Monday, March 20, 2017

அபத்தங்கள்

18-03-2017 அன்று சிறகு இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது....
சுற்றிலும் தினம் தோறும் நிகழும் நிகழ்வுகளில் பெரும்பான்மையினரின் கவனத்தைப் பெறும் நிகழ்வுகள், நிகழ்வுகளின் உச்சங்களா அல்லது வெறும் அபத்தங்களா? ஒருவித மனநிலையில் இருக்கும்போது உச்சங்களாகத் தோன்றும் அதே நிகழ்வுகள் இன்னொரு மனநிலையில் அபத்தங்களாகத் தோன்றுகிறது. இதில் எது காட்சிப் பிழை? அல்லது இரண்டுமே காட்சிப் பிழைகளா? எனில் உண்மைதான் என்ன? உண்மையை அறிய முடியுமா?
சமூகத்தின் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு, அவர்கள் வெறுமனே உணர்ச்சிவசப்பட வைக்கப்படுகிறார்கள். சிந்தனையின் அடிப்படையின்றி உணர்ச்சிவசப்பட வைக்கப்பட்ட சமூக மக்கள், அவர்கள் கண்ணுக்குத் தெரியாத ஆனால் அடிப்படையில் அவர்கள் யாரை எதிர்க்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு சாதகமான வழிகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள். உணர்ச்சிவசப்பட வைத்த சமூக விரோதிகள், லாபத்தை அள்ளிச் செல்கிறார்கள். சமூகம் அடுத்த உணர்சிவசப்படுதலுக்கு தயாராக நின்று கொண்டிருக்கிறது.
பொங்கல் பண்டிகை காலத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான உணர்ச்சிவசப்படல் இந்த வருடத்தின் மாபெரும் நிகழ்வாக தமிழ்நாட்டில் நிலைப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வருடத்தில் இன்னும் பத்து மாதங்கள் இருக்கின்றன. இதைவிட வலுவான உணர்ச்சிவசப்படலுக்கான சாத்தியங்கள் இன்னும் வலுவாகவே உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லாபத்தை அள்ள காத்திருந்தவர்கள் லாபம் வரும்வரை சற்றே ஒதுங்கியிருந்ததால் கிடைத்த வெற்றியின் காரணமாக கொந்தளித்த உணர்ச்சிகளினால் ஆட்கொள்ளப்பட்ட சமூகம் சற்றே ஊக்கத்துடன் உள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வரும் பிறவற்றிற்கான எதிர்ப்புக் குரல்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. அந்த ஊக்கம் வெற்றி தோல்விகளைக் கடந்து தொடர வேண்டும் என்பதே என் ஆசை.
ஆனால் அது வெறும் உணர்ச்சிவசப்படுதலாக மட்டும் இருக்கக் கூடாது. உணர்ச்சிவசப்படும் இடங்களில் சிந்தனை இருக்க வாய்ப்பில்லை. சிந்திக்காமல் ஈடுபடும் செயல் உண்மையில் அதில் ஈடுபடுபவரின் செயலல்ல. அதை செய்யத் தூண்டியவர்களின் செயல். அதாவது ஒருசிலர் அல்லது ஒரு கூட்டம், சமூகத்தை உணர்ச்சிவசப்பட வைத்து, அவர்களைத் தூண்டி செயல்பட வைத்து அதன் மூலம் அந்தக்கூட்டம் பயனை அறுவடை செய்து சென்று விடுகிறது. சமூகமோ தாங்கள் வெற்றிபெற்று விட்டதான மாயையில் விழுந்து அந்த வெற்றியை கொண்டாடிச் செல்கிறது. கொண்டாட்டத்திற்குப் பின் சமூகம் தன் செயலின் காரணத்தையோ அதன் உண்மையான விளைவுகளையோ மறந்து விட்டு அடுத்த உணர்ச்சிவசப்படுதலையும் அடுத்த கொண்டாட்டத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. உணர்ச்சிவசப்பட வைக்கும் கூட்டம், அடுத்த தருணத்திற்கு காத்திருக்கிறது.
மிக சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்தப் போராட்டத்தில், விதிவிலக்காக சிலர் சமூகத்தின் சிந்தனையை தூண்ட முயற்சித்திருந்தார்கள். மிகமிகக் குறைவான எண்ணிக்கையிலானவர்களே அந்த சிந்தனைகளால் உண்மையில் தூண்டப்பட்டிருந்தார்கள். எப்போதும் போல பெரும்பான்மையானவர்கள் தமிழனின் பராம்பரியம் போன்ற சொல்லாடல்களால் உணர்ச்சிவசப்பட்டு அப்போராட்டத்தில் கலந்து கொண்டார்களே தவிர, சிந்தனைகளால் தூண்டப்பட்டு கலந்து கொள்ளவில்லை. உண்மையாக போராடியவர்கள் பல ஆண்டுகளாக அவர்கள் நம்பும் இலட்சியத்திற்காக போரடி வருகிறார்கள், விழிப்புணர்வுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் செயலில் இன்னும் தொடர்கிறார்கள். ஆனால் உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் சில நாட்கள் கொண்டாட்டம் முடிந்த பின் அதை மறந்து விட்டு அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டது. மாடு என்னும் உயிரினத்தை முகச்சுழிப்புடன் மட்டும் எதிர் கொள்ளும் ஒரு கூட்டம் அந்தப் போராட்டத்தின் போது ''ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாடு வளர்ப்போம்'' என முழங்கியதை கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மட்டும் எடுத்து, கொண்டாடி முடித்துச் சென்று விட்டது.
சிந்திப்பவர்கள் மட்டும், அவர்களின் சிந்தனைகள் சார்ந்து போராட வேண்டும் என்றால், இன்றைய நிலையில் எந்தப் போராட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. ஏனெனில் சமூகத்தில் உண்மையான சிந்தனை என ஒன்று பெரும்பாலும் இல்லை. இன்று சிந்தனை எனப்படுவது பெரும்பாலும் குறுகலாக்கப்பட்ட எண்ணங்களே. ஒரு  குறிப்பிட்ட கருத்துக்கு ஆதரவான தரவுகளை மட்டும் அளித்த, அதற்கு எதிரான தரவுகளை சென்று சேராதவாறு சூழல்களை அமைத்து, குறிப்பிட்ட திசையில் மட்டும் எண்ணங்கள் உருவாகுமாறு செய்து சிலர் தயாரிக்கப்படுகிறார்கள். அவர்களால் எதிர்திசையிலிருந்து வரும் சிந்தனைகளை எவ்வகையிலும் கணக்கில் கொள்ள முடியாது. ஆக தங்களின் திசையில் சமரசம் இன்றி, சமரசத்திற்கான வாய்ப்புகளை கணக்கில் கொள்ளாமல் மிகப்பிடிவாதமாக சென்று கொண்டிருப்பார்கள். இத்தகைய சமரசம் இல்லாத ஒற்றை நோக்குடையவர்களே தீவிரவாதிகள் எனப்படுகிறார்கள். இன்று தமிழகத்தில் இத்தகைய தீவிரவாதிகள் மலிந்து விட்டதாக தோன்றுகிறது. அவர்கள் கையில் ஆயுதம் கிடைக்குமென்றால் பயங்கரவாதத்தின் இருப்பிடமாக தமிழகம் மாறிவிடவும் கூடும்!
எதிர்பாரத இடங்களிலிருந்தெல்லாம் ''தமிழ் தேசியம்'' என்னும் குரல் கேட்பதாகத் தோன்றுகிறது. இது நெடுங்காலமாக இருந்து வரும் குரலாக இருந்தாலும், இன்று இது ஒலிக்கும் இடங்கள் அச்சமளிப்பதாக இருக்கிறது. இந்தியா தமிழகத்தை சுரண்டுவதாக அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அரசியல்வாதிகளால் அரசியல்வாதிகளுக்காக உருவாக்கப்பட்டு பாராமரிக்கப்படும் காவிரிப் பிரச்சினைகளும், முல்லைப் பெரியாறு பிரச்சினைகளும் இவர்களுக்கு தமிழகம் சுரண்டப்படுவதான தோற்றத்தை அளிக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் முன்னேறிய மாநிலங்களின் ஒன்று தமிழகம் என்பது இவர்கள் சிந்தனையை எட்டாமல்  சென்றுவிடுகிறது. பல்வேறு விசைகளால் இயல்பாக எழும் ஒவ்வொரு பிரச்சினைகளையும், அதன் காரணகாரியங்கள் இவர்கள் சிந்தனைக்குள் செல்ல விடாமல், தமிழகம் சுரண்டப்படுகிறது என்னும் ஒற்றை எண்ணத்தை வலுவாக்க உபயோகப்படுத்துகிறார்கள்.
உலகம் முழுவதும் உருவாக்கப்படும் பிரிவினைப் போராட்டங்களுக்கு அடிநாதமாக இருப்பவர்களே இவர்களின் எண்ணங்களை இவர்கள் அறியாமலே உருவாக்குகிறார்கள் என்பது இவர்கள் அறிவுக்குள் நுழைவதே இல்லை. பிரிவினைப்போராட்டங்களால் ஆதாயமடைபவர்கள் வேறு எங்கோ இருந்து இவர்களை ஆட்டிவைக்கிறார்கள் என்பதும், பிரிவினைக்கான போராட்டங்களால் அழியப்போவது இவர்களே என்பதும், ஒருவேளை பிரிந்து சென்றாலும் அதன் மூலம் அடையப்போவது மேலும் துன்பங்களே என்பதும் இவர்களின் எண்ணங்களில் நுழைவதே இல்லை. உலகம் முழுவதும் பிரிவினைப் போராட்டங்களால் அழிந்து ஒழியும் அப்பாவி மக்களின் துயரங்கள் இவர்கள் நெஞ்சங்களை அடைவதே இல்லை. பிரிவினை எண்ணங்களை தூண்டி விடுது மட்டும்தானே இவர்கள் வேலை. அதனால் யார் அழிந்தால் இவர்களுக்கென்ன? எங்கோ இருந்து கொண்டு வெறும் தூண்டிவிடுதல்களை, அவர்களே அறிந்திருக்காத வேறு யாருக்காகவோ, செய்து  கொண்டிருக்கிறார்கள்.
தலிபான்கள் யாரால் எதற்காக உருவாக்கப்பட்டார்கள்? தலிபான்களின் வன்முறைகளால் உண்மையில் இழப்பை அடைந்தவர்கள் யார்? ருவாண்டா படுகொலைகளுக்குக் காரணமான பிரிவினை எண்ணங்களை தோற்றுவித்தவர்கள் யார்? எதற்காக தோற்றுவித்தார்கள்? இறுதியில் செத்தழிந்தவர்கள் யார்? நைஜீரியாவில் தற்போது யார் பிரிவினை எண்ணங்களை ஊதிப் பெருக்குகிறார்கள்? எதற்காக? பாதிக்கப்படுவது யார்? வெளியிடங்களில் ஏன் பார்க்க வேண்டும். காஷ்மீரில் இன்றைய அமைதியின்மை யாரால் எதற்காக உரமிட்டு வளர்க்கப்படுகிறது? இந்தியாவின் வடகிழக்கில் பிரிவினைப் போராட்டங்களும் வன்முறைகளும் எதற்காக யாரால் வளர்த்து விடப்படுகிறது? அவற்றால் உண்மையில் பாதிக்கப்படுபவர்கள் யார்? இவை எதுவும் இன்றைய தமிழ் தேசியம் பேசுபவர்களின் சிந்தனைக்குள் நுழைவதில்லை. அவர்கள் எண்ணங்கள் யாரால் எதற்காக உருவாக்கப்படுகின்றன என்பதையும் அறிந்திருப்பதில்லை. தங்களை அனைத்தும் அறிந்தவர்களாக கருதிக்கொண்டு, அந்த ஆணவத்தில் தங்களின் எதிர்கால சந்ததிகளின் மேல், தங்களை அறியாமலே, தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு உதாரணம். தமிழகத்தில் இன்று உயர்படிப்புகளுக்கான நுழைவத் தேர்வு குறித்து எழும் எதிர்ப்பு மனநிலை. மிக எளிதாக சமூகத்தை உணர்ச்சிவசப்பட வைக்க முடிகிறது. ''நுழைவுத் தேர்வு கிராமத்து மாணவர்களைப் பாதிக்கும்.'' இந்த ஒற்றை வரியால் தமிழகத்தை உணர்ச்சிவசப்பட வைக்க முடிகிறது. தமிழகத்தில் 2006-07 ம் வருடத்திலிருந்து நுழைவத் தேர்வுகள் நீக்கப்பட்டன. அதன் பின் நுழைவுத் தேர்வு இல்லாத 2009-10 ம் வருடத்திலிருந்து சென்ற வருடம்வரையான எட்டு வருடங்களில் வெறும் 278 பேர்தான் அரசுப் பள்ளிகளிலிருந்து மருத்துவப்படிப்புக்கு சேர்ந்திருக்கிறார்கள். அதாவது நுழைவுத் தேர்வு இல்லாத இந்த காலகட்டத்தில் 1% க்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்கள்தான் மருத்துவப் படிப்புக்குள் நுழைய முடிந்திருக்கிறது. எனில் நுழைவுத் தேர்வுகள் இல்லாமல் கிராமத்து மாணவர்களுக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை நுழைவுத்தேர்வுகள் இருந்திருந்தால், நிச்சயமாக இதைவிட அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு சேர்ந்திருக்க முடியும்.
''கிராமத்து மாணவர்களின் வாய்ப்பு'' என உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு உண்மையில் அவர்கள் யாருக்காக பேசுகிறார்கள் என்பது புரிகறதா? தனியார் பள்ளிகளின் கொள்ளைகளுக்கும், கல்வித் தந்தைகளின் அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களின் பெரும்பான்மையினர் எதிர்க்க விரும்புவதும் தனியார் பள்ளிகளின் கொள்ளையையும் கல்வித்தந்தைகளின் அடாவடிகளையும்தான். சுய சிந்தனையற்ற உணர்ச்சிவசப்படல்கள் உண்மையில் தாங்கள் எதிர்ப்பவர்களுக்கு சாதமாகவே வெளிப்படுகிறது.
எனில் சமூகத்தின் பெரும்பான்மை சுயசிந்தனையுடன் செயல்பட்டால் சமூகப்போராட்டங்கள் சரியான திசையில் செல்லுமா? அதுவும் சந்தேகம்தான். ஏனெனில் எந்த இருவரின் சுய சிந்தனைகளும் ஒரே திசையில் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. எனவே சமூகப்போராட்ங்கள் உணர்ச்சிவசப்படல்கள் இல்லாமல் முன்னோக்கி செல்வதற்கான வாய்ப்புகளும் குறைவே. ஆனால் சுயசிந்தனையுடன் இலட்சியவாதத்தையும் கொண்டிருக்கக்  கூடிய தலைவர்கள் உருவாகிவந்தால் போராட்டங்களில் சமரசங்களின் தேவைகளையும் உணர்ந்த தலைவர்கள் பெருகினால் ஒருவேளை உணர்ச்சிவசப்படுதலை சரியான திசையில் செலுத்த முடியலாம். தலைவர்கள் இல்லாத காலத்தில், அல்லது அனைவரும் தலைவர்களாக இருக்கும் காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். வெறும் உணர்ச்சிவசப்பட வைப்பவர்களின் விளையாட்டுப் பொம்மைகளாக போரடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிகழ்வுகளை அவற்றுடன் ஒன்றி கவனித்தால் அனைத்தும் அபத்தமாகத் தோன்றுகின்றன. ஆனால் அவற்றிலிருந்து சற்றே விலகி நின்று பார்க்கும் மனம் வாய்த்தால், மிக அழகான நாடகம் கண்முன் விரிகிறது. தினம் தோறும் மெருகேறிக் கொண்டிருக்கும் நாடகம்!
blog.change@gmail.com

No comments: