Wednesday, November 23, 2011

அறிவு, அறிதல், மாயை (தொடர்ச்சி)

அறிவை முழுமையான(Absolute) அறிவு சார்புநிலை(Relational) அறிவு என இரண்டு வகைகளாகப் பொதுமை படுத்தலாம். இங்கு முழுமையான அறிவு என்பது தர்க்க நிலைகளுக்கு(Logic) அப்பாற்பட்டது, மனம் அதன் முழு விழிப்பு நிலையில் பெறுவது. முழுமையான அறிவுக்கான தேவை, அந்த அறிவை குறித்த தேடுதல் நம் மனதில் தோன்றினால் அல்லது தோற்றுவிக்கப் பட்டால் மட்டுமே. அத்தகைய தேடுதல் இல்லாத பட்சத்தில், சார்புநிலை அறிவு மட்டுமே நம்அன்றாட வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்ககூடும். ஆனால் சார்பு நிலை அறிவை முழுமையான அறிவாக நாம் ஏற்றுக்கொண்டால், நம் எல்லா வகையான துன்பங்களுக்கும் அந்த அறிவே ஆதாரமாக இருக்க கூடும். முழுமையான அறிவுக்கான தேடுதல் நம் இயல்பைப் பொறுத்தது - ஆனால் சார்புநிலை அறிவின் முழுமையின்மையை உணர்வது, நம் அமைதியான வாழ்வுக்கு மிக மிக இன்றியமையாதது.


சாதாரண நிலையில், முற்றிலும் புதிதாக நம்மால் எதையும் அறிய முடியாது. நாம் அறிவதெல்லாம் , நாம் முன்பே அறிந்தவற்றின் தொடர்ச்சிகள் மட்டுமே. முற்றிலும் புதிதாக எதையாவது அறிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், அதையும் நாம் முன்பே அறிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி மட்டுமே அறிய முடியும். அதாவது நம் அறிவின் தரம் அல்லது இயல்பு, நாம் முன்பே அறிந்தவற்றின் தரம் அல்லது இயல்பை பொறுத்தே அமையும்.ஆகவே நாம் அறிந்தவை உண்மையிலிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ அந்த அளவு தூரம், நாம் புதிதாக அறிபவையும் உண்மையிலிருந்து விலகி இருக்கும். ஆக நாம் உண்மையை அறிய விரும்பினால், நம் அறிதலின் இயல்பையும், நம் முன் அறிவையும் அறிந்து கொள்வது மிக அவசியம்.

அனுமானம் (Assumption) என்பது, நம் சாதாரண நிலை அறிதலின் இன்றியமையாத கருவி. அனுமானமே நாம் புதிதாக அறிய வேண்டியவற்றை , முன்பே அறிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி நம் அறிவாக மாற்றுகிறது.ஆகவே நம் அறிவின் தரம் அல்லது இயல்பு, நம் அனுமானிக்கும் தரம் அல்லது இயல்பையும் பொறுத்து அமையும்.

இன்னும் சற்று ஆழமாக பார்த்தால், நாம் அறிதல் என அறிவது, நம் புலன்கள் உணர்வதை, மனம் அதன் ஆழத்திலிருந்து கண்டெடுத்து வெளிப்படுத்துவதையே. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த உலகத்தில் சாத்தியமான எல்லா அறிவும் நம் மனதினுள் புதைந்து கிடக்கிறது. நம் புலன்கள் உணரும்போது, அதற்கான அறிவை, மனம் அதன் ஆழத்திலிருந்து எடுத்து நம் அறிவாக வெளிப்படுத்துகிறது. ஆகவே நாம் அனைவரும் ஒரே அளவான அறிவுடன், அதாவது இந்த உலகில் பெற சாத்தியமுள்ள முழு அறிவுடன் படைக்கப்பட்டுள்ளோம். அந்த அறிவை வெளிப்படுத்தும் இயல்பில் மட்டுமே வேறுபட்டுள்ளோம்.

மனிதர்களில் ஒவ்வொருவரும் அறிவின் உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை உடையவர்களே. ஆனால் மனிதர்களில் பெரும்பாலனவர்கள் அ த்தகைய உச்சத்தை அடைவதில்லை. காரணம், அவர்கள் அத்தகைய உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை உடையவர்கள் தாங்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. தங்கள் உளவியல் பாதுகாப்புக்காகவும், சமூக பாதுகாப்புக்காகவும், நம்பிக்கைகள், பயங்கள் போன்றவற்றை உருவாக்கி, அந்த நம்பிக்கைகளையும் பயங்களையுமே தங்கள் அறிதலுக்கான சார்புநிலைகளாககொண்டு விடுகிறார்கள். ஆகவே வெளிப்படும் புதிய அறிவும், அந்த நம்பிக்கைகளையும் பயங்களையுமே சார்ந்து உள்ளது . இதன் மூலம் முழுமையான அறிவை பெறுவதற்கான சாத்தியங்களை சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம்.

ஆன்மீக சிந்தனைத் தளங்களில், அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்னும்ஒரு சிந்தனை ஓட்டம் உள்ளது. அதாவது நாம் புதியதாக ஒன்றை அறிய தொடங்கும்போது, முன்பே அறிந்தவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடிந்தால் மட்டுமே புதிதாக அறியும் அறிவு, உண்மைக்கு அருகில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதாவது அந்த புதிய அறிவு, அதற்கு தேவையான சார்பு நிலையை மனதின் வெளிப்புற மாயைகளிலிருந்து பெறாமல் ஆழ்மனதிலிருந்து பெறக்கூடும். அத்தகைய விடுதலையை நம்மால் பெற முடிந்தால், நம்முடைய பயங்கள், நம்பிக்கைகள் போன்ற தளைகளிலிருந்தும் நம்மால் விடுபட முடியலாம். அல்லது, பயங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால் ஒருவேளை நம்மால் அறிந்தவைகளிலிருந்தும் விடுதலை பெற முடியலாம். இங்கு அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்பது, அறிந்தவற்றை முற்றிலுமாக விட்டு விடுவது ஆகாது, ஆனால் அறிந்தவற்றை வலுக்கட்டாயமாக புதிய அறிவின் மீது சார்பு படுத்துவதை விட்டு விடுவது ஆகும் – நம் மனம் மிக இயல்பாக அத்தகைய சார்புநிலையை எடுக்கும் தன்மை உடையது. .

நம் மனதினுள்ளேயே நம்மால் அறிய கூடியதெல்லாம் உள்ளதெனில் அதை எவ்வாறு அறிவது? அத்தகைய அறிவு, நம் மனம் அதன் உச்ச இயக்க நிலையை அடையும்போது மட்டுமே அடைய கூடியதாக இருக்கலாம். நம் மனம் அதன் உச்ச இயக்க நிலையில் உள்ளது என்னும் அறிவு ஒருவேளை மாயையாக இருக்குமானால், அப்போது நாம் அறிவதும் மாயையாகவே இருக்க கூடும். வேறு வார்த்தைகளில் கூறினால், மனம் அதன் உச்ச இயக்க நிலையில் அதன் அறிதலுக்காக வேறு எந்த அறிவையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். அத்தகைய அறிவு சாத்தியமானால், அது மட்டுமே முழுமையான அறிவாக இருக்கும்.

மனம் அதன் முழுமையான அறிதல் நிலையில் இருக்கும்போது, அத்தகைய மனம் வேறு எந்த மன இயக்கங்களையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். மனதின் அத்தகைய சார்பு நிலை இல்லாமையே விடுதலை அல்லது நிர்வாணம் என அழைக்கப் படுவதாக இருக்கலாம்!

இந்த விடுதலை அல்லது நிர்வாணம், ஒவ்வொரு மனிதருக்கும் சாத்தியமா? முழுமையான அறிவுக்கான தேடுதல் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப் பட்ட ஒவ்வொரு மனித மனத்துக்கும் விடுதலை அல்லது நிர்வாணம் நிச்சயமாக சாத்தியமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு சாத்தியம் இல்லையெனில், விடுதலை அல்லது நிர்வாணம் என்பது வெறும் மாயையே!

நாம் நுண்ணறிவு(Intelligence) என அ.ழைப்பது, ஒரு சார்புநிலைகளற்ற அறிதலாக இருக்க கூடும். அவ்வாறெனில், நுண்ணறிவு என்பது முழுமையான அறிவின் அம்சமே ஆகும். அதாவது நம் அறிவின் மொத்தமும் நுண்ணறிவாக மாறும்பொது, நம் அறிவும் முழுமையான அறிவாக ஆக கூடும். நம் நுண்ணறிவு வெளிப்படும் தருணங்களை நாம் கவனிக்க நேர்ந்திருந்தால், அத்தகைய தருணங்களில் மனம் எண்ணங்களின் அலைபாயுதலிடமிருந்து விடுபட்டு இருந்திருப்பதை கவனித்திருப்போம். அதாவது மனம் அதன் தர்க்க நிலைகளிலிருந்து விடுபடும் தருணங்களில் மட்டுமே நுண்ணறிவு வெளிப்பட சாத்தியமுள்ளது. நம் அறிவு மொத்தமும் நுண்ணறிவாக மாறும்போது, அதுவே முழுமையான அறிவாக இருக்க கூடும். அதாவது, நம் அறிவு அல்லது அறிதல் எல்லாவிதமான சார்பு நிலைகளிலிருந்தும் முழுமையாக விடுதலை பெற்றிருக்க கூடும்.

நம் உடல் இருப்பை பொறுத்தவரை அறிதல் மற்றும் அறிவு என்பது, நம் மூளையினுள் நடைபெறும் உயிர்வேதி மாற்றங்களே. எனவே நுண்ணறிவும் உயிர்வேதி செயல்பாடுகளாகவே இருக்க முடியும் – நுண்ணறிவின் உயிர்வேதிச் செயல்பாடுகள், சார்புநிலை அறிவுக்கான உயிர்வேதிச் செயல்பாடிகளிலிருந்து முற்றிலும் வேறானதாக இருக்க கூடும். அவ்வாறெனில், நம் மூளையின் ஒரு குறிப்பிட்ட உயிர்வேதிச் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நாம் நுண்ணறிவை அடைவது சாத்தியப்படலாம். ஹட யோகம், கிரியா யோகம் போன்றவை இந்த அடிப்படையில் உருவாகி இருக்க கூடும். இதன் மறுபக்கமாக, நமது இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருந்துகளையே சார்ந்திருக்கும்போது, மூளை அதன் நுண்ணறிவையும் இழக்க கூடும்.