Saturday, May 9, 2015

கிருமிகள்

02-05-2015 அன்று, சிறகு இணைய இதழில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை.

உடலில் நுழைந்து நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள், கிருமிகள் என்னும் பொதுப்பெயரால் சுட்டப்படுகின்றன. கிருமிகளின் இயல்பைப் பொறுத்து அவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு வகை பாக்டீரியா, இன்னொரு வகை வைரஸ். மனிதர்களை பொறுத்தவரை, நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் உள்ளன, தீமை செய்பவையும் உள்ளன. நன்மை செய்யும் சில பாக்டீரியாக்கள், ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக உடலில் பெருகிவிட்டால், அவற்றின் செயல்பாடு நோய்களாக வெளிப்படுவதும் உண்டு.

இங்கு நான் கூற விரும்புவது கிருமிகளை பற்றி அல்ல. கிருமிகள் தாங்கள் சார்ந்திருக்கும் உடலை சுரண்டி நோய்க்குள்ளாக்குவதைப்போல, தங்கள் அதீத நுகர்வாலும், நுகர்வின் கழிவுகளாலும் பூமிக்கு நோய்களை உருவாக்கும் கிருமிகளாகி விட்ட மனிதர்களை குறித்து. மனித உடலுக்கு கிருமிகளாக அறியப்படுபவற்றைப் பற்றிய ஒரு ஒப்பீடு, மனிதர்கள் பூமிக்கு கிருமிகளாக மாறிவிட்டதை உணர உதவலாம். எனவே கிருமிகளை பற்றிய சில தகவல்கள்.

எல்லா இருப்புகளும், சில அடிப்படை அலகுகளின் (Building Block) கட்டுமானத்தைக் கொண்டுதான் அவற்றின் இருப்பை அடைந்திருக்கும். உதாரணமாக கட்டிடத்துக்கு செங்கல், வேதிப்பொருட்களுக்கு மூலக்கூறு, தனிமங்களுக்கு அணு........... உயிரினங்களின் அடிப்படை அலகு 'செல்' எனப்படுகிறது. உயிரினங்களின் உடல், உயிர்சக்தியால் ஒன்றிணைக்கப்பட்ட செல்களின் தொகுப்புஒரு 'செல்'-ன் சராசரி எடை 1 நேனோ கிராம் அளவுக்கு இருக்கும். ஒரு நேனோ கிராம் என்பது, 1 கிராமில் 10 கோடியில் ஒரு பகுதி. 1 கிராம் என்பது, ஒரு கிலோவில் 1000 -ல் ஒரு பகுதி என்பதை அறிவோம். எனவே ஒரு கிலோவுக்கு எத்தனை நானோ கிராம் என கணக்கிடலாம். அல்லது கற்பனைச் செய்யலாம்! மனிதர்களின் சராசரி எடை 70 கிலோ என்றால், ஒரு மனிதனின் உடல், கிட்டத்தட்ட 7 டிரில்லியன் (70 லட்சம் கோடிகள்) 'செல்'களால் ஆக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு 'செல்லையும், கிட்டத்தட்ட ஒருத் தனி உயிராகவும் கருதலாம். மனித உடலில், இந்த 7 டிரில்லியன் 'செல்' களும் கிட்டத்தட்ட ஒருப் பொது நோக்கத்துக்காக, பொது சக்தியால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. அந்த இணைப்பால் உருவாக்கப்பட்ட இருப்புகளே வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும், வெவ்வேறு இயல்புகளால் இயக்கப்பட்டும், இங்கு மனிதர்களாகவும் பிற உயிரினங்களாகவும் வாழ்ந்து கொண்டிருப்பவை.

பாக்டீரியா ஒரு உயிரினம். அதன் உடலின் அளவு ஒரு 'செல்' அளவு மட்டுமே. அதாவது சுமார் 1000 நேனோ மீட்டர் அல்லது ஒரு மைக்ரோ மீட்டர் அளவு இருக்கும். ஒரு நேனோ மீட்டர், ஒரு மில்லி மீட்டரில்  10 லட்சத்தில்  ஒரு பகுதி. அவற்றின் உடல் ஒரு 'செல்'லால் மட்டும் ஆனது. பாக்டீரியாக்கள் இனப்பெருக்கத்துக்குத் தேவையான அனைத்தையும் அந்த ஒற்றை 'செல்'லிலேயே கொண்டுள்ளன. அவற்றின் 'செல்' இரண்டாக பிளவுபடுவதன் மூலம் அவை இனப்பெருக்கமடைகின்றன.

வைரஸ் பாக்டீரியாவை விட 10 முதல் 100 மடங்குவரை சிறிய அளவுடையவை. வைரஸ் ஒரு உயிரினம் என்றும், இல்லை என்றும் இரு வேறு தரப்புகள் உள்ளன. இதற்குக் காரணம் அவற்றில் உயிரினத்தின் அடிப்படை அலகான 'செல்' அமைப்பு இல்லை. எனவே வேறு 'செல்'களையுடைய உயிரினங்களை சார்ந்து மட்டுமே வைரஸால் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். வைரஸ்களால் தம்மை தாமே இனப்பெருக்கம் செய்து கொள்ள இயலாது. அவற்றின் மரபணுக்களை மற்ற உயிரினங்களின் செல்களில் செலுத்தி, அந்த செல்களில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி, தம் இனத்தைப் பெருக்குகின்றன.

மனிதர்களின் நோய்களைப் பொறுத்தவரையில், பாக்டீரியாவுக்கும் வைரஸ்க்கும் இடையேயான முக்கியமான வேறுபாடு, ஆன்டிபயாடிக்ஸ் என்னும் எதிர்உயிரிகள் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களை மட்டுமே குணப்படுத்த முடியுமாம். ஆன்டிபயாடிக்ஸ்னால் வைரஸை அழிக்க முடியாதாம். எனில் வைரஸ்களால் ஏற்படும் நோய்களுக்கு எதிர் சக்தி, நம் உடலின் எதிர்ப்பு சக்தி மட்டுமே! ஆனால், ஒரு சாதாரண காய்ச்சல் என்றோ ஜலதோஷ தொண்டைவலி என்றோ டாக்டரிடம் போனாலும், பெரும்பாலான மருத்துவர்கள் ஆன்டிபயாடிக்ஸ்-தான் பரிந்துரைக்கிறார்கள். அது சாதாரண காய்ச்சலா அசாதாரண காய்ச்சலா என்று நமக்குத் தெரியாதுதான். அந்தக் காய்ச்சலை வைரஸ் காய்ச்சல் என்று வேறு சொல்லுவார்கள். ஆன்டிபயாடிக்ஸ் வைரஸை எதுவும் செய்யாது என்றால், எல்லா வைரஸ் காய்ச்சல் எனக்கூறப்படுபவற்றுக்கும் ஆன்டிபயாடிக்ஸ் ஏன் கொடுக்கிறார்கள் என்று ஏதாவது நல்லெண்ணம் வாய்த்த டாக்டர்தான் கூறவேண்டும். தற்போது பெரும்பாலானவர்கள் வேறு படித்தவர்கள் ஆகிவிட்டார்கள். "டாக்டரிடம் போனால் 'இந்த' ஆன்டிபயாடிக் தான் கொடுப்பார். வீணாக அவரை எதுக்குப் போய் தொந்தரவுப் படுத்தணும். அதே ஆன்டிபாயாடிக் மருந்த சாப்பிட்டுப் பாக்கலாம், சரியாகல்லைன்னா அப்புறமா டாக்டரத் தொந்தரவுச் செய்யலாம்" என்னும் பரந்த நோக்குடன் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளுகிறார்கள்.

அதிகப்படியான 'ஆன்டிபயாடிக்' உபயோகத்தினால், பாக்டீரியாக்கள் அவற்றின் பரிணாம வளர்ச்சியின் துணை கொண்டு, 'ஆன்டிபயாடிக்'குகளுக்கான எதிர்ப்பு சக்தியை பெற்று வருகின்றன. இத்தகைய எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொண்டுள்ள பாக்டீரியாக்களால் உருவாகும் நோய்கள், மருந்துகளால் குணப்படுத்த முடியாதத் தன்மையை அடைந்து விடும். ஆன்டிபயாடிக் மருந்துகள் மனித சமூகத்தை நோய்களின் பேரழிவிலிருந்து பாதுகாத்துள்ளது. ஆனால் அவையே, அதே சமூகத்தின் கட்டுப்பாடற்ற உபயோகத்தால், இன்னும் பெரும் அழிவுகளுக்கு உள்ளாக்கத் தாயாராகி வருகிறது - சமூகம் விழித்துக்கொள்ளவில்லை என்றால்!

மனித உடலினுள் வாழும் சிறு பாக்டீரியாவை கற்பனை செய்ய முடிந்தால், பூமியை ஒரு பெரும் இருப்பாகவும், அதில் வாழும் மனித உயிரை பூமியில் வாழும் பாக்டீரியா போன்ற ஒரு சிறிய உயிரினமாகவும் கற்பனை செய்வதும் சாத்தியம்தான். தற்போது பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை சுமார் 700 கோடி. அவர்கள் பூமியில் இருப்பவற்றை நுகர்ந்து, நுகர்வின் கழிவுகளை பூமிக்கு அளித்து, மரணத்துக்குப்பின் பூமியில் கரைந்து செல்லும் உயிர்கள். பாக்டீரியாக்களும் வைரஸ்களும் எவ்வாறு மனித உடலில் வாழ்ந்து அழிகின்றனவோ, அதுபோலவே மனிதர்கள் பூமியில் வாழ்ந்து அழிகின்றனர். எவ்வாறு, மனித உடலில் வாழும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அளவான எண்ணிக்கையை கடந்தால் கிருமிகள் என்னும் பெயர் பெற்று உடலுக்கு நோயாக மாறுகிறதோ, அதைப்போலவே மனிதர்களாகிய நாம், இப்போது பூமிக்குக் கிருமிகள் ஆகி விட்டோம். வெறும் எண்ணிக்கையால் மட்டும் அல்ல. தேவைக்கதிகமான நுகர்வால். நுகர்வுக்காக பூமியின் 'செல்'களான மற்ற உயிரினங்களையும் அளவின்றி அழித்து ஒழிப்பதால். பூமியின் உயிர் நிகழ்வுக்குத் தேவையான பல உயிரினங்களை அழிவின் விளிம்புக்கு எடுத்துச்சென்றிருப்பதால்.

மனித உடலில் உள்ள தனிப்பட்ட 'செல்'களின் இயக்கங்களின் மொத்தம், உடலின் இயக்கமாக மாறுகிறது. அந்த 'செல்'களின் செயல்பாடுகளில் ஏற்படும் ஒத்திசைவு, அறிவாகவும் வெளிப்படுகிறது. அதைப்போன்று பூமியில் உள்ள, உயிரினங்கள் உட்பட, ஒவ்வொரு துகள்களின் மொத்த இயக்கமே பூமியின் இயக்கம் ஆகும். அந்த மொத்த இயக்கத்தின் ஒத்திசைவு, பூமியின் அறிவாகும். பூமியின் இயக்கங்களை அளிக்கும் விசைகள் நம் கற்பனைக்கு எட்டாதவை. பூமியின் உயிர், அதில் வாழும் ஒரு செல் உயிரினம் முதல் உயர்நிலை உயிரினமாக கருதப்படும் மனிதர்கள் வரை, அனைத்து உயிர்களின் தொகுப்பாகும். எவ்வாறு மனித உடலில் வாழும் 'செல்'கள், பாக்டீரியாக்கள் ஆகியவற்றின் சமநிலை அழியும்போது, மனித உடல் நோயுறுகிறதோ, அதைப்போலவே பூமியில் வாழும் உயிரினங்களின் சமநிலை குலைய நேர்ந்தால், அது பூமிக்கு நோயாக மாறுகிறது. நம் உடல் நோய்எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும்போது, அது உடலில் உள்ள தேவையற்ற 'செல்'களையும் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் அழித்து சமநிலையை மீட்டெடுக்கும். பூமியும் அதன் சமநிலையை மீட்டெடுக்கும் சக்தி படைத்தது. பூமிக்கு மருத்துவரோ அல்லது மருந்தோ தேவையில்லை. பூமியை இயக்கும் பிரபஞ்ச சக்தி, பூமிக்கு தேவையான நோய்எதிர்ப்பு சக்தியை அளிக்கப் போதுமானது.

பூமியில் வாழும் ஒவ்வொரு உயிர்களும், தாவரங்கள் உட்பட, பூமியின் 'செல்'கள் போன்றவை. மனித உடலில் கிருமிகளாக மாறிய பாக்டீரியாக்கள், உடலின் செல்களை அழிப்பது போல, மனிதர்கள் தங்கள் நுகர்வுகளுக்காக பூமியில் வாழும் பிற உயிரினங்களை அளவின்றி அழிக்கத் தொடங்கிவிட்டார்கள். மனிதஉடல், ஒரு எல்லைக்குள்அழியும் 'செல்'களை மறுஆக்கம் செய்யும் சக்தி படைத்தது. அந்த எல்லை மீறும்போது நோயாக வெளிப்படுகிறது. பூமியில் மனிதர்களால் தூண்டப்பட்ட பிற உயிரினங்களின் அழிவுகள், பூமியின் மறுஆக்கம் செய்யும் சக்தியின் எல்லையை மீற தொடங்கி விட்டது. மனிதர்களின் இயக்கம் பூமியின் விசைகளை பாதிக்கும்போது, அந்த விசைகள் மனித இனத்தின் இயக்கங்களை கட்டுப்படுத்தக்கூடும். மனித இனமோ, தாங்கள் அடைந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், அந்த விசைகளின் கட்டுப்பாட்டை சற்றே மீறுகின்றன. மனித உடலில் ஏற்படும் சில நோய்கள் உடலின் இயக்கத்தில் ஏற்படும் சீர்கேடுகளை சீரமைக்கும் இயக்கங்களாக கருதப்படுகிறது. உதாரணமாக காய்ச்சல் எனப்படும் நோய். இது பெரும்பாலும் உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றும் உடலின் இயக்கம். நிலநடுக்கம், கொடும் சூறாவளி, வெள்ளப்பெருக்கம், கடும்வெயில் மற்றும் இவற்றைப்போன்ற இயற்கைச் சீற்றங்கள் பூமியின் சீர்கேடுகளை சீரமைக்கும் நோய்களாக இருக்கக்கூடும்!

மனித உயிர் நிகழ்வு, சந்தேகத்துக்கிடமில்லாமல், பூமியில் நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியின் உச்சம். அந்த உச்ச நிகழ்வு, நோயை உருவாக்குகிறது என்றால் அந்த நிகழ்வில் ஏதோ ஒன்று தவறுதலாகியிருக்கலாம். பிற உயிர்கள், முழுவதும் பூமியின் விசைகளால் நிகழ்த்தப்படுபவை. அவை தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை. ஆனால் மனித உயிர், பூமியின் விசைகளால் நிகழ்த்தப்படுவதுடன், இன்னொரு தளத்தில் தன்னைத்தானே நிகழ்த்தவும் சாத்தியமுள்ளது. மனித அறிவும், அதன் மூலமான சிந்தனையும் அதை நிகழ்த்துகிறது. மனித இனம் பூமிக்கு நோயை உருவாக்க காரணம், மனித அறிவும் சிந்தனையும் தவறான திசைகளில் மனித இயக்கத்தை வழிநடத்துவதாக இருக்கலாம்மனித அறிவும் சிந்தனையும், பூமியின் விசைகளுடன் ஒத்திசைவுடன் இருப்பதற்குப் பதிலாக, அவற்றுடன் போராட்டப்போக்கைக் கொண்டிருப்தால் இருக்கலாம். உதாரணமாக மனித உணவு தேவைகளுக்காக, பூச்சி மருந்துகள் போன்ற தொழில்நுட்பங்களின் மூலம் இயற்கையின் சில விசைகளை அழித்து அந்த தேவை அடையப்படுகிறது. அத்தொழில்நுட்பம் இயற்கை விசையுடன் இசைந்து இருக்குமாறு அமைத்திருந்தால், அது மனித பரிணாமவளர்ச்சியை இன்னும் தூண்டியிருக்க கூடும்.


மனித அறிவாலும் சிந்தனையாலும் நிகழும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் பெயர்களில் நிகழும் அத்துமீறல்கள்தான் பூமிக்கு நோயாக மாறுகிறது போலும். இதற்குப் பொருள், அறிவியலும் தொழில் நுட்பமும் மனிதனுக்கு தேவையில்லை என்பது அல்ல. பிரபஞ்சத்தின் விசைகளை மனிதன் அறிந்து கொள்வது அறிவியல் ஆகும். அறிவியல் மூலம் அறிந்த பிரபஞ்ச விசைகளை, மனிதனின் வாழ்க்கையை எளிதாக்க பயன்படுத்துவது தொழில்நுட்பம் ஆகும். அறிவியல் தொழில்நுட்பமாக மாற்றமடையும்போது, அது பிரபஞ்ச விசைகளுடன் ஒத்திசைவுடன் இருந்தால் அங்கு பிரச்சினை இல்லை. ஆனால் தொழில்நுட்பம் பிரபஞ்ச விசைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால், அது நம் இருப்பை அளித்திருக்கும் மகா இருப்புடன் போராடுவதாகும். அந்தப்போராட்டம் மனித இனத்துக்கு சாதகமாக இருக்க சாத்தியமே இல்லை - மனித இயக்கம், பிரபஞ்ச இயக்க விசைகளின் சிறு அம்சம் மட்டும்தான். தன் இருப்பு, பிரபஞ்ச இருப்பிலிருந்து வேறுபட்டது என்னும் மாயையில் வீழ்ந்து, அதன்மூலம் உருவான அகங்காரத்தின் துணைகொண்டு பூமியின் சமநிலையை தொடர்ந்து  குலைத்து வருகிறோம். பூமியை நோயுற வைக்கிறோம். பூமியின் நோய் எதிர்ப்பு சக்தி, கிருமிகளை கொல்ல தொடங்கலாம்!

blog.change@gmail.com

No comments: