Sunday, June 24, 2012

எண்ணங்கள்

நம் சாதாரண மனநிலையில் எண்ணங்கள் மட்டுமே நனவுநிலை அல்லது நாம் அறிந்த மனதின் உள்ளிருப்பாக (content) இருக்கிறது. நாம் பார்ப்பது, கேட்பது, செய்வது அனைத்தையும் எண்ணங்களாகவே நாம் அறிகிறோம். எண்ணங்களின் குறுக்கீடு இல்லாமல் நம்மால் எந்த செயல்களையும் செய்ய முடிவதில்லை. எண்ணங்களே நம் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கின்றன. நம் ஒவ்வொரு செயல்களும் எண்ணங்களையே அடிப்படையாக கொண்டுள்ளன. மூளை, எண்ணங்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாகவே நம்மால் மாற்றப்பட்டுள்ளது. நம் சந்ததியினரின் மூளையையும் ஒரு தொழிற்சாலையாக மாற்றுவதற்கான முயற்சியையும் நம்மால் முடிந்த அளவில் செய்து கொண்டிருக்கிறோம். நம் இன்பங்களையும் துன்பங்களையும் எண்ணங்களாகவே மாற்றி அறியக்கூடிய வகையில் நம் மூளை அதன் எண்ணங்களை உற்பத்தி செய்யும் தொழிலில் மூழ்கி இருக்குமாறு, அதன் இயக்கங்களை அமைத்து கொண்டுள்ளோம். இத்தகைய மூளையின் இடைவிடாத எண்ணங்களை உருவாக்கும் ஈடுபாட்டினால் எண்ணங்களே வாழ்க்கையின் இயங்குசக்தி என்னும் முடிவுக்கு வந்து, அந்த எண்ணங்களை வழிப்படுத்தும் புதிய எண்ணங்களை நம் மனதில் உருவாக்கி, எண்ண தொழிற்சாலையின் உற்பத்தி திறனையும் தினம்தோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறோம் – இந்த தொழிற்சாலையின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அதீத உற்பத்தி, தொழிற்சாலையை அதன் நிர்ணயிக்கப்பட்ட வாழ்நாளுக்கு முன்னதாகவே பழுதடைய செய்யும் என்பதை அறிந்தும் அறியாமல், நம் வாழ்க்கையையே எண்ணங்களின் உற்பத்திக்கு அற்பணித்து, எல்லா விதமான உண்மையான சுயநலங்களையும் மறந்து, எண்ணங்களால் உருவாக்கப்பட்ட சுயங்களுக்காக வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக இழந்து விட்டிருக்கிறோம்.


எண்ணங்கள் நமக்கு தேவை இல்லை என்றால், அவை நம் வாழ்க்கையை அழிப்பவை என்றால், எதற்காக அவை நமக்கு வழங்கப்பட்டுள்ளது? ஆம் எண்ணங்கள் மனித இனத்துக்கு இன்றியமையாத ஒன்று. எண்ணங்களின் உதவியால் நாம் அடைந்தவையே நம்மை பிற உயிரினங்களிடமிருந்து உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. எண்ணங்களை உருவாக்கும் திறனை நம் மூளை இழந்து விட்டால், அது மனித மூளையாகவும், நாம் மனிதர்களாகவும் இருக்க முடியாது. ஆனால் அதே எண்ணங்களே நம்மை விலங்குகளுக்கும் கீழ் நிலையில் நம்மை தரம் தாழ்த்தவும் செய்கிறது.

எண்ணங்கள் மனிதர்களின் ஆயுதம். அந்த ஆயுதத்தை நம் முன் உள்ள தடைகளை அழிக்கவும் உபயோகப்படுத்தலாம், அல்லது நம்மையே அழிக்கவும் உபயோகப்படுத்தலாம். நாம் என்பது எது, நம் தடைகள் எவை என்பதை நம்மால் பிரித்துணர முடிந்தால்தான் நம்மிடம் இருக்கும் ஆயுதத்தை எங்கு பிரயோகப்படுத்துகிறோம் என்பதை நம்மால் அறிய முடியும். நம் உண்மையான சுயம்(self) என்பது எது, மனமயக்கங்களாலும் மாயைகளாலும் உருவாக்கப்பட்ட சுயம் என்பது எது என்பதை அந்த மாயைகளின் உற்பத்திகளனான நம் மனதால் பிரித்துணர முடியுமா? அவ்வாறு பிரித்துணர முடிந்தால் ஒருவேளை எண்ணங்களாகிய ஆயுதத்தை, நம் தடைகளை நோக்கி பிரயோகித்து, நம் வாழ்க்கையின் உச்சத்தை நம்மால் அடைய முடியலாம். நம் மனம் மாயைகளின் பிரதிபலிப்பாக மட்டும் இல்லாமல் உண்மையான சுயத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது. எனவே மனம் உண்மையையும் அறியும் தன்மையுடனே உள்ளது. நம் மூளையால் உண்மையை அறியவேண்டும் என்னும் விருப்பத்தை உண்மையாகவே உருவாக்க முடிந்தால், எண்ணங்கள் என்னும் ஆயுதத்தை பிரயோகப்படுத்தும் களத்தையும் நம்மால் அறிய முடியலாம். அந்த களத்தை அறிந்த பின்னால் எண்ணங்கள் ஓரு அழிக்கும் ஆயுதம் அல்ல, அது ஒரு ஆக்கும் ஆயுதம்.

கல்வியால் மட்டுமே நம் மூளையினுள் உண்மையை அறியவேண்டும் என்னும் விருப்பத்தை உருவாக்க முடியும். இங்கு கல்வி என்பது, நடைமுறையில் உள்ள பள்ளி, கல்லூரி சார்ந்த இலக்கு நோக்கிய ஒட்டம் அல்ல. கல்வி என்பது வாழ்க்கை கல்வி, அனுபவத்தால் அறியும் கல்வி, அனுபவத்தை அளிக்கும் கல்வி. இன்றைய இலக்கு நோக்கிய நடைமுறை கல்வியில் அனுபவத்திற்கு எந்த இடமும் அளிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. உண்மையில் அனுபவத்திற்கு பதிலாக இலக்கு நோக்கிய ஓட்டத்தின் வேகத்தை அதிகரிக்க மட்டுமே நம் கல்வி முறை பயிற்றுவிக்கிறது. இலக்கை அடையும்போது பெறும் அனுபவத்தை அது அனுமதிப்பதில்லை. இலக்கை அடைந்த உடனே அடுத்த இலக்குக்கான ஓட்டம் தொடங்கி விடுகிறது. அனுபவம், அனுபவிக்கப்படாமல் மறைகிறது. வாழ்க்கை என்பது கணத்துக்கு கணம் பெறும் அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே. அந்த அனுபவங்களை அடைய முடியாத அல்லது அந்த அனுபவங்களை அடைவதிலிருந்து நம்மை புறந்தள்ளும் எல்லா இலக்குகளும் மாயைகளே. உண்மையான கல்வியை, அனுபவத்தை அளிக்கும் கல்வியை நாம் சார்ந்திருக்கும் சமூகமும் அந்த சமூகத்தில் நடைமுறையில் உள்ள கல்வி முறையும் நமக்கு அளிக்கவில்லை. ஆகவே நம் தனிப்பட்ட முயற்சியால் மட்டுமே அனுபவத்தை அளிக்கும் கல்வியை பெறமுடியலாம். ஆக, உண்மையான கல்வியை அடைவது கூட தற்செயல் நிகழ்வாக ஆக்கப்பட்டுளது. அந்த தற்செயல் நிகழ்வு நமக்குள் நிகழ்ந்தால் மட்டுமே, கல்வியை நம்மால் அடையமுடியும். அந்த அனுபவ கல்வி மூலம் உண்மையை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் நமக்குள் தூண்டப்பட்டால் மட்டுமே, நம் உண்மையான சுயத்தை அறிவதற்கான விருப்பமும், தேடலும் நமக்குள் தோற்றுவிக்கப்படலாம்.

நம் அன்றாட செயல்பாடுகளுக்கு எண்ணங்களும் நினைவுகளும் அவசியம். இவை அந்த செயல்கள் தேவைப்படும் தளத்தில், தேவைப்படும் நேரத்தில் மட்டும். ஆனால் அந்த செயல்பாடு முடிந்த பின்னும் அதன் விளைவுகளை அடைந்த பின்னும் (எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவுகள்), அந்த செயல் குறித்த எண்ணங்களும் நினைவுகளும் நம் மனதை நிறைப்பது என்பது எண்ணங்கள் நம் தேவைக்காக மட்டும் நிகழவில்லை என்பதை உறுதி செய்கிறது. எண்ணங்கள் நம் ஆயுதமாக இருக்கும்போது அவை நம் தேவைகளுக்காக மட்டுமே இயங்க வேண்டும். மனிதர்களாகிய நம்மிடம் இருக்கும் எண்ணம் என்னும் மிகப்பெரிய ஆயுதம் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாகவே இயங்குகிறது. அதாவது, நம்மிடம் இருக்கும் எண்ணமாகிய ஆயுதம், நம் தேவைக்கேற்ப இயங்காமல், அதன் இயக்கத்திற்கேற்ப நம் தேவைகளை வடிவமைக்கிறது. ஆகவே நம் அடிமையாக இருக்க வேண்டிய எண்ணமாகிய ஆயுதமே நம் தேவைகளை வடிவமைத்து, நம்மை அதன் அடிமையாக மாற்றி விட்டது. ஆக, நம் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் ஆயுதத்தை நம்மிடம் வைத்திருக்கம் நாம், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே – நம் வாழ வேண்டும் என்னும் விருப்பத்தின் விளைவு அல்ல!

நம்மை அடிமையாக கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்று, எண்ணங்களை நம் தேவைக்கேற்ப உபயோகப்படுத்தும் ஆற்றலை நம்மால் பெற முடியுமா? எல்லா மதங்களும், எல்லா புனித நூல்களும், எல்லா தத்துவக் கோட்பாடுகளும், எல்லா ஆன்மீக வழிகளும் அந்த ஒற்றை நோக்கத்திற்காகவே இந்த உலகில் தோன்றியிருக்க வேண்டும்!

blog.change@gmail.com

No comments: