Saturday, August 15, 2015

போதையின் ஆட்சி

சிறகு இணைய இதழில் 01-08-2015 அன்று பதிப்பிக்கப்பட்டது.

தன் குடிமக்களை போதையில் ஆழ்த்தி, போதையின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயித்து, அதில் வரும் வருமானத்தில் ஆட்சியை நடத்தும் அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களாக மீண்டும் மீண்டும் பெறும் துர்பாக்ய நிலையில் தமிழகம் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் சிந்திக்கும் திறனை போலிப்பிரச்சாரங்கள் மூலமும், மொண்ணைத்தனமான கல்வியின் மூலமும் திட்டமிட்டு அழித்து விட்டார்கள். தொடர்ந்து தங்களையே ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கச் செய்வதற்கு அந்த மக்களாகிய நம் அனைவருக்கும் தேர்தல் நேரத்தில் செய்யப்படும் சிறு வெறுப்புப் பிரச்சாரமும் சில இலவசங்களும் மட்டும் போதுமென்றாக்கி  விட்டார்கள். நாமும் சுபம் என்று அமைந்து விட்டோம். தன் வாலை உணவென உண்ண முயலும் பாம்பு போல, மக்களாட்சி சமூகத்தில் அரசியல்வாதிகள்  குடிமக்களை விழுங்கி தொடர்ந்து இந்த சமூகத்தை அதன் கீழ்மையை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் எஞ்சியிருக்கும் குறைந்தபட்ச சிந்தனையோட்டத்தை வளர்த்தெடுத்து, மது தமிழகத்தை முழுவதும் அழிக்கும்முன் பாதுகாத்தாக வேண்டும். இல்லையெனில், சமூகத்தின் முழு அழிவின் சாம்பலில் இருந்து புதிய சமூகம் எழுந்து வர காத்திருக்க வேண்டும்.

இன்று தமிழகத்தை பீடித்திருக்கும் கொலை நோய் போதை. தமிழக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40% பேர் தினசரி மது அருந்துவதாகவும் இந்த  எண்ணிக்கை வருடத்திற்கு 8% கூடிக்கொண்டிருப்பதாகவும் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சென்றால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு பத்து வருடங்களில், மது ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர அனைவரும் இந்த அவலப் பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பார்கள்.

மது, ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் அவ்வப்போது வரும் கொண்டாட்டத் தருணங்களில் மட்டும் அருந்துவதை ஒரு பொழுதுபோக்கு அல்லது வாழ்க்கையைக் கொண்டாடுவது எனக் கருதலாம். ஆனால், வாழ்வதற்கே தினசரி மது அருந்தியாக வேண்டும் என்னும் நிலைக்கு வருவது போதைக்கு அடிமை ஆவது ஆகும். இது ஒரு நோய். அரசாங்கங்களே தன் குடிமக்களை வளர்ச்சி இலக்கு நிர்ணயித்து, இந்த நோய்க்குள் வலிந்து தள்ளுவது ஒரு முரண்நகை. ஆனால் அதுதான் நம் முன் நிதர்சனமாகவும் இருக்கிறது. இதற்குக் காரணம் அரசாங்கத்தை நடத்தத் தேவையான வருமானத்தை உருவாக்கும் வழி எனத்தோன்றலாம். ஆனால் உண்மையில் அரசாங்கத்தை நடத்துபவர்களின், அவர்களைச் சார்ந்தவர்களின் சொந்த வருமானத்தை பெருக்கும் வழி இது. தமிழ் நாட்டில் மது தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும், மது கொள்முதல் செய்யப்படும் நிறுவனங்களில் பெரும்பான்மையானவை அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களோ நடத்தி வருபவை.

தமிழ்நாட்டில் மதுக் கொள்கைகள் குறித்த குறுகிய வரலாறு.
 1. 1938 - ம் வருடம் முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ராஜாஜி அவர்கள்.
 2. 1948-ம் வருடம் மதராஸ் மாகாணம் முழுவதுக்கும்  மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல்வாராக இருந்தவர் ஒ.பி. ராமசாமி ரெட்டியார் அவர்கள்.
 3. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு 23 வருடங்களுக்குப்பின் 1971 - ம் வருடம் கள், சாராயம் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் (IMFL) ஆகியவை அனுமதிக்கப்பட்டன. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர், தி.மு.. வின் கருணாநிதி.
 4. மதுக்கடைகள் திறப்பதற்கு அப்போது ஏற்பட்ட கடும் எதிர்ப்பின் காரணமாக, 1973-ம் ஆண்டு கள்ளுக் கடைகளும் 1974-ம் ஆண்டு சாராயக்கடைகளும் IMFL கடைகளும் மூடப்பட்டன. தி.மு.. வின் கருணாநிதியே அப்போதும் முதலமைச்சராக இருந்தார். இந்த கால கட்டத்தில் மதுக்கடைகள் திறந்து மூடுவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் குஜராத், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் மட்டும்தான் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆகவே மது விலக்கை ஊக்குவிப்பதற்காக, மதுவிலக்கு கொண்டு வரப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே மதுவிலக்கு இருக்கும் மாநிலங்களுக்கு அந்த மானியம் வழங்க இயலாது  எனவும் அறிவித்தது. எனவே திராவிடக் கட்சிளுக்கே உரிய கிட்டப்பார்வை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தி.மு.. வும் மானியத்தைப் பெறுவதற்காக மதுவிலக்கை 1971-ம் ஆண்டு விலக்கிக்கொண்டு 1974-ம் ஆண்டு மீண்டும் அமல்படுத்தியது. காரணம் என்னவாக இருந்தாலும், அதன் பயனை தமிழகம் அனுபவிக்கத் தொடங்கி விட்டது.
 5. 1981-ம் ஆண்டு மீண்டும் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் அதிமுக - வின் எம்.ஜி. ராமச்சந்திரன்.
 6. 1983-ம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் அதிமுக - வின் எம்.ஜி. ராமச்சந்திரன்.
 7. 1983-ம் ஆண்டு டாஸ்மாக் (TASMAC) எனப் பெரும்பாலான தமிழர்களால் தற்போது மந்திர உச்சாடனம் செய்யப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் முதன்முறையாக உருவாக்கப்பட்டது. இது சாராயம் மற்றும் IMFL ஆகியவற்றுக்கான மொத்த விற்பனைக்காக உருவாக்கப்பட்டது. அதாவது சாராய தயாரிப்பாளர்களுக்கும் சாராய விற்பனையாளர்களுக்கும் இடையே ஒரு இடைத்தரகராக இருந்து அதன்மூலம் மாநிலத்தின் கருவூலத்துக்குப் பணம் சேர்ப்பதற்கு! அப்போதைய முதலமைச்சர் அதிமுக - வின் எம்.ஜி. ராமச்சந்திரன்.
 8. 1987-ம் ஆண்டு கள் மற்றும் சாரயம் மீண்டும் தடை செய்யப்பட்டது. ஆனால் IMFL-ன் ராஜாங்கம் தொடர்ந்தது. அப்போதும் எம்.ஜி. ராமச்சந்திரன் தான் முதலமைச்சராக இருந்தார். ஆனால் அவர் உடல் நலமில்லாத நிலையில் இருந்தார். அவர் சார்பில் ஆட்சி மற்றவர்களால் நடத்தப்பட்டு, தமிழ்நாட்டில் ஒரு மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டது. ஒருவர் சார்பில், எவ்வித பொறுப்புணர்வும் இல்லாமல் வேறு சிலர் ஆட்சியை நடத்துவது. செய்யப்படும் எந்தத் தவறுகளுக்கும் யாரும் பொறுப்பேற்க வேண்டியதில்லை! இந்தப் பொறுப்பின்மையை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள, தமிழக மக்கள் அப்போதே தயார் படுத்தப்பட்டிருந்தார்கள்!
 9. 1989 - ம் வருடம், தமிழ்நாடு எரிசாராய நிறுவனம் (TASCO - Tamilnadu Spirit Corporation Ltd.), வெளிநாட்டு மதுபானங்களை தயாரிப்பதற்காக தமிழக அரசால் நிறுவப்பட்டது. அப்போதைய தமிழக முதலமைச்சர் தி.மு.. வின் கருணாநிதி.
 10. 1990 - ம் வருடம் TASCO மூலம் மீண்டும் சாராயம் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டது. இதுவும் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது.
 11. 1991-ம் ஆண்டு சாராயம் மட்டும் மீண்டும் தடை செய்யப்பட்டது. IMFL தொடர்ந்து விற்பனையில் இருந்தது. இது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது.
 12. 2002 - ம் வருடம் டாஸ்கோ (TASCO) டாஸ்மாக் (TASMAC) உடன் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே நிறுவனமாக மாற்றப்பட்டது. இதுவும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது.
 13.  2003-ம் ஆண்டு டாஸ்மாக் (TASMAC) IMFL - ன் சில்லறை விற்பனையையும் ஏற்றெடுத்தது. முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா.

அதன் பின் டாஸ்மாக் - ம் மதுபான விற்பனையும் தமிழ்நாட்டு மக்களின் போதையின் அளவும் அதன் மூலம் உருவாகிய செயலின்மையும் நோய்களும் உற்பத்தி இழப்புகளும் வீறுநடை போட்டு தொடர்ந்து முன்னேறுகின்றன. அரசாங்கம் ஆண்டுதோறும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு விற்பனை இலக்கை நிர்ணயித்து அதன் மூலம் மக்களின் நோயின் பெருக்கத்துக்கும் சிந்தனைத் திறனை அழிப்பதற்கும் உற்பத்தி இழப்புக்கும் இலக்கு நிர்ணயிக்கின்றது. மக்களாட்சி அதன் கீழ்மையின் உச்சத்தை மீண்டும் மீண்டும் அடைந்து வருகிறது.

டாஸ்மாக் விற்பனையில் கிட்டத்தட்ட 88%, பல்வேறு வரிகள் மூலம் அரசாங்கத்திற்கு வருமானமாகச் செல்கிறது. மீதி 12% மட்டும்தான் நிறுவனத்தின் நிர்வாகச் செலவுகளும், உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான செலவுகளும். 2014-15 -ம்  ஆண்டில் டாஸ்மாக்-ன் வருமானம் ரூ.26000 கோடிக்கு சற்றே அதிகம். இதில் கிட்டத்தட்ட ரூ. 22900 கோடி அரசாங்கத்திற்கு வருமானமாக வருகிறது. 2014-15 ம் ஆண்டில், தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ. 1,33,188 கோடிகள். அதாவது தமிழ்நாட்டின் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 17% மது விற்பனையால் பெறப்படுகிறது. மக்களுக்கு போதையை அளித்துக் கறந்த இந்தப் பணம் அவர்களுக்கு இலவசங்களாக திருப்பி அளிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் வோட்டுகளாகவும் எதிர்கால ஊழலுக்கான ஊற்றுமுகமாகவும் மாற்றப்படுகிறது. கூடவே போனஸ் இலவசமாக மக்களுக்கு நோய்களும் அதன் விளைவான வாழ்க்கை பிரச்சினைகளும். தமிழக மக்களிடமிருந்து, இந்தத் தொடர்பை அறிந்து கொள்வதற்கான சிந்தனைத் திறன் நெடுங்காலமாக தொடர்ந்து திட்டமிட்டு தமிழகத்தின் ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு விட்டது.

மீதி 12% வருமானத்தில் பெரும்பகுதி கூட அரசியல்வாதிகளுக்கே சென்று மீண்டும் அரசியல் விளையாட்டுகளுக்காகத் திருப்பி விடப்படுகிறது. அல்லது அரசியல் செய்வதன் இலாபமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக டாஸ்மாக் கொள்முதல் செய்யும் நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசியல் கட்சித் தலைவர்களால் அல்லது அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களால் நடத்தப்படுகிறது.

கீழ்கண்ட தகவல்கள் 11-01-2015 அன்றைய எக்கனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டது. இவை டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது தயாரித்து விற்பனைச் செய்யும் நிறுவனங்களில் பெரும்பாலானவையும் அவற்றின் அரசியல் தொடர்புகளும்.

1.    மிடாஸ் கோல்டன் (Midas Golden). இது சசிகலாவின் நெருங்கிய உறவினரால் நடத்தப்படுகிறது - சசிகலா யார் என்று தமிழகத்தில் இருப்பவர்களுக்குத் தனியாக அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.
2.     எலைட் டிஸ்டில்லரீஸ் (Elite Distilleries). இது தி.மு.. வின் முன்னாள் எம்.பி. யும் தற்கால கல்வித்தந்தைகளில் ஒருவருமான ஜகத்ரட்சகனின் நிறுவனம்.
3.     எம்பீ குழுமம் (Empee Group) - முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் வயலார் ரவி-யின் மருமகளின் தந்தையின் நிறுவனம்
4.   கோல்டன் வாட்ஸ் (Golden Vats) -  தி.மு.-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு வின் நெருங்கிய தொடர்புடைய ஒருவரின் நிறுவனம். எனில் அது எவரின் நிறுவனம் என்பதை உணரும் நிலையில் தமிழகம் உள்ளதா எனத் தெரியவில்லை.
5.   எஸ்.என்.ஜே. டிஸ்டில்லரீஸ் (SNJ Distilleries). தி.மு.. தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான ஜெயமுருகன் என்பவருக்குச் சொந்தமான நிறுவனம்.

மதுவை இவ்வாறு அள்ளித் தெளிக்கும் தமிழக அரசாங்கங்கள், இயற்கையில் கிடைக்கும் ஊட்டச்சத்துள்ள கள் என்னும் நேரடி விவசாயப் பொருளை முற்றிலும் தடை செய்திருக்கிறது. வேதிப் பொருட்களால் கலப்படம் செய்யாதது வரைக்கும் கள் ஒரு ஊட்டச்சத்து பானம் - அது போதையை அளித்தாலும். அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் வறுமையில் இருக்கும் லட்சக்கணக்கானத் தொழிலாளர்களுக்கு ஒரு கௌரவமான சுயதொழிலாகவும் இருக்கத் தக்க ஒன்று. ஆனால் வறுமையில் இருப்பவர்களுக்குத் தொழில் வழங்கி அரசாங்கங்களுக்கு என்னக் கிடைக்கப்போகிறது? எங்கிருந்து இலவசங்களை வழங்குவார்கள்?

தமிழகம் எங்கும் மனிதர்கள் போதை தலைக்கேறி தெரு ஓரங்களிலும் குப்பை மேடுகளிலும் உறங்கி போதையை தணித்துக்கொண்டிருப்பதை காண்பது ஒன்றும் அதிசயமானது இல்லை. உண்மையில் அத்தகைய காட்சி காணக்கிடைக்காத நாள்தான் தமிழகத்தில் அதிசமான நாள்! அன்றாட கூலி வேலையில் வாழ்கையைக் கடத்தும் மக்கள் திரள்களில் தினம்தோறும் அரங்கேறும் போதை நாடகங்கள், அவல நாடகங்களாக முடிவடைகின்றன. அந்த சமூகத்தில் பெரும்பாலான ஆண்கள் போதைக்கு அடிமையாகி இருப்பவர்கள். அவர்கள் பெறும் கூலியில் பெரும்பகுதி டாஸ்மாக் நிறுவனத்திறகுச் செல்கிறது. அவர்கள் குடும்பங்கள் தொடர்ந்து வறுமையில்!

இன்னும் ஒரு வருடத்தில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வர இருக்கும் இந்த நேரம், தமிழக மக்கள் விரும்பினால், எதிர்காலத்தில் மதுவுக்கான தடைகளைக் கொண்டு வருவதற்குத் தேவையான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்ல சரியான தருணம். உண்மையில் மதுவுக்கு எதிரான இயக்கங்கள் தொடங்கி விட்டதாகவே தோன்றுகிறது. அரசியல் கட்சிகள் மதுவிலக்குக் குறித்து பேசத் தொடங்கியிருக்கின்றன. மிச்சமிருப்பது ஒரு வருடம் மட்டும்தான். அதற்குள் மக்களின் எழுச்சி ஏற்பட்டாக வேண்டும். அந்த எண்ணங்களை சமூகத்தின் பொதுபுத்தியில் உருவாக்குவது, அதற்கான வாய்ப்புள்ள அனைவருக்கும் தவிர்க்க முடியாத கடமை.


மது இதுவரைக்கும் தமிழ்நாட்டில், நோய்கள் மூலமும் விபத்துக்கள் மூலமும் பலி வாங்கிய மனித உயிர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படிருக்காது. ஆனால் மதுவிலக்குக்காக முதல் உயிர் தமிழ்நாட்டில் பலி கொடுக்கப்பட்டு விட்டது. மதுவிலக்குக்காக தொடர்ந்து போராடிவந்த காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் 31-07-2015 அன்று போராட்டக் களத்தில் உயிரிழந்தார். பெரும் பொறுப்பு ஒன்றை தமிழக மக்களிடம் விட்டுச் சென்றிருக்கிறார். அவருக்கு அஞ்சலி.

blog.change@gmail.com