடங்காக்கி, முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட, விலங்குகளின் வாழ்விடங்களின் நடுவில் இருக்கும் சபரிமலைக்கு, கும்பல் கும்பலாக, ஆன்மீகம் என்னும் பெயரில் சென்று அழிச்சாட்டியம் செய்வது, உண்மையில் ஆன்மீகத்தை மனிதனிடமிருந்து பறித்தெறிய மட்டுமே செய்யும். தற்காலத்தில், கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளையங்கிரி மலை, தென் கைலாயம் என்னும் பெயரில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா யோகமையத்தால் ஆன்மீக சுற்றுலாதலமாக மாற்றப்பட்டு வருகிறது. ஒருவேளை இன்று அது மிகச் சரியான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், ஜக்கி வாசுதேவ் அவர்களின் காலத்திற்குப் பின்னால், ஒருவேளை அப்போதும் தென் கைலாயம் என்னும் வணிகப்பெயரை பயன்படுத்த முடிந்தால், அப்போது அங்கும் ஆன்மீகத்தின் சாரம் முற்றிலும் அழிந்து விலங்குகளின் இருப்பிடத்தில் சென்று மனிதர்கள் நிகழ்த்தும் அழிச்சாட்டியமாகவே மாறும். இந்த சத்தங்களும் இறந்து போக வேண்டிய ஒன்று. துரதிர்ஷ்டவசமாக, இப்போதுதான், மனிதனின் கீழ்மையை உரமாக கொண்டு அவை வளர்ந்து வருகின்றன.
இன்று பிறந்து வளர்ந்து வரும் சத்தங்களில் பல அவற்றின் தேவை முடிந்த பின்னரே பிறந்துள்ளன. உதாரணமாக மேல குறிப்பிட்ட மதங்கள் தொடர்பான சத்தங்கள். ஆனால் இன்று மிகவும் தேவையான சத்தங்களில் பல இன்னும் பிறக்கவே இல்லை. உதாரணமாக, மதவாதத்திற்கு எதிரான சத்தங்கள்! இங்கு நான் மதவாதம் எனக்கூறுவது, இந்தியாவில் பெரும்பாலும் கூறப்படும் Pzedo மதவாதம் அல்ல. ருவாண்டா படுகொலைகளுக்கு அடிப்படை காரணமான, ருவாண்டாவின் இனப்பாகுபாட்டை ஊதிப்பெருக்கிய மேற்கின் மதவாதம்! மத்திய கிழக்கு ஆசியாவில், தங்கள் மதத்தில் கூட வேறு பிரிவை சார்ந்தவர்களையும், தினம்தோறும் நூற்றுக்கணக்கானவர்களை அழித்தொழிக்கும் மதவாதம்! இந்தியாவிலும் Pzedo மதவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்டு, எல்லாத் தரப்புகளிலும் எழும் மதவாதம்! தேவையன்றி எழும் சத்தங்கள் உயிரினங்களின் செவிப்பறைகளை நாள்தோறும் செவிடாக்கி வருகின்றன. அறிவையும் கூட!
ஓலி மாசு! மற்ற எல்லாவித மாசுகளைப் போல, மனிதனின் வாழ்க்கை வசதிகள் என்னும் பெயரிலும், பொருளாதார வளர்ச்சி என்னும் பெயரிலும் வாழும் சூழலை, மற்ற எல்லாவற்றையும் போல, ஒலியாலும் நிறைத்து வைத்திருக்கிறோம். ஒலி மாசு பற்றி அறிய, சத்தத்தின் பொதீக இயல்புகள் குறித்து சற்று அறிந்திருப்பது
உதவலாம். அதற்கும் முன்; மனிதர்களால் அறிய முடிவது, உலகின் இருப்புகள் மனிதனின் ஐம்புலன்களில் ஏதாவது ஒன்றிலோ ஒன்றிற்கு மேற்பட்டவற்றிலோ மோதும்போது, அந்த மோதல் புலன்களால் உணரப்படுவதையும், அவ்வாறு உணரப்பட்டவற்றை ஆறாவது புலனாகிய (அல்லது அறிவாகிய) மனதைக்கொண்டு கற்பனை மூலம் விரித்தெடுப்பவைகளையும் மட்டுமே. ஐம்புலன்களால் உணரப்படுபவையின் எல்லை, பிரபஞ்ச இருப்பை கருத்தில் கொண்டால், மிகமிக சிறிய அளவு மட்டுமே. மனதால் அடையப்படும் கற்பனையையும் சேர்த்தாலும் மனித அறிவின் அளவு, பிரபஞ்ச அறிவுடன் (அல்லது இருப்புடன்) ஒப்பு நோக்கையில், பெருங்கடலின் ஒரு துளியின் சிறு பாகம் மட்டுமே. அறுதி பெரம்பான்மையான மக்களுக்குக் கற்பனை என்பதோ, அவர்களின் வாழ்க்கைத்தேவைகளை ஒட்டி மட்டுமே இருக்கும். கற்பனையால் புலன்கள் அறிந்தவற்றை கடந்து செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு பெரும்பாலும் இல்லை. மிகமிகமிக குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களால் மட்டுமே கற்பனையில் பறந்து, உண்மையான இருப்பின் சிறு துளியின் நுண் பாகத்தையாவது அறிய முடியலாம் - அந்த சிறுதுளியின் அறிவு, முழுபிரபஞ்சம் குறித்த அறிவாகவும் இருக்கக்கூடும்!
ஒலியென நாம் அறிவது, பிரபஞ்ச இருப்பு ஒலியலைகள் மூலம் காற்றில் எழுந்து வந்து நம் புலன்களில் ஒன்றாகிய செவியை அடைவதைத்தான். ஒலி அலைகளின் இயக்கம், மற்ற அலை இயக்கங்களான ஒளி அலை, மின்காந்த அலை, மின்சார அலை போன்றவைகளிலிருந்து வேறுபட்டது. அலைகள், பொதீகப் பொருள்களின் இயக்கம். எனவே பொதீக விதிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டது. ஒளியலை ஆனாலும், ஒலியலை ஆனாலும், நம் மொபைல் ஃபோன்களில் வந்து சேர்ந்து ஒலியாக மாற்றமடையும் மின்காந்த அலைகளானாலும், அந்த அலைப்பரவல் பொதீக பொருள்களின் மூலமே அலையின் தொடக்கப்புள்ளியிலிருந்து நம் புலனை வந்தடைகிறது.
அலைகளின் இயக்கத்தை அறிய எளிய வழி, நீரப்பரப்பில் எழும் அலைகள். அலைகள் மேலும் கீழும் அசைந்து, அந்த அசைவுக்குச் செங்குத்தான திசையை நோக்கி அலை பரவும். இத்தகைய அலைகள், குறுக்குவட்ட அலைகள்(Transverse waves) என அழைக்கப்படுகிறது. அலைகளில் வியக்கவைக்கும் அம்சம், அந்த அலைகளில் இயங்கும் பருப்பொருட்களின் இயக்கம். அலையை காணும்போது, அந்த அலையின் பரவலில் ஈடுபட்டிருக்கும் பருப்பொருட்களும், அலையுடன் செல்வது போல் தோன்றும். உண்மையில், அந்த பருப்பொருட்கள், அலை பரவும் திசைக்கு செங்குத்தான திசையில், ஒரே புள்ளியின் இருபுறமாக இயங்கிக்கொண்டிருக்கும். நீர் அலைப்பரப்பின் மேல் மிதக்கும் இலையின் இயக்கத்திலிருந்து இதை அறியலாம்,
மற்றொரு வகை அலை நீள்வாக்கு அலை(Longitudinal wave) எனப்படுகிறது. ஒலை அலைகள் இந்த வகையை சார்ந்தது. ஓலி அலைஇயக்கத்தில், அலை பரவும் திசைக்கு இணையாக, அந்த அலையைப் பரப்பும் ஊடகத்தின் இயக்கம் இருக்கும். அதாவது, ஒலி அலை காற்றில் பரவும்போது, காற்றின் துகள்கள் அலைபரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னும் இயங்கி, அந்த அலையை முன்னோக்கிப் பரவச்செய்யும்.அலைகளின் இந்த இயக்கங்களை, இந்த இணையதளத்தில், எளிதாக புரிந்தகொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. http://www.acs.psu.edu/drussell/Demos/waves/wavemotion.html
அலைகளின் பொதீக இயல்புகளை அதன் அதிர்வு (Frequency), அலைநீளம்(Wave Length), வீச்சு(Amplitude), செறிவு(Intensity) ஆகிய பொதீக அளவீடுகளின் மூலம் மதிப்பிடப்படுகிறது. இவற்றில் முதல் மூன்று இயல்புகளும், எல்லாவிதமான அலைகளுக்கும் ஒரே அலகால் (Unit) அளக்கப்படுகிறது. செறிவு மட்டும் அந்தந்த அலைகளின் தனித்தன்மைக்கேற்ப வேறு வேறு அலகுகளால் அளக்கப்படுகிறது.
இங்கு பேசும் பொருள் சத்தம். மனிதர்கள் எல்லா வகையான சத்தங்களையும் கேட்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அதிர்வுகளுக்குள் அதிரும் ஒலியை மட்டுமே மனிதச் செவியால் கேட்க முடியும். அலைகளின் அதிர்வு, ஹெர்ட்ஸ் (Hz) என்னும் அலகால் அளக்கப்படுகிறது. அலையை கடத்தும் ஊடகம், அலை செல்லும் இடத்தில், ஒரு வினாடிக்கு எத்தனை முறை அதிர்கிறது என்பதே அதிர்வு ஆகும். உதாரணமாக நீர் அலையில், நீர்ப்பரப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளி, அலைபரவும்போது ஒரு வினாடிக்கு எத்தனை முறை மேலும் கீழுமாக அசைகிறது என்பதாகும். அந்தப் புள்ளி மேலும் கீழும் அசைவதற்கு ஐந்து வினாடிகள் எடுத்துக்கொண்டால், அலையின் அதிர்வு, 0.2 Hz. ஒலி அலைகளின் அதிர்வு 20 Hz முதல் 20000 Hz க்குள் இருந்தால் மட்டும்தான், மனித செவியால் ஒலியை அறிய முடியும். ஒலியின் அதிர்வுகள் இந்த இடைவெளிக்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் அவற்றை நம்மால் கேட்க முடியாது. சில உயிரினங்களின் புலன்கள், இந்த எல்லைக்கு வெளியே இருக்கலாம். உதாரணமாக, வவ்வாலினால் 20000 Hz க்கு அதிகமான அதிர்வுள்ள ஒலிகளை மட்டுமே உணரமுடியும். அவை வேறு ஒலிஉலகத்தில் வாழும் உயிரினம்.
அதாவது, நமது புலன்களின் அறியும் திறன் மிகமிக குறைவானதே. இந்த அதிர்வு இடைவெளிக்குக் குறைவான அதிர்வுள்ள ஒலிகளும் அதிகமான அதிர்வுள்ள ஒலிகளும், நம்மைச் சுற்றி எங்கும் எப்போதும் நிறைந்திருக்கின்றன. ஆனால் அவற்றை நாம் அறிய முடியாது. ஏன்? கற்பனை செய்யவே முடியும் என்றும் தோன்றவில்லை. மனிதனின் அறியும் திறனின் மிகச்சிறிய எல்லை! மறைஞானம் எனவும் Mystic எனவும் அழைக்கப்படுவது, பெரும்பாலும் இந்த புலன்களின் எல்லைக்கு வெளியே நிகழும் நிகழ்வுகளையே.
அதிக அதிர்வுள்ள
ஒலிகளால் நம் காதுகள் பாதிக்கப்படுவதில்லை.
அவற்றால் அந்த ஒலிஅலைகளை
உணர முடியாது. ஆனால்
செவியின் தாங்கும் திறனை
விட அதிக செறிவுள்ள
ஒலியலைகளால் நம் செவிகள் அதன்
கேட்கும் திறனை முற்றிலும்
இழக்கலாம். ஒலியின் செறிவு, டெசிபல்
(dB) என்னும் அலகால் அளக்கப்படுகிறது.
உதாரணமாக, நாம் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது எழும் ஒலியின்
அளவு சுமார் 60 dB அளவில்
இருக்கும். ஸ்டீரியோ பிளேயர், முழு
சத்தத்தில் இயக்கினால் எழும்
ஒலியின் அளவு சுமார்
105 dB வரை இருக்கும். வானத்தில்
இடி ஒலிக்கும் சத்தம்
120 dB வரை இருக்கும். துப்பாக்கி
வெடிக்கும் சத்தம் 140 முதல்
160 வரை இருக்கும்.
85 dB வரையிலான
செறிவு கொண்ட சத்தத்தினால்
செவிக்கு எந்த அபாயமும்
இல்லை. அதற்கு அதிகமான ஒலியை
தொடர்ந்து கேட்க நேர்ந்தால்
செவி அதன் கேட்கும்
திறனை, ஒலியின் செறிவுக்கேற்பவும், செவியில்
ஒலிக்கும் நேரத்திற்கேற்பவும், அதன்
கேட்கும் திறனை இழக்கலாம்.
உதாரணமாக 105 dB அளவில் உள்ள
தொடர்ச்சியான சத்தம் ஒரு
மணி நேரம்வரை நம்
செவிகள் தாங்கலாம். அதற்கு
மேல் தொடர்ச்சியாக கேட்க
வேண்டி இருந்தால், செவி
பாதுகாப்புக்கான கருவிகளை உபயோகப்படுத்த
வேண்டும் அல்லது கேட்கும்
திறனை இழக்க வேண்டும்.
140 dB அளவு,
30 வினாடிகள்வரைக்கும் நம் செவிகள்
தாங்கிக்கொள்ளலாம். 160 dB -க்கு அதிகமான
ஒலி,
நம் கேட்கும் திறனை
உடனடியாக இழக்க வைக்கும்
திறன் உடையது.
இன்று நம்மைச்
சுற்றி எப்போதும், பல்வேறு
செறிவுகளில், எல்லா திசைகளிலிருந்தும் ஒலிகள் வந்து கொண்டிருக்கின்றன.
தொழிலில் ஒலி அலைகளுக்கிடையில் இடைவிடாது
இருப்பது தவிர்க்க இயலாதது.
ஆனால், அமைதியாக நிகழவேண்டிய பொழுது
போக்குகளும், இறைவணக்கமும், காதை
செவிடாக்கும் செறிவுள்ள ஒலிகளுக்கிடையில் நடைபெறவேண்டிய நாகரீகத்திற்கு நம்
சமூகம் சென்று விட்டது.
இத்துடன், நம் இருப்பிடத்தை சுற்றிச்
செல்லும் பொருளாதார முன்னேற்றத்தை
பறை சாற்றும் வாகனங்களும்,
தொழில்களும் செறிவான ஒலி
அலைகளை தொடர்ந்து நம்
செவிக்கு அளித்துக்கொண்டே இருக்கின்றன.
இடைவிடாது செவியை வந்தடையும்
ஒலிகள், நம் வாழ்வின் அங்கமாக
மாறிவிட்டது. தவிர்க்கும் வழிகள்
எளிதானதாக இல்லை.
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு
துகளும், என்றாவது ஒருநாள் இறந்து
போகவேண்டியவை. தேவையான நேரத்தில்
பிறந்து, தேவை முடிந்த பின்
இறந்து விடுபவைதான் உண்மையில்
வாழ்பவை, வாழ்ந்தவை. அந்த
'சைரன்' வாழ்ந்து இறந்த ஒன்று!
blog.change@gmail.com
No comments:
Post a Comment