Sunday, March 19, 2017

பண்பாட்டு அறிதல்களில் தொடர்ச்சி

13-01-2017 அன்று சிறகு இணையப்பத்திரிகையில் பதிப்பிக்கப்பட்டது.
மானுட அறிதல் ஒரு தொடர் செயல்பாடு. பிற மனிதர்கள் அறிந்தவற்றை கற்றுக் கொள்ளும் திறனை பெற்றிருப்பதால்தான் மானுட சமூகம், பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு,  அறிவு செயல் வளர்ச்சிகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இன்றைய தனி மனிதன் அறிந்திருப்பது அனைத்தும் முன்னோர்கள் அறிந்தவற்றின் ஒரு துளி மாத்திரமே. முன்னோர்கள் என்பது, மானுட சமூகத்தின் மொத்த முந்தைய தலைமுறைகள் அனைத்தையும் இங்கு குறிக்கிறது. இக்காலத்தில் புதியதாக எதையாவது அறிகிறோமானால், அது முன்னோர்கள் அறிந்தவற்றை மேடையாக்கி, அதன் மேல் நின்றுகொண்டுதான் அறிகிறோம். ஆனால் அத்தகயை புதிய அறிதல்கள் நிகழ்வது மிகவும் அபூர்வமே. அதாவது, நாம் தனிமனிதர்கள் அறிந்தவை எனக் கூறுபவற்றில் பெரும்பான்மையானவை முன்னோர்களின் சுய தேடுதலால் தங்கள் உயிரை எரித்து அடைந்த ஒளியில் அறிந்தவைகளின் சில துளிகளே. அவர்கள் அளித்த அறிவுக்காக, நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அத்தகைய அறிதலின் தொடர்ச்சி மானுட இயல்பு. ஆனால், தங்கள் அறிவு முன்னோர்களின் கொடையே என அறியும் மனம், அறிதலில் அடுத்த பாய்ச்சலுக்கான ஏவுதளம். அத்தகைய மனம், முன்னோர்களின் அறிதலை அதற்கான மரியாதையுடனும் எனவே புதிய அறிதலுக்கான விழிப்புடனும் அணுகும்.
பண்பாடுகளில் வேண்டாததென எதுவும் இல்லை. பண்பாட்டின் ஒரு காலகட்டத்தில், ஒரு சமூகச் சூழலில் அப்பண்பாடு முன்பே கொண்டிருந்தவற்றில் சில கூறுகள் பிற்காலங்களில் தேவைப்படாமல் மாறிவிடலாம். புதிய கூறுகள் உருவாகி வரலாம். ஆனால் அக்காலத்தில் தேவையில்லாததாக மாறும் கூறுகளும், அதே பண்பாட்டில் முன்னொரு காலச் சூழலில் தேவைப்பட்டிருக்கலாம். அந்தக் கூறுகள் இருந்த பண்பாட்டுச் சூழலை முழுவதும் புரிந்துக் கொள்ளாமல், இன்றைய சூழலின் பின்புலத்தில் அக்கூறுகளை மதிப்பிடுவது தவறான முடிவுகளையை அளிக்கும். சில பண்பாட்டுக் கூறுகள், அவற்றின் தேவைகள் அழிந்த பின்பும் தொடர்ந்து பலவந்தமாக நிலைநிறுத்தப்பட்டிருந்தன என்பதும் உண்மையே - ஆனாலும் அத்தகைய தேவையற்ற கூறுகள் காலப்போக்கில் விலகிவிடும்.
துரதிர்ஷ்டவசமாக, குறைந்தது நான்காயிரம் ஆண்டுகள் பழமையுள்ள இந்தியப் பண்பாட்டின் கூறுகளை, இன்றைய இந்தியாவின் சமூகப்பின்புலத்தில் ஒப்பிட்டு அவற்றை இழிவுகளாகக் காட்டுவது, இன்றைய ''அரசியல் சரி'' (Politicaly Right) நிலைப்பாடாக பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய சமூகத்தில் மிகச் சரியானவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளே இன்றைய சமூகத்தில் தேவையற்றதாக மாறியிருப்பதை நம் தலைமுறையிலேயே கண்கூடாக காண்கிறோம். இருந்தாலும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்பாட்டுக்கூறுகளை இன்றைய சமூகநிலையுடன் ஒப்பிட்டு அதற்கேற்ற நிலைப்பாடுகளை எடுக்கும் அறிவுஜீவிகளை எவ்வித கேள்வியும்  கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் நிலையிலேயே இன்றைய சமூகம் மாறியிருக்கிறது.
எங்கு தவறு நிகழ்ந்திருக்கிறது? தவறெனில் சரி செய்ய முடியுமா? சமூக அறிதலின் தொடர்ச்சி விடுபட்டுவிட்டது. அவற்றுக்கும் சமூக இயக்கங்களே காரணமாயிருந்திருக்கலாம். சமூக அறிதலில் தொடர்ச்சி விடுபட்டிருந்தாலும், சமூக இயக்கத்தில் தொடர்ச்சி நிச்சயமாக விடுபட்டிருக்க முடியாது, சமூக இயக்கத்தில் தொடர்ச்சி விடுபட்டிருந்தால், அது பண்டைய சமூகமும் அதன் பண்பாடும் அழிந்து முற்றிலும் புதிய சமூகம் புதிய பண்பாட்டுடன் உருவாவதாகும். இந்தியாவில் உண்மையாக அவ்வாறு நிகழவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வெளியிலிருந்து இங்கு வந்த சில பண்பாடுகளுடன், பல்வேறு காரணங்களால் - தங்கள் தேடுதலாலோ அல்லது நிர்ப்பந்தங்களாலோ; தங்களை இணைத்துக் கொண்டவர்கள், தங்களை இந்தியாவின் பண்பாட்டுக் கூறுகளிலிருந்து முழுமையாகவோ அல்லது சில கூறுகளிலிருந்தோ துண்டித்துக் கொண்டிருக்கலாம். அவர்கள் ஒரு சிறு பிரிவினரே.
இந்தியாவின் முறைசார்ந்த கல்விகளில் இந்தியப் பண்பாட்டின் அறிதல்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அறிவுஜீவிகள் அனைவரும் இந்த இந்திய சிந்தனைகள் அறிமுகப்படுத்தப்படாத கல்வியைக் கற்று வந்தவர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சுயமாக பண்பாட்டின் மூலத்தை அறியும் ஆர்வமும் இல்லாதவர்கள். ஆனால் இந்திய வாழ்க்கையில், இந்தப் பண்பாட்டின் அறிதல்கள் நெருக்கமாகப் பின்னப்பட்டிருக்கின்றன.  அவர்களால் அறியப்படாத பண்பாட்டுக்கூறுகள் அனைத்தும் பிற்போக்கானவை என அவர்களால் முத்திரையிடப்பட்டு, எனவே அவற்றை சமூகத்திலிருந்து விலக்குவதே அறிவுஜீவிகளானதின் நோக்கமாக கொள்ளப்பட்டு, இந்தப் பண்பாட்டுத் தொடர்ச்சியின் மேல் தாக்குதல் தொடரப்படுகிறது.
இவர்கள் உண்மையில் அறிவுஜீவிகள் இல்லை. தாங்கள் அறிந்திருக்காத ஒன்றை, எதற்கெனத் தெரியாமல் எதிர்க்கிறார்கள். அதற்குத் துணையாக, இந்தப் பண்பாட்டிலிருந்து விலகி அல்லது விலக முயன்று, புதியப் பண்பாடுகளை தழுவிக்கொண்டவர்களை துணைக்கிழுக்கிறார்கள். துரதிர்ஷடவசமாக அறிவுஜீவிகள் என்றும் கல்வியாளர்கள் என்றும் அறியப்படுபவர்களில் பெரும்பான்மையினரும், அதிகாரங்களை அடைந்திருப்பவர்களில் பெரும்பாலானவர்களும் இந்தப் பண்பாட்டில் இருந்துக் கொண்டே அதனைப்பற்றிய எந்த அறிதல்களும் இல்லாதவர்களாகி விட்டார்கள். அதற்கான காரணங்கள் நாமறிந்தவையே!
இந்தப் பெரும் பண்பாட்டுவெளியில் புதையுண்டு கிடப்பதை அவற்றின் மதிப்பை அறிய இன்று நமக்கிருக்கும் கருவிகளில் பெரும்பான்மையானவைகள் துருவேறிக் கிடப்பவையே. இந்தப் பெருங்காலவெளியில் தொடர்பறுந்துப் போன அறிதல்கள் வெறும் சடங்குகளாக மாறி சமூக வாழ்வின் பகுதிகளாக மாறிவிட்ட நிலையில், எந்த தர்க்கபூர்வமான மனதுக்கும் அச்சடங்குகள் ஒவ்வாமையையே அளிக்கும். வாழ்வில் கலந்திருக்கும் சடங்குகளின் மேல் ஒவ்வாமையைக்  காணும்  தர்க்கபூர்வமான மனம் முன் இரண்டு வழிகள் இருக்கலாம். எளிதான வழி அந்தச் சடங்குகளை தன் வாழ்க்கையிலிருந்து விலக்கி, தானறிந்த வாழ்க்கையை மட்டும் வாழ்வது. இன்னும் கடினமான வழி, அந்தச் சடங்குகளுக்கான காரணத்தை, பின்புலத்தை அறிய முயன்று, அந்த அறிதல்கள் மூலம் அச்சடங்குகளின் சமகால வாழ்க்கைத் தேவையை அறிந்து அதன் பின் அதை ஏற்றுக் கொள்வதோ அல்லது மறுப்பதோ. ஆனால் தர்க்க மனம் இங்கு பெரும்பாலும் இல்லை என்பதால் பெரும்பான்மையானவர்களால் இந்த இரண்டு வழிகளிலும் செல்ல முடிவதில்லை. மிகச் சிறுபான்மையினர் முதலாவது வழியில் செல்வதாகத் தோன்றுகிறது. அவர்கள் குரலே இன்று உரக்க ஒலிப்பதாகவும் தோன்றுகிறது. இரண்டாவது வழியைத் தேர்பவர்கள் அறிதலின் ஆழத்திற்கு சென்றிருப்பார்கள். அவர்கள் குரல் ஒலிப்பதற்கானத் தேவை அவர்களுக்குள் இல்லாமல் இருக்கலாம்.  அவர்கள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவானவர்களே!
தர்க்க மனம் இங்கு பெரும்பாலும் இல்லை என்பதும் சரியான வாதம் இல்லை. தர்க்கம் உள்ளது. ஆனால் அது மிகமிகக் குறுகிய எல்லையில் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் தனிமனித ஆணவத்தை நிறைவுசெய்ய தர்க்கம் பயன்படுகிறதோ அங்கெல்லாம் தர்க்கம் பயன்படுத்தப் படுகிறது. ஆணவம் புண்படும் அல்லது அழியும் இடங்களில் தர்க்க மனம் செயலிழந்து விடுகிறது.
இன்றைய பெரும்பான்மையான அறிவுஜீவிகளிடமும் தர்க்க மனம் இவ்வாறே செயல்படுகிறது. இல்லையெனில் பண்பாட்டுக் கூறுகளை நோக்கி இத்தகைய எதிர்க் கூச்சல் ஏற்பட வாய்ப்பில்லை. பண்பாட்டு அறிதல்களின் தொடர்பை இல்லாமல் செய்வதற்கு இத்தகைய முயற்சி செய்யப்படுவதற்கு வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை. வாக்குவங்கி அரசியலுக்கு மட்டும் எனில், அது வெறும் குறுகிய எல்லையில் மட்டுமே இருக்கும். பெரும்பாலான அறிவுஜீவிகள் அவ்வாறே இருப்பதை அரசியல் காரணங்கள் என்று மட்டும் கூறிவிட முடியாது என்றே தோன்றுகிறது. பண்பாட்டின் ஞானக்களஞ்சியங்கள் மேல் அறிமுகமின்மையே காரணமாக இருக்க முடியும்.
கருவிகள் துருவேறிய நிலையில் இன்று நமக்கிருக்கும் வாய்ப்பு, அக்கருவிகளை மீண்டும் இயங்கச் செய்வதே. அக்கருவிகளின் இயக்கங்களை அறிந்தவர்கள், மீண்டும் அவற்றை முழுவிசையுடன் இயக்குவதே. அறிய முயல்பவர்கள், இருக்கும் ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் அல்லது ஆபத்துக்களைப் பற்றிய விழிப்புடன், அக்கருவிகளை மீண்டும் சமூகவெளியில் எடுத்து வைத்தாக வேண்டும். அறிதலுக்கான தங்கள் விருப்பத்தை அறிவுஜீவிகளிடம் உரக்கக் கூறியாக வேண்டும்
ஒரு காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி, ஞானம், பொருளாதாரம் ஆகியவை உச்சத்தில் இருந்தன என்பது நாம் அறிந்த ஒன்று. அன்று இருந்த ஞானம் இன்றைய தலைமுறைகள்வரை வந்து சேர்ந்திருக்கின்றனவா? பொதுத் தளத்தில் வந்து சேரவில்லை. ஆனாலும் அது சமூகத்தின் ஒரு தளத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றைய கல்வியிலிருந்து அவை முற்றிலும் விலக்கப்பட்டிருப்பதால் முறைசார்ந்த கல்வியின் எந்த மாணவர்களுக்கும் இவற்றைப் பற்றிய அறிமுகம் இல்லை. அந்த ஞானம் இருக்கும் தளத்தில் மட்டும் அது எப்படியோ தலைமுறைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த ஞானம் எத்தகைய திரிவை அடைந்து தற்போது இருக்கிறதோ?
இந்தியா அதன் பண்பாட்டின் தொடர்ச்சியை பேண வேண்டும் என்றால், குறைந்தது நான்காயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட பண்பாட்டின் ஞானக் குவியல்கள் குறித்து குறைந்தப்பட்ச அறிமுகத்தை பெறுவதற்கான வாய்ப்பையாவது முறைசார்ந்த கல்வி அளித்தாக வேண்டும். அது கொடுக்கும் அறிமுகத்தின் பின், அதைத் தொடர்வதா வேண்டாமா என்பது மாணவர்களின் விருப்பம். ஆனால் அத்தகைய அறிமுகத்துக்கான வாய்ப்புக்கே இல்லாமல் இருப்பது, இந்தியப் பண்பாட்டின் விரிவை, தொடர்ச்சியை, ஞானத்தை இழப்பதேயாகும். . இந்தியப் பண்பாட்டுக்கூறுகளை ஒரு மதத்தின் மேல் ஏற்றுவது பொறுப்பின்மையும் அறியாமையுமாகும். மதத்தின் மேல் ஏற்றி, அதன் மூலம் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் மதம் சார்ந்தது என எதிர்ப்பதை என்னவென்று கூறுவது? நம் பண்பாட்டில் தொடர்ச்சி இருக்க வேண்டுமானால், முதலில் களைய வேண்டியது, பண்பாட்டுக் கூறுகளின் மேல் மதத்தின் நிறத்தை ஏற்றுவதைத்தான்.

இப்பரந்த பண்பாட்டுக் கூறுகளின்மேல் சிறிதேனும் அறிமுகம் உள்ளவர்கள், அதன் மூலம் அவற்றின் மேல் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் மெல்லிய சத்தத்தையாவது, இந்தத் திசையில் எழுப்பியாக வேண்டும். அந்தச் சத்தம் அறிவுஜீவிகளில் ஒரு தரப்பினரையாவது தாங்கள் எதிர்ப்பவற்றின் மேல் அறிதல்களை கொண்டு வரச் செய்யலாம். இந்தியப் பண்பாட்டின் சாரத்தின் மேல் அறிமுகம் கொண்டவர்கள், பெரும்பாலும் அதன் மேல் எதிர்ப்புக் குரல் எழுப்ப முடியாது. அதையும் கடந்து எதிர்ப்புக் குரல்கள் எழுமானால், அவற்றில் நிச்சயமாக ஏதேனும் காரணங்கள் இருக்கும். நம்மால் திரும்பிப் பார்த்து, அக்குறைகளை நிவர்த்திச் செய்ய முடியலாம். இதன் மூலம் பண்பாடு தொடர்ந்து அடுத்தக் கட்டத்துக்கு செல்ல முடியலாம்!
blog.change@gmail.com

No comments: