Sunday, June 24, 2012

எண்ணங்கள்

நம் சாதாரண மனநிலையில் எண்ணங்கள் மட்டுமே நனவுநிலை அல்லது நாம் அறிந்த மனதின் உள்ளிருப்பாக (content) இருக்கிறது. நாம் பார்ப்பது, கேட்பது, செய்வது அனைத்தையும் எண்ணங்களாகவே நாம் அறிகிறோம். எண்ணங்களின் குறுக்கீடு இல்லாமல் நம்மால் எந்த செயல்களையும் செய்ய முடிவதில்லை. எண்ணங்களே நம் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கின்றன. நம் ஒவ்வொரு செயல்களும் எண்ணங்களையே அடிப்படையாக கொண்டுள்ளன. மூளை, எண்ணங்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையாகவே நம்மால் மாற்றப்பட்டுள்ளது. நம் சந்ததியினரின் மூளையையும் ஒரு தொழிற்சாலையாக மாற்றுவதற்கான முயற்சியையும் நம்மால் முடிந்த அளவில் செய்து கொண்டிருக்கிறோம். நம் இன்பங்களையும் துன்பங்களையும் எண்ணங்களாகவே மாற்றி அறியக்கூடிய வகையில் நம் மூளை அதன் எண்ணங்களை உற்பத்தி செய்யும் தொழிலில் மூழ்கி இருக்குமாறு, அதன் இயக்கங்களை அமைத்து கொண்டுள்ளோம். இத்தகைய மூளையின் இடைவிடாத எண்ணங்களை உருவாக்கும் ஈடுபாட்டினால் எண்ணங்களே வாழ்க்கையின் இயங்குசக்தி என்னும் முடிவுக்கு வந்து, அந்த எண்ணங்களை வழிப்படுத்தும் புதிய எண்ணங்களை நம் மனதில் உருவாக்கி, எண்ண தொழிற்சாலையின் உற்பத்தி திறனையும் தினம்தோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறோம் – இந்த தொழிற்சாலையின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அதீத உற்பத்தி, தொழிற்சாலையை அதன் நிர்ணயிக்கப்பட்ட வாழ்நாளுக்கு முன்னதாகவே பழுதடைய செய்யும் என்பதை அறிந்தும் அறியாமல், நம் வாழ்க்கையையே எண்ணங்களின் உற்பத்திக்கு அற்பணித்து, எல்லா விதமான உண்மையான சுயநலங்களையும் மறந்து, எண்ணங்களால் உருவாக்கப்பட்ட சுயங்களுக்காக வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக இழந்து விட்டிருக்கிறோம்.


எண்ணங்கள் நமக்கு தேவை இல்லை என்றால், அவை நம் வாழ்க்கையை அழிப்பவை என்றால், எதற்காக அவை நமக்கு வழங்கப்பட்டுள்ளது? ஆம் எண்ணங்கள் மனித இனத்துக்கு இன்றியமையாத ஒன்று. எண்ணங்களின் உதவியால் நாம் அடைந்தவையே நம்மை பிற உயிரினங்களிடமிருந்து உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. எண்ணங்களை உருவாக்கும் திறனை நம் மூளை இழந்து விட்டால், அது மனித மூளையாகவும், நாம் மனிதர்களாகவும் இருக்க முடியாது. ஆனால் அதே எண்ணங்களே நம்மை விலங்குகளுக்கும் கீழ் நிலையில் நம்மை தரம் தாழ்த்தவும் செய்கிறது.

எண்ணங்கள் மனிதர்களின் ஆயுதம். அந்த ஆயுதத்தை நம் முன் உள்ள தடைகளை அழிக்கவும் உபயோகப்படுத்தலாம், அல்லது நம்மையே அழிக்கவும் உபயோகப்படுத்தலாம். நாம் என்பது எது, நம் தடைகள் எவை என்பதை நம்மால் பிரித்துணர முடிந்தால்தான் நம்மிடம் இருக்கும் ஆயுதத்தை எங்கு பிரயோகப்படுத்துகிறோம் என்பதை நம்மால் அறிய முடியும். நம் உண்மையான சுயம்(self) என்பது எது, மனமயக்கங்களாலும் மாயைகளாலும் உருவாக்கப்பட்ட சுயம் என்பது எது என்பதை அந்த மாயைகளின் உற்பத்திகளனான நம் மனதால் பிரித்துணர முடியுமா? அவ்வாறு பிரித்துணர முடிந்தால் ஒருவேளை எண்ணங்களாகிய ஆயுதத்தை, நம் தடைகளை நோக்கி பிரயோகித்து, நம் வாழ்க்கையின் உச்சத்தை நம்மால் அடைய முடியலாம். நம் மனம் மாயைகளின் பிரதிபலிப்பாக மட்டும் இல்லாமல் உண்மையான சுயத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது. எனவே மனம் உண்மையையும் அறியும் தன்மையுடனே உள்ளது. நம் மூளையால் உண்மையை அறியவேண்டும் என்னும் விருப்பத்தை உண்மையாகவே உருவாக்க முடிந்தால், எண்ணங்கள் என்னும் ஆயுதத்தை பிரயோகப்படுத்தும் களத்தையும் நம்மால் அறிய முடியலாம். அந்த களத்தை அறிந்த பின்னால் எண்ணங்கள் ஓரு அழிக்கும் ஆயுதம் அல்ல, அது ஒரு ஆக்கும் ஆயுதம்.

கல்வியால் மட்டுமே நம் மூளையினுள் உண்மையை அறியவேண்டும் என்னும் விருப்பத்தை உருவாக்க முடியும். இங்கு கல்வி என்பது, நடைமுறையில் உள்ள பள்ளி, கல்லூரி சார்ந்த இலக்கு நோக்கிய ஒட்டம் அல்ல. கல்வி என்பது வாழ்க்கை கல்வி, அனுபவத்தால் அறியும் கல்வி, அனுபவத்தை அளிக்கும் கல்வி. இன்றைய இலக்கு நோக்கிய நடைமுறை கல்வியில் அனுபவத்திற்கு எந்த இடமும் அளிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. உண்மையில் அனுபவத்திற்கு பதிலாக இலக்கு நோக்கிய ஓட்டத்தின் வேகத்தை அதிகரிக்க மட்டுமே நம் கல்வி முறை பயிற்றுவிக்கிறது. இலக்கை அடையும்போது பெறும் அனுபவத்தை அது அனுமதிப்பதில்லை. இலக்கை அடைந்த உடனே அடுத்த இலக்குக்கான ஓட்டம் தொடங்கி விடுகிறது. அனுபவம், அனுபவிக்கப்படாமல் மறைகிறது. வாழ்க்கை என்பது கணத்துக்கு கணம் பெறும் அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே. அந்த அனுபவங்களை அடைய முடியாத அல்லது அந்த அனுபவங்களை அடைவதிலிருந்து நம்மை புறந்தள்ளும் எல்லா இலக்குகளும் மாயைகளே. உண்மையான கல்வியை, அனுபவத்தை அளிக்கும் கல்வியை நாம் சார்ந்திருக்கும் சமூகமும் அந்த சமூகத்தில் நடைமுறையில் உள்ள கல்வி முறையும் நமக்கு அளிக்கவில்லை. ஆகவே நம் தனிப்பட்ட முயற்சியால் மட்டுமே அனுபவத்தை அளிக்கும் கல்வியை பெறமுடியலாம். ஆக, உண்மையான கல்வியை அடைவது கூட தற்செயல் நிகழ்வாக ஆக்கப்பட்டுளது. அந்த தற்செயல் நிகழ்வு நமக்குள் நிகழ்ந்தால் மட்டுமே, கல்வியை நம்மால் அடையமுடியும். அந்த அனுபவ கல்வி மூலம் உண்மையை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் நமக்குள் தூண்டப்பட்டால் மட்டுமே, நம் உண்மையான சுயத்தை அறிவதற்கான விருப்பமும், தேடலும் நமக்குள் தோற்றுவிக்கப்படலாம்.

நம் அன்றாட செயல்பாடுகளுக்கு எண்ணங்களும் நினைவுகளும் அவசியம். இவை அந்த செயல்கள் தேவைப்படும் தளத்தில், தேவைப்படும் நேரத்தில் மட்டும். ஆனால் அந்த செயல்பாடு முடிந்த பின்னும் அதன் விளைவுகளை அடைந்த பின்னும் (எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவுகள்), அந்த செயல் குறித்த எண்ணங்களும் நினைவுகளும் நம் மனதை நிறைப்பது என்பது எண்ணங்கள் நம் தேவைக்காக மட்டும் நிகழவில்லை என்பதை உறுதி செய்கிறது. எண்ணங்கள் நம் ஆயுதமாக இருக்கும்போது அவை நம் தேவைகளுக்காக மட்டுமே இயங்க வேண்டும். மனிதர்களாகிய நம்மிடம் இருக்கும் எண்ணம் என்னும் மிகப்பெரிய ஆயுதம் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாகவே இயங்குகிறது. அதாவது, நம்மிடம் இருக்கும் எண்ணமாகிய ஆயுதம், நம் தேவைக்கேற்ப இயங்காமல், அதன் இயக்கத்திற்கேற்ப நம் தேவைகளை வடிவமைக்கிறது. ஆகவே நம் அடிமையாக இருக்க வேண்டிய எண்ணமாகிய ஆயுதமே நம் தேவைகளை வடிவமைத்து, நம்மை அதன் அடிமையாக மாற்றி விட்டது. ஆக, நம் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் ஆயுதத்தை நம்மிடம் வைத்திருக்கம் நாம், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே – நம் வாழ வேண்டும் என்னும் விருப்பத்தின் விளைவு அல்ல!

நம்மை அடிமையாக கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுதலை பெற்று, எண்ணங்களை நம் தேவைக்கேற்ப உபயோகப்படுத்தும் ஆற்றலை நம்மால் பெற முடியுமா? எல்லா மதங்களும், எல்லா புனித நூல்களும், எல்லா தத்துவக் கோட்பாடுகளும், எல்லா ஆன்மீக வழிகளும் அந்த ஒற்றை நோக்கத்திற்காகவே இந்த உலகில் தோன்றியிருக்க வேண்டும்!

blog.change@gmail.com

Sunday, June 17, 2012

மனம், மனமயக்கம், மாயை

கடவுள் என்பது ஒரு இருப்பா (சத் - existance) அல்லது இன்மையா (அசத்- non-existance) என்னும் உபநிஷங்கள் எழுப்பும் கேள்வியை நம் மனதை நோக்கியும் நாம் கேட்கலாம். இங்கு இன்மை என்பது இருப்பு என்பதன் எதிர்பதம் ஆகாது. இன்மை என்பது எல்லாவற்றையும் அதனுள் அடக்கும் முழு வெறுமை – இந்த அர்த்தத்தில் இருப்பு என்பது இன்மையினுள் மிதக்கும் சிறுதுகள் மட்டுமே. இன்மை என்பதை நிகழ்வு என்னும் அர்த்தத்திலும் கொள்ளலாம்.


இந்த அர்த்தத்தில் மனம் ஒரு இருப்பா (சத்), நிகழ்வா(அசத்) என்னும் கேள்வியை எழுப்பினால் மனம் ஒரு நிகழ்வு என்பதே பதிலாக இருக்க முடியும். மனம் என்பது ஒரு பொதீக பொருள் அல்ல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. அதாவது மூளையின் இயக்கங்களின் பிம்பங்களே மனமாக வெளிப்படுகிறது. அதாவது மனம் என்னும் நிகழ்விற்கு மூளை என்னும் இருப்பு தேவைப்படுகிறது. (கடவுள் என்பது நிகழ்வாக இருந்தால், அந்த நிகழ்விற்கு அடிப்படையாக எந்த இருப்பும் தேவையாக இருக்க முடியாது. எனவே சத், அசத் என்னும் வார்த்தைகளை மனதிற்கு பொருத்தி பார்ப்பது, ஒரு தகுதியற்ற ஒப்பீடு மட்டுமே) மூளை அதன் இயக்கத்திலிருந்து முழுமையாக விடுபடும்போது அல்லது மூளையின் உயிர்ப்பு இல்லாமல் ஆகும்போது மனம் என்னும் நிகழ்வும் இல்லாமல் ஆகிறது.

மூளையின் இயக்கங்கள், அதன் வெளிப்புற இயக்கங்களுடன் ஒத்திசைவில் இருக்குமானால், அந்த இயக்கங்களின் வெளிப்பாடான மனமும் அதன் வெளிப்புற இயக்கங்களுடன் ஒத்திசைவில் இருக்க கூடும். இத்தகைய மூளையின் ஒத்திசைவான இயக்கங்களை வெளிப்படுத்தும் மனமே உண்மையை அல்லது கடவுளை உணரும் மனமாக இருக்கலாம். மூளை அதன் அறிதல்கள் மூலம் சுய அடையாளங்களை உருவாக்கி கொள்ளும்போது, அது வெளிப்புற இயக்கங்களுடனான ஒத்திசைவை இழந்து, அதுவே உருவாக்கிக்கொண்ட சுயங்களுடன்(Self) ஒத்திசைவை ஏற்படுத்துகிறது. மூளை உருவாக்கும் சுயம் என்பது ஒற்றைப்படையான ஒரு இயக்கம் அல்ல. மூளை அறியும் ஒவ்வொரு அறிதலும் ஒரு சுயத்தை உருவாக்குகிறது. மேலும் மூளை அடைந்த அறிவின் இயல்பிற்கேற்ப இந்த ஒவ்வொரு சுயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாததாகவும் முரண்பட்டதாகவும் இருக்க கூடும். ஆக, மூளை அதுவாகவே உருவாக்கிக்கொண்ட சுயங்களுடன் ஒத்திசைந்து செயல்களை வெளிப்படுத்தும்போது, அந்த செயல்களும் செயல்களின் மூலம் அடையப்படும் விளைவுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாகவோ, முரண்பட்டதாகவோ இருக்கும். இத்தகைய செயல்கள் மற்றும் விளைவுகளின் தொடர்பின்மையும் முரண்பாடுகளுமே நம் வாழ்க்கையின் இன்ப துன்பங்களுக்கு அடிப்படை காரணியாக இருக்கிறது.

உண்மையான சுயம் என்பது நாம் இந்த உலகில் தோன்றியபின் உருவாகி நம்முடன் ஒட்டிக்கொண்ட ஒன்றாக இருக்க முடியாது. நம் உண்மையான சுயம், நாம் இந்த உலகில் தோன்றும்போது உருவான ஒன்றாக மட்டுமே இருக்க முடியும் – அந்த சுயம் என்பது நம் பிறப்புடன் தோன்றி இறப்புடன் முடியும் ஒன்றாக இருந்தால். நாம் பிறந்தபின், மூளையின் அறிதல் இயக்கம் தொடங்கியபின், மூளை உருவாக்கும் சுயங்கள் எல்லாம், அந்த மூளையால் உருவாக்கப்பட்ட மாயத்தோற்றங்களே. மாயத்தோற்றங்களை உருவாக்கும் மூளை, வெளிப்புற இயக்கங்களுடனான தன் ஒத்திசைவிலிருந்து தன்னை விடுவித்துக்கொணைடு, அதனால் உருவாக்கப்பட்ட மாயத்தோற்றங்களான சுயங்களுடன் ஒத்திசைந்து புதிய அறிதல்களை நிகழ்த்துகிறது. இந்த மாயத்தோற்றங்களுடன் ஓத்திசைந்து இயங்கும் மூளையின் ஒவ்வொரு இயக்கத்தையும் தன் நிகழ்வாக பெறும் மனம், வெறும் மனமயக்கம் மட்டுமே. அதாவது, நம் வாழ்க்கையை பெரும்பாலும் மனமயக்கங்களாக இருக்கும் இயக்கங்கள் மற்றும் அந்த மனமயக்கங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்படும் இயக்கங்களினால் மட்டுமே இயக்கிக்கொண்டிருக்கின்றன. அதாவது நம் வாழ்க்கைக்கும் உண்மைக்கும் இடையில் எந்த வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருந்தால், அந்த தொடர்பு பிரக்ஞ்சைபூர்வமாக நம்மால் ஏற்படுத்தப்பட்ட தொடர்பு அல்ல. அது வெறும் தற்செயல் நிகழ்வு மட்டுமே.

எனில் நாம் பிறக்கும்போது நம் மூளை இயற்கையுடன் கொண்டிருந்த ஒத்திசைவு இயக்கத்தை எவ்வாறு நாம் இழக்கிறோம்? நம் சுற்றுச்சூழலும் சமூகமும் நம் மீது செலுத்தும் ஆதிக்கம் இந்த இழப்புக்கு காரணமாக இருக்கலாம். நம் மனம் இயற்கையுடன் தொடர்ச்சியாக ஒத்திசைவுடன் இருக்க அது அதீத சக்தியுடனும் முழு உயிர்ப்புடனும் இருக்க வேண்டியது மிக அவசியம். சமூகம் நம் மேல் செலுத்தும் ஆதிக்கத்தின் தன்மை அந்த உயிர்ப்பை இழக்க செய்திருக்க கூடும். இயற்கையுடன் தொடர்பை இழந்த மனம், அதன் இயக்கத்தை தக்க வைத்து கொள்வதற்கு, சுயங்களை உருவாக்கி, அந்த சுயங்களுடன் ஒத்திசைந்து தன் இயக்கத்தை தொடர்ந்திருக்கலாம். அவ்வாறு சுயங்களை உருவாக்க இயலாத மனம், மனப்பிறழ்வு நிலையை அடைந்து வெளிஉலகத்திடமிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக் கொள்ள நேரலாம்.

ஆன்மீகம் என்பது இயற்கையுடனான நம் மனதின் உறவை முற்றிலுமாக திரும்பப் பெறுவதற்கான இயக்கமே. நம் மனம் மீண்டும் இயற்கையுடனான ஒத்திசைவை திரும்பப்பெற வேண்டுமானால், மனம் அதுவாக உருவாக்கிக்கொண்ட சுயங்களிலிருந்து விடுபட்டாக வேண்டும். நாம் அறிந்தவைகளே நம் சுயத்தை உருவாக்குகிறது. எனவே சுயங்களிலிருந்து விடுபட, நாம் அறிந்தவைகளிலிருந்து விடுபட்டாக வேண்டும். நாம் அறிந்தவைகளின் இயல்பை அறிவதும், நம் சுயங்களின் இயல்பை அறிவதும், இயற்கையுடனான தொடர்பை மீண்டும் பெறுவதற்கான எளிய வழிகளாக இருக்க கூடும். மனம் அடைந்த சுயங்களை அழிப்பதற்கான வேறு வழிகளும் இருக்க கூடும். எந்த வழியில் சுயத்தை இழப்பதற்கான முயற்சியில் இருந்தாலும், அத்துடன் சேர்ந்து இயற்கையுடனான தொடர்பையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஒருவேளை நம் மனதால் சுயத்தை அழிக்க முடிந்து, ஆனால் இயற்கையுடனான தொடர்பை மீட்டெடுக்க முடியாமல் போனால், மனப்பிறழ்வு நிலை கூட அதன் முடிவாக இருக்கலாம். இந்த எதிர்மறை விளைவே ஆன்மீக சாதனைகளுக்கு வழிகாட்டுதலை அவசியமாக்குகிறது.

நாம் சமூக வாழ்க்கையினுள் செல்ல செல்ல, மனமயக்கங்களாலும் மாயைகளாலும் நம்மை இழப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த இழப்பை நம்மால் அறிய முடிந்தால், மனமயக்கங்களிலிருந்தும் மாயைகளிலிருந்தும் ஒருவேளை நம்மால் நம் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியலாம். எல்லா மதங்களும், எல்லா புனித நூல்களும், எல்லா தத்துவக் கோட்பாடுகளும், எல்லா ஆன்மீக வழிகளும் அந்த ஒற்றை நோக்கத்திற்காகவே இந்த உலகில் தோன்றியிருக்க வேண்டும்!

blog.change@gmail.com

Tuesday, June 5, 2012

அறிதல், அறிந்ததிலிருந்து விடுபடுதல்

மனிதனின் குறைந்தபட்ச தேவைகளுக்கான இயக்கங்களைத் தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் மனித மனதின் அறிதல் தேவைகளை சார்ந்தே இருக்கும். புகழ் அல்லது செல்வத்தை தேடும் இயக்கங்கள் கூட, அந்த புகழ் அல்லது செல்வத்தை அடையும்போது மனம் அடையும் இன்பத்தை நம் மனமே அறிவதாலும் அவ்வாறு அறிவதற்கான தேவை நம்மிடம் இருப்பதாலும் மட்டுமே நம்மிடமிருந்து வெளிப்படுகிறது. ஒருவேளை புகழ் அல்லது செல்வம் சேர்வதனால் மனம் அடையும் இன்பத்தை அறியும் தேவையை நம்மால் கடந்து செல்ல முடிந்தால், புகழ் அல்லது செல்வத்தை தேடுவதற்கான நம் இயக்கங்களையும் நம்மால் கடந்து செல்ல முடியும்.


சமூக வாழ்க்கையில் நம் குறைந்த பட்ச தேவைகளை அடைய செல்வம் இன்றியமையாதது. எனவே அந்த செல்வத்தை தேடுவதற்கான இயக்கங்களையும் நம்மால் தவிர்க்க முடியாது. அந்த இயக்கங்கள் மூலம் செல்வத்தை நாம் அடையும்போது மனம் அடையும் இன்பத்தையும் நம்மால் தவிர்க்க முடியாது. அந்த இன்பத்தை அறியும் மனம், அதையே பற்றிக்கொள்ள விரும்புகிறது, அந்த இன்பத்தை தொடர்ச்சியாக பெற்றுக்கொண்டிருக்க விரும்புகிறது. ஆனால் எந்த இன்பமும் கண நேரத்திற்கு மட்டுமே இருக்கும் – அந்த இன்பத்தை மனம் அறியும் தருணத்தில் மட்டும். மனம் தொடர்ச்சியாக அந்த இன்பத்தை பெற வேண்டுமானால், அதற்கான காரணி தொடர்ச்சியாக இருக்க வேணைடும். அதாவது, நாம் மீண்டும் மீண்டும் செல்வத்தை அடைந்து கொண்டே இருக்க வேண்டும், செல்வத்தை அடையும்போது மனம் அடையும் புளங்காகிதத்தை அந்த மனம் மீண்டும் மீண்டும் அறிந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே செல்வத்தை அடைதல் என்னும் ஒரு இயக்கத்தின் மூலம் அடைந்த இன்பத்தை அறிந்த மனம், அந்த அறிதலிலுருந்து விடுபட இயலாமல் மீண்டும் மீண்டும் அந்த இன்பத்தை அறிவதற்காக, நம் மரணம்வரை செல்வத்தின் பின்னால் நம்மை ஓட வைக்கிறது. இது எவ்வாறு நம் மனம் செல்வத்தை தேடுதல் என்னும் ஒரு இயக்கத்திற்கு அடிமையாகிறது என்பது. இதைப்போல நம் அறிவின் எல்லைக்கேற்ப நம் மனம் எண்ணற்ற இயக்கங்களின் அடிமையாக மாறி, அந்த அடிமைத் தனத்திலிருந்து விடுபட வழி தெரியாமல் அடிமைத்தனத்தையே அதன் இயங்கும் திசையாக அமைத்துக்கொண்டுள்ளது.

ஆனால் அறிவு மட்டுமே நம்மை தளைகளிலிருந்து விடுவிக்கும் ஆற்றலையம் கொண்டது – அந்த அறிவை நம் தர்க்க புத்தியின் மூலமோ, இயற்கை அல்லது உண்மை அல்லது கடவுள் என்னும் கருத்திடம் முழுமையாக சரணடைவதன் மூலமோ அல்லது நம் உணர்வுநிலைகளை உச்சத்துக்கு எடுத்துச்செல்லும் வேறு வழிகள் மூலமோ நாம் பெறலாம். ஆக அறிவே நம்மை தளைப்படுத்துகிறது. அதே அறிவே தளைகளிலிருந்து நம்மை விடுவிக்கவும் கூடியது. வெளிப்படையாக பார்த்தால் முரண்பாடாக தோன்றும் இந்த கருத்தின் யதார்த்தத்தை அறிய நம் மன இயக்கங்களை சற்று நோக்க வேண்டி இருக்கலாம். அறிவு நம்மை தளை படுத்துகிறது, எனில் அறிவை அடையாமல் இருந்தால் தளைபட வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். ஆம், அறிவை அடையாவிட்டால் தளைபட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அப்போது நாம் மனிதர்களும் இல்லை – ஓரு தளைபடாத விலங்கு மட்டுமே. அறிதலின் சாத்தியங்களே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது.

நம் சாதாரண நிலையில், எல்லா புதிய அறிதல்களும், நாம் முன்பே அறியும் ஏதேனும் ஒன்றை சார்ந்து மட்டுமே இருக்க முடியும். எனவே நமது அறிவு எப்போதுமே முழுமையானதாக இருக்க முடியாது. முழுமையான அறிவு என்பது நம் அறிதல் எப்போது நம் முன்னறிவை சார்ந்திராமல் முற்றிலும் புதிதாக இருக்க முடியுமோ அந்த அறிவு மட்டுமே ஆகும். அத்தகைய முற்றான அறிதல் நம்முள் நடைபெறும்போது, அங்கு எந்த எண்ணங்களுக்கும் இடம் இல்லை, நம் மூளையில் அடைத்து இறுக்கி வைத்திருக்கும் எந்த நினைவுகளுக்கும், தகவல்களுக்கும் தேவை இல்லை. நாம் முயன்று பெற்ற கல்விக்கும் தேவை இல்லை.

ஒரு சாதாரண சார்புநிலை அறிவு, சிறிதளவு செல்வம் நம்மிடம் சேருகிறது என நாம் அறியும் அறிவு நமக்கு மிகப்பெரிய இன்பத்தை கொடுக்கும்போது, முழு முதல் அறிவு, முழுமையான அறிவு, எதையும் சார்ந்திராத அறிவு அறியப்படும்போது நாம் அடையும் இன்பத்தை அனுமானிக்க சிறிதளவு கற்பனைத்திறனே போதுமானது. ஆம், இத்தகைய ஒரு சிறிய கற்பனைக்கான சாத்தியத்தை கூட அறியாமல் நாம் நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை வாழ்ந்து முடித்து விட்டோம். நம் மனதை நோக்கி இப்போது கூட நாம் திரும்பாமல் இருந்தால், இன்னும் சிறிது காலத்தில் இந்த கற்பனைக்கான சாத்தியத்தை கூட அறியாமல் நாம் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து இறந்து இருப்போம். இத்தகைய ஒரு சிறிய கற்பனைக்கான சாத்தியத்தை கூட அளிக்காத கல்வியை கற்று விட்டு, நாம் கற்றவர்கள் என்னும் கற்பனையில் மூழ்கியிருக்கிறோம்.

எனில், நாம் எவற்றை அறிய வேண்டும்? எந்த அறிதல்களிலிருந்து விடுபட வேண்டும்? நாம் விரும்பியவற்றை அடைந்து விட்டோம் என்னும் அறிதலே இதுவரை நாம் அடைந்த எல்லா இன்பங்களுக்குமான காரணம். அந்த அறிதல் நடைபெற்ற தருணங்கள் மட்டுமே நாம் இன்பமாக இருந்த தருணங்கள். மனிதன் விலங்கிலிருந்து வேறுபட்டிருப்பது, மனிதனிடம் உள்ள அறிதலின் சாத்தியத்தினால் மட்டுமே. எனவே மனிதனின் இயல்பு என்பது அறிதலின் இன்பத்தில் திளைத்திருப்பது. எல்லாவிதமான சார்புநிலை அறிவுகளாலும் அறியும் தருணத்தில் மட்டுமே இன்பத்தை கொடுக்க இயலும் – அடைதலை அறியும் இன்பங்களும், அடைந்ததை நுகரும்போது அறியும் இன்பமும். அறிதல் நிகழ்ந்த அடுத்த கணத்தில் அது நம் நினைவுகளாகி அறிதல் என்னும் இயக்கத்திலிருந்து விடுபட்டிருக்கும். எனவே நாம் உண்மையில் மனிதர்களாக இருக்க விரும்பினால், நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒவ்வொரு கணமும் இன்பத்தில் திளைத்திருக்கும் நிலையை நோக்கி நம் இயக்கத்தை வழிப்படுத்துவது மட்டுமே. அத்தகைய முடிவிலா இன்பத்தை, ஒவ்வொரு கணமும் அறிதல் நிகழ்ந்து கொண்டிருந்தால் மட்டுமே நம்மால் அடைய முடியும். முழுமையான அறிவை அறியம்போது மட்டுமே ஒவ்வொரு கணமும் அறிதல் புத்தம்புதியதாக எந்த சார்புநிலையும் இல்லாமல் நிகழும் சாத்தியம் உள்ளது. ஆக நாம் அறியவேண்டியதெல்லாம் அத்தகைய முழுமையான அறிவுக்கான சாத்தியங்களையும் அந்த அறிவை அடைவதற்கான வழிமுறைகளையுமே.

ஆனால் முழுமையான அறிவு என்பது, நாம் அறிந்த எந்த சாத்தியங்களுடனும் வழிமுறைகளுடனும் தொடர்பில்லாததாக மட்டுமே இருக்க முடியும். ஏனைனில் முழுமையான அறிவு முற்றிலும் சார்புநிலையற்றது. அறியும் ஒவ்வோரு கணமும் புத்தம்புதியதாக அறியப்படுவது. நாம் அறிந்த சாத்தியங்களுடனும் வழிமுறைகளுடனும் சார்ந்திருந்தால் அது சார்புநிலையற்ற அறிவாக இருக்க முடியாது. முழுமையான அறிவின் இத்தகைய சார்புநிலையற்ற தன்மையே நாம் அறிந்தவற்றிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வதற்கான தேவையை உருவாக்குகிறது. ஆம், நாம் அறிந்த அனைத்திலிருந்தும் நம்மால் விடுபட முடிந்தால் மட்டுமே முழுமையான அறிதலின் இன்பத்தில் நம்மால் திளைக்க முடியும் – நாம் அறிந்தவை வேதங்களாக இருந்தாலும், குருவின் வார்த்தைகளாக இருந்தாலும் அல்லது எந்த மூல நூல்களாக இருந்தாலும்! ஆனால் வேதங்களும், குருவின் வார்த்தைகளும் மற்ற மூல நூல்களும் நிச்சயமாக நமக்கு தேவை – முழுமையான அறிவின் சாத்தியங்களை அறிவதற்காக, அந்த சாத்தியத்தை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதற்காக! அத்தகைய சாத்தியங்களை, வழிமுறைகளை அறிந்தபின், அடைந்தபின் வேதங்களும், குருவின் வார்த்தைகளும், மற்ற மூல நூல்களும் முழுமையான அறிதலுக்கு இடைஞ்சல்களே!

blog.change@gmail.com