Monday, September 12, 2016

தேசிய கல்விக் கொள்கை - 2016

சொல்வனம் இணையப்பத்திரிகையில் 01-09-2016 அன்று பதிப்பிக்கப் பட்டது.

சுதந்திர இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்கான மூன்றாவதாக அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை ஏப்ரல்-30, 2016 -ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் அளித்திருக்கிறது. இதன் அடிப்படையில் அமைச்சகம் அதன் கல்விக் கொள்கையை வெளியிட வேண்டும். அதன் முன்பாக, வரைவுக் கொள்கையை வெளியிட்டு பொதுமக்களிடமும் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறது. விருப்பமும், உபயோகமான பரிந்துரைகளும் இருந்தால் ஆகஸ்ட்-16 ம் தேதிக்கு முன் அளிக்கலாம்.

முதலாவது தேசிய கல்விக் கொள்கை இந்திய அரசாங்கத்தால் 1962-ம் ஆண்டு வெளியிடப்பட்டு அமல் படுத்தப்பட்டது. இரண்டாவது கொள்கை, 1986-ம் ஆண்டு வெளியிடப்பட்டு பின் திருத்தங்களுடன் 1992-ம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட அனைவருக்கும் கல்விக்கான உரிமைச் சட்டம், இந்த இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில்தான் கொண்டுவரப்பட்டது.

இரண்டாவது கல்விக் கொள்கையின் அமலாக்கத்திற்குப் பின் இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருமளவில் பெருகின. இதன் அமலாக்கம், கல்வியின் பரவலாக்கம் என்னும் குறிக்கோளில் பெருமளவு வெற்றி பெற்றிருந்தாலும் கல்வித் தரத்தை உயர்த்துதல் என்னும் குறிக்கோளில் மிக மோசமாகத் தோல்வியடைந்திருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது கல்விக் கொள்கைகளுக்கான பரிந்துரைகள் அளிப்பதற்காக ஐந்துபேர் கொண்ட ஒரு குழு 2015-ம் வருடம் அட்டோபர் மாதம் அமைக்கப்பட்டது. இதில் தலைவர் உட்பட நான்கு உறுப்பினர்கள் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள். ஒருவர் NCERT இன் முன்னாள் தலைவர்.

முந்தைய கல்விக் கொள்கைகளுக்கான குழுக்கள் செயல்பட்ட விதமும் தற்போதைய குழு செயல்படப் பணிக்கப்பட்ட விதமும் முற்றிலும் மாறுபட்டவை. முந்தையக் குழுக்கள் வெவ்வேறு கல்வித்துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, அவர்கள் தங்கள் துறைகளில் கொண்டிருக்கும் நிபுணத்துவத்தைஅடிப்படையாகக் கொண்டும் கள ஆய்வுகள் மூலமும் பிற நிபுணர்களுடனான உரையாடல்கள், பேட்டிகள் மூலமும் குறைந்த அளவிலான பொதுமக்களுடனான கருத்துப் பரிமாற்றங்களின் மூலமும் கொள்கைகளுக்கான அறிக்கையை தயார் செய்திருந்தார்கள். இந்த முறையில் மேல்மட்டத்தில் கொள்கைகளை உருவாக்கப்பட்டு, கீழ் நோக்கி வந்து அவை செப்பனிடப்பட்டது.

தற்போதைய குழு எதிர் திசையில் பயணித்து தன் அறிக்கையை சென்றடைந்துள்ளது. முதலில் பொதுமக்களிடமிருந்து பரிந்துரைளைப் பெற்று, பல்வேறு நிலைகளில் தொகுக்கப்பட்டு இறுதியில் குழுவினரை வந்தடைந்து, அதிலிருந்து இறுதிப் பரிந்துரைகள் பெறப்பட்டிருக்கின்றன. தேசிய புதிய கல்விக் கொள்கைக்கான இணையத்தளத்தில் உள்ள தகவல்களின் படி, இந்த அடிப்படை பரிந்துரைகளைப் பெறும் வேலை மிக மிக விரிவாக செய்யப்பட்டிருக்கிறது. சுமார் இரண்டரை இலட்சம் கலந்தாலோசனைகள், ஆலோசனைப் பிரமிடின் கீழ் மட்டத்தில் செய்யப்பட்டிருப்பதாக இந்த இணையத்தளம் கூறுகிறது.

அதாவது இந்தியாவில் உள்ள சுமார் இரண்டரை இலட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் பெறப்பட்ட ஆலோசனைகள், பிரமிடின் இரண்டாவது நிலையான ''பிளாக்'' அளவில் தொகுக்கப்பட்டு, தேவையான இடங்களில் புதிய ஆலோசனைகள் சேர்க்கப்பட்டு அடுத்த நிலைக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. பிரமிடின் இந்தத் தளத்தில் சுமார் 6600 கலந்தாலோசனைகள் நடைபெற்றிருப்பதாக இணையத்தள தகவல் கூறுகிறது. பிரமிடின் மூன்றாவது நிலையில், மாவட்ட அளவில் இந்த ஆலோசனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலுமாக, மொத்தமாக சுமார் 676 கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடை பெற்றிருக்கின்றன.  நான்காவது நிலையில் மாநில\யூனியன் பிரதேச அளவில், ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்று கலந்தாலோசனைக் கூட்டங்கள் மூலம் தொகுக்கப்பட்டடிருக்கிறது. இந்த வகையில் சுமார் 100 ஆலோசனைக் கூட்டங்கள் நடை பெற்றிருக்கின்றன. ஐந்தாவது நிலையில் மண்டல அளவில் அவை தொகுக்கப்பட்டு ஆலோசனைகளின் ஒரு தொகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, இணையத்தின் மூலம் ஆர்வமுள்ள கல்வியின் பங்குதாரர்களிடமிருந்த, அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், வரவேற்கப்பட்டு  தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆலோசனைகளின் தொகுப்பில் இது ஆறாவது இடத்தைப் பெற்றிருந்தாலும், இது பிரமிடின் ஒரு பகுதியாக இல்லாமல் அதன் சிலபல குறுக்குவெட்டுப் பரப்புகளிலிருந்து  பெறப்பட்டு தொகுக்கப்பட்ட நேரடியான ஆலோசனைகள். இறுதியாக ஏழாவது இடத்தில், மேலே கூறப்பட்டுள்ள ஐவர் குழு வந்தமர்கிறது. இந்தக் குழுவின் பணி, இவ்வாறுத் தொகுக்கப்பட்ட ஆலோசனைகளை, கல்வி நிர்வாகத்திற்கு ஏற்ற மாதிரியான பரிந்துரைகளாக மாற்றியமைப்பதுதான். இதற்கு மிகவும் தகுதியானவர்கள் கல்வியாளர்களை விட ஆட்சிப்பணி அனுபவஸ்தர்களே.
      
இக்குழுவின் அறிக்கையின் இரண்டாவது அத்தியாத்தின்படி, குழு அமைப்பதற்கு முன்பாகவே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேலே கூறப்பட்ட பிரமிடின் முதல் ஆறு நிலைகளிலும் ஆலோசனைகளைப் பெற்று தொகுக்கும் பணியை முடித்திருக்கிறது. இந்தத் தொகுக்கப்பட்ட ஆவணங்களிலிருந்துப் பெறப்பட்டத் தகவல்களை கல்வியாளர்களுடனும் துறையின் பல்வேறு நிபுணர்களுடனும் மீண்டும் நேரடி உரையாடல்கள் மூலம், இக்குழு செறிவுப் படுத்தியிருக்கிறது. பிரச்சனைகளின் வீச்சின் வெவ்வேறு திசைகளில் தங்கள் கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களின் ஆலோசனைகளும் கேட்டறியப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து மாநில மற்றும் தேசிய கல்வித்துறை அதிகாரிகளின் பிரதிநிதிகளுடன் முறைசார்ந்த மற்றும் முறைசாராத, இயல்பான ஆலோசனை அமர்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்களின் படி, இந்தக் குழு மிக விரிவான, எல்லா சாத்தியமான வழிகளினூடாகவும் தகவல்களைப் பெற முயற்சித்திருப்பது தெரிகிறது. இத்தகைய அறிக்கைகளில் குழுவின் பணிகளை சற்றே மிகைப்படுத்திக் கூறுவது பெரும்பாலும் இயல்பானதுதான். அந்த மிகைப்படுத்தலை சரியீடு செய்வதற்கான் சமன் காரணியை (Equating Factor)  கணக்கில் கொண்டாலும், இந்த அறிக்கைக்காக குழுவும், குழுவிற்கு கொடுக்கப்பட்ட ஆவணங்களுக்காக மனித மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் மிகப்பெரிய பணியைச் செய்திருக்கின்றன. கல்வி என்னும் கருத்தின் மேல் ஆர்வமுடையவனாக, இந்தப் பணியை என்னளவில் பாராட்டாமல் கடந்து செல்ல முடியவில்லை.

இறுதி அறிக்கை ஒன்பது அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு, 240 பக்கங்களில் அளிக்கப்பட்டிருக்கிறது. முதல் அத்தியாயம் இந்தியாவில் கல்வியைப் பற்றிய சுருங்கிய வரலாற்றுச் சித்திரத்தை அளிப்பதுடன் அதன் தற்போதைய நிலையையும் கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாவது அத்தியாயம் இந்த அறிக்கைக்காக பின்பற்றிய அணுகுமுறைகளையும் செயல்முறைகளையும் விளக்குகிறது. மூன்றாவது அத்தியாயம் இதன் சந்தர்ப்பச் சூழலையும் நோக்கத்தையும் விவரிக்கிறது. அடுத்த அத்தியாயம் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான தேவையை விளக்குகிறது. அதற்கடுத்த அத்தியாயம் கல்வி ஆளுகையை (Governance in Education) விளக்குகிறது. ஆறாவது மற்றும் ஏழாவது அத்தியாயங்கள் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. எட்டாவது அத்தியாம் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களைப் பற்றி பேசுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் கொடுக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு குழுவின் ஒட்டு மொத்தப் பரிந்துரைகளாக ஒன்பதாவது அத்தியாயத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையில் தற்போதைய கல்வியின் நிலை உள்ளவாறே முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு எல்லையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் நியமனங்கள் திறன் சார்ந்தது அல்லாமல் அரசியல் சார்ந்து இருப்பதையும் கல்வியில் அதன் தாக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது. மறு எல்லையில் பல பல்கலைக்கழகங்கள்  கல்வி நிலையங்களாக இல்லாமல், பட்டங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களாக இருப்பதையும் கூறுகிறது. ஒரு எல்லையில் முந்தையக் கல்விக் கொள்கைகளின் அமலாக்கங்களால் பெரும்பாலானவர்களுக்கு கல்வி எட்டக்கூடியதாக மாறியிருப்பதை கூறிவிட்டு மறு எல்லையில் கல்வியின் தரம் உயரவில்லை, மாறாக தாழ்ந்திருக்கிறது என்பதையும் அறிவிக்கிறது. ஒரு திசையில் இந்தியக் கல்வி அமைப்புதான் உலகிலேயே பெரிய கல்வியமைப்பாக இருக்கும் அதேவேளையில், அதன் மறுபக்கமாக உலகக் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள் கூட பின்வரிசையிலேயே இருப்பதையும் காட்டுகிறது. ஒரு திசையில் ஆசிரியர் பயிற்சியின் தரம் மிகமிகத் தாழ்ந்த நிலையில் இருக்கும்போது மறு திசையில் ஆசிரியர் பணிக்கான தேர்வு மற்றும் பணிமாற்றம் போன்றவற்றில் மலிந்திருக்கும் ஊழலையும் பணியாற்றும் ஆசிரியர்களின் திறமையின்மையையும் பணிக்கு வராமல் இருப்பதையும் (Absenteeism) கவனத்தில் கொள்கிறது. அறிக்கையில் தற்போதைய கல்வியின் நிலைக்குக் காரணமான அனைத்துக் காரணங்களும் பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஆசிரியர் பயிற்சியின் தரத்தையும் ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்துவதற்கு கடுமையான, அவர்களால் விரும்பப்படாத நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் அறிவிக்கிறது.

குழுவின் பரிந்துரைகளை மட்டும் அறிந்துக் கொள்வதற்கு ஒன்பதாவது அத்தியாயம் மட்டும் போதுமானது. ஆனால் அவை எத்தகைய சூழலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என அறிய முழு அறிக்கையையும் படிக்க வேண்டியிருக்கிறது. இந்த அறிக்கையின் மீதான விமர்சனங்களை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பொதுமக்களிடம் ஆகஸ்ட் 16ம் தேதிக்கு முன் அளிக்குமாறு கோரியிருக்கிறது. அதன் பின் இறுதிக் கொள்கை வகுக்கப்படலாம்.
சில ஊடகங்களில் புதிய தேசியக் கல்விக் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலியில் இதற்கு எதிராக சமத்துவக்      கல்விக்கான கூட்டமைப்பு என்னும் அமைப்பின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் தங்கள் எதிர்ப்பிற்கான காரணங்களாக, புதிய கல்விக் கொள்கை இந்துத்துவத்தை பரப்புவதற்கும், வரலாற்றை மாற்றவும், கல்வியை வியாபாரமாக்கவும் சமஸ்கிருதத்தை திணிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்பவற்றை முன்வைத்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அறிக்கையை முழுவதும் படித்த பின்பும் மேலே கூறிய எந்த காரணங்களும் அதில் கூறப்பட்டிருப்பதாக  தோன்றவில்லை. உண்மையில் கல்வி வியாபாரத்திற்கு எதிராகவே இந்த அறிக்கை பல பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் குறைந்தப்பட்சம் 6% அளவுக்காவது கல்வித்துறைக்கு ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்னும் பரிந்துரை கல்வி வியாபாரத்தை ஊக்குவிப்பதற்காக நிச்சயம் இருக்காது. உயர் ஆராய்ச்சித் துறைகளில் தனியார் முதலீட்டை, தெளிவான கொள்கைகளுக்கும் தரம் சார்ந்த நிபந்தனைகளுக்கும் உட்பட்டு வரவேற்கலாம் என்பதைக் கூறுகிறது. இதைக் கல்வி வியாபாரம் என எதிர்த்தால், இது எந்த பின்னணியில் கூறப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. மாணவர்களுக்கு அனைத்து மதங்களின் அடிப்படைகளும் கற்பிக்க வேண்டும் என்னும் ஒரு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் இது மிகவும் தேவையானது. அனைத்து மதங்களையும் என்பதை எவ்வாறு இந்துத்துவம் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவின் தத்துவம், கலை, பண்பாடு, அறிவியல் போன்றவை சமஸ்கிருதத்துடன் நெருங்கிய தொடர்புடையவையாக இருப்பதால், சமஸ்கிருத கல்விக்கான சுதந்திரமான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. சுதந்திரமான வாய்ப்பு என்பதை கட்டாயம் என்று எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள்? சமஸ்கிருதம் படிக்க விரும்புபவர்களுக்கான வாய்ப்பை எதிர்ப்பின் மூலம் இவர்கள் கட்டாயமாக மறுத்துவிடுகிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இன்னொரு ஊடகத்தில் வெளியான ஒரு கட்டுரை வேறு சில பரிந்துரைகளின் உதிரி வாக்கியங்களை, அந்த வாக்கியங்கள் கூறுவதன் பின்னணியை கருத்தில் கொள்ளாமல், அதற்கு எதிரான தன் கேள்விகளை முன்வைத்திருக்கிறது. இத்தகைய பின்னணியைக் கருத்தில் கொள்ளாத உதிரிக் கேள்விகளுக்கு யாராலும் பதில் அளித்து விட முடியாது.

ஐனநாயக சமூகத்தின் அங்கத்தினர்களாக, அந்த சமூகத்தின் கல்விக் கொள்கைக்கு முன்னோட்டமான இந்த அறிக்கையை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ அவரவர் கருத்துச் சுதந்திரம். இந்த அறிக்கையில் ஒரு வாக்கியம் இவ்வாறு வருகிறது; அடுத்த பத்தாண்டுகளில் வரவிருக்கும் பணியாளர்களை, நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிப்பதற்காக போதிய அளவு கற்பிக்கவும் பயற்சியளிக்கவும் வேண்டும். மிகுந்த அக்கறையுடன் இதைக் கவனிக்காமலிருந்தால், மக்கள் தொகையில் இளைஞர்களின் அதிகமான தொகையால் உத்தேசிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, உண்மையிலேயே அவ்வாறன்றி பேரிடராக மாறிவிடலாம். (The work force in the next decades need to be adequately educated / trained, for them to play a part in nation building. Indeed if this is not attended to with great care today, the projected demographic ‘dividend’ may actually turn out to be a ‘disaster’ in the next decades.) இதைப் புரிந்து கொள்வதில் எந்த இடரும் இருக்க வாய்ப்பில்லை. ஆக, கல்வி சீர்திருத்தத்தின் மேல் உள்ள தனிப்பட்ட மனிதர்களின் மனச்சாய்வு, அடுத்த பத்தாண்டுகளில் இளைஞர்களும், எனவே சமூகமும் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி. சமூகத்தைக் கட்டமைக்க வகுக்கப்படும் இந்த கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்களோ ஆதரிப்பவர்களோ அரசியல் அல்லது வேறு தனிப்பட்டக் காரணங்களுக்காக சிலர் முன் வைக்கும் உதிரி வாக்கியங்களை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல் அறிக்கையில் அல்லது கொள்கையில் அந்த உதிரிவாக்கியங்கள் எந்தப் பின்னணியில், எந்த நோக்கத்திற்காக கூறப்பட்டிருக்கிறது என்பதை சுயமாக அறிந்து கொண்டு, அதன் அடிப்படையில் தங்கள் நிலைப்பாடுகளை எடுப்பார்கள் என்றால், கல்வி சீர்திருத்தம் இந்தியாவில் சாத்தியமாகலாம்.

குழுவின் பரிந்துரையை இந்தச் சுட்டியில் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments: