Monday, June 30, 2014

கல்வி, தொழில்

சிறகு இணைய இதழில் 21-06-2014 அன்று வெளிவந்த கட்டுரை.

கல்வி என்பது, அறிவு, திறமை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கற்பித்தல், பயிற்சியளித்தல் போன்றவற்றின் மூலம் கடத்தும் இயக்கம். இந்த வரையறை விக்கிபீடியா இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. இன்று நாம் பெற்றிருப்பதாக கருதும் அறிவு, மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து (அல்லது அதற்கும் முன்னால் இருந்து...) இன்றுவரை மனித இனம் அறிந்தவற்றின் ஒரு தொகுப்பு அல்லது ஒரு துளி.

முந்தைய தலைமுறையின் அறிதல் முழுவதும் நமக்கு கடத்தப்பட்டிருக்கிறதா? அல்லது அவற்றின் ஒரு சிறுபகுதி மட்டும் கடத்தப்பட்டிருக்கிறதா? ஒருபகுதி மட்டும் என்றால், எதை அடிப்படையாக கொண்டு ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தெரிந்து கடத்தப்பட்டது? அறிதலின் எந்த பகுதியை கல்விக்குட்படுத்துவது என்பது யாரால் தெரிவு செய்யப்படுகிறது? அந்த தெரிதலில் கற்பவருக்கும் கற்பிப்பவருக்கும் உள்ள பங்களிப்பு எந்த விகிதத்தில் உள்ளது? கல்வியை குறித்து ஆராய தொடங்கினால், கேட்கப்படும் மிக எளிய கேள்விகள் இவை.

கார்ல்மர்க்ஸ் அவர்களின் கூற்றுப்படி, மனிதர்களை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துவது, மனிதர்களின் உழைப்பு (உழைப்பின் மூலம் அடைந்தவையும்). இதை நாம் விரிவு படுத்தினால், மனிதனின் பொதீக தேவைகளை அடைய பயன்படும் உழைப்பின் பகுதியை தொழில் என வகைப்படுத்தலாம். தொழில் மூலம் ஈட்டப்படும் பொருள் நம் அன்றாட வாழ்க்கை பொருட்களை அடையவும், பின்னர் பொதீக வாழ்வின் தரத்தை உயர்த்தவும், அதன்பின் நம் எதிர்கால பொதீக தேவைகளுக்கும், நம் சந்ததியினரின் எதிர்கால பொதீக தேவைகளுக்கும் என உபயோகப்படுத்தவோ அல்லது சேமிக்கவோ படுகிறது. ஆனால் மனித வாழ்க்கை என்பது பொதீக தேவை மட்டும் அல்ல. மனிதனுக்கு ஆன்மீக தேவைகளும் உள்ளன. அந்த ஆன்மீக தேவைகளும் மனிதனிடம் உழைப்பை கோருகின்றன. ஆம், ஆன்மீக தேவைகளுக்கான உழைப்பே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது. விலங்குகளுக்கும் பொதீக தேவைகள் உள்ளன. அந்த தேவைகளுக்கு அவையும் உழைத்தாக வேண்டும் - குறைந்த பட்சம் அவற்றின் உணவைத் தேடி அடைவதற்காகவாவது, இனப்பெருக்கத்திற்காவது. மனிதனின் உழைப்பும் வெறும் பொதீக தேவைகளுக்காக மட்டும் இருந்தால், மனிதனையும் விலங்கையும் வேறுபடுத்த வேறு ஒன்றும் இல்லை.

தொழில் மனித சமூக அமைப்பில் இன்றியமையாத ஒன்று. வாழ்க்கைக்கான பொருட்களை தேட ஒவ்வொரு மனிதனும் தொழில் புரிந்தாக வேண்டும். எனவே தொழிற்கல்வி பெற்றாக வேண்டும். இதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் மனித இனம், தொழில் கடந்த உழைப்பின் மூலம், அல்லது தொழிலின் மீதான அதீத அற்பணிப்பின் மூலம் அளவற்ற ஞானத்தை அடைந்திருக்கிறது. அந்த ஞானத்தின் துளிகளையாவது எதிர்கால சமூகத்திற்கு கடத்தப்பட வேண்டாமா? பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமூகம் அடைந்த ஞானத்தை, எதிர்கால சமூகம் முற்றிலும் புதிதாக தேட வேண்டுமா? தற்போதைய நம் கல்வி முறை தொழில் கல்வியை தவிர வேறு கல்வியை, மனிதமனம் அடைந்த ஞானத்தை எவ்வகையிலேனும் எதிர்கால சமூகத்திற்கு அறிமுகப்படுத்துகிறதா? இந்த கேள்விகளுக்கு பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாக இருக்கும். அவ்வாறு புதிய தலைமுறை மனித ஞானத்தை பெறுகிறது என்றால், அது பெரும்பாலும் புதிய தலைமுறையின் மிகச்சில அங்கத்தினர்களின், சமூகத் திமிறல்களின் மூலமே சாத்தியமாகிறது. ஆம் இது சாதாரண மனிதர்களுக்கு மனித ஞானத்தின் பொக்கிஷத்தை மறுப்பதற்கு சமமாகும் - அவற்றை அறிமுகப்படுத்தாததன் மூலம்!

நமக்கு தேவையான தொழில் கல்வி, நம் முந்தைய தலைமுறையினர் பெற்ற தொழில் கல்வியிலிருந்து, தற்கால சமூக தேவைகளுக்கேற்ப மாறுபட்டிருக்க வேண்டும். இன்றைய அமைப்பு சார்ந்த கல்வியில் அது தொடர்ந்து மாறுதலுக்குள்ளாக்கப்படுகிறது. இது நம் அமைப்பு  சார்ந்த கல்வியில் வரவேற்கப்பட வேண்டிய அம்சம். ஆனால் கற்கும், கற்பிக்கும் முறை, அதற்கு செலவிடும் உழைப்பை ஒப்பு நோக்கையில், தேவையான தொழில் அறிவை (மனித அக ஞானத்தை இங்கு விட்டு விடுவோம்), தொழில் திறமையை கூட அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் வெற்றி பெறவில்லை என்றே தோன்றுகிறது. முறையான தொழில் அறிவு மற்றும் திறமையை பெற முடியாத காரணத்தால், புதிய தலைமுறையினர், மிக வேகமாக தொழில் போட்டிக்கு ஆளாகி, அதன்மூலம் தொழிலில் நிலைத்திருக்கவே வாழ்க்கையின் (தங்களாலான) உழைப்பு முழுவதையும் செலவிட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது எல்லா தலைமுறைகளிலும் தேவையான அறிவை, திறனை பெற முடியாதவர்களுக்கு இருந்துகொண்டிருக்கும் பிரச்சினைதான். ஆனால் இன்று அதன் ஒப்பீட்டு அளவு மிக மிக அதிகரித்துள்ளது. அத்துடன்  சேர்ந்து மனிதத்துவத்தையும் இழந்து, ஒப்பீட்டு அளவில் விலங்குகளாகவே வாழ்க்கையை கழிக்கிறோம் - உழைப்பை சார்ந்தோ பிறவற்றை குறித்தோ எத்தகைய அகத்தேடுதல்களும் இல்லாமல்!

தவறு எங்கு நடந்திருக்க கூடும்? நாம் பார்க்கும் திசைக்கேற்ப, அணிந்திருக்கும் கண்ணாடியின் நிறத்திற்கேற்ப தவறு அதன் இருப்பையும் நிறத்தையும் நமக்கு காட்டக்கூடும். எனவே தவறை கண்டடைந்து அதனை திருத்துவதன் மூலம் உண்மையான கல்வியை அடையலாம் என்பது கானல் நீராகவே செல்ல வாய்ப்புள்ளது. எனில் எவ்வாறு கல்வியின் நோக்கத்தை அடைவது? சமூகத்திமிறல்கள் மட்டுமே தற்போது நம்முன் இருக்கும் ஒரே வாய்ப்பாக இருக்க கூடும்.
தற்போதைய கல்வி முறையை, அது உண்மையான கல்விக்கு முற்றிலும் தொடர்பில்லாததாக இருந்தாலும், சமூகத்தின் சாதாரண அங்கத்தினர்களால் அதனை தவிர்க்க இயலாது. எனவே புதிய கல்வி முறைக்கான சமூகத்திமிறல்களை, தற்போதைய கல்விமுறைக்குள் இருந்தபடி மட்டுமே செயல்படுத்த முடியும். தற்போதைய கல்வி முறையின் போதாமையை உணர்ந்தவர்களால் மட்டுமே அது சாத்தியமுமாகும்.

கல்வியின் முறைகளை இரண்டாக பகுக்கலாம். ஒருவரின் சொந்த அனுபவத்தின் மூலம் அறிவை அடைவது. பிறர் அனுபவத்தை, அவர்கள் வார்த்தைகளின் வழியாக அந்த அனுபவத்தினுள் நுழைந்து அவற்றை கற்பவரின் அனுபவமாக அடைவது. ஆக கல்வியானது, கற்பவர் அவர் சொந்த அனுபவத்தின் மூலம் கற்பதற்கான வாய்ப்பையும், பிறர் அனுபவத்தை கற்பவரின் அனுபவமாக மாற்றுவதற்கான சாத்தியங்களையும் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் சொந்த அனுபவத்தை மாணவர்களின் அனுபவமாக மாற்றும் திறமையை, கலையை அறிந்திருக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் அனுபவங்களை அடைய தகுதியானவர்களாக இருக்க வேண்டும் இன்றைய நிலையில், பிறர் அனுபவத்தை கற்பவர் தம் மூளையினுள் வெறும் தகவல்களாக பதிப்பித்து கொள்வதே கல்வியாக கொள்ளப்படுகிறது. ஆம் கல்விப்புத்தகங்களில், பிறர் அனுபவங்கள் (அல்லது பிறர் பெற்ற தகவல்கள்) தகவல்களாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. கற்பிப்பவர்கள் அவற்றை வெறும் தகவல்களாகவே கற்பிக்கிறார்கள். கற்பவர்கள் அவற்றை (பெரும்பாலும்) தகவல்களாகவே மூளையில் ஏற்றிக்கொள்கிறார்கள். பரீட்சையிலும், கற்பவர்கள் எவ்வளவு தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்பதே பரீட்சிக்கப்படுகிறது. ஆக கற்பவர் தம் சொந்த அனுபவத்தின் மூலம் அல்லது பிறர் அனுபவத்தை கற்பதன் மூலம் அடைந்த அனுபவத்திற்கு எவ்வித மதிப்பும் கொடுக்கப்படுவதில்லை. எனவே கற்பவர்களும் அத்தகைய அனுபவத்தை அடைய முயற்சிப்பதில்லை. கற்பிப்ப்பவர்களாலும் அதற்கு ஊக்குவிக்கப்படுவதில்லை.

அமைப்பு சார்ந்த இந்த கல்வியின் போதாமை, சிலநாட்களில் சிலரால் மட்டும் முழுவதுமாக சரிசெய்யப்படும் சாத்தியமுள்ள பிரச்சனை அல்ல. இந்த போதாமையை உணர்ந்தவர்களால், அவர்கள் உணர்ந்த தளங்களில் மட்டும், அவர்களின் பாதிப்பை தவிர்க்க முடியாதவர்களிடம் மட்டுமே சரி செய்யப்படக்கூடியது. ஒருவேளை இதனை உணர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உயர்ந்தால், சமூக, அரசியல் அமைப்புகளால் முன்னெடுத்து செல்லப்படலாம். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிக மென்மையாகவே இருக்கின்றன.

அமைப்பு சார்ந்த தற்போதைய கல்வியின் போதாமையை நாம் உணர்ந்திருந்தால், நம்மால் முடிந்தவகையில் அதற்கு எதிர்வினையாற்றியாக வேண்டும் - அதுவே ஒரு மனிதப்பிறவியாக நம் இருப்பை உறுதி செய்யும் வழி! அந்த எதிர்வினை நம்மால் முடிந்த தளங்களில், நாம் புழங்கும் தளங்களில் ஆற்றப்படலாம். உதாரணமாக, அமைப்பு சார்ந்த கல்வி பயிலும் நம் குழந்தைகளிடம், அக்கல்விக்கு வெளியேயும் கல்வியின் அனுபவத்தை அடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் - அந்த வாய்ப்புகள் அவர்களின் அமைப்பு சார்ந்த கல்வியை (நாம் வரையறை செய்த எல்லைக்குள்) பாதிக்கும் என்றாலும்! இது நம்மாலான சமூகத்திமிறல். இந்த திமிறலின் வீரியம், நம் தேடுதலின் வீரியத்திற்கேற்ப இருக்கலாம். இதன் மூலம் நம் குழந்தைகள் தகவல்களை மட்டும் இல்லாமல் அனுபவங்களையும் அடையலாம். அனுபவங்களே வாழ்க்கை. அனுபவங்களை அடைதலே வாழ்தல். நம் குழந்தைகள் வாழ தொடங்கினால், அவர்கள் பாதிப்பை பெறும் அவர்கள் நண்பர்களும் வாழ தொடங்கலாம். ஒரு சந்ததியனர் வாழ தொடங்கும்போது அவர்கள் தேடுதலும் தொடங்கும் - மனித ஞானம் இதுவரை அடைந்தவற்றை, அது அக ஞானாமானலும் அல்லது தொழில் ஞானமானாலும், தக்க வைத்துக்கொள்ள மனிதனின் தேடுதலால் மட்டுமே முடியும்!

blog.change@gmail.com

No comments: