Friday, April 5, 2013

நம்பிக்கை (Trust)


ஆன்மீக சாதகர்களின் கடைசி ஆயுதம், அவர்கள் எந்த வகையான ஆன்மீக சாதனைகளில் ஈடுட்டிருந்தாலும், பெரும்பாலும் நம்பிக்கையாகவே (Trust) இருக்க கூடும். அதே நேரத்தில் ஆன்மீக சாதகர்களை மாயையில்(Illusion), மாய மனத்தோற்றத்தில்(Hallucination) தங்கள் ஆன்மீகத்தை இழக்க செய்வதும் நம்பிக்கை என்னும் (Belief) இந்த ஆயுதமே. எனவே உண்மையில் நமக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்தால், நம்பிக்கையின் இயல்பை அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். பெரும்பாலும் நாம் கொண்டிருக்கும் ஆன்மீக நம்பிக்கை எத்தகையது என்பதையும் ஆன்மீக நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருக்கும் கட்டுரை ஓரளவுக்கு நம்மை உணர வைக்கலாம்

நம் தர்க்க புத்தியால் கடக்கக்கூடிய தூரம், நம் மன ஆழங்களுடனும், பிரபஞ்ச இயக்கத்தின் எல்லையின்மையுடனும் ஒப்பிடும்போது மிக மிக சிறிய தூரம் மட்டுமே. ஒப்பிடும்போது கணக்கில் கொள்ளதக்க அளவு கூட இல்லாத அந்த மிகசிறிய அறிதலுக்காக மட்டுமே நம் தர்க்க புத்தி நமக்கு தேவைப்படுகிறது. மறு பிறவி கோட்பாடு உண்மையாக இருந்தால், நாம் கடந்து வந்திருக்கும் எண்ணற்ற பிறவிகள், அந்த சிறு தூரத்தை நம் பிரக்ஞ்சையால் கடக்க இயலாத காரணத்தினால் மட்டுமே.

நம்பிக்கை எவ்வாறு நமக்குள் உருவெடுக்கிறது? ஒவ்வொரு மனிதப்பிறவியும் இங்கு தோன்றிய பின், புலன்களால் உலகத்தை அளக்கத்தொடங்குகிறது. உலகம் என்பது ஒரு தொடர் இயக்கம். இங்கு நிலையானது எதுவும் இல்லை. அனைத்தும் கணத்துக்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் நிலையின்மையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலாது. எனவே நம் வாழ்வு இயங்கும் தளத்தில், நம் வாழ்க்கையை சார்ந்த(relatively) நிலையானதை புலன்கள் மூலம் மனித மனம் அடையத்தொடங்குகிறது. ஆனால் நம் வாழ்வு இயங்கும் தளத்திலும் எண்ணற்ற நிலையற்ற இயக்கங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. இப்போது நிலையான இயக்கங்களையும் நிலையற்ற இயக்கங்களையும் தொடர்பு படுத்தி உணர வேண்டியது மனித மனதின் தவிர்க்க முடியாத தேவையாகிறது. அதாவது மனித மனம் வாழ்க்கை நிகழும் தளத்தில் நிலையானவற்றை கொண்டு, அந்த தளத்தில் நிலையற்றவற்றை அளவிட்டு, அந்த இயக்கங்களை வாழ்க்கையின் நிகழ்விற்கு தேவைப்படும் இடங்களில் துணையாக்குகிறது. இந்த அளவிடலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணமே நம்பிக்கை. இந்த நம்பிக்கை, நாம் முற்றிலும் அறிந்தவற்றிலிருந்து, அதற்கு தொடர்புடைய நம்மால் அறிய முடியாதவற்றை குறித்து அறியும் முயற்சி மட்டுமே.

மனித மனம் எல்லையற்றது. நம்பிக்கையின் மூலம் நம் வாழ்க்கைக்கு மிகத்தேவையான நிலையற்ற இயக்கங்களை அளவிட்ட நம் மனம், அதே அளவுகோலின் மூலம் நம் வாழ்க்கையை கடந்த அதீத இயக்கங்களையும் அளவிட முயல்கிறது. அவ்வாறு அளவிடமுடியாதவற்றை நம் மனதின் மூலம் அளவிட முயலும்போது நம்பிக்கை என்னும் இயக்கம் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்று விடுகிறது.

நம் மனம் எங்கெங்கு கேள்விகள் எழுப்புகிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையின் மூலம் விடை பெற்று கேள்விகளை கடந்து செல்கிறோம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் நாம் நம்பிக்கையின் மூலம் பெற்ற விடைகள், அன்றாட செயல் முறை தளத்தில் பெரும்பாலும் ஒத்திசைவுடன் செல்வதில்லை. இங்குதான் நம் உண்மையான பிரச்சினை தொடங்குகிறது. நம் நம்பிக்கை அன்றாட செயல் தளத்தில் தோல்வியுறும்போது, நம் நம்பிக்கையுடன் நம்மை நம் அகங்காரம் மூலம் பிணைத்திருந்தால், அந்த நம்பிக்கையே நம் அடையாளமாக மாறி இருந்தால், அந்த தோல்வியை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அன்றாட செயல் தளத்தின இயக்கங்கள் நம் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ போராட தொடங்குவோம். அந்த நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட போராட்டம், அன்றாட செயல் தளத்தில் பேரழிவுகளை ஏற்படுத்த கூடும். நம் செயல்கள் சமூகத்தையும் பாதிக்கும் நிலையில் நாம் இருந்தால், அந்த நம்பிக்கையின் விளைவுகள் சமூக அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அல்லது நம் இயங்கு தளத்தில், தனிமனித அளவிலோ அல்லது குடும்ப அளவிலோ அல்லது சிறு குழு அளவிலோ அந்த பாதிப்பு நிகழலாம். உலகில் நடந்திருக்கும், நடந்துகொண்டிருக்கும் பேரழிவுகளுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் தனி மனித அல்லது மனித குழுக்களின் நம்பிக்கைகளே காரணம். நாமும் நம்பிக்கையை செயல் தளத்தில் அடிப்படையாக கொண்டவர்கள் என்றால் நமக்கும் அந்த பேரழிவுகளே ஏற்படுத்தியவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, செயல்திறனின் சமூகத்தை பாதிக்கும் அம்சம் மட்டும் - அவர்கள் அளவுக்கு செயல் தீவிரம் உடையவர்களாக இருந்தால், நாமும் தீவிரவாதிகளே!

தர்க்கத்தை, தத்துவத்தை இழந்த நம்பிக்கைகளே உலகின் பேரழிவுகளை நிகழ்த்தியிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் அழிவுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. நம் நம்பிக்கைகளும் ஆன்மீக தளத்திலிருந்து விலகும்போது நம் ஆளுமையின் வீச்சிற்கேற்ப அழிவுகளை நம்மைச்சுற்றிலும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அத்தகைய நம்பிக்கையுனுள் நாம் அமிழ்ந்திருக்கும்போது நமது மாய மனக்காட்சிகள், அந்த அழிவுகளையும் நம் முன்னேற்றமாகவே கண்டு கொண்டிருக்கும் - அறிந்து கொள்ள முடியாத மாய வலை! நம்பிக்கையின் முன்முடிவுகளையே தர்க்கமாக கொண்டிருக்கும் பேரழிவு!

ஆனால் நம்பிக்கையே ஆன்மீக சாதகனின் கடைசி ஆயுதம்! இந்த நம்பிக்கையே சரணாகதி. நம்மை விட பெரிய ஒன்றை, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை, நம் அறிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை நம்பாமல் அத்தகைய ஒன்றிடம் நம்மால் சரணாகதி அடைய முடியாது. இங்கு சரணாகதி என்பதன் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வது மிக அவசியம். நாம் ஒன்றிடம் சரண்டையும்போது, நம் அகங்காரத்தை, சுயத்தை முழுவதும் இழந்து விடுகிறோம். அந்த நிலையில் கடந்த காலத்தின் கவலைகளும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளும் நம்மிடமிருந்து முழுமையாக மறைந்து விடும். அதாவது எது நடந்தததோ அந்த செயலில் நம் பங்கை மட்டும் நாம் செய்திருப்போம். ஆனால் நடந்தது நமக்கு அப்பாற்பட்ட, நாம் சரணடைந்த ஒன்றினால் மட்டுமே நடந்தது. எது நடைபெறுமோ அவற்றில் நம் பங்களிப்பை மட்டும் வழங்குவோம். அந்த செயல் நமக்கு அப்பாற்பட்ட விதிகளின் அடிப்படையில் எவ்வாறு நடைபெற வேண்டுமோ அவ்வாறு நடை பெறும். இத்தகைய சரணாகதி மனநிலையை அளிக்கும் நம்பிக்கையே ஆன்மீக நம்பிக்கை. மற்ற எல்லா நம்பிக்கைகளும் நம் மனம் எழுப்பும் வினாக்களிலிருந்து தப்பிச்செல்வதற்கு நாம் பயன்படுத்தும் கருவி மட்டுமே. இந்த நம்பிக்கைகள் அன்றாட செயல்களின் அலைக்கழிப்பினால் மனநிலை பிறழ்வதிலிருந்து தப்பிப்பதற்கு மட்டுமே உதவலாம். ஆம், மிகவும் மெல்லிய, எளிதில் உடையக்கூடிய மனநிலையை உடையவர்களுக்கு இத்தகைய நம்பிக்கைகள் மிகவும் தேவை - மனப்பிறழ்வு நிலையை அடையாமல் நம் வாழ்க்கையை தொடர.

துரதிருக்ஷ்டவசமாக நம்மில் பெரும்பாலானவர்கள் இத்தகைய நம்பிக்கைகள் தேவைப்படும் அளவுக்கு மெல்லிய மனதுடன் இருக்கிறோம் - புற உலகில் எத்தனை மன வலிமை படைத்தவர்களாக நம்மை காட்டிக்கொண்டிருந்தாலும்! அல்லது அத்தகைய மெல்லிய மனம் படைத்த சமூகம் அளித்த நம்பிக்கைகளை இழக்க இயலாமல் தடுமாறிகொண்டிருக்கிறோம். நம் மனம் தத்துவத்தின் பக்கம் திரும்புவதன் மூலம் மட்டுமே இத்தகைய நம்பிக்கைகள் தேவைப்படாத தளத்தை அடைய முடியும். அந்த தளத்தில் சென்ற பின் மட்டுமே ஆன்மீக சரணாகதிக்கு தேவையான எளிய மனநிலையை அடையமுடியும். அந்த எளிய மனநிலையில் நம் அகங்காரத்தை, சுயத்தை இழந்து முழுமுதல் உண்மையின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அந்த உண்மையிடம் சரணாகதி அடைய இயலக்கூடும். அதன் பின் நாம் அடைவதற்கு எதுவம் இல்லை!

blog.change@gmail.com

No comments: