Monday, April 25, 2011

ஆன்மீகம்

ஆன்மீகம்...... மிகப்பெரிய வார்த்தை. பொருள் விளக்க முயலுபவரின் மனநிலைக்கு ஏற்ப பொருள் கொடுக்கும் அற்புத வார்த்தை. அதன் உச்சரிப்பிலேயே ஒரு அறிவுஜீவித்தனத்தை, ஒரு பெருமிதத்தை, ஒரு உயர்ந்த பாவனையை, இதைப்போன்ற இன்னும் பலவற்றை கொடுக்கும், ஆனால் இவற்றுக்கு எல்லாம் மிக எதிர்மறையான வார்த்தை. அப்படியானால் இதை எப்படித்தான் அர்த்தப்படுத்துவது? தற்போதைய என் மனநிலைக்குட்பட்டு, என் அறிவுக்கு எட்டியவரையில் அர்த்தப்படுத்த முயலுகிறேன்.

ஆன்மீகம் மிக அந்தரங்கமான ஒன்று. ஆனால் அது இன்று மிகவும் மலினப்பட்டிருக்கிறது. ஒருவேளை அந்த வார்த்தை புழக்கத்தில் வந்தபோதே மலினப்பட்டிருக்கலாம். அந்த வார்த்தையின் அகவயத்தன்மை மற்றும் அகத்தின் எல்லையின்மை கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அந்த எல்லையற்ற அகத்தின் விளைவாக உருவானதால், மலினப்பட்டிருக்கிறது என்பது தவறானதாக கூட இருக்கலாம். ஒருவேளை அகவயமான ஆன்மீகம் புறவயமாகத் தள்ளப்படும்போது அது மலினப்பட்டிருக்கலாம். ஆம், ஆன்மீகம் என்பது அகவயமான ஒன்று. அது புறவயமாக வெளிப்படும்போது வெற்று ஆன்மீகம அல்லது போலி ஆன்மீகம் ஆகிவிடுகிறது.

இங்கு எழுதப்படுவது ஆன்மீகத்தை குறித்து. எனவே போலி ஆன்மீகத்தை குறித்து விவரிக்கத்தேவையில்லை. ஆனால் எந்த எல்லையில் ஆன்மீகம்போலி ஆன்மீகமாக உருமாறுகிறது என்று அறிந்திருப்பது மிக அவசியம். அந்த எல்லை மிக மிக நுட்பமானதாக கூட இருக்கலாம். எனவே போலி ஆன்மீகத்தைக்குறித்து அறிந்திருப்பதும் மிக அவசியமானது. மிக எளிமையாக்கூற வேண்டுமானால் ஆன்மீகத்தின் நோக்கம் எங்கே புறவயமாக மாறுகிறதோ அங்கே அது போலி ஆன்மீகமாக மாறிவிடுகிறது. ஆனால் ஆன்மீகத்தின் சில சரடுகள் புறவயமாகத்திரும்பி புறவய வாழ்க்கை தேவைகளை நோக்கிச்செல்கிறது. அவ்வாறு புறவயமாகத்திரும்பும் புள்ளியில் அதை நாம் லௌகீகமாக உணர்ந்து, ஆன்மீகத்திலிருந்து விலக்கிக் கொள்வது மிக அவசியமானது. இந்த எல்லையை உணராமல் விட்டு விட்டால் போலிஆன்மீகத்திற்குள் சென்று விடுவோம். இங்கு அகம், புறம் என்பவற்றின் மிகச்சரியான வேறுபாட்டை புரிந்து கொள்வது அவசியம். மனதினுள் நிகழ்வதாக இருந்தாலும், எண்ணங்கள் எப்போதும் புறவயமானதே. அந்த எண்ணங்கள் அகத்தை குறித்து இருந்தாலும், ஏன் ஆன்மீகத்தை குறித்து இருந்தாலும் அது புறவயமானதே – எண்ணங்கள் வெளிப்படையாக அகத்தை நோக்கி இருந்தாலும் அவை எப்போதும் புறவயமான நோக்கங்களையே சுட்டுகிறது. எனவே எண்ணங்களால் ஆன எதுவும் ஆன்மீகம் இல்லை. நுண்ணுணர்வும் அதைச்சார்ந்து எழும் இயக்கங்கள் மட்டுமே அகம் சார்ந்தது. நுண்ணுணர்வும் அதைச்சார்ந்து எழும் இயக்கங்களுமே ஆன்மீகம். அந்த நுண்ணுணர்வை அடையும் வழிமுறைகள் மட்டுமே ஆன்மீக வழியாக இருக்க முடியும், அது எந்த வழியாக இருந்தாலும்.

நுண்ணுணர்வை அடைவதற்கு, விழிப்புணர்வே அடிப்படை. நம் லௌகீக வாழ்க்கையில் விழிப்புணர்வை மிக குறைந்த பட்ச அளவில் மட்டுமே நாம் உபயோகப்படுத்துகிறோம். உதாரணமாக ஒரு செயலை செய்யவேண்டுமென்றால் அதைச்செய்யும் முறையை நாம் முடிவு செய்து விட்டு செய்யதொடங்குவோம். அதன் பின் செயலில் இருக்கும்போது அச்செயலைக்குறித்து நாம் முழுமையான விழிப்புடன் இருப்பதில்லை. அவ்வப்போது அச்செயலின் மேல் கவனம் செலுத்துவோம். நமது மனம், விழிப்பு இல்லாமலே அச்செயலை இயக்கும் சக்தியை கொண்டுள்ளது. இதுவே மீண்டும் மீண்டும் செய்யும் செயல்களில் விழிப்புணர்வின் தேவை இன்னும் குறைவாகவே உள்ளது. ஆக நாம் மிக குறைந்த பட்ச விழிப்புடன் மட்டுமே லௌகீக வாழ்வில் ஈடுபட்டுள்ளோம். நம் லௌகீக வாழ்க்கையின் தரம் நம் விழிப்புணர்வின் அளவிற்கேற்ப இருக்கும்.

நம்மை விழிப்புடன் இருக்க செய்யும் எதுவுமே ஆன்மீக சாரம் கொண்டவை. நம் நுண்ணுணர்வை அனுபவிக்க செய்யும் எதுவுமே ஆன்மீக சாரம் கொண்டவை. விழிப்புணர்வு என்பது ஒரு செயல் செய்யும்போது அல்லது நடைபெறும் போது அதை நம் மனம் முழு ஈடுபாட்டுடன் கவனித்து கொண்டிருப்பதாகும். நமது மனதால் சாதாரணமாக, மிக மிக அபாயகரமான ஆனால் தவிர்க்க முடியாத செயல்களில் மட்டும் தான் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியும். இது போன்ற ஈடுபாட்டை எல்லா செயல்களிலும் கொண்டுவரும் வழி முறைகள்தான் ஆன்மீக வழி என கூறப்பட்டிருக்கலாம். இங்கு செயல் என்பது மனதிற்கு வெளியே நடக்கும் செயல்கள் மட்டும் அல்ல, மனதினுள் நடக்கும் அகம் அல்லது புறம் சார்ந்த செயல்களும்தான்.
மனம் விழிப்புத்தன்மை அடைய அடைய அதன் உயிர்ப்பு தன்மையும் கூடுகிறது. மனதின் உயிர்ப்பு தன்மை, சோர்ந்து உயிரற்று கிடக்கும் மனதை உயிர்ப்புடன் இருப்பதாக உள்ள மாய தோற்றத்தை உருவாக்கும் எண்ணங்களை தேவையற்றதாக்குகிறது. மனதில் எண்ணங்கள் குறையும்போது உயிர்ப்புத்தன்மை மேலும் கூடுகிறது. ஆக மனம் விழிப்படைய தொடங்கும்போது உயிர்ப்பும் கூடுகிறது. உயிர்ப்படையும்போது இன்னும் விழிப்படைகிறது, மனதை ஆக்ரமிக்கும் எண்ணங்களும் மனதை விட்டு அகலத்தொடங்குகிறது.


மனதை விழிப்படைய செய்யும், உயிர்ப்படைய செய்யும், எண்ணங்களை இல்லாமலாக்கும் எந்த செயல்களும் ஆன்மீகச்செயல்களே. செயலின்மை மனதை விழிப்படைய செய்யுமானால் அந்த செயலின்மை கூட ஆன்மீக வழியாக இருக்க கூடும். ஆன்மீகம் என்பது கடவுள் என்னும் கருத்துக்கு அப்பாற்பட்டது. மனதை விழிப்புடன், உயிர்ப்புடன் வைத்துள்ள அல்லது வைத்திருப்பதற்கான வழிகளில் ஈடுபட்டுள்ள ஒருவர் கடவுள் என்னும் கருத்தை ஏற்று கொண்டாலும் மிகத்தீவிரமாக எதிர்த்தாலும் அவர் ஆன்மீக வாதியே. மனதை விழிப்புடன் வைத்திருக்க முடியாத ஒருவர் கடவுள் என்ற கருத்தை எதிர்த்தாலும், மிகத்தீவிரமாக ஆதரித்தாலும், அவர் தன்னை ஒரு ஆன்மீக வாதியாக அடையாளப்படுத்தி கொண்டால் அவர் ஒரு போலி ஆன்மீக வாதியே. கவனிக்க, ஆன்மீகத்தில் கடவுள் என்ற கருத்துக்கும், இன்றைய உலகில் கடவுள் என அறியப்படும் கருத்துக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.

No comments: