Monday, October 24, 2011

அறிவு, அறிதல், மாயை

அறிவு – நாம் அனைவரும் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அடைய துடிக்கும் ஒரு சூட்சும பொருள். அறிதல் என்னும் இயக்கத்தின் அல்லது செயலின் மூலம் நாம் அறிவை அடைகிறோம். அறிதல் என்னும் இயக்கம் அறிவை எங்கிருந்து கொண்டு வந்து சேர்க்கிறது? அறிதல் எவ்வாறு நிகழ்கிறது? அறிதல் எதை அறிகிறது? அறிதலுக்கும் அறிவுக்கும் உள்ள இடைவெளி என்ன அல்லது தொடர்பு என்ன? அறிவுக்கும் அறிபடுபொருளுக்கம் உள்ள தொடர்பு என்ன? நம் அறிவு என நினைப்பது முழுமையானதா? ஆம், அறிவை குறித்த இந்த கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்கம்வரை நம் அறிவின் தரத்தை நம்மால் மதிப்பிட முடியாது. அவ்வாறு நாம் மதிப்பிடுவோமானால், அது மற்றவர்களின் அறிவு என நாம் கருதுவதுடனான ஒரு ஒப்பீடு மட்டுமே. அது நம் அறிவின் அளவை அல்லது தரத்தை ஒருபோதும் குறிக்க முடியாது – காரண்ம், அறிவின் முழுமையை குறித்து நாம் அறிந்திருக்கவில்லை.

நாம் அறிதல் என அறிந்துள்ளது, நம் புலன்கள் மூலம் உணரப்படும் வெளியுலக நிகழ்வுகளை நம் மூளை உணர்ந்து அதை மனமாக வெளிப்படுத்துவதையே. அதாவது நம் அறிவு என அறிவதன் நுழைவாசல் நம் புலன்களே. அந்த மனதின் நிகழ்வுகளையே அறியும் மனது, ஆறாவது அறிவாக கருதப்படுகிறது. நம் ஐம்புலன்களால் அறியப்படுவதில், தொடு உணர்வு மட்டுமே உடல் முழுவதும் பரவியுள்ளது. மற்ற நான்கு புலன் உறுப்புகளும், உடலினுள், மிக அதிகபட்ச சாத்தியமுள்ள பாதுகாப்புடன் அமைந்துள்ளது. அதாவது, தொடு உணர்வுக்கு மட்டுமே, திண்மையுள்ள ஒரு வெளிப்பொருள் நம் உடலுடன் நேரடி தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. மற்ற நான்கு அறிவுக்கும், மிக மிக நுண்ணிய இயக்கங்களே காரணமாக இருக்கிறது. நம் பரிணாம வளர்ச்சி, அந்த நுண்ணிய இயக்கங்களை நம் மூளை உணர்வதற்கு தேவையான உடலமைப்பை புலன் உறுப்புகள் மூலம் நமக்கு அளித்துள்ளது. எதிர்காலத்தில், நம் மூளை, அதன் பரிணாம வளர்ச்சிக்காக, உலகை அறிவதற்காக, இன்னும் ஒரு வெளிப்புற இயக்கத்தை அறிய வேண்டிய தேவை ஏற்படுமானால், நம் தொலைதூர சந்ததியினர் அவர்கள் உடலில் இன்னும் ஒரு புலன் உறுப்பை பெறக்கூடும்.

வெளிப்புற உலகம் நம் உடல் மீது தொடுக்கும் தாக்குதல்கள் மூலமே நம்மால் புற உலகத்தை புலன்களின் மூலம் அறிய முடிகிறது. ஒளி அலைகள் நம் உடலில் எற்படுத்தும் தாக்கத்தை கண்கள் உணர்வதன் மூலம் புற உலகத்தை காண்கிறோம். இதைப்போலவே கேட்பதும், முகர்வதும், சுவைப்பதும். நாம் உண்மையில் அறிதல் எனக் கூறுவது, புற உலகம் நம் புலன்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை உணர்ந்து அவற்றை அடையாளப்படுத்துதலையே. அடையாளப்படுத்துதல் என்பது மொழியின் மூலம் நடைபெறுகிறது. அதாவது, மொழி என்பது நம் புலன்கள் உணரும் ஒவ்வொரு உணர்வுக்கும் நாம் அளிக்கும் அடையாளம் அல்லது குறியீடு. வேறு வார்த்தைகளில் கூறினால், நம் புலன்கள் உணரும் புற உலக இயக்கத்தை நம் மூளை உணர்ந்து, அந்த உணர்வை மொழியாக்கி, மொழியை மீண்டும் மூளை உணர்வதையே நாம் அறிதல் என்கிறோம். அவ்வாறெனில், அறிதலுக்கு மொழி ஒரு தவிர்க்க முடியாத ஒரு தேவை.


ஆனால் அறிதல் என்பது மொழிக்கு அப்பாற்பட்டதாகவே இருக்க முடியும். மொழி என்பது அறிதலுக்குப்பின் தோன்றும் ஒரு புதிய செயல்பாடு. நம் அறிதலை புற உலகுக்கு வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடு. நம் உலகம் என்பது, உலகில் உள்ள பிறருடனும் பிற பொருட்களுடனும் நாம் கொள்ளும் தொடர்புகளின் அல்லது உறவுகளின் தொகுப்பே ஆகும். அந்த தொடர்புகளின் அல்லது உறவுகளின் எல்லையை மீறி நம் உலகம் எப்போதுமே விரிவடைவதில்லை. நம் உலகம் விரிய வேண்டுமானால் நம் உறவுகளும் தொடர்புகளும் விரிவடைந்தாக வேண்டும். மொழி என்பது நம் அறிவை குறியீடுகளாக்கி நம் உறவுகளுடன் பகிரவும், நம் உறவுகள் பகிரும் குறியீடுகளை நம் அறிதலின் மூலம் நம் அறிவாகவும் மாற்றும் ஒரு கருவியே. ஆக மொழி என்பது அறிதலுக்கான ஒரு கருவியே தவிர அறிவின் ஒரு பகுதி ஆகாது.


எனில், அறிதல் எவ்வாறு நடைபெறுகிறது? சமீபத்தில் படிக்க நேர்ந்த, “The Process of knowing: A Biocognitive Epistemology” என்னும் கட்டுரை கீழ்வருமாறு கூறுகிறது. இந்த கட்டுரை வெளிவந்த தொகுதி - The journal of Mind and Behaviour, Automn 2001, Volume 22, Number 4.

Knowledge progresses through three developmental phases defined as pre-linguistic, concrete-linguistic, and abstract-linguistic experiences. The pre-linguistic phase consists of precursors of thoughts (perceptions of undifferentiated personal space without time dimension); precursors of affect (sensations of comfort and security vs. discomfort and insecurity); and precursors of language (primordial sounds responding to undifferentiated internal and external stimuli). The concrete-linguistic phase advances from precursors of thought to a cognition that differentiates self from non-self in concrete time and space; from the sensations of comfort and discomfort to the emotions of happiness, sadness etc.; and from primordial sounds that respond to undifferentiated internal and external stimuli to language that represent simple imagery and emotions communicated in concrete space and time. The abstract-linguistic phase frees the knower from the limitations of concrete-linguistics with language that can communicate complex imagery and emotions in projected time and space. The knower can project time and space from the present to communicate about the past and the future as abstract entities separate from self.

கட்டுரையின் இந்த பகுதியின்படி, அறிவு, மொழிக்கு முந்தையது, திட அர்த்தமுள்ள மொழியினூடாக உள்ளது மற்றும் கருத்துக்களாகிய மொழியினூடாக உள்ளது என பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, நம் அறிதல் என்பது, நம் மொழி அறிவுக்கு முன்பாக உள்ள அறிவிலிருந்து தொடங்கி, மொழியின் மூலமாக அடுத்த கட்டத்தை அடைகிறது. அதாவது, அறிவு என்பது மொழிக்கு அப்பாற்பட்டது, மொழி என்னும் கருவியின் வழியாக அறிதல் நடைபெறுகிறது.

நம்மால், மொழியின் துணையின்றி நம் அறிவை உணர முடியுமா? நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மொழியை தவிர்த்து அறிவு என்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருக்க கூடும். ஆனால் ஆன்மீகத்தில் பூடகத்தன்மையை (mystic) மறுத்து, தர்க்கபூர்வமான மொழியில் வெளிப்படுத்திய ஜே. கிருக்ஷ்ணமூர்த்தியின் கருத்துகளின்படி, அறிவு என்பது நிகழ்வதற்கான சாத்தியம், மொழியால் உருவாக்கப்பட்ட எண்ணங்கள் மனதினுள் முழுமையாக இல்லாமல் இருக்கும்போது மட்டுமே உள்ளது. அதாவது, மொழியாலான கருத்தமைப்புகளின் மூலம் நம் மனதில் நிலைபட்டுள்ள எண்ணங்களே நம் அறிதலுக்கு தடையாகவும் உள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறினால், அறிவதற்கான கருவியாகிய மொழியையே நாம் அறிதலாக கொள்ளும்போது, அந்த அறிதலின் மூலம் நாம் அறிவதும் ஒரு மாய உலகையே!


பின் குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள மேற்கோள்கள், இந்த உளறல்கள் எனக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை உணர்த்தவே.

No comments: