இன்றைய நம் குழந்தைகள், நாளைய நம் சமூகத்தின் மனிதர்கள். குழந்தைகள் அவர்கள் இயல்பு மற்றும் சூழலிற்கேற்ப, ஒரு பகுதி அவர்களாகவே மனிதராகிறார்கள். அவர்களின் இன்னொரு பகுதி, சுற்று சூழலால் உருவாக்கப்படுகிறது. சுற்று சூழல் என்பதன் பெரும் பகுதி பெற்றோர் என்றாகிறது. குழந்தைகளின் சுற்றுசூழல், பெற்றோராலும், பெற்றோரால் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புறஉலகாலும் ஆனது. அவர்கள் சுற்று சூழலின் மற்றொரு பகுதி, அவர்களாகவே அறிமுகப்படுத்திக்கொள்ளும் புறஉலகினால் ஆனது. குழந்தைகளின் சுற்று சூழலின் இந்த இரு பகுதிகளின் விகிதங்களும், அவர்களின் இயல்பிற்கேற்ப மாறலாம்.
நம் இயல்பு என்ன என்பதையே பெரும்பாலும் அறியமுடியாத நம்மால் குழந்தைகளின் இயல்பு என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. இதுவே மனிதர்களின் உருவாக்கத்தில் உள்ள பெரும் தடைகல். ஆம், குழந்தைகளின் இயல்பை அறியாதவரை, அவர்களை பெற்றோரால் மனிதர்களாக உருவாக்க முடியாது. அவர்கள் தாங்களாகவே மனிதர்களாக உருமாற வழிவிடுவதும், அதற்கான சூழலை அமைத்து கொடுப்பதும்தான் பெற்றோரால் ஆனது. ஆனால் அவர்களின் இயல்பை அறியாமல் எவ்வாறு அவர்களுக்கான சூழலை அமைத்து கொடுப்பது? நாம் அமைத்து கொடுக்கும் சூழல் அவர்களை நேர்மறையாகவா அல்லது எதிர்மறையாகவா பாதிக்கிறது என்பதை எவ்வாறு அறிவது?
மனிதர்கள், அவர்கள் வாழும் முறையை, விழுமியங்களை (Axiom), சிந்தனை முறைகளை, எண்ணங்களின் ஓட்டங்களை, சமூகத்தின் இயல்புகளிடமிருந்தே பெறுகிறார்கள். இந்த சமூகத்தின் இயல்புகளை சராசரி சமூக இயல்பு எனலாம். இருந்தாலும் அந்த சமூகத்தில், சமூகத்திலிருந்து தாம் பெற்றவற்றை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் மனிதர்களும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். அவ்வாறு கேள்விகேட்பவர்கள், தாம் கேட்கும் கேள்விகளுக்கு அடையும் பதில்களுக்கு ஏற்ப சராசரியிலிருந்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விலகி இருக்கலாம் - பெரும்பாலும், உலகியல் வாழ்க்கையின் விதிகளையும் தன்மையையும் புரிந்து கொள்ளாதவர்கள், எத்தகைய கேள்விகளை அடைந்தாலும், தங்களின் புரிதலின்மையால் சராசரியையே வந்தடைவார்கள். ஆக ஒரு சமூகத்தில் பெரும்பாலானவர்கள் சராசரியாகவே இருப்பார்கள் - தங்கள் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சராசரிகளிடமிருந்து விலகியிருந்தாலும்!
மனிதர்கள் உருவாக்கத்தில் உள்ள எதிர்மறை அம்சம், பெரும்பாலும் எந்த பெற்றோரும் தாம் ஒரு சமூகசராசரி என்பதை அறிந்திருப்பதில்லை. சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும், ஒருவர், தம்மை தன்நிலையில் உள்ளவர்களிடமிருந்து வேறுபட்டவர் என்றே உணர்ந்து கொண்டிருப்பார். உண்மையில் எந்த இரு மனிதர்களும் ஒன்றுபோலானவர்கள் இல்லை. ஆனால் சமூகத்தில் உள்ள எல்லா மனிதர்களும், அந்த சமூகத்திலிருந்தே செயல்படும் வழிமுறைகளையும் எனவே முன்முடிவுகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். எனவே முழுமையான சமூகவிதிகளின் புரிதலுடன் சமூக வழிமுறைகளை கேள்விக்குட்படுத்துபவர்கள் தவிர மற்றவர்களின் சமூக செயல்பாடுகள் சாராசரித்தன்மையுடனே பெரும்பாலும் இருக்கும். ஆனாலும் மனிதர்களுக்கிடையேயான இயல்பான வேறுபாடும், அவர்கள் தன்முனைப்பும் (Ego) சேர்ந்து, அவர்கள் தங்களை சராசரிகளிடமிருந்து வேறுபட்டவர்கள் என்னும் எண்ணத்தை உருவாக்குகிறது. இந்த மாயையிலிருந்து வெளிவருவது அத்தனை எளிதானது அல்ல (இதை உணர்ந்து அல்லது புனைந்து எழுதும் எனக்கும் கூட! - இந்த எழுத்தும் அத்தகைய மாயையிலிருந்து வெளிவர முயலும் சிறு முயற்சியே)
ஆம் உண்மையில் மனிதர்கள் உருவாக்கம் அல்லது (பெரும்பாலும்) அழிப்பில் பெற்றோரின் இந்த சராசரித் தன்மையிலிருந்து தம்மை விலக்கி காணும் மாயை பெரும் பங்கு வகிக்க கூடும். மனிதர்களுக்கு அவர்கள் வாரிசு என்பது தங்களின் நீட்சியே. வாரிசுகளை ஒரு தனிப்பட்ட, முற்றிலும் தனிமையான ஒரு உயிராக காண்பது, இவற்றைபற்றி வாய்கிழிய கதறுவோருக்கும் (என்னையும் சேர்த்து) எளிதானது அல்ல - சமூக சராசரித்தனத்தின் காரணமாக! நாம் என்பது நமது எண்ணங்களும், நிறைவேறிய மற்றும் நிறைவேறாத ஆசைகளும், மற்றும் இவற்றைப் போன்றவையும். எனவே நமது நீட்சிகளாக நாம் கருதும் நம் வாரிசுகளையும் நமது எண்ணங்களின், ஆசைகளின் நீட்சியாக கருதுவதும் இயல்பே. எனவே நமது ஆசைகளையும் எண்ணங்களையும், நம்மை அறியாமலே அவர்கள் மேல் சுமத்த தொடங்குகிறோம்.
அடுத்ததாக, பெற்றோர் என்பவர்கள், முற்றிலும் தனித்தன்மைகள் கொண்ட, வெவ்வேறு எண்ணங்களும் ஆசைகளும் கொண்ட வெவ்வேறான இரு மனிதர்கள். அவர்களின் குழந்தைகள், அந்த இருவருக்கும் தனித்தனியாக தத்தமது நீட்சியே. ஆக ஒரு குழந்தை அதன் பெற்றோரின் பார்வையிலேயே இரண்டு வெவ்வேறான ஆளுமைகளாக பிரிந்து விடுகிறது. அந்த இரு ஆளுமைகளுக்குமான சூழல் தொடர்ந்து ஒரே நேரத்தில் அந்த குழந்தைக்கு வழங்கப்படுகிறது. மனிதர்களின் உருவாக்கத்தில் ஏற்படும் முதல் ஆளுமை பிழவு (split personality) பெற்றோராலேயே, அவர்களுக்குத் தெரியாமல், உருவாக்கப்பட்டு விடுகிறது. இந்த இரட்டை ஆளுமை சூழலில், தன்னை தன் இயல்பால் சமன் செய்து முன்னகர இயலும் குழந்தைகளால் மட்டுமே சமூக சராசரித்தன்மையிலிருந்து விலகியிருக்க முடியலாம். அல்லது, சமூக சராசரியிலிருந்து விலகியிருக்கும் (இரு) பெற்றோர்களாலும், ஆளுமை பிளவு இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகளாலும் அவ்வாறு சமூக சராசரியிலிருந்து விலகியிருக்க முடியலாம். சமூக சராசரியிலிருந்து, நேர்மறையாக, விலகியிருப்பவர்களால் மட்டுமே எல்லா சமூகங்களும் முன்னோக்கி நகர முடிகிறது.
வளரும் சூழல் இயல்பாக இருக்கும்வரை,
குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டிய தேவை இல்லை. அவர்களாகவே, அவர்கள் இயல்பிற்கேற்ப, மனிதர்களாகி
விடுவார்கள். ஆனால், இன்றைய குழந்தைகள் வளரும் சூழல் இயல்பாக உள்ளதா என்பதை அனுமானிக்க
முடியவில்லை. உதாரணமாக, குழந்தைகளை அவர்கள் இயல்பான விளையாட்டு தன்மையிலிருந்து தனிமைப்படுத்தும்
தொலைக்காட்சி, இணையம், கணினி விளையாட்டுகள் போன்றவை, மூன்று வயதிலிருந்தே போட்டியை
மட்டும் குறிக்கோளாக கொண்ட கற்பதற்கும் கற்பனைக்கும் சிறிதும் வாய்ப்பளிக்காத கல்வி
முறை, வீட்டிலோ, வீட்டிற்கு அருகிலோ, சுயமாக பெற்றோரின் வழிநடத்தல் இல்லாமல் பிற குழந்தைகளுடன்
கலக்கும் சுதந்திரம் இல்லாமை, இன்னும் இவற்றை போன்ற பல காரணிகள். ஒருவேளை, முந்தைய
தலைமுறையில் இதே அளவிலான வேறு காரணங்கள், அன்றைய குழந்தைகளுக்கு இருந்திருக்கலாம்.
ஆனால் அவற்றை வரிசைப்படுத்த, தற்போதைய எண்ண ஒட்டங்களின் அடிப்படையில், இயலவில்லை.
தம் இயல்பையே அறியாத பெற்றோரால்
குழந்தைகளின் இயல்பை அறிந்து அவர்களுக்கு தேவையான சூழலை உருவாக்கி வழங்குவது என்பது
இயலாதது. அதே வேளையில், தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றால் முற்றிலும் திசைதிருப்பப்பட்ட
குழந்தைகள், அவர்களாகவே அவர்கள் இயல்பை அடைவது என்பதும், பெரும்பாலான குழந்தைகளுக்கு
எட்டாததாகவே இருக்க கூடும். இத்தகைய ஒரு தலைமுறை மனிதர்கள் சமூகத்தில் உருவாகி வந்து
விட்டார்கள். அவர்களின் உள்ளீடு(Content) எவ்வாறு இருக்கும் என்பதையும் அனுமானிக்க
முடியவில்லை. பொதுவான ஒரு அவதானிப்பில், தற்போதைய சமூக வாழ்க்கை மிகவும் மெலிதான புறவயமான,
மேற்பரப்பில் மட்டும் நிகழும் ஒன்றாகவே தெரிகிறது.
ஆம், எப்போதுமே சராசரி சமூக வாழ்க்கை புறவயமானதாகவே இருந்துள்ளது. ஆனால் முந்தைய தலைமுறையில்
அது சற்று ஆழமானதாக இருந்திருக்க கூடும்.
எனவே, தற்போதைய குழந்தைகளுக்கு,
அவர்களை அவர்களே அடையாளம் காணும்வரைக்கும் முன்முடிவுகளற்ற, ஒரு குறிப்பிட்ட புள்ளியை
மட்டும் குறிக்கோளாக கொண்டிருக்காத வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகள் தேவை என்றே
தோன்றுகிறது. உதாரணமாக தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றுக்கான கட்டுப்பாடுகள், வாசிப்பு,
விளையாட்டு போன்றவற்றுக்கான ஊக்குவிப்புகள் ஆகியவை. ஆனால், தொலைக்காட்சிக்கு அடிமையாவது
என்பது மிக எளிமையான ஒன்று. தொலைக்காட்சியிலிருந்து வாசிப்புக்கு குழந்தைகளை வழிப்படுத்த
வேண்டுமென்றால், அதற்கு ஒத்த எண்ண ஓட்டமுள்ள தேவையான அளவு கண்டிப்பை செலுத்தும் உறுதியுள்ள
பெற்றோரும் இன்றியமையாத தேவையாகும். அல்லது தற்போதைய போட்டி சார்ந்த கல்வி முறை, சுயவாசிப்பை
நிகழ்த்தும் தகுதி பெற்ற குழந்தைகளை அத்தகைய வாசிப்பிலிருந்து விலக்குவதற்கு தேவையன
அழுத்தத்தை அளிக்கிறது. இங்கும் பெற்றோரின்
பங்கு இன்றியமையாதது - குழந்தைகளை போட்டி மனநிலையிலிருந்து விலக்கி அவர்கள் சுயஅறிதலின்,
கற்பனையின் வாய்ப்புகளை பெருக்குவது! ஆனால் போட்டி மனநிலையிலிருந்து குழந்தைகளை விலக்கும்போது,
போதிய கண்காணிப்பு மற்றும் கண்டிப்பு இல்லாதபோது, அவர்களை ஊடகங்களின் பரப்பு விசைகளில்
இழந்து விடவும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் மேலான கண்டிப்பு, தற்போதைய நடுத்தர மட்டும்
மேல்தர குடும்பங்களில், ஊடகங்களில் பெருமளவு காணக்கிடைக்கும் குழந்தைகள் உளவியல் குறித்த
கருத்துக்களால், ஏறத்தாழ இல்லை என்ற அளவுக்கு வந்து விட்டது. குழந்தைகள் மேலான கண்டிப்பு,
தேவையா இல்லையா என்பது எளிதில் முடிவு செய்யக்கூடிய ஒன்றாக தோன்றவில்லை. கண்மூடித்தனமான
கண்டிப்பு தேவை இல்லை. ஆனால் இடம், பொருள், காலம் அறிந்து தேவையான இடத்தில் கண்டிப்பு
நிச்சயம் தேவையான ஒன்றாக இருக்கலாம்.
இத்தகைய எண்ணற்ற வளரும்
சாத்தியங்களின் நடுவில் குழந்தைகள் மனிதர்களாக மாறுவது, முற்றிலும் அந்த குழந்தைகளின்
அனைத்தையும் கடந்து செல்லும் இயல்பிலேயே உள்ளது. அவ்வாறு கடந்து செல்ல முடியாதவர்கள்,
சமூக சராசரியில் சென்று சேர்கிறார்கள். பெற்றோர்களாலும், தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில்
சமூக சராசரியிலிருந்து நேர்மறையாக விலகியிருக்க, செய்யக்கூடியதென்று ஒன்றும் இல்லை.
எனினும், பெற்றோர் தம் இயல்பிற்கேற்ற சூழ்நிலைகளை குழந்தைகளுக்கு வழங்குவதும், அல்லது
தமது இயல்பிற்கேற் சூழல் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என தோன்றினால் தம் இயல்பை
அதற்கேற்ற முறையில் மாற்றுவதன் மூலம் குழந்தைகளுக்கான சூழலை வழங்குவதும், குழந்தைகள்
எந்த வகை மனிதர்களாக மாறினாலும், அதனால் பாதிக்கப்படாமல் இருக்கும் மனநிலையை அடைவதுமே
பெற்றோர்களால் செய்யக்கூடியதாக இருக்கலாம்.