மனம் என்பது நம்மால் எளிதில் அறியமுடியாத ஒரு பெரும் இருப்பு. நம் சாதாரண விழிப்பு நிலையில் நம் மனதை குறித்து நாம் அறிந்திருப்பது, அதன் மேற்பரப்பில் தெரியும் நிழல்களை மட்டுமே. ஆம், நம் மனமும் ஒரு காடு போன்றதே. நம்மால் அறியமுடியாத விசித்திரங்களை தன்னுள்ளே கொண்டிருப்பது காடு. எத்தனை எத்தனை மரங்கள், செடிகள், கொடிகள், புல் பூண்டுகள், விலங்குகள், பறவைகள், நுண்ணுயிர்கள், நீரோடைகள், நீர் ஊற்றுமுகங்கள்…….. அவற்றை ஒருபோதும் நம்மால் முழுமையாக அறியமுடியாது. நம் மனமும் காட்டைப் போன்ற விசித்திரங்களை உடையது. எத்தனை எத்தனை வகையான எண்ணங்கள், நினைவுகள், எண்ணங்களின் தோற்றுமுகங்கள், எண்ணங்களின் பிரதிபிம்பங்கள், அனுபவங்களின் பதிவுகள், அனுபவங்களின் எதிர்வினைகள், செற்களின் உற்பத்திகள், உற்பத்தியான சொற்களின் பதிவுகள்…….. ஆம், நம் மனதையும் ஒருபோதும் நம்மால் முழுமையாக அறிய முடியாமல் போகலாம். அத்தகைய அறிதலுக்கான சாத்தியங்கள் உள்ளதா என்பது, மனம் நோக்கிய பார்வை உடையவர்களிடம் உள்ள அடிப்படை கேள்வியாக இருக்க கூடும். இந்த அடைப்படை கேள்வியே அனைத்து ஆன்மீகத் தேடல்களுக்குமான உந்து சக்தியாக இருக்கலாம் – அந்த தேடல்கள் எந்த திசையில் சென்றாலும்!
மனம் என்னும் காட்டினுள் நிறைந்திருக்கம் விசித்திரங்களை, புதிர்களை நம்மால் அறிய முடியுமா? நம் விழிப்புணர்வின், பிரக்ஞ்சையின் ஆற்றலைப் பொறுத்து அறிதலுக்கான சாத்தியங்களும் உள்ளன, அறிய முடியாமலும் போகலாம். ஆனால் நம் மனம் விசித்திரங்கள் நிறைந்தது, புதிர்களால் ஆனது என்னும் அறிதலே மனம் குறித்த நம் தேடுதலுக்கான அடிப்படை. அத்தகைய அறிதலை நாம் அடையாதவரைக்கும், அந்த விசித்திரங்களை தேடுவதற்கான தேவை நம்மிடம் எழவே இல்லை. எனவே நம்மிடம் ஆன்மீகத் தேடலும் உருவாகவில்லை. நம் மனம் விசித்திரங்கள் நிறைந்தது என அறியும் கணத்திலிருந்து, அந்த விசித்திரங்களை நம்மால் தேடாமலும் இருக்க முடியாது. நம் மனம் விசித்திரங்களால், தர்க்க புத்திக்கு எட்டாத புதிர்களால் ஆனது என்னும் அறிவை அடையும் அந்த கணத்திலேயே நம் ஆன்மீக தேடலும் நம்முள் தோன்றியிருக்கும். அந்த ஆன்மீகத் தேடலின் திசை, நம் இயல்பிற்கேற்ப எதுவாகவும் இருக்கலாம் – உணர்வு அல்லது பக்தி சார்ந்ததாகவோ, அறிவு சார்ந்ததாகவோ, செயல் சார்ந்ததாகவோ அல்லது இவை அனைத்தையும் நம் இயல்புக்கேற்ற விகிதங்களில் சார்ந்ததாகவோ இருக்கலாம்.
நம் மனதின் உள்ளடக்கம் மட்டும் அல்ல, அதன இயக்கமும் விசித்திரமானது, புதிரானது. அதீத விழிப்புணர்வு அல்லது பிரக்ஞ்சை இல்லாத பட்சத்தில், மனம் அடுத்த கால அவகாசத்தில் எவ்வாறு அல்லது எதை நோக்கி இயங்கும் என்பதையும் நம்மால் முன்கூட்டியே கூற இயலாது. நம் வாழ்க்கையின் இயல்பு, மனதின் இயல்பிற்கேற்பவே இருக்கும். எனவே நம் வாழ்க்கை, அடுத்த கால அவாகாசத்தில் எவ்வாறு இருக்கும் என்பதையும் நம்மால் கூற முடியாது. உதாரணமாக, நம் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணத்தை எதிர்பார்த்து நாம் காத்திருக்கலாம், ஆனால் அந்த தருணத்தில் வெளிப்படையான நிகழ்வுகள் நாம் எதிர்பார்த்தது போல இருந்தாலும், அந்த தருணத்தில் நம் மனதின் சிறு சலனம், அந்த வெளிப்படையான நிகழ்வுகளை எதிர்மறையாக எடுத்துக்கொள்ளவும் கூடும் – அந்த மன சலனத்தின் மூலம் நம் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணத்தை நாம் இழந்து விட்டிருப்போம். இத்தகைய மனதின் விசித்திரமான இயக்கங்களினாலேயே நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை தினம் தோறும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
நம் மனதின் விசித்திரங்களை, புதிர்களை எவ்வாறு அறிந்து கொள்வது? ஆன்மீகம் மட்டுமே அதற்கான ஒரே வழி. ஆன்மீகம் என்பது ஆன்மாவை நோக்குவது. ஆன்மா என்பது நம் மனதின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டிருக்கும், எப்போதுமே விழிப்புடன் இருக்கும், நமக்குள் இருக்கும் ஒரு அம்சம். ஆன்மாவைக் குறித்து பல தளங்களில் பலவிதமான விளக்கங்கள் இருந்தாலும், நம் அனுபவத்திற்கு உட்பட விளக்கினால், நமது விழிப்புணர்வு அல்லது பிரக்ஞ்சையே ஆன்மாவாகும். ஆன்மா என்பது நம் அனுபவத்திற்கு வெளியே இருக்குமானால், அதை அறிவதற்கான கருவியும் நம் விழிப்புணர்வு மட்டுமே. ஆக ஆன்மீகம் என்பது நம் பிரக்ஞ்சையை அல்லது விழிப்புணர்வை நோக்கிய பயணம் அல்லது தேடுதல், அதன் மூலம் நம் ஆன்மாவை அறிவது – ஆன்மா என்பது நம் பிரக்ஞ்சையாக இருந்தாலும், அல்லது அதைத் தாண்டிய தற்போதைய நம் அறிதலுக்கு எட்டாத ஒன்றாக இருந்தாலும்!
நாம் ஆன்மீக வழியில் செல்லும்போது, நம் விழிப்புணர்வு கூர்மை அடைகிறது. விழிப்புணர்வு கூர்மை அடையும்தோறும், அந்த விழிப்புணர்வால், நம் மனதின் வெளிப்புறத்தில் நாம் சாதாரண நிலையில் அறியும் மனதின் நிழல்களையும் பிம்பங்களையும் தாண்டி மனதின் உண்மையான இயக்கங்களை அறிய நேரிடலாம். அதாவது, நம் பிரக்ஞ்சை மனம் என்னும் காட்டினுள் நுழைந்து அங்கிருக்கும் மிருகங்களையும் தெய்வங்களையும் அறியத் தொடங்குகிறது. ஆம், நம் மனதினுள் தெய்வத்தன்மையும், மிருகத்தன்மையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நம் மனதை இயக்கிக்கொண்டிருக்கிறது. அன்பு, கருணை போன்ற தெய்வத் தன்மைகளும், வன்முறை, வெறுப்பு, கோபம், வெறி போன்ற மிருகத்தன்மைகளும், பயம், நம்பிக்கை, ஆசை போன்ற மாயைகளும் நம் மனதில் நிரம்பி, இவற்றின் கலவையே நம் அன்றாட வாழ்க்கையை இயக்கிக் கொண்டிருக்கிறது. நம்மில் எவரும் இத்தகைய மனதின் தன்மையிலிருந்து விதிவிலக்கானவர்கள் அல்ல.
ஆன்மீக பயணத்தை தொடங்கும் ஒருவர், அவர் பிரக்ஞ்சை மனதின் இந்ந தன்மைகளை முதன் முதலாக அறிய நேரிடும்போது, மிகப்பெரிய மன அதிர்ச்சிக்கு உட்பட நேரிடலாம். மனம் என்னும் காட்டினுள் பிரக்ஞ்சை நுழையும்போது உண்மையின் எல்லை கோட்டை மனம் முதன் முதலாக தொடுகிறது. அந்த எல்லையில் நம் பிரக்ஞ்சை அறிய நேரிடும் உண்மையின் அம்சம், நாம் நம்மைக்குறித்து கொண்டிருக்கும் எல்லா மன பிம்பங்களின் அர்த்தமின்மையை நமக்கு உணர்த்துவதன் மூலம் நம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கலாம் – நம் வாழ்க்கையை மன பிம்பங்களின் அடிப்படையில் அமைத்திருந்தால். இந்த ஆரம்பக்கட்ட அதிர்ச்சியைத் தாண்டி ஆன்மீகப் பயணத்தை நம்மால் தொடர முடிந்தால், மனம் என்னும் காட்டின் விசித்திரங்கள் ஒவ்வொன்றையும், பிரக்ஞ்சையால் ஒருவேளை அறிந்து மீள முடியலாம். பிரக்ஞ்சையால் நம் உள்மனம் தொடப்படும் அந்த ஒவ்வொரு அறிதல் அனுபவமும், பேரனுபவங்களாக இருக்க கூடும்.
நம் மனம் இயங்கும் முறையை நாம் எப்போதாவது கவனித்திருந்தால், நம்மில் பெரும்பாலானவர்களின் மனம் எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை என்பதை நாம் அறியலாம். நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் கட்டாயத்தினால், முடிவெடுக்கும் தருணத்தை மேலும் தள்ளிப்போட முடியாத இயலாமையால் மட்டுமே அந்த முடிவுகளை எடுத்திருப்போம். உதாரணமாக நம் தொழில் துறையில் தினமும் பல்வேறு முடிவுகளை எடுக்கும் கட்டாயத்தில் நாம் இருக்க கூடும். அந்த கட்டாயமே, தொழிலில் நம் முடிவுகளை எடுக்கத்தூண்டுகிறது. மேலும், நம் முடிவுகளை தவறாக செல்லும் பட்சத்தில் நம் மேல் இருப்பவர், அவர் கட்டாயத்தின்பேரில் அடுத்தகட்ட தேவையான முடிவுகளை எடுப்பார். அதாவது, நமது முடிவெடுக்கும் தேவை ஒரு எல்லைக்குட்பட்டே இருக்கும். எனவே அதன்மூலம் எற்படும் உளவியல் தாக்கங்களும் அந்த எல்லைக்குட்பட்டே இருக்கும். ஆனால் நம் சொந்த வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளுக்கு அத்தகைய எல்லை என்பது இல்லை. நம் விழிப்புணர்வின் எல்லையே நமது முடிவெடுக்கும் எல்லையும். எனவே, அதன் மூலம் ஏற்படும் உளவியல் தாக்கங்களுக்கும் எல்லை நமது பிரக்ஞ்சையின் எல்லையே. மனம் என்னும் காட்டின் எல்லைக்குளை நம் பிரக்ஞ்சை நுழையாதவரை நாம் வாழ்க்கையில் எந்த விதமான முடிவுகளும் எடுப்பதில்லை, மனம் செல்லும் திசையில் வாழ்ந்து கொண்டிருப்போம். அல்லது நாம் பிரக்ஞ்சையின் துணை இல்லாமல் முடிவெடுப்பவர்களாக இருந்தால், அந்த முடிவுகளின் மூலம் மனதினில் சேர்க்கும் குப்பைகளும் மிக அதிகம் – இந்த குப்பைகளே நம் வாழ்க்கையை மட்க செய்ய போதுமானவை. இதற்கு மாறாக, நம் முடிவுகள் பிரக்ஞ்சைபூர்வமாக இருக்கும் பட்சத்தில், மனதினுள் எந்த குப்பைகளும் சேர்வதில்லை, ஆனால் பிரக்ஞ்சை வெளிப்படுத்தும் மனதின் விசித்திரங்களினால் அடையும் அனுபவங்களின் பேரானந்தத்தில் நாம் திளைத்துக்கொண்டிருக்க கூடும்!
Sunday, April 29, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment