வரலாறு பெரும்பாலும் அதிகாரத்தால்
கட்டமைக்கப்படுவது. இன்று அமைப்பு மயமாக்கப்பட்ட கல்வியின் வழியாக நாம் அறியும் வரலாறு,
அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் தங்களை குறித்தும், தாங்கள் அதிகாரத்தை அடைந்த விதத்தை
குறித்தும், தாங்கள் வெற்றிக்கொண்ட எதிரிகளை குறித்தும் உருவாக்கிய வரலாற்றையே. அதிகாரத்தை
இழந்தவர்களின் வரலாறு, அல்லது இன்னும் அதிகாரத்தில் அமராதவர்களின் வரலாறு, அது எத்தகைய
மகத்தானதாக இருந்தாலும் மானுட சந்ததியினரை பெரும்பாலும் அடைவதில்லை. ஆனால், ஒரு சமூகமாக
சாதாரண மனிதர்களாகிய நம் தோற்றுவாய், பெரும்பாலும் அதிகாரத்தை அடையாது மறைந்தழிந்த
பெரும்பான்மையினரின் வரலாறாகவே இருக்கும்.
தமிழர்களாகிய நம் வரலாறாக
நாம் அறிந்திருப்பது, அதிகாரத்தில் இருந்தவர்களால்\
இருப்பவர்களால் எப்போதுமே மிகைப்படுத்தப்பட்ட ஒன்றையே - அதிகாரத்தை அடைந்தவர்களால்,
அந்த அதிகாரத்தின் மேன்மையை பறைசாற்றுவதற்காக உருவாக்கப்பட்டவை! இதுவே தமிழர்களின்
உட்பிரிவினர்களான ஒவ்வொரு இன குழுக்களின் நிலையும். அந்தந்த இன குழுக்களின் அதிகாரத்தை
அடைந்தவர்கள் தங்கள் அதிகாரத்தை பறைசாற்றவதற்காகவும், மேலும் அதிகாரத்தை அடைவதற்குமான
உத்திகளின் தொகுப்பே வரலாறாக தொகுக்கப்படுகிறது.
ஆக நாம் சமூகத்தின் எந்த
நிலையில் இருந்தாலும் நம் வரலாறு என நாம் அறிவது அதிகாரத்திற்காக, அதிகாரத்தால் நிலைநிறுத்தப்பட்டவற்றையே.
ஆனால் நம் உண்மையான தோற்றுவாய் இந்த நிலைநிறுத்தபட்ட வரலாற்றிற்கு வெகு தொலைவில், பெரும்பாலும்,
அமர்ந்திருக்கும். அந்த தொலைவை நாம் அறியவேண்டுமானால் வரலாற்றின் இருண்ட பக்கங்களையும்
நாம் அறிந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அதிகார மையத்திற்கு இருள் தேவை இல்லை.
ஒளியினால் மட்டுமே அதிகாரத்தை நிலை நிறுத்த முடியும். அல்லது வரலாறு என நிலைநிறுத்தப்பட்ட
கல்வியின் மூலம் நாம் அறிவது கடந்த காலத்தின் ஒளிவிடத்தக்க மிகச்சிறிய கற்றைகளை மட்டுமே.
நாம் அறியும் வரலாற்றிற்கு உண்மையுடனான தொடர்பு, அந்த வரலாற்றை புனைந்த அதிகார மையத்தின்
உண்மைக்கான தேவையை பொறுத்தே அமைந்திருக்கும். எனவே நாம் வரலாறு என அறிவது ஒருவகையில்
உண்மையுடன் கலந்த புனைவே.
அதிர்ஷ்டவசமாக வரலாற்றின்
துளிகளில், ஒளிவிடும் மனதை உடைய ஆளுமைகள் அவர்களின் அதிகார நோக்கங்களிற்கு அப்பாற்பட்டு,
அவர்கள் வாழும் காலத்தின் இருண்ட பக்கங்களில் தங்களின் ஒளிவிடும் மனதால் நோக்கி அந்த
இருட்டுகளையும் பதிவு செய்திருக்கிறார்கள். நான் அறிந்ததுவரையில், வெள்ளையானை நாவல்,
அத்தகைய ஒரு ஒளிகீற்றை அடிப்படையாக கொண்டு, நம் இருண்ட கடந்த காலத்தை நம்கண்முன் கொண்டுவந்து
நிறுத்துவதில் முழுமைஅடைந்துள்ள ஒரு படைப்பு.
இந்த நாவல் ஒளியூட்ட முயலும்
இருண்ட தருணம், 1870 களின் இறுதியில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொடுமையான பஞ்சத்தின்
கோர முகத்தையும், அந்த காலகட்டத்தில் மதராஸபட்டினத்தில் இருந்த ஐஸ்ஹவுஸ் என்னும் தொழிற்சாலையில்
நிகழ்ந்த, அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினால் அவர்கள் வாழும் உரிமைக்காக நிகழ்த்திய
ஒரு சிறிய ஆனால் ஒரு தீப்பொறியின் தருணத்தையும், அதிகார வர்க்கம் கைவிட்டு செத்தழிந்த
பல இலட்சக்கணக்கான சாதாரண மக்களின் துயர தருணத்தையும். அந்த வரலாற்று நிகழ்வுகள், வரலாற்றின்
இருண்ட பக்கங்கள், நாவல் ஆசிரியரின் புனைவினால் மேன்மையாக்கப்பட்டு (ஆம், மேன்மைப்படுத்தப்பட்டவற்றை
மட்டுமே நம்மைப்போன்ற எளிய மனங்களால் உள்வாங்க முடியும்) நாவலாக நம் முன் விரிகிறது.
நாவலின் பெரும்பகுதி ஏய்டன் பைர்ன் என்னும் பிரிட்டீஷ் காவல்துறை அதிகாரியின் பார்வையில்
விவரிக்கப்படுகிறது.
\\....ஏய்டன் நன்றாகவே உணர்ந்திருந்தான்,
அவர்கள் எவரும் அந்த வேலையைவிட்டுச் செல்லப்போவதில்லை என்று. மாபெரும் வங்கப்பஞ்சம்
தக்காணத்தையும் மதராஸையும் பரவி மூடிவிட்டிருந்து காலகட்டம். இப்போது அதை மாபெரும்
தக்காணப்பஞ்சம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இந்த வேலைக்காகவே பல்லாயிரம் பேர்
முண்டியடிக்கக்கூடும். அவன் பெருமூச்சு விட்டான்......\\
\\.......ஆம், இவன் மௌனமாக
இறப்பான். தன்னுடைய நம்பிக்கைகளுக்காக உறுதியாக வதைபட்டு உயிர்துறக்கிற ஒரு புனிதரைப்
போல, புனிதரா? என்ன வேறுபாடு? எல்லாம் நம்பிக்கைதான். புனிதரின் நம்பிக்கை எனக்கு உவப்பானதாக
இருக்கிறது. அந்த தியாகம் மகத்தானதாக ஆகிறது. இவன் மிக முட்டாள்தனமான ஒன்றுக்காக, மனித
ஆன்மாவுக்கே எதிரான ஒன்றுக்காக இறக்கிறான். ஆனால் இவன் இப்போதிருக்கும் மனநிலைக்கும்
அந்தப்புனிதரின் மனநிலைக்கும் வேறுபாடில்லை. என்ன அபத்தம்! ஆனால் இப்படிதான் எல்லாம்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது....\\
\\...எங்கள் மக்கள் உலகமெங்கும்
ஈசல்கள் போலச் செத்து உதிர்கிறார்கள். பிள்ளைக்குட்டிகளுடன் அறியாத நாடுகளின் காடுகளில்
வதைபடுகிறார்கள். நோயிலும் பசியிலும் கதறிச் சாகிறார்கள். சாகட்டும். அப்படி எங்கள்
இனத்தில் தொண்ணூறு சதவிதம்பேர் செத்து குவிந்தால் கூட மிச்சமிருப்பவர்களில் சிலருக்கு
மனதர்களுக்கான வாழ்க்கையை வாழ வாய்ப்பு கிடைக்கிறது என்றால்......\\
\\....பஞ்சத்தை கொண்டு வந்தது
நீங்கள்தான்..............வேறு இடங்களில் இருந்து வரவேண்டிய விளைச்சலை முழுக்க நீங்கள்
அள்ளிக்கொண்டு செல்வதனால் வந்தது. உங்கள் துறைமுகங்கள் முழுக்க எங்கள் உணவு மலையாக
குவிந்துக்கிடக்கிறது. அங்கே எலிகள் உண்ணும் தானியம் கிடைத்தால் கூட எங்கள் பிள்ளைகளில்
பாதியை சாகாமல் காத்துக்கொள்வோம்...... நேற்று நாங்கள் விளைவித்ததை வேறு சிலர் உண்டார்கள்.
இன்று அவர்களிடம் பிடுங்கி நீங்கள் உண்கிறீர்கள்............\\
\\......'விசித்திரம்!'
என்று ஏய்டன் சொன்னான். 'மிக விசித்திரம். இப்படிப்பட்ட நிலையில் மனிதர்கள் வாழமுடியுமென்பதே
ஆச்சரியம். காட்டு விலங்குகள் கூட இன்னும்சுத்தமான இடங்களில் வாழ்கின்றன'.......\\
\\....'பஞ்சத்தின் முதல்
காட்ஞ்சியை நீங்கள் காணலாம் என்றான்'.....' ஏய்டன் கதவைச் சற்றே திறந்து எட்டிப்பார்த்தான்.
ஒரு கணத்துக்குப்பின் அமிலத்துளி விழுந்த புழுபோல அவன் பிரக்ஞ்சை துள்ளித்துடித்து
தாள முடியாத உயிர் வாதையுடன் நெளிந்து முறுக்கி உதறிச் சொடுக்கி விதிர்த்தது. பெரிய
ஆலமரத்தின் அடியில் பிணங்கள்........\\
\\...'அதிகபட்சம் இன்னும்
ஒரு நாள் உயிரோடிருக்கும். இதை பிழைக்கச்செய்ய உங்களால் முடியாது. வாருங்கள்' என்றான்
ஜோசப்.....\\
\\....ஆர்டிக் பனிமலைகளில்
பனிப்பாறைச் சரிந்து கால்கள் மாட்டிக்கொள்ள பனிக்கோடாரியால் தன் காலை வெட்டி தன்னை
விடுவித்துக்கொண்டு தப்பும் மாலுமிகளைப்பற்றிய கதைகளை ஏய்டன் வாசித்ததுண்டு. அக்கணத்திலி
தானும் அதைத்தான் செய்கிறோம் என்று பட்டது....\\
\\...மதராஸப்பட்டினத்தில்
இருந்தும் நாகப்பட்டினத்தில் இருந்தும் விசாகப்பட்டினத்தில் இருந்தும் சென்றுகொண்டிருக்கும்
தானிய ஏற்றுமதியை நிறுத்தினாலே போதும் ஒரு வாரத்தில் பஞ்சம் நின்று விடும். அதை அறியாத
எந்த பிரிட்டீஷ் அதிகாரியும் இங்கில்லை....\\
\\...இல்லை அவர்கள் ஜனநாயக
முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். அதற்கான உரிமையை மாட்சிமைதங்கிய மகாராணியின்
மணிமுடி அவர்களுக்கு அளிக்கிறது' ஏய்டன் சொன்னான்........\\
\\.....ஆனால் அவரது முகம்.
அது வேறுமாதிரி இருந்தது சார். அது ஒரு உச்சகட்ட பரவசத்தில் இருந்தது. ஒவ்வொரு காட்சியையும்
கண்ணாலும் காதாலும் அள்ளி அள்ளிப்பருகி வெறி தீர்ப்பது போல. பிறகு நான் நினைத்துக்கொண்டேன்.
அங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் பின்னிப்பிணையும் ஒரு காமக்களியாட்டம் நடந்தால் அதைப்பார்க்கும்
முகம் அப்படித்தானிருக்கும் என....\\
வெள்ளையானை நாவாலாசிரியர் - ஜெயமோகன்.