Tuesday, June 5, 2012

அறிதல், அறிந்ததிலிருந்து விடுபடுதல்

மனிதனின் குறைந்தபட்ச தேவைகளுக்கான இயக்கங்களைத் தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் மனித மனதின் அறிதல் தேவைகளை சார்ந்தே இருக்கும். புகழ் அல்லது செல்வத்தை தேடும் இயக்கங்கள் கூட, அந்த புகழ் அல்லது செல்வத்தை அடையும்போது மனம் அடையும் இன்பத்தை நம் மனமே அறிவதாலும் அவ்வாறு அறிவதற்கான தேவை நம்மிடம் இருப்பதாலும் மட்டுமே நம்மிடமிருந்து வெளிப்படுகிறது. ஒருவேளை புகழ் அல்லது செல்வம் சேர்வதனால் மனம் அடையும் இன்பத்தை அறியும் தேவையை நம்மால் கடந்து செல்ல முடிந்தால், புகழ் அல்லது செல்வத்தை தேடுவதற்கான நம் இயக்கங்களையும் நம்மால் கடந்து செல்ல முடியும்.


சமூக வாழ்க்கையில் நம் குறைந்த பட்ச தேவைகளை அடைய செல்வம் இன்றியமையாதது. எனவே அந்த செல்வத்தை தேடுவதற்கான இயக்கங்களையும் நம்மால் தவிர்க்க முடியாது. அந்த இயக்கங்கள் மூலம் செல்வத்தை நாம் அடையும்போது மனம் அடையும் இன்பத்தையும் நம்மால் தவிர்க்க முடியாது. அந்த இன்பத்தை அறியும் மனம், அதையே பற்றிக்கொள்ள விரும்புகிறது, அந்த இன்பத்தை தொடர்ச்சியாக பெற்றுக்கொண்டிருக்க விரும்புகிறது. ஆனால் எந்த இன்பமும் கண நேரத்திற்கு மட்டுமே இருக்கும் – அந்த இன்பத்தை மனம் அறியும் தருணத்தில் மட்டும். மனம் தொடர்ச்சியாக அந்த இன்பத்தை பெற வேண்டுமானால், அதற்கான காரணி தொடர்ச்சியாக இருக்க வேணைடும். அதாவது, நாம் மீண்டும் மீண்டும் செல்வத்தை அடைந்து கொண்டே இருக்க வேண்டும், செல்வத்தை அடையும்போது மனம் அடையும் புளங்காகிதத்தை அந்த மனம் மீண்டும் மீண்டும் அறிந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே செல்வத்தை அடைதல் என்னும் ஒரு இயக்கத்தின் மூலம் அடைந்த இன்பத்தை அறிந்த மனம், அந்த அறிதலிலுருந்து விடுபட இயலாமல் மீண்டும் மீண்டும் அந்த இன்பத்தை அறிவதற்காக, நம் மரணம்வரை செல்வத்தின் பின்னால் நம்மை ஓட வைக்கிறது. இது எவ்வாறு நம் மனம் செல்வத்தை தேடுதல் என்னும் ஒரு இயக்கத்திற்கு அடிமையாகிறது என்பது. இதைப்போல நம் அறிவின் எல்லைக்கேற்ப நம் மனம் எண்ணற்ற இயக்கங்களின் அடிமையாக மாறி, அந்த அடிமைத் தனத்திலிருந்து விடுபட வழி தெரியாமல் அடிமைத்தனத்தையே அதன் இயங்கும் திசையாக அமைத்துக்கொண்டுள்ளது.

ஆனால் அறிவு மட்டுமே நம்மை தளைகளிலிருந்து விடுவிக்கும் ஆற்றலையம் கொண்டது – அந்த அறிவை நம் தர்க்க புத்தியின் மூலமோ, இயற்கை அல்லது உண்மை அல்லது கடவுள் என்னும் கருத்திடம் முழுமையாக சரணடைவதன் மூலமோ அல்லது நம் உணர்வுநிலைகளை உச்சத்துக்கு எடுத்துச்செல்லும் வேறு வழிகள் மூலமோ நாம் பெறலாம். ஆக அறிவே நம்மை தளைப்படுத்துகிறது. அதே அறிவே தளைகளிலிருந்து நம்மை விடுவிக்கவும் கூடியது. வெளிப்படையாக பார்த்தால் முரண்பாடாக தோன்றும் இந்த கருத்தின் யதார்த்தத்தை அறிய நம் மன இயக்கங்களை சற்று நோக்க வேண்டி இருக்கலாம். அறிவு நம்மை தளை படுத்துகிறது, எனில் அறிவை அடையாமல் இருந்தால் தளைபட வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். ஆம், அறிவை அடையாவிட்டால் தளைபட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அப்போது நாம் மனிதர்களும் இல்லை – ஓரு தளைபடாத விலங்கு மட்டுமே. அறிதலின் சாத்தியங்களே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது.

நம் சாதாரண நிலையில், எல்லா புதிய அறிதல்களும், நாம் முன்பே அறியும் ஏதேனும் ஒன்றை சார்ந்து மட்டுமே இருக்க முடியும். எனவே நமது அறிவு எப்போதுமே முழுமையானதாக இருக்க முடியாது. முழுமையான அறிவு என்பது நம் அறிதல் எப்போது நம் முன்னறிவை சார்ந்திராமல் முற்றிலும் புதிதாக இருக்க முடியுமோ அந்த அறிவு மட்டுமே ஆகும். அத்தகைய முற்றான அறிதல் நம்முள் நடைபெறும்போது, அங்கு எந்த எண்ணங்களுக்கும் இடம் இல்லை, நம் மூளையில் அடைத்து இறுக்கி வைத்திருக்கும் எந்த நினைவுகளுக்கும், தகவல்களுக்கும் தேவை இல்லை. நாம் முயன்று பெற்ற கல்விக்கும் தேவை இல்லை.

ஒரு சாதாரண சார்புநிலை அறிவு, சிறிதளவு செல்வம் நம்மிடம் சேருகிறது என நாம் அறியும் அறிவு நமக்கு மிகப்பெரிய இன்பத்தை கொடுக்கும்போது, முழு முதல் அறிவு, முழுமையான அறிவு, எதையும் சார்ந்திராத அறிவு அறியப்படும்போது நாம் அடையும் இன்பத்தை அனுமானிக்க சிறிதளவு கற்பனைத்திறனே போதுமானது. ஆம், இத்தகைய ஒரு சிறிய கற்பனைக்கான சாத்தியத்தை கூட அறியாமல் நாம் நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை வாழ்ந்து முடித்து விட்டோம். நம் மனதை நோக்கி இப்போது கூட நாம் திரும்பாமல் இருந்தால், இன்னும் சிறிது காலத்தில் இந்த கற்பனைக்கான சாத்தியத்தை கூட அறியாமல் நாம் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து இறந்து இருப்போம். இத்தகைய ஒரு சிறிய கற்பனைக்கான சாத்தியத்தை கூட அளிக்காத கல்வியை கற்று விட்டு, நாம் கற்றவர்கள் என்னும் கற்பனையில் மூழ்கியிருக்கிறோம்.

எனில், நாம் எவற்றை அறிய வேண்டும்? எந்த அறிதல்களிலிருந்து விடுபட வேண்டும்? நாம் விரும்பியவற்றை அடைந்து விட்டோம் என்னும் அறிதலே இதுவரை நாம் அடைந்த எல்லா இன்பங்களுக்குமான காரணம். அந்த அறிதல் நடைபெற்ற தருணங்கள் மட்டுமே நாம் இன்பமாக இருந்த தருணங்கள். மனிதன் விலங்கிலிருந்து வேறுபட்டிருப்பது, மனிதனிடம் உள்ள அறிதலின் சாத்தியத்தினால் மட்டுமே. எனவே மனிதனின் இயல்பு என்பது அறிதலின் இன்பத்தில் திளைத்திருப்பது. எல்லாவிதமான சார்புநிலை அறிவுகளாலும் அறியும் தருணத்தில் மட்டுமே இன்பத்தை கொடுக்க இயலும் – அடைதலை அறியும் இன்பங்களும், அடைந்ததை நுகரும்போது அறியும் இன்பமும். அறிதல் நிகழ்ந்த அடுத்த கணத்தில் அது நம் நினைவுகளாகி அறிதல் என்னும் இயக்கத்திலிருந்து விடுபட்டிருக்கும். எனவே நாம் உண்மையில் மனிதர்களாக இருக்க விரும்பினால், நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒவ்வொரு கணமும் இன்பத்தில் திளைத்திருக்கும் நிலையை நோக்கி நம் இயக்கத்தை வழிப்படுத்துவது மட்டுமே. அத்தகைய முடிவிலா இன்பத்தை, ஒவ்வொரு கணமும் அறிதல் நிகழ்ந்து கொண்டிருந்தால் மட்டுமே நம்மால் அடைய முடியும். முழுமையான அறிவை அறியம்போது மட்டுமே ஒவ்வொரு கணமும் அறிதல் புத்தம்புதியதாக எந்த சார்புநிலையும் இல்லாமல் நிகழும் சாத்தியம் உள்ளது. ஆக நாம் அறியவேண்டியதெல்லாம் அத்தகைய முழுமையான அறிவுக்கான சாத்தியங்களையும் அந்த அறிவை அடைவதற்கான வழிமுறைகளையுமே.

ஆனால் முழுமையான அறிவு என்பது, நாம் அறிந்த எந்த சாத்தியங்களுடனும் வழிமுறைகளுடனும் தொடர்பில்லாததாக மட்டுமே இருக்க முடியும். ஏனைனில் முழுமையான அறிவு முற்றிலும் சார்புநிலையற்றது. அறியும் ஒவ்வோரு கணமும் புத்தம்புதியதாக அறியப்படுவது. நாம் அறிந்த சாத்தியங்களுடனும் வழிமுறைகளுடனும் சார்ந்திருந்தால் அது சார்புநிலையற்ற அறிவாக இருக்க முடியாது. முழுமையான அறிவின் இத்தகைய சார்புநிலையற்ற தன்மையே நாம் அறிந்தவற்றிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வதற்கான தேவையை உருவாக்குகிறது. ஆம், நாம் அறிந்த அனைத்திலிருந்தும் நம்மால் விடுபட முடிந்தால் மட்டுமே முழுமையான அறிதலின் இன்பத்தில் நம்மால் திளைக்க முடியும் – நாம் அறிந்தவை வேதங்களாக இருந்தாலும், குருவின் வார்த்தைகளாக இருந்தாலும் அல்லது எந்த மூல நூல்களாக இருந்தாலும்! ஆனால் வேதங்களும், குருவின் வார்த்தைகளும் மற்ற மூல நூல்களும் நிச்சயமாக நமக்கு தேவை – முழுமையான அறிவின் சாத்தியங்களை அறிவதற்காக, அந்த சாத்தியத்தை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதற்காக! அத்தகைய சாத்தியங்களை, வழிமுறைகளை அறிந்தபின், அடைந்தபின் வேதங்களும், குருவின் வார்த்தைகளும், மற்ற மூல நூல்களும் முழுமையான அறிதலுக்கு இடைஞ்சல்களே!

blog.change@gmail.com

No comments: