Wednesday, December 16, 2015

கடவுள்

சிறகு இணைய இதழில் 07-12-2015 அன்று பதிப்பிக்கப்பட்டது.

மனித அறிவு புதிய பரிணாமங்களை எட்டிப்பிடிக்கும்தோறும் நாத்திகவாதம் அதன் எல்லையை விரித்துக்கொண்டே செல்கிறது. மனிதனின் லௌகீக வாழ்வின் பாதுகாப்பு உறுதியாகும்தோறும், கடவுளின் தேவையும் குறைந்துக் கொண்டே செல்கிறது. இது ஒரு முரண்இயக்கம் என்றோ அல்லது இயற்கையான நேர்இயக்கம் என்றோ அவரவர் பார்வைக்கேற்ற வியாக்கியானங்களை செய்து கொள்ளலாம்.

கடவுள் என்பது ஒரு இருப்பா அல்லது ஒன்றும் இல்லாததா? அது ஒரு கருத்தா அல்லது நம்பிக்கையா? கடவுளை உள்ளவாறே விளக்க முடியுமா? கடவுள் என்றாலே பதிலளிக்க முடியாத கேள்விகள்தான். இல்லையெனில் நம்பிக்கைகள். சிலரை கேள்விகளும் இன்னும் சிலரை நம்பிக்கைகளும் முன்னெடுத்துச் செல்கின்றன. அவ்வாறு முன்நகர்த்தாத கேள்விகளாலும் நம்பிக்கைகளாலும் மனிதர்களுக்கோ கடவுள்களுக்கோ எவ்வித பயனும் இல்லை.

மனிதப் பரிணாம வளர்ச்சியில், எண்ணங்கள் தோன்றிய காலத்திலேயே கடவுள் அல்லது அதற்கு இணையான கருத்து தோன்றியிருக்கக் கூடும். எண்ணங்களே தேடுதலுக்கான தேவையைத் தோற்றுவிக்கின்றன. அவையே அறிதல்களைத் தூண்டுகின்றன. அறியமுடியாதவற்றின் மேல் அச்சத்தையும் தோற்றுவிக்கின்றன. எனில் இன்று நாம் அறியும் கடவுள்களை தோற்றுவித்தது சந்தேகமே இல்லாமல் மனித எண்ணங்களும் சிந்தனைகளும்தான். அது மனித இனத்தின் தவிர்க்க முடியாத தேவையாக இருந்திருக்கலாம் மனம் என்னும் புயலில் தாக்குண்டு சிதறாமல் இருப்பதற்கான பற்றுகோலாக இருந்திருக்கலாம்.

பிரபஞ்சம் எண்ணிலடங்கா இயக்கங்களின் கூட்டு இயக்கம். அதில் மனித இயக்கம் சிறு துளி மட்டும்தான். ஆனால் மனித மனம் தன்னைச் சுற்றியே உலகம் இயங்குவதாகக் கற்பனை செய்துக்கொள்கிறது. அதாவது மனிதனுக்குத் தெரிபவை, தன்னைச் சுற்றி இயங்கும் இயக்கங்கள் மட்டும்தான். அந்த இயக்கங்களில், மனிதன் தன்னை நடுநாயகமாக உணர்வது இயல்பானதுதான். பார்வையின் விரிவை அடையும் மனிதன், பிரபஞ்ச இயக்கத்தில் தன் இடம் எதுவும் இல்லை என்பதையும் தான் அதன் சிறு துளி கூட இல்லை என்பதையும் அறியலாம். இந்த அறிதல் நிகழ்ந்தால் அவனின் பாதுகாப்பான நடுநாயக இருக்கையிலிருந்து தூக்கி வீசப்படுகிறான். தன்னைத் தாக்கும் பிரபஞ்ச இயக்கங்களில் பார்வைக்கு எட்டியவற்றின் பிரம்மாண்டம் மனிதனை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. அதில் பாதுகாப்பின்மையை உணர்கிறான். அதுவே கடவுள் என்னும் பிடிகொம்பை மனிதனுக்குத் தேவையாக்குகிறது.

கடவுள் என்னும் உருவகம் எவ்வாறு தோன்றியது என்பதை அறிய சாத்தியங்கள் இல்லை. ஆனால் வரலாற்றின் பெரும்பகுதியை கற்பனையிலிருந்து உருவாக்குவது போல, கடவுள் எவ்வாறு மனித மனதில் உயிர் பெற்றிருக்க முடியும் என்பதையும் அனுமானிக்க முடியலாம். வரலாற்றை முழுமுற்றான உண்மை என ஏற்றுக் கொள்ள முடியுமானால், இந்த அனுமானங்களையும் ஏற்றுக் கொள்ள முடியலாம்.
இவ்வுலகில் மனிதனால் உருவாக்கப்படாத அனைத்தும் இயற்கை என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. மனிதன் இயற்கையிலிருந்து உருவாகி, இயற்கையால் பாதுகாக்கப்பட்டு, இயற்கையாலே அழிக்கவும் படுகிறான். எண்ணங்களும் அதன்காரணமான அறிதல்களும் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. இயற்கையின் போக்கில் பிறந்து வாழ்ந்து மறையலாம்.
இயற்கை மனதால் எட்ட முடியாத பல்வேறு விசைகளின் தொகுப்பு. மனித இருப்பும் அழிவும் அந்த விசைகளாலேயே நிகழ்கிறது. மனிதனுக்கு உணவூட்டும் இயற்கையே அழிக்கவும் செய்கிறது. எண்ணங்களை உருவாக்கத் தொடங்கிய மனம், இந்த எதிர்நிலைகளைக் கண்டு அஞ்சியிருக்க வேண்டும். இதமாக பெய்து உணவாகவும் உணவை உருவாக்கவும் உதவும் மழை, பேருருவம் எடுத்து அழிக்கவும் செய்கிறது. தன் இருப்பின் மூலம் மனிதனின் உயிருக்கு ஆதாரமாக இருக்கும் மூச்சுக் காற்று, புயலாக பேருரு கொள்ளும்போது அனைத்தையும் அழிக்கும் அழிவு சக்தியாகவும் மாறுகிறது.
இந்த இயற்கை சக்திகளை அஞ்சி, அவற்றைப் புறக்கணிக்கவும் முடியாது. ஏனெனில் அவையே வாழ்வின் ஆதாரங்கள். இன்றியமையாதவை என அவற்றை முழுமையாக அணைத்துக் கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவையே அழிப்பு சக்திகள்.  ஆக மனிதனுக்கு இருந்த ஒரே வழி அவற்றின் முன் தன்னை சமர்ப்பணம் செய்து கொள்வதுதான். அதாவது, இயற்கை சக்திகள் ஆக்க சக்திகளாக இருக்கும்போது அவற்றை நுகர்ந்து, அவை அழிவு சக்திகளாக மாறும்போது அவற்றின் நுகர்வுக்குத் தன்னை அளிப்பது. இந்த சமர்ப்பண உணர்வே இயற்கை வழிபாடு என்னும் பரிணாமத்தை அடைந்திருக்கக் கூடும்.

மனித மனம் எல்லையற்ற ஆற்றலைப் பெற்றிருக்கிறது. அந்த ஆற்றலின் எல்லையைத் தேடுவதே அதன் இயல்பு. தேடுதல் மனித வாழ்க்கையைப் பாதிக்கும் இயற்கை ஆற்றல்களின் தன்மையை மனித அறிவின் எல்லைக்குள் கொண்டு வந்தது. ஆனால் அதே தேடுதல், மனதின் போதாமையையும் அறிய வைத்தது. அதாவது மனிதன் அறிந்தவை அதிகரிக்குந்தோறும், இதுவரை அறியமுடியாதவையும் அவன் அறிதலுக்கு வெளியே அறிதலுக்காக காத்துக்கொண்டிருப்பவையும் அதிகரித்துக்கொண்டே வருவதை அறிய நேர்ந்திருக்கும்.

இன்று தனிமனித வாழ்க்கையில் நிகழும் தர்க்க மனதனால் வரையறுக்க முடியாத ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்கும் பட்சத்தில், அது கடவுளின் செயல் என எளிதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கடவுள் என்னும் கருத்தை அறிந்த அல்லது உணர்ந்த குறைந்தபட்ச எண்ணிக்கையிலுள்ள மனிதர்களைத் தவிர மற்ற அனைவரும்,  அவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் இல்லை என்றாலும் கடவுள் என்னும் ஒரு பிம்பத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால் என்ன, நம்புபவர்கள் அந்த பிம்பம் உண்டு என்றும் தன்னைப் பாதுகாக்கிறது என்றும் நம்புகிறார்கள். நம்பாதவர்கள் அந்த பிம்பம் யாருக்கும் எதுவும் செய்வதில்லை, அது தனக்குத் தேவையில்லை என்னும் கருத்துடன் இருப்பார்கள். இது மட்டும் இல்லை, கடவுள் என்னும் ஒரு பிம்பத்தை மனதுக்குள் உருவாக்கிவிட்டு, அவ்வாறு ஒரு பிம்பம் இல்லை என்றும் வாதிடுவார்கள்.  இந்த பிம்பத்தை எங்கிருந்து, எவ்வாறு பெற்றோம்?
கடவுளின் பிம்பம் அடிப்படையில் நாம் சார்ந்திருக்கும் சமூகம் உருவாக்கி அளிக்கிறது. சமூகம் அளிக்கும் அந்த பிம்பத்தை தனிமனித அறிதல்களும் கற்பனைகளும், அவரவர் இயல்பிற்கேற்ப மாற்றி தங்களின் பிம்பங்களாக வைத்துக் கொள்கிறார்கள். உலகத்தில் எந்த இரண்டு மனிதர்களும், அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒரே கடவுள் பிம்பத்தைக் கொண்டிருக்க சாத்தியமில்லை. அந்தக் கடவுளை ஒரே பெயரில் அழைத்தாலும், அது தனிமனிதர்களின் தனிப்பட்ட கடவுளே.

எனில் கடவுள் என்னும் கருத்து வெறும் கற்பனையா? அதில் பொருள் ஒன்றும் இல்லையா? அவ்வாறு இருக்கவும் சாத்தியம் இல்லை. இன்று நாம் அறியும் வரலாறு தொடங்கும் காலத்தில் இருந்தே கடவுள் என்னும் கருதுகோள் இருந்து கொண்டிருக்கிறது. உலகின் எல்லா சமூகங்களிலும் எல்லா காலங்களிலும் அது இருந்திருக்கிறது. முற்றிலும் பொருளற்ற ஒன்று அவ்வாறு கால தேச பேதம் இல்லாமல் வியாபித்திருக்க சாத்தியம் இல்லை. எனவே உண்மையான கேள்வி கடவுள் என்னும் கருதுகோளைக் குறித்து இல்லை. தனி மனிதர்கள் கொண்டிருக்கும் பிம்பத்தைக் குறித்துதான் இருக்க முடியும்.

பொதுவாக தனிமனித கடவுளின் பிம்பம், அவர்களால் அறிய முடியாத இயக்கங்களை செயல்படுத்தும் ஒரு இருப்பு. உதாரணமாக ஒருவர் சில வேண்டுதல்களை அவருடைய கடவுள் என்னும் பிம்பத்திடம் வைக்கிறார். பல உலகியல் இயக்கங்களின் விளைவாக அவர் வேண்டுதல் தன்னிச்சையாக நிறைவேறுகிறது. கடவுளிடம் வேண்டியது மட்டும்தான் அவருக்குத் தேவை என்றால், அது எவ்வாறு நிறைவேறியது என்பதில் எவ்வித ஆர்வமும் இல்லை என்றால், அவரைப் பொறுத்தவரை கடவுள் என்னும் பிம்பம் அவருடைய வேண்டுதலை முழுமையாக நிறைவேற்றியது. அவ்வாறு இல்லாமல் வேண்டிய செயல் நிறைவேறிய இயக்கங்களின் மேல் அவர் விழிப்புடன் இருந்தால், அந்த இயக்கத்தை முழுமையாக கடவுளால் நிறைவேற்றி அளிக்கப்பட்டது என நம்ப வேண்டியத் தேவை இல்லை. ஆனால் அந்த இயக்கங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்கான வழியில் நிகழ்வதற்கான காரணத்தை கடவுள் என்னும் பிம்பத்தின் மேல் ஏற்றக்கூடும். அதாவது தன் செயல்களின் மேல் இருக்கும் விழிப்புநிலைக்கேற்ப ஒருவரின் கடவுள் என்னும் பிம்பம் வேறு தளங்களுக்குச் சென்று கொண்டிருக்கும்.
ஆக, அடிப்படையில் கடவுள் என்னும் பிம்பம் தனிமனித அளவில், அவர்களின் அறிதலைச் சார்ந்தது. அதாவது ஒருவர் தன்னுடைய கடவுள் என்னும் பிம்பத்தை முழுமையாக வேறு எவருக்கும் அளிக்க முடியாது. வலுக்கட்டாயமாகவோ, சில ஆசைகளை உருவாக்குவதன் மூலமோ, சில வாக்குறுதிகளை அளிப்பதன் மூலமோ பிறருக்கு அளிக்கப்படும் கடவுளின் பிம்பம் வெறும் வெளித்தோற்ற பிம்பம் மட்டுமாகவே இருக்க முடியும். ஆனால் உலகெங்கிலும் நடந்த உயிர்ப்பலிகளில் குறிப்பிடத்தக்க பங்கு  சிலரின் கடவுள் பிம்பங்களை மற்றவர்களின் மேல் சுமத்தும் அர்த்தமற்ற, முற்றிலும் இயலாத, முட்டாள்த்தனமான காரணங்களுக்காகவே நிகழ்ந்துள்ளது. இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்காகவே பண்பாடுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. அவை இன்றும் பண்பாடுகளை சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

கடவுளை அறிவது, அதற்கு மேல் அறிய வேறு எதுவும் இல்லை என்னும் நிலையை அடைவதாகும். அது சாத்தியமா? சாத்தியம் என்றே கடவுளை அறிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள், கூறுகிறார்கள். பெரும்பாலான மறைதத்துவங்கள், குறிப்பாக இந்திய மெய்ஞானத் தத்துவங்கள் அத்தகைய அறிதல் சாத்தியம் என்றே உரக்கக் கூறுகின்றன. பதஞ்சலி யோக சூத்திரங்கள் அதற்கான வழிமுறையை தர்க்கரீதியில் கூறும் இந்தியத் தத்துவங்களில் ஒன்று.

அறிதல் என ஒன்று உண்டென்றால் அது எங்காவது முற்று பெற்றாக வேண்டும். மூளையின் அதிகபட்ச அறிதலுக்கான சாத்தியம் இருந்தாக வேண்டும். ஒருவேளை அந்த எல்லைதான் அறிதலின் எல்லையாக இருக்கலாம். அல்லது கடவுளை அறிவதாக இருக்கலாம். எனில் அது மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சாத்தியமானதே. நம் மனங்கள் அதன் உச்சக்கட்ட சாத்தியங்களை அடையட்டும்! கடவுள் என்பது வெறும் கருத்துக்களிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் நம் அறிதலாகவும் உணர்வாகவும் மலரட்டும்! கடவுளின் விஸ்வரூப தரிசனம் நம் அனைவருக்கும் சாத்தியமாகட்டும்!

No comments: