மனிதப் பிறவிகளாகிய நாம், பிறந்தது முதல் இறப்பதுவரை ஓயாது ஒடிக்கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது, நிச்சயமாக நம்மில் பெரும்பான்மையானவர்களின் பிரக்ஞ்சையில் இல்லை. நாம் அறிந்திருப்பது எல்லாம் நம் கற்பனைகளால் உருவாக்கப்பட்ட நோக்கங்களையே – செல்வம், புகழ், பெருமை, இன்னும் இதைப்போன்றவை. ஆம், செல்வம் நம் சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஆனால், நம் சமூக வாழ்க்கைக்கு தேவைப்படும் அளவுக்கான செல்வம் மட்டும்!. நாம் எப்போதுமே நம் தேவை என்ன என்பதை அறிந்திருப்பதில்லை. எனவே நமக்கு தேவையான செல்வத்தின் அளவையும் நாம் அறிந்திருப்பதில்லை. எனவே செல்வத்தை தேடும்ஓட்டமும் முடிவில்லாத, நம் கற்பனையால் உருவாக்கப்பட்ட தேவையை நோக்கியே பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஒரு எறும்பு வரிசையின் இயக்கம் கவனத்தில் வர நேர்ந்தது. அந்த வரிசையில் இரண்டு திசைகளிலும் எறும்புகளை ஊர்ந்து கொண்டிருந்ததன. ஒரு திசையில் ஊர்ந்து செல்லும் ஒவ்வொரு எறும்பும் எதிர்திசையில் வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு எறும்பின் முன்னும் வந்து நின்று, பின் விலகி வழிவிட்டு, மீண்டும் அந்த வரிசையினுள் வந்து அடுத்த எறும்பின் மேல் முட்டி நின்று, வழிவிட்டு, மீண்டும், மீண்டும். . . . . . அந்த சிறிய எறும்பின் வாழும் காலம் சில நாட்களுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. அந்த வாழ்க்கையின் பெரும்பகுதி, வெறும் வரிசையில் நகர்ந்து, தன் இனத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் மேலும் முட்டி மோதி, ஆனால் வரிசையிலிருந்து பிறழாமல் அதற்கு தெரியாத ஒரு நோக்கத்திற்காக எதையோ நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. இத்தகைய எறும்பின் வாழ்க்கைக்கு, அந்த எறும்பின் வாழ்க்கையின் உட்புறமிருந்து நோக்கினால் எந்த அர்த்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த எறும்பின் வாழ்க்கை, உயிரினங்களின் ஒட்டுமொத்த பார்வையில், ஒரு இன்றியமையாத இடத்தை பெற்றிருக்கலாம். ஒவ்வொரு எறும்பும் வேறு ஒரு உயிரினத்துக்கு உணவாகவோ அல்லது வேறு ஒரு உயிரினத்தின் உணவு உற்பத்திக்கான காரணியாகவோ இருக்க கூடும். ஒவ்வொரு தனிப்பட்ட எறும்பின் பிரக்ஞ்சையில், அதன் வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்திருப்பதற்கான சாத்தியம் நிச்சயாமாக இல்லை. ஆனால் அந்த ஒட்டுமொத்த எறும்பு சமூகத்தின் பிரக்ஞ்சையில், அந்த ஒவ்வொரு எறும்பின் வாழ்க்கைக்கான நோக்கம் இருக்க கூடும். அவற்றால் அறிய முடியாத அந்த நோக்கத்திற்காகவே, ஒவ்வொரு எறும்பும் அதன் சில நாள் வழ்க்கையை, அவற்றால் அறிய முடியாத ஒழுங்குமுறையில் வாழ்ந்து முடித்துக் கொண்டிருக்க கூடும்.
மனித வாழ்க்கையை, நம் தனிப்பட்ட முறையில் அறிந்துள்ள உலகின் அடிப்படையில், நாம் வாழும் வாழ்க்கையின் அடிப்படையில் நோக்கினால் நம் வாழ்க்கைக்கும் எந்த நோக்கத்தையும் நம்மால் அறிய முடியாமல் இருக்கலாம். எனில் மனித இனமும் நம்மால் அறிய முடியாத ஏதோ ஒரு இயற்கையின் படைப்புக்கு உணவாகுவதற்காக, அல்லது உணவை உருவாக்கும் காரணியாக வாழ்ந்துகொண்டிருக்கிறதா? அவ்வாறு நாம் வாழும் வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொள்ள இயலாதவர்களாக நாம் இருந்தால், நாம் ஆறாம் அறிவு என பெருமை அடைவதும், வெறும்கற்பனையாகிய ஒன்றைக் குறித்தா?
ஆறாம் அறிவு என நாம் கூறுவது, நம் பிரக்ஞ்சையையே, நம் விழிப்புணர்வையே. நாம் வாழும் வாழ்க்கையை, நம்மைச்சுற்றி நிகழும் மனித சமூகத்தின் வாழ்க்கையை நம்மால் கூர்ந்து கவனிக்க முடிந்தால், நாம் எவ்வாறு சுயபிரக்ஞ்சை இல்லாமல், விழிப்புணர்வு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மிகத் தெளிவாக அறியலாம். விழிப்புணர்வற்று வாழும்போது, நாம் ஆறு அறிவுடைய பிறவி என பெருமை அடைவது கூட வெறும் கற்பனை அல்லவா?
சில வருடங்களுக்கு முன் படிக்க நேர்ந்த ஒரு முன்னணி மருந்து நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு செய்தி, நாம் எவ்வாறு நமக்கு இயற்கையால் வழங்கப்பட்டுள்ள ஆறாவது அறிவை உபயோகப்படுத்த இயலாமல், நம் மனவிருப்புகளால் (tendency), வரிசையில் செல்லும் எறும்புகள் போல இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைத்தது. பங்குதாரர்ளுக்கு, தன் வருங்கால வியாபார முன்னேற்றத்திற்கான சாத்தியங்களை தெரிவிக்கும் கட்டாயத்தில் இருந்த அந்த நிறுவனம், மக்களின் வாழ்க்கைமுறை (life style) சார்ந்த நோய்கள் வருடாவருடம் அதிகரித்து கொண்டிருப்பதாக ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டு, அந்த நிறுவனத்தின் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களுக்கான மருந்துகளே எதிர்கால லாபத்திற்கான காரணிகள் என அந்நிறுவனத்தின் வியாபார வாய்ப்புகளை விவரித்திருந்தது. அதாவது, பங்குதாரர்களே, நீங்கள் உங்களை வாழ்க்கையை வாழத்தெரியாமல் வாழ்வதன் மூலம் உருவாக்கும் நோய்களே, உங்கள் நிறுவனத்தின் எதிர்கால வியாபார வாய்ப்புகள்! இதை இன்னும் விரிவாக பார்த்தால், நாம் மனவிருப்புகளுக்கு (tendency) அடிமைப்பட்டு நம் அறிவை அறியாமல் இருக்கும்போது, நம் துன்பங்களை நாமே உருவாக்கி, அந்த துன்பங்களை நோக்கி ஓயாமல் ஓடுவதையே நம் வாழ்க்கையின் நோக்கமாக கற்பிதம் செய்துகொண்டு, இன்பமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
நண்பன் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, வேலைப்பழுவின் காரணமாக தன்னால் குடும்பத்தினருடன் தேவையான அளவு நேரத்தை செலவிட முடியவில்லை, ஆனால் தன்னால் அத்தகைய அழுத்தம் தரக்கூடிய வேலைகளையே விருப்பத்துடன் செய்ய இயல்கிறது எனக் கூறினார். இது அந்த ஒரு நண்பரின் பிரச்சினை (அந்த நண்பருக்கு இது பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம்!) மட்டும் இல்லை. இது பெரும்பாலானவர்களின் பொதுவான பிரச்சினை. பெற்றோர் தங்களால் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்கள் குழந்தைகளின் மேல் ஏற்றி, பள்ளிப் பருவம் முதல் மன அழுத்தத்தையும், அந்த அழுத்தத்துக்கு மாற்றாக, முறை தவறிய வாழ்க்கை அமைப்பையும் (unhealthy lifestyle) உருவாக்கும்போது, அந்த குழந்தைகள் பெரியவர்களாகும்போது மன அழுத்தத்தின் போதையால் மட்டுமே அவர்களால் வாழ முடியலாம். எனவே, தங்கள் தொழில்களின் மூலம் மன அழுத்தத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். தங்கள் தொழில்களில் மன அழுத்தத்தை உருவாக்க இயலாத துரதிர்ஷ்டசாலிகள், தங்கள் குடும்பத்தினுள் பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் தேவையான மன அழுத்தத்தை அடைந்து தங்கள் வாழ்க்கையின் சங்கல்பத்தை அடைகிறார்கள். எறும்பு வரிசையில் உள்ள ஒரு எறும்பு, எதற்காக வரிசையில் ஊர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமலே அந்த வரிசையில் இடைவிடாது நகர்ந்து உயிர்விடுவது போல, நாமும் சமூக அமைப்பினுள் ஓயாமல் ஓடி, எதற்காக உழைக்கிறோம் என்பதை அறியாமலே, யாருக்காகவோ உழைத்து மரணமடைகிறோம்.
ஆனால் மனிதர்களாகிய நமக்கு, ஆறாவது அறிவு என்னும் சாத்தியம் இயற்கையால் அளிக்கப்பட்டுள்ளது. ஆறாவது அறிவை அறியும்போது மட்டுமே நாம் மனிதர்களாக முடியும். இல்லை எனில், அந்த எறும்பு சமூகத்தைப்போல நாமும் ஒரு அற்ப சமூகம் மட்டுமே – நாம் நம்மைப்பற்றி எத்தகைய உயர்நிலையில் கற்பனைகளை உருவாக்கிக் கொண்டிருந்தாலும்! நமக்கு அளிக்கப்பட்டுள்ள சாத்தியமான அந்த ஆறாவது அறிவை அறிவது, அத்தகைய கடினமான காரியமாக இருக்க வாய்ப்பில்லை. அது கடினமாக இருந்தாலும், அதை அறிவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க முடியும் – நாம் உண்மையிலேயே நம்மை மனிதர்களாக கருதினால்!
ஆம், நாம் சமூகத்தில் இருக்கும்போது உழைத்தாக வேண்டும். ஏனெனில் நம் உழைப்பு, பிறரின் உணவுக்கு காரணமாகிறமது, நாமும் பிறர் உழைப்பையும் உணவாக உட்கொள்கிறோம். எனவே உழைப்பு என்பது இன்றியமையாதது. ஆனால் நாம் எதற்காக உழைக்கிறோம் என்னும் விழிப்புணர்வுடன் உழைப்பதற்கும், எதற்காக உழைக்கிறோம் என தெரியாமல் உழைப்பதற்கும் நடுவில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது – மனிதனுக்கும் விலங்குக்கும் இடையே ஆன வேறுபாடு! உழைப்பின் மேல் விழிப்புணர்வு இல்லாமல் உழைக்கும்போது, அந்த உழைப்பின் தொடர்ச்சியாக நாம் பிறரின் உழைப்பையும் வன்முறையுடன் எடுத்துக்கொண்டிருப்போம், நம் உழைப்பையும் வேறு சிலர் அதே அளவிலான வன்முறையுடன் பறித்துக்கொண்டிருப்பார்கள் – அந்த வன்முறைக்கு எத்தகைய கவர்ச்சியான வண்ணத்தை பூசினாலும்! அதே உழைப்பை நாம் பிரக்ஞ்சையுடன் செய்யும்போது நன்றியுணர்வுடனும், மரியாதையுணர்வுடனும் பிறர் உழைப்பை உண்டுகொண்டிருப்போம். நம் உழைப்பை பிறர் உண்ணும்போது, அதே நன்றியுணர்வுடனும், பெருங்கருணையுடனும் நம் உழைப்பை அவர்களுக்கு உணவாக்கிக் கொண்டிருப்போம். இத்தகைய சுயபிரக்ஞ்சையால் மட்டுமே ஆறாவது அறிவை நமக்களித்து நம்மை மனிதர்களாக்க முடியும்.
Saturday, March 24, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment