Saturday, March 23, 2013

மூன்றாவது கண்!


அது எங்கிருக்கிறது? யாரிடம் இருக்கிறது? எதைப்பார்க்க உதவுகிறது? அது நம்மால் புரிந்து கொள்ள இயலாததா? அல்லது தெய்வங்களுக்கு மட்டும் உரியதா அது? அதன் பயன் என்ன? ஆம், பல கேள்விகள். நம் உறைந்த மனதால் அறிய இயலாத கேள்விகள்.

நாம் அறிவோம், மனிதர்களாகிய நாம் ஆறு அறிவு படைத்தவர்கள். நமது முதல் ஐந்து அறிவுகளும், ஐந்து புலன்களுடன் நேரடியாக தொடர்புடையவை. ஐந்து புலன் அறிவுகளுடன் நம் மனதையும் நம்மால் அறிய முடியும். ஐந்து அறிவுகளுடன் தொடர்புடைய புலன் உறுப்புகள், உடலில் வெளிப்படையாக இருப்பது போல் ஆறாவது அறிவுக்கு அவ்வாறு தொடர்புடைய வெளிப்படையான புலன் உறுப்பு எதுவும் இல்லை. நம் மனதை மனதால் மட்டுமே அறிய முடியும். நம் மனதை அறிய, மனதை தவிர வேறு எந்த கருவிகளும் நம்மிடம் இல்லை - ஒளியை அறிய கண்களும், ஒலியை அறிய காதுகளும் இருப்பது போல்! ஆம் மனதை அறியும் நம் மனமே மூன்றாவது கண். நம் ஆறாவது அறிவை நிகழ்த்தும் கருவி. அதை கண் என குறிப்பது வெறும் அடையாளம் மட்டுமே. ஐந்து புலன்கள் வெளி உலகத்தை அறிவது போல், அந்த ஐந்து வகையான அறிதல்களையும் அக உலகத்தை நோக்கி நிகழ்த்தும், நம் மனதை நோக்கி நிகழ்த்தும், நம் மனமே மூன்றாவது கண்.

 எனில் அந்த மூன்றாவது கண் தெய்வங்களுடன் மட்டும் ஏன் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது? நாமும் நம் மனதை அறிந்து கொண்டுதான் இருக்கிறோம். எனில் நாம் மூன்றாவது கண்ணை அடைந்தவர்கள் அல்ல என ஏன் கூறப்படுகிறது? நம் மனதை உண்மையாக நாம் அறிந்து கொண்டிருக்கவில்லை. நம் மனதை குறித்து நாம் அறிந்துகொண்டிருப்பதெல்லாம் வெறும் மேலோட்டமான, நம் புற வாழ்க்கைக்கு தேவையான மிகச்சில இயக்கங்களை மட்டுமே. நம் மனதின் பிரம்மாண்டம் நாம் அறியாமலே நமக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதைவிட பெரிய மகா பிரம்மாண்டம் நம் மனதினுள் உறங்கிக்கொண்டிருக்கிறது. நம் மூன்றாவது கண் உபயோகத்தில் வரும்போது மட்டுமே நம் மனதில் உறைந்திருக்கும் மகாபிரம்மாண்டம் நம் அறிதலின்  எல்லைக்குள் வரும். அல்லது அந்த மகாபிரம்மாண்டம் நம் அறிதலில் நுழையும்போது மட்டுமே நம் மூன்றாவது கண் திறக்க தொடங்கும்
.
நம் அறிதலின் இயல்பை நாம் சற்று நோக்கினால், உண்மையில் நாம் புற உலகத்தை குறித்து எதையும் அறியவில்லை என்பதை அறியலாம். நாம் அறிவதெல்லாம் நம் புலன்களின்  வெளியுலக இயக்கம் நம் மனிதினில் ஏற்படுத்தும் சலனங்களை மட்டுமே. உதாரணமாக, நாம் ஒரு பொருளை நம் விழியால் காணும்போது, உண்மையில் நாம் அந்த பொருளை உள்ளது உள்ளவாறே காணவில்லை. அந்த பொருளின் பிம்பம், நம் பார்வையின் தன்மைக்கேற்ப, விழியின் உணரும் தன்மைக்கேற்ப நம் விழித்திரையின் உறுதிக்கேற்ப, விழித்திரையிலிருந்து மூளைக்கு பார்வையுணர்வை கொண்டு செல்லும் நரம்புகளின் உறுதிக்கேற்ப, இன்னும் நாம் அறிந்திராத சில அல்லது பல தூண்டுதல்களுக்கு ஏற்ப, அந்த பொருள் நம் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. நாம் அந்த பொருளைக்குறித்து காண்பதெல்லாம் அந்த நேரத்தில் நம் மனதில் நிகழும், அந்த பொருளால் நம் மனதில் நிகழ்த்தப்படும் ஒரு சிறிய சலனத்தை மட்டுமே. நம் பிற புற உலக அறிதல்களும், இவ்வாறு புறப்பொருட்கள் நம் ஐம்புலன்களின் மூலம் நம் மனதில் ஏற்படுத்தும் சலனங்களை மட்டுமே.

மேலே கூறப்பட்டவற்றை ஏற்றுக்கொள்ள முடிந்தால், நம் அறிதல்கள் யாவும் நம் இயல்பிற்கேற்பவே இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள எந்த தடைகளும் இருக்காது. அதாவது புற உலகு என்பது நம் இயல்பிற்கேற்பவே அமைந்துள்ளது - நம்மைப்பொறுத்தவரை! ஏனெனில் புற உலகு என்பது நம் ஐம்புலன்களின் மூலம் நாம் அடைந்த அறிதல்களின் தொகுப்பே. இங்கு நுண்துகள் இயற்பியலின் (Quantum Physics)  கோபன்ஹேகன் விளக்கத்தை    (CopenanHagen Theory)  புரிந்து கொள்வது சற்று உபயோகமாக இருக்கலாம்.

The Copenhagen interpretation is one of the earliest and most commonly taught interpretations of quantum mechanics. It holds that quantum mechanics does not yield a description of an objective reality but deals only with probabilities of observing, or measuring, various aspects of energy quanta, entities which fit neither the classical idea of particles nor the classical idea of waves. According to the interpretation, the act of measurement causes the set of probabilities to immediately and randomly assume only one of the possible values. This feature of the mathematics is known as wavefunction collapse. The essential concepts of the interpretation were devised by Niels Bohr, Werner Heisenberg and others in the years 1924–27.

இதை நம் வார்த்தைகளில் கூறினால், எந்த ஒரு அறிதலும் அந்த அறியும் கணத்தில், அந்த அறிதலால் அடையக்கூடிய பல்வேறு சாத்தியங்களில் ஒன்றை மட்டுமே அறியும். ஆக நம் அறிதல்கள் யாவும் புற உலகம், நாம் அறியும் கணத்தில் நம் மனதில் ஏற்படுத்தும் சலனங்களை மட்டுமே. அல்லது நம் புற உலக அறிவு என்பது, புற உலகத்தால் இருக்க சாத்தியமான எண்ணற்ற சாத்தியக்கூறுகளில், நம் புலன்களின், மனதின் தகுதிக்கேற்ப, அந்த நேரத்தில் உள்ள ஒரு சாத்தியக்கூறு மாத்திரமே.

மீண்டும் நம் மூன்றாவது கண்ணிற்கு! தற்போதைய நம் மன நிலையில், நம் மனம் புற உலகத்தை நோக்கியே திரும்பியிருக்கிறது. அதாவது, நம் மனம், புற உலகைக்குறித்த நம் அறிதல்கள் நிகழ்ந்த கணத்தில் நம் மன சலனம் எவ்வாறு இருந்ததோ, அந்த சலனத்தில் உறைந்தும், ஆனால் வெளி உலகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்னும் மாயையில் விழுந்தும், ஒரு உறைநிலையில் இருந்து கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் நம் மனம், அதன் நிகழ்வுகளை அறியாமல், ஒருவிதமான உறைநிலையை மாத்திரம் அறிந்து கொண்டிருக்கிறது. நாம் நம் மனதைக்குறித்து அறிவதெல்லாம் அந்த மனதின் ஒரு குறிப்பிட்ட உறைநிலையை மட்டுமே.
நம் மூன்றாவது கண் விழிப்படையும்போது, நாம் அறிவதெல்லாம் நம் மனசலனங்களை மட்டுமே என்னும் அறிதலுடன் நம் அறிதல் நிகழ்ந்துகொண்டிருக்கும். அத்தகைய அறிதல் நிகழும்போது, நாம் புற உலகத்தை அகத்தில் காணும்போது, புற உலகம் கடந்த கணத்தில் அல்லது காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதையோ அல்லது அடுத்த கணத்தில், எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்பதையோ நம் மனம் ஆராய தொடங்குவதில்லை. ஏனெனில், அத்தகைய அறிதலை அடைய தன்னால் சாத்தியமில்லை என்பதை, தன் இயலாமையை, நம் மனம் முழுவதுமாக அறிந்திருக்கும். கடந்த காலத்தையோ அல்லது எதிர்காலத்தையோ தன்னால் அடைய சாத்தியமில்லை என்பதை உணர்ந்த மனம், கடந்த கால நிகழ்விலோ அல்லது எதிர்கால எதிர்பார்ப்பிலோ உறைந்நிருக்காமல், நிகழ்காலத்தின் நிகழ்வுகளாக நிகழ்ந்துகொண்டிருக்கும் - மூன்றாவது கண்ணின் முழு விழிப்புநிலையுடன்!

எவ்வாறு நம் மனதின் புற உலக பார்வையை, அக உலகை நோக்கி திருப்புவது? ஒவ்வொரு மதங்களும், ஒவ்வொரு தத்துவங்களும், அவற்றின் இயல்புக்கேற்ப வேறு வேறு முறைகளை பரிந்துரைத்திருக்கலாம். அவற்றில் நம் இயல்பிற்கேற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து முழு ஈடுபாட்டுடன் விரும்பினால், அக உலகை நோக்கிய நம் பார்வையை திறப்பது அத்தனை கடினமான ஒன்றாக இருக்க முடியாது. அந்த ஈடுபாடு நம்முள் நிகழ, நம் தற்போதைய வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டால், பகுத்தறிவிற்குட்பட்ட சில ஆன்மீக அறிதல்கள் நம்முள் நிகழ்ந்தாக வேண்டும். அதன்பின் மாத்திரமே பகுத்தறிவைக்கடந்த ஆன்மீகத்தை நம்மால் தரிசிக்க முடியும்.

ஆம், நம் மதங்களையும், தத்துவங்களையும், குருமார்களையும் மனதின் முன் முடிவுகளுடன் ஏற்றுக்கொள்வதை விட்டு விட்டு, அந்த மதங்களையும், தத்துவங்களையும், குருமார்களையும் பகுத்தறிவுடன் ஏற்றுக்கொண்டு, அவர்கள் கருத்துகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் அதே மனநிலையுடன் எதிர் கருத்துக்களையும் ஆராய்ந்தறியும்போது, பகுத்தறிவை கடந்த ஆன்மீக நிலையை அடைவதற்கு தேவையான ஈடுபாட்டை நாம் அடைந்திருப்போம்! நம் மதங்களும், தத்துவங்களும், குருமார்களும் விரும்புவது, அத்தகைய ஆன்மீக நிலையை நாம் அடைவதையே - ஒருவேளை நம்மால் மதங்களையோ, குருவையோ பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டு, மனிதின் முன்முடிவுகளின்றி உள்ளது உள்ளவாறே, அவ நம்பிக்கையின்றி ஏற்றுக்கொள்ள முடிந்தால், அங்கு பகுத்தறிவிற்கு எந்த தேவையும் இல்லை! துரதிர்ஷ்டவசமாக, நம் தற்போதைய வாழ்க்கை முறையில் நாம் எவரும் அத்தகைய நிலையில் இல்லை. அந்நிலையில் நம்மில் எவரேனும் இருந்திருந்தால் மதங்களையோ அல்லது ஒரு ஆன்மீக குருவையோ பின்பற்றும் பலரும் மூன்றாவது கண்ணை எப்போதோ அடைந்திருப்போம்.


கூடுதல் வாசிப்பிற்கு;  http://gurunitya.wordpress.com/2013/03/22/