சொல்வனம் இணைய இதழில் 20-12-2015 அன்று பதிப்பிக்கப்பட்டது.
மனித
மனம் ஒரு பெரும் காடு. அங்கில்லாத
ஒன்று மனிதர்கள் அறியும்வகையில் வேறு எங்கும் இல்லை.
நன்மையும் தீமையும்,
பிறப்பும் இறப்பும்,
பிறப்பித்தலும் கொல்வித்தலும்,
ஒளியும் இருளும், மற்றும் அனைத்து இருமைகளும் சேர்ந்து இயங்கும் பெரும்களம். சமூகத்தின் அனைத்து இயக்கங்களையும் சமைத்து வழங்கும் பெரும்
கூடம். அனைத்தையும் உண்டு, உண்ட அனைத்தையும் செரித்து பின் கழித்துச் செல்லும் பெருந்தளம். உணவும் கழிவும் பிரித்ததறிய முடியாதபடி ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும்
பெருங்கலம். உணவை மலமாகவும் மலத்தை உணவாகவும் உணரவைக்கும்
மயக்கத்தை அளிக்கும் போதையின் ஊற்று முகம்.
இத்தகைய மனதின் இயக்கங்கள்தான் எண்ணங்களும் சிந்தனைகளும்.
கிட்டத்தட்ட
ஒன்று போல் தோன்றும், ஆனால்
முற்றிலும் வேறான அடிப்படை இயங்குவிசையால் உருவாக்கப்பட்டு மனதில் நிலை நிறுத்தப்படுபவை
எண்ணங்களும் சிந்தனைகளும். எண்ணங்கள்
எப்போதும் சிந்தனை ஆக முடியாது. ஆனால்
சிந்தனைகள், மனம் அறியாமலே, வெறும் எண்ணங்களாக மாறிவிடும் தன்மையுடையவை. எனவே அது என்னவென்று அறியாமலே வெற்று எண்ணங்கள் பொதுவெளியில்
சிந்தனைகளாக முன்வைக்கப்படலாம்.
மனிதனின்
அடிப்படை இயங்கு விசை எண்ணங்கள். மனதின்
விழைவுகள் யாவற்றையும் எண்ணங்கள் என்று கூறலாம்.
எண்ணங்களே செயல்களாக உருவெடுக்கின்றன. செயல்களில் எண்ணங்களால் முயன்று செய்யப்படும் செயல்களும், அனிச்சையாக மனதின் விழிப்புநிலை அறியாமலே நடைபெறும் செயல்களும்
அடங்கும். மனிதனால் அறியப்படும் எண்ணங்களால் அல்லது
விழிப்பு நிலையில் உருவாக்கப்பட்ட விழைவுகளால் செய்யும் செயல்களின் பெரும்பகுதி, புற மனதின் (Consious) இயக்கங்களால் நடை பெறுகிறது. இங்கு
விழிப்பு நிலையில் என்று கூறும்போது, எண்ணங்கள் உருவான பின், அந்த
எண்ணங்களைக் குறிந்த அறிவு. இது
அந்த எண்ணங்களின் உருவாக்கத்தின் மேல் ஆன விழிப்புநிலை அல்ல. செயல்கள் இன்னும் பழக்கப்படும்போது,
அதன் இயங்கு விசை புறமனதிலிருந்து உள்மனதிற்கு (SubConsious) மாறுகிறது.
மனதின் இந்தப் பகுதியிலிருந்து பழக்கத்தால் செய்யப்படும் செயல்கள்
ஆற்றப்படுகின்றன. பெரும்பாலான மனிதர்களால் எப்போதுமே அறிந்திருக்க
முடியாத எண்ணங்கள் ஆழ்மனதில் (UnConsious) இருந்து கொண்டு, உடலின்
இயக்கங்களான மூச்சு விடுதல், இதயம்
துடித்தல் போன்ற இயக்கங்கள் முதல் உடலின்
'செல்'கள்
மறுஉருவாக்கம்வரையான செயல்களை இயக்குகின்றன.
மனம்
எப்போதுமே ஒரு புதிர். அந்தப்
புதிரில் ஆழ்ந்திருந்து அதையே சுற்றிச் சுற்றி வருவது அடிமைத்தனம். புதிரை விடுவித்து வெற்றி கொள்வது விடுதலை. மனித மனங்களின் எல்லா இயக்கங்களும் இந்த விடுதலையை தேடித்தான்
தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கக் கூடும் ஆனாலும் புதிரை விடுவித்து அல்லது புதிரிலிருந்து
விடுபட்டு முழு விடுதலையை அடைந்த மனங்கள்,
ஒப்பு நோக்கையில் மிகச் சிலவை மட்டுமே. மனம் மிகமிக ஆழமானது.
அந்த ஆழத்துக்குச் செல்லும் வழிகள் புலப்படும்வரை அது மிகவும்
சிக்கலானதும் கூட.
மனதின்
இருப்பிடமும் இயங்குதளமும் மூளைதான். மூளையை கணினியின் ப்ராஸஸருடன் ஒப்பிட்டால்,
மனதை சாப்ட்வேர் எனப்படும் மென்பொருளுடன் ஒப்பிடலாம். கணினியின் மென்பொருள் உருவாக்கப்பட்டு ப்ராஸஸரினுள் செலுத்தப்பட
வேண்டும். ஆனால் மனதை,
அதன் ப்ராஸஸரான மூளையே உருவாக்கி தன்னுள் சேமித்து வைத்து, தான் உயிர்ப்புடன் இருக்கும்வரை தன்னால் உருவாக்கப்பட்ட மென்பொருளால்
இயங்குகிறது. அதாவது தன் உருவாக்கத்தையும், இருப்பையும், அழிப்பையும்
தன்னால் உருவாக்கப்பட்ட மென்பொருளாகிய மனதின் துணைகொண்டு நிகழ்த்துகிறது. தன் மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடிந்த மனிதன், தன்மனதின் மேல் ஆதிக்கத்தை நிகழ்த்த முடிந்த மனிதன், தன் உருவாக்கத்தையும்,
இருப்பையும், அழிப்பையும்
தானே முடிவு செய்யும் பெரும் தகுதியை அடைந்து விடுகிறான்.
மற்றவர்கள் அனைவரும் அனிச்சையாக நிகழும் மனதால் உருவாக்கப்பட்டு, அதன் இச்சைக்கேற்ப இருந்து,
அழிகிறார்கள் - எத்தகைய சுயக் கட்டுப்பாடுகளும் இல்லாமல்!
இங்கு 'தான்' அல்லது 'சுயம்' என்று குறிப்படிப்படுவது எது என்பது, முற்றிலும் வேறு தளத்தைச் சார்ந்த கருத்துருவாக்கம்.
Intelligence எனப்படும் நுண்ணறிவும் Artificial Intelligence (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவும் வேறுபடுவது,
அந்த அறிவியக்கத்துக்கு அடிப்படையான மென்பொருள், அது இயங்கும் தளத்தாலோ,
ஏற்கனவே தளத்தால் உருவாக்கப்பட்ட மென்பொருளாலோ உருவாக்கப்படுகிறதா
அல்லது முற்றிலும் வேறு ஒருதளத்தில் உருவாக்கப்பட்டு அதன் இயங்கு தளத்தில் இயங்க வைக்கப்படுகிறதா
என்பதிலேயே. அதாவது நுண்ணறிவு என்பது, மூளையால் உருவாக்கப்பட்ட மனம்,
தன்னிலிருந்தும் மூளை பெறும் புது அனுபங்களிலிருந்தும் தன்னைத்தானே
மறுஉருவாக்கம் செய்து தளிர்த்து, உதிர்ந்து, வளர்ந்து சென்று கொண்டிருப்பது.
செயற்கை நுண்ணறிவானது முற்றிலும் வேறான ஒரு மூளையாலோ கம்ப்யூட்டர்
ப்ராஸஸஸரினாலேயோ, அங்கு இயங்கி கொண்டிருக்கும் மனதின் அல்லது
மென்பொருளின் துணைகொண்டு, அவற்றின்
தேவைகளுக்காக உருவாக்கப்பட்டு வேறு ஒரு ப்ராஸஸரில் இயக்கப்படும் மென்பொருள். அதை செயற்கை நுண்ணறிவு என்று கூறுவது முற்றிலும் தவறான கருத்துருவாக்கம்
என்றே தோன்றுகிறது. அது
செயற்கை அறிவு Artificial Knowledge மட்டுமே. ஏனெனில் நுண்ணறிவு என்பது,
இதுவரை அடைந்திருக்கும் அனுபங்களை முற்றிலும் துறந்து, ஒரு நிகழ்வுக்கு அப்போதிருக்கும் சுற்றுச்சூழலை உணர்ந்து அதற்கேற்ப
வினையாற்றும் இயல்பு. மாறாக
செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படுவது, அதை உருவாக்கும் மனம் அல்லது தளம் முன்பு அடைந்த அனுபங்களை ஆதாரமாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும்
என்னும் அறிவு. இங்கு செயலுக்கு ஆதாரமாக இருப்பது அறிவு (Knowledge). எனவே தற்போது செயற்கை நுண்ணறிவு எனப்படுவதற்கு சரியான பதம் செயற்கை
அறிவு என்பதாகவே இருக்கலாம்.
செயற்கை
நுண்ணறிவுடன் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்க முடியும் என்று தோன்றவில்லை. எனெனில் உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் உருவாக்குபவரின் அனுபவத்தின்
எல்லைக்குட்பட்டது. தானாக
உருவாகி வரும் ஒன்றில் மட்டும்தான் நுண்ணறிவு நிகழ முடியும். இந்த அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு என்ற ஒன்றை உருவாக்க முடியாது. அதிக பட்சமாக செயற்கை அறிவை உருவாக்கலாம். இந்த அடிப்படையில்,
மனிதர்கள் அடைந்திருக்கும் அறிவின் பெரும்பகுதி சமூகம் உருவாக்கி
அவர்களுக்கு அளித்தது. அந்த
அறிவின் அடிப்படையில் செயல்படுவது அறிவின் அடிப்படையில் செயல்படுவதாகும். சமூகம் அளித்த அறிவை முற்றிலும் துறந்து, சூழ்நிலைக்கேற்ப வினையாற்றும் தகுதியை அடையும்போது ஒமனிதன் நுண்ணறிவை
அடைகிறான். இதற்கு அர்த்தம் சமூகம் வழங்கிய அறிவு
தேவை இல்லை என்பதில்லை; ஆனால்
நுண்ணறிவுடன் திகழ, அந்த
அறிவைக் கடந்து செல்ல வேண்டும் என்பதே.
தாயின்
கருவறையில் இருக்கும்போதே மனிதமூளை உருவாகி விடுகிறது.
அது உருவாகிவிட்ட உடன் இயங்கவும் தொடங்குகிறது. அந்த இயக்கத்திற்கான அடிப்படை மனம் அல்லது மென்பொருள், மரபணுக்கள் மூலமாக மூளை அடைந்திருக்க வேண்டும். எனில் மனதின் முதல் பதிவை மூளை உருவாக்குகிறதா? மூளையேதான் உருவாக்கியிருக்க வேண்டும்! மனிதன் தன் ஏழு தலைமுறை முன்னோர்களில் ஒருவரிடமிருந்தோ ஒன்றிற்கு
மேற்பட்டவரிடமிருந்தோ தன் மரபுவழி இயல்புகளைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு மனிதன் தன் இயல்புகளை தன் தாய் தந்தையர் உட்பட முன்னோர்கள் 128 (=2 * 7) பேர்களில் ஒன்றோ அதற்கு மேற்பட்டவர்களிடமிருந்தோ பெற்றிருக்கலாம். அதாவது மனிதனின் அடிப்படை இயங்குவிசை அவன் பிறப்பதற்கு முன்பே
உருவாகி விட்டது! தனிமனிதனுக்குத் தன் அடிப்படை இயல்பை ஏற்றுக்கொள்வதைத்
தவிர வேறு வழியில்லை. மனிதன்
தன் இயல்பை மறுஉருவாக்கம் செய்ய விழைந்தால்,
இந்த அடிப்படை இயல்புகளை ஏற்றுக்கொள்வதில் இருந்தே தொடங்க முடியும். அந்த ஏற்றுக்கொள்ளல் மாறுதலுக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும். ஒருவேளை தன் அடிப்படை இயல்பை புரிந்து கொள்ளாமல் தன்னை மாற்றயமைக்க
முனைந்தால், அது அம்மனிதனைப் பொறுத்தவரையில், பேரழிவுக்கே அழைத்துச் செல்லும்.
இயக்கங்களின்
தோற்றுமுகம் எண்ணங்களும் சிந்தனைகளும் என்றால்,
எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் தோற்றுமுகம் நினைவுகள். ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் எண்ணம்,
மரபணுக்கள் அவன் மூளையில் பதிப்பித்திருந்த நினைவுகளுக்கும்
புலன்கள் அவன் மூளையில் ஏற்படுத்திய தூண்டுதல்களுக்குமிடையேயான முரண் அல்லது ஒத்திசைவின்
விசையில் தோன்றியிருக்க வேண்டும். அந்த
மனிதனின் வாழ்க்கையில் நிகழும் எண்ணங்களின் எனவே செயல்களின் திசையை அந்த முதல் முரண்
அல்லது ஒத்திசைவு நிர்ணயித்திருக்கும். அதிலிருந்து, அம்மனிதன் உணரும் ஒவ்வொரு புலனுணர்வுகளும், ஒவ்வொரு எண்ணங்களும்,
சிந்தனைகளும், மூளையில் தன் சுவடுகளை விட்டுச் செல்கின்றன.
இந்தச் சுவடுகள் 'வாசனா' என்னும் கலைச்சொல்லாலும், நினைவுகளுக்கும் புலனுணர்வுகளுக்கும் இடையேயான முரண் அல்லது
ஒத்திசைவால் ஏற்படும் இயக்கங்கள் 'கர்மா' என்னும் கலைச்சொல்லாலும் இந்தியத் தத்துவங்களில் குறிப்பிடப்படுகின்றன. ('வாசனா', 'கர்மா' போன்றவை முற்பிறவியின் தொடர்ச்சியாக வருபவை
என்றும் குறிப்பிடப்படுகிறது. முற்பிறவி
குறித்து இதுவரை எந்த அறிதலும் எனக்கு இலலை.
எனவே இவை முற்பிறவியின் தொடர்ச்சியே என்னும் கருதுகோளை ஏற்கவோ
தவிர்க்கவோ தேவையான தகுதி எனக்கு இல்லை)
ஆக
எண்ணங்கள், மனித மூளையின் தவிர்க்க முடியாத இயல்பு. எண்ணங்கள் அழியும்போது அந்த மனிதனும் இல்லாமல் ஆகிறான். இங்கு எண்ணங்கள் என்பது புற மனதின் எண்ணங்கள் மட்டுமல்ல; உடல் இயக்கங்களுக்குக் காரணமான,
சாதாரண மனிதர்கள் அறிந்திராத,
ஆழ்மனதின் இயக்கங்களும் சேர்ந்த்துதான். எனவே எந்த ஒரு மனிதனாலும் அவன் மூளையில் நிகழும் எண்ணங்களை தவிர்க்க
முடியாது. ஆனால் மனிதனால் எண்ணங்களிலிருந்து விடுபட்டிருக்க
முடியும். உதாரணமாக மூச்சு விடுவதற்குத் தேவையான
எண்ணங்கள் ஆழ்மனதில் நிகழ்கின்றன. ஆனால்
அந்த எண்ணங்களில் மனிதன் கட்டுண்டிருப்பதில்லை.
அனிச்சையாக நிகழ்கிறது.
வாழ்க்கையை நிகழ்த்துகிறது.
இதைப்போலவே, புற
இயக்கங்களுக்குத்தேவையான எண்ணங்களையும், அந்த எண்ணங்களில் கட்டுப்பட்டிருக்காமல் நிகழ்த்த முடியும் - மனம்
அதற்கான நுண்ணறிவுடன் இருந்தால்!
அதிநுண்ணறிவுடன்
நிகழும் மூச்சு விடும் நிகழ்வு எந்தப் பதிவுகளையும் நினைவில் ஏற்படுத்துவதில்லை. ஆனால், சுவாசக்கோளாறினால்
பாதிக்கப்பட்டால், அந்தக்
கோளாற்றை சரி செய்வதற்கு புறமன இயக்கங்களும் தேவைப்படுகின்றன. எனவே அதற்கான பதிவுகளும் மூளையில் நிகழ்கின்றன. இதைப்போலவே அன்றாட புற நிகழ்வுகளையும், மனம் அதி நுண்ணறிவுடன் செயல்படுத்தும்போது அந்த நிகழ்வுகள் மூளையில்
எந்தப் பதிவுகளையும் விட்டுச் செல்வதில்லை.
அதாவது அதிநுண்ணறிவு நினைவில் புதிய 'வாசனா' தோன்றாமல்
இருக்கச் செய்கிறது.
ஒரு
புலனுணர்வை அடையும்போது, உதாரணமாக
ஒரு நிகழ்வை பார்க்கும்போதோ கேட்கும்போதோ அந்த நிகழ்வுக்கு உடனடியாக வினையாற்றத் தேவையான
அதிநுண்ணறிவு இல்லாமல் இருக்கும்போது அந்தப் பார்வை அல்லது கேள்வியை மனம் ஒரு நினைவாகப்
பதிவு செய்து விட்டு அடுத்த நிகழ்வுக்குச் சென்று விடுகிறது. உலகம் நிகழ்வுகளின் தொகுப்பு.
ஒவ்வொரு பகுக்கப்படும் கால அளவுகளிலும் எண்ணற்ற நிகழ்வுகள் நம்
புலன்களை வந்தடைகின்றன. புலன்களை
தாக்கும் நிகழ்வுகளுக்கு உடனடியாக வினையாற்ற முடியாமல் அங்கேயே தேங்கியிருந்தால், நிகழ்வுகள் மனிதனை அடித்துப் புரட்டிச் சென்று விடும். அங்கு நிலைத்திருக்க புலன்களை தாக்கும் நிகழ்வுகளுக்கு மனம்
ஒவ்வொரு கால அளவின் பகுப்புக்கும் தாவிச் சென்றுகொண்டிருக்க வேண்டும். எனவே வினையாற்ற முடியாத நிகழ்வுகளை மனம் நினைவுகளாக பதிப்பித்து
விட்டு அடுத்த நிகழ்வுக்குச் சென்று விடுகிறது.
அதிர்ஷ்டவசமாக
மனிதர்களில் முட்டாள்களின் முட்டாள்களுக்கும் அதிநுண்ணறிவு, அவர்களின் உடல்இயக்கங்களுக்காகத் தேவைப்படுகிறது. அதற்கான ஆழ்மனத் தளங்களில் நுண்ணறிவு இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக புறவாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றவர்களில்
பெரும்பாலானவர்களும் புறமனத்தளங்களில் நுண்ணறிவு சற்றும் இன்றி, மன அளவில் துன்பமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். மனதின் இந்தத் துன்பங்களை புறஉலக வெற்றியால் மறைத்து, வாழ்நாளைக் கடத்துகிறார்கள்.
அது ஒரு போலி வாழ்க்கை.
இந்தப் போலி வாழ்க்கை மேலும் துன்பங்களுக்கு அடிகோலுகிறது. அதிநுண்ணறிவு ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஆனால் புறமன அளவில் அதை உபயோகப்படுத்த முடியவில்லை. அதன் காரணங்களை அடுக்கிச் செல்லலாம். ஒற்றை வாக்கியத்தில் கூறவேண்டுமானால், புறவாழ்வில் அதிநுண்ணுணர்வை அடைவதற்கான விழைவு பெரும்பாலான மனிதர்களிடத்தில்
நிகழவில்லை!
எண்ணங்கள்
கட்டற்றவை. அதுவே அவற்றின் இயல்பு. எனவே எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்னும் கருதுகோள் சரியானதாக
இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால்
எண்ணங்களிடமிருந்து விடுபட முடியும். அதாவது எண்ணங்கள் அவற்றின் இச்சைப்படி நிகழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் அத்தகைய தன்னிச்சையான எண்ணங்களினால் புறச்செயல்கள் தூண்டப்படாமல்
வைத்திருக்க முடியும். எண்ணங்களிலிருந்து
ஒரு மனிதன் விடுபடும்போது அவற்றின் இருப்பு தேவையற்றதாகிறது. தேவை மறையும்போது எண்ணங்களும் மறைகின்றன. இங்குதான் சிந்தனை என்னும் கருதுகோள் தேவைப்படுகிறது.
(2)
சிந்தனையை
திசைப்படுத்தப்பட்ட எண்ணங்கள் என்று பொதுமைப்படுத்தலாம்.
நினைவுகளும் புலன் உணர்வுகளும்தான் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும்
அடிப்படை. அவற்றின் துணையுடன் மூளை பெறும் தூண்டுதலுக்கேற்ப
தன்னிச்சையாக கட்டுப்பாடின்றி நிகழ்வது எண்ணம்.
திசைப்படுத்தப்பட்ட நினைவுகளுடன் புலனுணர்வுகளும் சேர்ந்து நிகழ்வது
சிந்தனை. எனில் திசைப்படுத்துவது எது? அது எங்கிருந்து தனிமனிதனுள் நுழைகிறது?
எண்ணங்களை
திசைப்படுத்துவது, அவ்வாறு
செய்ய வேண்டும் என மனிதனுக்குள் நிகழும் ஒரு விழைவு மட்டும்தான். இந்த
விழைவை ஒருமனிதன் அவனாகவே அடையவேண்டும். வேறு எவரும் இதை மனிதனிடம் விதைக்க முடியாது.
மனிதனுக்குள் இயல்பாகவே நிகழும் தேடுதல்கள், அம்மனிதனின் இயல்பிற்கேற்ற தூண்டுதல்களை புற உலகிலிருந்து பெறும்போது
சிந்தனைக்கான விழைவு தோன்றலாம். அது
முற்றிலும் தன்னிச்சையானது. ஒருவேளை, ஒரு மனிதனின் முதல் எண்ணம் எவ்வாறு தோன்றியது என்பதையும், அம்மனிதனின் மனம் அந்த முதல் எண்ணத்திலிருந்து எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது
என்பதையும், அந்த வடிவமைப்பில் தேடுதலுக்கும் அறிதல்களுக்கும்
என்ன இடம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் போன்ற காரணிகளைப் பொறுத்து அமையலாம்.
சிந்தனை
குறித்து எழுதுவது பேசுவது விவாதிப்பது அனைத்தும்,
அந்த செயலில் ஈடுபடுபவர் தமக்கு உண்மையானவராக இருக்கும் பட்சத்தில், தன் மனதில் தோன்றிய சிந்தனைக்கான விழைவை சமூகத்தின் மனதிலும்
தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே இருக்கும்.
சிந்தனைகள்தான் மனிதனை மனிதனாக வாழ வைப்பவை. வாழ்க்கையை வழி நடத்துபவை.
சிந்தனை இல்லாத மனிதனுக்கு நிகழும் அனைத்து நிகழ்வுகளும் தன்னிச்சையானது. அந்நிகழ்வுகளில் ஒரு மனிதனாக அவனுக்கு எந்தப் பங்கும் இல்லை.
சிந்தனையை
விழிப்புணர்வுடன் நிகழும் எண்ணங்கள் என்றும் கூறலாம்.
சிந்தனையில் ஈடுபடும்போது எண்ணங்கள் தொடர்ந்து விழிப்புணர்வில்
இருந்துக்கொண்டிருக்க வேண்டும். அதன்
மீதான விழிப்புணர்வை தவற விடும் பட்சத்தில்,
சிந்தனை வெறும் எண்ணமாக,
தன்னிச்சையான இயக்கமாக உருமாறி விடும் அதாவது சிந்தனை நிகழும்போது, அந்த சிந்தனையைத் தூண்டும் புற உலகக் காரணிகள், அந்தக் காரணிகளின் மேல் செயல்படும் விசைகள், சிந்தனை சார்ந்திருக்கும் மனப்பதிவுகள், அந்த மனப்பதிவுகளின் அடிப்படை போன்ற தளங்களில் விழிப்புணர்வு
இருந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால்
அத்தகைய விழிப்புணர்வு பெரும்பாலான மனிதர்களுக்கு,
அதாவது சிந்தனையாளர்கள் என அறியப்படுபவர்களுக்கும், அது சாத்தியமானதாக இருந்தாலும்,
சாத்தியப்படவில்லை என்றே தோன்றுகிறது. மனதின் உச்சத்தை அடைய முடிந்த வெகு சிலரால் மட்டுமே அத்தகைய
தூய சிந்தனையை அடைய முடியும்.
செயல்களுக்குக்
காரணமாக இருக்கிறது என்பதைத் தவிர எண்ணங்களுக்கு மனித வாழ்க்கையில் எந்த முக்கித்துவமும்
இல்லை. மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைச்
செயல்கள், அந்தச் செயல்களுக்கான நுண்ணுர்வால் உருவாக்கப்படும், புறமனதில் வெளிப்படாத எண்ணங்களால் வழி நடத்தப்படுகிறது. இநதத் தளத்தில் (ஆழ்மன) எண்ணங்கள் மிகமிக முக்கியமானவை. ஆனால் புறவாழ்க்கையில் அவை அர்த்தமற்றவை. புறவாழ்க்கையில் எண்ணங்களால் செயல்படுத்தப்படும் செயல்களே எல்லா
மனிதத் துன்பங்களுக்கும் காரணம். லௌகீக
வாழ்க்கையில் வெற்றிபெற்ற பெரும்பாலானவர்கள் இந்த எண்ணங்களால்தான் அதை அடைந்தார்கள்
என்பது உண்மைதான். என்றாலும்
வெற்றிக்கான செயல்களை அளித்த அந்த எண்ணங்கள் முற்றிலும் தற்செயலானவை. அவர்கள் மூளையில் தோன்றிய முதல் எண்ணம் தற்செயலாக வெற்றியை அளிக்கும்
எண்ணங்களை உருவாக்கும் அமைப்பைப் பெற்று விட்டது.
இது முழுக்க முழுக்கத் தற்செயலான நிகழ்வு. அவ்வாறு லௌகீக வாழ்வின் வெற்றியை அடைந்தவர்கள், அந்த வெற்றியை கொண்டாட எந்த காரணங்களும் இல்லை!
தற்செயலாக
நிகழ்ந்த வெற்றிக்கான எண்ணங்களை, கொஞ்சம்
விழிப்புடன் அல்லது திசைப்படுத்தப்பட்ட எண்ணங்களாகிய சிந்தனையுடன் அடைந்திருந்தால்
அந்த வெற்றியைக் கொண்டாட அவர்கள் முழுத் தகுதி படைத்தவர்களாவார்கள். கொண்டாடுவதும் இல்லாததும் அவர்கள் விருப்பம். ஆனால் அத்தகைய வெற்றி,
அவர்களை மட்டுமல்ல,
அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தையும் அடுத்தத் தளத்துக்கு
எடுத்துச் செல்லும். இதற்கு
மாறாக, தற்செயலான எண்ணங்களால் அடையப்படும் வெற்றி, பெரும்பாலும் சமூகத்தை கீழ் தளங்களுக்குத் தள்ள முயலும். ஏனெனில், தற்செயலான
வெற்றியை அடைந்த எவரும், அந்த
வெற்றியில் முழு மனதுடன் திளைக்க முடியாது.
அதைத் தக்கவைத்துக் கொள்ள இடைவிடாத போராட்டத்துடனும், கொஞ்சம் அயர்ந்தால் எங்கே விழுந்து விடுவோம் என்னும் பயத்துடனும்
வெற்றிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.
போராட்டமும் பயமும் உள்ள இடங்களில் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டகங்களுக்கும்
இடமில்லை.
சிந்தனைக்கான
விழைவு, ஆழ்மனதின் நுண்ணறிவை புறமனதுக்கு எடுத்துவரக்
கூடும். ஆழ்மனதில் நுண்ணறிவின்றி எந்த மனிதனும்
உயிர்வாழ முடியாது. ஆழ்மனதில்
நுண்ணுணர்வு சாத்தியம் எனில் புறமனதிலும் அது சாத்தியமே.
அவ்வாறு இல்லாமல் இருக்க எந்தக் காரணங்களும் இல்லை. சிந்தனைக்கு மிக அவசியமான தேவைகள் உண்மைக்கு மிக நெருக்கமான
நினைவுகளும், தூய புலனுணர்வுகளும். இவை இரண்டும் அமைந்து விட்டால் அங்கு அதிநுண்ணுணர்வு தன்னை வெளிப்படுத்த
எந்தத் தடைகளும் இல்லை. உண்மைக்கு
மிக நெருக்கமான நினைவுகள்.........
நினைவுகள்
என்றாலே அவை உண்மை இல்லை. முன்பே
கூறியிருந்தபடி, நுண்ணறிவினால் தொடப்படாத அல்லது தொட இயலாத
எண்ணங்களும் புலனுணர்வுகளுமே பெரும்பாலும் நினைவுகளாக பதிக்கப்படுகின்றன. புலனுணர்வுகள் நேரடியாக நினைவுகளாகப் பதிவதில்லை. அவை அந்தப் புலன் சார்ந்த, முன்பே பதிக்கப்பட்ட பதிவுகளின்
ஒப்பீட்டுடனும், எண்ணங்களால் மாறுதலுக்குள்ளாக்கப்பட்டும்
பதிக்கப்படுகிறது. எனவே
அவை உண்மையிலிருந்து எப்போதும் விலகியிருக்கும்.
எவ்வளவு தூரம் விலகியிருக்கும் என்பது அந்த உணர்வுகளால் எவ்வாறு
பாதிக்கப்பட்டு பதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து இருக்கும். ஆக, 'உண்மைக்கு
நெருக்கமான நினைவுகள்' என்பதை
அறுதியிட்டு வரையறுக்க முடியாது. அந்த
நினைவுகளைக் கொண்டிருக்கும் மனிதன், அவன்
உள்ளுணர்வால் மட்டும் அறியக்கூடுவது. இன்னும் குறிப்பிட்டு சொன்னால், அந்த
மனிதனின் அகங்காரம் அந்த நினைவிலிருந்து எவ்வளவு விலகியிருக்கிறதோ அந்த அளவுக்கு அது
உண்மைக்கு நெருக்கமானதாக இருக்கும்.
தூய
புலனுணர்வுகள் என்பதும் பெரும்பாலான மனிதர்களுக்கு மிக அரிதானதே. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அடைவதற்கும், உடல் இன்பங்களைப் பெறுவதற்கும் தேவைப்படுபவற்றின் இருப்பை அறிந்து
கொள்ளுமளவிற்கான் புலனுணர்வுகள் போதுமானது.
புலன்கள் நம் உடலின் கருவிகள்.
எந்தக் கருவியும் சரியான முறையில் பராமரிக்கப்பட்டால்தான் அவற்றின்
முழு திறனுடன் இருக்கும். புலன்களும்
அவ்வாறே. உடல் இயக்கங்கள் தன்னிச்சையாக நடப்பதால்,
தங்கள் உடலின் மேல் கவனமில்லாத பெருந்திரளானவர்கள், உடலின் கருவிகளான புலன்களையும் பராமரிக்கத் தவறுகிறார்கள்.
பெரும்பாலும்
புலனுணர்வுகள் என மனிதர்கள் அடைவது புலன்களால் உணரப்பட்டவற்றைக் கொண்டு அடைந்த தோராயமான
அனுமானங்களையே. உதாரணமாக ஒரு காட்சியை காண்பது, மனதில் அவ்வாறே நினைவாகப் பதிவதில்லை. பார்த்தவற்றின் மேல்,
அந்தக் காட்சி குறித்து ஏற்கனவே அறிந்தவற்றின் எடையும் காண்பவரின்
அனுமானங்களின் எடையும் ஏற்றப்பட்டு, திரிக்கப்பட்ட
உணர்வுகளே நினைவுகளாக பதிப்பிக்கப்படுகிறது.
ஆக
ஒருவர் உண்மையில் சிந்திக்க வேண்டுமானால்,
தன் நினைவுகளை மிகத்தீவிரமாக மறுபரிசீலனைக்கு உட்படுத்தியபின்னரே, சிந்தனையின் எல்லையையாவது தொட முடியும். இத்தகைய சிந்தனையை அடைய தேவைப்படும் உழைப்பு சாதாரணமானதல்ல. எனில் ஒருவர் எதற்காக இத்தகைய உழைப்பைச் செலவிட வேண்டும்? இது அனைவருக்கும் தேவைப்படும் உழைப்பு இல்லை. தன் மனதில் தேடுதலைக் கொண்டவர்களுக்கு மட்டுமான உழைப்பு. தேடுதலின் இறுதியில் கண்டடையப்படுவது அளிக்கும் பெரு மகிழ்ச்சிக்காகவும், அதனூடாகப் பெறும் விடுதலைக்காகவும் அளிக்கப்படும் உழைப்பு. துரதிர்ஷ்டவசமாக விடுதலையை அழிக்கும் இந்தத் தேடுதல், பெரும்பாலானவர்களுக்கு அடைத்து வைக்கும் பொறியாக மாறி விடுகிறது. தேடுதல் தொடங்கியபின் மனதில் ஏற்படும் சக்தி நிலைகளின் தளர்வினாலோ
அல்லது புறக்காரணிகளின் விளைவான மனச்சிதறலினாலோ தேடுதலின் தீவிரம் குறைந்தால், அங்கு சிந்தனைகள் வெறும் எண்ணங்களாக மாறிவிடும்.
(3)
எண்ணங்களும்
சிந்தனைகளும் தான் செயலின் ஊற்றுக்கண். அது வற்றாத ஊற்று. வற்றும்போது
அந்த மனிதனின் இருப்பு அழிந்து விடுகிறது.
அவை தனிமனிதனின் மனதில் ஊறி,
செயலாக வெளிப்படுகிறது.
எந்த ஒரு செயலும், அது நடைபெறும் தளத்தில் உள்ள அனைத்தையும்,
அனைவரையும் எவ்வகையிலேனும் பாதிக்கிறது. உலகம் செயல்களின் பெருவெளி.
செயல்களின் பாதிப்புகள் ஏற்படுத்தும் இயக்கங்களில்தான் வாழ்க்கை
ஏறி பயணம் செய்கிறது.
சற்றே
மாற்றிக் கூறினால் மனித சமூகத்தின் இயக்கம்,
உண்மையில் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களும் சிந்தனைகளும் செயல்களாக
பருவடிவம் கொண்டு, ஒன்றை
ஒன்று முட்டி மோதி அங்கும் இங்கும் அலைந்து திரியும் எண்ணங்கள். சமூகத்தில் நடைபெறும் செயல்களின் அடித்தளங்களைக் காணும் நுண்ணுணர்வை
அடைய முடிந்தால், அதன் மூலம் காண்பது மனித எண்ணங்களும்
சிந்தனைகளும் அலையலையாக ஒன்றன்மேல் ஒன்று முயங்கி கலங்கி,
முரண்கள் மற்றும் ஒத்திசைவின் மூலம் ஒரு பெருவடிவம் கொண்டு ஒரே
இயக்கமாக முன்னேறிச் செல்லும் வாழ்க்கையாகவே இருக்கலாம்.
ஒவ்வொரு
தனிமனிதனின் எண்ணங்களும் சமூகத்தை எங்வகையிலேனும் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பு, குறைந்த பட்சம் அந்த மனிதனுடன் அன்றாடம் தொடர்பிலிருக்கும் மற்ற
மனிதர்களையும் அதிகபட்சமாக முழு மானிட சமூகத்தையும் பாதிக்கலாம். ஆக தனிமனிதனின் எண்ணங்களும் சிந்தனைகளும் தனிமனிதனோடு நின்று விடாமல் சமூகத்தில் அலையாகப் பரவுகிறது. அந்த அலை பரவும் தூரம் மட்டுமே எண்ணங்களுக்கு எண்ணம், சிந்தனைகளுக்கு சிந்தனை மாறுபடும்.
மனிதன் தன் எண்ணங்களின் மேல் விழிப்புடன் இருப்பதற்கு, எண்ணங்களை சிந்தனைகளாக பரிணாம மாற்றம் அடையச் செய்வதற்கு, அவன் எண்ணங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பாதிக்கிறது என்பதைவிட வேறு எந்தக் காரணங்களும் தேவையில்லை.
பெரும்பாலான
மனிதர்கள், அவர்களை மனிதர்களாக பிறப்பித்ததன் மூலம்
இயற்கை அவர்களுக்கு அளித்திருக்கும் பெரும் பொறுப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு அறியாமல் அவர்களை இருக்கச் செய்வதும் இயற்கையின் மற்றொரு
விளையாட்டாக இருக்கக் கூடும். இயற்கை அளித்த வரமான சிந்தனையின் உச்சத்தை அடையும்போது மனிதன் அனைத்துத் தளைகளிலிருந்தும் எளிதாக விடுபட
முடியலாம். முற்றிலும் தளைகளிலிருந்து விடுபட்ட மனித
சமூகத்தில் எண்ண அலைகள் இல்லாமல் போகலாம்.
அதன் தொடர்ச்சியாக செயல்களும்,
செயல்கள் அழிந்தால் சமூகமும்.
மனித இனம் நிலைத்து இருப்பதற்காகத்தான் இயற்கை வரத்துடன் சேர்த்து
சாபத்தையும் அளித்துள்ளதோ?
தனிமனித
எண்ணங்களின் பாதிப்பு அந்த மனிதனை சார்ந்தவர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் பொதுவெளியில் வைக்கப்படும் எண்ணங்களும் சிந்தனைகளும் அவ்வாறில்லை. அவை அடையும் மனங்களைப் பாதித்து அங்கும் அம்மனதின் இயல்பிற்கேற்ற
எண்ணங்களை உருவாக்குவதுடன் அவை செயல்களாக வெளிப்படவும் வைக்கலாம். அவ்வாறு பொது வெளியில்
தங்கள் எண்ணங்களை முன்வைப்பவர்கள், சிந்தனையாளர்கள் எனப்படுபவர்கள், அவ்வெண்ணங்கள்
சமூகத்துக்கு அளிக்கும் பாதிப்பை அறிந்திருக்கிறார்களா என்பது சந்தேகம்தான். அவ்வாறு அறிந்திருந்தால்,
எண்ணங்களும் சிந்தனைகளும் மனித சமூகத்துக்கு இத்தனை எதிர்மறை
விளைவுகளை ஏற்படுத்தியிருக்காது. இங்கு
அவை ஏற்படுத்திய நேர்மறை விளைவுகளை விளக்க வேண்டியதில்லை.
சமூகம் இன்று இருக்கும் உயரம் சிந்தனைகளாலேயே எட்டப்பட்டது. எனில் சிந்தனைவாதிகள் போதிய விழிப்புடன் இருந்திருந்தால் இந்த
உயரம் மனித உயிர்களையும், இரத்தத்தையும்
பலியிட்டு கட்டி எழுப்பிய அடித்தளத்தின் மேல் இல்லாமல்,
ஒரு உன்னதமான அடித்தளத்தின் மேல் அமைந்திருந்திருக்கலாம்.
எண்ணங்களும்
சிந்தனைகளும்தான் செயல்களுக்கு அடிப்படையாக இருந்தாலும்,
அவை அனைத்தும் செயல் வடிவம் பெறுவதில்லை. ஒவ்வொரு மனித மூளையிலும் உள்ள பலநூறு கோடி நியூரான்கள் உருவாக்கும்
எண்ணங்கள் அனைத்தும் செயலாக வெளிப்பட முனைந்தால்,
இவ்வுலகத்தில் அச்செயல்கள் நிகழத் தக்க களம் இல்லை. அவை செயல்களாக வெளிப்பட குறைந்தபட்ச வீரியத்தைக் கொண்டிருக்க
வேண்டும். செயல்களாக பரிணாமம் அடைய முடியாத எண்ங்கள், மனதினுள் அவற்றின்
நினைவுகளை விட்டுச் செல்கின்றன. இந்த நினைவுகள் மேலும் எண்ணங்களுக்கும் அதன் விளைவான
நினைவுகளுக்கும். செயலின்மை மனித வாழ்க்கையை வெறும் எண்ணங்களுக்குள் அமிழ்த்தி விடுகிறது.
எனவே வீண் கற்பனைகளுக்குள்ளும் அவற்றின் மறுவடிவமான மாய இன்பதுன்பங்களுக்குள்ளும்!
மூளையில்
உள்ள நியூரான்களின் வடிவமைப்புப் படி, ஒவ்வொரு நியூரானின் செயலாற்றலுக்கும் குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச சக்தி தேவைப்படுகிறது.
ஒவ்வொரு எண்ணமும், சிந்தனையும் பல ஆயிரக்கணக்கான நியூரான்களின் கூட்டு இயக்கத்தின் வெளிப்பாடு. ஆக ஒவ்வொரு எண்ணமும்,
அவை செயலாக உருவெடுத்தாலும்,
வெறும் எண்ணமாக அழிந்து விட்டாலும்,
மூளையின் உயிர் சக்தி செலவிடப்படுகிறது. செயலாக உருவெடுக்காமல் வெறும் எண்ணமாகவும் சிந்தனையாகவும் அழிந்து
விடுபவை வெறுமனே உயிர் சக்தியை விரயம் செய்கின்றன.
அனாவசியமாக இவ்வாறு உயிர் சக்தியை வீணாக்கும் மூளையில் வீரியத்துடன்
சமூகத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச்செல்லும்
சிந்தனைகள் தோன்ற சாத்தியமில்லை. ஆனால்
செயலாக்கப்படும் எண்ணங்களும் சிந்தனைகளும்,
அச்செயல்களின் நேர்மறை(அந்த மூளையை பொறுத்த வரை) விளைவுகளுக்கேற்ப அதன் உயிராற்றல்
மேலும் பெருகுகிறது. இது
ஒரு முரணாகத் தோன்றினாலும் இதுவே உண்மையில் நிகழ்கிறது.
மூளையின் உள் வடிவமைப்பு,
இயற்கையால் அவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கலாம். மனிதர்கள் இயற்கையால் வாழ்த்தப்பட்டவர்கள்!
எண்ணங்களும்
சிந்தனைகளும், ஒரு அலைபோல சமூகத்தில் பரவக்கூடியவை. அதற்கு அவை செயலாக வெளிப்படும் வீரியத்தைப் பெற்றிருக்க வேண்டும். நிகழும் ஒரு செயல்,
அதன் உள்ளுறைந்த எண்ணங்களும் சிந்தனைகளும் கொண்டிருக்கும் வீரியத்திற்கேற்ப
சமூக மனதில் தாக்குதலை ஏற்படுத்துகிறது. அதாவது அந்தச் செயல் வெளிப்படும் சமூகத்தில் உள்ள மனிதர்களின் மனதில் எண்ணங்களாகவும்
சிந்தனைகளாகவும் விளைகிறது. முதல்
சிந்தனையின் வீரியம் சமூக மனதில் அது பெறும் வீரியத்தை முடிவு செய்யும். அதன்
பின்னர் ஒரு தொடர் இயக்கமாக அந்தச் செயல் அச்சமூகத்தில் நிகழும். அந்த சிந்தனைக்கு மாற்றான ஒரு சிந்தனை எழுந்து செயல்படும்வரை
அது சமூகத்தில் தேவகணங்களாகவோ ராட்சஸர்களாகவோ மனித மனங்களுக்குள் அலைந்து திரிந்து
கொண்டிருக்கும்.
மனதில்
எத்தகைய எண்ணங்கள் நிகழவேண்டும் என்பது மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை. அவை முழுக்க முழுக்க,
முன்பே கூறியவாறு, அந்த மனம் அந்த மனிதனில் உருவான
காலந்தொட்டு தன்னை எவ்வாறு வடிவமைத்துக்கொண்டுள்ளது என்பதைப் பொறுத்தது. அம் மனிதன் தன் வழ்வின் முதல் வினாடி முதல் தன் புலன்களாலும்
அனுபங்களாலும் கல்வியினாலும் சமூகத்திலிருந்து பெற்று தன்னுள் நினைவுகளாக சேமித்து
வைத்திருப்பவைகளின் தன்மையைப் பொறுத்தது. ஆனால் எந்த எண்ணங்கள் செயல்வடிவம் பெற வேண்டும் என்பதை அந்த எண்ணங்களிலிருந்து
விடுபட்ட ஒரு இயக்கத்தால் சாத்தியப்படுத்தலாம்.
எண்ணங்களால் மாசு படாத,
ஆனால் அதே மனதில் விளையும் சிந்தனையின் ஒரு திரியை அந்த விடுபட்ட
இயக்கம் எனலாம். எண்ணங்களிலிருந்து விடுபட விரும்புபவர்
விழிப்புடன் தன்னுள் வளர விட வேண்டிய அந்த சிந்தனையின் அல்லது உள்ளுணர்வின் திரியை
பல்வேறு பெயர்களில் மதங்களும் தத்துவ மரபுகளும் கூறுகின்றன.
(4)
மனதில்
கிளையும் வேரும் விரித்துப் பரவும் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும், மனம் கொண்டிருக்கும் நினைவுகளும் அதில் வந்து சேரும் தகவல்களும்
உணவாக அமைகின்றன. இவ்வாறு பரவும் எண்ணங்களில் ஒரு பகுதி
செயல்களாக வடிவம் எடுக்கிறது. செயல்களாக
வடிவம் பெற போதிய மன சக்தியை பெற முடியாத எண்ணங்கள், மனதில் நினைவுகளை எச்சங்களாக விட்டுவிட்டு
அழிந்து விடுகின்றன. இந்த
எச்சங்கள் வேறு எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் உரமாக மாறி, அவற்றிற்கு அழிந்த எண்ணங்களிலிருந்து மிஞ்சிய சக்தியை அளிக்கின்றன. இந்த இயக்கங்கள் அனைத்தும் மூளையினுள் நம்மால் அறிய முடியாத
நுண்ணிய வேதி இயக்கங்களாகவோ அல்லது மின் இயக்கங்களாகவோ ஓய்வின்றி தொடர்ந்து நிகழ்ந்து
கொண்ணிருக்கக் கூடும்.
மனித
மூளையை அடையும் ஒவ்வொரு தகவல்களும் புதிய எண்ணங்களுக்குக்
காரணமாகின்றன. எனவே செயல்களுக்கும் காரணமாகின்றன.
மனிதன் தன் செயல்களை ஒழுங்கமைக்க விரும்பினால்,
தன் மனதுக்கு என்னத் தகவல்கள் கொடுக்கப்படுகின்றன என்பதிலும், வந்து சேருகின்றன என்பதிலும் மிக விழிப்புடன் இருந்தாக
வேண்டும். விழிப்புணர்வு சேரும் தகவல்களை என்னச் செய்ய வேண்டும் என்னும்
நுண்ணறிவை அழிக்கும். அது இல்லாத பட்சத்தில், தகவல்களும் அவை சார்ந்து எழும் எண்ணங்களும்,
அவற்றின் தகுதிக்கேற்பவும் மனதின் இயல்பிற்கேற்பவுமான நினைவுகளை விட்டுச் செல்லும்.
இவை ஒழுங்கமைவு இல்லாத எண்ணங்களை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கும்.
தகவல்
தொடர்பு தொழில் நுட்பம், மனித
வாழ்க்கையை பல்வேறு தளங்களில் மிகமிக எளிதாக்கியிருக்கிறது. அதே நேரத்தில் உலகெங்கிலிருந்தும் செய்திகளையும் தகவல்களையும்
அதிவேகத்தில் நம்மிடம் சேர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
அந்தத் தகவல்களில் எவற்றை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்பதை
அறியாத பட்சத்தில், தகவல்
தொடர்பு தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை அழிக்கும் ஆயுதமாக மாறி விடுகிறது. இன்று மனிதர்களில் பெரும்பாலானவர்களுக்கு, தகவல் தொழில்நுட்பம் அவர்கள் வாழ்க்கையை எளிதாக்குவதை விட பல
மடங்கு வேகத்தில், அவர்களுக்குத்
தெரியாமலேயே, வாழ்க்கையை
சுமையாக்கிக் கொண்டே செல்கிறது. தொழில்நுட்பத்தால் எளிதாக்கப்பட்ட ஒவ்வொரு மனித
இயக்கமும், அவற்றை உபயோகிக்கும் மனிதர்களின் விழிப்பின்மையால், எண்ணங்களின் மேல் ஆதிக்கம்
இல்லாமையால், வாழ்க்கையின் பிற தளங்களை பலமடங்கு வேகத்துடன் தாக்குதலுக்குள்ளாக்குகிறது.
செய்தி
ஊடகங்களின் இரத்த நாளங்கள் தகவல் தொழில் நுட்பமாகும்.
இன்றைய மிக முன்னேறிய தகவல் தொழில் நுட்பம் சமூகங்களின் நிகழ்வுகளை
உடனுக்குடன் செய்தி ஊடகங்களிடம் முன்வைக்கின்றன.
சமூக நிகழ்வுகள் நேர்மறை மற்றும் எதிர்மறை நிகழ்வுகளின் தொகுப்பு. மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் அடிப்படை இயல்பு தங்களை
ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது. எனவே பெரும்பாலும் ஆபத்துகளை விளைவிக்காத நேர்மறை நிகழ்வுகளின் தகவல்கள் மனிதர்களிடம்
பாதிப்பை செலுத்துவதில்லை. ஆனால்
எவருக்கேனும் துன்பத்தை விளைவித்திருக்கும் அல்லது விளைவிக்கும் சாத்தியமுள்ளவை என்று முன்வைக்கப்படும் எதிர்மறை நிகழ்வுகளும், யதார்த்தத்திலிருந்து விலகியிருக்க உதவும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும்
அவர்களிடம் உடனடி தாக்கத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே செய்தி ஊடகங்கள் எதிர்மறை நிகழ்வுகளுக்கே முக்கியத்துவம்
கொடுக்கின்றன. நேர்மறை நிகழ்வுகள் பெரும்பாலும் ஊடகங்களிடம்
எனவே அவற்றை விரும்பும் மனிதர்களிடமும் சென்று சேர்வதில்லை.
செய்தி
ஊடகங்கள் இப்போது சேவை என்னும் தளத்திலிருந்து மிகமிக விலகி வியாபாரம் என்னும் தளத்தில்
நிலைபெற்றுள்ளன. இந்தத் தளத்தில் அவற்றின் நோக்கம் வியாபாரம்தான். ஆகவே எவற்றை செய்திகளாக அளித்தால் வியாபாரம் தழைக்குமோ அவை மட்டுமே
செய்திகளாக வருகின்றன. அவற்றின்
பொருளாதார இலக்குகளுக்கு பயன்படாத எவையும் அவற்றிற்கு செய்திகள் அல்ல. வியாபாரப் போட்டிக்காக
செய்திகளை பொதுமக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்படி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில்
உள்ளன. எனவே அவற்றின் வழியாக நம்மை வந்தடையும்
செய்திகள் பெரும்பாலும் திரிந்த செய்திகளாகவே இருக்கும்.
தற்போதைய இணைய உலகில் வணிக நோக்கங்கள் இல்லாத இணைய ஊடகங்களும்
உள்ளனதான். ஆனால் பெரும்பாலும் அவைகள் இலவசமாக கிடைக்கும்
தகவல்களையே வெளியிட முடியும். அவை
பெரும்பாலும் பிற ஊடகங்களிலிருந்த பெறப்பட்டத் தகவல்களும்,
அந்தத் தகவல்களின் மேல் அவற்றை அளிப்பவரின் எண்ணங்களும் சேர்ந்த
ஒரு கலவையாக இருக்கும். இது
தவிர, அத்தகைய ஊடகங்கள், அவர்களுக்கேயான கொள்கைகள் உடையவர்களாக இருக்கும் பட்சத்தில், அந்தக் கொள்கைகளுக்கு சார்பான தகவல்களோ அல்லது அதற்கு ஏற்ப திரிக்கப்பட்ட
தகவல்களாகவோ இருக்கும்.
நிகழ்வுகள்
எந்த வடிவத்தில் பொதுவெளிக் கருத்துக்களாக விளைய வேண்டும் என முடிவு செய்யும் இன்னொரு
காரணி அதிகாரங்களுக்கு அடித்தளமாக இருக்கும் அரசியல்.
அவை தொழில் செய்தி ஊடகங்களிலும் ஆதிக்கம் செலுத்தி, எந்த நிகழ்வுகள் எந்த வடிவில் பொது வெளிக்குச் செல்ல வேண்டும்
என்று முடிவு செய்கின்றன. பெரும்பாலும்
நிகழ்வுகளில் எந்த அரசியல் தரப்பின் ஆதிக்கம் ஓங்கியிருக்கிறதோ அந்தத்தரப்பிற்கேற்ப
நிகழ்வுகள் திரிக்கப்பட்டு கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரே நிகழ்வில் இருவேறு அரசியல் தரப்புக்கள் ஆதிக்கம் கொண்டிருந்தால், அவை இரு தரப்புகளலாலும் அவர்களுக்கேற்றவாறு திரிக்கப்பட்டு எதிரெதிர்
கருத்தாங்கங்களாக பொது வெளிக்கு உலவ விடப்படுகிறது.
அந்த கருத்துக்கள் பொதுமக்களைச் சென்று சேரும்போது, அந்த நேரத்தில் அவர்கள் மனம் கொண்டிருக்கும் அரசியல் சார்புநிலைகளுக்கேற்ப
அந்தக் கருத்துருவாக்கங்களின் ஒரு
தரப்பைச் சார்ந்து தங்கள் எண்ணங்களை அடைகிறார்கள்.
உதாரணமாக தொலைக்காட்சிகளில் மிகப் பரவலாக காண்பிக்கப்படும் விவாத மேடைகள். இவை
கருத்துக்களின் எல்லா தரப்புகளையும் கொண்டுள்ளது என்னும் மாயை உருவாக்க பல்வேறு கருத்துக்களைக்
கொண்டவர்கள் விவாதிப்பார்கள். ஆனால் அந்த எல்லாக் கருத்துக்களும் விவாதத்தை ஒருங்கமைத்துச்
செல்பவரின் எண்ண ஓட்டங்களை சார்ந்து மட்டும்தான் இருக்க முடியும். உண்மையில் இங்கு
நிகழ்வது, அந்த விவாதத்தை ஒருங்கமைத்துச் செல்பவர், தன் எண்ணங்களுக்கேற்ப விவாதத்தின்
திசையைத் திருப்பி, தான் எண்ணங்களையே விவாதம் இறுதியில் அடைந்து விட்டதான தோற்றத்தை
ஏற்படுத்துகிறார். அதை பார்க்கும் பல்லாயிரக்கணக்கான மக்களில், சிந்தனைக்கான தகுதியுடைய
மனம் கொண்டவர்கள், அவர்களை அறியாமலே விவாத மேடையில் திசைப்படுத்தப்பட்ட கருத்தியல்களின்
திசையிலேய சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள்
மற்ற மனிதர்களுடனான தங்கள் அன்றடத் தொடர்புகளில், அந்த கருத்தாக்கத்தை மீண்டும் மீண்டும்
முன்வைக்கிறார்கள். பெரும்பாலும் இந்த விவாதமேடையில் திசைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்கள்
அடுத்தக் கட்ட ஊடகங்களில் வரும் கருத்தாக்கங்களை பெருமளவு பாதிக்கின்றன. மொத்தத்தில்
தனி ஒருவரின் எண்ணத்தின் திசை அல்லது அவரது அரசியல் சார்பின் திசை சமூகத்தில் மிகப்பரவலாக்கப்படுகிறது.
ஆக, மனித மனதில் உருவாகும் எண்ணங்களுக்குக் காரணமான நினைவுகளும்
புலன்களின் வழியாகப் பெறப்பட்டத் தகவல்களும்,
உண்மையானவை அல்ல. அவை அனைத்தும் உண்மையின் அல்லது உண்மை நிகழ்வின் சிறு பகுதியின் எதிரொளிப்பு மட்டும்தான். எதிரொளிப்புகள், எதிரொளிக்கும் தளத்தின் இயல்பையும் தன்னுள் கொண்டிருக்கும்.
அந்த எதிரொளிப்பைக் கொண்டு மனித எண்ணங்களும், எண்ணங்களின் வழியாக மனித வாழ்க்கையும் நிகழ்கிறது. நாம் காண்பதும் கேட்பதும் அனைத்தும் மாயை என வேதாந்தம் கூறுவது, வாழ்க்கை வெறும் நிகழ்வுகளின் சிறுபகுதிகளின் எதிரொளிப்பை சார்ந்து இன்னொரு எதிரொளிப்பாக நிகழ்வதைத்தானோ?
பொது
வெளியில் சிந்தனை இவ்வாறு அரிதாகி வரும்போது,
அங்கு புழங்கும் பெரும்பாலான கருத்துருவாக்கங்களும், சற்று வீரியத்துடன் எண்ணங்கள் உருவாகம் மனங்களின் வெற்று எண்ணங்களே. அவை வெறும் மாயை. வெற்று எண்ணங்களே கருத்துக்கள் என்னும் போர்வையில் பொதுவெளியில் புழங்குகின்றன. அவற்றை கருத்துக்கள் என எடுத்துக்கொள்ளும் சமூகம் தன் நிலையில்
தொடர்ந்து தாழ்ந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
இங்குதான் தனி மனித சிந்தனை தேவைப்படுகிறது.
மனித
சமூகத்தின் மேல் ஆர்வம் உடையவர்களாக இருந்தால்,
இன்னொரு மனித சிந்தனையின் உச்சம் பலிகளையும் இரத்தத்தையும் அல்லாமல்
உன்னதத்தை அடித்தளமாகக் கொண்டு எழும்ப வேண்டும் என
விரும்பினால், நாம் அனைவரும் தனிமனித சிந்தனைக்கான விழைவுகளை நம் மனதில் உருவாக்கியாக வேண்டும். சிந்தனைகள் என்று நம்மை வந்தடையும் வெற்று எண்ணங்களை, மேலும் எண்ணங்களாக நம் மனதினுள் பெருக்கிக் கொள்ளாமல் சுய சிந்தனையின்
மூலம் நம் கருத்துருவாக்கங்களை அடைய
வேண்டும். இந்த இயக்கம் ஒன்றினால் மட்டும்தான், இப்போதைய சூழ்நிலையில் அழிவை உருவாக்கும், பொதுவெளியில் சிந்தனைகளாகப்
புழங்கும் எண்ணங்களின் அழிவு சக்தியை எதிர்கொள்ள முடியும். தனிமனித சிந்தனை குறைந்தப்பட்ச அளவை எட்டும்போது, பொதுவெளியில்
உண்மையான சிந்தனைகள் தளிர்க்கத் தொடங்கும்.
மனித இனம் உன்னதத்தின்
மேல் எழும்பி நின்று கொண்டாடலாம்.
இது
ஒரு வெறுங்கனவாக இருக்கலாம். எல்லாக் கனவுகளும் விழைவுகளின் எதிரொளிப்பே!
கனவுகள் விழைவுகளை இன்னும் பெருக்குகின்றன. இந்தக் கனவு விழைவுகளாகப் பெருகட்டும். விழைவுகள் எண்ணற்ற கனவுகளை உற்பத்திச் செய்யட்டும். விழைவுகளும் கனவுகளும் சேர்ந்து செயல்களாகட்டும். உன்னதம்
அதன் மேல் நிகழட்டும்!