சு. வேணுகோபால் சிறப்பிதழாக 07-09-2015 அன்று வெளியிடப்பட்ட பதாகை இணைய இதழில் பதிப்பிக்கப் பட்ட கட்டுரை.
அனைத்துச்
செயல்களுக்கும் எங்கோ நிகழும் சிறு தூண்டுதலை அவற்றின் தொடக்கப்புள்ளியாக வரையறுக்கலாம்.
வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் என்று இருப்பு ஒவ்வொரு மனிதனையும் அதன்
மெல்லிய அழைப்புகளால் கணம்தோறும் தூண்டிக்கொண்டிருக்கிறது. தனிமனிதன்
அவன் இயல்பிற்கேற்ப, தூண்டுதலை அறிந்து கொள்ளும் உணர்திறனின்
வீரியத்திற்கேற்ப சில தூண்டுதல்களை மனதில் அடைகிறான். அவற்றிலும்
மிகச் சிலவையே செயல்களாக தம்மை வெளிப்படுத்துகின்றன. மற்றவை அனைத்தும்
அவன் மனதுக்குள்ளேயே அழிந்து விடுகின்றன. செயல்களின் அனுபவத்தில்
வாழ்க்கை நிகழ்கிறது.
ஜூலை
முதல் தேதியன்று மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது, எனக்கேயான ஒரு தூண்டுதல் காத்திருந்தது.
அது என்ன என்பதில் முக்கியத்துவம் ஒன்றும் இல்லை. அப்போதிருந்த மனநிலை அத்தூண்டுதலை செயலாக மாற்றும் உத்வேகத்தையும் அளித்தது.
ஒரு வேளை அந்நேரத்தில் வேறு மனநிலையில் இருந்திருந்தால் அது அப்போதே
மரணத்தைக் கண்டிருக்கும். சு. வேணுகோபாலின்
எழுத்துக்கள் குறித்து சில கட்டுரைகள் வழியாகக் கேள்விப்பட்டிருந்தவை,
அந்தத் தூண்டுதலை உயிர்ப்புடன் வைத்திருந்து. அவருடைய
சில புத்தகங்களை இணையம் வழியாக வாங்கினேன். தூண்டுதல் செயலாகத்
தொடங்கி விட்டது. அதன் விளைவு எதுவாக இருந்தாலும் அனுபவித்துத்தான்
ஆக வேண்டும். எல்லா அனுபவங்களும் கணநேர தூண்டுதல்களின் கண்ணிச்சரடுதானே!
இவ்வாறு
மிகசமீபத்தில் நானும் சு. வேணுகோபாலின் வாசகன் ஆகி விட்டேன். முதலில் படிக்கத் தொடங்கியது, கூந்தப்பனை குறுநாவல் தொகுதி.
கதைமாந்தர்களின் செயல்களும், அந்தச்செயல்களுக்குப்பின்
இருக்கும் எண்ண ஓட்டங்களும், எண்ண ஓட்டங்களை வடிவமைத்த மனிதர்களின்
இயல்புகளும், கதைமாந்தர்கள் வாழ்வில் ஆடும் ஆட்டத்தை இந்தக் கதைகள்
விவரிக்கின்றன. நுண்ணிய மனஇயக்கங்களின் விவரிப்புகள்,
மனித மனதின் அழகுகளையும் முடிச்சுகளையும் வெளிப்படுத்துவதுடன்
இவைகளைப்பற்ற வாசிப்புக்கு உதவுகின்றன..
'ஜக்கையன் அவர் முகத்தைப் பார்த்தான் இமைகளில் ஈரம் மினுமினுத்தது' என்று முடிகிறது கண்ணிகள் என்னும் கூந்தப்பனைத் தொகுதியின் முதல் கதை.
விவசாயம் செய்து வரும் நிலத்தில், விவசாய ஆட்கள்
பற்றாக்குறையால் வட்டிக்குக் கடன் வாங்கி, ஏற்கனவே இருக்கும் கிணற்றை விட்டுவிட்டு
புது போர்வெல் வைத்து தென்னைகள் நடுகிறார் ரங்கராஜன். இந்த நிலையில்
மகனை கல்லூரியில் சேர்க்க மாத வட்டியில் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி, வட்டிக்காரன் கெடுபிடியால் அது வாரவட்டிக் கடனாக மாறி, சில வாரங்களில் வட்டி அசலைத் தின்று விடுகிறது. வட்டி
கொடுக்க முடியாததால் பொது இடத்தில் வைத்துத் தாக்கப்பட்டு, மரியாதையை
இழந்து தோட்டத்தையும் இழக்கும் நிலைக்கு வருகிறார். ஒரே நம்பிக்கை
அறுவடைக்கு வரப்போகும் திராட்சைத் தோட்டம். திராட்சை விளைச்சலை
நல்ல விலைக்கு எடுப்பதாக ஆசை காட்டுகிறார், ஜார்ஜ் என்னும் வியாபாரியின்
கணக்கப்பிள்ளை. ஆனால் இறுதியில் கிறிஸ்தவனாக மாறினால்தான் அவர்களால்
திராட்சைகளை விலைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்னும் கண்ணியை வீசுகிறார்கள்.
மிக மென்மையாக அதைத்தவிர்த்து விட்டு ரங்கராஜன் வெளியே வருகிறார்.
பன்முகப்பண்பாட்டிலிருந்து
ஒருமுகப்பண்பாட்டிற்கு அவர்களுக்கேயான காரணங்களால் நகர்ந்தவர்கள்,
அந்தப் பன்முகப்பண்பாட்டின் கூறுகளை இழந்து விடுவார்களா? அவர்கள் நோக்கமும் ஒருமுகத்தன்மையை அடைந்து விடுமா? அல்லது
பன்முகத்தன்மையுடன் இருக்க இயலாதவர்கள்தான் அந்தப் பண்பாட்டை துறந்து விட்டு செல்கிறார்களா?
அப்படி பொதுமைப்படுத்த முடியாதுதான். ஆனாலும் அது
ஒரு காரணமாகவும் இருக்கக் கூடும். கண்ணிகளின் இறுதி வரிகள் இந்தத்
திசையையும் சற்றுத் திரும்பிப்பார்கத் தூண்டுகின்றன. அவர்
கண்களில் கசிந்த ஈர மினுமினுப்பு இயலாமையினாலா, பன்முகத்தன்மையின் மனவிரிவு அளிக்கும்
இரக்கத்தினாலா அதுவும் இல்லையெனில் ஒருமுகத்தன்மையின் கூர்முனைத் தாக்குதலினாலா?
இந்தக்
கதையில், துயரத்தை நோக்கி இட்டுச் சென்றாலும் மனம் ஆடும்
விளையாட்டுகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ரங்கராஜன் மகனை கல்லூரியில்
சேர்க்க வட்டிக்கடன் வாங்க தானாகவே முடிவு செய்து விட்ட பின்னும் அவருக்கு ஜக்கையனின்
ஆலோசனை தேவைப்படுகிறது. ஜக்கையன் அவரை யோசனை செய்யச் சொல்லும்
ஒவ்வொரு முறையும், அவருக்கேயான சாக்குபோக்குகள் வழியாக எடுத்த
முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆனாலும் ஆலோசனை தேவைப்படுகிறது.
இது சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் நடிக்கும் மனநாடகம்தானே? நாமே நடிக்கும்போது அது நாடகமாகத் தெரிவதில்லை. கதையில்
அத்தகைய தருணத்தின் விவரிப்பு நம் இயல்பை உணரச் செய்து ரசிக்க வைக்கிறது.
மனிதர்கள்
ஒருவருக்கொருவர், சிறு உதவிகளைச் செய்து அந்தச் செயல் அளிக்கும்
மனநிறைவில் நிறைந்திருப்பது மிகவும் இயல்பானது. சமயங்களில் அதீத
தன்முனைப்போ அல்லது தயக்கமோ அவற்றைச் செய்ய விடாமல் தடுக்கலாம். சு. வேணுகோபாலின் கதைகளில், தயக்கத்தின்
மூலம் உதவிகளைத் தள்ளிப்போடுவதும், மற்றொருவர் தயக்கமின்றி
அதே உதவியைச் செய்வதைக் கண்டு, தன் தயக்கத்தையும் அதற்கான காரணத்தையும்
கண்டடைவதும் மிக இயல்பாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய
விவரிப்புகள் இந்தக் கதைகளின் அழகுகள் எனத் தோன்றுகிறது. 'வேதாளம்
ஒளிந்திருக்கும்' கதையில் இதைப்போன்ற இரண்டு தருணங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
பஸ்-ல் ஏறும் கால் ஊனமுற்றவர், ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருப்பவரை வலுக்கட்டாயமாக எழுப்பி
விட்டு அதில் அமர்கிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் இடுப்பில்
கைக்குழந்தையுடன் ஏறி நெருக்கத்தில் அல்லாடுகிறார். சற்றுப் பின்னால்
அமர்ந்திருக்கும் கதைச்சொல்லி, தன் அருகில் வந்தால் எழும்பி இருக்கையை
அளிக்கலாம் என எண்ணிக்கொண்டிருக்கையில், அந்த ஊனமுற்றவர் தன்
இருக்கையிலிருந்து எழுந்து அதில் அந்தப்பெண்ணை அமரச் செய்கிறார். இதே கதையில், இன்னொரு பஸ் பிரயாணத்தில் தன்னிடம் இருந்த
பணம் திருடப்பட்ட நிலையில் ஒரு முதியவர் டிக்கெட் எடுக்க முடியாத காரணத்தால் கண்டக்டரிடம்
இருந்து வசையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். கதைச்சொல்லி அவருக்கு
உதவலாமா என எண்ணிக்கொண்டே, இது போன்ற சந்தர்ப்பங்களில் ஏமாந்து
போன ஒரு நிகழ்வை அசைபோட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு பள்ளி மாணவன்
முதியவருக்கான டிக்கெட் வாங்கி விடுகிறான். மனதின் அழகுகளையும்,
அவற்றை வெளிப்படுத்தும் தயக்கங்களையும் இத்தகைய நிகழ்வுகளின் விவரிப்புகள்
மூலம் சு. வேணுகோபால் அங்கிங்கு சித்தரிக்கிறார்.
'மெலிதாக கைகளில் படிந்திருக்கும்
ரோமங்களிலும், தோலிலும், எலும்பிலும், திசுவிலும், திசுவுக்குள் அணுவிலும், நகங்களிலும், உடலை முழுவதும் சுற்றி வரும் இரத்தத்திலும்,
இன்ன இடமென்று இல்லாமல் அவனுக்குள் அந்த வியாதி பதுங்கியிருந்தது'.
'அபாயச் சங்கு' கதையில் கதைநாயகனான சுரேந்திரனின்
காமநோய் இப்படி விவரிக்கப்படுகிறது. காமம் மட்டும்தான் இப்படிப்
பதுங்கியிருக்க வேண்டுமா? பொறாமை, பயம்,
பேராசை, வஞ்சகம் என எது வேண்டுமானாலும் உடலின்
ஒவ்வொரு அணுவிலும் படர்ந்திருக்கும் வியாதியாகவும் இருக்கலாமே. அடுத்த வரியில் 'மோகம் என்று சொல்வதைவிட அவமானத்தின்
பிரதிபிம்பம் என்று சொல்லலாம்' என்று கூறி, நோயின் மூலமும் உணர்த்தபபடுகிறது.
சுரேந்திரன்
கல்லூரியில் படிக்கும் வயதில் அந்த வீட்டிற்குக் குடிவருகிறார்கள்.
எதிர் வீட்டில் கோகிலா குடியிருக்கிறாள். அவளின்
அம்மா ரத்னமணி. கோகிலா சுரேந்திரனை உசுப்பேற்ற, அவர்களுக்குள் காதல் வருகிறது. அரசாங்க வேலைக்கு லஞ்சம்
கொடுத்து, அது தற்காலிக வேலை என்பது தெரியாமல், வேலையில் சேர்கிறான். அரசாங்க வேலை கிடைத்ததும்,
ரத்தனமணியும் அவர்கள் காதலை ஏற்பதுடன் ஊக்குவிக்கிறாள். ஆனால் தற்காலிக பணிக்காலம் முடிந்ததும் சுரேந்திரனுக்கு வேறு வேலைகள் கிடைக்கவில்லை.
கோகிலாவுக்கு வேறு திருமணம் அவள் ஒப்புதலுடன் செய்து வைக்கப்படுகிறது.
சுரேந்திரன் அவமானப்படுத்தப்படுகிறான், அவமானமடைகிறான்.
இதற்கு வடிகாலாக ரத்னமணியைக் காமத்தால் ஆள நினைக்கிறான்.. அவளும் உடன்படுகிறாள். காமம் அவனையே முழுமையாக ஆக்கிரமிக்கும்
வியாதியாகப் பரவுகிறது. தன் நோயின் தீவிரத்தையும், அதன் காரணத்தையும் விளைவுகளையும் உணரும் தருணத்தில் நோயை அழிக்க, தற்கொலை செய்து கொள்கிறான்.
தன்
இயலாமையை அறியும் சாதாரண மனிதன் அதை மறைக்கும் பாவனைகளை நடிப்பதும்,
அவை வாழ்க்கையை மேலும் சிக்கலாக்குவதையும்தான் நடைமுறை வாழ்க்கையில்
பெரும்பாலும் காண்கிறோம். ஆனால் தன் இயலாமையை காலம் கடந்து அறியும்
'கூந்தப்பனை' கதையின் நாயகன் சதீஷ், அந்த இயலாமையை வெற்றி கொள்ள முயல்கிறான். அது இயலாமை
மட்டும் அல்ல தன் உடலின் இயல்பும் அதுதான் என அறியும்போது அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத்
தன்னிடமிருந்து மனமுவந்து விடுதலை அளிக்கிறான். அவன் பெருந்தன்மையை
காண மறுக்கும் சமூகம் அதற்காக அவனை அவமதிக்கிறது. அதைவிட விடுதலை
பெற்ற பெண்ணிடமிருந்தும் இயல்பாக வரும் அவமதிப்பு அவனைத் துரத்துகிறது. அவமதிப்பையும் இயலாமையும் சதீஷ் கடந்து சென்றடைந்த இடம், சற்றே நுண்ணுணர்வு கொண்ட வாசகனுக்கு, எந்த சுயமுன்னேற்றம்
குறித்த படைப்புகளும் அளிக்காத வாசிப்பனுபவத்தை அளிக்கும் சாத்தியமுள்ளது. கூந்தப்பனை என்னும் சொல், தன் வாழ்வில் ஒரே ஒரு முறை
மட்டும் பூத்துக் காய்க்கும் ஒரு வகையான பனை மரத்தின் பெயர் என்று இணையத் தேடுதல்
மூலம் அறிந்தேன்.
சதீஷ்,
உடல் உறுதி உடையவன். அவன் உடல் பெண்களை மோகம் கொள்ள
வைக்கிறது. ஹேமலதாவுடன் சதீஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
அவளும் அவன் உடலைக்கண்டு மோகிக்கிறாள். திருமணத்திற்குப்பின்தான்
சதீஷின் இயலாமை அவனுக்குத் தெரிய வருகிறது. அவனால் முழுமையான
உடலுறவு கொள்ள முடியாது. ஏமாற்றத்தில் ஹேமலதா இடிந்து விட்டாலும்
சமாளித்துக்கொள்கிறாள். அவனுடன் இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சித்து,
அவனையும் இயல்பாக்க முயற்சிக்கிறாள். ஆனால் சதீஷ்
தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறான்.
தன் நண்பனுக்கும் ஹேமலதாவுக்கும் திருமணம் செய்வித்து அவர்களுடனே வாழ்கிறான்.
சமூகம் அவன் பெருந்தன்மையை ஏற்றுக்கொள்ளாமல், அவன்
இயலாமையை மட்டும் அவனுடன் அடையாளப்படுத்துகிறது. தன்மனைவிக்கும்
அவள் புதுக்கணவனுக்கும் தான் இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்து, தற்கொலை
செய்து கொள்ளும் எண்ணத்துடன் அவன் தன் வீட்டிலிருந்து வெளியேறுகிறான். ஆனால் தன் இயல்பிற்கேற்ற வாழ்க்கையை அடைந்து, தன்னுள்
இருக்கும் கருணையை வெளிப்படுத்தும் உச்ச கணத்தில் கதை முடிகிறது. இந்த உச்சகணம்தான் அவனில் மலர்ந்த ஒரே மலர் என்பதைத்தான் கதை சொல்கிறது.
'வெண்ணிலை' சிறுகதைத் தொகுதி, முற்றிலும்
வேறான வாசிப்பனுபவத்தை அளித்தது. என் பார்வையில், ஒவ்வொரு கதையும் மனிதனின் ஒரு சிறு தன்மையை, பெரும்பாலும்
கவனிக்கப்படாத அல்லது எதிர்மறையாக பொதுபுத்தியில் விளங்கிக்கொள்ளப்படும் தன்மையின்
அடிப்படையாக இருக்கும் அழகை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. உதாரணமாக 'வெண்ணிலை' சிறுகதை.
நண்பர்கள் சிலர் சினிமாவிற்கு மோட்டார் சைக்கிளில், மருத்துவமனை வாசல் வழியாகச் செல்கிறார்கள். 'சிக்னல்'-ல் கடந்து செல்லும்போது, ஒரு பெண் இவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதைக்
கவனிக்கிறார்கள். அந்தப்பெண் விபச்சாரியாக இருப்பாளோ,
சினிமாவுக்குச் செல்லாமல் அவளை அழைத்துக்கொண்டு சுற்றலாமா என்னும் ரீதியில்
இருவரும் பேசியவாறு தியேட்டருக்கும் சென்று சேர்ந்து விடுகிறார்கள். அந்தப் பெண், அவர்களுக்குத் தெரிந்தவள்தான் என்பதும்
பின்னர் நினைவுக்கு வருகிறது. எதிர்பார்த்துச் சென்ற சினிமா மாற்றப்பட்டு
விட்டதால், அதே வழியில் திரும்பி வருகிறார்கள். அந்தப்பெண் இன்னும் அங்கு நிற்கிறாள். இவர்களைக் கண்டதும்,
ஏதோ கேட்பதைப்போல பார்க்கிறாள். இவர்கள் சென்று
விசாரிக்கும்போதுதான் அவள் இருக்கும் இக்கட்டு புரிந்து, அவளுக்குத்
தேவையான உதவிகளைச் செய்கிறார்கள். ஒரு செயலின் பின்னால் இருக்கும்
நோக்கம் அறியப்படாமல் இருக்கும்வரை, அந்தச் செயல் மற்றவர் எண்ணங்களை
எவ்வாறு அலைக்கழிக்கிறது, செயலின் பின் இருக்கும் உண்மை வெளிப்படும்போது,
அது எவ்வாறு மற்றவர்களைத் தாக்குகிறது என்பது, கதையின் விவரிப்பில் இன்னும் அழகாக வாசகர்களைத் தொடுகிறது. அந்தத் தொடுதல் நிகழ்ந்தால், எண்ணங்களை உண்மையிலிருந்து
பிரித்துப் பார்ப்பது சாத்தியமாகலாம்.
'வெண்ணிலை' தொகுதியில் வரும் 'சந்தர்ப்பம்'
சிறுகதையை, அதைப் படிக்கும்போது இருந்த மனநிலை
என்னை ரசிக்க வைத்தது. பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள்,
தங்கள் வகுப்புத்தோழனின் அக்கா திருமணத்துக்காக பக்கத்து ஊருக்குச் சென்று,
ஒரு இரவு அங்கு தங்குகிறார்கள். அங்கிருக்கும்
நேரம் முழுவதும், அந்த வயதுக்கேயான கொண்டாட்டங்களை நிகழ்த்துகிறார்கள்.
அவர்களில் ஒருவன் கதிரேசன். அவன் எல்லா எல்லைமீறல்களிலிருந்தும்
ஒதுங்கியிருப்பதால் 'பிள்ளைப்பூச்சி' எனப்பெயர்பெற்றவன்.
கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, அடுத்தநாள் வீடு
திரும்புகிறார்கள். கதிரேசனும் இன்னொருவனும் தவிர அனைவரும் வழியில்
இறங்கிச் சென்று விடுகின்றனர். அவர்கள் இருவரும் பஸ்நிலையத்தில் இறங்கிச் செல்லும்போது,
ஒரு இளைஞன் பெண் ஒருத்தியை மானபங்கப்படுத்துகிறான். கூட்டம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறது. கொதிக்கும்
ஒரு சிலரும் அவன் தன் கையில் வைத்திருக்கும், ஆயுதத்தைக் கண்டு
பயந்து ஒதுங்குகிறார்கள். கதிரேசன் எதிர்பாராத ஒரு தருணத்தில்,
ஏதோ ஒரு தூண்டுதலில் பாய்ந்து அந்த இளைஞனை வீழ்த்துகிறான். அவன் நண்பனும் அவனுக்கு உதவுகிறான். அனைத்தும் முடிந்து
விடுகிறது. ஆனால் அவன் இயல்பான பயம் மீண்டும் அவனிடம் ஒட்டிக்கொள்கிறது.
தங்களை வீரர்களாக வரித்துக் கொள்பவர்கள், வீரம்
தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அதை ஒளித்து வைத்து விடுகிறார்கள். ஆனால் இயல்பிலேயே பயத்துடன் இருப்பவன், தேவையான நேரத்தில்
பயத்தை மறந்து, வாழ்வின் தேவைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறான்.
என்
வாசிப்பும், ரசனையின் விரிவும் எல்லைக்குட்பட்டது. அந்த எல்லைக்குள் அடைந்த வாசிப்பனுபவம்,
என்னளவில் குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது. என்
ரசனை பெரும்பாலும் புறச்செயல்களை விட அக இயக்கங்களைப் புரிந்து கொள்ளும் நாட்டம்
கொண்டதாக இருக்கும். அந்த வகையில் காணும்போது இவ்வாசிப்பு ஒரு
முழுமையான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும். பெரும்பாலான
கதைத்தருணங்கள் புற இயக்கங்களாக இருந்தாலும் அவற்றுக்குக் காரணமாக இருந்திருக்கும்
எண்ண ஓட்டங்களை கற்பனை செய்வது ஒரு இனிய அனுபவமாகவே இருந்தது.