Monday, February 11, 2013

விழிப்பின் விழிப்பின்மை


நாம் விழித்திருக்கும்போது உண்மையில் நாம் முழுமையாக விழித்திருக்கவில்லை, அரை விழிப்பில் இருந்து கொண்டிருக்கிறோம். ஆம், நம் உடலுக்கு தேவையானவற்றை செய்யும் அளவில் மட்டுமே விழித்திருக்கிறோம். ஆனால் வாழ்க்கை என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல, அது வாழ்க்கையின் மிக மிக சிறிய பகுதி மட்டுமே- அடிப்படை பகுதியாக இருந்தாலும!. வாழ்வின் பெரும் பகுதி, வாழ்வின் உண்மையான பகுதி. நம் மனதினுள் சதா காலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்ட வசமாக வாழ்வின் உண்மையான பகுதியை அறிய நாம் விழித்திருக்கவில்லை. இதன் மூலம் நம் வாழ்வின் பெரும்பகுதியை, இயற்கை மனிதர்களுக்கு மட்டும் அளித்துள்ள பெரும் கொடையை வாழாமல் வீணாக்கி கொண்டிருக்கிறோம். எவ்வாறு நாம் மனம் சார்ந்த வாழ்க்கைக்கும் விழிப்பது? எவ்வாறு நம் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பது?

நம் மனம் இயங்கும் முறையை அடிப்படையாக கொண்டு அதனை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். அவை வெளிமனம்(Conscious Mind), உள்மனம்(Sub Conscious Mind), ஆழ்மனம்(Unconscious Mind), சமூக ஆழ்மனம் (Collective Unconscious Mind). மனதின் இந்த நான்கு பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் இருவழிப்பாதையில் தொடர்புடன் இருந்து கொண்டிருக்கின்றன - மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும். நாம் நம் மனதை குறித்து அறிந்திருப்பது நமது வெளிமனதை மட்டுமே. மனதை கவனிப்பவர்களாக இருந்தால் வெளிமனதின் ஆழம் சற்று அதிகமாக இருக்கலாம், மற்றவர்களுக்கு வெளிமனம் மிகவும் மெலிதாக(Shallow) இருக்கலாம். அதாவது நாம் சற்றேனும் அறிந்திருப்பது வெளிமனதில் நிகழும் நிகழ்வுகளை மட்டுமே. ஆன்மீக பயிற்சிகளின் அடிப்படை, மனதின் இந்த நான்கு பகுதிகளும் ஒன்றாகி வெளிமனமாக வெளிப்படும் தகுதியை அடைவதே. அந்த தகுதியை அடையும்போது நம்மனதின் அனைத்து நிகழ்வுகளும் நம் பிரக்ஞ்சையின் எல்லைக்குள் நிகழும். அதாவது நம் பிரக்ஞ்சை மனதின் நிகழ்வுகள் எந்த தளத்தில் இருந்தாலும் அந்த தளங்களில் சஞ்சரிக்கும் தகுதியை பெற்றிருக்கும். அந்த அனுபவத்தை அடைந்தால் நம் வாழ்க்கையில் வேறு எந்த அனுபவங்களுக்கும் தேவைகள் இல்லாமல் இருக்க கூடும்.

நாம் உறக்கத்தில் இருக்கும்போது, எந்த வெளி நிகழ்வுகளும் நம்மை அடைவதில்லை. உறக்கத்தில் சாதாரணமாக கண்கள் மூடியிருக்கும். ஒருவேளை கண்கள் திறந்திருந்தாலும் எந்த காட்சிகளும் நம்மை அடைவதில்லை. செவிகள் திறந்திருந்தாலும் எந்த ஒலியும் நாம் அடைவதில்லை. நாசி சுவாசித்துக்கொண்டிருந்தாலும் எந்த மணத்தையும் நாம் நுகர்வதில்லை. நம் உடல் திறந்திருந்தாலும் எந்த தொடு உணர்ச்சியையும் நாம் உணர்வதில்லை. அதாவது உறக்கத்தில் இருக்கும்போது, புலன்கள் அறிவதை பிரக்ஞ்சை உணர்வதில்லை. அல்லது நாம் உறங்கும்போது நம் பிரக்ஞ்சையும் உறங்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் நாம் பிரக்ஞ்சை இழந்து இருக்கும் தருணங்களே நாம் உறக்கத்தில் இருக்கும் தருணங்கள். நாம் விழிப்பில் இருக்கும்போது முழு பிரக்ஞ்சையுடன் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. நம் ஒவ்வொருவரின் இயல்பிற்கேற்ப வெவ்வேறு அளவிலான பிரக்ஞ்சையுடன் இருக்கிறோம். அல்லது நம் அன்றாட வாழ்க்கையை நடத்திச்செல்ல தேவையான குறைந்த பட்ச பிரக்ஞ்சையுடன் மட்டுமே இருக்கிறோம்.

நம் அன்றாட வாழ்க்கையை நிறைவேற்றும் இயக்கங்கள், ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்ட இரண்டு தளங்களுக்கு இடைப்பட்ட தளங்களில் நடைபெறுகிறது. முதல் தளத்தில் இயங்கினால் நாம் முற்றிலும் விலங்குகளை போல இருப்போம். நம் உடல் தேவைகள் எழும்போது அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயல் புரிவது. இதில் உடல் தாண்டிய எந்த பிரக்ஞ்சையும் தேவையில்லை. ஆனால் விலங்குகள் அவற்றின் உடல் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடும்போது, உடல் குறித்த முழுபிரக்ஞ்சையுடன் இருந்தாக வேண்டும். ஏனெனில் இந்த தளத்தில் எண்ணங்கள் இருப்பதில்லை. உடல் குறித்த முழுபிரக்ஞ்சை இல்லாத பட்சத்தில் விலங்குகளால் அவற்றின் உயிரை தக்க வைத்துக்கொள்ள முடியாது. அடுத்த இயங்கு தளம், உடல், மனம் மற்றும் உணர்வு சார்ந்த முழு பிரக்ஞ்சையுடன் இயங்குவது. இந்த தளத்தில் இயங்கும்போது, நம் உடல் தேவைகள், அந்த தேவைகள் மனதில் ஏற்படுத்தும் விளைவுகள், அந்த விளைவுகளின் காரணமாக உருவாக்கப்படும் மன இயக்கங்கள், மன இயக்கங்கள் செயல்களாக வடிவம் பெறும் முறைகள், உடலிலிருந்து செயல்கள் வெளிப்படும் வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் குறித்த பிரக்ஞ்சையுடன் நாம் இருக்க கூடும். சாதாரண மனிதர்களின் இயங்கு தளம், இந்த இரண்டு தளங்களுக்கு இடைப்பட்ட தளங்களில் இருக்கிறது - பெரும்பாலும் உடல் சார்ந்த பிரக்ஞ்சையை மட்டும் உடைய முதல் தளத்திற்கு மிக மிக அருகில்! அதாவது மனிதர்களாகிய நமக்கு சாத்தியமான முழு விழிப்பு நிலையிலிருந்து மிக மிக விலகி, உடல் சார்ந்த விழிப்பு நிலை மற்றும் மிக மிக குறைந்த அளவிலான மனம் சார்ந்த விழிப்பு நிலையில் மட்டும் இருப்பது.
நாம் காண்பது, கேட்பது, உணர்வது போன்றவை பிரக்ஞ்சை விழிப்புடன் இருக்கும்போது மட்டுமே நிகழும். ஆனால் மன இயக்கங்களுக்கு பிரக்ஞ்சையின் விழிப்பு நிலை தேவையில்லை. நம் உள் மனதிலும் ஆழ் மனதிலும் எப்போதும் நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றை நம் பிரக்ஞ்சை அறிவதில்லை. அதாவது பிரக்ஞ்சையின் அறிவில் படாமல் நிகழும் நம் மன இயக்கங்களே நம் உள்மனமும் ஆழ்மனமும். ஆனால் அந்த உள் மன இயக்கங்களை பிரக்ஞ்சை அறிய நேர்ந்தால் அந்த கணமே மன இயக்கத்தின் அந்த பகுதி நம் வெளிமனமாக ஆகி விடுகிறது.

நம் பிரக்ஞ்சை சுதந்திரமாக இருக்கும்போது எண்ணற்ற இயக்கங்களை ஒரே நேரத்தில் அறியும் இயல்புடையது. அந்த இயல்புடன் பிரக்ஞ்சை எப்போதும் இருக்குமானால், அதாவது நம் பிரக்ஞ்சை எப்போதும் சுதந்திரமாக இருக்க முடியுமானால், நம் மனதில் வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என பிரிவினைகள் இருக்க வாய்ப்பில்லை. மனம் என்பது முழுவதும் பிரக்ஞ்சையால் அறியப்படக்கூடிய வெளிமனமாகவே இருக்க கூடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் சாதாரண நிலையில் நம் பிரக்ஞ்சை விடுதலையுடன் இருப்பதில்லை. நம் மன இயல்பிற்கேற்ப, நம் செயல்களுடன் அல்லது மன இயக்கங்களுடன் தன்னை அடையாளப்படுத்தி இணைத்துக்கொண்டு மற்ற இயக்கங்களை, செயல்களை தவற விட்டு விடுகிறது.

ஆனால் பிரக்ஞ்சை ஒரு குறிப்பிட்ட செயலுடன் அல்லது எண்ணத்துடன் மட்டும் தன்னை அடையாளப்படுத்தி இணைத்துக்கொண்டால் நம்மால் வாழ்க்கையை நிகழ்த்த இயலாது. ஏனெனில் பிரக்ஞ்சையின் மூலம் மட்டுமே நம் வாழ்க்கை தேவைகள் செயல்வடிவம் பெறுகின்றன. நம் வாழ்க்கையை நிகழ்த்த நமக்கு பல செயல்கள் தேவைப்படுகின்றன. எனவே நம் பிரக்ஞ்சை ஒரு செயலிலிருந்து மற்றொரு செயலுக்கும், ஒரு எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்திற்கும் இடைவிடாது தாவிக்கொண்டே இருக்கிறது. அத்துடன் அது செல்லும் ஒவ்வொரு செயலுடனும், எண்ணத்துடனும் தற்காலிகமாக தன்னை இணைத்துக்கொள்கிறது. இங்கு ஆச்சரியப்படவேண்டிய விஷயம் நம் உள் மனதின் செயல்பாடு. பிரக்ஞ்சையால் விட்டு செல்லப்பட்ட செயல்களையும் எண்ணங்களையும் உள்மனம் ஏற்றெடுத்து முடித்து வைக்கிறது. ஆனால் உள் மனதால் இயக்கப்படும் இயக்கங்களை பிரக்ஞ்சை அறிவதில்லை. எனவே அந்த இயக்கங்களின் திசைகளும் நம் கட்டுப்பாட்டில் இல்லை.

பெரும்பாலும் நம் அனைவரின் அன்றாட செயல்பாடுகளும் உள் மனதால் மட்டுமே முடித்து வைக்கப்படுகின்றன. நாம் செய்யும் செயல்களில் எப்போது கவனத்தை இழந்து பிற எண்ணங்களில் நம் கவனத்தை செலுத்திகிறோமோ, அப்போதே நம் செயல்களின் இயங்கு சக்தி உள் மனதால் கட்டுப்படுத்தப்படுகிறது. பிரக்ஞ்சை அவ்வப்போது செயல்களை எட்டிப்பார்த்து, ஆம் கவனத்துடன் இருக்கிறேன் என கூறிக்கொள்கிறது. ஆனால் உண்மையில் அது செயல்களிலிருந்து செயல்களுக்கும் எண்ணங்களிலிருந்து எண்ணங்களுக்கும் இடைவிடாது தாவிக்கொண்டிருக்கிறது.

ஆம், நாம் அலைபாயும் மனம் எனக்கூறுவது, எண்ணங்கள் அலைபாயும் மனபரப்பை அல்ல, ஆனால் எந்த செயல்களிலும் அல்லது எண்ணங்களிலும் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முடியாத பிரக்ஞ்சையையே. ஆகவே அது உண்மையில் அலைபாயும் மனம் அல்ல. அலைபாயும் பிரக்ஞ்சை! ஆக உண்மையில் நாம் செய்ய வேண்டியது மனதில் உருவாகும் எண்ணங்களை கொல்வது அல்ல, ஆனால் அனைத்து எண்ணங்களுக்கும் அனைத்து செயல்களுக்கும் முழு விழிப்புடன் இருக்கும் பிரக்ஞ்சையை அடைவது! அத்தகைய பிரக்ஞ்சையை நாம் அடையும்போது நம்மிடமிருந்து தேவையில்லாத செயல்கள் எதுவும் எழ வாய்ப்பில்லை, நம் மனதில் தேவையில்லாத எண்ணங்களும் எழ வாய்ப்பில்லை. இந்த நிலையையில் நல்ல செயல் தீய செயல், நல்ல எண்ணம், தீய எண்ணம் என்ற பிரிவினைகளையும் நாம் தாண்டி சென்று விடக்கூடும். அந்த நிலையில் உலகின் இருமை தன்மையை கடந்து, அனைத்தும் ஒன்றேயாகக்கூடிய ஒருமை தன்மையை நாம் அடையக்கூடும். அத்தகைய தன்மை நம் மனதில் நிகழுமானால், அதுவே மனிதபிறவியாக நாம் அடையக்கூடிய உச்சகட்ட ஆனந்தமாக இருக்க கூடும். எல்லா மதங்களுக்குமான, எல்லா நாகரீகங்களுக்குமான தொலை தூர இலக்கு, அந்த மதத்தை அல்லது நாகரீகத்தை சார்ந்த ஒவ்வொரு மனிதரையும் இந்த ஒருமை தனைமையை நோக்கி பயணிக்க வைப்பதேயாக இருக்க கூடும்!

blog.change@gmail.com

Friday, February 8, 2013

அலை பாயுதே மனம்!


மனதை கட்டுப்படுத்த எப்போதாவது முயலாதவர்களாகவும், அவ்வாறு முயலும்போது மனதின் அலைபாயும் தன்மையை குறித்து விரக்தி அடையாதவர்களாகவும் நாம் இருப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவானதாகவே இருக்கும். ஆம் நம்மில் பெரும்பாலானவர்கள் நம் மனதின் அலை பாயும் தன்மையை குறித்து நிச்சயமாக விரக்தி அடைந்திருப்போம். அந்த விரக்தியின் மூலம், மனதால் அடைய சாத்தியமான உச்சகட்ட ஆனந்தத்தை அடைய முடியாமல், அதற்கான முயற்சியையும் கைவிட்டிருப்போம். நம் மனதை குறித்த புரிதல் இல்லாத காரணத்தால், அந்த மனதால் அடைய கூடியவற்றையும், கூட நம் வாழ்க்கையையும், நம்மை அறியாமலே இழந்து கொண்டிருக்கிறோம்.

நம் மனம் அதன் அலைபாயும் தன்மையுடன் இருப்பதால் மட்டுமே, நம்மால் நம் அன்றாட வாழ்க்கையை நடத்திச்செல்ல முடிகிறது. மனம் அத்தகைய அலைபாயும் தன்மையுடன் இல்லாமல் இருந்தால், நாமும் வெறும் விலங்குகளாக மட்டுமே வாழ முடியும். மனம் அலைபாயும் தன்மையுடன் இல்லாமல் இருந்தால் உடல் ரீதியான நம் தேவைகளை மட்டுமே நம்மனதால் அடைய முடியும். மனதின் அலைபாயும் தன்மையின் மூலம் மட்டுமே வாழ்க்கையில் நாம் அடைந்துள்ள பல்வேறு சாத்தியங்களை அடைந்திருக்கிறோம். ஆக நம் மனதின் அலைபாயும் தன்மை, இயற்கையால் நமக்கு வழங்கப்பட்ட ஒரு வரம். எனில் அலைபாயும் நம் மனதை நாம் ஏன் வெறுக்கிறோம்?

நம் அலைபாயும் மனமே நாம் அடைந்துள்ள, அடையக்கூடிய அனைத்து சாத்தியங்களுக்கும் காரணம். இங்கு சாத்தியங்கள் என்பது, நமது இன்பங்களையும், துன்பங்களையும், ஆனந்தங்களையும் சேர்த்தே குறிக்கிறது. நாம் விழிப்புணர்வுடன் இல்லாத நிலையில், மனம் அதனைக்குறித்த பிரக்ஞ்சையுடன் இல்லாத நிலையில், அந்த மனதால் அடையக்கூடிய சாத்தியங்கள் பெரும்பாலும் துன்பத்தை நோக்கி, அல்லது துன்பத்தையும் தன்னுள் கொண்டதாகவே இருக்கும். நம் மனதே நம் துன்பங்களிற்கு காரணம் என்பதை நாம் அறியும்போது, அந்த மனதை கட்டுப்படுத்த முயலுவோம். நம் மனதை கட்டுப்படுத்த முயலும்போது, நாம் உண்மையில் விழிப்புணர்வுடன், பிரக்ஞ்சையுடன் இருக்க முயலுவோம். அவ்வாறு பிரக்ஞ்சையுடன் இருக்க இயலாத போது, நம் அலைபாயும் மனதை, அதே மனதின் மூலம் வசைபாடுவோம்.

மனம் என்பது ஒரு இருப்பு அல்ல. அது ஒரு செயல்பாடு (Process). அதாவது, நம் மூளையின் செயல்பாட்டையே நம் மனமாக நாம் உணருகிறோம். மனித மூளை அளவற்ற சாத்தியங்களை உடையது. அத்தகைய அளவற்ற சாத்தியங்களை உடைய மூளை இடைவிடமால், அந்த சாத்தியங்களை அடைவதற்கான இயக்கங்களில் இருப்பது இன்றியமையாதது. இந்த இன்றியமையாத மூளையின் இயக்கங்களே நம் அலைபாயும் மனமாக வெளிப்படுகிறது. நம் மூளை அடையக்கூடிய அனத்து விதமான சாத்தியங்களுக்கும் காரணம், அதன் பிரக்ஞ்சை என்னும் இயக்கம். நம் தற்போதைய உணர்வு நிலையில், பிரக்ஞ்சை என்பதும் மூளையின் ஒரு இயக்கம் மட்டுமே. அதாவது, பிரக்ஞ்சை என்பது நம் மனதின் ஒரு திரியே ஆகும். ஒருவேளை நம்மால் அதீத உணர்வு நிலைகளை அடைய முடிந்தால், அப்போது, பிரக்ஞ்சை என்பது நம் மனதிலிருந்து வேறுபட்ட ஒன்றாக இருந்தால், அதன் மூலத்தையும் நம்மால் அறிய முடியலாம்.

நாம் மனதை கட்டுப்படுத்த முயலும்போது அல்லது விழிப்புணர்வுடன் இருக்க முயலும்போது உண்மையில் நாம் பிரக்ஞ்சையுடன் இருக்க முயலுகிறோம். ஆனால் எண்ணங்களின் மூலம் மட்டுமே தன் இருப்பை உறுதிசெய்ய பழகிய நம் மனம், பிரக்ஞ்சையுடன் இருக்க முயலும்போது, பிரக்ஞ்சையுடன் தொடர்புடைய அல்லது பிரக்ஞ்சையை போன்ற மாய தோற்றத்தை அளிக்கும் ஒரு எண்ண அலையை உருவாக்குகிறது. பிரக்ஞ்சையை போல் தோற்றமளிக்கும் எண்ண அலை உருவான உடன் நம் பிரக்ஞ்சையை இழந்து விடுகிறோம். பிரக்ஞ்சையை போல தோற்றமளிக்கும் எண்ண அலை, தன்னை பிரக்ஞ்சையாக உருவகம் செய்து மனதின் மற்ற இயக்கங்களை மேற்பார்வை செய்ய தொடங்குகிறது. இங்கு மேற்பார்வை செய்வதும் உண்மையில் ஒரு எண்ண அலையே ஆனதால், அதன் மேற்பார்வை இயக்கம் என்பது நம் எண்ணங்களை குறித்த புது எண்ண அலைகளே. அதாவது, நாம் எண்ணங்களை குறித்து பிரக்ஞ்சையுடன் இருக்கிறோம் எனக்கருதிக்கொண்டே, அந்த எண்ணங்களை குறித்த எண்ணங்களில் நம் பிரக்ஞ்சையை இழந்து விடுகிறோம். அவ்வாறு நம் பிரக்ஞ்சையை இழந்த உடன், எண்ணங்களை மேற்பார்வை செய்வதாக உருவகிக்கப்பட்ட மன இயக்கம், மனதின் கட்டபாடற்ற தன்மையை, அலைபாயும் தன்மையை வசைபாடுவதன் மூலம் தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறது. ஆக, எண்ணங்களை கட்டுப்டுத்த முயன்ற நாம், அவற்றை கட்டுப்படுத்த இயலாததுடன், பிரக்ஞ்சை போல் தோற்றமளிக்கும் ஓர் எண்ண திரியின் மூலம், நம்மையே , நம் மனதேயே வசைபாடவும் தொடங்குகிறோம். இதன் மூலம் மனதை மேலும் அலைபாய வைக்கிறோம். ஆம் நம் மூளையின் இயக்கங்களில், குறைந்த பட்சம் தொண்ணூறு சதவிகித இயக்கங்கள், இவ்வாறான தேவையற்ற இயக்கங்களால் நிறைந்திருக்கிறது. நம்மால் உண்மையில் பிரக்ஞ்சையுடன் இருக்க முடிந்தால், இந்த தொண்ணூறு சதவிகித மன இயக்கங்களுக்கான தேவை இருக்காது. இதன் மூலம் நம் மனம் அதன் முழு சக்தியுடன் இயங்க முடியலாம்.

ஆக நம் உண்மையான பிரச்சனை அலை பாயும் மனம் அல்ல. விழிப்புணர்வுடன் அல்லது பிரக்ஞ்சையுடன் இருக்க முடியாமையே. ஆக நம் மனதின் ஆக்கமற்ற தன்மைக்காக யாரையாவது வசைபாட வேண்டுமானால், அது நம் விழிப்புணர்வற்ற தன்மையை தவிர நம் அலைபாயும் மனதை அல்ல. ஏனெனில், அதன் அலைபாயும் தன்மையின் மூலமே மனம் அதன் இயங்கு சக்தியை தக்க வைத்து கொள்கிறது. மனம் இயங்கு சக்தியுடன் இருந்தால் மட்டுமே அந்த மனதால் அடையக்கூடிய உச்ச கட்ட சாத்தியங்களை நம்மால் அடைய முடியும். நம் மனதில் பிரக்ஞ்சை  போல் தோற்றமளிக்கும் எண்ண திரி, அதன் இருப்பை உறுதி செய்ய, நம் அலை பாயும் மனதை வசைபாடுவதுடன் நிறுத்தாமல், பல கொள்கைகளை உருவாக்கிக்கொள்கிறது. நாம் பாவம் செய்தவர்கள், பல பிறவிகள் மூலம் நம் பாவங்களை இல்லாமல் செய்வதன் மூலம் மட்டுமே அலைபாயும் தன்மையற்ற மனதை அடைய முடியும், கடவுளின் கருணை மூலம் மட்டுமே அலைபாயும் தன்மையற்ற மனதை அடைய முடியும், மேலும் இதைப்போன்ற எண்ணற்ற எண்ண இயக்கங்கள். இந்த எண்ண இயக்கங்கள் மூலம் மனம் அதன் கட்டுப்பாடற்ற இயங்கும் தன்மையை உறுதி செய்து கொள்கிறது. ஆம் இந்த கட்டுப்பாடற்ற இயங்கும் தன்மையின் மூலம் மட்டுமே மனம் அதன் உச்ச கட்ட சாத்தியத்தை அடைய முடியும்.

மேலே கூறப்பட்டவை ஒன்றுக்கொன்று முரணானதாக தோன்றக்கூடும். மனம் கட்டுப்படவேண்டும், ஆனால் கட்டுப்பாடற்ற தன்மையுடன் இருக்க வேண்டும். இந்த முரண்பாட்டை கடந்து வந்தால் மட்டுமே மனதால் அதன் ஆன்மீகத்தன்மையை அடைய முடியக்கூடும். அத்தகைய கட்டுப்பாடற்ற இயக்கங்களை உடைய, ஆனால் பிரக்ஞ்சையின் கட்டுக்குள் நிற்க கூடிய மனதை எவ்வாறு அடைவது? எல்லா மதங்களின் ஆன்மீக கோட்பாடுகளும் மனதின் அந்த இயக்கங்களில் கட்டுப்பாடுகளற்ற, ஆனால் பிரக்ஞ்சையின் கட்டுக்குள் நிற்க கூடிய மனதை அடைவதற்கான வழிமுறைகளை நோக்கியே இருக்க முடியும்.

blog.change@gmail.com