நானும் ஒரு போராட்டத்தில்
கலந்து கொண்டு விட்டேன். என் ஜனநாயக கடமையை செய்து விட்டேன். அல்லது தொடங்கி விட்டேனாக
இருக்கலாம். ஜனநாயகம் என்றால் வெறும் வாக்களித்து, சிலரை பதவியில் அமர்த்த நாட்டின்
எளிய மக்களும் ஒரு காரணமாக இருப்பது மட்டும்தானா? அவ்வாறு பதவியில் அமர்ந்தவர்களிடம்,
எவ்வாறு தான் ஆளப்படப்படவேண்டும் என்று கோருவதும்தானே? அவ்வாறு அனைவரும் அனைத்து திசைகளிலும்
கோரும்போது, கோரல்களின் குரல்கள் முட்டி மோதி, ஒரு பொதுக் குரலை முன்வைப்பதும், அதை
ஐனநாயகத்தின் குரலாக முன்னிலைப்படுத்துவதும் ஜனநாயக கடமைதானே? வெறும் வாக்களித்து விட்டு
என் ஜனநாயக கடமையை முடித்துவிட்டேன் என எவ்வாறு பெருமை அடைய முடியும். நானும் ஜனநாயக
கடமையின் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்று பல வருடங்களாக, என் மனதுக்குள்
மட்டும், முயற்சித்து கொண்டிருக்கிறேன். கடைசியாக, 2014-ம் வருடம் ஜூலை 31-ம் நாள் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பு, போராட்டத்திற்கு
முந்தைய நாள், ஒரு துண்டுப்பிரசுரத்தின் வழியாக என் வீட்டிற்கு வந்தது. 'மேற்கு தொடர்ச்சி
மலை, விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்' என்னும் அமைப்பு, கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை
தாலுகா அலுவலகம் முன்பாக, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் போராட்டம். அந்த நான்கு
அம்சங்களுமே எனக்கும் முக்கியமான கோரிக்கைகளாகப்பட்டன. அவற்றை உங்களுக்கும் நான் தெரிவித்தாக
வேண்டும்.
1. குமரி மாவட்டத்தில் திணிக்கப்பட்டுள்ள
தனியார் காடுகள் சட்டத்தை ரத்து செய்ய(அல்லது விலக்களிக்க) வேண்டும்.
2. குமரி மாவட்டத்தில்,
மேற்கு தொடர்ச்சி மலையில் பாறைகள் உடைப்பதற்கு அமலாக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நிரந்தரமாக்க
வேண்டும்
3. சமவெளி பகுதியில் உள்ள
பாறைகளை உடைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்
4. ரப்பர் விலை வீழ்ச்சியை
கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றில் கோரிக்கை (1) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு
எதிரானதாகவும், கோரிக்கைகள் (2) மற்றும் (3) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதரவானதாகவும்,
கோரிக்கை (4) உங்களுக்கு முற்றிலும் தொடர்பில்லாத ஒன்றாகவும் தோன்றலாம். ஆனால் நானோ
(1) மற்றும் (4) -ஆல் நேரடியாக பாதிக்கப்பட்டவனாகவும், (2) மற்றும் (3) -ல் சுற்றுச்சூழல்
மூலம் பாதிக்கப்பட்டவனாகவும் உள்ளேன். ஆகவே என் உணர்வுகள், உங்கள் பார்வைகளிலிருந்து
விலகியிருக்கலாம். நமது கொள்கைகளும் நோக்கங்களும், நம் புலன்கள் வெளிஉலகத்தை எவ்வாறு
உணர்கின்றன என்றும், அந்த உணர்வை நம் மனம் எவ்வாறு எதிர்கொள்கிறது எனபதையும் பொறுத்துதானே
அமைகின்றன!
நான் போராட்டத்தில் கலந்து
கொண்டு விட்டேன். போராட்ட கோரிக்கைகளில் ஒன்று, பொது புத்திக்கு, சுற்றுச்சூழலுக்கு
எதிரானதாக தோன்றக்கூடும். ஆனால் நான் அதை ஆதரிக்கிறேன். ஏன் என்று கூறுவது என் கடமைதானே.
என் கடமையை நிறைவேற்ற முயல்கிறேன். சற்று பொறுமையாக வாசியுங்களேன்.
கன்னியாகுமரி மாவட்டம்,
தமிழ்நாட்டில், சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள் அடர்த்தி அதிகமான மாவட்டம். இதற்கு
இங்கு நிகழும் தட்பவெப்ப நிலையும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளை பெறுவதால்
நடைபெறும் (நடைபெற்ற!?) விவசாயமுமே காரணமாக இருக்க முடியும். விவசாயத்தில் கடந்த சில
பத்தாண்டுகளாக ரப்பர் விவசாயம் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின்
மேற்கு பகுதியின் பொருளாதாரம், முழுமையாக ரப்பர் விவசாயத்தையே அடிப்படையாக கொண்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதியிலும், அடிவாரத்தை ஒட்டிய மலைச்சரிவுகளிலும்
ரப்பர் விவசாயம் பெருமளவில் செய்யப்படுகிறது.
1979-ம் ஆண்டு முதல்
2002-ம் ஆண்டுவரையான காலகட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் பல்வேறு அறிவிப்புகளின் மூலம்
சுமார் 75000 ஏக்கர் பரப்புள்ள, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள, பட்டா நிலம்
தனியார் காடுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்த அறிவிப்புகளும் 2010-ம் ஆண்டுவரை
ரப்பர் விவசாயிகளின் கவனத்திற்கு வரவே இல்லை. தனியார் காடுகள் சட்டப்படி, அதன் எல்லைக்குள்
வரும் நிலப்பகுதி உரிமை மாற்றம் செய்ய தடைசெய்யப்பட்டதாகும் (முறையான அனுமதி இல்லாமல்).
ஆனாலும் 2010-ம் ஆண்டுவரை எந்த வித அனுமதிகளும் இல்லாமல், பத்திரப் பதிவுகளும், பட்டா
உரிமை மாற்றங்களும் சார்பதிவாளர்களால் முறையாக நடத்தப்பட்டன.
2001 முதல் 2005-ம் ஆண்டின்
நடுப்பகுதிவரை, வெளிநாட்டில் நான் சேர்ந்திருந்த வேலையின் மூலம் (வெளிநாட்டில் வாழ்ந்திருந்தாலும்,
குறிப்பிடத்தக்க அளவு மாறாத வாழ்க்கை முறையாலும்) சட்டப்படி வருமான வரி கட்டத்தேவையற்றதன்
காரணமாக, சேமித்தவற்றில் பெரும் பகுதியையும், அதன் பின் 2007-ம் ஆண்டு இறுதிவரை சேமிக்கப்போகின்றவற்றை
முழுமையாகவும் முதலீடாக கொண்டு, சுமார் 15 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை, முறையான வில்லங்க
சான்றிதழ்களை பரிசீலித்து, முறைப்படி என் உரிமையாக்கிக்கொண்டேன்
(பட்டா மாற்றம் உட்பட) - உரிமை மாற்றம் செய்ய தடைசெய்யப்பட்டது என்னும் அறிதல் கடுகளவும்
இல்லாமல், அறிவதற்கான வாய்ப்புகளும் இல்லாமல்!
2010-ம் ஆண்டு, மாவட்ட ஆட்சியரால்
இந்த பகுதி உரிமைமாற்றம் செய்யும் தடை, அதிகாரபூர்வமாக சார்பதிவாளர்கள் அறிவுறுத்தப்படுவதற்கு
சில மாதங்கள் முன்னால், நான் உரிமைகொண்டுள்ள இந்த நிலப்பகுதி, தரகர்களால், சுமார் ஒன்றரை
மடங்கு அதிக விலை பேசப்பட்டது. எனது எதிர்கால குறிக்கோள்களாக நான் கொண்டிருந்தவற்றின்
காரணமாக, எச்சில் ஊறவைக்கும் அந்த இலாபத்தை பெற நான் விரும்பவில்லை.
(இதன் மூலம், ஒரு அற உணர்வு சார்ந்த பெருங்குற்றத்தை செய்த மன உளைச்சலில் விழுவதிலிருந்து
தப்பித்தும் விட்டேன்) 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என நினைக்கிறேன். தனியார் காடுகள்
பாதுகாப்புச் சட்டத்தை குறித்து முதன் முறையாக நான் கேள்விப்பட நேரிட்டது. என் அதுவரையிரான
சம்பாத்யத்தின் பெரும்பகுதியிலியிருந்து, என் தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக செய்யப்பட்ட
முதலீடு அதன் பணமதிப்பின் பெரும்பகுதியை இழந்து என்னிடம் எஞ்சியது. 2008-க்கு பிந்தைய
காலகட்டத்தில், என் மனநிலையில், நான் விரும்பிய விரும்புகின்ற மாற்றங்கள் நிகழத்தொடங்கியது
எனக்கருதுகிறேன். எனவே இந்த அறிவிப்பை, என் தனிப்பட்ட வாழ்க்கையில் அதன் விளைவுகளை,
எந்த சலனமும் இல்லாமல் என்னால் கடந்து செல்ல முடிந்தது. ஆனால், அதற்கும் சில வருடங்களுக்கு
முன்புவரை இருந்த மனநிலையில் நான் இருந்திருந்தால், இந்த அறிவிப்புக்குப்பின் என் மனநிலை
எவ்வாறு இருந்திருக்கும் என்பதையும் என்னால் உணர முடிந்தது. அதன் மூலம், மேற்கு தொடர்ச்சி
மலையின் அடிவாரப்பகுதிகளை மட்டுமே தங்கள் சொத்தாக கொண்டுள்ளவர்களின் (இந்த எண்ணிக்கை
குறைவானது அல்ல) மனநிலைகளையும், ஓரளவுக்கு என்னால் புரிந்து கொள்ளவும் முடிந்தது.
இந்த இடத்தில், எனது பார்வையில்,
அரசாங்கங்களின் செயல்பாடுகளின் முரண்நகை ஒன்றையும் கூறலாம் என நினைக்கிறேன். ரப்பர் மரத்தின் பயனுடை வாழ்நாள் சுமார் 25 வருடங்கள்
மட்டுமே. அதன் பின் முதிர்ந்த மரங்களை அழித்து விட்டு புதுமரங்களை வளர்க்க வேண்டும்.
ரப்பருக்கு வணிக பலன்கள் இருப்பதால், புது மரங்களை உருவாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும்
எடுக்கத் தேவையில்லை. தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டப்படி, பழைய மரங்களை அழிக்க,
வனதுறை உட்பட பல அரசு நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும். வேறு வார்த்தைகளில்
கூறினால், வயதான மரங்களை அழிப்பதால், விவசாயிகள் பெறும் வருமானத்தில் கிட்டத்தட்ட சரிபாதியை
லஞ்சமாக, இந்த துறை அதிகாரிகளுக்கு கொடுத்தாக வேண்டும். இதன் காரணமாகவே, இங்கு பல முதிர்ந்த
தோட்டங்கள் புதிப்பிக்கப்படாமல் வீணாகின்றன. ஆனால் அரசாங்கமே, காடுகளின் அடியில் புதைந்திருக்கும்
நிலக்கரிக்காக, அடர்காடுகளையும் அதில் வாழும் உயிரினங்களையும் அழிக்க முனைகின்றன -
தற்போது, மத்தியபிரதேசம், மாஹன் அடர்காடுகளை அரசாங்கமே அழிக்காமல் இருக்க போராட்டம்
நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், தனியார் காடுகள்
என்னும் பெயரில் அரசால் மக்களுக்கு பயனற்றதாக மாற்றப்படுகிறது. இதனுடன், பனைமரத்திலிருந்து
மது ஒழிப்பு என்னும் பெயரால் கள் இறக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டு, பனையேற்றம்
என்னும் ஒரு தொழிலையே இல்லாமல் செய்து அதன் மூலம் பெருந்தொகையான விவசாய தொழிலாளர்களின்
வாழ்க்கை முறையை எதிர்மறையாக மாற்றியமைத்த அரசாங்கமே, ஆலைகளின் மூலம் உருவாக்கப்பட்ட
மதுவை விற்று அரசாங்கத்தை நடத்த தேவையான வருமானத்தை பெறும் இழி நிலையில் உள்ளதுடன்
தொடர்பு படுத்தலாம்.
அடுத்ததாக கட்டுமானப்பணிகளுக்காக
மேற்கு தொடர்ச்சி மலை உடைத்து தள்ளப்படுவது. குமரி மாவட்டத்தில் வேறு எந்த தொழில்கள்
இல்லாவிட்டாலும், பொருளாதாரத்தில் முன்னேறிய மாவட்டமாகவே அது உள்ளது. இதற்கு காரணம்,
கல்வியில் அவர்கள் அடைந்த முன்னேற்றமும் அதனால் மாவட்டத்திற்கு வெளியிடங்களில் அவர்கள்
பெற்ற வேலைவாய்ப்புகளுமே. எனவே குமரி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலும் ஒரு முக்கியமான
தொழிலே. இங்கு மற்றும் கேரளாவின் தென்மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமானப்பணிகளுக்கு
ஆதாரம், குமரிமாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மலையில் உடைக்கப்படும் பாறைகளே. தனியார்
காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் காடுகளின் வளத்தை பாதுகாக்க துணிந்த அரசு, அந்த
காடுகளின் இருப்பிடமான மலைகளை உடைப்பதன் மூலம் கட்டுமான தொழிலையும் பாதுகாக்க முனைந்ததோ?
எந்த விதமான கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத வகையில் மேற்குதொடர்ச்சி மலையின் கன்னியாகுமரி
மாவட்ட பகுதியின் பாறைகள் இந்த மாவட்டத்தின் மற்றும் தென்கேரளாவின் கட்டுமானங்களாக
மாறிக்கொண்டிருந்தன - 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரும்வரை.
இயற்கை ஆர்வலர்கள், இந்த
பாறைகள் உடைப்புக்கு எதிராக சில போராட்டங்களை நடத்தியும் அரசாங்கத்துக்கு தொடர் மனுக்கள்
அளித்தும் தங்கள் எதிர்ப்புகளை நெடுங்காலமாக அறிவித்து வந்தனர். சமீபத்திய பாராளுமன்ற
தேர்தலில், தமிழகத்தின் ஆளும் கட்சி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்காவது இடத்தையே
பெற முடிந்தது. சில நாட்களில், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை காரணம் காட்டி, கன்னியாகுமரி
மாவட்டத்தில் உள்ள அனைத்து பாறை குவாரிகளும், தற்காலிகமாக தடை செய்யப்பட்டன. (தேர்தலை
குறித்து கூறும்போது, இங்கு போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும், கட்சி மற்றும் கொள்கை
வேறுபாடு இன்றி, தாங்கள் வெற்றிபெற்றால் தனியார் காடுகள் சட்டத்தை திரும்பப் பெற ஆவன
செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததை சொல்லித்தான் ஆக வேண்டும்).
மேற்குதொடர்ச்சி மலை விவசாயிகள்
பாதுகாப்பு சங்கத்தின் இரண்டாவது கோரிக்கை, இந்த தற்காலிக தடையை நிரந்தரமாக்குவது.
இங்கு போராட்டத்தின் பகுதியாக விளக்க உரையை அளித்தவர்களின் உரைகளின் சில குறிப்பிட்ட
பகுதிகளை கூறுவது, தற்காலிக பாறை உடைப்பு தடையின் காரணத்தை விளங்கிக்கொள்ள உபயோகமாக
இருக்கலாம். இது ஒன்றும் இரகசியமானது அல்ல,
குமரி மாவட்டம் முழுவதும் அனைத்து தொழிலாளர்கள் வட்டத்திலும் அன்றாடம் நிகழ்பெறும்
உரையாடல்களின் பகுதியே. உரையாளர்களின் கூற்றுப்படி,
பாராளுமன்ற தேர்தலுக்காக, இந்த மாவட்டத்தில் உள்ள ஒற்றைத்தொகுதியில் செலவளித்த 60 கோடி
ரூபாய் பணத்தை, குவாரி உரிமையாளர்கள் கூட்டாக திருப்பியளித்தால், உடனடியாக குவாரிகள்
திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும். இன்னும் சில வாரங்களில் இந்த குவாரிகள் திறப்பதற்கான
பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருப்பது உரையாளர்களுக்கு தெரிந்திருந்ததால், அதனை
அறிவிக்கவும் செய்தார்கள். எனவே அதற்கு எதிராக போராடவும் துணிந்தார்கள்.
மூன்றாவது கோரிக்கையை விளக்க
தேவை இருக்காது என்றே நினைக்கிறேன். நான்காவது கோரிக்கை ரப்பர் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்துவது.
2008-ம் ஆண்டு முதல் கிடுகிடு உயரத்துக்கு சென்ற ரப்பர் விலை, அதனுடன் உயரத்துக்கு
கொண்டு செல்லப்பட்ட ரப்பர் தொழிலாளிகளின் கூலி போன்றவற்றையும், ரப்பர் உற்பத்திக்கு
தேவையான உபபொருட்களின் விலைகளையும், ரப்பரினால் உருவாக்கப்பட்ட டயர் போன்ற பொருட்களின்
விலைகளையும் அங்கேயே விட்டுவிட்டு தான் மட்டும் கிடுகிடு பள்ளத்திற்கு வந்துவிட்டதால்
பாதிக்கப்பட்டது, ரப்பர் உற்பத்தியாளர்கள் மட்டும் அல்ல. ரப்பர் உற்பத்தியாளர்கள்,
உற்பத்திக்கு ஆர்வம் காட்டாததால் தொழிலாளர்களும் பாதிப்படையும் நிலையை மெள்ள மெள்ள
அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆக, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி,
மேற்குதொடர்ச்சி மலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போராட்டத்தை அறிவிக்க, அந்த அறிவிப்பு
என்னையும் வந்து சேர, முதன்முறையாக ஒரு பொதுப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பும்
எனக்கு கிடைத்தது. இவ்வளவு கூறிய நான், அந்த போராட்டம் எவ்வாறு நிகழ்ந்தது என்றும்,
அதில் என் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதையும் கூறியாக வேண்டும்.
போராட்டம், 31-07-2014 அன்று,
காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நாள், 10.25 மணிக்கு
நானும் போராட்ட களத்தை சென்றடைந்தேன். போராட்ட களம், குழித்துறை வட்டாட்சியர் அலுவலக
வளாகத்தின் முகப்பு வாசல். முகப்பு வாசலுக்கு அருகில் பஸ் நிறுத்தத்தின் நிழல் குடையும்
அதில் பயணிகள் அமர்வதற்கான முகப்பு வாசலும் அமைந்திருந்தன. நான் சென்ற நேரத்தில், சுமார்
15-பேர் அங்கு அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்களிடம் வைத்திருந்த பேனர் ஒன்றும், வந்து
செல்லும் வாகனங்களில் உள்ளவர்களுக்கு ஒருவர் போராட்ட அறிவிப்பு துண்டு பிரசுரங்களை
கையளித்துக்கொண்டிருந்ததாலும், அவர்களே போராட்ட குழுவினர் என்பதை என்னால் அறிய முடிந்தது.
நானும் பயணிகள் நிழல் குடையில்
ஐக்கியமானேன். 11 மணிக்கு போராட்டம் தொடங்குவதற்கான பிரயத்தனங்கள் செய்யப்பட்டன. போராட்ட
குழுவினர் நிழல் குடையிலிருந்து வெளிவந்து வளாகவாசலில் நிற்பதான பாவனையை செய்யத்தொடங்கினார்கள்.
சிலர் நிழல் குடையில் எஞ்சியருந்தவர்களை வெளியே அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு என்னை
போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றவனாக அடையாளம் காண முடியவில்லை! எனவே எனக்கு வெளிவரும்
அழைப்பும் இல்லை. நிழல்குடையின் ஓரமாக, போராட்ட குழுவின் அருகில் நானாக சேர்ந்து கொண்டேன்.
போராட்டம் தொடங்கி விட்டது.
சுமார் 25 பேர் சேர்ந்து விட்டனர். வழக்கமான கோஷங்கள் எழுப்ப பட்டன. உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இது நான் கலந்து கொள்ளும் முதல் பொதுப்போராட்டம். என்னால் கோஷம் எழுப்ப முடியவில்லை.
ஆனாலும் போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.
சுமார் 12 மணி அளவுக்கு
போராட்டம் முடிவடைவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. என் போராட்டத்தை நானாக முடித்துக்கொண்டு
போராட்ட களத்திலிருந்து விலகினேன். இது ஒரு பெரிய போராட்டமாக, குறிப்பிடத்தக்க கவனத்தை
ஈர்க்கும் நிகழ்வாக நிகழவில்லை. ஆனாலும் போராட்டம் நிகழ்ந்தது. கலந்து கொண்டவர்களின்
எண்ணிக்கையில் ஒன்றை என்னாலும் கூட்ட முடிந்தது - போராட்ட கோஷத்தின் குரலை உயர்த்த
முடியவில்லை என்றாலும். எது எவ்வாறாயினும், என்னால் முடிந்த ஜனநாயக கடமையை செய்து விட்டேன்.
முதல் அனுபவத்தை அடைந்து விட்டேன். அடுத்த அனுபவம், இன்னும் பெரியதாக இருக்க கூடும்!
நாளிதழ் செய்தி; தினமணியில்
blog.change@gmail.com