Friday, June 17, 2011

இயலாமை

நாம் அனைவரும் இயலாமை என்னும் பெரும் கட்டுக்குள் கட்டுண்டு இருக்கிறோம் – இங்கு இயலாமை என்பது தனிமனித அளவில் கூறப்படவில்லை, உலகம் முழுவதையும் ஒரே இருப்பாக காணும்போது அதில் மனிதன் என்னும் சிறு துகளின் இயலாமை!

உலகின் இயக்கம் ஒரு மாபெரும் கூட்டு நியதிக்குள் கட்டுப்பட்டிருக்கிறது. இந்த கூட்டு விதி அல்லது நியதிகளின் தொகுப்பு மகாதர்மம் என சில புத்த கலாச்சாரங்களில் கூறப்படுகிறது. இந்த விதிகளின் தொகுப்பிலிருந்து உலகத்தின் எந்த இயக்கமும் விலக முடியாது. இதே இயக்க விதிகள், உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு உயிரினத்திலும் அந்த பொருளுக்கு அல்லது உயிரினத்துக்கான தனித்தன்மையுடன் இயங்கிக் கொண்டிருக்கும். எந்த பொருளும் அல்லது உயிரினமும் அதற்கான இயக்க விதிகளிலிருந்து எவ்வகையிலும் தப்பிச் செல்ல முடியாது. ஆம், நாம் அனைவரும் நமக்கேயான இயக்க நியதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம். நமக்கேயான அந்த நியதிகளிலிருந்து விடுதலை என்பது நம்மில் எவராலும் இயலாததாகவே இருக்க கூடும். அந்த நியதிக்குட்பட்டு இயங்குவதே நமது பிறப்பின் குறிக்கோளாகவும் இருக்க கூடும்.

ஜடப் பொருட்களுக்கு, உலகத்தின் ஒருமையிலிருந்து தனிமைப் படுத்தி பார்தாலும், அவற்றின் இயக்க நியதிகள் மட்டுமே இயல்பாக இருக்க முடியும். உயிரினங்கள் ஜடப்பொருள்களிலிருந்து வேறுபடுவது, அவற்றின் தம்மைதாமே உருவாக்கும் அல்லது படைக்கும் இயல்பாகும். அதாவது, உயிரினங்கள் அவற்றின் சூழலில் இருந்து சக்தியை பெற்று, அவற்றின் அடிப்படை இயல்புக்கு ஏற்ப அந்த சக்தியை தமது இச்சைகளை செயல்படுத்த உபயோகப்படுத்துகின்றன. அதன் இச்சைகளில் மிக அடிப்படையானது இனப்பெருக்கம். இங்கு கவனிக்கப்படவேண்டியது, தனிப்பட்ட முறையில் உயிரினங்களின் இச்சைகள் அவற்றுக்கே உரியதாகவும் அவற்றால் செயல்படுத்தப்படுவதாக இருந்தாலும், அந்த உயிரினத்தின் இச்சைகள், அவை அவற்றினுள் கொண்டுள்ள வேதிப்பொருட்களின் கூட்டமைப்பை பொறுத்தே அமையும் – அவற்றின் மூளையின் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பு. இந்த வேதிக்கூட்டமைப்போ, உலகின் மகாநியதிக்கு உட்பட்டது.

மனிதனும் இந்த நியதிக்கு விலக்கல்ல. நமது உளவியல் இயல்புகளும் செயல்பாடுகளும் கூட நம் மூளையில் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பை பொறுத்தே அமையும். நம் மூளையின் கட்டமைப்பு, நாம் கருவாக உருவாகும்போதே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது – நாம் பெறும் மரபணுக்கள் மூலம்! அதாவது இந்த உலகத்தில் நாம் அடையப்போகும் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்குமான அடிப்படை இயக்க நியதிகள் நாம் கருவாக உருவெடுக்கும்போதே முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது மூளையின் வேதிக்கூட்டமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நியதிகள், நமது சுற்றுச்சூழலின் இயக்கத்துடன் சேர்ந்து இயங்கும்போது, நாம் உணரும் மகிழ்ச்சிகளாகவும் துன்பங்களாகவும் வெளிப்படுகின்றன. இங்கு நமது மகிழ்ச்சிகளுக்காகவும், துயரங்களுக்காகவும் நாம் செய்யக்கூடியது என எதுவும் இல்லை. நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பும், நமது சுற்றுச்சூழலும் அவற்றை முடிவு செய்கின்றன – நாம் வாழ தேர்ந்தெடுக்கும் சுற்றுச்சூழலையும் கூட நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பே முடிவு செய்கிறது. ஆக நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ள நியதிக்கேற்ப செயல்படுவதைத் தவிர வேறு சாத்தியங்களே நமக்கு இல்லை – மனிதனின் இயலாமையின் உச்சம்!

ஆனால், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், விடுதலை என்பதும் அதனதன் அடிப்படை இயக்க நியதியிலேயே உள்ளது எனத் தோன்றுகிறது. உதாரணமாக சூரியன் அதன் ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கும்வரைதான், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும். இன்னும் சில நூறு கோடி வருடங்களில் சூரியன் அதன் ஈர்ப்பு விசையை இழக்கும்போது, பூமியும் மற்ற கோள்களும் சூரியனிலிருந்து விடுபட்டு, அவற்றுக்கேயான வழிகளில் பயணிக்க தொடங்கலாம். இந்த விடுதலையின் நியதி, ஒவ்வொரு அணுவின் சிறு துகளுக்கும், அணுவுக்கும், பொருள்களுக்கும், உயிரினங்களுக்கும் கூட இருக்க கூடும். நமது சுற்றுப்புற இயக்கங்களை நம்மால் சற்று உற்று நோக்க இயலுமானால், ஒருவேளை நம்மால் இந்த அடிப்படை விடுதலைக்கான போராட்டத்தை உணர்ந்து கொள்ள இயலும்.
எந்த ஒரு பொருளும் அல்லது உயிரினமும், அதன் அடிப்படை இயக்கத்தையே அல்லது அடிப்படை இயல்பையே உணர்வாக (அவற்றுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால்) கொண்டிருக்குமானால், அவை மகிழ்ச்சி அல்லது துயரம் என்னும் பொறிகளில் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை. எந்த உயிரினமும் அதன் அடிப்படை இயல்புகளையே அல்லது நியதிகளையே உணர்வாக பெற்றிருக்கும்போது, அவற்றின் உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதில்லை. இந்த முரண்பாடுகளற்ற உணர்வு நிலையே ஆனந்த நிலையாக இருக்க கூடும் – அந்த உணர்வுகளின் எல்லைகளைப் பொறுத்து! மற்ற உயிரினங்களுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால், அவை அவற்றின் இயல்பையே உணர்ந்து கொண்டிருக்க கூடும் – அவற்றின் உணர்வுக்கான எல்லைவரை. அவ்வாறெனில், அவற்றின் வாழ்வில், முரண்பாடுகள் இருக்க இயலாது.

மனிதனுக்கு விடுதலையின் தேவை மிக மிக அதிகமாகவே, மனிதனுக்கான நியதிகள் மூலம், நிலைநிறுத்தப் பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இந்த விடுதலைக்கான தேவையே, மனிதனின் அடிப்படை இருப்பின் கட்டுப்பாடுகளுடன் முரண்பட்டு, நமது மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் உருவாக்குகிறது. ஆனால், நம்மால் இருப்பின் நியதிகளிலிருந்து ஒருபோதும் விலக இயலாது. எனில் விடுதலையின் குறிக்கோள் என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை, நமது இருப்பின் இயல்பை உணர்ந்து, அதன் நியதிகளை உணர்ந்து, அந்த இயல்பிற்கேற்ப, நியதிக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்து, செயல்களின் முரண்பாடுகளிலிருந்து விடுதலை பெறுவதுதான் அதன் குறிக்கோளாக இருக்கலாம். அல்லது இந்த முரண்பாடுகளை கிரியா ஊக்கிகளாகக் கொண்டு, நமது இருப்பை, அதன் மூலம் உலகத்தின் இருப்பை உணர்வதுதான் விடுதலைக்கான தேவையின் குறிக்கோளாக இருக்கலாம்.

மனித மனம் எல்லையற்ற சாத்தியங்களை உடையது – மனம், அதன் செயல்பாட்டின் எல்லைக்குள், அதற்குத் தேவையான மூளையின் கூட்டமைப்பை உருவாக்க கூடியதாகக்கூட இருக்கலாம். அவ்வாறு கூடுமெனில், அதற்கான கிரியா ஊக்கிகள், நமது சுற்றுச்சூழலிலுருந்து மட்டுமே பெற முடியும். ஆனால் அந்த கிரியா ஊக்கிகள் மூளையின் வேதிக்கட்டுமானத்துடன் வினை புரிய வேண்டுமெனிலும், மூளையின் கட்டமைப்பு அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இதிலும் நம்மால் செய்ய இயலுவதென எதுவும் இல்லை. நாம், நம் உடல் மற்றும் மூளையின் வேதிக்கூட்டமைப்பிற்கேற்ப, அந்த வேதிக்கூட்டமைப்பினால் நிலைநிறுத்தப்பட்ட நியதிகளுக்கேற்ப செயல் புரிந்து கொண்டிருக்கிறோம். அது மட்டுமே நம்மால் இயன்றது!

இந்த மகத்தான இயலாமையை நம்மால் உணர முடிந்தால், அந்த உணர்வே கிரியா ஊக்கியாக செயல்பட்டு, மூளையின் செயல்பாட்டின் ஒழுங்கு முறையையே மாற்றி அமைக்க கூடும். ஒருவேளை நம்மால் மனிதனின் இயலாமையை உணர நேர்ந்தால், மனித இனத்தின் மீது பெருங்கருணையைத் தவிர வேறு எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலாமல் போகலாம். அப்பெருங்கருணையினால், எதிரிகளையும், துன்பம் இழைப்பவர்களையும் கூட நம்மால் வெறுக்க இயலாமல் போகலாம். ஏனெனில் அவர்கள் துன்பம் இழைப்பது கூட அவர்களின் இயலாமையினால் மட்டுமே! அவர்கள் மூளையின் வேதிக்கட்டமைப்பே அதற்கு காரணம்! அவர்களோ அல்லது வேறு எவருமோ, அந்த இயல்புகளை எவ்வகையிலும் மாற்ற முடியாது.

Saturday, June 11, 2011

கலாச்சாரம், மனம்

நம் மனதின் தேவைகளே – உளவியல் மற்றும் பொருளியல் தேவைகள், நமது கலாச்சாரமாக வெளிப்படுகிறது. எனவே நமது கலாச்சாரத்தை முழுவதுமாக அறிந்து கொள்வது, நம் மனதை அறியும் முயற்சியின் திறவுகோலாக இருக்க வாய்ப்புள்ளது. ஆன்மீகம் என்பது நம்மை நாமே அறிந்து கொள்வதாகும் – அதாவது நம் மனதை அறிந்து கொள்வது. நம் மனம் என்பது, தற்போதைய உணர்வு நிலையில், நாம் மனமென அறியும் மேலோட்டமான உணர்வுகள் மட்டும் அல்ல. மனதின் உண்மையான செயல்பாடு, தற்போதைய நம் உணர்வு நிலையில், பெரும்பாலும் உள்மனம் (subconscious) ஆழ்மனம்(unconscious) பொது ஆழ்மனம்(collective unconscious) ஆகிய நிலைகளிலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கும். இடைவிடாத இயக்கத்தில் இருக்கும் மனத்தின் வெவ்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து ஒரே அறியும் மனமாக உணரும் முயற்சியே ஆன்மீகம் ஆகும். எனவே மனதின் ஆழ்மன நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கலாச்சாரத்தை குறித்து அறிந்து கொள்வது, நம் மன இயக்கத்தை அறிந்து கொள்ளும் முயற்சிக்கு உதவக் கூடும்.

நம் மனதின் கலாச்சார கூறுகள் இரண்டு வழிகளில் மனதில் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது. ஆழ்மனதின் கலாச்சாரக் கூறுகள் பெரும்பாலும் மரபணுக்கள் மூலமாக நாம் பெற்றிருக்க கூடும் – நமது வாழ்க்கையின் சூழல்கள் மூலம் நம் மனதினுள் நுழைந்து, நமது விழிப்புணர்வின்மையின் காரணமாக ஆழ்மனதினுள் சேர்ந்து விட்ட கூறுகள் தவிர. இரண்டாவதாக, நாம் வாழும் சூழலில் நாம் சார்ந்திருக்கும் மற்றும் நம்மை சார்ந்திருப்பவர்களிடம் கொண்டிருக்குமு உறவுகளின் இயக்கங்கள் மூலமாகவும் கலாச்சாரம் நம் மனதினுள் நுழைகிறது – இது மிகவும் வெளிப்படை. கலாச்சாரம் பெரும்பாலும் நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலமே நிலைநிறுத்தப்படுகிறது. இந்த நம்பிக்கைகளும், நம்பிக்கை சார்ந்த சடங்குகளும் கட்டுப்பாடுகளும், மனதின் இயக்கத்தைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் நம்முடைய மனதின் செயல்களை ஒரு வரையறைக்குள் இருக்கச்செய்து, நாம் வாழும் சூழலின் சமன்நிலைத்தன்மை குலையாமல் இருக்க உதவுகிறது

ஆக, கலாச்சாரம் நம்மை கட்டுப்படுத்துகிறது. நம் மனதின் இயங்கு சக்தியை கட்டுப்படுத்துகிறது. மனம் அதன் எல்லைகளை அடையவிடாமல் செய்கிறது. அதாவது, கலாச்சாரம் நம் விடுதலையை பறிக்கிறது. ஆனால், நம் சுதந்திரத்திற்காக கலாச்சாரத்தை புறந்தள்ளி நாம் சுதந்திரம் என கருதுவதை நிலைநாட்டினால், நாமே நமது சமுதாய அழிவிற்கு மூல காரணி ஆகி விடுவோம் அல்லது சமூகத்தால் அழிக்கப்பட்டு விடுவோம். இங்குதான் ஆன்மீகம் நமக்கு தேவைப்படுகிறது. நாம் கலாச்சாரத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். அதே நேரத்தில் அந்த விடுதலை மற்றவர்களின் அல்லது நமது அழிவுக்கும் காரணமாகக் கூடாது. இங்கு விடுதலை என்பது கலாச்சாரத்திற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரம் அல்ல, நமக்கு தேவையானவற்றைச் செய்ய கலாச்சாரம் தடையாக இல்லாமல் இருப்பது மட்டுமே.

இதற்கு ஒரே வழி, கலாச்சாரத்தை நம் மனம் கடந்து செல்வதேயாகும் – கலாச்சாரத்தை ஒதுக்கி புறந்தள்ளுவதாக இருக்க முடியாது. கலாச்சாரத்தை அறிந்து கொள்வதன் மூலமே நம்மால் கலாச்சாரத்தைத் கடந்து செல்ல முடியும். அவ்வாறு, கலாச்சாரத்தை அறிந்து, அதை கடந்து செல்லும்போது நம் எந்த செயலும், அந்த கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் சமூகத்தினுள் எந்த விதமான எதிர்மறை சலனங்களையும் ஏற்ப்படுத்தாது. நமது வாழ்க்கையிலும் எதிர்மறை சலனங்களை உருவாக்காது. இத்தகைய வாழ்க்கையே ஆன்மீக வாழ்க்கை!

Wednesday, June 8, 2011

கலாச்சாரம்

கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை இயங்கு சக்தி. இது அந்த சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் மற்ற உறுப்பினர்களுடனும், தங்கள் தேவைகளுடனும் ஆன உறவு அல்லது தொடர்புகளின் வலைப்பின்னலே. பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது இல்லாமல் எந்த சமூகமும் இருக்க முடியாது. ஒரு கலாச்சாரத்தின் சில கூறுகள் மற்ற கலாச்சாரங்களிலும் ஏற்றுகொள்ளப்பட்டவைகளாக இருக்கலாம். மற்ற சில கூறுகள் விலக்கப்பட்டவைகளாகவும் இருக்கலாம். இந்த ஏற்றுகொள்ளப்பட்ட அல்லது விலக்கப்பட்ட கூறுகள், அந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் இயங்கும் சமூகத்தின் பொருளியல் மற்றும் உளவியல் தேவைகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும்.

ஆக, ஒரு பண்பாடு அல்லது கலாச்சாரத்தின் அடிப்படை இயங்கு முறை, அந்த சமூக உறுப்பினர்களின் பொருளியல், உளவியல் தேவைகளை பொறுத்தே அமையும். ஒரு கலாச்சாரத்தின் பொருளியல் கூறுகளை அறிந்து கொள்ள, அந்த சமூகத்தில் நிகழ்பெறும் வெளிப்படையான நிகழ்வுகளை உணர்ந்து கொள்ளும் குறைந்த பட்ச நுண்ணறிவே போதுமானது. ஆனால் உளவியல் தேவைகளை அவ்வாறு எளிதில் வரையறுத்து கொள்ள முடியாது. தனிமனித அளவிலும், சமூக அளவிலும் உளவியல் தேவைகள் மிக, மிக விரிவானவை. மேலும் இந்த உளவியல் தேவைகள் ஒவ்வொரு கணமும் மாறும் இயல்புடையது. அவ்வாறு மாறிக்கொண்டிருக்கும் உளவியல் தேவைகள், ஒரு குறிப்பிட்ட எல்லையை விட்டு மிக வேகமாக விரியும்போது அல்லது சுருங்கும்போது, அந்த சமூகம் அதன் கட்டுக்கோப்பை இழக்க நேரிடும். கட்டுக்கோப்பை இழந்த சமூகத்தின் அங்கத்தினர்களின் உளவியல் உறவுகள் அல்லது தொடர்புகளின் முரண்பாடுகள் சமன்நிலையை இழந்து அந்த சமூகத்தை அழிவுக்கு எடுத்துச்செல்லும்.

ஆக ஒரு சமூகம் அதன் இருப்பை உறுதி செய்ய, அதன் அங்கத்தினர்களின் உளவியல் வீச்சின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டியது அவசியமாகிறது. பண்பாடு அல்லது கலாச்சாரம் எனப்படுவது இந்த உளவியல் வீச்சின் வரையறைகளையே. அதாவது, கலாச்சாரம் என்பது சமூகத்தின் அங்கத்தினர் இடையே உள்ள உளவியல் உறவுகள் அல்லது தொடர்புகளின் வரையறை. இந்த உளவியல் வரையறைகள் நம்பிக்கைகள், சடங்குகள், குடும்ப உறவுகள் போன்றவை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, சமூகத்தின் உளவியல் தேவைகள் பொருளியல் கூறுகளின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் இருப்பு மற்றும் பாதுகாப்பு கலாச்சாரத்தின் மூலமே நிலை நிறுத்தப்படுகிறது. சமூக அங்கத்தினர்கள் கலாச்சாரத்தின் எல்லைகளை மீறும்போது கலாச்சாரம் அழிவதுடன் அந்த கலாச்சாரத்தால் நிலைநிறுத்தப்பட்ட சமூகமும் அழியத்தொடங்கும். எனவே சமூக அமைப்புக்குள் வாழும் எந்த மனிதனுக்கும், அந்த கலாச்சாரத்தை குறித்த குறைந்த பட்ச அறிவு மிக மிக அவசியம். இது தனி மனித தேவை மட்டும் அல்ல, அந்த சமுதாயத்தின் தேவை – சமுதாயம் அதன் உளவியல் தேவைகளை சமன் நிலையில் வைத்துக்கொள்வதற்காக. ஆனால் கலாச்சாரம் மாறாத ஒன்று அல்ல. காலம் செல்லும்தோறும், காலத்தின் தேவைக்கேற்ப, இயற்கையான சுற்றுச்சூழல் மாறுதலுக்கேற்ப, கலாச்சாரம் விரிவடைந்து கொண்டே செல்லும். அந்த விரிவு, கலாச்சாரத்தின் நிறுவப்பட்டுள்ள வரையறைகளை ஒட்டியே இருக்க முடியும். மேலும் அந்த கலாச்சார விரிவு, அந்த சமூகத்தில் தோன்றும் சிந்தனையாளர்கள் மற்றும் சமூகப்போராளிகள் மூலமும் முன் எடுத்துச் செல்லப்படலாம்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது, இந்த சிந்தனையாளர்களும் சமூகப்போராளிகளும், புதிய கலாச்சார விரிவுகளை, ஏற்றக்கொள்ளப்பட்ட கலாச்சார எல்லைகளை சார்ந்தே முன்னெடுத்து செல்ல முடியும். இவர்கள் அந்த கலாச்சாரத்தை குறித்த அதிகபட்ச அறிவும் நுண்ணுணர்வும் உடையவர்களாகவே இருக்க முடியும். ஒரு கலாச்சார கூறுகளை எற்றுக்கொள்ளாமல், அந்த கலாச்சார விரிவுகளை ஒருவர் முன்னெடுத்துச்செல்ல முடியாது. அவ்வாறு செல்ல நேர்ந்தால், அது அந்த கலாச்சார அழிவுக்கு வழிவகுக்கும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, கலாச்சாரம் பல பல தலைமுறைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று. அதன் அழிவையும் ஒரே தலைமுறைக் காலத்தில் காண முடியாது. ஆகவே கலாச்சாரத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் அக்கலாச்சாரத்தின் அழிவை அறிந்து கொள்ள முடியாது. எனவே கலாச்சார போராளிகள் என்னும் அறைகூவல் பெரும்பாலும் எவ்வாறு வெறும் மேலோட்டமாக இருக்குமோ, அதேபோல கலாச்சார அழிவு என்னும் கதறலும் பெரும்பாலும் மேலோட்டமாகவே இருக்கும்.

ஆனால், கலாச்சார விரிவுக்கான தூண்டுதல் எப்போது தோன்றுனாலும், அதற்கான எதிர்மறை இயக்கமும் உடனே தோன்றும். இந்த முரண்பாடுகள் ஒன்றாக சேர்ந்து இயங்கி, அந்த கலாச்சாரத்தை சமன்நிலையில் இருக்கச் செய்யும். ஆகவே, அந்த சமூகமும், கலாச்சார நகர்வை எடுத்துச் செல்லும் சிந்தனையாளர்களும், சமூகப் போராளிகளும் சில அடிப்படை தகுதிகளை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, சமூகத்தின் சமன்நிலை குலையாமல் கலாச்சார முன் நகர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த அடிப்படை தகுதி, கலாச்சாரத்தை முன் எடுத்துச் செல்லும் முயற்சியினால் உருவாக்கப்படும் முரண்பாடுகளை நேர்மையுடன் எதிர்கொள்ளும் உறுதியே.

கலாச்சாரம் சமன்நிலையில் இருப்பது என்பது, ஒரு சமூகத்தினுள் நிகழும் பொருளியல் மற்றும் உளவியல் முரண்பாடுகள் அந்த சமூகத்தின் இயல்பு இயக்கத்தை பாதிக்காமல் இருப்பதாகும். கலாச்சார மாற்றங்கள் கூட அந்த சமூகத்தின் இயல்பு இயக்கத்தை பாதிக்காதவரைதான் அந்த கலாச்சார மாற்றத்தை கலாச்சார முன் நகர்வாக கருத முடியும். ஒருவேளை அந்த கலாச்சார மாற்றம், சமூக இயக்கத்தின் இயல்புத் தன்மையை குலைத்தால் அது கலாச்சார முன் நகர்வாக இருக்க முடியாது. மாறாக அது கலாச்சார அழிவின் அறிகுறியாகவே இருக்க முடியும்.