Sunday, November 27, 2016

புகை

பல ஆயிரம் புகை கக்கும்
வாகனங்கள் சுமந்து வந்த மனிதர்கள்,
காடழித்து
அகழ்ந்தெடுத்த கரி உமிழ்ந்த புகை
குளிரூட்டிய அலுவலக அறைகளில்,
வடிவமைத்து தொகுத்தெடுத்த
ஆழ்துளை கிணறுகளும், எண்ணை வாயு ஆலைகளும்,
மீண்டும் புகைகக்கி
புகையுண்ட மின்சாரம் தின்று
புகையுமிழும் வாகனத்தில்
வந்த சிவப்பு உருளை
புகையின்றி எரிகிறது

எங்கள் வீட்டு அடுப்பில்.

Wednesday, November 23, 2016

பசியறிதல்

நேற்றுக் காலை எழுந்த என் ''டீன் ஏஜ்'' மகளுக்கு
அன்னையுடன் சிறு பூசல்.
எப்போதும் போல
குழந்தைமையின் திமிருடன்
உணவுண்ண மாட்டேனென்று ''உம்''மென்று சென்றமர்ந்தாள்.

கையிலிருந்த கண்ணாடி முப்பட்டகத்தில் (Prism)
காலை ஒளியின் விலகலை நோக்கியிருந்தாள்.
காலை சென்றது.
மதிய ஒளியின் செறிவு கூடியது.
அந்தி மயங்கி ஒளியவிந்தது.
அன்னையின் கருணை
பொருத்தமில்லா திமிரில் மோதி சற்றே
திசை மாறியிருந்தது-
காலையில் மிரட்டல்
மதியத்தில் மெல்லிய அழைப்பு
அந்தியில் சிறு கெஞ்சல்.
அவளில் எரிந்தவிந்தது பசி.
எரிந்தவிந்த பசி, துளிர்த்து வாடிய திமிர், மோதி திசைமாறிய கருணை
சேர்ந்து உண்டது சில  பழத் துண்டுகளை.

இன்று காலை எழும்பிய
அவளின், அன்னையின் கொஞ்சல்களில்
நேற்றின் எச்சம் சற்றும் இல்லை.
பார்த்து நின்ற என் புன்னகை
சுவர் கண்ணாடியில் தெரிந்த
என் முக பிம்பத்தில் விரிந்திருந்தது.

Sunday, November 20, 2016

இல்லாமலாவேன்

இன்றிரவு ஒரு கோப்பை
மதுவருந்தியிருக்கிறேன்
மது
ஒரு கணத்தில் என்னை
வேறொருவனாக மாற்றியது
இன்னொரு கணத்தில்
நான் இல்லாமல் இருந்தேன்!
மற்றொரு கணத்தில்
இதுவரை அறியாத ஒன்றை அளித்தது

என்னை ஆக்கியிருக்கும்
என்னுடலின் நுண்ணுயிர்கள்
அந்தக் கணங்களில் எவ்வாறு மாறின?

நாளை ஒரு தினம் எனக்கு வரக்கூடும்.
மதுக் கோப்பையின் துணையின்றி
அன்று நான் வேறொருவனாக மாறியிருக்கலாம்
நானே இல்லாமல் உயிர்தரித்திருக்கலாம்
என்னை ஆக்கியிருக்கும் நுண்ணுயிர்களே!
உங்களை அமைத்திருக்கும் அணுக்களே!
அணுக்களில் ஆடியிருக்கும் உருவமற்றதே! எல்லையற்றதே!
அந்த நாள் எனக்கு அமையுமோ?
அதையெனக்கு நீங்கள் அளிப்பீர்களோ?

இன்று நான்
ஒரு கோப்பை மதுவினால்,
மதுவை அடைந்த ஆணவத்தால்,
நீங்கள் என் பக்கம் இருக்கும் செருக்கினால்
உங்களை அவமதித்து
அதை
அடைந்திருக்கிறேன்!
அல்லது நீங்களே மனமுவந்து மதுவை ஏற்று
உங்களையே அவமதித்து
எனக்கதை அளித்திருக்கிறீர்களோ!

மதுவின் துணையின்றியும்
அதை
நான் அடையக்கூடும் என்பதையும்
உங்கள் துணையுடன் அறிந்திருக்கிறேன்
  
என்று நான் அடைவேன்
அதை!
உங்களை இழக்காமல்! அவமதிக்காமல்!

அன்று நான் உன்னதமானவனாவேன்
உன்னதத்தின் திளைப்பில் இல்லாமலாவேன்.
என்னுடன் நீங்களும்!
உங்களுடன் நானும்!