Sunday, September 30, 2012

உறவுகள்


நாம் உறவுகளால் ஆனவர்கள். உறவுகள் இல்லையேல் நாம் இல்லை. ஆம், நாம் என்பதும், நம் உலகம் என்பதும் நம் மனதில் பின்னிப் பிணைந்துள்ள உறவுகளே. நம் உறவுகளை முழுமையாக அறியும்போது நம் மனதை முழுமையாக அறிந்திருப்போம் – நம் உலகையும்!. அதுவே ஞானம்.

நாம் அறியும் ஒவ்வொன்றுடனும், நம் மனம் உடனடியாக உறவை ஏற்படுத்திக்  கொள்கிறது. அந்த உறவுகளின் மூலமே அறிந்தவைகள் நினைவுகளாக சேமிக்கப்படுகிறது. நினைவுகளிலிருந்து மனதில் எண்ணங்கள் உருவாகிறது. ஆக, எண்ணங்கள் என்பது, நாம் உலகுடன் கொண்டுள்ள உறவுகளின் வெளிப்பாடே.. நாம் எண்ணங்களை கூர்ந்து கவனித்திருந்தால், அந்த எண்ணங்கள் பெரும்பாலும் நம் மனதினுள் நிகழும் முரண்பாடுகளின் காரணமாகவே வெளிப்படுவதை அறியலாம் – நம் அடிப்படை செயல்களுக்கு தேவையான எண்ணங்களைத் தவிர. வேறு வார்த்தைகளில் கூறினால், நம் உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகளே பெரும்பாலும், பிரக்ஞ்சையின் கட்டுப்பாடு இல்லாத எண்ணங்களாக வெளிப்படுகிறது.

புதிய அறிதல்களில் ஆர்வம் இல்லாதவர்களாக இருந்தால், உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள் பெரும்பாலும் பிற மனிதர்களுடனான உறவுகளிற்குள்ளேதான் ஏற்படும். புதிய அறிதல்களில் ஆர்வம் இல்லாத பட்சத்தில், நம் மனம், மனிதர்கள் அல்லாத மற்றவற்றுடனான உறவுகளை நம் நம்பிக்கைகள், பயங்கள், மற்றும் இதுபோன்றவற்றுடன் கலந்து மேலும் உறுதியாக்குகிறது. அவ்வாறு உறவுகள் நம் முன்னறிவின் மூலம் உறுதிப்படுத்தப்படும்போது, புதிய அறிதலுக்கான சாத்தியங்கள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. அதாவது, ஞானத்தின் கதவுகள் மூடப்படுகிறது.

வெளிப்புற காரணிகள் இல்லாமல், மனித மனம் மாறும் வேகத்தில் வேறு எந்த பொருட்களும் மாற்றம் அடைவதில்லை. எனவே அத்தகைய பொருட்களுடன் ஏற்படுத்தப்பட்ட உறவின் தன்மையும் மாற்றம் அடைய வேண்டிய தேவை இல்லை. வெளிப்புற காரணிகள் மாற்றம் அடைந்தால், அந்த காரணிகளின் தன்மைக்கேற்ப அந்த பொருட்களுடனான உறவைவையும் மனதால் மிக எளிதாக மாற்றியமைக்க முடியும். எனவே, நம் மனதில் ஏற்படுத்தப்பட்ட உறவுக்கும், அந்த பொருளின் உண்மையான இருப்புக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

பிற மனிதர்களுடனான உறவு என்பது உண்மையில் அந்த மனித மனங்களுடனான உறவுகளே. ஆனால் பெரும்பாலும் நாம் இதை உணர்ந்திருப்பதில்லை. பிற மனிதர்களை குறித்து நாம் அறிய நேரிடும் மிகச்சில இயல்புகளைக் கொண்டு, அந்த மனிதர்களைப்பற்றிய ஒரு பிம்பத்தை நம் மனம் உருவாக்குகிறது. பெரும்பாலும் பிற மனிதர்களுடனான நம் உறவு எனபது உண்மையில் அந்த மனிதர்களை குறித்து நம் மனம் உருவாக்கி விட்ட பிம்பத்துடன் மட்டுமே. இங்கு பிற மனிதர்கள் என்பது கணவன், மனைவி, தாய், தந்தை, சகோதரர், மக்கள் மற்றும் இதைப்போன்ற எத்தனை நெருங்கிய உறவுகளாக இருந்தாலும்! நாம் உறவுடன் இருக்கும் அந்த பிம்பங்களின் மாறும் தன்மை, அவற்றுடனான நம் சார்புநிலையை பொறுத்தது. அந்த பிம்பங்களுடனான நம் சார்பு அதிகரிக்கும் தோறும், அந்த பிம்பங்களின் மாறும் தன்மை குறைகிறது. அதாவது, நம் பிறமனித உறவுகளுடனான சார்பு நிலை அதிகரிக்கும்தோறும், அந்த உறவுகளுடனான முரண்பாடுகளும் அதிகரிக்கும்.

நாம் நம் பிறமனித உறவுகளுடன் எவ்வளவு தூரம் சார்ந்திருக்கிறோமோ, அதே அளவு, அந்த மனிதர்களும் அவர்கள் மனதில் நம்மை குறித்து உருவாக்கியிருக்கும் பிம்பத்துடனும் சார்ந்திருக்கலாம். நம் பிற மனிதர்களுடனான சார்புநிலையை உறுதி செய்ய, அந்த மனிதர்களின் நம் பிம்பத்துடனான சார்பு நிலையை  நிலைப்படுத்துவது மிக அவசியம். இங்குதான் மனிதர்களின் முதல் ஆன்மீக விலக்கம் தொடங்குகிறது. அதாவது, நாம் நம் இயல்பை விட்டு விட்டு, அந்த மனிதர்கள் நம்மை குறித்து உருவாக்கியுள்ள பிம்பத்திற்கு ஏற்ப நடிக்க தொடங்குகிறோம் – ஒரு கணவனாக, மனைவியாக, மகனாக, மகளாக, தாயாக, தந்தையாக, இன்னும் பலவாக. ஆம், மிகப்பெரும்பாலான நேரங்களில், நாம் நம்மை சார்ந்திருப்பவர்கள் நம்மை குறித்து உருவாக்கியுள்ள பிம்பத்திற்கேற்ப நடித்துக்கொண்டிருக்கிறோம் – மிக மிக குறைந்த தருணங்களை தவிர. அந்த குறைந்த தருணங்களில் மட்டமே நாம் எதிர்வினை ஆற்றாமல், உண்மையில் செயல்பட்டுக் கொண்டிருப்போம். அவ்வாறு செயல் படும் தருணங்களில் மட்டுமே நாம் உண்மையில் பிற மனிதர்களை குறித்த பிம்பங்களை மறந்து, உண்மையிலேயே அந்த மனிதர்களுடன், அந்த மனிதர்களின் மனங்களுடன் உறவில் இருப்போம். நாம் பெரும்பாலும் நம் பிற மனித உறவுகளிடம் அன்புடன் இருக்கிறோம் என்பது உண்மையில் அந்த மனிதர்களை குறித்து நாம் உருவாக்கியிருக்கும் பிம்பத்துடன் அன்புடன் இருக்கிறோம் என்பதாகவே இருக்கும். அந்த மனிதர்கள் நாம் அவர்களை குறித்து உருவாக்கியிருக்கும் பிம்பத்திற்கேற்ப அவர்கள் நடிக்கும்வரை நாம் அந்த பிம்பத்துடன் அன்புடன் இருப்போம். அவர்கள் நாம் உருவாக்கியள்ள பிம்பத்திலிருந்த முரண்படும்போது, நம்முடைய அன்பு, வெறுப்பாக வெளிப்படும், அந்த உறவுகள் எத்தனை நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் – அன்பு என்பதும் வெறுப்பு என்பதும் ஒரே உளவியல் சக்தியின் வெவ்வேறு வெளிப்பாடுகளே!

எவ்வாறு அந்த எதிர்வினையாற்றுதலை விட்டுவிட்டு, செயலில் ஈடுபடுவது? எவ்வாறு பிறமனித பிம்பங்களுடனான உறவை விட்டுவிட்டு பிற மனித மனங்களுடனான உறவில் ஈடுபடுவது? எவ்வாறு பிற மனிதர்களிடம் நிலையான அன்புடன் இருப்பது? அவ்வாறு பிற மனித மனங்களுடன் நம்மால் உறவை ஏற்படுத்த முடிந்தால் மட்டுமே, பிறமனிதர்கள் நம்மை குறித்து உருவாக்கியுள்ள பிம்பங்களை உறுதி செய்வதற்கான நடிப்பிலிருந்து நம்மால் விடுபட முடியும். அவ்வாறு விடுபட்டால் மட்டுமே, நம் வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கையாக இருக்கும், அன்புடைய வாழ்க்கையாக இருக்கும் – நாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும், தவறாமல் மதச்சடங்குகளை செயபவர்களாக இருந்தாலும், எத்தகைய கடவுள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தாலும்!

அத்தகைய விடுதலையின் சாத்தியம், நாம் பிற மனித உறவுகள் என்பது உண்மையில் பிற மனித பிம்பங்களுடனான உறவு என்னும் அறிதலில் இருந்து தொடங்குகிறது. நம் சொந்த மனம் எவ்வாறு நிலையில்லாமல் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நம்மால் கவனிக்க முடிந்தால், எல்லா மனித மனங்களும் இயங்குவது ஒரு பொது விதியின்கீழ் என்பதை நம்மால் உணர முடிந்தால், அப்போது நம் பிற மனித உறவுகளின் மனங்களும் நிலையற்ற தன்மை உடையவை என்பதை உண்மையிலேயே நாம் அறிவோம். இங்கு அறிவது என்பது வெறும் தகவலாக நம் மனதில் நுழைவது அல்ல. அந்த தகவல், நம் இருப்பின், இயல்பின் பகுதியாக ஆவது. நாம் ஒன்றை உண்மையில் அறிந்தோம் என்றால், அந்த அறிதல் நம் இயல்பாக மாறிவிடும், நம் செயல்கள் ஒவ்வொன்றிலும் அந்த அறிதலின் இயக்கம் இயல்பாகவே செயல்படும். ஆம், உண்மையில் கல்வி என்பது அத்தகைய அறிதலை நமக்கு அளிக்கும் செயல்பாடு மட்டுமே!

பிற மனித மனங்களின் நிலையற்ற தன்மையை நாம் அறியுந்தோறும், நாம் அவர்களை குறித்து கொண்டிருக்கும் பிம்பமும் உடையதொடங்கும். ஒருவேளை, நம் மனதில் உள்ள பிற மனித பிம்பங்கள் உடையதொடங்கினால், நம் மனம் பிறமனித உறவுகளை பிம்பங்கள் இல்லாதவாறு, உள்ளதை உள்ளவாறே ஏற்றுகொள்ளும் தன்மையை பெறும். நம்மை சார்ந்திருப்பவர்கள் இயல்பாகவே அவர்களின், நம் மனதில் இருந்த பிம்பத்திற்கேற்ப நடிப்பின் தேவையின்மையை உணர்வார்கள். அந்த உணர்வு, அவர்களை நடிப்பின் துணையினைறி நம் முன் இயல்பாக இருக்கச் செய்யும். ஆச்சரியகரமாக அவர்களும் நம் இயல்பை, நடிப்பின் தேவையின்றி ஏற்றுகொள்ள தொடங்குவார்கள். நம் மனதில் இருக்கும் உறவுசங்கிலிகளும் பிம்பங்களை, மாயைகளை தவிர்த்து பிறமனித மனங்களை உள்ளது உள்ளவறே ஏற்று கொள்ளும். அத்தகைய மனதில் முரண்பாடுகள் இல்லை. எனவே துன்பங்களும் இல்லை!