சிறகு இணைய இதழில் 07-02-2015 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை.
முதலாளித்துவம், அதன் சமநிலைப்புள்ளியை
அடைந்த பின் போட்டியினால் மட்டுமே முன்னேற முடியும். சமநிலைப்புள்ளியை முதலாளித்துவம்
கடந்து சுமார் 30 வருடங்களாவது ஆகி விட்டது. அதன் பின் பல்வேறு தரப்புகளின் போட்டிகளினால்தான்
அதன் இருப்பை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஒரே வகையான பொருட்களை உற்பத்தி செய்பவர்களிடையே,
தேவையின் பெரும்பங்குக்கான உற்பத்தியின் போட்டி. தேவையை பூர்த்தி செய்தபின், நுகர்வோரிடம்
செயற்கையாக ஒரு போதாமையை உருவாக்கி, அதன் மூலம் தங்கள் உற்பத்தியின் வளர்ச்சியை பேணுவதற்கான
போட்டி. போதாமை மனப்பான்மையை நுகர்வோரிடம் உருவாக்க, அதற்கு தேவையான அதிகாரத்திற்கான
போட்டி. உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்களை குறைந்த செலவில் கவர்வதற்கு தேவையான
அதிகாரத்திற்கான போட்டி. எல்லா விதமான சமூக அறங்களையும், உற்பத்தியின் வளர்ச்சிக்காக,
அதற்கு ஆதாரமான அதிகாரத்திற்காக, தியாகம் செய்யும் மனப்பான்மை. தங்கள் உற்பத்திக்காக,
சமூகத்தின் அதிகாரமற்ற வர்க்கத்தை, எவ்வித அற உணர்வும் இல்லாமல் சுரண்டும் போக்கு.
முதலாளித்துவத்தின் சுரண்டலினால் பாதிக்கப்பட்ட அதிகாரமற்ற வர்க்கம், அதிகாரத்திற்காகவும்,
அதன் மூலம் பிறர் சுரண்டலிலுருந்து தம்மை பாதுகாக்கவும், பிற வர்க்கங்களின் அதிகாரத்தை
பறித்து அதன்மூலம் அவர்களை சுரண்டவும் முயலும் முயற்சிகள். உற்பத்தியின் பெயரால், பொருளாதார
முன்னேற்றத்தின் பெயரால், இயற்கை பொருட்களை அளவுக்கதிகமாக நுகரச் செய்து, அதன் மூலம்
இயற்கையின் சமன் நிலையை குலைத்து, இயற்கை பேரழிவுகளுக்கு காரணமாக இருத்தல். ஆம்! ஒற்றைப்பேரியக்கமாக
முன்னேறி செல்லும் முதலாளித்துவ பொருளாதாரத்தின், எதிர்மறை உள் இயக்கங்களிலும் வெளிப்புற
பாதிப்புகளிலும், இவை மிகச்சிலவை மட்டுமே.
இன்றைய உலகில் எல்லா அரசாங்கங்களும்,
அவை எத்தகைய கொள்கை போர்வையினுள் இருந்தாலும், அவை அனைத்தும் முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகளே.
எனவே அவற்றில் ஒன்றை மட்டும் சாடி, மற்றொன்றை தூக்கிப்பிடிப்பதில் எவ்விதமான அர்த்தமும்
இல்லை. ஏனெனில், எந்த அரசாங்கமும் இயங்க முழுமுதல் தேவை ஆரோக்கியமான பொருளாதாரம். இங்கு
ஆரோக்கியம் எனக்குறிப்பிடப்படுவது, வெளிப்புறமான தோற்றத்தை மட்டுமே. அம் பொருளாதாரத்தினால்
மட்டுமே, அந்த நாட்டின் சமூக்கங்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதாவது
அதிகாரமும் பொருளாதாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அதிகாரம் இல்லையெனில், அது
இல்லாத தரப்பின் பொருளாதாரம் அழிந்து விடும். பொருளாதாரம் ஆரோக்கியமாக இல்லாவிடில்,
அந்த பொருளாதாரத்தின் ஆதிக்க சக்தியான அதிகாரமும் அழிந்து விடும். நாடுகளுக்கிடையேயான
பொருளாதார போட்டிகளை இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அவற்றுக்கான காரணமும் தேவையும்
மிக எளிதாக புரியலாம்.
அதே வேளையில், அதிகாரம்
எப்போதும், பண்படாத மனதில், அகங்காரத்தையும் சேர்த்தே கொண்டு வரும். அதிகாரம் அகங்காரத்துடன்
சேரும்போது அது எப்போதும் அழிவையும் கூட கொண்டு வரும். அதிகாரம் எப்போதும், எல்லா இடங்களிலும்
சுரண்டலில் ஈடுபடுவது இதனாலேயே. சுரண்டலுக்கு தகுதியான கொள்கை விளக்கங்களையும் மிக
எளிதாக அதிகார தரப்பினால் முன் வைக்கப்பட்டு, அந்த விளக்கங்கள் அந்த அதிகாரத்துக்குட்பட்ட
சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட வைக்கப்படும். அத்தகைய சுரண்டல்களின் தன்மை, அதை
எதிர்கொள்ளும் சமூகத்தின் எதிர்ப்பு சக்கதியை பொறுத்தது. எதிர்ப்புசக்தி அறவே இல்லாத
சமூகங்கள், அதிகார வர்க்கத்தால், அது எந்த கொள்கை போர்வையில் இருந்தாலும், முழுமையாக
சுரண்டி அழிக்கப்படும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அதிகரிக்க, சுரண்டலின் தாக்கமும்
குறையும். ஆனால் இரு பக்கங்களிலும் அதற்கான களப்பலிகளுடன். மிகத்தன்முனைப்புள்ள தலைமையை
கொண்டிருக்கும் சமூகங்கள், அந்த எதிர்ப்பை வெற்றிக்கரமாக எதிர்த்து நின்று, அதிகார
வர்க்கத்தின் சுரண்டலை இல்லாமல் செய்யும். அதேநேரத்தில், தலைமையின் முனைப்பின் காரணமாக,
அதிகாரவர்க்கத்தையே சுரண்ட ஆரம்பிக்கலாம். அதிகார வர்க்கமும், அதன் நன்மைக்காக ஒரு
சமன்நிலையை அடையும்வரைக்கும் அத்தகைய சுரண்டலை அனுமதிக்கவும் செய்யலாம்.
தன் முனைப்பின் காரணமாக,
சமூகத்தின் தலைமையை அடையும் தனிமனிதன் அல்லது, தலைமைக்குழு, அந்த சமூகத்துக்கு அதிகார
மையத்தின் சுரண்டலிலிருந்து பாதுகாப்பை அளிக்கும் அதே நேரத்தில், பண்படாத மனதை உடைய,
முழுமை நோக்கில்லாத தலைமையினாலும் புதிதாக கிடைத்த அதிகாரத்தினாலும், அந்த சமூகத்தையே
சுரண்டத் தொடங்கும். இதனை அறிவதற்கு நாம் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. உலகெங்கும்
அதிகார மையத்தை எதிர்த்து சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த எந்த இயக்கங்களும்,
அதன் குறிக்கோளில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தபின், தான் சார்ந்த, தன் போராட்டத்துக்கு
அடித்தளமான சமூகத்தையே சுரண்டவதை கண்கூடாகவே நாம் தினம்தோறும் அறிந்து வருகிறோம். இந்தியாவின்
சுதந்திரத்திற்கு பின், காங்கிரஸ் இயக்கத்தை கலைத்து விட வேண்டும் என்னும் காந்தியின்
விருப்பத்தை, இந்த பின்னணியில் பார்க்கலாம்.
முதலாளித்துவம் உலகின் மேல்
தொடுக்கும் எதிர்மறை விளைவுகளை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், பூமியின் இயக்கத்தை குறித்தும்,
பூமியில் நிகழும் பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை இயக்கத்தை குறித்தும் ஒரு குறைந்த
பட்ச புரிதல் தேவைப்படலாம். மனிதர்களாகிய நாம், நம்மை குறித்து எத்தகைய உயர்வான எண்ணங்களைக்
கொண்டிருந்தாலும், மனிதர்கள் பூமியில் வாழும் ஒட்டுண்ணிகளே. அதுவே உண்மை. பூமியில்
இருந்து உருவாகி, பூமியை நுகர்ந்து, பூமியினுள் அழிந்து செல்லும் எளிய உயிரினம். பூமியின்
ஒரு அங்கம்!
பூமியில் நிகழும் எண்ணற்ற
வகையிலான வாழ்க்கைகளில், மனித வாழ்க்கை ஒரு சிறு துளி மட்டுமே - அந்த எண்ணற்ற வாழ்க்கைகளில்,
மனித வாழ்க்கை சற்று உயர் தளத்தில் இருந்தாலும்! பூமி என்பது அதில் நிகழும் அந்த எண்ணற்ற
வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுதி. மிகவும் மேல் தளத்தில் இருந்து பார்த்தால், பூமியில்
நிகழும் ஒவ்வொரு வாழ்க்கையும், பூமியை நுகர்ந்து, அந்த நுகர்வின் வெளிப்பாடாகவும்,
கழிவாகவும், அது நுகர்ந்த அதே அளவு பொருட்களை பூமிக்கு திரும்ப அளிக்கும். மனித வாழ்க்கையும்
இதற்கு விதி விலக்கல்ல. ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்வும், பூமியை நுகர்ந்து திரும்ப அளிக்கும்
பொருட்கள், மற்றொரு உயிர் நிகழ்வுக்கு நுகர்வுப்பொருளாக இருக்கும். இதன் மூலம் பூமியின்
இயக்கம் சமன்நிலையுடன் நிலை நிறுத்தப்படுகிறது. அதாவது, பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும்,
இயற்கை விதிப்படி நிகழும்போது, மற்ற சில உயிரினங்களுக்கு தேவையானவற்றை அளிப்பதாக இருக்கும்.
இதையே இன்று உணவுக்கண்ணி (Food Chain) என்று நாம் மாணவர்களுக்கு பயில்விக்கிறோம்.
(உணவுக்கண்ணி என்பதை உணர்வு பூர்வமாக பயிலும் எந்த மாணவர்களும், அவர்கள் வாழ்நாளில்
எந்த உயிரினங்களுக்கும் எதிராக எதையும் செய்ய முடியாது. ஆனால் அத்தகைய உணர்வு பூர்வமான
கல்வி அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அளிக்கும் கல்வி முறையும் தற்காலத்தில் இல்லை.
எனவே அதை வெறும் ஒரு தகவலாகவே, மற்ற அனைத்தையும் போல, மாணவர்கள் படித்து மறந்து விடுகிறார்கள்)
மனித வாழ்க்கையின் நுகர்வும்,
தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அதாவது பிற
உயிரினங்களின் நுகர்வின் வெளிப்பாடுகளையும் கழிவுகளையும் தமது நுகர்வாக கொண்டும், மனித
வாழ்க்கை நிகழ்வுகளின் கழிவுகள், பிற உயிரினங்களின் நுகர்வாகவும் இருந்து வந்தது. தொழில்
புரட்சியும், அதன் விழைவாக உருவாகி வந்த முதலாளித்துவமும், அதன் எதிர்மறை விளைவாக,
மனித உயிர் நிகழ்வை உணவுக்கண்ணியிலிருந்து சற்று பிறழ வைத்தது. அதாவது, மனிதன் உருவாக்கும்
கழிவுகள், பிற உயிர்களுக்கும் எவ்வகையிலும் பயன்படாத வெறும் கழிவுப்பொருட்களாக தங்கவும்,
மனிதனுக்கான நுகர்வுக்காக, பிற உயிரினங்களின் வாழ்வாதாரங்களை அளவின்றி அழிப்பதன் மூலமும்,
உணவுக்கண்ணியில் மனித உயிரினத்தால் பிளவு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த பிளவு பூமியின்
உயிர் நிகழ்வுகளின் சமன் நிலையையும் குலைக்கத்தொடங்கி விட்டது.
முன்பே பார்த்தபடி, முதலாளித்துவத்தின்
குறிக்கோள், முதலீட்டிலிருந்து உபரி பணத்தை உருவாக்குவது. அது உபரி உற்பத்தியின் மூலம்
நிகழ்கிறது. உற்பத்தி நிகழ வேண்டுமானால், அதற்கேற்ற நுகர்வு இருந்தாக வேண்டும். நுகர்வு
தேக்க நிலையை அடையும்போது, முதலாளித்துவம், அதன் சுய லாபத்துக்காக நுகர்வை பல்வேறு
வழிகளில் தூண்டுகிறது. நுகர்வை தூண்டுவதன் முதல் வழி விளம்பரம். மனதை தூண்டும் விளம்பரங்களின்
மூலம், எளிய மனித மனங்களின் உள் மனதில் தாக்குதலை தொடுத்து, அதன் மூலம் நுகர்வை உருவாக்கி,
அந்த நுகர்வின் வழியாக பிற உயிரினங்களுக்கு பயன் இல்லாத கழிவுகளை உருவாக்குகிறது. கழிவுகள்
எந்த உயிரினங்களாலும் உபயோகப்படுத்தாமல் சேரும்போது, அவை நச்சுப்பொருட்களாக உருமாறி,
பூமியின் உயிர்ப்புத்தன்மைக்கு எதிரான செயல்களை விளைவிக்கின்றன. அதன் மூலம் பூமியை
சார்ந்து வாழும் உயிரினங்களின் அழிவுக்கும் காரணமாகின்றன.
நுகர்வுக்கு, மனிதர்களின்
நுகர்வு விழைவு மட்டும் போதுமானது அல்ல. அந்த நுகர்வு பொருட்களை பெறுவதற்கான பணமும்
அவசியம். அதாவது, மனித மனங்களில் நுகர்வின் விழைவு உருவாக்கப்படும்தோறும் அந்த நுகர்வுக்கு
அவசியமான பணத்திற்கான விழைவும் மறைமுகமாக உருவாக்கப்படுகிறது. எளிய மனங்களில், பணத்திற்கான
விழைவின் நேர்மறை பாதிப்பாக, மனிதர்களிடம் ஒரு தன்முனைப்பு உருவாகிறது. அத்தகைய தன்முனைப்பு
அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வெளிப்படையான நோக்கத்தை அளித்து, அந்த நோக்கத்துக்காக வாழ்க்கையை
அர்ப்பணிக்கச் செய்கிறது. அதேநேரத்தில், பணத்திற்கான விழைவின் எதிர்மறை விளைவாக, தன்முனைப்பை
அடைய முடியாத மனங்கள், குறுக்கு வழியை எதிர்நோக்குகின்றன. அதன் மூலம் சமூகத்தின் அறப்பிறழ்வுகளும்,
ஒருவரை ஒருவர் சுரண்டுவது போன்ற அவலங்களும் மற்றும் இவை போன்ற சமூக வியாதிகளும், அவை
எப்போதுமே ஓரளவுக்கு இருந்திருந்தாலும், மிகப்பெரிய அளவில் சமூகத்தின் எல்லா நிலைகளிலும்
பரவுகின்றன. விளைவாக சமூகங்களின் சமநிலை குலைவுகளும்!