Saturday, September 27, 2014

அரட்டை

சிறகு இணைய இதழில் 20-09-2014 வெளியிடப்பட்ட கட்டுரை.

தாங்கள் முற்றிலும் தனிமையானவர்கள் என்பதை உணர முடியாதவர்களுக்கு, தனிமை ஒரு கடும் தண்டனை. அரட்டை, தனிமையை மறைக்கும், மறக்க வைக்கும் கருவி. தனிமையை எதிர்கொள்ள திராணி இல்லாதவர்களுக்கான வாழ்க்கைத்துணை. அரட்டைக்கு தங்களை ஒப்புக்கொடுக்காதவர்கள் மிக சிறுபான்மையினரே. எனில், தனிமையை அஞ்சாதவர்களும் சிறுபான்மையினரே. அரட்டைக்கு தேவைப்படுபவர் முன்பின் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. அதாவது, முன்பின் தெரியாதவர்களையும் ஒருவருடன் ஒருவரை தொடர்புகொள்ள வைக்கும், நண்பர்களாக்கிக் கொடுக்கும். நண்பர்களை, பகைவர்களாக்கவும் அதனால் முடியும்.

சமூகமும் மொழியும் தோன்றிய காலத்திலேயே அரட்டையும் தொடங்கியிருக்க வேண்டும். அரட்டை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே, எந்த ஒரு குறிப்பிட்ட பொருளையும் குறித்து அல்லாத, எந்த ஒரு இறுதி நோக்கமும் இல்லாத உரையாடல். ஆம் குறிப்பிட்ட நோக்கம் இல்லாத எல்லா உரையாடல்களையும் அரட்டை என வகைப்படுத்தலாம். எனவே அரட்டையினால் பயன் உண்டா என்பதற்கு அறுதியான பதில் எதுவும் இல்லை. நேரத்தைக் கொல்வதை தவிர, தனிமையை துரத்துவதைத் தவிர. அரட்டைச் செல்லும் திசைக்கேற்ப, அரட்டையில் பங்கேற்பவர்களின் அறிதல் வளர்தலோ அல்லது துண்டாடப்படுதலோ நிகழும். அது எவ்வாறாக ஆயினும், தனிமை இல்லாமல் செய்யப்படும். தனிமையை அஞ்சுபவர்களுக்கு அறிதல் குறித்து என்ன அக்கறை!

குறிப்பிட்ட நோக்கம் இல்லை என்பதே அரட்டை எதைக்குறித்தும் இருக்கலாம் என்றாகிறது. அல்லது எதைக்குறித்தும் இல்லாமல் இருக்கலாம் என்றும் ஆகிறது. ஆனால், தொடங்கப்பட்ட ஒரு அரட்டை பெரும்பாலும், முதலில் சொல்லப்பட்ட ஒரு பொருள் விரியும் பல திசைகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட திசைகளிலோ விரிந்து செல்லலாம். அறிவார்ந்த தளத்திலோ, முட்டாள்தனமான தளத்திலோ அல்லது இரண்டுக்கும் இடைப்பட்ட தளத்திலோ இருக்கலாம். குறிப்பிட்ட நோக்கம் என ஒன்று இல்லாததாலும், சிந்திக்கும் தன்மையும் பொதுவெளியில் மிக அரிதாகவே இருப்பதாலும் அரட்டை பெரும்பாலும் அறிவார்ந்த தளங்களில் நிகழ்வதில்லை. எனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அறிவார்ந்த அரட்டைகளும் நிகழ்வதுண்டு.

அரட்டை எவ்வாறாக இருந்தாலும், கருத்துகளை, சிந்தனைகளை, நோக்கங்களை, எண்ணங்களை சமூகவெளியில் பரப்பவுதில் தவிர்க்க முடியாத இடத்தைப்பெற்றுள்ளது. எந்த ஒரு சமூக நிகழ்வுகளும் அரட்டையின் மூலமே பெரும்பாலும் பொதுவெளியை அடைகிறது. எந்த கருத்துகளும், கருத்துலக தளங்களில் நிகழ்ந்த பின் அரட்டை மூலமே பொதுவெளியில் அதன் இடத்தை அடைகிறது. அதாவது ஒரு சமூகத்தில் நிகழும் எல்லா கருத்தியல் மாற்றங்களும், கருத்தியல் உலகில் நிறுவபட்ட பின், அரட்டை மூலம் சமூகத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அரட்டைகள் மூலம் கருத்துகள் தவிர்க்க முடியாமல் பெருமளவு திரிபும் அடைகிறது. எந்த கருத்தும் சமூகத்தின் வெவ்வேறு தட்டுகளை சென்றடையும்போது, அந்தந்த தட்டுகளின் சிந்தனையின் அல்லது சிந்தனையின்மையின் தன்மைக்கேற்ப, அரட்டை நிகழும் தளத்திற்கேற்ப திரிபு பெற்று விடுகிறது. 

சமூக இயக்கத்தில் அரட்டை இன்றியமையாத பங்கு பெறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், எந்த சமூகத்தில் அரட்டை அறிவுசார் தளங்களில் பெருமளவு நிகழ்கிறதோ அந்த சமூகம் பிற சமூகங்களை விட நாகரீகம் அடைந்ததாக இருக்கும். அங்கு கருத்துலக நிகழ்வுகள் பொது வெளிக்கு மிகக் குறைந்தபட்ச திரிபுடன் மட்டுமே சென்றடையும். கருத்தாக நிலைபெறும் அற உணர்வுகள், அரட்டை மூலம் செயல்களாக சமூகத்தில் தன் இடத்தை அடையும். அந்த சமூகம், குறிப்படத்தக்க அளவில் நேர்மையுடையதாக இருக்கும்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்புவரை அரட்டை நிகழ்வதற்கு, அதில் பங்கு பெறுபவர்கள் அருகருகே இருந்தாக வேண்டியிருந்தது. இன்றைய இணையம் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களின் மூலம் பொதீக தொலைவு இல்லாமல் ஆகி விட்டது. ஒருவர் எங்கிருந்தாலும், இணைய வசதியும், ஒரு மடிக்கணினியோ அல்லது 'ஸ்மார்ட' செல் பேசியோ இருந்தால் ஒத்த வசதிகளுடைய எவருடனும் அரட்டை அடிக்கலாம். உலக நிகழ்வுகளும்,கருத்துலக நிகழ்வுகளும் உடனடியாக அரட்டையாக மறுவடிவம் பெற்று விடுகிறது - அரட்டைக்கான திரிபுகளுடன்!

இன்றைய காலகட்டத்தில், மனிதன் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மிக பாதுகாப்பாக இருக்கிறான். ஆனால்அதே அளவுக்கு தனிமையிலும் உழலுகிறான் என்றே தோன்றுகிறது. அதாவது அரட்டை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து விட்டது. தற்போதைய தொழில் நுட்பத்தில் அரட்டை அடிப்பதற்கு, முகத்திற்கு முகம் நோக்க வேண்டியதில்லையே. டிவிட்டர், முகநூல், கூகிள் ப்ளஸ், வாட்ஸ்அப், இன்னும் என்னென்னமோ.

தொழில் நுட்பத்தின் மூலம் நிகழும் அரட்டைகள், ஜனநாயக நாட்டில் ஆட்சியையே மாற்றியமைக்கும் அளவுக்கு வலிமை பெற்று விட்டது. ஆம், கருத்துகள் தொழில்நுட்பத்தின் மூலம் நிகழும் அரட்டைகள் மூலம், மிக வேகமாக பெரும்பான்மையை சென்று அடைகிறது. அது அரட்டை என்னும் காரணத்தால், பொதுவெளியில் அதன் பயணமும் மிக மிக சிறிய கால அளவையே கொண்டிருக்கும். மிகசரியான முறையில் பரப்பிவிடப்படும் அரட்டை, அதன் குறுகிய வாழ்நாளுக்குள் மிகப்பெரிய சமூக மாற்றங்களையும் ஏற்படுத்த வல்லது. அதன் பின் அந்த மாற்றங்களை குறித்த எதிர்மறை கருத்துகளையும்! சீனா போன்ற சில நாட்டு அரசுகள், அரட்டை அடிக்கும் சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளமை, அது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பதை தெளிவாக்குகிறது.

தொழில்நுட்பம் அளிக்கும் வசதிகளின் மூலம் அரட்டையை நிகழ்த்துவது, பெரும்பாலும் தங்களை கல்வி கற்றவர்கள் எனக்கூறிக்கொள்ளும் சமூகப்பிரிவினரே. அவர்கள் உண்மையில் கல்வி கற்றவர்களாக இருந்தால், தனிமையை அஞ்சுவது ஏன்? கல்வி அச்சத்தை தொலைவில் அல்லவா இருத்தி இருக்க வேண்டும். அல்லது அவர்களின் அரட்டை வேறு   எதேனும் நோக்கங்களுக்காக நிகழ்த்தப்படுகிறதா? புதிய சிந்தனைகள் அந்த அரட்டையின் மூலம் நிகழ்கிறதா? நிகழ்ந்த சிந்தனைகள் அலசப்படுகின்றனவா? அருகமர்ந்து அவதானித்த எந்த அரட்டையும் அவ்வாறு நிகழ்வதாக தெரியவில்லை.

இல்லையெனில் அது நிகழ வேண்டும். நாம் கல்வி கற்றவர்களாக இருந்தால், நம்மிடம் வந்த தொழில்நுடபம், நம்மை கருவியாக கொண்டு அதன் வளர்ச்சிப்போக்கை தொடர்ந்தாக வேண்டும். தொழில்நுட்பம் நம் உணர்திறனை, சிந்தனைத்திறனை இல்லாமல் செய்வதற்கல்ல. மாறாக அவற்றை அடுத்த தளங்களுக்கு எடுத்து செல்லவே உதவ வேண்டும். அதற்கு நம்மிடியே சிந்தனை நிகழ வேண்டும். பரிணாம வளர்ச்சி அறிவியலில் "Mutation" என்றொரு வார்த்தை உண்டு - ஒரு உயிரினத்தின் வாழ்க்கைக்கு தேவையில்லாத அம்சம், அதன் பரிணாம வளர்ச்சியில் இல்லாமல் செய்யப்பட்டு, மிகத்தேவையான அம்சம் புதிதாக உருவாகி வருவது. ஒருவேளை உணரும் தன்மையை, சிந்நிக்கும் தன்மையை தேவைஇல்லை என நம்மால் ஒதுக்கி வைக்கப்பட்டால், அடுத்த தலைமுறையில் அது பரிணாம வளர்ச்சியின் விதிகளின் படி இன்னும் குறையலாம். மாறாக நாம் அதிகமாக உபயோகப்படுத்தும் எந்தெந்த தன்மைகள் அடுத்த தலைமுறையை அடையும் என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையால் மனிதர்களுக்கு அறிவு வழங்கப்பட்டுள்ளது - நம் பரிணாம வளர்ச்சியை முடிவு செய்யும் அளவுக்கு! அந்த அறிவை வெறும் வெட்டி அரட்டையில் வீணாக்குவது, இயற்கைக்கு நாம் செய்யும் துரோகம். துரோகத்துக்கு பதிலாக, அறிவு "Mute" ஆவதற்கும் சாத்தியம் உள்ளது.


தனிமை இருக்கும் இடத்தில்தான் சிந்தனை நிகழ முடியும். எனவே தனிமையை வரவேற்கத் தெரிந்திருக்க வேண்டும். கல்வி நிலையத்துக்கு சென்றோ செல்லாமலோ கல்வியை அடைந்தவர்களுக்கு, தனிமை ஒரு வரம். கல்வியின் துளியையாவது அடைந்தவர்கள், தனிமையை வெறுக்க முடியாது. அவர்கள் அரட்டையில் ஈடுபட்டாலும் தனிமையிலேயே இருப்பார்கள். அவர்களின் அரட்டையில், சற்றேனும் கல்வியின் துளி வெளிப்படும். எனவே அவர்களிடம் சிந்தனையும் நிகழும். அவர்களாலேயே மனித அறிவு "Mute"  ஆகாமல் பரிணாம வளர்ச்சியை அடையும் - மனித இனம் காக்கப்படும்!

blog.change@gmail.com

Saturday, September 13, 2014

கனவு

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலிருந்து, குழித்துறை நிலையத்தில் ஷக்தியும் அவள் அக்காவும் பெற்றோரின் துணையுடன், ஒரு குழந்தைக்கனவு நிகழ்வுகளாக நிகழ்ந்ததன் சுவடுகளுடனும், அது நிகழ்வாக மாறிய அனுபவத்தின் சுமையுடனும் இறங்கினர். சுமை சற்று அதிகம் போலும்! அவர்களால் சுமக்க முடியவில்லை. கனவின் இனிமையையும், நிகழ்வில் இல்லாமல் செய்துவிட்டது அந்த சுமை. ஆனாலும் அனுபவம்தானே கல்வி! சுமை சில நாட்களில் இறங்கி விடும். அனுபவத்தின் நினைவுகளை காலம் முழுவதும் முயன்றாலும் இல்லாமல் செய்துவிட முடியுமா?

இந்த கனவு முதன்முதல் தோன்றியது சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னால். 'நாம டூர் போய் ரொம்ப நாள் ஆயாச்சு. ஆறு வருஷமா கேரளா மலை மேல ஏறி எறங்கிட்டு இருக்கோம். இந்த வருஷம் கொஞ்ச தூரமா டெல்லிவரைக்கும் போயிட்டு வரலாமா?' அப்பாவின் இந்த கேள்வி, ஷக்தியின், அவள் அக்காவின் பயணக்கனவுகளை தொடங்கி வைத்தது. கனவுகள்தானே வாழ்க்கையை வாழவைக்கின்றன. அகாலத்திலிருந்து காலத்திற்கு வாழ்க்கயை உந்தி தள்ளுகிறது. பயணம் கல்வியின் தவிர்க்க முடியாத கிளை. ஷக்தியின், அக்காவின் மனம் சரியான திசையில்தான்  அதன் கற்பனையை விரித்தெடுக்கிறது.

பயணக்கனவை நிகழ்வாக்கும் முயற்சிகளும், திட்டமிடலும் தொடங்கிவிட்டன. பயணம், கல்வியின் நடைமுறையாக இருக்கவேண்டுமானால், அதன் மூலம் பெறும் அனுபவங்களும் எதார்த்தத்தை நோக்கி இருந்தாக வேண்டும். விரும்பினால், ஷக்தி பள்ளி விடுமுறை நாட்களில், விமான பயணத்தின் மூலம் விரும்பிய இடங்களை பார்த்து வரலாம்.. அத்தகைய பயணத்தில் பெறும் அனுபவம் வெறும் மேட்டுமைத்தனத்துடன் மட்டுமே இருக்க முடியும். அந்த அனுபவத்திற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை அனுபவிப்பதற்கும் அதிக வித்தியாசம் எதுவும் இல்லை. பயணம் அதிகபட்ச உலக அனுபவத்தை அளித்தாக வேண்டும். பரந்த அனுபவத்தை, நீண்ட பயணத்தின் நிலத்தோற்றத்தை, இடத்திற்கு இடம் உள்ள வேறுபாடுகளை ..........

அவர்களை சாதாரண ரயில் பயணத்திற்கு தயாராக்க வேண்டும்

'ஒங்க ரண்டுபேருக்கும் வெளையாடுறது பிடிக்குமா? வெளையாட்ட பாக்கிறது பிடிக்குமா?'
'வெளையாடதான் பிடிக்கும். ஏன்?'

'வெளையாடினா ஒடம்பு வலிக்குமே, செரியா வெளையாடலைன்னா தோத்து போகவும் வேண்டிவருமே? தோத்தாலும் பரவாயில்லையா?'

'நாங்க தோக்க மாட்டோம். ஒங்களதான் தோக்க வைப்போம்'

அவர்கள் நம்பிக்கை வாழ்க! நம்பிக்கை அழியாமல் இருக்க வேண்டும். தோற்றாலும், நம்பிக்கை மீண்டும் துளிர்க்க வேண்டும். வெற்றி தோல்வி என எதுவும் இல்லை, அனுபவம் மட்டுமே உண்டு என்னும் தெளிவு பிறக்க வேண்டும். எல்லா அழிவுகளின் எச்சங்களும், புதிய துளிர்ப்புக்கான உரங்களே என்பதை அவர்கள் அறியவும் வேண்டும். அவர்களை உயிர்ப்புடன் இருக்க அவர்கள் சுற்றம் அனுமதித்தால், அல்லது சுற்றங்களின் அழுத்தங்களில் தங்கள் உயிர்ப்பை இழக்காமல் இருந்தால், இந்த நம்பிக்கை எப்போதும் அழியாது. அறிதல் அந்த நம்பிக்கையின் தன்மையை உண்மைக்கு அருகில் எடுத்துச் சென்றுகொண்டேயிருக்கும்.

'அப்ப டூர் நாம ட்ரெயின்லேயே, ஸ்லிப்பர் கோச்சுல போவோம். அதுதான் வெளையாடுறது. நெறைய நாள் ஸ்கூல் லீவு போடலாம். ஃபிளைட்ல போய் சுத்துறது வெளையாட்ட தூர இருந்து பாக்கிறது போலதான். ஸ்கூல் லீவு எடுக்கவும் தேவை வராது.'

'ட்ரெயின்லேயே போலாம்பா. ஸ்கூல் லீவு எடுக்காம போனா, போன மாதிரி இருக்காதே. ரண்டு வாரம் கூட லீவ் போடலாம் தேவிஷா எனக்காக நோட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருப்பா. அக்காக்க ஃப்ரெண்டும் அவளுக்கு நோட்ஸ் எடுத்து வச்சிருப்பா. நாங்க வந்து படிச்சிடுவோம்'

'ரண்டு நாள் ட்ரெயின்ல இருக்கணும். பகல்ல ரெம்ப சூடா இருக்கும். முடியுமா'?'

'போலாம்பா', 'போலாம்பா' கற்பனையின் போதையில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் இருவருக்கும் தெரியவில்லை.

ஷக்தியும் அவள் அக்காவும் படிக்கும் பள்ளியின் நிர்வாகம், ஒரு மலையாள அமைப்பால் நிர்வகிக்கப்படுவது. ஒவ்வோரு வருடமும், ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படும். தோராயமாக, அந்த விடுமுறையில் வருமாறு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டது. அதுவும் பயணத்தேதிகள் முடிந்த பின்னால்! எவ்வாறாயினும் பயணம் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆறு நாட்கள் பள்ளிக்கு போகமுடியாது. அவர்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஆறு நாட்கள் பள்ளிக்கு போக வேண்டியதில்லை. எவ்வளவு பெரிய விஷயம். மகிழ்ச்சி இருமடங்காகியது!

'ஒங்க லக்கேஜ, நானோ அம்மாவோ தூக்க மாட்டோம். ஒங்க பிரச்சன ஒங்களோடது. அதுக்கேத்த மாதிரி ஒங்களுக்கு தேவையான, தூக்க முடிஞ்ச துணிகள மட்டும் எடுத்து வைங்க'
'ட்ரெயின்ல ஏறுனா, ரண்டு நாள் ட்ரெயின்ல இருக்கணும். படிக்க புத்தகம் எதாவது வேணும்னா எடுத்து வச்சிடுங்க. அதையும் நீங்கதான் தூக்கணும்.'
'பத்து நாளுக்கு வீட்டு சாப்பாடு மாதிரி எதுவும் கெடைக்காது. கெடைக்கிறத சாப்பிடணும். இல்லைன்ன வெளையாட்டுல தோத்துப்போக வேண்டியதுதான். எங்களையும் தோத்துப்போக வச்சிடுவீங்க'

'நாம எடம் பாக்க சுத்துறது எல்லாம், பஸ், மெட்ரோட்ரெயின், ஆட்டோ-விலதான். அழுக்கா இருக்கும், நாற்றமாவும், நெருக்கமாவும், புழுக்கமாவும் இருக்கும். அழகு எல்லா எடத்திலேயும் அழுக்குக்கு பக்கத்திலதான் இருக்கும். அழுக்க விட்டுட்டு அழக மட்டும் பாக்கிறதும், வெளையாடாம வெளையாட்ட பாக்கிறதுதான்.'

பயண விதிகள் அவர்களுக்கு விளக்கப்பட்டன. எதிர் கொள்ள சாத்தியமான பிரச்சனைகளும் அறிய வைக்கப்பட்டன. கனவின் சுவையில் விதிகளின் யதார்த்தம் முழுமையாக மனதுக்குள் நுழையவில்லை. எனினும் ஒரு சந்தேகம் மனதின் ஒரத்தில் வெளிப்பட, அதன் எதிரொளி, முகத்திலும் சற்றே விரிந்தது.

'ஒங்களால முடியுமா'

'பாக்கலாம். நீங்கதான் கூட வாரீங்களே' - ஒரு முழுமையான பதிலை கூறி எந்த ஒரு பொறியிலும் மாட்டி விடக்கூடாது என்னும் தெளிவும், பிரச்சனையை அடுத்தவர்கள் மேல் தள்ளி விடும் சாதுர்யமும்(?)  இருவரிடமும் இருந்தது.

குதிரை வண்டியில் கட்டப்பட்டிருக்கும் குதிரைக்கு முன்னால் புல்கட்டு ஒன்றை கட்டி விடுவார்களாம். புல்லை கடிக்க குதிரை நடக்க, அத்துடன் வண்டியும் இழுபட, புல்கட்டும் முன்னால் செல்ல....ஷக்திக்கும், அவள் அக்காவுக்கும் முன்னால் ஒரு புல்கட்டு தெரிகிறது. என்ன, இன்னும் மூன்று வாரங்களில் புல்கட்டு அவர்கள் வாய்க்குள் இருக்கும். கிட்டத்தட்ட சுமார் மூன்று வாரங்களுக்கு, முழுமையாக அவர்களுக்கு கசப்பையளிக்கும் செயல்களையும், 'புல்கட்டை' காட்டியே செய்ய வைக்கப்பட்டனர்.

 'ஷக்தி டெல்லயில நடந்து நடந்து எடம் பாக்க ஹெல்த் வேணும். இன்னைக்கு வீட சுற்றி நீயும் அக்காவம் அம்பது ரவுண்ட் ஓடுங்க, 700 தடவை ஸ்கிப்பிங் பண்ணணுங்க'

 தினமும் இருபத்தைந்து ரவுண்ட் ஒடுவதற்கே சிணுங்கும் ஷக்தியும் அக்காவும், முகத்தில் தோன்றிய சிணுங்கலை மறைக்கவும் முடியாமல் காட்டவும் முடியாமல், 'ஓகே அப்பா' என்ற வார்த்தையுடன் ஓடவும் தொடங்கி விட்டார்கள். ஆச்சரியம்! ஆச்சரியம்!

'ஷக்தி ஸ்கூலுக்கு  ஆறு நாள் மட்டம் போடப்போற. வந்த உடனேயே டெஸ்ட் இருக்கு, இன்னிக்கு டெஸ்ட்டுக்கு படிச்சுட்டு தூங்க போ'

'இன்னிக்கு நெறய படிச்சாச்சு. டெஸ்ட்டுக்கு வந்து படிக்கலாம்'

'டெஸ்ட்டுக்கு படிக்கலைன்னா டிக்கட் கேன்சல் பண்ணிடலாம். டூர் போகண்டாம்'

'செரி, கொஞ்சம் இன்னிக்கு படிக்கிறன். மீதி நாளை படிக்கவா?'

இன்னும் எத்தனையோ மிரட்டல்களுக்கு அடிபணிய வைக்கப்பட்டார்கள். இத்தனைக்கும் காரணம் ஒரு கனவு. அதன் சுவை. மூளையின், மனதின் ஒவ்வொரு பகுதியும் கனவுகளை தோற்றுவிக்க வல்லது. அவர்களுக்கான கனவுகள் தோன்ற வேண்டும். பிறர் கனவுகளை காண்பதை தவிர்க்க வேண்டும். எனில் அவர்களுக்கான வாழ்க்கையையும் வாழ்வார்கள்.

அந்த பயண நாளும் வந்தது. கனவு நிகழ்வாக மாற தொடங்கியது. நிகழ்வுகளின் யதார்த்தம் சிறிது சிறிதாக உருவேற தொடங்கியது. அகாலத்தில் இருந்து காலத்தில் அதன் லீலையை தொடங்கிவிட்டது. அவர்களுக்கான துணிமணிகள் அம்மாவால், அவர்களின் முழு அனுமதியுடன், எடுத்து வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் புத்தக கண்காட்சியில் அவர்களுக்காக அவர்களே வாங்கிய அல்லது வாங்க வைக்கப்பட்ட புத்தகங்களும் எடுக்கப்பட்டன. இருவருக்குமான பயணப்பை தயாராகி விட்டது. அதுவும் அவர்களால் கையாளப்படும் அளவுக்கே, பள்ளி புத்தகச்சுமையில் பாதிக்கும் குறைந்த அளவுக்கே இருந்தது. திருவனந்தபுரம் சென்று, பெற்றோருடன், கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலிலும் ஏறி விட்டார்கள்.

48 மணி நேர பயணம், ஆக்ரா வரை. பல் வேறு கால நிலைகள், நில அமைப்புகள், மக்கள், மொழிகள், அனுபவங்கள்! உறக்கம், விழிப்பு, வேடிக்கை, படிப்பு, உணர்வு, சிந்தனை, அனுபவம்! ஆக்ரா சென்று சேர்ந்தது ஒரு வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை தாஜ்மஹால் மூடி இருப்பார்களாம். யதார்த்தம் ஒன்று மனதில் உதைத்தது. தாஜ்மஹால் அடுத்த நாள்தான் பார்க்க முடியும். ஆக்ரா கோட்டையில் சுமார் இரண்டு மணி நேரம் நடை. ஒரத்தில் பாயும் யமுனை நதியும், அதன் கரையோரமாக தூரத்தில் தெரிந்த தாஜ்மஹாலும் மூளையில் அதுஅதற்கான இடத்தையும் பிடித்து விட்டன. கனவு நிகழ்வாகும்போது, கனவு இல்லாமல் ஆகிறது. நிகழ்வு நினைவாகிறது. நினைவுகள், புதிய கனவுகளின் கருவாகிறது.

நிகழ்வின் யதார்த்தம் ஷக்தியையும் அவள் அக்காவையும் சற்று நிலைகுலையவும் வைத்து விட்டது. மதிய வெயிலில், ஆக்ரா கோட்டையும், நாறும் ஆக்ரா வீதிகளின் வழியாக பேருந்து நிலையத்திற்கு சென்ற நிகழ்வுகளும், அங்கிருந்து மதுரா செல்லும் பேருந்தின் அவல நிலையும், 'குட்கா' வாசனையில் மூழ்கியிருந்த பேருந்து இருக்கைகளும் கற்பனை கோட்டைகளின் மேல் தாக்குதல்களை தொடர்ந்தன. கிருஷ்ணனை குறித்து அவர்கள் அறிந்திருந்தவை, புதிய கனவுகளாக வந்து 90 நிமிட மதுரா பயணத்தையும் சற்றே எளிமையாக்கின. பின் ஆக்ராவிற்கான 90 நிமிட பயணமும் முடிந்து விட்டது. அடுத்த சில நாட்கள் ஆக்ரா, ஜெய்ப்பூர், டெல்லி என கழிந்தது.

டெல்லி சென்று சேர்ந்த அடுத்த நாள், மனகோட்டை முழுமையாக கலையும் நிலைக்கு மிக அருகில் வந்தது.

'அம்மா முடியல, ஹோட்டல்லேயே இருக்கலாம்' கனவுகள் கலையும் வேகத்தில், நிகழ்வுகளின் யதார்த்தம் முதலில் ஷக்தியின் அக்காவை தாக்கியது. எட்டிப்பார்த்த காய்ச்சலை, கையுடன் கொண்டு வந்திருந்த மருந்துகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சற்றே குறைவான தீவிரத்துடன் அன்றைய பொழுது கழிந்தது. இருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பின் தீவிரம் நிகழ்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் மூன்று நாட்கள் டெல்லியிலும் நல்ல படியாக கழிந்து, சென்னைக்கு ரயிலும் ஏறி விட்டார்கள். பின், சென்னையிலிருந்து வீடு நோக்கியும்.
குழித்துறை நிலையத்தில் இறங்கிய போது, கனவு முழுமையாக முடிந்து விட்டது. நினைவகளாக எஞ்சிய அனுபங்களுடன்.

'ஷக்தி, அடுத்த டூர் எங்க போலாம்'

'இனி எங்கயும் போகண்டாம்' கனவு நிகழ்ந்ததில் ஏற்பட்ட சலனங்களும், நிகழ்வுகளின் யதார்த்தமும் குழந்தைகளை பாதித்திருக்க கூடும். சில நாட்களுக்கு யதார்த்தத்தின் சுமை அவர்கள் மனதில் இருந்து கொண்டிருக்கும். சுமை இறங்கியபின், நினைவுகள் கனவின் சுவையை மீட்டளிக்க கூடும்.


அவர்கள் குழந்தைகள். நிகழ்வுகளின் நினைவுகள் அவர்கள் மனதின் மேல் பரப்புக்கு எழுந்து வரும். நினைவுகள் சூல் கொண்ட கனவுகள் முளைத்துக்கொண்டே இருக்கும். அதனால் உந்தப்பட்ட வாழ்க்கையும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஆனால் கனவுகளின் கருப்பை மலடாக்கப்படாமல் இருக்க வேண்டும்

பின் குறிப்பு;

எழுதும் முறையை சற்று மாற்றி ஒரு முயற்சி. இதை சிறுகதை என்று கூற முடியுமா? வடிவ அமைப்புக்கு தன் கருத்துகளை அளித்து உதவிய ரகுநாத் -க்கு நன்றிகள்.

blog.change@gmail.com