Saturday, June 20, 2015

உலக யோகா தினம்

ஜுன் 21-ம் நாள் உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம், முதல் உலக யோகா தினம் கொண்டாடப்படவிருக்கிறது. அனைத்தும் வணிகமயமாக்கப்பட்ட உலகில், பலியிடப்பட்டுள்ள மனித ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக்கொள்ள போராடும் மனிதத் திரளுக்கு இந்தியப் பண்பாடு அளிக்கும் பரிசு. அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என அனைத்து தினங்களும் மனித நுண்ணுணர்வுகளைத் தூண்டி, வணிகம் செய்து வரும் இக்காலத்தில், யோகாதினமும் வணிகமயமாக்கப்படாமல் அதன் நோக்கத்தை அடைய வேண்டும் என வாழ்த்துவோம். இதுவும் இந்தியப்பண்பாட்டின் பழம்பெருமையை மட்டும் முன்னிறுத்தி சுய மதிப்பை அடைவதற்கும் புது வணிக வாய்ப்புகளை பெறுவதற்கும் மட்டும் பயன்படுத்தப்படுமானால், உலகம் அதன் ஆரோக்கியத்தை அடைய திறக்கும் ஒரு வழி, திறக்கும்போதே அடைக்கப்பட்டும் விடும். பொருளாதாரம்தான் வாழ்க்கை என மாறி வரும் சூழலில், அனைத்தையும் எதிர்மறை கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. அல்லது பார்வை, அறியாமலே அந்தக் கோணத்தையும் நோக்குகிறது.

ஜுன் 21-ம் நாள் வானவியல் நோக்கில், பூமியின் இயக்கத்திலும் ஒரு முக்கியமான நாள். பூமியின் பார்வையில், சூரியன் அதன் வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் நாள். தெற்குத் திசை நோக்கிய இந்தப் பயணம் தட்சிணாயனம் எனப்படுகிறது. இதுவரை சூரியனுக்கும் பூமிக்குமிடையேயான இருந்து வந்த ஈர்ப்பு விசையின் திசையில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டு, அடுத்த ஆறுமாதங்களுக்கான திசை நிர்ணயிக்கப்படுகிறது. பூமியின் மேல் சூரியன் செலுத்தும் விசை, பூமியின் அங்கமான மனிதர்கள் மேலும் தாக்கத்தைச் செலுத்தும். தட்சிணாயன காலம், மனிதர்களின் யோக சாதனைகளுக்கு ஏற்ற காலமாக கூறப்படுகிறது. எனவே ஜுன் 21-ம் நாள், யோகா கலையைப் பொறுத்தவரைக்கும் முக்கியமான நாள்.



யோகா என்னும் சமஸ்கிருத மொழி வார்த்தைக்கு 'ஒருமை' அல்லது 'ஒன்றாகுதல்' என தமிழில் பொருள் கொள்ளலாம். எது ஒன்றாகிறது? எதனுடன் ஒன்றாகிறது? தத்துவ விளக்கங்களுக்குள் நுழையாமல் எளிய தர்க்கங்கள் துணை கொண்டு விளக்க முயலலாம்.

மனித மனதின் அடிப்படை இயங்கு விசை, அது உணரும் இருமைத் தன்மையாகும் (Duality). சாதாரண இயங்குதளத்தில் மனித அறிவு முழுவதும் இருமைத்தன்மையின்  வேறுபாட்டை (Contrast), அல்லது பிரித்தறியும்(Discrimination) திறனை அடிப்படையாக் கொண்டு அடையப்பட்டிருக்கிறது. மூளையால் பிரித்தறிய முடியாவிட்டால், இன்று நாம் அடைந்திருக்கும் எவையும் அறியப்பட்டிருக்காது. அத்தனை ஏன்? மனித வாழ்க்கையே நிகழ முடியாது. உதாரணமாக, இருளை அறிந்த மனதால்தான் ஒளியை அறிய முடியும், ஒலியை அறிந்த மனதால்தான் நிசப்ததை அறிய முடியும், துன்பத்தை அறிந்த மனதால்தான் இன்பத்தை அறிய முடியும். நஞ்சை அறிந்த மனதால்தான், அதை விலக்கி உடலைப் பேண முடியும். ஆபத்தை அறிந்த மனதால்தான் அதை விலக்கி பாதுகாப்பைத் தேட முடியும். இந்த முரண்பாடுகள்தான் உயிர் வாழ்க்கையை சாத்தியப்படுத்தி இருக்கிறது.

அறிவு இருமைத் தன்மையினால் அடையப்பட்டிருப்பதால், மனித எண்ணங்களும் இருமை நிலையிலேயே அமைந்திருக்கும். இருமைத்தன்மைகளை அதனுள் பெருக்கிக் கொள்ளும்தோறும், மனதில் எண்ணங்களும் பெருகுகின்றன. அவை  குறையும்தோறும் எண்ணங்களும் குறைகின்றன. முன்பே கூறியபடி, சாதாரண இயங்கு தளத்தில், இருமைத் தன்மையின் மூலமே அறிவு அடையப்படுகிறது. எனவே, அறிவை அடையும்தோறும் எண்ணங்களும் விரிகின்றன.

மனித மூளையின் 10% அல்லது அதற்குக் குறைவான அளவு மட்டும்தான் பெரும்பாலான மனிதர்களில் உபயோகப்படுவதாகக் கூறப்படுகிறது. இதை ஒரு நிறுவப்பட்ட உண்மையாக எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், மனித மூளையின் சாத்தியங்களை ஒப்பிடுகையில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. எண்ணங்களால் நிறைந்திருப்பதால், மூளையின் முழு சாத்தியங்களை அதனால் அடைய முடிவதில்லை. உடலில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் மூளையால்தான் ஒருங்கமைக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான நிகழ்வுகளை மனம் அறிவதில்லை. காரணம், மனம் எண்ணங்களால் நிறைந்திருப்பதால், உடலின் நிகழ்வுகளை உணர்வுகளாக அதனால் அடைய முடிவதில்லை. மனதின் எண்ணங்கள் குறைந்தால், அடையும் உணர்வுகளும் அதிகரிக்கலாம். மனதின் இந்த இருமைத்தன்மைகளை கடந்து, செல்வதுதான் யோகாவின் நோக்கம். அதன் மூலம் எண்ணங்கள் குறைந்து உணர்வுகள் அதிகரிக்கின்றன. உணர்வுகளுடன் வாழ்வதே வாழ்க்கை. உணர்வுகளே இன்பம். உணர்வுகளின் உச்சத்தில் நிகழும் வாழ்க்கை பேரின்பம்.

மனித மனதை விளக்கும் தத்துவங்களில், இருமைத்தன்மை பல்வேறு குறியீடுகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. ஆண்மை-பெண்மை, புருஷன்-பிரகிருதி, யின்-யாங், சிவன்-சக்தி, இட நாடி-பிங்கல நாடி என்னும் குறியீடுகள் இவற்றில் சில. பௌதீக அளவில், இந்த இருமைத்தன்மையை இடது மூளை-வலது மூளை என்றும் கூறலாம். இடது மூளை தர்க்க நிகழ்வுகளுக்கும் (Logic) வலது மூளை உணர்ச்சிகளுக்கும் (Emotions) அடிப்படையாக இருக்கிறது. தர்க்கமும் உணர்ச்சிகளும் ஒன்றை ஒன்று பெரும்பாலும் முரண்படும் இயக்கங்கள். அதாவது மூளையின் இயக்கம், அன்றாட இயங்குதளத்தில் வலது\இடது மூளைகளின் வெவ்வேறு செயல்பாடுகளினால் முரண்பாடுகளுடன் இருக்கும். இந்த முரண்பாடுகளும் மனித வாழ்க்கையை சாதாரண தளத்தில் முன்னெடுத்துச் செல்கின்றன.

மூளையின் முரண்பாடுகளை கடந்து கூட வாழ்க்கை நிகழலாம். தர்க்கமும் உணர்ச்சிகளும் முரண்படாமல், ஒன்றை ஒன்று கடந்து செயல்படலாம். இதுவே வாழ்வில் ஒருமைத் தன்மையை அடைவதாகும். அதாவது, பௌதீகத் தளத்தில், மூளையின் இயக்கத்தில் முரண்பாடுகளை களைந்து ஒருமை நிலையை எட்டுவது. முரண்பாடுகள் களையப்படும்போது, அதீத முரண்பாடுகளின் விளைவாக மனதின் மற்றும் உடலின் இயக்கங்கள் அடைந்திருக்கும் தேக்க நிலைகளும் நீக்கப்படுகின்றன. தேக்க நிலைகளின் விளைவாக ஏற்பட்டிருந்த  உடல் மற்றும் மன உபாதைகளும், முரண்பாடுகள் இல்லாமலாவதன் மூலம் இயல்பாகவே களையப்படுகின்றன.

பொருளாதாரத்தையே முழுமுதல் நோக்கமாகக் கொண்டிருக்கும் இன்றைய மனித வாழ்க்கையில், மனித பரிணாம வளர்ச்சியின் மூலம் மனம் அடைந்திருக்கும் பண்பாடுகளும், பொருளாதார முன்னேற்றம் என பரிதவிக்கும் மனதின் தர்க்கங்களும் என்றும் இல்லாத அளவுக்கு முரண்படுகின்றன. பொருளாதார நோக்கத்தால் அந்த முரண்பாடுகளை மனதின் ஆழத்தில் அழுத்தி வைத்துவிட்டு, மேலும் தர்க்கங்களின் துணை கொண்டு அதை நோக்கி சமூகம் செல்கிறது. மன ஆழங்களுக்குள் அழுத்தப்படும் முரண்பாடுகள், எப்போதும் அதன் அழுத்தத்தை மனதுக்கும், எனவே உடலுக்கும் அளித்துக்கொண்டிருக்கின்றன. அழுத்தம் நோய்களாக வெளிப்படுகிறது. நோய்கள்  மனித வாழ்க்கையை இன்னும் கீழ்மையை நோக்கி நகர்த்துகின்றன.

மனித மனதின் முரண்பாடுகள், எப்போதும் இல்லாத அதீத வேகத்தில் அதிகரித்து வரும் இக்காலத்தில், முரண்பாடுகளை களைந்து, ஒருமை நிலையை அடைவதன் தேவையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது - மனித இனம், அதன் பரிணாம வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால். இந்தப் பின்னணியில், ஒருமை நிலையை அடைய உதவும் கருவியான யோகா, அதீத முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அதிர்ஷ்டவசமாக, இன்றைய பொருளாதார நிலையின் விளைவான தொழில்நுட்பம், பெரும்பாலான மக்களுக்கு பெரும் உடல் உழைப்பிலிருந்து விடுதலையையும் அளித்திருக்கிறது. இது, அவர்கள் விரும்பினால் ஒருமை நிலையை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பு.

இன்று, யோகா என்னும் சொல் ஒருமை நிலையை நோக்கமாகக் கொண்ட பல்வேறு கருவிகளில் பதாஞ்சலி முனிவரால் தொகுத்தளிக்கப்பட்ட எட்டு அங்கங்களைக் கொண்ட அஷ்டாங்க  யோகத்தையே குறிக்கிறது. வணிகமயமாக்குதல், யோக தரிசனத்தின் மேலும் ஏழு அங்கங்களையும் பிய்த்து எறிந்து விட்டு, யோகாசனம் என்னும் ஒரு அங்கத்தையே யோகா என்னும் சொல்லாக பொதுவெளியில் நிலைநிறுத்தியிருக்கிறது. எனவே யோகா என்றால், பெரும்பான்மையானவர்களுக்கு, உடலை வளைத்து நெளித்து உபகரணங்கள் எதுவும் இல்லாமல் செய்யும் ஒரு உடற்பயிற்சி மட்டும்தான். ஒரு பண்பாடு, அதன் வளர்ச்சியின் போக்கில் கண்டறிந்த ஒரு முழுமையான அக அறிவியல்இன்று உடல் உபாதைகளை அகற்ற உதவும் ஒரு உடற்பயிற்சியாக மட்டும் அந்தப்பண்பாட்டின் அங்கத்தினர்களால் அறியப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக பண்பாடு அதன் ஆழங்களில் யோக தரிசனத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், உள்ளிருக்கும் அந்த உயிர்ப்பை, சற்றே புறவயமாகத் தூண்டி விடுவதுதான். உலக யோகாதினம், இந்த திசையில் ஒரு முயற்சி!

அஷ்டாங்க யோக தரிசனத்தின் எட்டு அங்கங்கள் இயமம். நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவை ஆகும். இயமம் என்பது சில பரிந்துரைக்கப்பட்ட ஒழுக்க நெறிகளை பின்பற்றுவது. இதன் மூலம் மனதில் புறவயமான எண்ணங்கள் தேவையில்லாமல் தோன்றி அலைக்கழிப்பதை தவிர்க்கிறது. நியமம், சில சுய ஒழுக்க முறைகளை பின்பற்ற பரிந்துரைக்கிறது. இது இயமம் மூலம் மனம் அடையும் அமைதியை, மேலும் நிலைப்படுத்துகிறது. யோகதரிசனத்தின் அடுத்த நிலைகளுக்கு முன்னேறத் தேவையான மனநிலைகளை இயமம் மற்றும் நியமம் யோக சாதகர்களுக்கு அளிக்கிறது. உண்மையில் இவை இரண்டும் பயிற்சிகள் இல்லை; வாழ்க்கை முறைகள். யோக சாதனைகளுக்கு சாதகமான வாழ்க்கை முறைகளை அமைத்த பின், அதற்குத் தேவையான உடல் நிலையை அடைய வேண்டும். ஆசனம் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் அதற்குரிய வேலைகளை முழுமையாகச் செய்ய வைக்கிறது. உடலின் அடிப்படை கட்டுமானப் பொருளான 'செல்' உயிரூக்கத்துடன் செயல்பட வைக்கப்படுகிறது. அடுத்ததாக வரும் பிராணயாமம் மூச்சுப்பயிற்சி ஆகும். உடலின் 'செல்'கள் அவை சேர்க்கும் சர்க்கரைப்பொருட்களை எரிப்பதன் மூலம், இயக்கத்திற்குத் தேவையான சக்தியைப் பெறுகிறது. எரிப்பதற்குத் தேவை ஆக்ஸிஜன் என்னும் பிராண வாயு. பிராணயாமப் பயிற்சி உடல் முழுவதும், ஒவ்வொரு 'செல்'க்கும் தேவயான பிராணவாயுவை எடுத்துச்சென்று, எரிதலின் பின் எஞ்சும் கரியமல வாயுவை பிரித்தெடுத்து மூச்சுக் காற்றின் வழியாக வெளியேற்றுகிறது. ஆசனப் பயிற்சியுடன் பிராணயாமப் பயிற்சிகள் மேற்கொள்ளும்போது உடலின் 'செல்'கள் மெதுவாக அவற்றின் அதிஊக்க நிலையை அடைகின்றன. அவை ஒரே நாளில் அந்த நிலையை அடைவதில்லை. மனித வாழ்க்கை முறைகளின் மூலம் 'செல்'கள் அடைந்த ஜட நிலையை (Inertia) கடந்து வருவது அத்தனை எளிதானது அல்ல. ஐட நிலையிலிருந்து உயிர்ப்பு நிலைக்கு மாற அவை எடுத்துக்கொள்ளும் நேரத்தினாலேயே, உயிர்ப்பு நிலைக்குத் திரும்புவதை உணரும் திறன்  (Sensitivity) பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை. தொடக்கநிலை யோகப்பயிற்சி மேற்கொள்ளுபவர்கள், இவற்றால் எந்த பயனும் தான் அடையவில்லை என இவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கும் இந்த உணராமையே காரணம். முதல் நான்கு அங்கங்களின் மூலம் மனதையும் உடலையும் தகுதியான நிலைக்கு எடுத்துச்சென்ற பின் ஐந்தாவதான பிரத்யாகாரம் முயற்சிக்கப் படுகிறது. இது, புற உலைகை நோக்கயிருக்கும் மனதை, அக உலகை நோக்கித் திருப்புவதாகும். புலன்களினால் அடையப்படுபவற்றிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்து, மனதால் உணரப்படுபவற்றை நோக்கி மன இயக்கத்தை செலுத்துவது. அதன் பின் வரும் தாரணை, தியானம் மற்றும் சமாதி என்பவை, அகம் நோக்கி திரும்பிய மனதின் வெவ்வேறு நிலைகள். தாரணை, ஒரு குறிப்பிட்ட உணர்வின் மேல் மனதை நிலை நிறுத்துவது. தியானம் மனதின் உணர்வுகள் அனைத்திலும், வேறுபாடுகள் இல்லாமல் விழிப்பு நிலையுடன் இருப்பது. இது தாரணையின் விரிவு படுத்தப்பட்ட நிலை. சமாதி நிலை, தியானத்தின் விரிவான நிலையாகும். இந்த நிலையில் மனதின் வேறுபடுத்தும் இயக்கங்கள் மறைந்து அனைத்தையும் முழுமை நோக்குடன் அறியும் ஒருமையான உணர்வு நிலையில் நிலைத்திருப்பது. சாமாதி நிலையில் இருக்கும்வரை மனம் அதன் வேறுபடுத்திப் பார்க்கும் இயக்கத்தைக் கடந்து, ஒற்றை நிலையான முழுமை நிலையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த எட்டு நிலைகளையும் கடந்தவர்கள், கைவல்யம் எனப்படும் முழு விடுதலை நிலையை அடைவர் என பதாஞ்சலி முனிவர் கூறுகிறார்.

யோக மார்க்கத்தில் மனித இருப்பை, கருத்தியல் தளத்தில், ஐந்து பிரிவுகளாக பிரித்துள்ளார்கள். அவை அன்னமய கோஷம்(Physical Body), மனோமய கோஷம்(Mental Body), பிராணமய கோஷம்(Energy Body), விக்ஞானமய கோஷம்(Intelectual Body), ஆனந்தமய கோஷம்(Bliss Body).  உண்ணும் உணவால் உருவாக்கி பருப்பொருளாக நிலைநிறுத்தப்படும் மனித உடல் அன்னமய கோஷம். இதை மட்டும்தான் உடல் என்னும் பொதுப்பெயரால் குறிப்பிடுகிறோம். மனோமய கோஷம் முற்றிலும் கருத்தியல் தளத்தில் குறிப்பிடப்படும் ஒன்று. இதை எண்ணங்களால் ஆன உடல் என்றும் கூறலாம். உடலின் பெரும்பாலான இயக்கங்கள் எண்ணங்களினால்தான் இயக்கப்படுகிறது. அந்த எண்ணங்களை உருவாக்கும் செயல்பாடுகள் உடலில் உள்ள அனைத்து 'செல்'களிலும் உள்ளன. இந்த செயல்கபாடுகளின் தொகுப்பு மனோமய கோஷம் என்னும் உடலாகக் குறிப்பிடப்படுகிறது. அடுத்ததாக இயங்கு சக்தி. உடலில் உயிர் இருந்தால் அந்த உடலின் இயக்கம் ஒருவகையாகவும், உயிர் பிரிந்து விட்டால் மிஞ்சியிருக்கும் இயக்கம் உடலை பிரித்து வெவ்வேறு வேதிப்பொருட்களாக மாற்றும் இயக்கமாகவும் இருக்கும். இவ்வாறு உடலை மனித உடலாக வைத்திருக்கும் உயிர் சக்தி பிராணமய கோஷம் எனப்படுகிறது. உடலின் நுண்ணறிவு விக்ஞானமய கோஷம் என்றும், அனைத்தையும் அறிந்து உடலினுள் பேரானந்த நிலையில் இருக்கும் இருப்பு ஆனந்தமய கோஷம் என்றும் கூறப்படுகிறது.

உலகியல் வாழ்வில் இருக்கும் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு, கைவல்யம் என்பது இப்போது தேவை இல்லாதது. தற்போதையை தேவை சுபிட்சமான வாழ்க்கையே. அதுதான் பொதுப் பார்வையில் நிகழ் உண்மை. யோகா அந்த நிகழ் உண்மைக்கு என்னப் பங்களிப்பை வழங்குகிறது என்பதை மட்டும் சற்றுப் பார்க்கலாம். அஷ்டாங்க யோகத்தின் முதல் இரண்டு அங்கங்களையும் பின்பற்றினால், சமூக வாழ்க்கையில் உராய்வுகள் இல்லாமல் போய்விடும் என்பது விளக்கத் தேவையில்லை. சமூக நெறிமுறைகளும், சுய நெறிமுறைகளும் அவற்றை முற்றிலும் அகற்றி விடும். ஆனால் அது எளிதானதல்ல. நெறிமுறைகளை யார் வகுப்பது? இயமத்தில் ஐந்து நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் அந்த ஐந்து நெறிமுறைகளுக்கும் ஒவ்வொருவரும் வேறு வேறான விளக்கங்களை கூறிக்கொள்வதும் சாத்தியமே. இதுவே நியமத்துக்கும் பொருந்தும். எனவே தற்போதைய வாழ்க்கை மற்றும் நாகரீகச் சூழலில், அவரவர் கொண்டுள்ள சமூக\வாழ்க்கை நெறிகளுடன் அடுத்தக் கட்டத்துக்கு செல்வதுதான் சாத்தியம்.

யோகப் பயிற்சிகளான ஆசனம் மற்றும் பிராணயாமம், அன்னமய கோஷத்தையும் பிராணமய கோஷத்தையும் நேரடியாக மாற்றியமைப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது யோகப்பயிற்சிகள் பருவுடலையும் இயங்கு சக்தியாகிய உயிர் சக்தியையும் ஊக்கமடைய வைக்கிறது. மற்ற மூன்று கோஷங்களும், பருவுடல் மற்றும் உயிர், உடல் ஆகியவற்றின் இயக்கத்தைச் சார்ந்துதான் அமைந்துள்ளன. ஊக்கமடைந்த பருவுடலிலும் உயிரிலும், மற்ற மூன்று கோஷங்களும் தங்களை வெளிப்படுத்துகின்றன. அதாவது, ஊக்கமடைந்த உடலுடனும் உயிருடனும் இருக்கும்போது, மனிதர்களின் உணரும் திறன், எண்ணங்கள், நுண்ணறிவு மற்றும் இன்பநிலைகளும் ஊக்கமடைந்து, அவையும் உணரப்படும். வேறு வார்த்தைகளில் கூறினால், ஆசனம் மற்றும் பிராணயாமம் விழிப்புணர்வைப் பெருகி வரச் செய்கிறது. விழிப்புணர்வை அடைந்த மனிதர்கள், அதன் மூலம் விரும்பினால் அடுத்தக் கட்ட யோகத்தின் அங்கங்களை அடையலாம்.

சற்றே சுய வாழ்க்கையை ஆராய முடிந்தால், வாழ்வில் மனிதர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரிச்சினைகளுக்கும் காரணம், வாழ்வின் இயக்கங்கள் மேல் விழிப்புணர்வுடன் இல்லாமல் இருப்பதே காரணம் என்று தெரியவரும். விழிப்புணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது அங்கு பிரச்சினைகளாக எவற்றையும் காண முடியாது. உடலுக்கும் உயிருக்கும் அழிக்கப்படும் யோகப்பயிற்சிகள், அவற்றை ஊக்கப்படுத்தி விழிப்புணர்வை அளித்து வாழ்வை ஊக்கத்துடன் எதிர்கொள்ள வைத்து பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையை அளிக்கின்றன. தனிப்பட்ட மனிதர்கள் பிரச்சினை இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தால், சமூகத்தின் பிரச்சினைகளும் அகன்று விடும்.


உலக யோகா தினம், பிரச்சனைகள் இல்லாத சமூகத்தை நோக்கித் திறக்க சாத்தியமான பல வழிகளில் ஒரு வழியில் எடுத்து வைக்கப்படும் முதல் அடியாக இருக்கட்டும். பிரச்சினை இல்லாமல் உங்கள் வாழ்வை வாழ முடியுமா என அறைகூவல் விடும் சக்திகளின் அறைகூவலை ஏற்றுக்கொள்ளும் நாளாக இருக்கட்டும். முதல் அடியை எடுத்து வைப்போம். பிரச்சினை இல்லாத சுயவழ்க்கையையும் சமூக வாழ்க்கையும் நோக்கி அடுத்த அடிகள் தானாகவே முன்வைக்கப்படும்.

blog.change@gmail.com