Sunday, February 19, 2012

அறிதலில் மனமயக்கங்கள்

அறிதலின் சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் அறியப்படுவது ஒன்று மட்டுமே. அதுவே உண்மை. நேரடியாக அறியும்போது மட்டுமே நாம் அறிவது உண்மை. மற்ற எல்லா அறிவுகளும் மாயையே. நேரடியாக அறியாதபோது, நாம் அறிவது வெறும் எண்ணங்களை மட்டுமே. எண்ணங்கள் மூலம் பிம்பங்களை மட்டுமே அறிய முடியும். உணர்வு ஒன்றுதான் உண்மையை அடைவதற்கான வாகனம். உணர்வு மட்டும்தான் உண்மையான அநுபவம். உண்மையை உணர அல்லது அநுபவிக்க மட்டுமே முடியும். உண்மையை விளக்க முடியாது, எனவே விளங்கிக்கொள்ளவும் முடியாது – உணர மட்டுமே முடியும், உண்மையை உணர்வதே உண்மையை அறிவது.

எதற்காக உண்மையை அறிய வேண்டும்? நம் வாழ்க்கையின் எந்த கட்டத்தை எடுத்துக்கொண்டாலும் தேடுதல் மட்டுமே வாழ்க்கையை இயக்கிக்கொண்டிருக்கும். அறிவுக்கான தேடுதல், அநுபவத்திற்கான தேடுதல், பொருளுக்கான தேடுதல், புகழுக்கான தேடுதல், எதிர்காலத்திற்கான தேடுதல், இன்னும் பல. ஆனால் எப்போதுமே நம் தேடுதல் முழுமை அடைந்ததாக நாம் உணர்ந்திருக்க சாத்தியமில்லை. நாம் எப்போதாவது, முழுமை அடைய முடியாத தேடுதலின் முடிவின்மையையும், முடிவற்ற தேடுதலின் மூலம் நம் வாழ்க்கையை இழப்பதையும் அறிய நேர்ந்தால், அந்த அறிதலே உண்மையை அறிவதற்கான தூண்டுதலாக இருக்க கூடும். உண்மையை அறிவதன் மூலம் தேடுதல் என்னும் முடிவற்ற இயக்கத்தை தாண்டிச் சென்று நம் வாழ்க்கையை ஒருவேளை நம்மால் வாழ இயலலாம். ஆனால் தேடுதலின் முடிவின்மையை உணராதவரைக்கும், உண்மையை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் நமக்கு வராமல் போகலாம். அல்லது, அதுவரை உண்மையை அறிவதற்கான தேவை நமக்கு இல்லாமல் இருக்கலாம். ஆக, நம் அன்றாட தேடுதல்கள் மூலம் நாம் அடையும் அறிவான தேடுதலின் முடிவின்மை என்னும் அறிவே – அத்தகைய அறிவை அடைய நேர்ந்தால், உண்மையை நோக்கி நம் தேடுதலை திசைப்படுத்தலாம்.

ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள், அநுபவப்பூர்வமாக அடைந்த, அன்றாட தேடுதலின் முடிவின்மை குறித்த அறிவின் திசை காட்டுதல் மூலம் உண்மையைத் தேட தொடங்குவதில்லை. உண்மையை அறிய விரும்பும் நம்மில் பெரும்பாலானலவர்கள், உண்மையை அறிந்தவர்கள் உண்மையைக் குறித்து அளிக்கும் விளக்கங்களால் தூண்டப்பட்டு மட்டுமே, அவர்கள் வார்த்தையின் மேல் நாம் அடையும் நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு மட்டுமே நம் தேடுதலைத் தொடங்குகிறோம். எனவே நாம் எதைத் தேடுகிறோம் என்பதைக்கூட நாம் அறியாமலே நம் தேடுதலில் முழ்கி இருக்கலாம்.

மேலே கூறப்பட்டவைகள், ஒருவேளை நாம் ஆன்மீகத் தேடல்களில் ஈடுபட்டிருந்தால், அந்த தேடுதல்களின் வழியில் நாம் சந்திக்க நேரும் மன மயக்கங்களை குறித்த ஒரு எச்சரிக்கை மட்டுமே. ஆன்மீகத் தேடலின் வழியில் நாம் எதிர்கொள்ள நேரிடும் மன மயக்கங்களை நம்மால் அறிய முடியாவிட்டால், நம் ஆன்மீகத்தேடல் கூட நம்மை மாயையிலிருந்து மீட்க முடியாது. இதுவே, எந்த ஆன்மீகப் பயிற்சியையும் உண்மையை உணர்ந்தவர்களின் நேரடி கண்காணிப்பில் செய்ய வேண்டும் என கூறப்படுவதன் காரணம். நம்மில் பெரும்பான்மையினருக்கு அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஆனால், நம் விழிப்புணர்வையே ஆன்மீக குருவாக கொண்டு நம் ஆன்மீக பயணத்தை தொடர முடியும். அவ்வாறெனில், நம் ஆன்மீகத்தேடலை மாயையினுள் தள்ளும் மனமயக்கங்களை குறித்த குறைந்தபட்ச அறிவேனும் நிச்சயமாக நமக்கு தேவைப்படும்.

ஆன்மீகம் குறித்து பெரும்பாலும் நாம் எதுவும் உணர்ந்திருப்பது இல்லை. அதாவது ஆன்மீகம் குறித்த நம் அறிவு முழுவதும் பிறரிடமிருந்து நாம் அறிந்தவையே. பிறர் என்பது, உண்மையை உணர்ந்த ஞானிகளாகவும் இருக்கலாம், உண்மையை தேடுபவர்களாகவும் இருக்கலாம், தேடலின் மூலம் மனமயக்கங்களை அடைந்தவர்களாகவும் இருக்கலாம். நாம் அறிந்தவை, உண்மையை உணர்ந்த ஞானிகளிடமிருந்து இருந்து வந்திருந்தாலும், உண்மையை நோக்கிய தேடலில் இருப்பவர்களிடமிருந்து வந்திருந்தாலும், அந்த அறிவு நம்மை பொறுத்தவரைக்கும் வெறும் அனுமானம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அதாவது, அத்தகைய அறிவை நாம் உணரும்வரை, பிறர் வார்த்தைகளிலிருந்து நம்மால் அனுமானிக்க மட்டுமே முடியும். ஆக, நம்மில் பெரும்பாலானவர்கள், எப்போதாவது ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்தால், அது பெரும்பாலும் பிறர்வார்த்தைகள் அல்லது விளக்கங்களிலிருந்து நாம் அடைந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.

நம் மனம் அதீத சக்தியை உடையது. நாம் அறிந்திருக்கும் உலகம் முழுவதும் நம் மனதால், நம் விருப்பத்திற்கேற்ப, நமக்குள் உருவாக்கப்பட்டதே ஆகும். ஒரு அனுமானத்தை உண்மையாக கொண்டு நம் தேடுதல் பாதையை அமைத்தால், நம் மனம் அந்த அனுமானத்தையே உண்மைத் தோற்றத்துடன் நமக்கு அளிக்கும் வல்லமை உடையது – மன மயக்கத்தின் மூலம். மிகக்கூர்மையான நுண்ணறிவின் மூலம் மட்டுமே உண்மைக்கும் மனமயக்கத்திற்குமான இடைவெளியை அறிய முடியும். ஆக நம்முன் உள்ள எண்ணற்ற சான்றோர்களின் விளக்கங்களும், ஞான நூல்களும் ஆன்மீகப் பாதையில் நம்மை வழிநடத்த வேண்டுமானால், அந்த விளக்கங்களையும், நூல்களையும் அனுமானிப்பதற்கான நுண்ணறிவு நமக்குத் தேவை. அத்தகைய நுண்ணறிவு இல்லாத பட்சத்தில் ஆனமீக விளக்கங்களும், ஞான நூல்களும் நம்மை மன மயக்க நிலைக்கே எடுத்துச் செல்லும்.

எனில் நம் நுண்ணறிவை எவ்வாறு பெறுவது? அது நம் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்தது. நம் இயல்பு எவ்வாறாயினும், நம் தற்போதைய அறிதல் முறையில், நுண்ணறிவை அடைவதற்கு தர்க்க புத்தியின் தேவை இன்றியமையாததாக இருக்க கூடும். தர்க்க புத்தியின் மூலம் நாம் அறிந்தவற்றை ஆராய்ந்து, உண்மை, உண்மை அல்லாதது என அறிந்து, உண்மையற்றதை விலக்குவதன் மூலம் நம்மால் நுண்ணறிவின் இயக்கத்தை தொட முடியலாம் – வேறு வழிகள் கூட இருக்கலாம். உண்மை, உண்மை அல்லாதது என அறிய உண்மையை உணர்ந்தவர்கள், நமக்கு உதவலாம். எவ்வாறாயினும், ஆரம்ப நிலையில் உண்மையை நோக்கிய தேடுதல் எளிதானதாக இருக்க சாத்தியம் இல்லாமல் இருக்கலாம். எனில், மனித மனதால் அடைய இயலாதவை என ஒன்றும் இருக்கவும் சாத்தியமில்லை. மனித பிறவியின் சாத்தியத்தின் உச்சகட்ட ஆனந்தத்தை அடைய, அது எளிதானதாக இல்லா விட்டால் கூட, அதற்காக முயற்சிக்காமல் விடுவது, உலகம் நமக்களித்த மனிதப் பிறவி என்னும் பெரும் கொடையை வீணாக்குவதாகும். அவ்வாறு வீணாக்குவது, நாம் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், அந்த கடவுளையே அவமதிப்பதாகும் – கடவுள் கொடுத்த கொடையை வீணாக்குவதன் மூலம்!

Thursday, February 2, 2012

உணர்தல், உணர்ச்சி வசப்படுதல்

இருப்பை (existence) உணர்வதே மனம் நமக்கு அளிக்கப்பட்டிருப்பதன் நோக்கமாக இருக்க கூடும். ஆனால், இருப்பு என்பது இடைவிடாது மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் மகாப்பிரவாகம். நம் புலன்களுக்கு எட்டும் அந்த மாற்றங்களை இடைவிடாது அறிந்து அல்லது உணர்ந்து கொண்டிருப்பதே இருப்பை உணர்வது எனலாம். அத்தகைய அறிதலுக்கு மனம் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம். இயற்கையில் நடைபெறும் மாற்றங்கள், அந்த மாற்றங்கள் நடைபெறும் தருணத்திலேயே அல்லது அந்த மாற்ங்களை நம் புலன்களை வந்தடையும் தருணத்திலேயே உணர்வதே இருப்பை உணர்வதாக இருக்கலாம். இத்தகைய உணர்தலுக்கு இடைவிடாது விழிப்பு நிலையில் இருக்கும் மனம் அவசியமானது. ஆனால் நம்மில் பெரும்பான்மையினர், பல்வேறு காரணங்களால், அத்தகைய விழிப்பு நிலையில் இல்லை.

நாம் பெரும்பாலும், மிகச்சில தருணங்களைத் தவிர பெரும்பாலும் கனவு நிலையிலேயே இருக்கிறோம். அதாவது, மிகச்சில தருணங்களைத் தவிர பெரும்பாலும் நம் வாழ்க்கையை கனவிலேயே வாழ்ந்து முடிக்கிறோம். கனவு என்பது, நாம் செய்யவிரும்பிய செயல்களை நம்மால் செய்ய முடியாத பட்சத்தில், நம் மனம், நம் உறக்கத்தின்போது அந்த செயல்களை செய்து முடிப்பதாகும் (முழுச் செயல்பாட்டையும் கற்பனை என்ற உணர்வின்றி, கற்பனையிலேயே செய்து முடிப்பது). இதன் மூலம் மனம் அதன் முற்றுபெறாத விருப்பங்களின் அழுத்தங்களிலிருந்து விடுபடுகிறது. இங்கு விருப்பம் என்பது, ஆழ்மன விருப்பமாக கூட இருக்கலாம் – அவ்வாறு ஆழ்மன விருப்பமாக இருக்கும் பட்சத்தில், நம் உணர்வு நிலையில் அத்தகைய விரப்பங்களை நாம் அறிந்திருக்க சாத்தியம் இல்லை. ‘சிக்மென்ட் ஃப்ராய்ட்’ கனவுகளுக்கும் ஆழ்மன விருப்பங்களுக்குமான தொடர்பை உளவியல் ரீதியாக விளக்கியுள்ளார்.

நாம் உறங்காமல் இருக்கும்போது கூட, பெரும்பாலும் நம் புலன்களை வந்தடையும் இயற்கையின் மாற்றங்களை, புலன்கள் உணரும் தருணத்தில் மனம் உணர்வதில்லை. புலன்களின் உணர்வு, நினைவாக நம் மூளையில் சேமிக்கப் பட்டு அந்த நினைவு மீண்டும் நம் அறிவாக மீட்டெடுக்கப் படுகிறது. இவ்வாறு நினைவிலிருந்து மீட்டெடுத்து உணர்வது கனவு நிலைக்கு ஒப்பானதாகும். நம் மனதில் அலைபாபயும் எண்ணங்களைப் பொறுத்து, நினைவாக சேமிக்கப்படுவதுக்கும், அந்த நினைவு நம் அறிதலாக மாறுவதற்குமான இடைவெளி மிக குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம், அதாவது சில வினாடிகள், சில நிமிடங்கள், சில நாட்கள் கூட ஆகலாம். அந்த நினைவுகளில் பெரும்பகுதி, நம்மால் மீட்டெடுக்கப் படாமல் கூட, மனதின் அடி ஆழத்திற்கு போகலாம்.

உதாரணமாக நாம் உண்ணும் உணவின் ருசி – நம் மனதின் தற்போதைய விழிப்பு நிலையில், பெரும்பாலும் நாக்கு ருசியை உணரும் தருணத்தில், நம் மனமும் உணர்வதில்லை. நாம் ருசியை ஒப்பீடு செய்ய விரும்பினால் மட்டும், அந்த ஒப்பீட்டுக்கு தேவையான அளவு நம் நாக்கும் மனமும் ருசியின் உணர்வில் ஒத்து இருக்கும் – இதுவும், ஒப்பீடு செய்ய வேண்டும் என்னும் விழிப்புணர்வின் மூலம் மட்டுமே. மற்ற தருணங்களில் நாக்கின் உணர்வை மனம் உணர்வதில்லை – மூளை வெறும் நினைவுகளாக பதிவு செய்கிறது. அந்த நினைவுகளின் தொகுப்பே, பெரும்பாலும் ருசி என அறிவது. நாக்கு ருசியை உணரும்போது மனமும் உணருமானால், நம்மால் எப்போதுமே தேவைக்கு அதிகமாக உண்ண முடியாது – நம் முன் இருக்கும் உணவு எத்தகையதாக இருந்தாலும்! தேவைக்கு அதிகமாக உண்பதன் மூலம் ஏற்படும் நோய்களும் இருக்காது.

இன்னொரு உதாரணம் நாம் கேட்கும் இசை – ஒரு இசைத்தொகுப்பின் எல்லா துணுக்குகளையும் நம் செவி உணர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் மனம் அந்த எல்லா ஒலி அலைகளையும் உணர்வதில்லை. நம்மனம் விரும்பும் சில ஒலி அலைகளை மட்டுமே நாம் கேட்டுக்கொண்டிருப்போம் – நம் செவி, எல்லா ஒலி அலைகளையும் உணர்ந்தாலும். மனம் அதன் விருப்பத்தின் அடிப்படையில் அது கேட்க விரும்பும் ஒலி அலைகளை தேர்வு செய்வதன் மூலம், நாம் முழுமையான இசைத்தொகுப்பை அநுபவிக்கும் இன்பத்தை இழந்து விடுகிறோம். நம்மில் இசை ஆர்வமுள்ள பெரும்பாலானவர்கள், சில தருணங்களிலாவது, முழுமையான இசைத்தொகுப்பை மனதின் தெரிவின்றி முழுமையாக கேட்டிருப்போம். எனவே நாம், தெரிவு இல்லாமல் முழுமையாக இருப்பதன் இன்பத்தை சில தருணங்களிலாவது அநுபவத்திருப்போம்.

ஆக, உணர்வு என்பது மனம் அதன் அளவில், தெரிந்தோ தெரியாமலோ, எந்த வித தெரிவும் (choice) இல்லாமல் புலன்கள் உணர்வதை, எந்த விதமான மாற்றமும் இல்லாமல், உள்ளவாறே மனமும் உணர்வதாகும். மனம் இத்தகைய நிலையில் இருந்தால் மட்டுமே அன்பு, கருணை போன்ற இயல்புகள் நம்முடன் இருக்கும் எனக்கூறப்படுகிறது. அதாவது, நம் சாதாரண மன நிலையில் நாம் அன்பு, கருணை எனக்கூறுவது எல்லாம் வெறும் கற்பனைகளே அல்லது வெறும் எண்ணங்களின் தொகுப்பே – நம் மனம் இத்தகைய உணர்வு நிலையில் இல்லாமல் இருந்தால்.

நம் புலன்களின் தேவை இல்லாமல் மனம் அறியும் சில உணர்வுகள் உள்ளன - பயம், கோபம், அன்பு, கருணை, விருப்பு, பசி, பாலுணர்வு போன்றவை. இந்த உணர்வுகளுக்கும் எந்தவிதமான எண்ணங்களும் தேவை இல்லை. உதாரணமாக பசி என்னும் உணர்வு. நம் உடலின் சக்தி தேவைப்படும் தருணங்களில், நம் உடலினுள் நடைபெறும் வேதிமாற்றங்கள் மூலம் பசி என்னும் உணர்வு நம் மனதில் உருவாகிறது. நம் மனம் பசி குறித்த எண்ணங்களை உருவாக்காமல் இருந்தால், அந்த பசியால் நாம் துன்பப்படுவதில்லை. ஆனால், நமக்கு துன்பம் வாராமல் இருக்கும்வரை நாம் உணவைத் தேடி செல்லாமல் இருக்கலாம். எனவே, பசி என்னும் உணர்வுடன் எண்ணங்களையும் உருவாக்குவது, ஒரு வாழ்க்கைத் தேவையாக இருக்கலாம். ஆனால், நாம், நம் உடலுக்கு உண்மையான மரியாதையை அளிப்போமானால், பசி என்னும் உணர்வு ஏற்படும்போது, நம்மால் உடலுக்கு, உணவளிக்காமல் இருக்க முடியாது – அந்த பசியுணர்வு எந்த துன்பத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தாலும். அதாவது, நம் உடலுக்கான மரியாதை நம்மால் அளிக்கப்படும்போது, நாம் பசி குறித்த எண்ணங்களிலிருந்து விடுதலை அடைந்திருப்போம். நாம் செய்யும் சடங்குகளில் பெரும்பான்மையானவையும், நாம் கூறும் மந்திரங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளவையும், நம் உடலையும் மனதையும் போற்றுவதாகவும், அவற்றிற்கு நம் நன்றியை \ மரியாதையை தெரிவிப்பவையாகவே இருக்கம் – அந்த சடங்குகள் அல்லது மந்திர உச்சாடனத்துக்கான மன நிலையில் இருக்கும்போது மட்டும்.

நம் சாதாரண மனநிலையில், நாம் எந்த உணர்வுகளை அடைந்தாலும், அதனுடன் சேர்ந்து, மனம் எண்ணங்களையும் உருவாக்குகிறது. உணர்வுகளுடன் அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் எழும்போது, மனம் உணர்வை விட்டுவிட்டு உணர்வு சார்ந்த எண்ணங்களில் வெகு எளிதாக ஈடுபட்டு விடுகிறது. அதாவது, மனம் உணர்வுநிலையை விட்டுவிட்டு உணர்வு சார்ந்த எண்ணங்களில் நிலைபடுகிறது. மனதின் இந்த நிலைப்பாடே உணர்ச்சிவசப்படுதல் ஆகும். மனம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், உணர்வுகளை முழுவதுமாக இழந்து விடுகிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில், மனம் அந்த உணர்வுசார்ந்த எண்ணங்களிலேயே மூழ்கி, மனதில் வேறு எந்த எண்ணங்களுக்கும் அல்லது உணர்வுகளுக்கும் இடம் இல்லாமல் இருக்கலாம். இது உளவியல் ரீதியாக மிக மிக ஆபத்தான மன நிலை – இதுவே மனப்பிறழ்வுக்கு முந்தைய நிலையாக இருக்கலாம். உணர்ச்சி வசப்பட்ட நிலையில், மனப்பிறழ்வு நிலையிலிருந்து நம்மை பாதுகாக்கவே, மூளை, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, நம்மை உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்து வெளிவர உதவுகிறது.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நம் விழிப்புணர்வை இழப்பதால், அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் தவிர வேறு எந்த எண்ணங்களுக்கும் அல்லது உணர்வுகளுக்கும் மனதில் இடம் இருப்பதில்லை. அந்த நிலையில் நம் முழு உளவியல் சக்தியும் அந்த குறிப்பிட்ட உணர்வு சார்ந்த எண்ணங்களிலேயே நிலைப்பெற்றிருக்கும், முழு பொதீக சக்தியும் அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் சுட்டும் செயல்களில் மட்டுமே குவிந்திருக்கும். அந்த நிலையில் மூளையின் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது போன்ற செயல்படுகள் மூலம் மனதின் விழிப்புணர்வு திரும்பப் பெறாவிட்டால், உணர்ச்சிவசப்படுவதன் மூலம் செய்யும் செயல்களின் தீவிரம் பேரழிவைக் கூட ஏற்படுத்தலாம்.

ஆனால், இவ்வாறு உணர்ச்சி வசப்பட்ட நிலையில், நம்மால் விழிப்புணர்வை முழுமையாக திரும்பப் பெற முடியுமானால், இது நிச்சயமாக எளிதானதல்ல, அந்த உணர்வுநிலை நம்மில் மிகப்பெரிய ஆன்மீக மாற்றத்தை உருவாக்கும். அதாவது நாம் உணர்ச்சிவப்பட்டிருக்கும் நிலையில், மூளையின் சக்தியின் பெரும்பகுதி உணர்வு சார்ந்த எண்ணங்களில் நிலைபெற்று செலவாகிக் கொண்டிருக்கும். அந்நிலையில் நாம் விழிப்புணர்வை திரும்பப் பெறும்போது மனம் எண்ணங்களிலிருந்து உடனடியாக விடுபடும். அந்த நிலையில் எண்ணங்களில் செலவாகிக் கொண்டிருந்த மூளையின் குவிக்கப்பட்ட சக்தி, எண்ணங்கள் திடீரென விடுபட்ட நிலையில் மூளையின் உணர்வாக வெளிப்படலாம். இந்த உணர்வு நிலை, ஆன்மீக உச்சநிலையின் துளியாக இருக்க கூடும். இந்த ஆன்மீக உச்சத்தின் துளியை ஒருமுறை அநுபவிக்க நேர்ந்தால், அதுவே நம் ஆன்மீகப் பாதையின் தொடக்கமாக இருக்கலாம். உதாரணமாக, கோபம் என்ற உணர்வும் அதன் மூலம் உணர்ச்சிவசப்படுவதும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அன்றாட நிகழ்வாக இருக்க கூடும். அந்த உச்சகட்ட உணர்ச்சிவசப்பட்ட நிலையில், நம்மால் விழிப்புணர்வை திரும்பப்பெற்று, கோபம் என்னும் உணர்வை முழுமையாக உணர முடியுமானால், அந்த உணர்வு நம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை எற்படுத்தலாம்.

‘விக்ஞான பைரவ தந்த்ரா’ என்னும் நூல், உணர்வுகளின் மூலம் ஆன்மீக உச்ச நிலையை அடைவதை விளக்குகிறது.! பல மதங்களும் ஆன்மீக முறைகளும் புலன் உணர்வுகளை மறுப்பதை முதன்மை படுத்தும்போது, உணர்வுகளை முதன்மை படுத்துவது முரண்பாடாக தோன்றலாம். ஆனால், உண்மையில் இந்த இரண்டு முறைகளிலும் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஒரு முறையில், புலன் உணர்வுகளை மறுப்பதன் மூலம், புலன் உணர்வுகளால் தூண்டப்படும் எண்ணங்களை மனதில் இல்லாமல் செய்து ஆன்மீக அநுபவத்தை பெற முயலப்படுகிறது. இன்னொரு முறையில், உணர்வுகளை முழுமையாக உணர்வதன் மூலம் மனதில் எண்ணங்கள் உருவாகுவதற்கான இடைவெளி இல்லாமல் செய்வதன் மூலம் ஆன்மீக உச்சத்தை அடைய முயலப்படுகிறது.

பின் குறிப்பு:
விக்ஞான பைரவ தந்த்ரா’ என்னும் நூலுக்கு ஓஷோ அவர்களின் விளக்கம், இரு பகுதிகளாக இங்கு உள்ளது.
http://www.oshoworld.com/e-books/search.asp?search=Vigyan_Bhairav_Tantra&select_search=search_title