மனிதன் தன் வாழ்க்கையை வாழ்வின்
முழுவீரியத்துடன் வாழ்வதற்கான அறிவையும், அறிதலின் முறைகளையும் வழங்கும் இயக்கமே கல்வி
என்பது. அறிவு ஒரு பெரும் இயக்கம். கல்வி அதன் ஒரு சிறு துளி - அறிவியக்கத்தின் வழிகளை
குறித்த அறிதல். அறிவு தனிமனிதனால் அடையப்பட்டது இல்லை. அது ஒட்டு மொத்த மனித இனத்தால்
அடையப்பட்டது. தனிமனிதனால் அந்த மனித அறிவை சிறிதளவு விரித்தெடுக்க மட்டுமே முடியும்.
எனவே அறிவு தனி மனிதனுக்கு சொந்தமானதாக இருக்க முடியாது - அது தனிமனிதர்களை சார்ந்து
இருந்தாலும்! மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியே அறிவு. ஆம், நாம் அடைந்த அறிவுக்கு,
அது எந்த தளத்தில் இருந்தாலும், ஒட்டு மொத்த மனித இனத்துக்கும் கடமைபட்டிருக்கிறோம்.
நாம் நமது அறிவு எனக்கூறி கொள்வது
இதுவரை ஒட்டுமொத்த மனித இனத்தால் அடையப்பெற்ற பிரபஞ்ச இயக்கத்தின் சிறு துளியை குறித்த
அறிவின் மிகமிக சிறிய ஒரு பாகத்தை மட்டுமே. நாம் கற்றவை என்பது நமக்குமுன் மனித இனம்
அடைந்த அறிவில் ஆவணப்படுத்தப்பட்டவற்றில் சிலவற்றை மட்டுமே. ஆவணப்படுத்தப்படாத அறிவு
அல்லது பிறருக்கு கற்றுக்கொடுக்காமல் (ஒருவேளை
கற்றுக்கொடுக்க தகுந்த மனித மனதை கண்டடைய முடியாத காரணத்தால்) அழிந்த அறிவு, இந்த உலகில்
வாழும் மனித இனத்தின் தற்போதைய ஒட்டுமொத்த அறிவை விட அதிகமானதாக கூட இருக்கலாம். கல்வி
என்பது அறிதலின் முறைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அறிதல் நம் மனதை, நம்மை விரிவுபடுத்துகிறது.
அதாவது அறிதலின் மூலம் மட்டுமே நம்மால் முழுமையை நோக்கி நகர முடியும். எனவே கல்வி நம்மை
முழுமையை நோக்கி நகரச்செய்யும் உந்தி.
மனித இனத்தின் அறிவு, மனித உணர்வு
எந்த திசைகளில் எல்லாம் செல்ல சாத்தியங்கள் உள்ளதோ அந்த திசைகளில் எல்லாம் பரந்து விரிந்து
கிடக்கிறது. அளவற்று விரிந்து கிடக்கும் மனித அறிவின் துளியையாவது பருகவே கல்வி நமக்கு
உதவலாம். நாம் அடையும் எல்லா விதமான இன்பங்களுக்கும், துன்பங்களுக்கும், இன்பதுன்பங்களை
கடந்த நிலைகளுக்கும் அறிதலே அடிப்படை காரணம். நாம் லொகீகர்களாக இருந்தால், நாம் விரும்பியவற்றை
அடைந்தோம் என்னும் அறிதலே நமக்கு இன்பத்தை அளிக்கிறது. அந்த அறிதல் நிகழ்ந்து விட்டால்
நாம் அடைந்தவை அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. அதைப்போலவே நம்மிடம் இருந்தவற்றை
இழந்து விட்டோம் என்னும் அறிதல் துன்பத்தை அளிக்கிறது. அந்த துன்பத்தை அடைந்த உடன்
நாம் இழந்தவை அவற்றின் முக்கியத்துவத்தையும் இழந்து விடுகிறது.ஆக நம் வாழ்க்கையில் முக்கியமானது நம் மனம் அடையும் உணர்வுகளே
- அந்த உணர்வுகளை உருவாக்கும் காரணிகள் அல்ல. இதை வேறு வார்த்தைகளில் கூறினால், நம்
மனதால் உணர்வு நிலைகளில் நிலை பெற முடிந்தால், எந்த புற பொருளும் நம் மனதிற்கு முக்கியமானவை
இல்லை.
சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்
தேடுதல், நாம் சமூக அமைப்பினுள் இருந்தால், அன்றாட தேவைகளை குறித்தே இருக்க முடியும்.
நம் சமூகம் உண்மையான கல்வியை நமக்கு அளித்திருந்தால் அல்லது உண்மையான கல்வியை நாம்
பெற்றிருந்தால், அன்றாட தேவைகளை அடைந்தபின் நம் தேடுதல் ஆன்மீகத்தை நோக்கி திரும்பியிருக்கும்.
இங்கு ஆன்மீகம் என்பது நம் அக தேவைகளை, மனதின் உணர்வு நிலைகளை, அந்த உணர்வு நிலைக்கான
மனதின் தேடல்களை குறிக்கிறது. ஆம், உண்மையில் நம் வாழ்க்கை மனம் என்னும் தளத்தில் நிகழ்ந்து
கொண்டிருக்கிறது. ஏனெனில் மனமே உணர்வின் தளம். நம் வாழ்க்கையை உள்ளபடி, முழு உணர்வு
நிலையில் வாழ்வதே ஆன்மீகம்.
ஆனால் தலைமுறை தலைமுறையாக அன்றாட
வாழ்க்கை தேவைகளுக்காகவே வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்த நம்மால், அன்றாட தேவைகளை
அடைந்து விட்டாலும், அவற்றுக்கான இயக்கங்களை விட்டு விட்டு வர முடிவதில்லை. நமக்கு
மிகவும் பழகிவிட்ட அன்றாட தேவைகளுக்கான இயக்கத்திலேயே தொடர, நம் தேவைகளை பெருக்கிக்கொண்டு,
அன்றாட தேவைகளை இன்னும் அடையவில்லை என்னும் தோற்றத்தை மனம் உருவாக்குகிறது. அதாவது
நாம் லொகீக சிறையினுள், அதன் சுவர்களை வலிமையாக்கிக்கொண்டே நம் வாழ்கையை வாழ்ந்து முடிக்கிறோம்.
நாம் உண்மையான கல்வி கற்றவர்களாக இருந்தால் நாம் விடுதலைக்கான, உணர்வு நிலையில் நிலைப்பதற்கான,
நமக்கேயான வழிகளை நம் அன்றாட தேவைகளை கடந்த பின் தேட தொடங்குவோம். இங்கு விடுதலை என்பது
சாதாரணர்களால் அடைய முடியாத ஏதோ ஒன்று அல்ல. நம் வாழ்க்கையை, நாம் வாழும் தளத்தில்
உண்மையாக, உணர்வுடன் வாழ்ந்திருந்தால் நாம் எத்தகைய சாதாரணர்களாக இருந்தாலும் விடுதலையை
நோக்கி பயணித்து கொண்டிருப்போம்.
ஆக கல்வி என்பது எவ்வாறு நம் வாழ்க்கையை,
வாழும் உணர்வுடன் வாழ்வது என்பதை அறிய செய்யும் இயக்கமாகும். துரதிர்ஷ்டவசமாக அத்தகைய
கல்வி, இன்றைய சமூக சூழலில் நாமாகவே தேடி செல்லாதவரைக்கும் நமக்கு கிடைப்பதில்லை. இன்று
நமக்கு சமூகத்தால் வழங்கப்படும் தொழில் கல்வியின் போதாமையை, வெறும் லொகீக வாழ்க்கையின்
போதாமையை உணர நேர்ந்தால் மட்டுமே உண்மையான கல்வியை நோக்கி நம்மால் நகர முடியும்.
உண்மையான வாழ்க்கை என்பது நம்
உணர்வு நிலைகளை ஒட்டி வாழ்வது. இத்தகைய வழ்க்கைக்கான அறிவை அளிப்பதே உண்மையான கல்வி.
நாம் லொகீக வாழ்க்கையை சார்ந்தவர்களாக இருந்தாலும் கல்வியை அடைய முடிந்தால், லொகீக
வாழ்க்கையையே நம்மால் உணர்வுநிலையுடன், உணர்வு நிலையின் விழிப்புடன் வாழ முடியும்.
அத்தகைய கல்விக்கான தேடுதலை அடைந்தால், அந்த தேடுதல் நமக்குள் நிகழ்ந்தால் அதை பெறுவது
ஒன்றும் கடினமானதில்லை. மனித இனத்தின் ஒவ்வொரு சமூகத்திலும் அந்த சமூகத்திற்கேயான வாழ்க்கை
அறிவு பரந்து விரிந்து கிடக்கிறது.
blog.change@gmail.com