Sunday, September 11, 2011

மன கட்டுப்பாடு, ஆன்மீகம்

‘மன இயக்கங்களை இல்லாமல் செய்வதே யோகம்’ – ‘யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத’ என்பது பதாஞ்சலி யோக சூத்த்திரத்தின் இரண்டாவது மற்றும் அதன் அடிப்படை நோக்கத்தை விளக்கும் சூத்திரம். மனத்தை அடக்குவது அல்லது மனம் அதுவாகவே அடஙகுவதன் மூலம் மட்டுமே மன இயக்கங்களை இல்லாமல் செய்ய முடியும்.


மன இயக்கங்களை இல்லாமல் செய்வதற்கு மன இயக்கங்களின் இயல்பை அறிந்து கொள்வது மிக அவசியம். இந்த அறிவு, நம் மனதை நாமே கூர்ந்து கவனிப்பது மற்றும் கவனப்பின் நீட்சியான அனுமானம் மூலம் மட்டுமே சாத்தியமாகலாம். மேலும் மனதை கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்பதை விட மனம் தானாகவே கட்டுப்படுவது அல்லது அடங்குவது என்பதே மிகச்சரியான முறையாக இருக்கும்.



மனதை கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்னும்போது அங்கு கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்னும் சொல்லினுள்ளேயே இருமை அடங்கியுள்ளது- கட்டுப்ப்படுத்தும் அமைப்பு மற்றும் கட்டுப்படும் பொருள்! ஆனால் நம்மிடம் இருப்பது நம் மனம் மட்டுமே. நம்மிடம் இருக்கும் அந்த ஒரே மனமே அந்த மனத்தை அடக்கவேண்டும் என விரும்புகிறது, அது தன்னைத்தானே அடக்க வேண்டும் என்று ஆணையிடுகிறது. அந்த விருப்பம் நிறைவேறாதபோது, அந்த ஆணை ஏற்றுக்கொள்ளப்படாதபோது அது தன்னைத்தானே வருத்திக் கொள்கிறது, தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்கிறது.

நாம் நம் மனதை அடக்க வேண்டும் என நினைக்கம்போதே நம் மனம் அதனை இரு பிரிவுகளாக பிரித்துக் கொள்கிறது - ஒரு பகுதி அலைபாய்ந்துக் கொண்டிருக்கும் மனம், மற்ற பகுதி அலைபாய்தலை அடக்க வேண்டும் என கருதும் மனம்! ஆக மனம் தனக்குள்ளேயே முரண்படுகிறது - எங்கெல்லாம் முரண்பாடு உள்ளதோ அங்கெல்லாம் சக்தி வீணாக்கப்படுகிறது. தனக்குள்ளே முரண்படும் மனதால் மன இயக்கங்களை நிறுத்த அல்லது குறைக்க இயலாது, அது மன இயக்கங்களை மேலும் அதிகரிக்கவே செய்யும் - மன வருத்த்தத்தை, துன்பத்தை உருவாக்குவதன் மூலம்! கடவுளை (கடவுள் என்னும் கருத்து எந்த அர்த்த்தத்தில் கூறப்பட்டிருந்தாலும்) அடைவதற்கு அல்லது வாழ்வில் முன்னேற, மனதை அடக்குவது மட்டுமே வழி என எங்காவது கூறப்பட்டிருந்தால், அந்த "அடக்குவது" என்பதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வது மிக முக்கியமானது.

ஆக, மனதை நம்மால் அடக்க முடியாது. ஆனால் மனதை, அது தானாகவே அடங்குமாறு , கட்டுப்படுமாறு செய்ய முடியும் - மனம் தன்னைத்தானே அறிவதன் மூலம். மனதினுள் ஒரே நேரத்தில் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் - அவை நம் உணர்வுகளில் இருந்தாலும் இல்லாவிடிலும். இந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் மனதினுள் நினைவுத் தடங்களை விட்டுச் செல்லும். நாம் பெரும்பாலும் இந்த மன நிகழ்வுகள் நிகழும்போது அவற்றை அறிவதில்லை. அவ்வாறு அறிய நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். ஆம், விழிப்புணர்வின் மூலம் மட்டுமே மனம் தானாகவே கட்டுப்படுமாறு செய்ய முடியும்.



விழிப்புணர்வு என்பது மனதின் இன்னொரு இயக்கமாக அல்லது நிகழ்வாக இருக்கலாம். அதாவது மனதின் ஒரு இயக்கம், மனதின் மற்ற அனைத்து இயக்கங்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் மனதின் மொத்த இயக்கத்தையும் மனம் அதனுள்ளேயே பிரதிபலிப்பதாகும்- மனம் அதனுள்ளே பிரதிபலிக்கும் மன இயக்கங்களின், நிகழ்வுகளின் மேல் விழிப்புடன் இருக்கிறோம். தற்போதையவாழ்க்கை முறையில் நம் விழிப்புணர்வை பெரும்பாலும் இழந்து விட்டிருக்கிறோம். நம் மன இயக்கங்களும் நிகழ்வுகளும் நம் மனதினுள் விட்டுச் சென்றுள்ள தடங்களை அல்லது நினைவுகளை  மட்டுமே நம் வாழ்வின் ஆதாரமாக கொண்டுள்ளோம். அதாவது நம் தற்போதைய வாழ்க்கை முறையின் காரணமாக மனம் அதன் நிகழ்வுகளை அதனுள்ளே பிரதிபலிப்பதில்லை.



மனம் தன்னைத்தானே கட்டுப்படச் செய்ய வேண்டுமென்றால், மனம் தன்னுள் நடக்கும் நிகழ்வுகளை கவனிப்பதற்காக ஒரு புது மன இயக்கத்தை உருவாக்க வேண்டும்- அந்த புது மன இயக்கமும் அந்த மனதினுள் நடைபெறும் ஒரு நிகழ்வு என்னும் விழிப்புணர்வோடு. நாம் தற்போதே சிறிதளவேனும் விழிப்புணர்வுடன் இருந்தால், அந்த விழிப்புணர்வுக்கு காரணமான மன இயக்கத்தின் ஆற்றலை கூட்ட வேண்டும். அனைத்து ஆன்மீக பயிற்சிகளும் இந்த குறிக்கோளை நோக்கியே வடிவமைக்கப்பட்டிருக்க கூடும்- நேரடியாகவோ, பிற குறியீடுகள் மூலமாகவோ!



நம் மன இயக்கங்களை நாம் கவனிக்கத் தொடங்கினால், மனதின் மிக வெளிப்படையான இயக்கங்களின் இயங்குமுறையை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மன இயக்கத்தை நம் மனம் கவனிக்கிறது என்பதை அந்த மனமே உணரும்போது, அந்த குறிப்பிட்ட மன இயக்கத்தின் ஆற்றல் உடனடியாக பெருமளவில் குறைந்து விடுகிறது. அந்த குறிப்பிட்ட மன இயக்கத்தை மனம் தொடர்ந்து கவனித்து வந்தால், அந்த குறிப்பிட்ட மன இயக்கமே இல்லாமல் அழிந்து விடுகிறது. அதாவது ஒரு நிகழ்வு நிகழும்போதே நம் மனம் அந்த நிகழ்வை உணர முடிந்தால், நம் மன இயக்கத்தின் மூலம் அந்நிகழ்வை நினைவாக சேமிக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம் அல்லது நினைவாக சேமிக்கத் தேவையான மன இயக்கத்திற்கு தேவைப்படும் ஆற்றல் மிகக் குறைவானதாக இருக்கலாம். அதாவது நாம் விழிப்புணர்வுடன் இருக்கும்போது, மன இயக்கங்களின் மூலம் வீணாக்கப் படும் மன ஆற்றலின் பெரும்பகுதி சேமிக்கப்படுகிறது.



நம் மனம், அதனுள் நிகழும் நிகழ்வுகளை, அதுவே உணரும்போது அல்லது பிரதிபலிக்கும்போது, அந்த மனதினுள் நிகழ்வுகள் தானாகவே கட்டுப்படுகிறது. இத்தகைய கட்டுப்படுதலில் உள்மன முரண்பாடுகளோ போராட்டங்களோ இல்லை. எல்லாவிதமான அடிப்படை ஆன்மிகப் பயிற்சிகளும் யோகப் பயிற்சிகளும் இந்த ஒற்றைக் குறிக்கோளை நோக்கியே இருக்கும் - அந்த குறிக்கோள் வெளிப்படையாக கூறப்பட்டாலும், கூறப்படாவிட்டாலும்!