Thursday, April 28, 2011

விழிப்புணர்வு

விழிப்புணர்வு (Awareness) பற்றி ஒரு இடுகை இதற்கு முன்பே இடப்பட்டுள்ளது. இது விழிப்புணர்வை பற்றி இன்னொரு பார்வை. விழிப்புணர்வு என்பது மனதினுள் நடக்கும் செயல்பாடுகளை அந்த மனமே கவனித்து கொண்டு இருப்பது. நமது மனம் ஒரு செயல்பாடுகளின் பிரவாகம். அந்த முழு பிரவாகத்தையும் உணரும் தன்மையே ஆன்மீகத்தின் இறுதி புள்ளியாக இருக்கலாம். மனதின் செயல்பாட்டுக்கு உதாரணமாக, நம் கண்கள் வெளியே காண்கிறது என்றால், அதே செயல் நம் மனதினுள்ளும் நடக்கும். மனதில் நடக்கும் செயல், வெளியே நடக்கும் செயல்பாட்டின் உண்மை பிரதியாக இருக்க வேண்டும் என்றால் அச்செயலை குறித்து நம் புலன்கள் மூளைக்கு அனுப்பும் செய்திகளை மனம் அவ்வாறே பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. புலன்கள் அனுப்பும் செய்திகளுடன், நம் நினைவுகளில் அந்த செயல் குறித்து உள்ள செய்திகளையும் சேர்த்து, மூளை நம் மனமாக பிரதிபலிக்கிறது. புலன்கள் அனுப்பும் செய்திகள் அந்த புலன்கள் சரியாக வேலை செய்யும் பட்சத்தில், நடைபெறும் செயலுக்கு மிக நெருக்கத்தில் இருக்கலாம். ஆனால் நம் நினைவுகளில் அந்த செயலை குறித்து உள்ள செய்திகளின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது. இப்போது நாம் அந்த செயலை கவனிப்பது என்பது, உண்மையில் நம் மனதினுள் நடக்கும் அச்செயலின் பிரதிபலிப்பை கவனிப்பதாகும். நாம் முழு ஈடுபாட்டுடன் அந்த செயலை கவனிக்காத பட்சத்தில், நம் மூளை அச்செயலை நினைவுகளாக பதிவு செய்கிறது. நாம் பெரும்பாலும் பார்ப்பது இந்த நினைவுகளை மட்டுமே. அந்த செயல் நடைபெறம்போது, மனதில் நிகழும் பிரதிபலிப்பை உணர்வது என்பது மிக மிக அபூர்வமாகவே நிகழும் – நாம் முழு ஈடுபாட்டுடன் அந்த செயலை கவனிக்கும்போது மட்டும்.

ஆக, அன்றாட வாழ்க்கையை நாம் நினைவுகளிலிருந்து மட்டுமே மீட்டெடுத்து கொண்டிருக்கிறோம். ஆகவே நாம் வாழ்க்கையை நிகழும்போது, நிகழும் கணத்தில் வாழ்வதில்லை. வாழ்க்கை முடிந்த பின், நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை நாம் நிகழும் கணத்தில் வாழ, வாழ்வின் மேல் மிகப்பெரிய ஈடுபாடும் அந்த ஈடுபாட்டின் விளைவாக உருவாகும் விழிப்புணர்வும் அவசியம். நாம் நிகழும் கணத்தில் வாழ அறிந்து கொண்டோமென்றால், நம் நினைவகளுக்கு தேவைகளும் இல்லை, எனவே நினைவுகளை மீட்டெடுத்து அந்த நினைவுகளில் வாழ வேண்டிய அவசியமும் இல்லை. நிகழும் கணத்தில் வாழும்போது, நினைவுகளின் மூலமாக எழும் துக்கம், துயரம் போன்ற கொடுந்துன்பங்களும் இல்லை.

நம் மனதை நாம் பெரும்பாலும் புறவயமான செயல்களில் ஈடுபடுத்தி இருப்பதாலும், அந்த புறவயமான செயல்கள் மனதில் உருவாக்கும் பாதிப்புகளாலும், நம் மனம் விழிப்புணர்வு தன்மையை பெரும்அளவில் இழந்துள்ளது. இழந்த அந்த விழிப்புணர்வை திரும்ப பெறும் முயற்சிகளின் தொகுப்பே ஆன்மீகம் ஆகும்.

நாம் நிகழும் செயலை அவ்வாறே உணர்வதற்கு தடையாக இருப்பது, புலன்கள் மூளைக்கு கொடுக்கும் செய்தியை மனமாக பிரதிபலிக்கும்போது அதை திரிவடைய செய்யும் நினைவுகளே ஆகும். அந்த நினைவுகளானது அச்செயலைப்பற்றி மனம் முன்பே அறிந்துள்ள செய்திகளோ அல்லது நம் நம்பிக்கை, பயம், ஆசை மற்றும் இது போன்ற பல, பல வடிவங்களில் இருக்கலாம். இந்த காரணிகள் ஒன்றோடொன்றாய் ஒரு சங்கிலித் தொடராய், மிக இறுக்கமாக பிணைந்துள்ளது. இந்த நினைவுகளின் சங்கிலித்தொடர் நம் புலன்கள் மனதில் பிரதிபலிப்பதை திரிவடைய செய்யும்வரை, நம் மனம் மாயத்தோற்றங்களையே நினைவுகளாக சேர்த்து கொண்டிருக்கும். நாம் விழிப்புணர்வு இல்லாமல் நினைவுகளின் மூலம் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்போது மாய உலகில் வாழ்வதை விட வேறு வழியே இல்லை.
வாழ்க்கையை நாம் நேரடியாக வாழ வேண்டுமென்றால், அதற்கான முதல் தேவை நேரடியாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற மிகத்தீவிரமான விருப்பு. வாழ்க்கையை நேரடியாக வாழ வேண்டும் என்னும் தீவிரமான விருப்பு, அதற்கு தேவையான மிக குறைந்த பட்ச விழிப்புணர்வை கொடுக்கிறது. இந்த குறைந்த பட்ச விழிப்புணர்வுடன் வாழ்வின் மீதான அதீத ஈடுபாடும் சேரும்போது, வாழ்வின் ஒவ்வொரு வாசலாக நம் முன் திறக்க தொடங்கலாம். ஆனால் அந்த ஒவ்வொரு வாசலிலும் நம்மை மீண்டும் நினைவுகளில் சிக்க வைக்கும் பொறிகள் நமக்காக காத்து கொண்டிருக்கலாம். இந்த பொறிகளில் சிக்காமல் வாழ்க்கையை உணர நம் தீவிர விருப்பையும் அதன் மூலம் பெறும் விழிப்புணர்வையும் உயிர்ப்புடன் வைத்திருப்பது மிக மிக அவசியம்.

ஆக, விழிப்புணர்வு என்பது செயல்கள் நம் மனதில் பிரதிபலிக்கும்போதே அந்த செயலை உணர்வது ஆகும். அந்த செயல் என்பது நமக்கு வெளியே நடைபெற்று புலன்களால் மனதில் பிரதிபலிக்கப்படலாம் அல்லது நம் மனதுக்குள் மட்டும் நடைபெறும் செயலாகவும் இருக்கலாம். விழிப்புணர்வின் உச்சத்தை அடையும்போது இந்த உலகில் நம்மால் அடைய முடியாதது என எதுவும் இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது இந்த உலகில் நாம் அடைவதற்கு என எதுவும் இல்லாமல் கூட இருக்கலாம்!

No comments: