Tuesday, April 2, 2013

தத்துவம்


எதற்காக தத்துவம்? எந்த துறையை எடுத்தாலும் தத்துவமே பிரதானமாக கருதப்படுகிறது. எதற்காக? இங்கு நாம் கவனத்தில் கொள்வது ஆன்மீகம் சார்ந்த தத்துவங்களை மட்டுமே. ஆன்மீகத்தில் தத்துவத்துக்குதான் முக்கியமான இடமா? ஆம் எனில் ஆன்மீகத்தின் தத்துவம் தவிர்த்த மற்ற அம்சங்கள் எதற்காக? இல்லை எனில் ஆன்மீகத்தில் தத்துவத்தின் பங்கு என்ன? ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள அனைவருக்கும் தத்துவ அறிமுகம் தேவையா? இல்லை எனில் எண்ணிலடங்கா ஆன்மீக தத்துவங்கள் யாருக்காக? கடைசியாக, நாம் ஆன்மீக பாதையில் செல்ல விரும்பினால் நமக்கு தத்துவங்கள் தேவையா? தேவை எனில் முடிவில்லாத தத்துவ கடலில் எவை நமக்கானவை?

இந்த விசாரணைகளை தொடங்குவதற்கு முன், எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் தர்க்கம் குறித்து கூறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வார்த்தைகள் நமக்கு உதவலாம்.


"நுண்ணுணர்வாலான ஆழ்தளத்துக்குச் செல்லும்போது மனம் படிமங்களைக் கட்டற்றுப் பெருக்கிக் கொள்கிறது. அதையும் தர்க்கம் மூலம் எல்லைக்குள் நிறுத்த முயல்கிறேன். ஆகதர்க்கம் என்னைப் பொறுத்தவரை ஒரு கட்டுப்படுத்தும் கூறு மட்டுமே."
"நான் என்ன சொல்கிறேன் என்பது ஓரளவு தியானம் பழகியவர்களுக்குப் புரியும். தியான மரபுகள் தொடர்ந்து ஆழ்தலையும் அமைதலையும்தான் வலியுறுத்துகின்றன. தியானம் மூலம் அடையப்படும் அனைத்துமே தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட தளத்தில்தான் உள்ளன. அவற்றைப் பகிர்வதுகூட இயல்வதல்ல. ஆனால் நெடுங்காலம் முதல் எல்லா தியான மரபுகளிலும் நுண்ணிய தர்க்கமும் தேவைப்பட்டிருக்கிறது. தியானத்தில் அமர்ந்ததுமே மனம் கற்பனைகளில் திசையிழந்து தெறிக்கிறது. எதிர் எதிரே வைக்கப்பட்ட ஆடிகள் போல பிம்பங்களைப் பெருக்கிக் கொள்கிறது. சிலசமயம் பித்துப் பிடிக்கும் அளவுக்கு உணர்ச்சிவேகம் ஏற்படுகிறது. இப்படி ஒரு கொந்தளிப்பு உருவாகும்போது அதை நெறிப்படுத்த தர்க்கம் தேவைப்படுகிறது."
"உதாரணமாக ஜெ. கிருஷ்ணமூர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்வதை ஆழ்ந்து அனுபவபூர்வமாக உள்வாங்காத ஒருவருக்கு, அவர் தர்க்கங்களைக் கட்டமைத்தபடியே செல்வதாகத் தோன்றும். வெற்று தர்க்கமாகக்கூட சிலருக்குப் படலாம். ஆனால் அவர் தொடர்ந்து தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றையே முன்வைக்கிறார். அங்கே செல்லும் பாதையை நமக்கு வகுத்தளிப்பதில்லை. அதை நாமே கண்டடையவேண்டும் என்பதே அவரது எண்ணம். ஆனால் பாதையின் இருபக்கக் கரைகளையும் வகுத்துத் தருகிறார். அதற்குத்தான் தர்க்கத்தைப் பயன்படுத்துகிறார்."
"மெய்ஞானத்தின் திண்ணையில் பசித்த காவல்நாய் உள்ளது. நமது போத மனம்தான் அது. அதற்கு சில இறைச்சித்துண்டுகளைப் போட்டுவிட்டு உள்ளே நுழைகிறோம். அந்த இறைச்சித்துண்டுதான் தர்க்கம்."
ஆம் தர்க்கம் ஒரு கருவி. நம் போத மனதை, பிரக்ஞ்சையை அமைதிப்படுத்தும் ஒரு கருவி. தர்க்கம் அமர்ந்திருப்பது தத்துவம் என்னும் இருக்கையில். ஆக தத்துவ அறிவு நம் மனதை அமைதிப்படுத்தவே தேவைப்படுகிறது. மனதை அமைதிப்படுத்த வேறு வழிகளும் உள்ளன. உதாரணமாக நம்பிக்கை. 
ஆம் நம்பிக்கையும் நம் மனதை அமைதிப்படுத்தும். அவ்வாறு நம்பிக்கையின் மூலம் அடைந்த மன அமைதி ஆன்மீகத்தை நோக்கி நம்மை நகர வைக்கும் மன அமைதியா அல்லது ஆன்மீகத்திலிருந்து நம்மை விலக்கி வைக்கும் மன அமைதி போல தோற்றமளிக்கும் மனதின் செயலாற்றும் தகுதியை இழந்த நிலையா என்பது அந்த நம்பிக்கையின் தரத்தை பொறுத்தது. நாம் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டவர்கள் என்றால், அந்த நம்பிக்கையின் தரத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவிற்காகவேனும் குறைந்த பட்ச தர்க்க அறிவும் தர்க்கத்தின் அடிப்படையான தத்துவ அறிவும் நாம் பெற்றிருக்க வேண்டும்.
எண்ணற்ற தத்துவங்கள் ஆன்மீக தளங்களில் புழங்குகிறது. ஒவ்வொரு தத்துவமும் ஒவ்வொரு முறையில் ஆன்மீகத்தை அணுகுகின்றன். ஒவ்வொரு சமூகமும் அந்த சமூகத்துக்கான தத்துவங்களை கொண்டுள்ளன - அந்த சமூக உறுப்பினர்கள் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும். எந்த ஒரு சமூகத்தின், மதத்தின் அல்லது மதம் சமூகம் சாராத ஆன்மீக தத்துவங்களை நோக்கினாலும் அவற்றின் அடிப்படை நோக்கம் ஒன்றாகவே இருக்க முடியும் - மனித முழுமையை அடைவது. எல்லா தத்துவங்களின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் கூறும் முறை முற்றிலும் வேறுபட்டுள்ளது. அந்த கூறும் முறை, அந்த தத்துவ கோட்பாட்டை அடைந்த மனங்களின் சமூக பின்னணி, எந்ந சமூகத்தை நோக்கி கூறப்படுகிறதோ அந்த சமூகத்தின் சராசரி மன அமைப்பு ஆகியவற்றை சார்ந்து இருக்கும். எனவே ஒரு ஆன்மீகவாதியால் எந்த ஒரு தத்துவத்தையும்  நிராகரிக்க இயலாது. அவ்வாறு நிராகரிப்போமானால் ஆன்மீகத்தின் எந்த சாத்தியங்களையும் நம்மால் அடைய முடியாது.
ஆனால் சமூகத்தில் புழங்கும் அனைத்து தத்துவங்களும் நமக்கான தத்துவங்களாகவும் இருக்க முடியாது. ஆம் நமக்கு தேவையான தத்துவம் நம் மனதில் எழும்பும் கேள்விகளை பொறுத்தது. அந்த கேள்விகளின் தளத்தை பொறுத்தது. அதாவது நம் இயல்பை பொறுத்தது. நம் மனதின் அலைக்களிப்புக்கான கேள்விகள் முடிவடையும்போது நாம் தத்துவங்களின் தேவைகளையும் கடந்திருப்போம். அந்த நிலையில் மனம் அதன் முழு சாத்தியத்தை அடைந்திருக்கும் அல்லது அடைவதற்கான தகுதியை அடைந்திருக்கும். அந்த நிலையில் நமக்கு தத்துவங்களுக்கும் வெற்று வார்த்தைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனெனில் நம் மனதை ஆன்மீக வழியில் செலுத்த அங்கு எந்த தர்க்கமும் தேவை இல்லை.
ஆனால் வெற்று நம்பிக்கைகளும் நம்மை தத்துவங்களையும் அதன் வெளிப்பாடான தர்க்கத்தையும் நிராகரிக்க வைக்கலாம். ஆக நாம் நம்பிக்கையின் அடிப்படையில் தத்துவ கோட்பாடுகளை நிராகரிப்போமானால், நாம் வெற்று நம்பிக்கையினால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தலாம். ஆனால் அத்தகைய மன நிலையில் துரதிர்க்ஷ்டவசமாக நமது நம்பிக்கை, வெற்று நம்பிக்கை என்பதை அறியும் தகுதியையும் இழந்திருப்போம். எந்த தத்துவம் நம் மனதை அலைக்கழிக்கும் கேள்விகளை எழுப்பவில்லையோ அந்த தத்துவங்கள் நமக்கு, நம் மன இயல்புக்கு தேவையில்லாத தத்துவங்கள். எனவே அவற்றை நாம் பயில வேண்டிய தேவை இல்லை.
தத்துவங்களின் தேவை நமக்கு உண்டா இல்லையா என்பது நம் மனதில் நமது வாழ்க்கை குறித்த, நமது இருப்பு குறித்த, நமது முழுமை குறித்த கேள்விகள் நம் மனதில் எழுகின்றனவா இல்லையா என்பதை பொறுத்தது. அவ்வாறு கேள்விகள் எழுந்தால் நாம் ஆன்மீக வழியில் இருக்கிறோம் என்பது உறுதியாகிவிட்டது. அந்த கேள்விகள் எழும்போது அவற்றை எதிர்கொள்ள நம் முன் இருக்கும் முதல் மற்றும் எளிதான கருவி, நாம் சார்ந்திருக்கும் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகள். நாம் எளியவர்களாக இருந்தால், எளிய மன நிலையில் இருந்தால், நம் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளே நம் ஆன்மீக உச்சத்தை அடைய போதுமானவை.
துரதிர்க்ஷ்டவசமாக நாம் எவருமே எளியவர்களாக இல்லை. நம் சமூகம் நமக்கு ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கைகளுடன் நம் வாழ்க்கை சார்ந்த போராட்டங்களையும் நமக்கு அளித்துள்ளது. அந்த வாழ்க்கை போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்துந்தோறும் நம் எளிமையை சிறுக சிறுக நாம் இழந்து கொண்டே வந்திருக்கிறோம். எனவே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நம் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகள் போதுமானதாக இல்லை. அந்த நம்பிக்கைகள் பெரும்பாலும் வாழ்க்கை போராட்டங்களை எதிர் கொள்ளாமல் அவற்றிலிருந்து தப்பி செல்லவே நாம் உபயோகப்படுத்துகிறோம். நம்பிக்கைகளோ அல்லது வேறு எவையோ நம்மை ஆன்மீக உச்சத்திற்கு எடுத்து செல்ல வேண்டுமெனில், நம்மை மீண்டும் (மனதளவில்) எளிமையானவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். இதற்காகவே தத்துவங்கள் நமக்கு தேவைப்படுகின்றன - நம் கேள்விகளுக்கு விடையளித்து, எல்லா விதமான மன தடைகளையும் விலக்கி, வாழ்க்கையை உள்ளவறே எதிர்கொள்ளும் எளிமையான மனதை அடைய! பசித்து வெறியுடன் இருக்கும் போத மனமாகிய காவல் நாயின் பசியை ஆற்றி மெய்ஞானத்தை அடைய!

blog.change@gmail.com

2 comments:

Sivamjothi said...

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

தவம் செய்ய வேண்டும்!!!

தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

video
ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg

Change said...

சிவம்ஜோதி,
வருகைக்கும், விளக்கத்திற்கும் நன்றி!