சொல்வனம் இணைய இதழில் 13-05-2015 அன்று பதிப்பிக்கப்பட்ட கட்டுரை
சமீபத்தில்
ஒருநாள்,
சென்னையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு ட்ரெயினில்
வந்து கொண்டிருந்தேன். எங்கு
சென்றாலும் நான் ஒரு
தனியன். உரையாடல் என் இயல்பில்
இல்லை. எனவே தட்கல் முன்பதிவில்
வாங்கிய டிக்கெட்டிலும், தனிமையான
பயணம்! இரவு உறக்கத்திற்கு முன்
ட்ரெயின் வாசலில் சற்று
நேரம் நின்றேன். எதேச்சையாக
வானை நோக்கிய பார்வையில்
வெறும் இருட்டுதான் தெரிந்தது.
சிறு வயதில் பார்த்திருந்த,
எண்ணிக்கையில் அடங்காத நட்சத்திரங்களை
அங்கு பார்க்க முடியவில்லை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில
நட்சத்திரங்களே தெரிந்தன. நிலவு
இன்னும் வானத்தில் தோன்றியிருக்கவில்லை.
எனவே நட்சத்திரங்கள் தெரியாமல்
இருக்க நிலவொளி காரணமில்லை.
தெளிந்த வானமாக இல்லா
விட்டாலும், அன்று மிகக்கலங்கிய வானமும்
இல்லை. அங்கு நட்சத்திரங்களை காணவில்லை!
கடைசியாக கண்குளிர
நட்சத்திரங்களை நான் பார்த்தது, சுமார்
ஒரு வருடத்துக்கு முன்னால்.
தொழில் நிமித்தமாக சவுதிஅரேபியா
கடல் பரப்பில், வேலை
தளத்திலிருந்து கரையை நோக்கி
இரவு தொடங்கும் நேரத்தில்
கிளம்பி, 'போட்'-ல்
வந்த
3 மணி நேர பிரயாணத்தில்தான். சற்று
குளிர் அதிகமான இரவு.
எனவே என்னுடன் பிரயாணித்த
அனைவரும் போட் கேபினுக்குள்
ஏதோ சினிமா பார்த்துக்கொண்டிருக்க அடுத்தவர்களைப் பற்றிய
அக்கப்போர் பேசிக்கொண்டிருக்க, நான்
மட்டும் எப்போதும்போல தனியனாக
போட் டெக்-ல் அமர்ந்து
இருட்டை வெறித்துக்கொண்டடிருந்தேன். பயணம்
தொடங்கியதிலிருத்து, சுமார் ஒருமணிநேரம்வரையும் காணும் திசையெல்லாம் பெட்ரோலியம்
மற்றும் இயற்கை வாயுவுக்காக,
பூமியை டிரில்லிங் இயந்திரங்களை
கொண்டு வன்புணர்வின் மூலம்
உருவாக்கிய துளைகள் புடைப்புகளாக எழுந்து
நின்றிருந்தன.
சுகப்பிரசவமாகவும்(Natural Flow) சிசேரியனாகவும்(Forced Flow - Gas
Injection/Water Injection) எடுக்கப்படும் பெட்ரோலியமும்
இயற்கை வாயுவும் கடலின் அடியில்
பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் மூலம் சற்றே
தொலைவில் உள்ள நிலையங்களுக்கு செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. பிரசவத்தின்
பக்க விளைவாக வெளிவரும்
தேவையற்ற வாயுக்களையும், கையாளக்கூடிய
அளவுக்கு அதிகமாக வரும்
இயற்கை வாயுவையும் எரிக்கும்
எரிகோபுரங்களின் (Flare) பளிச்சிடும் வெளிச்சம்,
வானத்தின் இருளை வெளிச்சத்
திரைபோட்டு மறைத்திருந்தது. அந்தப்
புடைப்புகளின், திரைகளின் எல்லைகளை
கடந்த பின், வானம்
நட்சத்திரங்களுடன் கலைகளை நிகழ்த்த
தொடங்கியிருந்தது. அன்று கரை
சேரும்வரை நான் நிலையழிந்திருந்தேன்.
'போட்' டெக்-ல், அத்தனை
அழுக்குகளுக்கிடையேயும், தரையில் படுத்து
விட்டேன் - வானத்தை பார்ப்பதற்கு
வாகுவாக! என்ன செய்வதென்று அறியாமல்,
இரண்டு மாதங்களுக்கு முன் வேலைத்தளத்துக்கு செல்லும் முன் வாங்கிய ஒரே
ஒரு சிகரெட் பாக்கெட்டில்
எஞ்சியிருந்த இரண்டு சிகரட்டுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக
இழுத்துத் தீர்த்தேன். கரை
வந்து சேரும்வரை, கிட்டத்தட்ட
ஒன்றரை மணி நேரம் ஒரு
வகையான மனக்கிளர்ச்சி நிலையில்
இருந்தேன். என் சிறு வயதில்
வீட்டுக்கு வெளியே கோடை
இரவுகளில் அவ்வளவு நட்சத்திரங்களை
கண்ட நினைவுகள். இடைப்பட்ட
காலத்திலும் எங்கேனும் பார்த்திருப்பேன்.
ஆனால் நினைவில் இல்லை.
நட்சத்திரங்கள் அளக்க
முடியாத விண்ணில் நிகழும்
வாழ்க்கைகள். எரிந்து, எரிதலின்
மூலம் வாழ்ந்து, எனவே
அழிந்து கொண்டிருக்கும் பொருண்மை(Mass)
பொருட்கள்தான் நட்சத்திரங்கள். சூரியன்தான்
நமக்கு மிக அருகில் உள்ள
நட்சத்திரம். சூரியனை, அதன்
இயக்கத்தினால், அதன் சக்தியினால்
வாழும் நாம், நட்சத்திரம்
எனக்கூறுவது சரியா எனத்தெரியவில்லை.
சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி
நம்மை வந்து அடைய
8.32 நிமிடங்கள் ஆகிறதாம். ஒளி
ஒரு வினாடிக்கு சுமார்
300000 கி.மீ (சரியாக
கூறினால் 299792 கி.மீ.) தூரம்
செல்லும். அல்லது ஒளியை பூமியை
சுற்றி வருமாறு செய்தால்,
ஒரு வினாடிக்கு சுமார்
7.5 முறைகள் சுற்றி வரும்.
நமக்கு மிக
அருகிலுள்ள நட்சத்திரம் Proxima Centauri எனப்பெயரிடப்பட்டுள்ளதாகும். அது வெளியிடும் ஒளி
நம்மை வந்தடைய 4.22 ஒளி
வருடங்கள் (Light Years) ஆகும். ஓளி
வருடம் என்பது, ஒரு
வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில்
பயணிக்கும் ஒளி, ஒரு
வருடத்துக்கு பயணிக்கும் தூரமாகும்.
அதாவது, இப்போது நாம் பார்க்கும்
Proxima Centauri, உண்மையில் இப்போது இருக்கும்
Proxima Centauri அல்ல.
அது
4.22 வருடங்களுக்கு முன்பிருந்த Proxima Centauri. ஒரு
பொருளை பார்ப்பது என்பது,
அந்த பொருள் வெளியிடும்
அல்லது எதிரொளிக்கும் ஒளி
நம் கண்களை வந்தடைந்து,
அங்கிருந்து மூளைக்குச் சென்று,
மூளை அந்த ஒளி
நிழல்களை நினைவுகளில் நிறைந்திருக்கும் பொருள்களாக்கி, தோற்றத்தை அளிக்கிறது.
நாம் காணும் பொருட்கள்
பெரும்பாலும் சில கி.மீ. தூரத்துக்குள்
இருப்பதால், வினாடிக்கு 3 லட்சம்
கி.மீ. பயணிக்கும்
ஒளி,
நாம் பார்க்கும் அந்த
நேரத்துளியின் பொருட்களின் தோற்றத்தை
அளிக்கிறது. ஆனால் Proxima Centauri வெளியிடும் ஒளி
நம்மை அடைய, 4.22 வருடங்கள்
ஆவதால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
நாம் பார்க்கும் அந்த
நட்சத்திரம், அந்த நேரத்திற்கு
4.22 வருடங்களுக்கு முன்பு எவ்வாறு
ஒளியை உமிழ்ந்தது என்பதையே.
வெறும் கண்களால்,
டெலஸ்கோப் உதவியில்லாமல், காணமுடியும்
மிகத்தொலைவிலுள்ள நட்சத்திரம், டெனப்
(Deneb) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த
நட்சத்திரத்தின் தூரம் இன்னும்
சரியாக அளவிடப்படவில்லை என்றே
தோன்றுகிறது. பல அளவீடுகள், இந்த
நட்சத்திரம் சுமார் 1400 ஒளி
வருடங்களிலிருந்து 7000 ஒளி வருடங்கள்வரை
இருக்கலாம் என தெரிவிக்கின்றன. ஒரு
வினாடிக்கு 3 லட்சம் கி.மீ
வேகத்தில் பயணிக்கும் ஒளி, குறைந்த
பட்சம் 1400 வருடங்கள் பயணித்து,
நம்மை வந்தடைகிறது. இவை
அனைத்துக்கும் மேல், நம்
சூரிய குடும்பம், வினாடிக்கு
200 கி.மீ. வேகத்தில்
பால்வெளியில் (Milky Way) சென்று கொண்டிருக்கிறது.
எனவே தொலைவில் உள்ள
நட்சத்திரத்தை நோக்கி சூரிய
குடும்பம் செல்கிறதா அல்லது
எதிர் திசையில் செல்கிறதா
என்பதைப்பொறுத்து, தொலைவிலுள்ள நட்சத்திரத்தின் ஒளி நம்மை வந்து
அடைவதற்காகன நேரம் சற்றே
மாறுபடலாம். பால்வெளி என்பது நம்
குடும்பத்தலைவனாகிய சூரியன் என்னும்
நட்சத்திரம் அமைந்திருக்கும் கேலக்ஸி.
நாம் வாழும்
பிரபஞ்சத்தின் அளவையும், அதில்
தன்னை பெரிய 'மயிராக' கருதிக்கொண்டிருக்கும் சாதாரண மனிதனையும்
(நம்மையும்) ஒப்பிட, விரும்பவில்லை என்றாலும்,
சில எண்ணிக்கைகளை அறிந்தாக
வேண்டும். கேலக்ஸி என்பது, ஈர்ப்பு
விசையினால் ஒரு மையத்தை அடிப்படையாக
கொண்டு, எனவே ஒன்றுடன் ஒன்று
நாம் அறிந்துகொள்ள முடியாத
விசையால் பிணைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான
நட்சத்திரங்களின் தொகுப்பு. கவனிக்கவும்
- பால்வெளி கேலக்ஸியில், நம்
குடும்பத்தலைவனான சூரியன் ஒரு
சிறிய நட்சத்திரம் மட்டுமே. பால்வெளியில் சூரியனைப்போன்ற
100 பில்லியன் முதல் 200 பில்லியன்
நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது 1 லட்சம் கோடி
முதல் 2 லட்சம் கோடி
நட்சத்திரங்கள், பால்வெளியில் மட்டும்.
நாம் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்த இரண்டாம் தலைமுறை அலைகற்றை
ஊழலில், அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட நஷ்டம்
வெறும் 176645 கோடி ரூபாய்கள்
மட்டுமே.
பால்வெளி, நாம்
இருக்கும் பிரபஞ்சத்தில் உள்ள
ஒரு நடுத்தர அளவிலான
கேலக்ஸி. இதுபோல கிட்டத்தட்ட 170 பில்லியன்
கேலக்ஸிகள் இருக்கக்கூடும் என
கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள்
அனைத்தும் சில அடிப்படை அறிவியல்
விதிகளை ஆதாரமாக கொண்ட
தோராயமான கணக்கிடல்கள் மட்டுமே.
எனவே உண்மையான எண்ணிக்கை
இவற்றிலிருந்து மிக அதிகமாகவோ, அல்லது
குறைவாகவோ கூட இருக்கலாம்.
டெனப் நட்சத்திரம்,
பால்வெளியினுள் இருக்கும் ஒரு
பெரிய நட்சத்திரம். வினாடிக்கு
3 லட்சம் கி.மீ. பயணிக்கும்
ஒளி,
1400 வருடங்களுக்கும் அதிகமான நேரம்
பிரயாணம் செய்து நம்மை
அடைகிறது என்றால், பால்வெளியின்
விஸ்தாரத்தை கற்பனை செய்வது
என்பதே எளிய மனித
மனங்களால் இயலாத காரியம்.
உதாரணமாக இன்று நம்
வெறும் கண்ணால் பார்க்க
முடியும் தொலைதூரத்து நட்சத்திரம்
டெனப், கிட்டத்தட்ட ஏசு நாதர்
வாழ்ந்த நாட்களில் எவ்வாறு
இருந்தது என்பதையே (ஒருவேளை வேத
காலத்தில் எவ்வாறு இருந்தது
என்பதாக கூட இருக்கலாம்- அதிக
பட்ச தூரக்கணிப்பை கணக்கில்
எடுத்தால்). இப்போது அந்த
நட்சத்திரம் வெளி விடும்
ஒளியை காண, நம்
வெகு தூரத்து சந்ததியினரால்தான் முடியும் - சந்ததிகளை
நாம் வாழ அனுமதித்தால். நம்
அதீத நுகர்வின் மூலம்,
பேராசையின் மூலம், இந்த
பூமியில் மனிதர்கள் வாழும்
சாத்தியத்தைத்தான் மிக வேகமாக
இல்லாமல் செய்து வருகிறோமே!
* * *
சிறு வயதில்,
என் வீட்டிலிருந்து
பார்த்த நட்சத்திரக் கூட்டங்களை, இன்று என்னால்
அதே வீட்டிலிருந்து பார்க்க முடிவதில்லை. தெளிவான வானநிலை உள்ள நாட்களிலும்,
நிலவொளி இல்லாத
நாட்களிலும் கூட! நிலவற்ற நடு இரவுகளில், மூத்திரப்பையின் இறுக்கத்தைக் குறைப்பதற்காக வீட்டிற்கு வெளியே வரும்போது
கூட. என் வீட்டிலிருந்து மட்டுமல்ல,
பெரும்பாலான மனிதர்கள்
வாழும் இடங்களிலிருந்தும் பார்க்க முடிவதில்லை. காரணம், ஒளி மாசு (Light Pollution). நமது சுற்றுச்சூழல், இரவு நேரங்களில் அதிவெளிச்சத்துடன்
வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை ஒளிக்கிடையில், நட்சத்திரங்களிலிருந்து பல நூறு அல்லது ஆயிரம்
ஆண்டுகளாக பயணம் செய்து வரும் மெல்லிய ஒளியை உணரும் தன்மை நம் கண்களுக்கு இல்லை.
எனவே இயற்கையாக நட்சத்திரங்களை பார்க்கும்போது எழும் கேள்விகளும்,அடையும் விடைகளும் விளைவான மன விரிவும்!
தினம்தோறும்
வானத்து நட்சத்திரங்களை பார்த்த நாட்களில், என் வீட்டிலோ சுற்றி இருக்கும் மற்ற வீடுகளிலோ
மின் இணைப்பு இருந்திருக்கவில்லை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போதுதான் எங்கள்
வீட்டில் மின் இணைப்பு வந்தது (என் சகோதரர்கள் இதை எழுதியிருந்தால் கல்லூரியில்
சேர்ந்த பின்தான் வீட்டில் மின் இணைப்பு வந்தது என எழுதியிருப்பார்கள்.) பொருளாதார
இயலாமை இதற்குக் காரணம் இல்லை. எங்கள் வீடு ரோடு ஓரமாக இருக்கவில்லை. எனவே மின்சார
இணைப்பு பெறுவது எளிதாக இருக்கவில்லை. வீட்டில் மின் ஒயரிங் செய்யப்பட்டு மின்சார
இணைப்பக்காக விண்ணப்பித்து, சுமார் நான்கு
ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அன்று எங்கள் வீடு பாசனத்துக்காக கேரளாவில்
உள்ள நெய்யாறு அணையிலிருந்து நீர் வரும் சானல் ஓரமாக இருந்தது. இது அந்த அணையில்
உள்ள இரு மதகுகளில், குமரி
மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடது மதகில் இருந்து தொடங்கியதால், இடது கரை சானல் என்னும் பொதுப்பெயரில்
அழைக்கப்பட்ட சானலின் ஒரு இறுதிக் கிளை. இந்த சானல் 1960 களில், நெய்யாறு அணை கட்டப்பட்ட போது
உருவாக்கப்பட்டது. நெய்யாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியின் ஒரு பாகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. எனவே அப்போதைய
புரிந்துணர்வு படி நான்கில் மூன்று பகுதி நீர் கேரள மாநிலத்திற்கும், நான்கில் ஒரு பகுதி நீர் குமரி
மாவட்டத்திற்கும் சொந்தமாகும். 1956-ம் ஆண்டு, கன்னியாகுமரி
மாவட்டம் கேரளாவிலிருந்து பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைந்தது. இந்த நீர் பகிர்வு
புரிந்துணர்வு, அந்த கால
கட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
எங்கள் வீடு
இருந்த இடம், அந்த சானலின் ஒரு
கிளையின் கிட்டத்தட்ட கடைசி முனை. எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த நான்கு பாசன
குளங்களை நிறைத்த பின் எஞ்சிய நீர், சற்று தொலைவில் ஓடும் ஆற்றில் சென்று கலந்து, அங்கிருந்து கடலில் ஐக்கியமாகும். தற்போது
எனக்கு மிஞ்சியிருக்கும் நினைவுகளின்படி 1982-ம் வருடம் வரை இந்த சானலில் வருடத்துக்கு
குறைந்த பட்சம் நான்கு மாதங்களாவது நீர் வரத்து இருக்கும். அந்த நீரில்
விளையாடுவதும், அருகில் உள்ள
குளங்களில் விளையாடுவதும் முக்கியமான பொழுது போக்குகள்!
தற்போது
கிடைக்கும் தரவுகளின் படி 2004-ம் வருடம் வரை,
கேரளா குமரி
மாவட்டத்திற்கு நீர் வழங்கிக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் 1982-ம் வருடத்திலிருந்து, எங்கள் பகுதிக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய
ஆரம்பித்தது. எனக்கு நினைவுக்கு எட்டியவரை, நெய்யாறு அணையிலிருந்து கடைசியாக 1987-ம் ஆண்டு, சானலின் இந்த எல்லைக்கு நீர் வரத்து இருந்தது.
இடைப்பட்ட காலகட்டத்தில், மழைநீர் இந்த
சானலின் வழியாக வழிந்து குளங்களை நிரப்பியது. 1982-ம் ஆண்டுக்குப்பின் இந்த நான்கு பாசன குளங்களை
சாரந்த பாசன நிலங்களும், நெல் பயிரிடுவதை
படிப்படியாக நிறுத்தி விட்டு வாழை, தென்னை போன்ற
பயிர்களுக்கு மாறத்தொடங்கியது. இதற்கு ஒரு காரணம் நீர் வரத்து குறைவாக இருந்தாலும்,
கிட்டத்தட்ட இந்த
காலகட்டத்திலிருந்து தொடங்கிய வேலையாட்கள் பற்றாக்குறையும் ஒரு முக்கியமான காரணம்.
1994-ம் ஆண்டு வாக்கில் 90% நிலங்கள் நெல் பயிரிடுவது முற்றிலும்
நிறுத்தப்பட்டிருந்தது.1996-ம் ஆண்டு,
இந்த சானல் கிளையின்
கடைசி சுமார் 2 கி.மீ. தூரம்
ஊர்மக்களால் நிரப்பப்பட்டு சாலையாக மாற்றப்பட்டது. இரண்டு பாசன குளங்களுக்கு மழை
நீர் வரத்தும் பெரும்பாலும் இல்லாமல் ஆகி விட்டது. இருந்தாலும், மழைக்காலங்களில் இந்த இரண்டு குளங்களிலும்
இன்னும் நீர் நிரம்புகின்றன. ஆனால் எந்த குளங்களிலும், நீர் வரத்து உள்ள குளங்களிலும் கூட, கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக
அரசாங்கத்தால் பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. பொதுமக்களும் பராமரிப்பு பணிகள்
செய்ய அரசாங்கத்தால் அனுமதிக்கப்படுவதில்லை! விளைவுகள்? - வன்புணர்ச்சியின் இன்னொரு வடிவம்?
அவ்வாறு எங்கள்
வீடும் சானல் ஓரத்திலிருந்து சாலை ஓரத்திற்கு வந்து விட்டது. அதன் பின்னர்
அந்த சாலை ஓரத்தில் இன்னும் பல வீடுகளும்,
பல கிளைச்சாலைகளும்,
அங்கு செல்லும் மின்
கம்பங்களும் அவற்றில் தொங்கும் தெரு விளக்குகளும் வீடுகளின் முகப்பில் இரவு
முழுவதும் எரியும் CFL விளக்குகளும்
படிப்படியாக நட்சத்திரங்களை மனிதர்களின் கண்களிலிருந்து மறைத்திருக்க வேண்டும்.
நட்சத்திரங்களை
குவிந்த மனதுடன் பார்க்கும் ஒருவன், பிரபஞ்சத்தின் விரிவை உணர முடியலாம். அந்த விரிவை மனதிலும் விரித்தெடுக்கலாம்.
அவன் அகங்காரம், அவனை விட்டு
அகன்று விடும் - குறைந்த பட்சம் வாழ்க்கையை அனுபவிக்கும் அளவுக்காவது! வாழ்க்கையை
வாழும் அளவுக்காவது! நட்சத்திரங்களை ஒளியைக்கொண்டு மறைத்ததன் மூலம் மனவிரிவை அடைய
உதவும் ஒரு இயக்கத்தையும் இழந்து விட்டோம். உறக்கத்துக்கு நடுவில் வீட்டிற்கு
வெளியே வர வேண்டியிருக்கும் நடு இரவுகளில், வானத்தை அண்ணாந்துப் பார்ப்பதை என்னால்
தவிர்க்க முடிவதில்லை. அடையும் ஏமாற்றத்தையும்!