Friday, March 7, 2014

காமம்

உலக இருப்பில் உள்ள எல்லா ஆண்மை என்னும் சக்தி வடிவங்களுக்கும் பெண்மை என்னும் சக்தி வடிவங்களுக்கும் இடையே இயல்பாகவே இருக்கும், ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாக விரும்பும் மகா இச்சை, காமம் என்னும் பெயரால் சுட்டப்படுகிறது. எங்கெல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து மற்றொன்று உருவாகிறதோ அங்கெல்லாம் காமம் என்னும் மகாஇச்சையின் இயக்கம் இருப்பதாக கொள்ளலாம். காமமே உலகின் இயங்கு விசை. ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகி, புதியதொன்றை உருவாக்கி, தாம் அழிந்து புதியதை தொடர் இயக்கத்தில் சேர்க்கும் மகா இயக்கம். காமம் என்னும் இச்சை எங்கும், எப்போதும், எல்லாவற்றிலும் தொடக்கம் முடிவு இல்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது. காமத்தின் இயக்கம் அழியும்போது உலக இயக்கமும் அழியும்.

ஆம், காமம் நம் வணக்கத்துக்குரியது. காமமே நம் படைப்புக்கு ஆதாரம், நம் இருப்புக்கும் படைத்தலுக்கும் ஆதாரம், நம் அழிவுக்கும் ஆதாரம். அதற்கான வணக்கத்தை நாம் முறையாக செலுத்தியாக வேண்டும். அதற்கான வணக்கத்தை மறுக்கும்போது, காமம் நம்மை அலைக்கழிக்கிறது. அப்போது நாம் அதை வெறுக்கத் தொடங்குகிறோம். மற்றவர்களையும் அதை வெறுக்குமாறு கூறுகிறோம். அடுத்த தலைமுறைக்கும் அந்த வெறுப்பை பரப்புகிறோம். வெறுப்பின் பிரதிபலிப்பாக காமத்தை கொச்சைப்படுத்துகிறோம். ஆம், என்று காமம் மனிதனை அலைக்கழிக்க தொடங்கியதோ அன்றே அதை கொச்சைப்படுத்துதலும் தொடங்கியிருக்க வேண்டும்.

ஒரு முழு இருப்பாக நாம் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்மையும் பெண்மையும் கலந்தே இருக்கிறது. நமக்குள் இருக்கும் ஆண்மையும் பெண்மையும் கலந்து ஒன்றாகத் துடிக்கும் இயல்பும் காமமே. அந்த ஆண்மையும் பெண்மையும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகி முழுமையடையும்போது நாமும் முழுமை அடைந்திருப்போம். நமக்குள் இருக்கும் எல்லா ஆதிக்க இயல்புகளும், வெறி கொண்டு அடைய துடிக்கும் இயல்புகளும், முன்னோக்கி உந்தித் தள்ளும் இயல்புகளும் நம் ஆண்மை இயல்புகள் எனலாம். அந்த ஆதிக்கத்தை, வெறியை, உந்துதலை தன்னுள் அடக்கி, அவற்றின் நோக்கத்தை அடைய செய்து, அவற்றை இல்லாமல் செய்யும் இயல்புகளை பெண்மை இயல்புகள் எனலாம். எனவே எவரிடம் ஆண்மை இயக்கமும் பெண்மை இயக்கமும் ஒத்திசைந்து இயங்குகின்றனவோ, அவர்களின் வாழ்க்கை அந்த வாழ்க்கையின் நோக்கத்தை நோக்கி இயல்பாகவே சென்று கொண்டிருக்கும்.

தன்னுள் ஆண்மையையும் பெண்மையையும் முழுமையாக சமன் செய்யும் இயக்கங்களை இயல்பாகவே கொண்ட ஒருவருக்கு, இன்னொரு பெண்ணின் அல்லது ஆணின் துணை தேவை இல்லை. தனக்குள் உள்ள ஆண்மையையும் பெண்மையையும் கொண்டே அவர் தன்னை நிறைவு செய்து கொள்ள முடியும். மனிதர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் இத்தகைய இயல்புடையவர்கள் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தன்னுள் உள்ள எந்த ஆண்மை அல்லது பெண்மையை சமன் செய்ய இன்னொரு துணை தேவைப்படுகிறது என்பதையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிதலே இன்னொரு துணையின் மூலம் தன்னை சமநிலைக்கு எடுத்து சென்று முழுமையை நோக்கி நகர வைக்கும்.

இன்றைய குடும்ப சுழல்களை குறித்த ஒரு புறவயமான பார்வையே, காமம் குறித்த அல்லது ஆண்மை பெண்மை குறித்த அடிப்படை புரிதல்கள் சற்றும் இல்லாத சமூக சூழல் நிலவுவதை உறுதி செய்ய போதுமானது. பெரும்பாலான குடும்பங்கள் இன்று குடும்பங்களாக இருப்பது வெறும் சமூக கட்டாயத்தினால் மட்டுமே. அந்த குடும்பங்களுக்குள் ஒன்றை ஒன்று சமன் செய்யும் இயக்கங்கள் ஏதேனும் இருந்தால் அவை வெறும் தற்செயலால் மட்டுமே உள்ளன. கட்டாயத்தின் மூலம் உருவாக்கப்படும் எந்த அமைப்புகளிலும் அமைதி இருக்க வாய்ப்பில்லை. அந்த குடும்பத்தின் தலைவர்கள் காமத்தை அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அவர்கள் அறிந்த காமம் வெறும் கொச்சையான காமம் மட்டுமே. மனித அகங்காரம் கட்டாயத்தின் மூலம் நிலைநிறுத்தும் எந்த இயக்கங்களையும் தொடர்ந்து எதிர்க்கும். இதுவே பெரும்பாலான குடும்பங்களின் தற்போதைய நிலை - ஒரு பொதுவான பார்வையில். (இது பார்வையின் குறைபாடாக கூட இருக்கலாம்).

ஆண்மை மற்றும் பெண்மை குறித்த புரிதல்கள், ஆண்மையின் மற்றும் பெண்மையின் இயற்கையான மற்றும் புறவயமான ஈர்ப்புகளை முழுமையாக அடைவதன் மூலம், பூர்த்தி செய்வதன் மூலம் பெற தொடங்கலாம். ஆனால் அகங்காரம் இதற்கு தடையாக இருக்கும் ஒரு மிகப்பெரிய வேலி. ஆண்மையும் பெண்மையும் ஒன்றை ஒன்று சமன் செய்யும் இயக்கங்களிலாவது, அந்த இயக்கங்கள் முழு விசையில் இருக்கும்போதாவது, அகங்காரம் முழுமையாக அழிய வேண்டும். அத்தகைய அகங்கார அழிவுக்கு வழிவிடாத எந்த ஒருவரும் காமத்தின் சுவையின் துளியை கூட சுவைக்க முடியாது. ஆனால் இயற்கை பெருங்கருணை உடையது. ஆண்மையும் பெண்மையும் சமன் செய்யும் இயக்கத்தில் எண்ணங்களற்ற கண நேரத்தை, அல்லது அந்த கணத்தின் சிறு பகுதி நேர கால இடைவெளியை நமக்கு அளிக்கிறது. எண்ணங்கள் அழியும்போது அகங்காரம் இல்லை. இயற்கையின் பெருங்கருணையை ஏற்றுக்கொள்ளும் தகுதியுடையவர்களாக நம்மை அமைத்திருந்தால், அந்த சிறு நேர வெளியில், முழுமையின் துளியை அறிய முடியலாம். அந்த அறிதலில் இருந்து நம்மை முழுமை செய்யும் இயக்கங்களை நோக்கி நகரவும் முடியலாம்.

ஆம், அகங்காரத்தை துறத்தலே, வாழ்வதற்கான ஒரே வழி. அகங்காரத்தை துறக்க எண்ணற்ற வழிகள் இருக்கலாம். இயற்கை, காமத்தின் மூலம், அகங்காரத்தை துறத்தலின் இனிமையை அறியும் வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கிறது. இது ஒரு சாத்தியம் மட்டுமே. அந்த சாத்தியம், ஒரு பொறியும் கூட. ஆம், வாழ்க்கை ஒரு விளையாட்டு. வாழ்க்கையின் எல்லா சாத்தியங்களுடனும், நம்மை பிணைக்கும் பொறிகளும் சேர்ந்தே உள்ளன. அந்த சாத்தியங்களையும் பொறிகளையும் அறிந்தவர்களாலேயே வாழ்க்கையை விளையாட முடியும். வாழ்க்கையை விளையாட முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்!

blog.change@gmail.com


No comments: