Sunday, October 26, 2014

(மன)அமைப்பிலிருந்து\சட்டகத்திலிருந்து (System) வெளியேறுதல்.

"நுண்ணறிவினால் அதன் அடிப்படை இயல்பின் மூலம், எடுத்துக்கொண்ட அல்லது செய்துகொண்டிருக்கும் செயலின் சட்டகத்திலிருந்து வெளியேறி, வெளியிலிருந்தே அந்த செயலை அதனால் மதிப்பிட முடியும். அவ்வாறு வெளிவந்து மதிப்பிடும்போது, அது செய்யும் செயல்களில் இருக்கும் ஒற்றுமையையே மதிப்பிட முயலும்.  பெரும்பாலும் செயல்களில் ஏதேனும் ஒற்றுமையையும் அறிந்து, அந்த அறிதலை கொண்டு செயலை எளிதாக்க முயலும். நுண்ணறிவால் சட்டகத்தை விட்டு வெளியேற முடியும் என்பது, எப்போதுமே அது சட்டகத்தை விட்டு வெளியேறி விடும் என்பதாக ஆகாது. அல்லது சில நேரங்களில், ஒரு சிறிய உந்துதல், நுண்ணறிவை சட்டகத்திலிருந்து வெளியேறி, செய்யும் செயலை மதிப்பிட வைக்கலாம். உதாரணமாக, ஒரு புத்தகத்தை படிக்கத்தொடங்கிய ஒரு நபர் ஒரே இருப்பாக புத்தகத்தை படித்து முடிக்காமல், தூக்க உணர்வு என்னும் உந்துதல் மூலம், படித்தல் என்னும் சட்டகத்திலிருந்து வெளியேறி, படித்தவற்றை மதிப்பிட உதவலாம்.  இது ஒரு நபர் மட்டும் தொடர்புடைய செயல்களுக்கு."

"ஒருவர் தம் அறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் மற்றொருவர், அவரது ஆர்வமின்மையை வெளிப்படுத்தினால், முதலாமாவர் அந்த நிகழ்ச்சி இரண்டாமாவருக்கு பிடிக்கவில்லை எனக்கருதி, தொலைக்காட்சியில் வேறு நிகழ்ச்சிக்கு மாறலாம். அதாவது, முதலாவது மனிதர் தமது மனச்சட்ட்கத்தினுள் இருந்தபடியே, இரண்டாமாவரின் மனச்சட்டகத்தை புரிந்து கொண்டதாக கருதி, வேறு நிகழ்ச்சிக்கு மாறுகிறார். ஆனால் இரண்டாமாவரின் மனச்சட்டகமோ, அவர் வரும்போது தொலைக்காட்சியை நிறுத்தியிருக்க வேண்டும் என்னும் சட்டகத்தினுள் இருக்கலாம். அதாவது, முதலானவர், தம் மனச்சட்டகத்தினுள் இருந்து கொண்டே இரண்டாமாவரின் மனச்சட்டகத்தை புரிந்து கொண்டதாக கருதியிருக்கலாம். ஆனால் அது அத்தனை எளிதானதல்ல."

"நிச்சயமாக, மிக மிக அரிதாகவேனும் சில மனிதர்களால், பல மனிதர்களை உள்ளடக்கிய மனச்சட்டகங்களை அல்லது அமைப்புகளை, அவை ஒரு சட்டக அமைப்பு என இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தாலும், முழுமையாக உணர முடியும். அவ்வாறு உணர்ந்த மனிதர்கள், பெரும்பாலும், மற்றவர்களை அந்த சட்டகம் அல்லது அமைப்பில் பற்றிக்கொண்டிருப்பதை உணர வைப்பதற்காக, அந்த அமைப்புகளிலிருந்து நிச்சயமாக வெளிவந்தாக வேண்டும் என்பதை உணர வைப்பதற்காக, தங்கள் எஞ்சிய வாழ்நாட்களை அர்ப்பணிப்பார்கள்."

மேலே கூறப்பட்டவை சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்தின் ஒரு பத்தியில் கூறப்பட்டிருந்தவற்றின் சாரம் (நான் புரிந்து கொண்ட அளவில்). அது ஒரு ஆன்மீகமோ, உளவியலோ அல்லது சுயமுன்னேற்றமோ பற்றி கூறும் புத்தகம் அல்ல. ஆசிரியரின் முன்னுரைப்படி, உயிரற்ற ஜடப்பொருள்களிலிருந்து, உயிர் எவ்வாறு உருவாகியது என்பதை கூறுவதற்கான, ஆசிரியரின் தனிப்பட்ட முயற்சியே அந்த புத்தகம். எனில், இந்த சட்டகத்தினுள்ளும் இப்புத்தகத்தை எளிதில் அடக்கி விட முடியும் எனத்தோன்றவில்லை. எனவேதான், இங்கு எடுத்தாளப்பட்டுள்ள பத்தி, ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. புத்தகம் பற்றிய குறிப்பு இறுதியில்.....

மனித அறிவு, ஒரு குறுகிய சட்டகத்தினுள் அல்லது அமைப்பினுள், அதன் விதிகளுக்கு உட்பட்டு மட்டும்தான் சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இயங்கு அமைப்பு, ஒருவர் புலன்களாலும் அனுபவத்தாலும் அறிந்தவற்றையும், சுற்றுப்புறமும் சமூகமும் அளித்த நம்பிக்கைகளையும் அடிப்படையாக கொண்டிருக்கும்.

மனிதர்களின் அனைத்து இயக்கங்களும், உளவியல் இயக்கங்கள் உட்பட, அதிதீவிரமான விழிப்புணர்வு இல்லாத பட்சத்தில், ஏதேனும் ஒரு அமைப்புச்சட்டகத்தினுள்தான் இயங்கிக் கொண்டிருக்கும். இயக்கத்தின்போது அல்லது இயக்கம் முடிந்த பின் அந்த சட்டகத்திலிருந்து வெளிவந்து, நடந்து கொண்டிருக்கும் அல்லது முடிந்த இயக்கத்தை பார்க்கும்போதுதான் மனிதனால் தான் செய்த செயலை விளங்கிக் கொள்ள முடியும். அதன் சாதகபாதகங்களை உணர முடியும். இது நுண்ணறிவின் அடிப்படை இயல்பு. அதாவது சட்டகத்திலிருந்து வெளிவந்து அதை வெளியிலிருந்து பார்ப்பது. ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இதனை, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதில்லை. காரணம், தங்களின் எந்த வித முயற்சியும் இல்லாமல், அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அளவில், அது தானாகவே நிகழ்வதால். செயல் ஒரு குறிப்பிட்ட சட்டகத்தினுள் இயங்கிக்கொண்டிருப்பது, எப்போதும் இயந்திரத்தனமானது ஆகும். கணினி, அதில் ஏற்றம் செய்யப்பட்ட செயல்திட்டத்தை (Program), அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அதன் அமைப்புக்குள் இருந்து கொண்டே மீண்டும் மீண்டும் செயல்திட்டத்தில் கூறப்பட்டவற்றை செய்வதைப்போல.  அந்த நிலையில், மனிதர்களும் இயந்திரங்களைப்போலவே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் - அவர்களின் செயல்களும், கருத்துகளும், எண்ணங்களும் கூட. எனெனில், தங்கள் மனதில் முன்பே ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டகத்தை கடந்து, பெரும்பாலான மனிதர்களுக்கு, செயல்புரியவோ, கருத்துகளை உருவாக்குவதோ இயலாது.

இந்த சட்டக அமைப்புகள் மனிதனுள் எவ்வாறு உருவாகின்றன? ஆன்மீக மரபுகளும் உளவியல் விஞ்ஞானமும் இதனை விரிவாக ஆராய்ந்துள்ளன. அந்த ஆராய்ச்சியின் விளைவுகளே இன்று நமக்கு கிடைக்கும் பல விரிவான கோட்பாடுகளும், மதங்களும், தத்துவங்களும்.

மனித மனம்,  குறைந்த பட்சம் சாதாரண தளத்தில் புளங்கும் பெரும்பாலான மனிதர்களுக்கு, மனதினுள் உருவாக்கப்பட்டுள்ள சட்டகங்களையும் மன அமைப்புகளையும் அடிப்படையாக கொண்டே இயங்குகிறது - அதன் உண்மையான இயல்பு அவ்வாறாக இல்லை என்று கூறப்பட்டாலும். இந்த மனச்சட்டகங்கள், சமூக அமைப்புகளாலும், அவர்கள் பெற்ற கல்வியாலும், மதம் இனம் போன்ற அமைப்புகளின் போதனைகளாலும், மனித மனிதினுள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, நல்லது அல்லது தீயது என வாழும் சமூகத்தில் போதிக்கப்படுபவைகளை ஏற்றுக்கொள்ளும் ஓருவர் எவை எவை நல்லது அல்லது  தீயது என தம் மனதினுள் ஒரு சட்டகத்தை உருவாக்கிக்கொள்கிறார். இப்போது அவர் எதிர் கொள்ளும் எல்லாவற்றையும் இந்த நல்லது அல்லது தீயது என்னும் சட்டகத்தின் வழியாகவே பார்த்து, தாம் பார்க்கும் பொருளின் தன்மையை முடிவு செய்கிறார். இன்னொரு சமூகத்தில் வாழும் ஒருவருக்கு நல்லதும் தீயதும் முற்றிலும் வேறானவையாக இருக்கக்கூடும் - அவர் வாழும் சமூகம் அவர் மனதில் உருவாக்கி அளிக்கும் சட்டகத்தின் தன்மைக்கேற்ப!

அந்த சட்டகத்தினுள் இருந்து கொண்டு மனிதர்களால் எடுக்கப்படும் எந்த முடிவுகளிலும் அல்லது செய்யப்படும் செயல்களிலும், நுண்ணறிவு செயல்படுவதில்லை. அத்தகைய செயல்களும், முடிவுகளும், மனித மனதால் செயல்படுத்தப்பட்டிருந்தாலும், அவை வெறும் இயந்திரத்தனமானதே. ஏனெனில் நுண்ணறிவின் அடிப்படை இயல்பான, அமைப்பு\சட்டகத்திலிருந்து வெளிவந்து, செயலை கூர்ந்து கவனித்து, அதன் பின் அந்த முடிவெடுக்கப்படவில்லை. மாறாக மனதில் ஏற்கனவே உள்ள அமைப்புகள்\சட்டகங்களின் அடிப்படையிலேயே பெரும்பாலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில், நிறுவனமயமாக்கப்பட்டுள்ள தொழில் துறையில், நுண்ணறிவு மிக மிக அரிதாகவே தேவைப்படுகிறது - அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம்வரையில்! தொழில் துறையில் நுண்ணறிவு தேவைப்படுவது, செயல் அமைப்புகளையும் சட்டகங்களையும் உருவாக்கும்வரைதான். ஒரு குறிப்பிட்ட செயல் அமைப்பை, செயல் சட்டகத்தை உருவாக்கி விட்டால், அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவரும், அன்றாட வேலை அந்த செயல் அமைப்பினுள் இருக்குமாறு தங்களை தகவமைத்துக்கொண்டால் போதுமானது. அதாவது, ஒரு நிறுவனத்தினுள் வேலை செய்யும் அனைவரும், கீழ் நிலை முதல் உயர் நிலைவரை, வெறும் குமஸ்தாக்களே - அவர்கள் பதவியின் பெயர் என்னவாக இருந்தாலும். அந்த சட்டகத்தினுள், வேகமான இயந்திரமாக பணிபுரிபவர், நிறுவனத்தின் மேல் பதவிகளுக்கு சென்று கொண்டிருப்பார். மற்றவர்கள் அவர்கள் வேகத்திற்கேறப வெவ்வேறு நிலைகளில் அம்ர்ந்திருப்பார்கள். எனவே நமது கல்வி அமைப்பும், நிறுவனங்களுக்குத் தேவையான குமஸ்தாக்களை உருவாக்குவதையே முழுமுனைப்பாக கொண்டுள்ளது. அமைப்பு சார்ந்த கல்விக்கு வெளியே, தங்கள் நுண்ணறிவால், உண்மையான கல்வியை அடையும் ஓரு சிலரால் மட்டுமே நிறுவனங்களுக்கு தேவையான இயந்திர அமைப்புகளும் சட்டகங்களும் உருவாக்கப்படுகின்றன.

தொழில் நுட்பத்தின் இன்றைய காலகட்டத்தில், மனிதனின் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி செல்வதற்கு நுண்ணறிவு முற்றிலும் தேவை இல்லாதது. அதன் மறுநிலையாக, மனிதனாக வாழ வேண்டுமானால், நுண்ணறிவு தவிர்க்க முடியாதது. ஆக மனிதனின் மனதினுள் ஒரு அடிப்படை முரண்பாடு உருவாக்கப்பட்டு விடுகிறது. பெரும்பாலான மனிதர்கள், தங்கள் வாழ்க்கையில் நுண்ணறிவுடன் இல்லாத காரணத்தால், அமைப்புகளால் வாழ்க்கைக்கு எவ்வளவு பாதுகாப்புகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அன்றாட வாழ்க்கையையே ஒரு போராட்டமாக கழிக்கிறார்கள். இந்த அன்றாட வாழ்க்கை போராட்டங்களுக்கிடையே, அவர்களுக்கு வாழ்வதைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லை. அன்றாட வாழ்க்கையை நகர்த்தி செல்வதிலேயே தங்கள் மொத்த வாழ்க்கையையும் கழித்து விடுகிறார்கள். அதற்கு இயந்திரத்தனம் மட்டுமே போதுமானாது. எனவே நுண்ணறிவை பற்றிய அக்கறையும் இல்லை. இன்றைய 700 கோடி மக்களில் மனிதர்களாக வாழ்பவர்கள் எத்தனைபேரோ?


இதில் எடுத்தாளப்பட்டுள்ள பத்தியை கொண்ட புத்தகம்;  GODEL, ESCHAR, BACH: An Eternal Golden Braid. இந்த புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் 'ஒத்திசைவு' வலைப்பூவில், 21-06-2014 தேதியிட்ட பதிவிலிருந்து பெற்றுக்கொண்டேன். 'ஒத்திசைவு' ராமசாமி அவர்களுக்கு நன்றிகள்!

blog.change@gmail.com