03-01-2015 அன்று சிறகு இணைய இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை
என் வீட்டுக்கு அருகில்
சில நாட்களுக்கு முன் ஒரு சாலை விபத்து. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன்,
இரு சக்கர வாகனத்தை சாலை ஓரத்தில் இரும்பு மின்கம்பத்தில் மோதி, கபாலம் கீறல் விழுந்திருக்கிறது.
நான்கு நாட்களுக்கு பிறகும் இடது கண் வழியாக இரத்தம் கசிவதாக கூறினார்கள். தற்போது
திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். பன்னிரண்டாம்
வகுப்பு படிக்கும் மாணவன். எனவே ஒட்டுனர் உரிமமும் இல்லை. பொருளாதாரத்தில், மிகவும்
சாதாரணமான குடும்பத்தில் உள்ளவன். ஒரு அவசர அறுவை சிகிட்சைக்காக சில லட்சங்கள் மருத்துவமனையில்
முன்பணம் கட்ட சொல்லியிருக்கிறார்கள். சில நலம் விரும்பிகள், ஊர்மக்களிடம் சிறிதளவு
பணம் நன்கொடையாக பெற முயற்சித்துக்கொண்டிருந்தார்கள்.
இங்கு நான் கூற முயல்வது,
இந்த ஒரு சிறுவனைப்பற்றியல்ல. இத்தகைய நிகழ்வுகளை! இவை தற்போதைய நம் சமூகத்தில் அன்றாட
நிகழ்வுகள். நமக்கு நிகழாதவரை யாருக்கும் கவலை இல்லை. அல்லது இது போன்ற நிகழ்வுகளை
கேள்விப்படும்போது, அவரவர் மனநிலைக்கேற்ற ஒரு குற்றச்சாட்டும், சற்றே உணர்ச்சி வசப்படுதலும்.
அந்த நிகழ்வின் தாக்கம் அத்துடன் முடிந்து விடும்.
இந்தியா ஒரு பெரும் நாடு.
உலக மக்கள் தொகையில் ஏழில் ஒருபங்கை விட அதிகமான மக்களை கொண்ட, அந்த (பெரும்பான்மை)
மக்களின் விருப்பப்படியே ஆளப்படும் நாடு. பல்வேறு முரண்களுக்கு இடையிலும், இன்னும்
சிதறி அழியாமல் ஒற்றை இருப்பாக இருக்கும் நாடு. இது ஒரு சாதாரணமாக கடந்து செல்லக்கூடய
விஷயம் அல்ல. எல்லா முரண்களுக்கு நடுவிலும், ஒற்றை ஆன்மீக நோக்கமே அதன் காரணமாக இருக்கக்கூடும்.
ஆம், எல்லா நாற்றங்களுக்கிடையேயும், இந்த நறுமணத்தை நாம் உணர்ந்தாக வேண்டும். பெருமைப்பட்டாக
வேண்டும் அதன் மூலம் நாம் அடையவேண்டிய பொறுப்புணர்வையும்!
இன்றைய உலகம் தேர்ந்தெடுத்திருக்கும்
முதலாளித்துவ பொருளாதாரத்தில், நுகர்வே அடிப்படை விதி. நாம் விரும்பும் ஒவ்வொரு பொருளையும்
நுகர்ந்தாக வேண்டிய, மனநிலையால் உருவாக்கப்பட்ட, கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம்.
முதலாளித்துவம், எல்லா மனிதர்களையும் கட்டுப்பாடற்ற நுகர்வின் மந்தைகளாக ஆக்குவதில்
வெற்றிபெற்று விட்டது! எனவே, அனைவரின் தன்முனைப்பும் நுகர்வுக்குத் தேவையான பணத்தை
அடைவதிலேயே குவிந்துள்ளது. அத்துடன், அந்த தன்முனைப்புடன் சேர்ந்து வரும் அவசரங்களும்,
போட்டிகளும் இன்னும் இதுபோன்றவையும். இத்தகைய மனநிலையில் வேகம் தவிர்க்க முடியாதது.
செய்யும் செயல்களை வேகத்துடன் செய்தால்தான் போட்டி மிகுந்த சமூகத்தில் நிலைத்திருக்க
முடியும். அதன்விளைவாக வேகத்துடன் செல்ல தேவையான மோட்டார் வாகனங்களும், இன்றைய அவசரகதி
வாழ்க்கைக்கும், நுகர்வை பறைசாற்றும் ஆசைக்கும், மிக அவசியமாகிறது.
துரதிர்ஷ்டவசமாக, வேகத்துக்கு
மிக மிக அவசியமான தன்னுணர்வையும், வேகம் அதிகரிக்கும்தோறும் இழந்து விடுகிறோம். ஆம்,
இதுவே நிகழும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு காரணமாக இருக்க முடியும். இழக்கும்
தன்னுணர்வு, சாலை விதிகளை அறியும் சாத்தியத்தை அழித்து விடுகிறது. ஒருவேளை அறிந்திருந்தாலும்,
அந்த விதிகளை கடைபிடிக்கும் சாத்தியத்தை இல்லாமல் செய்து விடுகிறது. விதிவிலக்காக,
ஓருவேளை சாலை விதிகளை கடைபிடித்தாலும், வேகத்தால் இழக்கப்படும் தன்னுணர்வு, எல்லா வித
சுய கட்டுப்பாடுகளையும் இழக்க வைத்து, நம் இருப்பை முழுமையாக பொதீக விதிகளின் செயல்களுக்கு
அர்ப்பணித்து விடுகிறது. பொதீக விதியின் படி, கம்பத்தில் தலை மோதினால், மோதலின் வேகத்திற்கேற்பவும்,
விசைக்கேற்பவும் தலை உடைந்தாக வேண்டும். இதில் மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்,
அத்தகைய விபத்துகளால் பாதிக்கப்படும் அப்பாவிகள். அந்த விபத்துக்கான அடிப்படை இயக்கங்களுடன்
எந்த வித தொடர்பும் இல்லாமல், ஆனாலும் பாதிக்கப்படும் அப்பாவிகள்!
பெண்கள், அதிகபட்சம் 30
முதல் 40 KMPH வேகத்திற்குள் செல்ல வேண்டிய ஸ்கூட்டி போன்ற வாகனங்களில் 50 KMPH -க்கும்
அதிகமான வேகத்தில், தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு சாதனங்களின் துணையும் இல்லாமல், வாகனத்தில்
தங்கள் சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு செல்லும் நிகழ்வு மிக சாதாரணம். அவர்களில்
பெரும்பாலானவர்கள் வாகனங்களை ஒட்டும் விதத்திலேயே, ஒரு அவசர தேவை வந்தால் வாகனத்தின்
மேல் எந்த கட்டுப்பாடும் இல்லாத வகையில் ஓட்டுவதை அறியலாம். இதை பொது வெளியில் கூறினால்,
ஆண்கள் அவ்வளவு வேகமாக செல்லும்போது, நாங்கள் ஏன் செல்லக்கூடாது என்னும் கேளவி!
இந்த நிகழ்வுகளுக்கு யாரைத்தான்
பொறுப்பேற்க சொல்வது? அரசாங்கத்தையா, அதிகாரிகளையா,
விபத்துகளை ஏற்படுத்துபவர்களையா, அல்லது சமூகத்தையா? இவர்கள் அனைவருமே இந்த விபத்துக்கு
பொறுப்பானவர்கள். அரசாங்கம் சரியான மோட்டார் வாகன கொள்கைகளை உருவாக்கவில்லை. இருக்கும்
சட்டங்களை முழுமையாக செயல்படுத்தவில்லை, அதிகாரிகளை கண்காணிக்கவில்லை. அதிகாரிகள் பொறுப்பற்ற
தனத்துடன், தங்கள் சுயலாபங்களுக்காக அரசின் கொள்கைகளையும் சட்டங்களையும் தங்களுக்கேற்றவாறு
வளைத்துக்கொள்கின்றனர். விபத்துகளை ஏற்படுத்துபவர்கள் சாலை விதிகளையும் சட்டங்களையும்
மதிக்காமல் அல்லது தெரிந்து கொள்ளாமல், தான்தோன்றித்தனமாக சென்று விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.
சமூகம் இந்த எல்லா அவலங்களையும் வெறுமனே பார்த்துக்கொண்டு, அதற்கு காரணமான அரசாங்கத்துக்கு
எவ்வித அழுத்தத்தையும் அளிக்காமல், அதிகாரிகளிடம் தங்கள் உரிமைகளை கேட்காமல், விபத்து
ஏற்படுத்துபவர்களுக்கு எவ்வித சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தாமல்,
இந்த நிகழ்வில் தன் பங்கையும் அளிக்கிறது.
சமூகமே இங்கு அரசாங்கத்தை
இயக்குகிறது. எனவே பொறுப்பின் பெரும்பகுதியை சமூகத்தின் மேலேயே செலுத்தியாக வேண்டும்.
சாலை விதிகளை, மோட்டார் வாகன விதிகளை அறிந்தும் அவற்றை கடைபிடிக்காதவர்களை குற்றவாளிகளாக
கருதலாம். தண்டிக்கலாம். ஆனால், வாகனங்களை பயன்படுத்துபவர்களில் ஒரு பெரும்பங்கினருக்கு
அந்த விதிகளே அறியாமல் ஒட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தால் யாரை குறை சொல்வது.
அதிகாரிகளை கைகாட்டிவிட்டு நாம் எளிதில் கடந்து விடுகிறோம். அதிகாரிகளை ஏன் கண்காணிக்கவில்லை
என அரசாங்கத்தை நோக்கியும் கைகாட்டலாம். ஆனால் நம் மீது நாமே ஏன் இந்த அவலத்துக்காக
குற்றம்சாட்டாமல் தப்பித்து விடுகிறோம்? அரசாங்கத்திடம் இந்த அவலத்தை எடுத்து கூறும்
சமூகத்தின் அறிவு இயக்கம் எங்கே சென்றது. சமூகத்தால் ஏன் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த
முடியவில்லை? சமூகத்தால் ஏன் தங்களுக்காக பணிபுரியும் அதிகாரிகளை கண்காணிக்க முடியவில்லை?
சமூகம் அதன் உயிர்ப்பை இழந்து
விட்டதா? நம் சமூகத்துக்கு இன்னும் பல டி.என்.சேஷன் -களும், வினோத் ராய் -களும், சகாயம்-களும்
அன்னா ஹசாரே -களும், டிராபிக் ராமசாமி-களும், சுப்ரமணியன் சாமி-களும் தேவைப்படுகிறார்கள்.
ஆம், சமூக நலத்தை நாடும் அதிகாரிகளும், சமூக
ஆர்வலர்களும் நம் சமூகத்துக்குள்ளிருந்து உருவாகி வர வேண்டும். அந்த தங்கள் அதிகாரத்தை
முற்றும் உணர்ந்த அதிகாரிகள், அந்த அதிகாரத்தை சமூகநலத்துக்காக திருப்பி விடும் உறுதி
படைத்த அதிகாரிகள், நம்மிடமிருந்து தோன்றி அதிகார வர்க்கத்தில் தங்கள் இடங்களில் அமர
வேண்டும். அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் வெளியில் உள்ள சமூகத்தில் இருந்து உண்மையான
சமூக போராளிகள் தோன்றி வர வேண்டும். சமூகத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சமூக
போராளிகள் சமூகத்தில் தங்கள் இடத்தில் அமர்ந்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும். அத்தகைய மனிதர்களை உருவாக்கும் அறிவியக்கம், நம் சமூகத்தினுள் நிகழ வேண்டும்.
சமூகத்தின் மந்தைகள், அந்த
அறிவியக்கங்களை அதன் மூலம் உருவாகி வரும் சமூகத்தின் தலைவர்களை கீழ்மைப்படுத்திக்கொண்டேதான்
இருப்பார்கள். ஆனாலும் அவர்கள், அவர்களின் இயல்பால் அந்த மந்தைகளை மன்னித்து அவர்களுக்காக
உழைப்பார்கள். பிரயாகை நாவலில் வரும் இந்த வரிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை!
'.......அவன் புன்னகை எப்படி இருக்கும் இத்தருணத்தில்? வெளியே கொந்தளிக்கும் இந்த மூட மக்கள்திரளை அவன் முழுமையாக மன்னிப்பான். அவர்களை நோக்கி கனிந்து நகைப்பான். உள்ளிருந்து அவர்களை ஆட்டிவைக்கும் சதிகாரர்களை? அவர்களையும்தான். ஆனால் அகம் கனிந்து, புன்னகை விரிந்து, அவர்களின் தலைகளை வெட்டி வீசுவான். விதுரர் புன்னகை செய்தார்..........'