Tuesday, July 29, 2014

நண்பர்களுடன் ஒரு சந்திப்பனுபவம்.

சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் 1991-ம் ஆண்டு தொழில்நுட்பக் கல்வி கற்பதாக கூறிக்கொண்டு, கருவியியல் துறையில் மிடுக்குடன் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர்களில், வகுப்புத்தோழர்களை பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்திப்பதன் மூலம் ஜென்ம சாபல்யம் அடைய முடியும் என கருதிய வெகு சிலரின் முன்முயற்சியில் ஒரு நண்பர்கள் சங்கமம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டதன் மூலம், 'உங்கள் நண்பன்தான்' என பறைசாற்றிக்கொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தியதன் மூலம், 'நானும் உங்கள் நண்பனே' என  உரக்க கூறி, ஜென்ம சாபல்யமும் அடைந்து விட்டேன்.

எந்த ஒரு நிகழ்வு நடைபெற வேண்டுமானாலும் குறைந்தபட்சம் ஒரு காரணமாவது இருக்க வேண்டும். (காரணகாரிய உறவு பற்றி நான் கொண்டிருக்கும் மனப்பதிவுகளுக்கு; இங்கு சொடுக்கவும்.) இந்த நண்பர்கள் சந்திப்பிற்கும் சில காரணங்கள் இருந்தன. இவர்களில் பெரும்பாலானவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பொறியியல் படிப்பதற்கு தேவையான அறிவை வெளிப்படுத்தியவர்களாக (அறிவு\அறிதல் குறித்த என் பார்வைக்கு; இங்கு சொடுக்கவும்) இருந்திருக்கவில்லை. ஆனால் இளங்கலை அறிவியல் பயில்வதற்கான குறைந்த பட்ச அறிவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்துடன் தோல்வியே வெற்றியின் படிக்கட்டு என்னும் பொன்மொழியையையும் அறிந்திருந்திருந்தார்கள். எனவே 12-ம் வகுப்பில் கிட்டத்தட்ட அடைந்த தோல்வியையே வெற்றியின் படிக்கட்டாக கொண்டு, முழுமையான தகுதி அடிப்படையில், சென்னை தொழில்நுட்பக் கழகத்தில், தங்கள் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்புத் தகுதியுடன் பொறியியல் படிக்கலாம் என்னும் ஆர்வத்துடன் 1991-ம் ஆண்டு சேர்ந்து விட்டார்கள். அடுத்ததாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில், பொறியியல் கல்வி கற்பதாக கூறிக்கொண்டு ஏதேதோ கல்விகளையும் கற்று முடித்து விட்டார்கள். கல்வியின் ஒரு பகுதியாக, சென்னை தொழில் நுட்பக்கழகத்தை சுற்றியிருந்த, பலதரப்பட்ட சினிமா தியேட்டர்களின், மதுபான கடைகளின் வருமானத்தில், அவர்களின் பெற்றோரின் வருமானத்தின் ஒரு பகுதிக்கு தவிர்க்க முடியாத இடத்தையும் பெற்று வைத்திருந்தார்கள். (அன்றைய காலகட்டத்தில் செல்பேசிகள் புழக்கத்தில் இல்லை. எனவே செல்பேசி நிறுவனங்களின் பங்குதாரர்களின் டிவிடன்ட் வருமானத்தில் தங்கள் பெற்றோர் சம்மாதித்தவற்றை இடம் பெறவைக்கும் நல்வாய்பை இழந்தவர்களானார்கள்!!!)

இவ்வாறு ஒருவாறாக, தொழில்நுட்பக்கழகத்திலிருந்து வெளிவந்து, ஒரு தொழிலில் சேர்ந்து அல்லது செய்து, சில பல தொழில்கள் மாறி கிட்டத்தட்ட 19 வருடங்களை, மேட்டுக்குடித்தனத்துடன் (Elitism) கழித்தபின், முன்ஜென்ம (19-வருடங்களுக்கு முந்தைய) ஞாபகத்தைப் பெற்ற சிலர், ஒரு நண்பர்கள் சங்கமத்தை ஏற்பாடு செய்யலாமே என முன் மொழிய, மற்றும் சிலர் வழிமொழிய சங்கமத்திற்கு ஒருவாறாக நாள் குறிக்கப்பட்டது. சிலர் உண்மையாகவே சங்கமிக்கும் ஆர்வத்துடனும், சிலர் எவ்வாறாயினும் இவ்வாறு ஒரு சங்கமம் நடைபெறப்போவதில்லை, எனவே ஆர்வத்தை தெரிவித்தாலும் இல்லாவிட்டாலும் எந்த வித்தியசமும் இருக்கப்போவதில்லை என்னும் எதிர்காலத்தில் பெரும்நம்பிக்கையுடனும் இதில் கலந்து கொள்வதாக உறுதிப்பத்திரம் வாசித்தனர். மற்றும் சிலருக்கு, நண்பர்களாவது நட்பாவது என்னும் உணர்வின் வெளிப்பாடான துறவு நிலையிலோ அல்லது நம்பிக்கை இழந்த நிலையிலோ, எத்தகைய ஆர்வத்தையும் காட்டாதவர்களாகவும் இருக்கும்படி அவர்கள் சுற்றுச்சூழல் அமைந்திருந்ததால் மௌனத்தையே பதிலாக வழங்கியிருந்தனர். ஒருசிலருக்கு இது குறித்த தகவல் தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.  

ஒரு வழியாக 2014 - ம் வருடம், ஜூலை 25 மற்றும் 26 தியதிகளில் சங்கமிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. தொழில் நுட்பம் எவ்வாறு இந்த சந்திப்புக்கு உதவியாக இருந்தது என்று இங்கு கூறுவது தவிர்க்க முடியாததாகும். ஆரம்ப காலத்தில், மின்னஞ்சல் மற்றும் முகநூல்(Facebook) என்னும் இரண்டு வகையான தொழில் நுட்பங்கள் இந்த சந்திப்புக்காக பயன்படுத்தப்பட்டன. ஆரம்ப கால தொழில் நுட்பத்திலேயே தங்கி விட்டவர்கள் மின்னஞ்சல் மூலமும், தொழில் நுட்பத்தில் சற்றே முன்னேறியவர்கள் முகநூல் மூலமும் சந்திப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை தன்முனைப்புடன் செய்துகொண்டிருந்தனர். இங்கு ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். ஆரம்ப கட்டப்பணிகளை செய்த நண்பர்கள் மின்னஞ்சல் மூலமோ முகநூல் மூலமோ தெரிவித்த\கேட்ட கருத்துகளுக்கு\கேள்விகளுக்கு எவரேனும் பதில் அளித்தால் அது கிட்டத்தட்ட ஒரு குற்றமாகவே கருதப்பட்டது. மேலும் கருத்து கேட்டவர்கள் அல்லது சந்திப்பு குறித்து தகவல் கேட்டவர்கள், அதற்கு பதில் கிடைக்கப்பெற்றால், அதை ஒரு அவமதிப்பாகவே கருதினார்கள். இருந்தாலும், சில தவிர்க்க முடியாத இடங்களில் சில அவமதிப்பாளர்களால் சில பதில்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த விதமான குற்றங்களையும் அவமதிப்புகளையும் கடந்து, நண்பர்கள் சங்கமத்துக்கான வேலைகள் தொடர்ந்தன.

சங்கமத்திற்கான அதிவேக(!!??) (அல்லது ஆமை வேக) பணிகளால் கலக்கமடைந்த நண்பன் ஒருவனால், அதை சமனப்படுத்துவதற்காக, புது தொழில் நுட்பம் தன்னிச்சையாக புகுத்தப்பட்டது. செல்பேசி தொழில் நுட்பமான வாட்ஸ்அப் (Whatsapp), சங்கம ஏற்பாடு பணிகளில் அதிரடியாக புகுத்தப்பட்டது. புதிதாக தோற்றத்தை அளிக்கும் எதுவுமே மனிதனுக்கு தற்காலிக ஆர்வத்தை அளித்து அதனுள் அவனை முழுமையாக இழுத்துக்கொள்ளும் என்னும் விளம்பர விதிக்கேற்ப, நண்பர்கள் அனைவரும் வாட்ஸ்அப் -ல் முழுமையாக சங்கமித்தார்கள். (வாட்ஸ்அப் அறிமுக நாளிலிருந்து, அதில் ஆர்வம் இழக்கும் நாளுக்கு முன்பாகவே சங்கமம் நடைபெற்றது, வாட்ஸ்அப் - ன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது) இங்கும் ஒருவன், வாட்ஸ்அப் - ஐ இயக்கும் 'ஸ்மார்ட் செல்பேசி'யை கைக்கொள்ள தான் 'ஸ்மார்ட்' இல்லை எனக்கூறி விலக (வாட்ஸ்அப்  - ல் இருந்து மட்டும்) புது தொழில் நுட்பம் முழுமையான வெற்றியை அடைய தவறி விட்டது!!! ஆனால் புது தொழில் நுட்பம், சங்கமத்தின் மேல் நம்பிகை இழந்து இருந்த சிலருக்கும் புது நம்பிக்கை அளித்து சங்கமத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட வைத்தது. அதேநேரத்தில், நடைபெறாது என்னும் அதீத நம்பிக்கையில் இருந்த சிலர் விலகிக்கொள்ளவும் காரணமாக அமைந்தது எனக்கூறவும் வலுவான காரணங்கள் உள்ளதாக நம்பவும் வைத்தது.

ஓரு வழியாக சங்கமத்தின் முந்தைய நாளையும் அடைந்து விட்டோம். வாட்ஸ்அப், கலந்து கொண்ட அனைவரின் தூதுவனாகவும் மாறிவிட்டது - கேட்பதையும், கொடுத்ததையும் அறிவிப்பவனாக! துரதிர்ஷ்டவசமாக வாட்ஸ்அப் - ஐ பயன்படுத்தாமல் இருப்பதை மேட்டுக்குடித்தனமாக, தனக்குத்தானே கருதும் ஒருவனும் இதில் கலந்து கொள்ள நேரிட, அந்த மேட்டுக்குடிமகன், வாட்ஸ்அப்-ஐ புறக்கணிக்கும் பாவனைகளை இரண்டு நாட்களுக்கு வெளிப்படுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகவும் நேரிட்டு விட்டது.

அதன் பின் நண்பர்கள் குழாம், சங்கமத்திற்கு புறப்பட்டது, தங்கள் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டது முதல் (அல்லது புறப்படுவதாக நினைத்தது முதல்) சங்கமிக்கும் இடத்தை அடைந்ததுவரை, தாங்கள் முக்கியமான நிகழ்வுகளாக கருதிய ஒவ்வொன்றையும் (உதாரணம்; புறப்பட்டு 10 நிமிடங்கள் ஆகி விட்டது, வந்து கொண்டிருக்கிறேன், 10 நிமிடத்தில் வந்து விடுவேன் (இந்த தகவல் வந்த சேர்வதற்கு சுமார் 2 மணி நேரங்கள் முன்பாக), வளாகத்தின் வாசலில் வந்து விட்டேன், வளாகத்தினுள் வந்து விட்டேன், ரூம் #; xxx -க்கு சென்று கொண்டிருக்கிறேன், இன்னும் பிற அதிமுக்கியத்துவம் வாய்ந்த செய்திகள்.........) வாட்ஸ்அப் - ல் 'அப்டேட்' செய்யப்பட, நண்பர்கள் சங்கமம், அனைவரும் அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்தே தொடங்கி விட்டது.

அதன் பின், நேரடியாக நண்பர்கள் சந்தித்ததும், வாட்ஸ்அப்-ல் சந்தித்ததும், மின்னஞ்சலில் சந்திப்பை பகிர்ந்து கொண்டதும் வரலாற்று உண்மைகள். வாட்ஸ்அப் - லும், முகநூலிலும் பொன்னோவியங்களாலும் (புகைப்படங்கள்) பொன்னெழுத்துக்களாலும் (ஸ்டேட்டஸ் அப்டேட்) வரலாறுகள் பதிக்கப்பட்டன, பதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நண்பர்கள் உண்மையிலேயே சந்தித்தோமா என்பதை இனிதான் உறுதி செய்ய வேண்டும்!

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்


பின் குறிப்பு; சரியான குறள்பா எடுத்தளித்த நண்பன் ரகுநாத் - க்கு நன்றிகள்.

blog.change@gmail.com

Sunday, July 27, 2014

பொறுப்பேற்றல்.

பிரபஞ்சத்தில் நிகழும் எந்த நிகழ்வுகளுக்கும் ஏதேனும் காரணம்(Cause) நிச்சயமாக இருக்கும். காரணம் இல்லாமல் எந்த நிகழ்வுகளும் நடைபெற முடியாது. எந்த இயக்கமும் அல்லது நிகழ்வுகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களின் விளைவுகளே (Effect). அதாவது பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களும், நிகழ்வுகளும் காரண-காரிய (Cause & Effect) விதிகளுக்கு உட்பட்டது. மனித வாழ்க்கைக்கும் இதுவே அடிப்படை - அகவயமான வாழ்க்கைக்கும் கூட!

மனித மனதுக்கு ஆர்வமுடைய நிகழ்வுகள் பெரும்பாலும் மனித சமூகத்தை ஏதேனும் வகையில் பாதிப்பவற்றை சார்ந்து மட்டுமே இருக்கும். மனித மனம் அதைப்பாதிக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணங்களைத்தேடுகிறது. ஆனால் எளிய மனங்களால் எல்லா நிகழ்வுகளுக்குமான காரணங்களை கண்டடைய முடிவதில்லை. ஏனெனில், மனித வாழ்வின் காரண காரிய இயக்கம் மிகப்பெரிய வலைப்பின்னலை போன்றது. நிகழ்வுகளின் காரணங்களைத்தேட, அந்த வலையின் இழைகளை தொடர்ந்து செல்ல வேண்டும். எளிய மனங்களால் அத்தகைய பின்தொடர்தலை நிகழ்த்த முடிவதில்லை. வாழ்வில் நிகழும் மிக எளிய நிகழ்வுகள் கூட, அதன் காரணங்களின் தோற்றுவாயை அறிய முனைந்தால், மிகமிக சிக்கலான வலைப்பின்னலுடன் முற்றிலும் வேறு தளத்தில் உள்ள காரணத்துடன் இணைந்திருக்கலாம். ஆக, எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமாக மனித மனம் கண்டடைந்த மூல காரணமே 'விதி'. விதி என்பது காரணங்கள் அனைத்தும் மொத்தமாக பொதிந்து வைத்திருக்கப்பட்டிருக்கும் 'கறுப்புப் பெட்டி'. அந்த கறுப்புப் பெட்டியை அறிந்து கொள்ளும் தீவிரம் உள்ளவர்கள் விதியை வெல்லலாம். மற்றவர்கள் தங்கள் வாழ்வின் அனைத்து துயரங்களுக்கும் காரணம் விதியே என்னும் காரணத்தை அடைந்து, அந்த காரணத்தை நொந்து, தங்கள் வாழ்க்கையையும் ஒரு அழியா துயரமாக மாற்றிக்கொள்ளலாம்.

விதியை வெல்ல துணிபவர்கள், விதி என்னும் கறுப்புப்பெட்டியை ஆராய்ந்தறிய வேண்டும். அத்தகைய ஆராய்ச்சியின் முதல் சட்டகம், விதி என்பது காரணங்களின் தொகுப்பு என்னும் அறிதல். விதியை வெல்வதற்கான ஆயுதம் பொறுப்பேற்றல்(Assuming Responsibility). ஆம், ஒருவர் தாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் முழுமையாக, தான் மட்டுமே பொறுப்பேற்கும் மன உறுதி உடையவராக இருந்தால், விதி என்னும் கறுப்புப்பெட்டியின் ஒவ்வொரு வலைப்பின்னலையும் வசப்படுத்தலாம். தன் விதியை தாமே கட்டமைப்பவராக உருவெடுக்கலாம்.

நிகழ்வுகள் அல்லது விளைவுகள், ஒற்றைப்படையான காரணங்களாலோ அல்லது பல காரண காரியங்களுடன் பிணைந்த எண்ணற்ற காரணங்களாலோ நடைபெறுகிறது. உதாரணமாக, கல்லால் மரத்தில் இருக்கும் மாங்காயை அடித்தால், மாங்காய் மரத்திலிருந்து விழுகிறது. மாங்காய் விழுவதற்கு கல்லால் அடிபட்டது ஒற்றைப்படையான காரணம். இதை வேறு கோணத்தில் பார்த்தால், மாங்காயை கல்லால் அடித்தவருக்கு, அதற்கான இச்சை மனதில் தோன்ற வேண்டும். அந்த இச்சையை செயலாக மாற்றும் சக்தி அவரிடம் அமைந்திருக்க வேண்டும். அவர் அருகில் மாங்காய் அடிப்பதற்கு தோதான கல் இருக்கவேண்டும். கல்லை சரியான திசையில் எறிய தேவையான சக்தியும் அறிவும் அவருக்கு இருந்தாக வேண்டும். கல் கையிலிருந்து விடுபட்ட பிறகு, மாங்காய் மரத்தில் அசைவற்று இருக்க வேண்டும் - இதில் ஒவ்வொரு 'வேண்டும்' -ம் அந்த நிலையில் இருப்பதற்கு வேறு பல தொடர்புடைய காரணங்களும்! ஒரு மாங்காயை கல்லால் அடிப்பதற்கே இத்தனை காரிய காரண வலைப்பின்னல்!

விதியை வசப்படுத்த துணிபவர்களுக்கு சில தத்துவப் பிரச்சனைகளையும் கடக்க வேண்டியிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட விளைவுக்காக செய்யப்படும் செயலில், செயல்புரிபவரின் பங்களிப்பும், அவர் கட்டுக்குள் இல்லாத பிற காரணிககளின் பங்களிப்பும் கலந்திருக்கையில், விளைவுக்கான முழு பொறுப்பையும் எவ்வாறு ஏற்பது? எல்லா கலாச்சாரங்களிலும் இவற்றை விளக்க தோதான தத்துவங்கள் காணக்கிடைக்கலாம். நமது இந்திய கலாச்சாரத்தில், காரண காரிய தத்துவமான சாங்கிய தரிசனம் முதல் மகாதர்மம் என்னும் பௌத்த தரிசனம் வழியாக கடவுள் என்னும் எளிய கருத்துவரை பலவகையான தத்துவங்கள் இந்த பிரச்சனைக்கான தீர்வை நமக்கு அளிக்கலாம். நமது நம்பிக்கை அல்லது அறிந்து கொள்ளும் ஆர்வத்திற்கேற்ப இவற்றில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட தத்துவங்களோ, இந்த 'விதி' என்னும்கறுப்புப் பெட்டியை வெல்ல நமக்கு உதவலாம்.

இந்த தத்துவப் பிரச்சனைகள் நாணயத்தின் ஒருபக்கம் மட்டுமே. நாணயத்தின் மறுபக்கம் செயல்களுக்கு பொறுப்பேற்றல். கல்லால் மாங்காயை அடிக்கும்போது, வேகமான காற்று மாங்காயை அசைத்து, கல்லெறிதலை பயனற்றதாக்கலாம். இப்போது காற்று வீசியதை 'விதி' என்னும் கறுப்புப் பெட்டியின் இயக்கமாக காண்பவர், அந்த மாங்காயை உரிமை கொள்ள இயலாதவராகலாம். ஆனால், கல் குறிதவறியதற்கு காற்றின் வேகத்தை கணிக்கத் தவறிய தானே பொறுப்பு என உணர்பவர், மீண்டும் கவனத்துடன் கல்லெறிந்து மாங்காயை தன்வசப்படுத்தலாம்.

துரதிர்ஷ்டவசமாக மனித சமூகத்தில் பொறுப்பேற்றலை விட பொறுப்பின்மை அல்லது பொறுப்பை தட்டிக்கழிப்பது மட்டுமே பெரும்பான்மையாக காணக்கிடைக்கிறது. மிகமிக குறைந்தபட்ச மனிதர்களே தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கிறார்கள். அவர்களாலேயே மனித சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனித சமூகம் இன்றுவரை அடைந்த அனைத்து வகையான முன்நகர்தல்களும் தம் செயல்களுக்கு பொறுப்பேற்பவர்களாலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மற்றவர்கள், தங்கள் பொறுப்பின்மையால் எல்லா விதமான முன்நகர்தல்களையும் அழிவை நோக்கிய நகர்தலாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக நன்மையை மட்டும் தரும் எந்த அறிவியல் சாதனைகளும் மனித இனத்தால் இதுவரை எட்டப்படவில்லை. பொறுப்புணர்வுடன் அறிவியல் சாதனைகளை கையாள்வதே அவற்றை நன்மை தரும் சாதனைகளாக மாற்றுகிறது. பெரும்பான்மையான மனித சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையால், அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித சமூகத்தை ஆகாயத்திற்கு உயர்த்துவதான பாவனையுடன் அதால பாதாளத்திற்கு வழி அமைக்கின்றன - உதாரணம், சுற்று சூழல் பாதிப்புகளை காரணமாக கொண்ட இயற்கை பேரழிவுகள், வாழ்க்கை முறை சார்ந்த நோய்களின் மூலம் அதிகரிக்கும் உயிரிழப்புகள், மருத்துவ உலகின் ஒப்பற்ற கண்டுபிடிப்பான எதிர் உயிரி (Anti Biotic) நமது பொறுப்பற்ற உபயோகத்தின் காரணமாக எதிர் உயிரிகளையும் தோற்கடிக்கும் கிருமிகளை தோற்றுவிப்பது...........     

மனித இனம் இதுவரை அடைந்த ஞானத்தின் உச்சத்தை கருத்து வடிவில் தெரிவிக்கும் 'கடவுள்' என்னும் கருத்தையும் இழிவு படுத்தி, நமது பொறுப்பை தட்டிக்கழிக்கும் நிலையை நியாயப்படுத்துவதற்கான நியாயமாக முன்வைக்கும் அளவுக்கு பொறுப்பின்மை நம்மை கொண்டு வந்து விட்டது. காரண காரிய உறவை புரிந்து கொள்ள இயலாத சாதாரண மனிதர்களுக்கு, தங்கள் வாழக்கையின் துன்பங்களை கடந்து செல்வதற்கு கடவுள் என்னும் கருத்து எளிமையான வாகனமாக இருக்கலாம். ஆனால் கற்றவர்கள் என்று தம்மை கூறிக்கொள்பவர்களும், பொறுப்பேற்றுக் கொள்வதில் இருந்து நழுவுவதற்கு கடவுள் என்னும் கருத்தை காரணமாக கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆம், நம் செயல்களுக்கு நாமே முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்ளாததுவரை, கற்றவர்கள் என நம்மை நாமே கூறிக்கொள்வது (பிறர் கூறுவதை ஆமோதிப்பதும்) உண்மையில் அவமானகரமான ஒன்று!


மனித வாழ்க்கையின் காரண - காரிய உறவை புரிந்து கொள்ள முடிந்தால், அதன் பின் மனித வாழ்வில் துன்ப உணர்வு என ஒன்று இருக்க வாய்பே இல்லை. காரண காரிய உறவை புரிந்து கொள்ள முடியாத இடைவெளிகளை தத்துவங்களின் தர்க்கத்தாலோ, கடவுள் என்னும் கருத்தின் பெருங்கருணையின் மூலமோ, விதி என்னும் கறுப்புப்பெட்டியின் நுண்ணிய வலைப்பின்னலாலோ நிரப்பிக்கொள்ளலாம் - இடைவெளிகளை அறியமுடியாமையின் புரிதலோடு. அத்தகைய புரிதல், நம் பொறுப்பேற்றலின் எல்லையையும் விரிவாக்கும். 'நான்' என்பதன் எல்லையையும்!

blog.change@gmail.com