Sunday, June 30, 2013

சமூக கருத்தியல் இயக்கம்.

நமது தனிப்பட்ட அடிப்படை இயல்பை நாம் வாழும் சமூகத்தின் இயல்பே தீர்மானிக்கிறது. சமூகத்தின் இயல்பு, அதன் தனிப்பட்ட உறுப்பினர்களின் இயல்புகளின் தொகுப்பு. ஆக தனிமனிதர்களின் இயல்பும் சமூகத்தின் பொது இயல்பும் ஒன்றை ஒன்று தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாக்கி கொண்டே வருகிறது. நாம் வாழும் சமூகம் கடந்த சில வருஷங்களில் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது, அந்த மாற்றம் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை உருவாக்கியுள்ளது, அந்த மாற்றத்தின் அடிப்படை எங்கிருந்து உருவானது என்பவற்றை நம்மால் அவதானிக்க முடிந்தால், தனிமனித மற்றும் சமூக மாற்றங்களில் ஒன்றுடன் ஒன்றான தொடர்பை நம்மால் அறிய முடியும்.

சமூக மாற்றம், தனிமனித உளவியல் மாற்றத்தில் தொடங்கி கருத்தாக உருபெற்று, அந்த கருத்து சமூக உறவுகளின் மூலம் வலிமைபெற்று சமூக மாற்றமாக உருவெடுக்கிறது. இங்கு கருத்தியல் இயக்கம் என்பது சில அறிவுஜீவிகளால் மட்டுமே சமூகத்தில் முன்னெடுக்கப்படும் என்று நாம் கருதினால் அது மிக மிக தவறான நம் முன்முடிவு. சுயசிந்தனை உடைய எல்லா தனிமனிதர்கள் மூலமும் கருத்தியல் சமூகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால் சுயசிந்தனை உடைய, எந்த கருத்தியலையும் தன் சுயசிந்தனையின் மூலம் உறுதிப்படுத்தும் தகுதியுடையவர்கள் பெரும்பாலும் எந்த சமூகத்திலும் மிகமிக குறைவானவர்களே இருப்பார்கள். இங்கு சுயசிந்தனை என்பது மிகமிக ஆழமான கருத்தாக்கம். எந்த கருத்தையும் நம் சிந்தனையின் மூலம் மட்டுமே நம்மால் விரிவுபடுத்த அல்லது வெளிப்படுத்த முடியும். ஆனால் அந்த சிந்தனைகள் நாம் ஏற்கனவே கொண்டுள்ள எண்ணற்ற முன்முடிவுகளை சார்ந்து இருக்கும். இத்தகைய முன்முடிவுகளாலான எண்ணங்கள் மூலம் நாம் அடையும் கருத்தாக்கம் எப்போதும் சுயசிந்தனையால் உருவானவை இல்லை. உண்மையில் நாம் சுயசிந்தனை உடையவர்கள் என்றால் நம் அறிதலுக்கு அப்பாற்பட்ட எந்த கருத்தையும், நம்பிக்கைகள் அல்லது முன்முடிவுகள் மூலம் நம்  கருத்துகளாக வெளிப்படுத்த மாட்டோம். உறுதியான அறிதல்கள் மூலம் நம்பிக்கைகளை கடந்து சென்றபின், அந்த அறிதலை அடிப்படையாக கொண்ட சிந்தனைகளே சுய சிந்தனைகளாக வெளிப்படும். இதுவே படைப்பூக்கம் (Creativity)!

நாம் உண்மையில் சமூக பிரக்ஞ்சை கொண்டவர்களாக இருந்தால் எந்த கருத்தையும் உருவாக்கியாக வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால் சமூகத்தில் புழங்கும் எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்ளும் முன் நமக்கேயான நம் சுய சிந்தனையின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே சாதாரண மனிதர்களாகிய நாம் சமூகத்திற்கு அளிக்கும் பெரும் பங்களிப்பு. ஒரு சமூகத்தை சார்ந்த பெரும்பாலானோர் சமூகத்தில் புழங்கும் எந்த கருத்தையும் தங்கள் சுயசிந்தனையின் மூலம் உறுதிப்படுத்தியபின் ஏற்றுக்கொள்ள தொடங்கினால் அந்த சமூகம் நாம் அனைவரும் சார்ந்திருக்க விரும்பும் நம் கனவுசமூகமாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக பொதுமனித மனம் அத்தகைய தகுதியுடையதாக இல்லை. ஒரு காரணம், பெரும்பாலானவர்கள் பெறும் கல்விமுறையாக இருக்கலாம். எல்லா மனித சமூகங்களிலும் பெரும்பாலும் தொழிலுக்கான கல்வியே அளிக்கப்படுகிறது. ஏனெனில் மனித சமூக அமைப்பில் தொழில் இன்றியமையாதது. லொகீக வாழ்க்கையின் தேவைகளை தொழில் புரிவதன் மூலமே எந்த ஒரு தனிமனிதனும் சமூகத்திலிருந்து பெறமுடியும். எல்லா சமூகங்களிலும் பெரும்பான்மை மக்களின் தேவைகள் லொகீக தேவைகளே. எனவே அளிக்கப்படும் கல்வியும் தொழில் சார்ந்ததாகவே இருக்கும்.

மிகச்சில மனிதர்களுக்கு மட்டுமே லொகீக வாழ்க்கையுடன் அதை கடந்த தேவையும் இருக்கிறது. மிகமிக குறைவானவர்களுக்கு லொகீக வாழ்க்கையே தேவை இல்லாமலும் இருக்கிறது. இந்த இரு சாரர்களால் மட்டுமே கருத்தியல் இயக்கங்களை முன்னெடுத்து செல்ல முடியும். இந்த மிக மிக குறைவான மனிதர்கள் தங்கள் உண்மையான கல்வியை வெகுஜன கல்விக்கு அப்பால்தான் பெற முடியும். ஒருவேளை தொழில் சார்ந்த கல்வியிலும் சுயசிந்தனையை ஊக்குவிக்கும் சமூகங்களில், லொகீக வாழ்க்கையை கடந்த தேவைகளுக்கான கல்வி, தொழில் கல்விக்கு ஊடேயும் பெற சாத்தியங்கள் இருக்கலாம். அந்த சாத்தியங்கள் இருந்தாலும் இந்த சிறுபான்மையினரால் மட்டுமே அந்த சாத்தியங்களின் உச்சத்தை எட்ட முடியலாம். அத்தகைய சாத்தியங்களை உள்ளடக்கிய கல்வி முறை இருந்தால் லொகீக மனிதர்கள் கூட, சிந்தனையின் சாத்தியங்களை குறித்த உணர்வுடன் இருக்க கூடும் - அவர்கள் அந்த சாத்தியங்ளை தங்களுக்காக தேர்ந்தெடுக்காவிடில் கூட! ஆக சமூகத்திற்கு நாம் அளிக்கும் பங்களிப்பு, லொகிக வாழ்க்கையை கடந்த நம் தேவைகளை, அவ்வாறு ஒரு தேவை இருந்தால், அறிவதிலிருந்தே தொடங்குகிறது. ஒருவேளை லொகீக வாழ்க்கை கடந்த தேவை நம் வாழ்வில் இல்லாவிடில், நாம் லொகீக வாழ்க்கையை வாழ்வதிலேயே முழுமை அடைவோம். அந்த வாழ்க்கையில் நமக்கென எந்த ஏமாற்றங்களும் அடையமுடியாதவைகளும் இல்லை. அந்த லொகீக வாழ்க்கையை முழுமையாக வாழ்வதே நம் ஆன்மீக சாதனையாகவும் இருக்கும்.

எந்த சமூகத்திலும் நேர்மறை மற்றும் எதிர்மறை இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து, அவற்றின் கலங்கிய இயக்கமே சமூக இயக்கமாக வெளிப்படுகிறது. ஒரு சமூகம் நேர்மறையான பாதையில் உள்ளதா அல்லது எதிர்மறையான பாதையில் உள்ளதா என்பதை அந்த சமூகத்தில் எத்தகைய இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது முடிவு செய்கிறது. சமூகத்தில் எந்த ஒரு நேர்மறையான கருத்தியல் இயக்கம் முன்னெடுக்கப்படும்போதும், அதை இல்லாமல் செய்யும் ஒரு எதிர்மறை இயக்கமும் தோற்றுவிக்கப்படும். அந்த எதிர்மறை இயக்கம் பெரும்பாலும் சமூகத்திடம் ஆதரவை பெறும். அதற்கு முக்கியமான காரணம், ஒரு கருத்தியல் இயக்கம் என்பது சமூகத்தின் தற்போதைய இயங்குமுறையை மாற்றியமைக்க கோருவது. லொகீகத்தில் உழலும் சமூகம் சமூகத்தின் எந்த மாற்றத்தையும் லொகீக இருப்புக்கு சவாலாகவே எடுத்துக்கொள்ளும். எனவே சமூக மாற்றத்திற்கான நேர்மறையான கருத்தியல் இயக்கத்தை எதிர்த்து இல்லாமல் செய்யும் எதிர்மறை கருத்தியல் இயக்கத்தை, சுயசிந்தனை இல்லாத சமூகம் எளிய முன்முடிவுகள் மூலம் ஆதரித்து நேர்மறை கருத்தியல் இயக்கத்தை இல்லாமல் செய்து விடும். இதற்கு சமீபத்திய உதாரணம் அண்ணா ஹசாரே அவர்களின் ஊழலுக்கு எதிரான கருத்தியல் இயக்கம்!

சுய சிந்தனையை இழந்த சமூகத்தில் இன்னொருவிதமான கருத்தியல் இயக்கமும் முன்னெடுக்கப்படுகிறது. பெருமளவு அதிகாரம் குவிந்திருக்கும் சமூகத்தின் பகுதி, தன் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்காக உருவாக்கும் கருத்தியல் இயக்கம். இங்கு அதிகாரமையம் நேரடியாக மேலதிக அதிகாரத்தை எடுத்துக்கொள்ளாமல், தன் அதிகாரத்தின் மூலம் புதிய அதிகாரத்தை நோக்கிய ஒரு கருத்தியல் இயக்கத்தை தொடங்கி முன்னெடுத்து சென்று, அந்த சமூகமே புதிய அதிகாரத்தை அந்த அதிகார மையத்திடம் வழங்குமாறு செய்வது. இந்த வகையில் வேறொரு சமூகத்திடம் அதிகாரத்தை பெறதுடிக்கும் ஒரு சமூகம், தான் வெற்றிபெற விரும்பும் சமூகத்தினுள் தனது பொருளாதார பலத்தின் மூலம் கருத்தியல் இயக்கங்களை உருவாக்கி, சுயசிந்தனை இல்லாத சமூகத்தை தன்னை நோக்கி வர வைப்பது. சமீபத்தில் வெளியான 'உடையும் இந்தியா' என்னும் நூல் இத்தகைய கருத்தியல் இயக்கங்களை விரிவாக பேசுகிறது.

blog.change@gmail.com

Saturday, June 22, 2013

சமூக இயக்கங்கள்.

சமூகம் என்பது உறவுகளின் வலைப்பின்னல். அது ஒரு நிலையான வலைப்பின்னல் அல்ல, கணம் தோறும் மாறிக்கொண்டிருக்கம் வலைப்பின்னல். சமூக இயக்கம் என்பது வலைப்பின்னலின் ஒவ்வொரு சந்திப்பு புள்ளிகளின் இயக்கங்களின் தொகுப்பு. நாம் ஒவ்வொருவரும் சமூக வலைப்பின்னலின் ஒரு சந்திப்பு புள்ளி. நாம் நிலையில்லாத தொடர் இயக்கத்தை உடையவர்கள் - அந்த இயக்கத்தை குறித்த விழிப்புணர்வுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்! நம் ஒவ்வொருவரின் இயக்கங்களின் தொகுப்பே நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயக்கம்.

நம் ஒவ்வொருவரின் வெளிப்படையான இயக்கங்களின் தொகுப்பு சமூகத்தின் வெளிப்படையான இயக்கமாகவும், நம் உளவியல் இயக்கங்களின் தொகுப்பு சமூக மனமாகவும் வெளிப்படுகிறது. நாம் வெளிப்படையாக எத்தகைய பகட்டுடன் அல்லது எளிமையுடன் இருந்தாலும் நம் உளவியல் இயக்கங்களே .உண்மையான நம் தரத்தை சுட்டுவது போல, ஒரு சமூகம் வெளிப்படையாக எத்தகைய முன்னேற்றத்துடன் அல்லது பழந்தன்மையுடன் இருந்தாலும், அந்த சமூக மனதின் இயல்பே அந்த சமூகத்தின் உண்மையான இயல்பை குறிக்கிறது. ஒரு சமூகத்தின் ஒவ்வொரு வெளிப்படையான இயக்கங்களுக்கும் காரணியான ஆழமான உளவியல் இயக்கம் ஒன்று நிச்சயமாக எப்போதும் இருக்கும். அந்த உளவியல் இயக்கத்தின் தன்மையே அந்த சமூகத்தின் உண்மையான தன்மையாகும். ஒரு உளவியல் இயக்கம் வெளிப்படையாக நல்லவிதமாக தோன்றும் இயக்கங்களை தோற்றுவித்தாலும், பல வெளிப்படையாக தெரியாத எதிர்மறை இயக்கங்களையும் தோற்றுவிக்க கூடும். வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அளிக்கபடும் மருந்து அந்த நோயை குணப்படுத்தினாலும் பக்க விளைவுகள் மூலம் வேறு பல நோய்களுக்கும் காரணமாக இருப்பது போல.

ஒரு தனிப்பட்ட மனிதரின் உளவியல் இயக்கங்கள் சமூகத்தில் வெளிப்படையான இயக்கங்களை உருவாக்க வேண்டுமென்றால், அந்த மனிதரின் சமூக உறவுகள் மிகவும் வலிமையாகவும் தீவிரமாகவும் இருந்தாக வேண்டும். அல்லது அந்த தனிப்பட்ட மனிதரின் உளவியல் இயக்கங்களை உள்வாங்கிக்கொண்ட மற்றொருவர் அத்தகைய வலிமையான மற்றும் தீவிரமான சமூக உறவுகளுடன் இருப்பதன் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பெரும்பாலும் எதிர்மறையான இயக்கங்கள் எளிதில் சமூகத்தில் தாக்கத்தை ஏறுபடுத்தும். ஏனெனில் எதிர்மறையான இயக்கங்கள் பெரும்பாலும் லொகீக தேவைகள் சார்ந்தே இருப்பதால் சமூகத்தின் பெரும்பான்மையினரான லொகீக மனிதர்கள் மூலம் எளிதில் சமூக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு சமூகத்தின் உறுப்பினர்களான ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான உளவியல் இயல்புகளை உடையவர்கள். ஆனாலும் தங்கள் வெளிப்படையான இயக்கங்களை தங்கள் சமூக உறவுகளின் இயல்புகளின் படி ஒரு சமரச புள்ளியை நோக்கி அமைத்திருப்பார்கள். அந்த சமரச புள்ளியை நோக்கிய இயக்கமே சமூக இயக்கமாக தோற்றமளிக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் உளவியல் இயக்கங்கள் சமரச புள்ளியை தொடர்ந்து மாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கும். வலிமையான, தீவிரமான உறவுகளை உடைய ஒருவர் அத்தகைய முயற்சியை வெளிப்படுத்தும்போது சமரச புள்ளி இயல்பாகவே ஒரு புதிய இடத்தை நோக்கி நகர தொடங்கும். அதுவே சமூகத்தின் வெளிப்படையான மாறுதல். சாதாரண மனிதர்கள் போதுமான அளவு தீவிரம் இல்லாமல் சமரச புள்ளியை மாற்ற முயலும்போது பெரும்பாலும் ஏமாற்றத்தையே அடைவார்கள். இதுவே நம்மில் பெரும்பாலானவர்கள் நாம் வாழும் சமூகத்தின் மீது ஒருவகையான கசப்புணர்வை அடைந்திருப்பதன் காரணம்.

நாம் சமூக பிரக்ஞ்சை உடையவர்களாக இருந்தால், நேர்மறையன மாறுதல்களுக்காக, தேவைப்படும் இடங்களில், சமூகத்தின் வெளிப்படையான இயக்கங்களின் சமரச புள்ளியிலிருந்து விலக முயற்சிப்போம். அத்தகைய முயற்சி பெரும்பாலும் லொகீகம் சார்ந்த சமூகத்திலிருந்து நிராகரிப்பையே பெற்று தரும். இருந்தாலும், நம் செயல்பாடுகளில் தீவிரம் உடையவர்களாக நாம் இருந்தால், சமரசபுள்ளியிலிருந்தான நமது விலகல், அந்த சமரச புள்ளியையே நம் இயக்கத்தை நோக்கி வரச்செய்யும். அதுவே சமூகத்திற்கு நம்மால் செய்ய முடிந்த பெரும் பங்களிப்பு. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் இயற்கையிலேயே அத்தனை தீவிரமானவர்கள் அல்ல. ஆனாலும் நமது குறைந்தபட்ச தீவிரம் தற்போதைய சமரசப்புள்ளியை நேர்மறையான இயக்கங்களுக்காக, அந்த சமரசபுள்ளியை அசைக்க முடியாவிட்டாலும், நிராகரிக்கும் அளவுக்காவது இருந்தால், அதுவே சாமானியமான மனிதர்களாக சமூகத்திற்கான நமது பங்களிப்பாக இருக்கும்.


செயலில் தீவிரம் உடைய, சமூகத்தை மாற்ற துடிக்கும் செயல்பாட்டாளர்களை பெரும்பாலும் நாம் எல்லா சமூகங்களிலும் காணலாம். துரதிர்ஷ்டவசமாக அந்த செயல்பாட்டாளர்கள் அவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே அவர்களின் சமூகம் என்று வரையறுப்பதன் மூலம் முழுமையான சமூக பிரக்ஞ்சையை இழக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பாலும் அவர்களின் தீவிரமான செயல்பாடுகள் சமூகத்தில் எதிர்மறையாக வெளிப்பட்டு அவர்கள் தீவிரவாதிகள் என்னும் குறுகிய, எதிர்மறையான வட்டத்திற்குள் அகப்பட்டு கொள்கிறார்கள். ஏனெனில் சமூகம் என்பது அவர்களையும் அவர்கள் கொள்கைகளையும் மட்டும் ஏற்றுக்கொண்ட ஒன்று அல்ல. சமூகத்தில் எண்ணற்ற உறுப்பினர்களும் எண்ணற்ற கொள்கைகளும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆம் தீவிர இயக்கங்களை உடைய போராளிகள் மாற்ற வேண்டியது சமூகத்தின் வெளிப்படையான இயக்கத்தை அல்ல. அந்த வெளிப்படையான இயக்கத்திற்கு காரணமான உளவியல் இயக்கத்தையும் கருத்தியல் இயக்கத்தையுமே. தீவிரமான கருத்தியல் இயக்கத்தின் மூலம் உளவியல் இயக்கத்தையே மாற்றியமைக்க முடியலாம் - அதன் மூலம் வெளிப்படையான சமூக இயக்கத்தையும்!

blog.change@gmail.com

Saturday, June 15, 2013

சமூகத்தில் தனி மனித பங்களிப்பு

சமூகம் என்பது தனி மனிதர்கள் தங்களுக்குள் கொண்டுள்ள உறவுகளின் தொகுப்பு. தனிமனிதர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கிக்கொள்ள பிற மனிதர்களுடன் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவம், கருத்தியல் ரீதியாகவும் உறவாட வேண்டியுள்ளது. இந்த உறவுகள், மிகவும் சிக்கலான வலைபின்னல் போல மற்ற மனிதர்களின் உறவுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த உறவுகளின் தொகுப்பே சமூகம். ஆகவே தனி மனித செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு, சமூகத்தின் செயல்பாடுகளாகவும் சிந்தனைகளாகவும் முழுமை கொள்கிறது. தனிமனிதன் மற்ற மனிதர்களுடன் கொண்டுள்ள உறவுகளின் உறுதிக்கேற்ப அந்த மனிதனின் செயல்பாடுகளும் சிந்தனைகளும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நாம் ஒவ்வொருவரும் சமூகத்தின் சிக்கலான வலைப்பின்னலில் ஒரு சந்திப்பு புள்ளி (knot). ஒரு வலைப்பின்னலில் ஒவ்வொரு சந்திப்பு புள்ளியின் தரமும், உறுதியும் அந்த வலைப்பின்னலின் தரத்தையும் உறுதியையும் முடிவு செய்கிறது. ஆக நம் வாழ்வின் தரமும், இயல்பும் நாம் வாழும் சமூகத்தின் தரத்தையும் இயல்பையும் முடிவு செய்கிறது. அதாவது, ஒரு சமூகத்தின் தரத்தையும் இயல்பையும் முடிவு செய்வது, நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களின் தரமும் இயல்புமே - சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் சாதாரண மனிதர்களே. அந்த சதாரண மனிதர்கள் தங்களின் செயல்களில் கொண்டுள்ள ஈடுபாடு, அந்த  செயல்கள் எத்தகையதாக இருந்தாலும், அவர்களை மற்றவர்களிலிருந்து பிரித்து காட்டுகிறது.

சமூக அமைப்பில் வாழும் நாம், நமது சிந்தனை முறைகளையும் அடிப்படை இயல்புகளையும், அந்த சமூக அமைப்பில் நாம் கொண்டுள்ள உறவுகளிடமிருந்து, அந்த உறவுகளின் இயல்பையும், சிந்தனை முறைகளையும் சார்ந்தே பெற்றுக்கொள்கிறோம். எனவே நமது அடிப்படை இயல்பு, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயல்பையே பெற்றிருக்கும் - நாம் பெற்ற அந்த சமூக இயல்பில், விழிப்புடன் நம்மால் நமக்குள் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை தவிர! நமது இயல்புகள், நம்மால் விழிப்புடன் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் உட்பட, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் இயல்புகளாக, நாம் கொண்டுள்ள உறவுகள் மூலம் நிலைப்படுத்தப்படுகிறது. ஆம், நமது சமூக உறவுகளின் வலிமைக்கேற்ப, நம்மால் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இயல்புகள் சமூகத்தில் வெளிப்படையான மாறுதல்களை உருவாக்கலாம். ஒருவேளை நம் சமூக உறவுகள் வலிமையற்றவையாக இருந்தால், சமூகத்தின் இயல்பில் நம்மால் கொண்டு வரப்படும் மாற்றங்கள் வெளிப்படையான சமூக மாற்றங்களை உருவாக்காமல் போகலாம். ஆனாலும் அந்த சமூகத்தின் உள்இயல்பில் சிறு சலனங்களை ஏற்படுத்தி, இன்னொரு வலிமையான சமூக உறவுகளை உடைய தனிமனிதர் மூலம் வெளிப்படையான சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியலாம்.

ஏன் சமூகம் மாற வேண்டும்? உலகம் என்பது ஒரு நிலையான இருப்பு அல்ல. அது நிகழ்வுகளின் தொகுப்பு. நிகழ்வு என்பதே மாற்றத்தின் அடிப்படை. நிகழ்வின் மூலம் ஒன்று மற்றொன்றாக மாறுகிறது. அதாவது, உலகம் என்பது ஓயாது மாறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு. அந்த உலகின் சிறு பகுதியான மனிதர்களும், மனிதர்களின் உறவுகளால் ஆன சமூக அமைப்பும், உலக நிகழ்வுகளின் பகுதியான சிறு நிகழ்வாகவே இருக்கும். அல்லது, மனிதர்களும் அந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமூகமும் மாறிக்கொண்டு மட்டுமே இருக்க முடியும். எனவே சமூகம் ஏன் மாற வேண்டும் என்னும் கேள்வி எழுவதற்கான சாத்தியங்களே இல்லை - மாறிக்கொண்டு இருப்பதே அதன் இயல்பு.

ஆம், தனிமனிதர்களாகிய நம் ஒவ்வொரு சிந்தனையும்,ஒவ்வொரு மன இயக்கங்களும், ஒவ்வொரு செயல்களும், நாம் எத்தகைய சமூக உறவுகளை கொண்டவர்களாக இருந்தாலும், நாம் சார்ந்திருக்கும் சமூகத்தில் ஓயாத சலனத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பில், தனிமனிதர்களால் ஏற்படுத்தப்படும் இந்த சலனங்கள், அந்த சமூகத்தை அதன் அடுத்த உயர்ந்த கட்டத்தை நோக்கி நகர்த்திக்கொண்டே இருக்கும். எனவே, நம் சமூகம் அதன் அடுத்த உயரிய நிலையை நோக்கி நகர்கிறதா இல்லையா என்பது, தனி மனதர்களாகிய நம் ஒவ்வொருவரின் சிந்தனையையும் செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. அல்லது தனி மனிதர்களாகிய நாம், செயல் ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் மனித பிறவிக்கு சாத்தியமான அடுத்த உயர்ந்த நிலையை நோக்கி செல்கிறோமா இல்லையா எனபதே, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை நமக்கு கூறுகிறது.

சமூக அமைப்பின் மூலமே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் நம் முன்னோர் அடைந்த நாகரீகம் மற்றும் ஞானத்தின் சிறு துளியாவது இன்று நம்மை அடைந்திருக்கிறது. இன்று நாம் அடையும் நாகரீகம் அல்லது அநாகரீகம், ஞானம் அல்லது அஞ்ஞானம், நம் அடுத்த சந்ததியினரை மட்டுமல்லாது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் வரும் சந்ததியினருக்கும் சென்று சேரும். உண்மையில் நம் குழந்தைகள் மீது அன்புடையவர்களாக இருந்தால், சமூகத்திலிருந்து எந்த எதிர்மறை இயல்புகளையும் நம் குழந்தைகள் அடைவதை விரும்ப மாட்டோம். அல்லது நமது எதிர்மறை இயல்புகள் சமூக இயல்புகளாக உருபெற்று நம் குழந்தைகளையும் அவர்கள் குழந்தைகளையும் அடைவதையும் விரும்ப மாட்டோம். மேலும் நாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை உடையவர்களாக இருந்தால், நமது எண்ணங்களும் செயல்களும் எவ்வாறு சமூகத்தின் எண்ணங்களாகவும் செயல்களாகவும் உருப்பெறுகிறது என்பதை நிச்சயமாக நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவை நாம் அடைந்தால், ஒரு சமூக பிரக்ஞ்சை உள்ள மனிதரை போலன்றி வேறு எந்த விதமாகவும் நம்மால் வாழ முடியாது.

இன்று நாம் அடைந்தவை என பெருமிதம் கொள்ளும் அனைத்தையும், நாம் வாழும் சமூகத்திலிருந்து பெற்ற அடிப்படைகளிலிருந்து மட்டுமே அடைந்துள்ளோம். அவற்றை அடைவதற்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம் உழைப்பு இருந்துள்ளது. ஆனாலும் அந்த உழைப்பும் சமூகத்திலிருந்து பெற்ற அறிவு, ஆர்வம், உந்துதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. நாம் நன்றியுயுணர்ச்சி உடையவர்களாக இருந்தால் நம் வாழ்க்கையை கட்டமைக்க உதவிய சமூகத்திற்கு மிகச்சில நேர்மறையான பங்களிப்பையாவது அளித்தாக வேண்டும். தனிமனித அளவில் நேர்மறை எதிர்மறை என ஒன்று இல்லாமல் இருந்தாலும், உறவுகளின் தொகுப்பு என்னும் தளத்தில் அந்த பிரிவினை இருந்தாக வேண்டும். அதாவது சமூகத்தை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துசெல்லும் எந்த பங்களிப்பும் நேர்மறையான பங்களிப்பே. உண்மையில் நாம் சமூகம் குறித்த விழிப்புணர்வுடன் இருந்தால், சமூகத்திடமிருந்து நாம் பெற்றவற்றிற்கு நன்றியுணர்வுடன் இருந்தால், எத்தகைய செயல்கள் சமூகத்தை அடுத்த உயர் நிலைக்கு எடுத்து செல்லும் என்பதை யாரும் கூறாமலே நாம் அறிந்திருப்போம். அதற்கு தேவையான உணர்வு நிலையில் இருந்தால், நாம் அறிந்திருந்தாலும் இல்லாவிடிலும் உண்மையில் நாம் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம்

blog.change@gmail.com