Friday, March 7, 2014

காமம்

உலக இருப்பில் உள்ள எல்லா ஆண்மை என்னும் சக்தி வடிவங்களுக்கும் பெண்மை என்னும் சக்தி வடிவங்களுக்கும் இடையே இயல்பாகவே இருக்கும், ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாக விரும்பும் மகா இச்சை, காமம் என்னும் பெயரால் சுட்டப்படுகிறது. எங்கெல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து மற்றொன்று உருவாகிறதோ அங்கெல்லாம் காமம் என்னும் மகாஇச்சையின் இயக்கம் இருப்பதாக கொள்ளலாம். காமமே உலகின் இயங்கு விசை. ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகி, புதியதொன்றை உருவாக்கி, தாம் அழிந்து புதியதை தொடர் இயக்கத்தில் சேர்க்கும் மகா இயக்கம். காமம் என்னும் இச்சை எங்கும், எப்போதும், எல்லாவற்றிலும் தொடக்கம் முடிவு இல்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது. காமத்தின் இயக்கம் அழியும்போது உலக இயக்கமும் அழியும்.

ஆம், காமம் நம் வணக்கத்துக்குரியது. காமமே நம் படைப்புக்கு ஆதாரம், நம் இருப்புக்கும் படைத்தலுக்கும் ஆதாரம், நம் அழிவுக்கும் ஆதாரம். அதற்கான வணக்கத்தை நாம் முறையாக செலுத்தியாக வேண்டும். அதற்கான வணக்கத்தை மறுக்கும்போது, காமம் நம்மை அலைக்கழிக்கிறது. அப்போது நாம் அதை வெறுக்கத் தொடங்குகிறோம். மற்றவர்களையும் அதை வெறுக்குமாறு கூறுகிறோம். அடுத்த தலைமுறைக்கும் அந்த வெறுப்பை பரப்புகிறோம். வெறுப்பின் பிரதிபலிப்பாக காமத்தை கொச்சைப்படுத்துகிறோம். ஆம், என்று காமம் மனிதனை அலைக்கழிக்க தொடங்கியதோ அன்றே அதை கொச்சைப்படுத்துதலும் தொடங்கியிருக்க வேண்டும்.

ஒரு முழு இருப்பாக நாம் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்மையும் பெண்மையும் கலந்தே இருக்கிறது. நமக்குள் இருக்கும் ஆண்மையும் பெண்மையும் கலந்து ஒன்றாகத் துடிக்கும் இயல்பும் காமமே. அந்த ஆண்மையும் பெண்மையும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகி முழுமையடையும்போது நாமும் முழுமை அடைந்திருப்போம். நமக்குள் இருக்கும் எல்லா ஆதிக்க இயல்புகளும், வெறி கொண்டு அடைய துடிக்கும் இயல்புகளும், முன்னோக்கி உந்தித் தள்ளும் இயல்புகளும் நம் ஆண்மை இயல்புகள் எனலாம். அந்த ஆதிக்கத்தை, வெறியை, உந்துதலை தன்னுள் அடக்கி, அவற்றின் நோக்கத்தை அடைய செய்து, அவற்றை இல்லாமல் செய்யும் இயல்புகளை பெண்மை இயல்புகள் எனலாம். எனவே எவரிடம் ஆண்மை இயக்கமும் பெண்மை இயக்கமும் ஒத்திசைந்து இயங்குகின்றனவோ, அவர்களின் வாழ்க்கை அந்த வாழ்க்கையின் நோக்கத்தை நோக்கி இயல்பாகவே சென்று கொண்டிருக்கும்.

தன்னுள் ஆண்மையையும் பெண்மையையும் முழுமையாக சமன் செய்யும் இயக்கங்களை இயல்பாகவே கொண்ட ஒருவருக்கு, இன்னொரு பெண்ணின் அல்லது ஆணின் துணை தேவை இல்லை. தனக்குள் உள்ள ஆண்மையையும் பெண்மையையும் கொண்டே அவர் தன்னை நிறைவு செய்து கொள்ள முடியும். மனிதர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் இத்தகைய இயல்புடையவர்கள் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தன்னுள் உள்ள எந்த ஆண்மை அல்லது பெண்மையை சமன் செய்ய இன்னொரு துணை தேவைப்படுகிறது என்பதையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிதலே இன்னொரு துணையின் மூலம் தன்னை சமநிலைக்கு எடுத்து சென்று முழுமையை நோக்கி நகர வைக்கும்.

இன்றைய குடும்ப சுழல்களை குறித்த ஒரு புறவயமான பார்வையே, காமம் குறித்த அல்லது ஆண்மை பெண்மை குறித்த அடிப்படை புரிதல்கள் சற்றும் இல்லாத சமூக சூழல் நிலவுவதை உறுதி செய்ய போதுமானது. பெரும்பாலான குடும்பங்கள் இன்று குடும்பங்களாக இருப்பது வெறும் சமூக கட்டாயத்தினால் மட்டுமே. அந்த குடும்பங்களுக்குள் ஒன்றை ஒன்று சமன் செய்யும் இயக்கங்கள் ஏதேனும் இருந்தால் அவை வெறும் தற்செயலால் மட்டுமே உள்ளன. கட்டாயத்தின் மூலம் உருவாக்கப்படும் எந்த அமைப்புகளிலும் அமைதி இருக்க வாய்ப்பில்லை. அந்த குடும்பத்தின் தலைவர்கள் காமத்தை அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அவர்கள் அறிந்த காமம் வெறும் கொச்சையான காமம் மட்டுமே. மனித அகங்காரம் கட்டாயத்தின் மூலம் நிலைநிறுத்தும் எந்த இயக்கங்களையும் தொடர்ந்து எதிர்க்கும். இதுவே பெரும்பாலான குடும்பங்களின் தற்போதைய நிலை - ஒரு பொதுவான பார்வையில். (இது பார்வையின் குறைபாடாக கூட இருக்கலாம்).

ஆண்மை மற்றும் பெண்மை குறித்த புரிதல்கள், ஆண்மையின் மற்றும் பெண்மையின் இயற்கையான மற்றும் புறவயமான ஈர்ப்புகளை முழுமையாக அடைவதன் மூலம், பூர்த்தி செய்வதன் மூலம் பெற தொடங்கலாம். ஆனால் அகங்காரம் இதற்கு தடையாக இருக்கும் ஒரு மிகப்பெரிய வேலி. ஆண்மையும் பெண்மையும் ஒன்றை ஒன்று சமன் செய்யும் இயக்கங்களிலாவது, அந்த இயக்கங்கள் முழு விசையில் இருக்கும்போதாவது, அகங்காரம் முழுமையாக அழிய வேண்டும். அத்தகைய அகங்கார அழிவுக்கு வழிவிடாத எந்த ஒருவரும் காமத்தின் சுவையின் துளியை கூட சுவைக்க முடியாது. ஆனால் இயற்கை பெருங்கருணை உடையது. ஆண்மையும் பெண்மையும் சமன் செய்யும் இயக்கத்தில் எண்ணங்களற்ற கண நேரத்தை, அல்லது அந்த கணத்தின் சிறு பகுதி நேர கால இடைவெளியை நமக்கு அளிக்கிறது. எண்ணங்கள் அழியும்போது அகங்காரம் இல்லை. இயற்கையின் பெருங்கருணையை ஏற்றுக்கொள்ளும் தகுதியுடையவர்களாக நம்மை அமைத்திருந்தால், அந்த சிறு நேர வெளியில், முழுமையின் துளியை அறிய முடியலாம். அந்த அறிதலில் இருந்து நம்மை முழுமை செய்யும் இயக்கங்களை நோக்கி நகரவும் முடியலாம்.

ஆம், அகங்காரத்தை துறத்தலே, வாழ்வதற்கான ஒரே வழி. அகங்காரத்தை துறக்க எண்ணற்ற வழிகள் இருக்கலாம். இயற்கை, காமத்தின் மூலம், அகங்காரத்தை துறத்தலின் இனிமையை அறியும் வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கிறது. இது ஒரு சாத்தியம் மட்டுமே. அந்த சாத்தியம், ஒரு பொறியும் கூட. ஆம், வாழ்க்கை ஒரு விளையாட்டு. வாழ்க்கையின் எல்லா சாத்தியங்களுடனும், நம்மை பிணைக்கும் பொறிகளும் சேர்ந்தே உள்ளன. அந்த சாத்தியங்களையும் பொறிகளையும் அறிந்தவர்களாலேயே வாழ்க்கையை விளையாட முடியும். வாழ்க்கையை விளையாட முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்!

blog.change@gmail.com


Tuesday, March 4, 2014

துறவு

மிகப்பரந்த அர்த்தமுள்ள வார்த்தை. முழுமையாக புரிந்து கொள்ள மிக கடினமான வார்த்தை. எனினும் மிகப்பரவலாக உபயோகிக்கப்படும் வார்த்தை. இந்த வார்த்தை சுட்டும் பொருளை குறித்த ஆராய்ச்சி, நம் மனதில் பல சாளரங்களை திறக்க உதவலாம். அந்த சாளரங்கள் இந்த வார்த்தையின் பொருளை நோக்கி நம்மை கொண்டு செல்லவும் உதவலாம். பெரும்பாலும் நாம் துறவு என அறிந்திருப்பது, காவி அல்லது வெள்ளை உடை அணிந்து, சாதாரண மக்கள் விரும்பித் தேடும் சிலவற்றை தவிர்த்து, எண்ணற்ற மனகட்டுப்பாடுகளை விதித்து, பலவாறு தம்மைதாமே துன்புறுத்துவதையே - பல காரணங்களுக்காக! பெரும்பாலும் கடவுள் என்னும் காரணத்துக்காக! இந்த ஆராய்ச்சிக்கு, துறவு குறித்து நாம் கொண்டுள்ள முன்முடிவுகள் அனைத்தையும் சற்று ஒதுக்கிவைப்பது மிக அவசியம்.

துறவு என்பது, அதன் எளிய அர்த்தத்தில், நம்மிடம் இருக்கும் ஒன்றை துறப்பது. எதற்காக நாம் ஒன்றை துறக்க வேண்டும்? நாம் விரும்புபவற்றை பெறவேண்டுமானால், அதற்கு தடையாக இருப்பவற்றை நாம் துறந்தாகவேண்டும். அன்றாட வாழ்க்கைதளத்தில், நம் உடல் தினம்தோறும் தன் கழிவுகளை துறந்து, உணவிலிருந்து தன்னை மறுஉற்பத்தி செய்து கொள்கிறது. ஆம் இது ஒரு இயற்கை நியதி. தேவைஇல்லாதவற்றை அந்த கணமே துறந்து, நம்மை மறுஉற்பத்திசெய்வதற்கு தேவையானவற்றை அதற்கு பதிலாக பெறுவது. இந்த துறத்தலும் எடுத்தலுமே, அன்றாட வாழ்க்கை தளத்தில், நம்மை இயங்கச் செய்கிறது.

ஆக துறவு என்பது, நாம் ஒன்றை பெறுவதற்காக, அதற்கு தடையாக இருக்கும் மற்றொன்றை இழப்பது. துறவு என்னும் வார்த்தை அன்றாட வாழ்க்கை தளத்தில் உபயோகிக்கப்படுவதில்லை. ஆன்மீக தளத்திலேயே பெரும்பாலும் கூறப்படுகிறது. அதாவது ஆன்மீக தளத்தில் ஒன்றை பெறுவதற்காக, அன்றாட வாழ்க்கை தளத்தில் சிலவற்றை துறப்பதையே துறவு என்னும் வார்த்தை பெரும்பாலும் சுட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் நாம் துறப்பவையும், அந்த துறப்பின் விளைவாகும் அடைதலும் வெவ்வேறு தளங்களில் உள்ளன.

உலகியல் துறவு, ஆன்மீக அடைதலாக பரிணாம மாற்றம் அடைய வேண்டுமானால், அந்த துறவு மிக இயல்பாக நம்முள் நடைபெற வேண்டும். வலுக்கட்டாயமாக கொள்ளும் துறவு, நம்மை எவ்வகையிலும் ஆன்மீகத்துக்கு அருகில் அழைத்து செல்லாது. மாறாக அது நம்மை ஆன்மீகத்திலிருந்து விலக்கவே செய்யும். துறவு என்பது நம் மனதில் நிகழும் ஒரு நிகழ்வு. துறவின் அடையாளமாக சுட்டப்படும் எந்த புறவயமான குறியீடுகளாலும் எவ்வகையிலும் துறவு என்னும் நிகழ்வை முழுமையாக அடையாளம் காட்ட இயலாது. குறியீடுகள் உண்மையான துறவையோ அல்லது துறவுக்கான ஆர்வத்தையோ குறிக்கலாம். உண்மையான துறவு புறவயமான குறியீடுகளுடனோ அல்லது குறியீடுகளை முற்றிலும் தவிர்த்தோ நிகழலாம். ஒரு தனிமனிதனின் துறவு சமூகத்தினுள் எந்தவிதமான பாதிப்புகளுக்கும் தேவை இல்லை என்றாலோ, அந்த மனிதனால் குறியீடுகளின் துணையின்றி துறவு மனப்பான்மையை இழக்காமல் வைத்திருக்க முடியும் என்றாலோ, அத்தகைய மனிதர்களுக்கு புறவயமான குறியீடுகளின் தேவை இல்லை.

ஆன்மீக தளத்தை நாம் அடைய வேண்டுமானால், லொகீக தளத்தில் சில அல்லது பலவற்றை நாம் துறந்தாக வேண்டும். ஆனால் அந்த துறவு நம் இருப்புக்கு மிக இயல்பானதாக இருக்க வேண்டும். எவ்வாறு இரு மனிதர்களின் இருப்பு ஒன்றுபோல் இருக்க முடிவதில்லையோ அதைப்போலவே இரு மனிதர்களின் துறவும் ஒன்றுபோல் இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு ஆன்மீக அடைதலுக்கு நிச்சயமாக துறந்தாக வேண்டிய ஒன்று, மற்றொரு மனிதனால் துறக்கப்பட்டால், அந்த மனிதனை ஆன்மீகத்திலிருந்து வெகு தூரத்துக்கு விலக்குவதாகவும் இருக்கலாம்.

எந்த பற்றுதல்கள் நம் ஆன்மீக வாழ்க்கைக்கு தடையாகவும், அதே நேரத்தில் நம் லொகீக வழ்வில் தவிர்க்க கூடியனவாகவும் உள்ளனவோ, அவற்றையே நம்மால் இயல்பாக துறக்க முடியும். ஆம், இது ஒரு தெளிவற்ற கருத்தாக தோன்றலாம். எனவேதான் துறவு என்னும் பொறியில் விழுந்து பலர் தம் ஆன்மீக வாழ்க்கையையும் லொகீக வாழ்க்கையையும் இழந்து தவிக்கின்றனர். நம் இருப்பின் இயல்பினை கொண்டே நாம் எவற்றை துறக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். ஒருவேளை, ஆன்மீகம் அல்லது கடவுள் குறித்து உலகில் உலவும் கருத்துகளால் தூண்டப்பட்ட ஒருவர், ஆன்மீக சாதனைக்காக, தன் இயல்பான ஆசைகளை துறக்க முயன்றால், பெரும்பாலும் அவரால் ஆன்மீகத்தின் எந்த திசையையும் அடைய முடியாது. இத்தகைய மனிதர்கள் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள். ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாம் சந்திக்க நேர்ந்த இத்தகைய ஒரு மனிதரைக் குறித்து தம் எழுத்துகளில்\உரைகளில் பதிவு செய்திருக்கிறார். ஆன்மீக வெளியில் நாம் உற்று நோக்கினால், இத்தகைய மனிதர்களை எங்கும் காணலாம். இவர்களில் பலர் தம் வாழ்நாளில் இதனை உணர்வதில்லை. உணரும் வெகுசிலரும், அந்த உணர்தலை கடந்து சென்று தங்கள் பாதையை அமைத்துக்கொள்ளும் உறுதியையும் இழந்திருப்பர்.
பெரும்பாலான இந்திய ஞான தத்துவங்கள் இந்த உண்மையை தம் இயல்பாக கொண்டுள்ளன. எனவேதான் ஆன்மீக அடைதலுக்கு ஒற்றைப்பாதையை காட்டாமல் பலதளங்களில், பல திசைகளில் பாதைகளை காட்டுகின்றன. உதாரணமாக, பெரும்பாலான ஆன்மீக வழிகளில் காமம் விலக்கப்படுகிறது. ஆனால் காமத்தையே பாதையாக கொண்ட ஆன்மீக வழிகளையையும் இந்திய ஆன்மீக தத்துவங்கள் உரக்க கூறுகின்றன. ஆம், காமமே இயல்பானவர்களுக்கு காமமே ஆன்மீகத்திற்கான பாதை!

இங்கு, காமத்தை குறித்து சமீபத்தில் நான் படிக்க நேர்ந்த சில சொற்றொடர்கள்...
\\........ரதிவிஹாரிஎன்ற சொல்லைக் கண்டான். புவியிலுள்ள அனைத்தையும் பிரதிபலித்துவிடக்கூடியதுபோன்ற துல்லியத்துடன் அதை அறிந்தான்.
காமத்தில் விளையாடுபவன். ஆம், காமத்தை ஆடுபவன் அல்ல. காமத்தில் மூழ்கியவன் அல்ல. காமத்தின் அடிமையும் அல்ல. காமத்துடன் விளையாடுபவன். தீயுடன் விளையாடும் ரசவாதிபோல. சர்ப்பத்துடன் விளையாடும் விடகாரி போல. யானையுடன் விளையாடும் மாதங்கிகன் போல. ரஸவிஹாரி. மோஹவிஹாரி. மிருத்யுவிஹாரி
காமத்துடன் விளையாட எவருக்கேனும் முடியுமா என்ன? அது நோயுடன் விளையாடுவது போன்றது. அவ்விளையாட்டில் நோய் மட்டுமே வெல்லமுடியும். ஆனால் எப்போதேனும் எவரேனும் காமத்தை உள்ளும் புறமும் அறியமுடிந்தால் அவன் விளையாடமுடியும்.

இனியதொரு பரவசத்தில் விதுரன் நடுங்கினான். அப்படி ஒருவனால் காமத்தில் விளையாடித் திளைக்கமுடிந்தால் அவனறியும் காமம் எத்தனை மகத்தானதாக இருக்கும்? அது எல்லையற்ற மதுரக்கடல். முடிவற்ற எழில்வெளி. அது பிரம்மமேதான். அறுசுவையில் ஐந்தையும் களைந்து இனிமை மட்டுமாகத் தோற்றமளிக்கும் பிரம்மம். பிரம்மத்தை நோக்கி ஆன்மா செல்லும் நிலை அல்ல, பிரம்மம் ஆன்மாவில் வந்து நிறையும் நிலை............\\

blog.change@gmail.com

Saturday, March 1, 2014

உழைப்பு

பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு துகளுக்கும், மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து, உழைப்பு ஒரு தவிர்க்க முடியாத அம்சம். எந்த ஒரு துகளும் எத்தகைய அமைதியுடன் அமர்ந்திருந்தாலும், அதனுள் இடைவிடாத இயக்கம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். பொருட்களுக்கு அதன் அணுக்களின் இயக்கமும், அணுக்களுக்கு அணுத்துகள்களின் இயக்கமும், அணுத்துகள்களுக்கு அவற்றின் இருப்பின் அடிப்படையான சக்தியின் இயக்கங்களுமாக. எந்த ஒரு இயக்கத்திற்கும் சக்தி இன்றியமையாத தேவை. உழைப்பின் பயன் இயக்கம். எனவே உழைப்பை, இயக்கத்தின் மூலமாக நடைபெறும் சக்தியின் நுகர்வு என வரையறுக்கலாம்.

சக்தி, தோற்றமோ அழிவோ இல்லாதது. எனவே நுகரப்படும் சக்தி, அழியாமல் இன்னொரு வடிவில் வெளிப்பட்டாக வேண்டும். எனவே உழைப்பு என்பது, ஒரு பொருள் அல்லது உயிர், ஒரு வகை சக்தியை அதன் புறத்திலிருந்து பெற்று, இன்னொரு வகை சக்தியாக புறத்தே வெளியிடுவது அல்லது தன்னுள் அமர்ந்திருக்கும் சக்தியை இன்னொரு வகை சக்தியாக வெளியிட்டு, தான் இல்லாமல் அழிவது என்றும் கூறலாம்.

பிரபஞ்சத்தில் அழிவில்லாத ஒன்று என எதுவும் இல்லை எனக் கூறலாம் - சக்தியை தவிர! நம் உணரும் திறன் காலம் என்னும் தளத்தில் (Time Dimension) இருந்தால், தோற்றம் மற்றும் அழிவின் இடைவெளி, அந்த பொருளின் அல்லது உயிரினத்தின் இயல்பை பொறுத்து மாறலாம். அல்லது சில இருப்புகளின் தோற்றமும் முடிவும் நம்மால் உணர முடியாத காலவெளிக்கு அப்பால் இருக்கலாம். உதாரணமாக, ஒரு நுண்ணுயிரின் இருப்பு சில நிமிடங்கள் மட்டமே இருக்கலாம். ஒரு சிறு உயிர் சில நாட்களில் தோன்றி மறையலாம். விலங்குகள் சில வருடங்களில் தோன்றி மறையலாம். மனிதன் நூறு வருடங்களில் பிறந்து அழியலாம். ஒரு சிறு கல் சில நூறு ஆண்டுகளை, கல்லாக உருவெடுத்தது முதல் மணலாக மாறி அழிவதுவரை, எடுக்கலாம். நம் சூரிய மண்டலத்தின் நடு நாயகமான சூரியன் பல கோடி ஆண்டுகளில் அழியலாம். இன்னும்..... நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட கால வெளியில் பிரபஞ்சம் அதன் தற்போதைய வடிவிலிருந்து வேறுவடிவுக்கு அழிந்தொழியலாம்.

நம் உணரும் திறன் காலம் என்னும் தளத்தை கடந்திருந்தால், பிரபஞ்சத்தின் எல்லா பொருட்களிலும் உயிரினங்களிலும் பிறப்பையும் அழிவையும் ஒவ்வொரு கணம் தோறும் காண முடியலாம். ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கணம் தோறும் இறந்து பிறப்பது பற்றி மிக அழகாக கூறியிருப்பார். அவர் கூறியது சற்றேறகுறைய, காலம் என்னும் தளத்தை கடந்து செல்ல நம்மால் முடிந்தால், ஒவ்வொரு கணமும் நாம் இறந்து பிறப்பதை அறிய முடியும். அதன் மூலம் ஒவ்வொரு கணமும் புது மனிதனாக, புது வாழ்க்கையையும் வாழ முடியும்.

ஆக இயக்கம், பிரபஞ்ச அளவில், நம் அறிவுக்கு எட்டும் வரையில், தொடக்கம் முடிவு இல்லாமல் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. சிறு துகளை பொறுத்தவரையிலும் இதுவே. இடைபட்ட இயக்கங்களில், வெகு சில இயக்கங்கள் மட்டுமே நம் உணர்வுக்கும் அறிவுக்கும் எட்டும் தளங்களில் அமைந்துள்ளன. வேறு வார்த்தைகளில் கூறினால் எங்கும் எப்போதும் உழைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நாமும், விரும்பினாலும் இல்லாவிடினும், விழித்திருக்கும்போதும் உறங்கும்போதும் இடைவிடாமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம். சக்தியை இடைவிடாது நுகரும் உழைப்பாகிய இயக்கமே நம் இருப்பு, நம் வாழ்க்கை.

நம் வாழ்க்கையை அல்லது நம் இருப்பை அறிவது என்பது, நம் உழைப்பை அறிவதே ஆகும். அதாவது நம்மில் நிகழும் உழைப்பு அல்லது நம்மால் நிகழ்த்தப்படும் உழைப்பு, நம் விழிப்புணர்வுக்குள் நிகழ்வது, நம் வாழ்க்கையை அறிய சாத்தியமான ஒரு வழி. நாம் உழைப்பைகுறித்து அறிந்திருப்பது, பெரும்பாலும் நம்மால் நிகழ்த்தப்படும் உழைப்புகளின் மற்றும் அந்த உழைப்புகளின் விளைவுகளின் ஒரு மிகச்சிறிய பகுதியை மட்டுமே. அந்த சிறு துளியைக் கொண்டு நம்மை குறித்த ஒரு சித்திரத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்கிறோம். நம் இயல்பை தீர்மானிக்கிறோம். ஆம் அதுவே நம்மை குறித்து அறிவதற்கான முறை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அறிவை அடைந்த நம் உழைப்பின் சிறுதுளியிலிருந்தே நம் முழுமையை உருவகித்து, நம்மைகுறித்த ஒரு முன்முடிவை உருவாக்கிக்கொள்கிறோம். இந்த முன்முடிவின் மூலம் உழைப்பின் பிரவாகத்தையும், நம் எல்லையின்மையையும் நம் அறிதலில் தவற விட்டுவிடுகிறோம். வேறுவார்த்தைகளில் கூறினால், நம் உழைப்பின் ஒவ்வொரு துளியையும், உழைப்பின் விளைவுகளின் ஒவ்வொரு துளியையும் அறிவதன் மூலம் நம் முழுமையை நம்மால் அறிய முடியலாம்.

உழைப்பை அறியும்போது, அந்த உழைப்பால் நுகரப்பட்ட சக்தியையும் உழைப்பால் வெளியிடப்பட்ட சக்தியையும் நாம் அறிகிறோம். அதாவது, நம் உழைப்பின் மூலம் உருமாறும் சக்தியை முழுமையாக நம் உணர்வுக்குள் அடைகிறோம். ஆம், நாம் உழைப்பே உருவானவர்கள். சக்தி நம் உழைப்பின் மூலம் தன் உருவத்தை மாற்றியமைத்துக்கொள்கிறது. இதனை நம்மால் அறியமுடிந்தால், அந்த சக்தியின் உருமாற்றத்தை நம்கட்டுக்குள் கொண்டு வர முடியலாம். இல்லையெனில், சக்தி தன்னை தானே உருமாற்றிக்கொள்ளும் ஒரு கருவியாக மட்டுமே நம் இருப்பு, நம் வாழ்க்கை அமைந்திருக்கும். எனில், சக்தி நம் மூலம் நிகழ்த்தும் உருமாறுதலின் ஒவ்வொரு அம்சமும், நாம் அந்த அம்சங்களுக்கான விழிப்புடன் இருந்தால். இன்பமாகவோ, துன்பமாகவோ நம்மை கடந்து செல்லும். நம் விழிப்புணர்வை அடையாத இயக்கங்கள் நம் அறிதல் இல்லாமலே சக்தியை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு தொடர்ந்து பெயற்சி செய்து கொண்டும் இருக்கும்.


நம் உழைப்பின் முழு இயக்கங்களும், அதன் விளைவுகளும் நம் அறிதலுக்குள் வரும்போது சக்தி நம் மூலம் உரு மாற்றிக்கொள்வதற்கு, நாம் எந்த தடைகளையும் விதிப்பதில்லை. சக்தியின் இயக்கங்களுக்கான தடை நம்முள் விலகும்போது, அதன் இயக்கமும் நம் இயல்பிற்கேற்பவே பெரும்பாலும் அமைந்திருக்கும். அந்நிலையில், நாம் சக்தியின் இயக்கங்களால் அடையும் இன்ப துன்பங்கள் என்னும் இருமை நிலையை கடந்திருப்போம். சக்தியின் இயக்கமும் நம்மில் ஆனந்த நடனமாக நடைபெறக்கூடும்! 

blog.change@gmail.com