Sunday, March 29, 2015

தீ

28-03-2015 அன்று சிறகு இணையதளத்தில் வெளியான கட்டுரை.

இந்திய மரபில் நெருப்பு முதன்மையான தெய்வம். நெருப்பு எரிய, மூன்று இருப்புகள் அவசியம். விறகு எனப்படும் எரிபொருள். ஆக்ஸிஜன் எனப்படும் பிராண வாயு, தேவையான வெப்பம். இவை மூன்றும் குறிப்பிட்ட குறைந்தபட்ச அளவை (Thrush hold) விட அதிகமாக இருந்தால்தான் நெருப்பு எரிய முடியும். நெருப்பு எரிய அவசியமான இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து, நெருப்பு முக்கோணம் (Fire Triangle) என கூறப்படுகிறது. நெருப்பை அணைக்க உதவும் (Fire Fighting) எல்லா முறைகளும், இந்த மூன்று காரணிகளில் ஒன்றை, குறைந்த பட்ச அளவை விடை குறைவாக கொண்டுவருவதன் மூலமே நெருப்பை அணைக்க முயல்கின்றன.  எரியும் நெருப்பில் இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும், அந்த நெருப்பு அணைந்து விடும். இன்றைய நம் நாகரீகமும், நாகரீகத்தின் வெளிப்பாடாக கருதப்படும் புற வாழ்க்கை வசதிகளும் நெருப்பிலிருந்தே பெறப்படுகிறது. நெருப்பின் இருப்பே தொழிலாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. எனவே பொருளாகவும்!

நெருப்பு என்பது சக்தி. நாம் அன்றாடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தும் சக்தியின் பெரும்பகுதி நெருப்பிலிருந்தே பெறப்படுகிறது. காற்றாலை, சூரிச சக்தி, நீர்மின் சக்திக்கு தேவையான மழை, இவை யாவையும் சூரியனின் வெப்பத்தால் (நெருப்பினால்) பூமியில் ஏற்படும் சலனங்களின் மூலமே பெறப்படுகிறது. எனவே நெருப்பிலேயே நம் இருப்பும் அமைந்துள்ளது. அந்த நெருப்பை வணங்குவோம்! நெருப்பு அதன் மேல் அமரும் எதையும் எரித்தழிக்கும் இயல்புடையது. நெருப்பிலிருந்து நம் இருப்பை பெறும்போது, அந்நெருப்பின் இயல்பை அறிந்து, அதன் வெம்மையை, நம்மை எரிக்கும் அளவுக்கு குறைவாகவே அதனை கையாளவும் அறிந்திருக்க வேண்டும்.

இன்று மனிதர்களின் இயக்கத்துக்கு தேவையான சக்தியின் பெரும்பகுதி பெட்ரோலியம் எண்ணையிலிருந்து கிடைக்கும் பொருட்களையும் இயற்கை வாயுவையும் நிலக்கரியையும் எரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. இதுவரைக்கும் கண்டு பிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம், இன்னும் 40 வருட கால தேவைக்கு போதுமானதாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரைக்கும் பெரும்பலான உலகின் எண்ணெய் இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றே தோன்றுகிறது - ஆர்டிக் போன்ற துருவப்பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்காக நாடுகளுக்கிடையே நிகழும் போட்டிகளை கவனித்தால்! ஒருவேளை, இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அளவுக்கே இன்னும் எண்ணெய் இருப்புகள் கண்டுபிடிக்கப்படுமானாலும், மேலும் ஒரு 40 வருட கால தேவைக்கு போதுமானதாக இருக்கலாம். அதாவது இன்னும் 80 வருடகாலங்களில், பல கோடி ஆண்டுகளின் இயக்கங்களால் உருவான எண்ணை வளத்தின் பெரும் பகுதி மனிதர்களால் நெருப்பாக மாற்றப்பட்டு சக்தியாக நுகர்ந்து முடிக்கப்பட்டு விடும். நிலக்கரி வளம் மேலும் ஒரு 100 வருடங்கள் வரை இருக்கலாம்.

பெட்ரோலியப்பொருட்களும் நிலக்கரியும் பூமி உருவாக்கி அளித்துள்ள சக்தி. பூமிக்குள் பல கோடி ஆண்டுகளுக்கு முன், நாம் அறியாத பூமியின் இயக்கத்தால், புதைந்த தாவரங்களும் மற்ற உயிரினங்களும், பூமியின் வெப்பத்தாலும், ஊடான வேதிமாற்றங்களாலும் பெட்ரோலியமாகவும் நிலக்கரியாகவும் மாற்றமடைந்துள்ளது. இன்னும் 100 அல்லது 200 வருடங்களில் பெட்ரோலியமும் நிலக்கரியும் முற்றிலும் நுகர்ந்து முடிந்து விட்டபின், மீண்டும் பூமியிலிருந்து அவை கிடைக்க வேண்டுமானால், இன்றைய பூமி முழுவதும் சிதைவுண்டு, அதன் காடுகள் மண்ணுக்குள் புதைந்து, பல கோடி ஆண்டுகளுக்கு பின்னால் மட்டுமே முடியும் - அப்போது புதிதாக தோன்றியிருக்கும், பெட்ரோலியத்தை கண்டறிய முடியும் உயிரினத்துக்காக!

தற்போது கிடைக்கும் தரவுகளின் படி, பெட்ரோலியம் முதன் முதலாக கி.மு. 450 ஆண்டுகள் வாக்கில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். அதன் பின் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு இடங்களில், பல்வேறு வகைகளில் பெட்ரோலியம் எடுக்கப்பட்டு பல்வேறு பயன்பாடுகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் தற்செயலான நிகழ்வுகளாக இருந்திருக்கக்கூடும். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, எண்ணை கிணறுகள் உருவாக்கப்பட்டு, பெட்ரோலியம் பொருளாதார பயன்பாட்டுக்கு தேவையான சக்திக்காக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 19 -ம் நூற்றாண்டின் இறுதியில், இன்று நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு முன்னோடியான பெட்ரோலியம் எண்ணையிலிருந்து பெறப்பட்ட எரிபொருட்களைக்கொண்டு இயங்கும் வாகனங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின் பெட்ரோலியம் எண்ணெயின் தேவை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் அறிவோம். பெட்ரோலிய எண்ணை வளங்களுக்காகவும் இயற்கை வாயுவுக்காகவும் அவற்றால் பெறும் பொருளாதார  ஆதாயங்களுக்காகவும் பல அதிகாரப்போட்டிகளும், யுத்தங்களும், உள்நாட்டு கலவரங்களும்........

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவிலிருந்து சக்தி இரண்டு வழிகளில் பெறப்படுகிறது. முதலாவதாக, பெட்ரோலிய பொருட்களை எரிப்பதன் மூலம் உருவாகும் வெப்பத்தை இயந்திர சக்தியாக மாற்றுவதன் மூலம் பெறப்படுகிறது. வாகனங்களின் இயக்கம் இந்த வகையில் பெறப்படுகிறது. இரண்டாவது முறை, எரிப்பதன் மூலம் உருவாகும் இயந்திர சக்தி, மின் சக்தியாக மாற்றப்பட்டு, தேவைப்படும் இடங்களுக்கு மின் கம்பிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் இயந்திர சக்தியாகவோ அல்லது வேறு தேவைப்படும் சக்திகளாகவோ மாற்றப்படுகிறது. நிலக்கரியிலிருந்து தற்காலத்தில் இரண்டாவது வழியில் மட்டுமே சக்தி பெறப்படுகிறது. இயந்திர புரட்சியின் ஆரம்ப காலத்தில், நிலக்கரியின் எரிசக்தி, நீராவி எஞ்சின்கள் மூலம் நேரடியாக இயந்திர சக்தியாக மாற்றப்பட்டது.

இன்று நாம் உபயோப்படுத்தும் சக்தியின் பெரும்பகுதி, வாகனங்களை இயக்கும் சக்தியை தவிர, மின் சக்தியே. மின்சக்தியின் பெரும்பகுதி நிலக்கரியிலிருந்தும் இயற்கை வாயுவிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. இன்னொரு சிறு பகுதி, சில தனிமங்களின் அணுக்களை, மிகவும் கட்டுப்பாடான நிலைகளில் பிளப்பதன் மூலம் உருவாகும் வெப்பத்தால், நீரை ஆவியாக்கி, அந்த ஆவியின் அழுத்தத்தால் பெறப்படும் இயக்க சக்தியை மின் சக்தியாக மாற்றப்படுகிறது. இன்னொரு மிகச்சிறிய பகுதி, Green Energy அல்லது பசுமை சக்தி எனப்படும் சூரிய ஒளி, காற்று சக்தி, தேக்கி வைக்கப்பட்ட நீரின் இயக்கசக்தி போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது.
இவற்றில் இயற்கை வாயு இன்னும் அதிகபட்சம் 100 வருடங்களுக்கு மட்டுமே. நிலக்கரி அதிலிருந்து ஒரு 100 வருடங்களுக்கு கூட இருக்கலாம். மிச்சமிருப்பது அணு சக்தியும் பசுமை சக்தியும் மட்டுமே. அல்லது புதியதாக ஏதேனும் முறைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அணு சக்தி, தற்போதைய நிலையில் மிகவும் ஆபத்தானது. ஆனால் அவை மனித இனத்துக்கு தேவையும் கூட.

தற்போதைய நிலையில், தனிப்பட்ட முறையில் நான் அணு சக்திக்கு எதிரானவன். பல்வேறு காரணங்கள். முக்கியமாக அணுசக்தி மேலாண்மையில் உள்ள அசிங்கமான அரசியலின் காரணமாக, அதன் விளைவான ஆபத்துகளும், எளியோரை சுரண்டுதலும் என்னும் அரசியல் விளையாட்டுகளின் காரணமாக.  அறியாமையும் காரணமாக இருக்கலாம்! ஆனாலும், மனித இனம் வாழ, அடைந்த நாகரீகத்தை தக்க வைத்துக்கொள்ள, இன்றைய நிலையில் அணு சக்தி தேவையானதாகவே இருக்கக்கூடும். எனில் அதன் ஆபத்துகளை என்ன செய்வது? அரசியலுக்கு அப்பாற்பட்டு, குறுகியகால விருப்பு வெறுப்புகளை கைவிட்டு, அனைத்து தரப்புகளும் சேர்ந்து அணு சக்திக்கான கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். பல்வேறு கோணங்களில்! அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வர வேண்டும் - முக்கியமாக அணுக்கழிவுகள் குறித்தும்! இன்றைய அரசியல் நிலையில் இது சாத்தியமற்ற எதிர்பார்ப்பு, அனைத்து எதிர்பார்ப்புகளையும் போல! குறுகிய கால விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இயங்கும் அரசாங்கங்களினால்! செறிவூட்டப்பட்ட அணுக்கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. நம் சாதாரண அன்றாட வாழ்க்கைக் கழிவுகளையை அகற்ற தேவையான கொள்கைகளும் கட்டமைப்புகளும் இல்லாத மனித இனம், அணுக்கழிவுகளை கையாள இன்னும் அறிந்திருக்கவில்லை. தற்போதைய நிலையில் எத்தகைய சமாளித்தல்களை கையாண்டாலும்!        
       
                                              *      *      *      *      *      *       

நான் கடந்த சில வருடங்களாக சக்தியை உபயோகிப்பதில், வீணாக்காமல் இருப்பதில், விழிப்புடன் இருக்க முயற்சி செய்து கொண்டிருப்பவன். மிகவும் எளிய காரணம்தான். நான் இந்த பூமியின் ஒட்டுயிரி. அதன் தயவில் என் இருப்பை அடைந்தவன். அதன் தயவில் என் இருப்பை தக்க வைத்துக்கொண்டிருப்பவன். அந்த பூமியிலிருந்து என் தேவைக்கு அதிகமாக எடுப்பது, அதன் மூலம் அதன் இருப்பை, சமநிலை குலைவை, வாழும் மற்ற உயிரினங்களின் உரிமையை பறிப்பது போன்றவற்றிற்கு நானும் துணையாக செல்வது என்பது என் இருப்பை தாங்கும் மகாஇருப்புக்கு செய்யும் துரோகமாகும். எனவே இந்த முயற்சி.

உண்மையில், இது என் முயற்சி என்று சொந்தம் கொண்டாட முடியாது. என் 'அப்பா'விடமிருந்து நான் பெற்றுக்கொண்ட பலவற்றுள் இதுவும் ஒன்று. அவர் எதற்காக வீணாக்குதலை தவிர்த்தார் என்பதற்கு அவருக்கேயான காரணங்கள் இருக்கலாம் - ஆன்மீக காரணங்களோ, பொருளாதார காரணங்களோ அல்லது இரண்டுமோ!

அவர் பெரும்பாலும் நிர்ப்பந்தமாகவே எவற்றையும் வீணாக்கமல் இருக்கும் தன்மையை என்னுள் கொண்டுவந்தார் என்றே நினைக்கிறேன். பலமுறை அவரின் நிர்ப்பந்தங்கள் எதிர்மறையான எண்ணங்களை எனக்குள் உருவாக்கியிருக்கின்றன. சில வசதிகளுக்காக கூட வீணாக்காமல் இருப்பது பொருளாதார காரணத்தால் மட்டுமே என்னும் எண்ணம் என் மனதில் இருந்துவந்தது என்பது, ஒருவேளை அந்த எதிர்மறை எண்ணங்களுக்கான காரணமாக இருந்திருக்கலாம். அவற்றுக்கான வேறு காரணங்களையும் என்னால் அறிய முடிந்தபின், அவரை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன் - நேரடியாக அவரிடம் கூற என் மனம் இடம் கொடுக்காததால்!

இன்று நான் மேற்கொள்ளும் வீணாக்காமல் இருக்கும் கொள்கை, என்னை சார்ந்தவர்களையும் சில வசதிகளிலிருந்து விலக்குகிறது. பெரும்பாலும் அவர்கள் என்னை புரிந்து கொண்டாலும், சில நேரங்களில் உராய்வு ஏற்படுவதை தவிர்க்கவும் முடிவதில்லை. சில நேரங்களில் அது அவர்கள் மேல் நிர்ப்பந்தமாகவும் மாறுகின்றது. மற்றவர்களை எதற்காகவும் நிர்ப்பந்திப்பது தவறு என்பதை அறிவுபூர்வமாக நான் அறிந்திருந்தாலும், உணர்வு பூர்வமாக நிப்பந்தித்தலை தவிர்ப்பது எப்போதும் சாத்தியமாவதில்லை! நம் அறிவும் உணர்வுகளும் ஒன்றாகாதது வரை, அறிவுக்கும் உணர்வுக்குமான உரசல் நம்முள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

பின்குறிப்பு;

பெட்ரோலியம் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்கள் http://www.geohelp.net/world.html இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Friday, March 13, 2015

உலகப் பொருளாதாரத்தின் திசை-3


சிறகு இணைய இதழில் 07-02-2015 அன்று வெளியிடப்பட்ட கட்டுரை.

ஒரு பொருளாதாரம் ஒட்டு மொத்தமாக மந்த நிலையில் இருக்கும்போது, அந்த பொருளாதாரத்தின் அங்கங்களான மக்களும் அவர்களின் தனிப்பட்ட பொருளாதார தேக்க நிலையை அடைவார்கள். அதாவது, அவர்களிடம் தேவை எனக்கூறப்பட்ட நுகர்வுப் பொருட்களை வாங்க போதுமான பணம் இருக்காது. எனவே உற்பத்தியும் குறைக்கப்படும். இதன்மூலம் அந்த உற்பத்தியில் ஈடுபடும் உழைக்கும் வர்க்க்த்துக்கு, குறைவான வேலையே உற்பத்தித்துறையிலை இருக்கும். இதன்மூலம் அவர்கள் பண வருமானம் இன்னும் வீக்கமடையும். இது ஒரு சுழல் இயக்கமாக நிகழத்தொடங்கும் - பொது மக்களிடம் செயற்கையாக உருவாக்கப்பட்ட தேவைகள் அனைத்தும் இல்லாமல் ஆகும் வரை. அதன் பின் அவர்கள் அடிப்படைத்தேவைகள் மட்டுமே இருக்கும். அவற்றை குறைக்க முடியாது. எனவே அவற்றுக்கான உற்பத்தியும், தொழில்களும் அதற்கேற்ற வகையிலான பணப்புழக்கமும். இதுவே இயற்கை நிலையாக இருக்க முடியும்.

ஆனால், எந்த பொருளாதாரமும் அந்த நிலையை அடையும் வரை காத்திருக்க முடியாது. ஏனெனில் மற்ற பொருளாதாரங்கள், அவற்றுக்கான சூறையாடும் களங்களை எப்போதும் தேடிக்கொண்டே இருக்கும். இவ்வாறு வீக்கமடையும் பொருளாதாரங்கள், பொருளாதார சூறையடலுக்கான எளிய களங்கள். எனவே எல்லா பொருளாதாரங்களும், அவற்றின் உற்பத்தியையும், எனவே தேவையையும் உயர்த்துவதற்கான எல்லா கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கும்.

உதாரணமாக தற்போது உலகெங்கும் பரவலாக அறியப்படும் Quantitative Easing என அழைக்கப்படும், அரசாங்கங்களின் பணப்புழக்கத்துக்கான வழிமுறைகள். ஜப்பான் பொருளாதாரம் சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் மந்த நிலையை அடைந்தது. அதற்கு முந்தைய காலகட்டத்தில், அது உலகெங்கும் உள்ள மக்களின் ஆடம்பர நுகர்வு சாதனங்களின் உற்பத்தி தளமாக விளங்கியது. உலகெங்கும் உள்ள மக்களின் நுகர்வின் காரணமாக, அதுவரைக்கும், ஜப்பான் மிக வேகமாக பொருளாதார வளர்ச்சியையும் அடைந்து வந்தது. ஆடம்பரப் பொருட்களின் நுகர்வுக்கான மனநிலை, அனைத்து மக்களிடமும் தோற்றுவிக்கப்பட்ட பின்னர், ஜப்பானின் உற்பத்தி மட்டும் அனைத்து உலகத்துக்கும் போதுமானதாக இல்லை. கொரியா, சைனா போன்ற பொருளாதாரங்கள், அந்த இடைவெளியை நிரப்பத்தொடங்கின. அத்துடன் அந்த புதிய பொருளாதாரங்களின் உற்பத்திச் செலவு ஜப்பானை விட குறைவாக இருந்ததால், அவற்றால் குறைந்த விலைக்கு பொருட்களை நுகர்வோருக்கு கொடுக்க முடிந்தது. அத்துடன் ஜப்பானின் பொருளாதாரம் தேக்க நிலையையும் அடைந்தது. இந்த தேக்க நிலையிலிருந்து விடுபட, கடந்த 20 வருடங்களாக ஜப்பான் முயற்சி எடுத்து வருகிறது. நாட்டில் செயற்கையாக பணப்புழக்கத்தை அதிகரிப்பதன் மூலம், பொருளாதார மந்த நிலையிலிருந்து விடுபடும் முயற்சி 20 ஆண்டுகளுக்குப்பின்னரும் பலன் அழிக்கவில்லை. இந்த செயற்கையான பண்புழக்கத்தை அதிகரிக்கும் முறை Quantitative Easing என அழைக்கப்படுகிறது.

2008-ம் ஆண்டுக்குப்பின் பொருளாதார மந்த நிலையை அடைந்த அமெரிக்கா, இதே வழியை, பணப்புழக்கத்துக்காக கையாண்டு வருகிறது. அமெரிக்காவுடன், இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளும் கூட! ஜப்பானுக்கு கை கொடுக்காத செயற்கை பணப்புழக்கம், அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் கைகொடுக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். அமெரிக்காவின் முதலாளித்துவ செயல்பாடுகள் எவ்வாறு 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார உடைவை கொண்டு வந்தது என்பதை அறிய வேண்டுமானால், 2010 -ம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்தக்கான 'அகாடமி விருது' பெற்ற  INSIDE JOB என்னும் ஆவணப்படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்.

இந்த செயற்கை பணப்புழக்கத்தின் நோக்கம்தான் என்ன? நான் புரிந்து கொண்டவரையில் இங்கு கூற முயற்சிக்கிறேன். மேலதிக விபரங்களுக்கும், இங்கு கூறப்பட்டுள்ளவற்றின் நம்கத்தன்மையை உறுதி செய்யவும், (உண்மையான) பொருளாதார நிபுணர்களிடன் ஆலோசனையை பெறலாம்.
அரசாங்கங்கள், அவற்றின் பணத்தேவைகளுக்காக கடன்பத்திரங்களை வெளியிட்டிருக்கும். இந்த கடன்பத்திரங்கள், 'பென்ஷன்' நிதியங்கள், 'இன்ஷூரன்ஸ்' நிதியங்கள், வங்கிகள் ஆகியவை பெரும்பாலும் வாங்கியிருக்கும். இந்த கடன்பத்திரங்களிலிருந்து கிடைக்கும் வட்டி, அந்த நிறுவனங்களின் வருவாயாக இருக்கும். இதன் மூலம் அரசாங்கம் செய்வதென்னவென்றால், புழக்கத்தில் உள்ள பணத்தை தன் செலவுகளுக்காக கடன் வாங்கிக்கொள்கிறது.

செயற்கை பணப்புழக்கத்தில், இதன் எதிர் இயக்கம் நடைபெறுகிறது. பொருளாதார சரிவின் போது, வங்கிகளிடம் போதிய பணம் இல்லை. எனவே அவற்றால், உற்பத்தி செய்யும் முதலாளிகளுக்கு கடன் அளிக்க முடிவதில்லை. உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான பணத்தை அவர்கள் கடனாக பெற முடிவதில்லை. இதனால், அவர்களின் உற்பத்தி குறைகிறது. உற்பத்தி குறைவதனால், தொழிலாளர்களின் வேலை குறைகிறது. எனவே தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. அதனால் நுகர்வோர்களாகிய பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைகிறது. எனவே, அவர்களின் தேவையும் நுகர்வும் குறைக்கப்படுகிறது. இதன் எதிர்வினையாக உற்பத்திப்பொருட்களின் தேவையும் குறைகிறது. எனவே உற்பத்தி மீண்டும் குறைகிறது...... இது ஒரு சுற்றியக்கம் - ஒன்றை ஒன்று குறைத்துக்கொண்டே வரும் இயக்கம்.

செயற்கை பணப்புழக்கத்தில், அரசாங்கம், அது முன்பு விற்ற கடன்பத்திரங்களை, அதிக விலைக்கு திரும்ப வாங்கிக்கொள்கிறது. கடன் பத்திரங்களுக்கு, அது ஈட்டும் வட்டியை விட அதிக விலை கிடைப்பதால், அதை வைத்திருக்கும் வங்கி போன்ற நிறுவனங்கள், அந்த கடன்பத்திரங்களை அரசாங்கத்திடமே விற்று, அதற்கான பணத்தை பெற்றுக்கொள்கின்றன. இப்போது வங்கிகளிடம் கடன் கொடுப்பதற்கான பணம் உள்ளது. அத்துடன் அரசாங்கம், கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் மிகவும் குறைவாக வைத்துக்கொள்ள தேவையான அரசாங்க ஆணைகளை அளிக்கிறது. அதாவது, முதலாளிகளுக்கு, மிகக்குறைந்த வட்டியில் உற்பத்திக்கான பணம் கிடைக்கிறது. இதன் மூலம், தொழிலாளர்களின் தேவை அதிகரிக்க வேண்டும், எனவே வேலையில்லா திண்டாட்டம் குறைய வேண்டும், பொது மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும், எனவை தேவையும் நுகர்வும் அதிகரிக்க வேண்டும், அதன் மூலம் உற்பத்தி மீண்டும் அதிகரிக்க வேண்டும் - சுற்றியக்கம் வளர்ச்சிப்பாதைக்கு செல்ல வேண்டும். இதுவே இந்த பணப்புழக்க அதிகரிப்பின் எதிர்பார்ப்பு!

ஆனால் உண்மையில், செயற்கை பணப்புழக்கம் தொடங்கி சுமார் ஆறு ஆண்டுகள் சென்ற பின்பும் எந்த தளர்வடைந்த பொருளாதாரங்களும், மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பவில்லை. அதற்கு காரணம் என்ன? அதுவும் முதலாளித்துவம், தன் சுயலாபங்களுக்காக உருவாக்கிக்கொண்ட வழிமுறைகளே. அதற்கு முன்பாக, தன் செலவுகளுக்காக கடன்பத்திரங்கள் மூலம் கடன் பெற்ற அரசாங்கங்கள், இன்னும் பற்றாக்குறை நிலையிலேயே இருந்தாலும், அந்த கடன் பத்திரங்களை அதிக விலைக்கு வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? இது ஒரு மிகப்பெரிய கேள்வி குறி! பொருளாதார நிபுணர்கள்தான் இதற்கான பதிலை அளிக்க வேண்டும். இதனாலாயே, செயற்கை பணப்புழக்கத்தை, அரசாங்கங்களின் 'பணத்தை அச்சிடும்' வேலை என, இந்த முறையை ஏற்க இயலாதவர்கள் கூறி வருகிறார்கள்.

முதலாளித்துவ பொருளாதாரங்கள், அவற்றின் லாப நோக்கங்களுக்களுக்காக, வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும், வெளி நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பல வகையிலான சட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த சட்டங்களே தற்போதைய செயற்கை பணப்புழக்கம் நுகர்வையும் உற்பத்தியையும் அதிகரிக்க செய்யாமல் இருப்பதற்கான காரணம்.
வங்கிகள் செயற்கை பணப்புழக்கத்தின் மூலம் பெற்ற பணத்தை தற்போது பல வழிகளில் செலவிடலாம். அதை தங்கள் பொருளாதாரத்தில் உள்ள உற்பத்தியாளர்களாகிய முதலாளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்கலாம். இங்கு அவர்கள் கடனுக்கான வட்டியின் மூலம் பெறும் லாபம் மிகவும் குறைவானது. அல்லது அந்த பணத்தை இன்னும் பொருளாதாரத்தில் தேக்க நிலையை அடையாத பொருளாதாரங்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், அந்த பொருளாதாரம் உறபத்தி செய்யும் லாபத்தில் பங்கு பெற முடியும். இவ்வாறு பெறும் லாபம், சொந்த பொருளாதாரத்தில் குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்து பெறும் லாபத்தை விட மிக அதிகமாக உள்ளதால், பெரும்பாலான வங்கிகள் அரசாங்கத்திடம் கடன்பத்திரங்களை அதிக விலைக்கு விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை, வெளிநாடுகளில் முதலீடு செய்து அதிக லாபம் பார்கின்றன. அதாவது அரசாங்கங்கள், அவை இயற்றிய முதலீடு சார்ந்த சட்டங்களின் மூலம் கட்டுண்டு இருக்கின்றன. அந்த நாட்டின் பொருளாதாரத்துக்குகாக அச்சிடப்பட்ட அந்த நாட்டுப்பணம், வெளிநாடுகளுக்கு முதலீடாக செல்வதை தடுக்க முடியாத நிலை. எனவே சொந்த பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருக்கும் நிலை.

இந்தியாவுக்கு தற்போது வெளி நாட்டு முதலீடுகள் அவசியமாகப்படுகிறது. எனவே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான சட்டங்கள், எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயற்றப்படுகின்றன. ஆனால், இந்தியா ஒரு பொருளாதார நிலைத்தன்மையை அடைந்த பின், இந்த சட்டங்களே அதற்கு எதிரியாகவும் மாறலாம்!

முதலாளித்துவம், வரைமுறையற்ற உற்பத்தியையும், எனவே வரைமுறையற்ற நுகர்வையுமே விரும்புகிறது. முன்பே கூறியபடி, மனித நுகர்வின் எல்லை, அந்த நுகர்வால் உருவாக்கப்படும் கழிவுகள் மற்ற உயிரினங்களால் நுகர்ந்து அழிக்கப்படும் அளவுக்குள் இருந்தால்தான், பூமியின் சமநிலை குலையாமல் இருக்கும். ஆனால் மனித நுகர்வு, அந்த எல்லைகளை பெருமளவு கடந்து, மனிதனால் உருவாக்கப்படும் கழிவுகளை செயற்கையாக அழிக்கும் அளவுக்கும், அந்த அழிப்பின் இயக்கத்தில், பிற உயிரினங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் அளவுக்கும் சென்று விட்டது. உற்பத்திக்கான கச்சா பொருட்களை அடைவதற்கு, அளவின்றி பிற உயிரினங்களின் வாழ்வாதாரங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வாதாரங்களையும் அழித்து, மனித நுகர்வு பொருட்களாக மாற்றுகின்றது. பிற உயிரினங்கள் அவற்றின் வாழ்வாதாரங்களை இழக்கும்போது, அவை அழிந்து போகின்றன. இதனால் உணவுக் கண்ணியில் ஒரு கண்ணி விடுபட்டு விடுகிறது. பாதிப்புக்குள்ளாவது மனித இனமும்தான்.

இன்னொரு புறத்தில், மனிதனுக்கான உணவை அடையும் பதட்டத்தில், கட்டுப்பாடற்ற செயற்கை உரங்களின் உபயோகத்தின் மூலம் நிலங்களின் சமநிலைத்தன்மை குலைக்கப்பட்டுள்ளது. பூச்சி மருந்துகளின் உபயோகத்தால், பூச்சியினங்களுடன் சேர்த்து அந்த பூச்சிகளை உண்டு வாழும் உயிரினங்களையும் அழிவுக்கு உட்படுத்துகிறோம் - தேனீக்கள் உட்பட. உலகத்தில் தேனீக்களின் இனம் அழிந்தால், அது பூமியில் மிகப்பெரிய உயிரின அழிவுக்கு காரணமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

மனித இனம் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் கடந்து கொண்டே இருக்கிறது. அளவற்ற உற்பத்தியையும், எனவே கட்டுப்பாடற்ற நுகர்வையுமே அடிப்படையாக கொண்ட முதலாளித்துவத்தின் பங்களிப்பை முடித்து வைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. முதலாளித்துவத்தால், மனித வாழ்க்கை வசதிகள் பெருமளவு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனித இனம் மட்டுமல்லாமல், பல உயிரினங்களின் அழிவையும் அது தொடங்கி வைத்துள்ளது - பூமியின் சமநிலையை குலைப்பதன் மூலம்! பூமியின் சராசரி வெப்பம் அதிகமாக தொடங்கி விட்டது. துருவ பனிபாறைகள் உருகி, கடல் மட்டம் உயரத் தொடங்கி விட்டது, அதன் மூலம் நிலப்பரப்பும் குறையத்தொடங்கி விட்டது. பல உயிரினங்கள், பூமியிலிருந்து முற்றாக அழியும் நிலையில் உள்ளன. புதிய பொருளாதார முயற்சிகளை மிக வேகமாக தொடங்கியாக வேண்டும்.

முதலாளித்துவம், அதன் தேவையான சமூக சமத்துவத்தை, ஒரு குறிப்பிடத்தக்க எல்லைக்குள் அடைந்து விட்டது. அது தேக்க நிலையையும் அடைந்து விட்டது. இந்த தேக்க நிலையிலிருந்து மீள வேண்டுமானால், பேரழிவு ஒன்றை சந்தித்தாக வேண்டும். அதுவே இயற்கை விதி. ஆனால் முதலாளித்துவம் அதன் அதிகப்பட்ச பரிசாக, மனித இனத்திற்கு சுதந்திரமான சிந்தனை என்னும் ஆயுதத்தை அளித்துள்ளது. மனித இனம் நிச்சயமாக அந்த ஆயுதத்தை உடனடியாக பயன்படுத்தியாக வேண்டும். அந்த ஆயுதம் முதலாளித்துவத்தை அழித்து விட்டாலும்! மனித இனம் அழிவதற்கு பதிலாக, முதலாளித்துவம் என்னும் பொருளாதார இயக்கத்தை பலி கொடுக்கலாம். இதன் மூலம் மனித இனம் பூமியில் தப்பிப்பிழைப்பதற்கான சாத்தியத்தை, முதலாளித்துவம் அளித்த சுதந்திர சிந்தனையே அளிக்கட்டும்.

எனில், அடுத்த பொருளாதார முயற்சி தொடங்கியாக வேண்டும். முதலாளித்துவம் விட்டு செல்லும் இடத்திலிருந்து தொடங்கி, சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தேவையான பொருளாதார இயக்கம். இன்றைய பொருளாதார வல்லுனர்கள், முதலாளித்துவத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள். எனவே அவர்களால் புதிய பொருளாதார முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்று தோன்றவில்லை. விதிவிலக்காக, அவர்களுக்கிடையே சிந்தனையாளர்கள் இருந்தால் அது சாத்தியமாகலாம்.

எதிரெதிர் துருவங்களான, முதலாளித்துவத்தையும் கம்யூனிஸ பொருளாதாரத்தையும் கலந்து, ஒன்றின் குறைபாட்டை மற்றொன்றால் களைந்து, ஒன்றின் நிறைவை மற்றோன்றின் நிறைவால் மேலும் முழுமையாக்கி ஒரு புதிய பொருளாதார கொள்கையை கொண்டு வரலாம். காந்திய பொருளாதார கொள்கையான, முழுமையான, பரவலாக்கப்பட்ட சுயசார்பு பொருளாதாரக் கொள்கைகளை ஆராயலாம். காந்திய பொருளாதார கொள்கை, மிகப்பரவலாக்கப்பட்ட நிலையிலேயே சமூகத்தை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியும் என்று தோன்றுகிறது. பொருளாதார அலகின் அளவு அதிகரிக்கும் தோறும், காந்திய பொருளாதாரக் கொள்கைகள் எதிர்மறை விளைவுகளையும் அளிக்கலாம். பரவலாக்கம் நிகழ்ந்தால், தனிமனித சுதந்திரம் அதன் எல்லையை மிக எளிதாக அடைய முடியலாம். ஆனால், சமூகம் தனிமனித சுதந்திரத்தை கையாளத்தக்க அளவில் ஆன்மீக முன்னேற்றத்தை அடைந்திருக்க வேண்டும்.

சுதந்திரத்திற்கு பின், 1991-ம் ஆண்டு வரை இந்தியா பின்பற்றிய, முதலாளித்துவமும், அரசாங்கமும் இணைந்த பொருளாதாரக்கொள்கைகளை மீண்டும் பரிசீலனை செய்யலாம். இதன் மூலம் நுகர்வின் அளவையும் உற்பத்தியின் தேவையையும் ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியலாம். 

இன்னும் எண்ணற்ற சாத்தியங்கள். மனிதனின் சிந்தனைக்குதான் எல்லை இல்லையே. எனில் ஏன் ஒரு அடுத்த தலைமுறை பொருளாதார கொள்கையை உருவாக்க முடியாது. அதன் மூலம், பூமியல் மனித இருப்பை தக்கவைத்துக் கொள்வதையும்!