Sunday, July 31, 2011

செல்வம், பணம்

சமுதாய அமைப்பினுள் வாழும்போது, நம் வாழ்க்கைக்கு மிக மிகத் தேவையான, ஆனால் மிக மிக அதிகமாக நம் உளவியல் சக்தியை விரயம் செய்விக்கும் ஒரு கருத்து செல்வம் அல்லது பணம் என்னும் கருத்து ஆகும். ஆனால், அந்த இன்றியமையாத, அதேநேரத்தில் நம் உளவியல் சக்தியை விரயம் செய்வதன் மூலம் நம் வாழ்க்கையை வாழ்வு என்பதன் உண்மையான அர்த்தத்தில் நாம் வாழ்வதிலிருந்து நம்மைப் பிறழச்செய்யும் பணத்தைக் குறித்த அறிவு, நம்மில் பெரும்பாலானவர்க்கு, மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது, இங்கு பணத்தைக் குறித்த அறிவு என்பது, சமூக அமைப்பில் பணத்தின் பங்கு, நம் வாழ்க்கையில் பணத்தின் சரியான பயன்பாடு, பணம் குறித்த நம் உளவியல் தேவைகள் என்பனவாகும்- மிக முக்கியமாக, உளவியல் தேவைகள். பணம் குறித்த இந்த அடிப்படை அறிவு நமக்கு கிடைக்கப்பெற்றால், ஒருவேளை பணத்தைக் குறித்த உளவியல் செயல் பாடுகள் மூலம் நம் உளவியல் சக்தி விரயமாவதை ஓரளவேனும் தடுக்க முடியலாம்.

முதலில் பணத்தின் பொருளியல் பயன்பாடு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நம் தேவைகளை முடிவு செய்வது நாமாக இருப்பதில்லை. நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களே நமது தேவைகளை பெரும்பாலும் முடிவு செய்பவர்களாக இருக்கிறார்கள் - நம் உளவியல் தேவைகளை தூண்டுவதன் மூலம். ஆக நமது தேவைகளை நாமே முடிவு செய்வதற்கான குறைந்த பட்ச அறிவும் விழிப்புணர்வும் கூட இல்லாமல் இருக்கிறோம். பொருளியல் தேவைகளைக் குறித்த அறிவை நாம் பிறரிடமிருந்து பெறலாம். ஆனால் அந்த தேவையை முடிவு செய்வது நாமாக மட்டுமே இருக்கவேண்டும். அதற்கு பிறரால் ஏற்படுத்தப் பட்ட உளவியல் தாக்கங்கள், நம் தேவையை முடிவு செய்யாத வகையில், நம் மனதின் செயல்பாடுகளைப்பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். பணத்தின் பொருளியல் பயன்பாடு என்பது, நமக்குத் தேவையென நம்மால் முடிவுச் செய்யப்பட்ட தேவைகளை அடைவதாக மட்டுமே இருக்க முடியும். இந்தத் தேவைகள் பொதுமைப் படுத்த முடியாதவை- தனி மனித இயல்பை சார்ந்தது. ஆக நமது தேவை என்பது நமது இயல்பு, நமது சூழலுடன் இயைந்து செல்வதற்கான பொருளியல் தன்மைகளை உருவாக்குவது அல்லது அடைவதாகும்.

ஒரு சமூகச் சூழலில், நமது பொருளியல் தேவைகளை நமது உழைப்பால் மட்டும் உருவாக்குவது என்பது இயலாதது. நமது தேவைகளை சமூகத்தின் பல நிலைகளில் உள்ள பலரின் உழைப்பின் மூலம் மட்டுமே பெற முடியும். நமது உழைப்பின் பகுதியை மற்றவர்களுக்கு வழங்கியும், மற்றவர்களின் உழைப்பின் பகுதியை பெற்றும் நம் பொருளியல் தேவைகளை நிவர்த்தி செய்கிறோம். ஆக நாம் சமூகத்திற்கு அளிக்கும் உழைப்பையும், சமூகத்திலிருந்து பெறும் உழைப்பையும் அளவிட வேண்டியது அவசியமாகிறது. இந்த அளவீடே பணம் என்னும் கருத்தாகும். ஆக நாம், நமது உழைப்பையே பணமாக சேமிக்கிறோம் – நமது உழைப்பை சேமிக்கும்போது அது நேர்மையான சம்பாத்யம், பிறர் உழைப்பைச் சுரண்டி சேமிக்கும்போதி அநியாய சம்பாத்யம்.


நாம் எந்த அளவுக்கு நமது உழைப்பை சேமிக்க வேண்டும்? அது நமது தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்தது. ஆனால், நம் உழைப்பின் தேவையை நாம் மதிப்பிட வேண்டுமானால், நம் தேவைகளைக் குறித்த விழிப்புணர்வு மிக அவசியம். விழிப்புணர்வு என்பது, நமது மற்றும் நமது சந்ததியின் தேவைகள் என நம் மனம் உருவாக்கும் கற்பனைகள் அல்ல – கற்பனை என்பது வெறும் மன பிம்பங்களே, அவை ஒருபோதும் நமது தேவைகளாக இருக்க முடியாது. நமது இயல்பு மற்றும் சமூகக் கடமைகளை மனம் உணரும்போது, மனதால் நமது தேவைகளையும் உணர முடியும். நமது தேவை என்பது நம் மனம் அதன் கற்பனைத் திறனால் உருவாக்கும் தேவைகள் அல்ல, ஆனால் மனம் உணரும் தேவைகள் – மனதின் கற்பனைக்கும், மனதின் உணர்வுக்கும் இடையான வித்தியாசத்தை நம்மால் அறிய முடிந்தால் மட்டுமே நம்மால் நமது உண்மையான தேவைகளை அறிந்து கொள்ள முடியும். ஆக நம் வாழ்வின் அடிப்படையை, வாழும் முறையை அறிந்து கொள்ளவே பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் நாம் உழைப்பை சேமிப்பதற்காகவே உழைக்கிறோம், வாழ்க்கையை வாழ்வதற்காக உழைக்கவில்லை – வாழ்க்கையை, வாழும் முறையை, அறிந்தால் மட்டுமே நம்மால் நம் வாழ்க்கையை வாழ முடியும்.

ஆம், நம் உயிர்ப் பிழைத்தலுக்கு தேவையான உழைப்பைத் தவிர உள்ள உபரி உழைப்பினை மட்டுமே சேமிப்பு அல்லது வாழ்க்கையை அறிதலுக்கு பயன்படுத்த முடியும். ஆனால், இங்கு நாம் என்று பொதுவாக கூறப்பட்டிருப்பது கற்றவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள், தங்கள் எளிய உழைப்பினால் மட்டுமே கூட உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இத்தகைய நாம், நமது உபரி உழைப்பின் சிறு பகுதியைக் கூட நமது சொந்த வாழ்க்கையைக் குறித்து கூட அறிந்து கொள்ளச் செலவிடாமல், மனதால் கற்பனை மூலம் உருவாக்கப் படும் தேவைகளுக்காக சேமித்துக் கொண்டே இருக்கிறோம். ஆக நம் உயிர் பிரியும் தருணம்வரை நம் தேவைகளும் பூர்த்தி ஆவதில்லை, நம் உழைப்பிலிருந்து நமக்கு விடுதலையும் இல்லை.

நாம் இறக்கும் தருணம்வரை நம் வாழ்க்கையைக் குறித்து அறிந்து கொள்ளாமலே, எனவே நம் வாழ்க்கையை வாழாமலே நாம் இறந்து விட தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஆக நம் வாழ்க்கையை அறிந்து கொள்ளத் தேவையான உபரி உழைப்பையும் நம் கற்பனையில் உருவான தேவைகளை அடைவதற்காகவே சேமித்து, நம் வாழ்க்கையையும் கற்பனையிலேயே வாழ்ந்து முடித்துக் கொண்டிருக்கிறோம். உபரி உழைப்பை நம் வாழ்விற்காக செலவிடாமல் பணமாக, செல்வமாக, பொருளாக, நம் இறுதிவரை சேமித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஆக நம் மனம் உணரும் தேவைகளுக்காக செலவிடப்படும் பணம் அல்லது உழைப்பு, நம் பொருளியல் தேவைகளுக்காகச் செலவிடப்படுவதாகும். இந்த செலவிடுதல், தவிர்க்க முடியாதது, தவிர்க்க கூடாதது. நம் மனம் கற்பனைச் செய்யும் தேவைகளுக்காகச் செலவிடப் படும் பணம் அல்லது உழைப்பு, நம் உளவியல் தேவைகளுக்காக செலவிடப் படுவதாகும் – இதுவே வீணாக்கப்படும் உழைப்பு அல்லது சக்தி ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், நம் உபரி உழைப்பை நமது வாழ்க்கையை வாழ்வதற்காக செலவழிப்பது\சேமிப்பது அல்லது நம் உளவியல் தேவைகளுக்காக செலவழிப்பது\சேமிப்பது (வீணாக்குவது) என்பது, நமது உளவியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. அதாவது, நம் மனம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்போது, அது கற்பனையில் உழலாது, உணர்வின் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்!